‘விடுதலை’ என்னும் மெய்யியல், இறையியல், உளவியல், அரசியல், ஆன்மிகக் கோட்பாடு இன்று சமூகவியல் நிலைப்பாடாக உருமாறியிருக்கிறது. சமூக-அரசியல் தளத்தில் விடுதலை என்பது தனி மனிதனின் தன்னுரிமை மற்றும் அறநெறிப் பொறுப்புகள் என்பதை உணர்த்துகின்றன. விடுதலை - சமூகப் பொருளாதார வாழ்வில் சமத்துவத்திற்கான அறைகூவல்.
“நம் சமுதாயப் பொருளாதார வாழ்வில் இன்னும் எத்தனை காலம் நாம் சமத்துவத்தை மறுக்க முடியும்? கூடிய விரைவில் இந்த முரண்பாட்டை அகற்றாவிடில், ஏற்றத்தாழ்வினால் அவதியுறும் மக்கள் ‘அரசியல் சனநாயகம்’
என்ற கட்டமைப்பை வெடிவைத்துத் தகர்த்து விடுவர்” என்றார் அரசியல் நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர். “பணக்காரருக்கும் பசித்தவருக்கும் இடையில் பிளவு நீடிக்கும் வரை அகிம்சை சார்ந்த அரசுக்கான சாத்தியம் இல்லை; பணம் படைத்த வர்க்கம் தன் செல்வத்தையும் அதிகாரத்தையும் தாமே முன்வந்து ஏழையுடன் பகிர்ந்து கொள்ளத் தவறினால் வன்முறை மிகுந்த இரத்தப் புரட்சி ஒரு நாள் தவிர்க்க முடியாததாகிவிடும்” என்று
(India of my dreams) குறிப்பிடுகிறார் மகாத்மாகாந்தி. நாடு அரசியல் விடுதலை அடைந்தாலும் மக்களின் சமூக, பொருளாதார விடுதலை அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள் இந்த மகான்கள்.
நாடுகள்
விடுதலை அடைந்தாலும், மக்கள் ‘உரிமை’,
‘வாழ்வு’ என
வசந்தம் கொண்டாலும் அவர்களின் சமூகச் சிந்தனையில் படிந்துகிடந்த அடிமை, ஏற்றத்தாழ்வு, வறுமை, ஏழ்மை என்ற இருள்சூழ் தன்மைகளைக் கிழித்திடும் விடுதலைச் சிந்தனைகளைப் பரப்பிட உதித்த சூரியன்தான் ‘21 -ஆம் நூற்றாண்டின் சமூகச் சிற்பி’ என அழைக்கப்படும் ‘ஏழைகளின்
பாதுகாவலர்’ குஸ்டாவோ
குட்டியரஸ்.
இவர்
விடுதலை இறையியல் என்னும் தனது ஆழமான கருத்தியல் வாயிலாக ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் கிறிஸ்துவின் இருத்தலைப் பற்றிய புதிய பார்வையைத் திரு அவைக்கு அறிமுகப்படுத்தியவர். நீதி, அமைதி, மனித மாண்பிற்கான சிந்தனைகளைத் திரு அவை கடந்து உலக அளவில் வழங்கியதால் ‘ஏழைகளின் திருத்தூதர்’ (Apostle of the Poor) என்றும் அழைக்கப்படுகிறார்.
தென்
அமெரிக்காவின் பெரு நாட்டில் லீமா நகரில் 1928 -ஆம் ஆண்டு ஜூன் எட்டாம் நாள் பிறந்த இவர், டொமினிக்கன் துறவற சபை அருள்பணியாளராகவும், இறையியல் பேராசிரியராகவும், விடுதலை இறையியலின் தந்தையாகவும் அறியப்படுகிறார். 1971-ஆம் ஆண்டு வெளியிட்ட தனது ‘விடுதலை இறையியல்’
(A Theology of Liberation) என்னும்
நூலின் வழியாக இக்கருத்தியலை முன்வைத்து இலத்தீன்-அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் ஒடுக்குமுறையைக் களைவதற்கான திரு அவையின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் பற்றித் தெளிவுபடுத்தினார்.
விடுதலை
இறையியல் என்பதை வெறுமனே இறையியல் சிந்தனையில் மலர்ந்த ஒரு புதிய கூடுதல் கருத்தாக்கமாகக் கருதாமல், புதிய இறையியலாக்கச் சிந்தனையாக, செயல்முறையாக வரையறுத்துக் கொடுத்தார். விடுதலை மற்றும் மேய்ப்புப்பணி இறையியல் என்பது செய்முறை அல்லது செயல்முறை இறையியல் (Practical Theology) என்று
உருமாற்றம் பெறவும் வழிகாட்டினார்.
இரண்டாம்
வத்திக்கான் திருச்சங்கத்திற்குப் பிறகு எழுந்த இந்த மாற்றுச் சிந்தனை, இறையியலாளர்கள் மத்தியிலும் திரு அவைப் பணியாளர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, புரட்சியை விதைத்து அவர்களின் மேய்ப்புப்பணியில் ஏழையோரின் நிலைப்பாட்டை முன்னெடுக்க வைத்தது. பல்வேறு அருள்பணியாளர்கள் ஏழைகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக அர்ப்பணத்துடன் பணியாற்றவும் வழிகாட்டியது.
அநீதியைச்
சுட்டிக்காட்டுவதும் உண்மையை எடுத்துரைப்பதும், துணிந்த நேர்கொண்ட பார்வை கொண்டிருப்பதும் ஓர் இறைவாக்கினருக்குரிய அளவுகோல். அத்தகைய பார்வையில் நம் காலத்து இறைவாக்கினராகவே இவர் அறியப்படுகிறார்.
“கடவுள் உங்களை அன்பு செய்கிறார் என்று எப்படி ஏழைகளிடம் சொல்லமுடியும்?” என்ற ஒற்றைக் கேள்வியில் எழுந்ததுதான் இவருடைய மேய்ப்புப்பணியும், இறையியல் சிந்தனையும். ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் சமூகப் பொருளாதார நிலைப்பாட்டை உயர்த்தும் வாழ்வியல் முறையே மீட்பு (Salvation), விடுதலை (Liberation) என்னும் இறையியல் கொள்கையோடு தொடர்புடையது என வலியுறுத்தினார். சமூகப் பொருளாதார
அநீதிகளே மக்களின் ஏழ்மைக்கான அடிப்படைக் காரணங்களாக வரையறுத்தார். இந்த அநீதிகள் அகற்றப்படும் பொழுது கடவுளின் நீதி நிறைந்த இறையரசை (Kingdom of God) மண்ணில்
கட்டி எழுப்ப முடியும் என்று உறுதி
பூண்டார். ஆகவே, விடுதலை இறையியல் என்பது இலத்தீன்-அமெரிக்க நாடுகளிலும், அடிமைச் சூழல் கொண்ட சமூகத்திலும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கான அழைப்பாக, இறைக் கோட்பாடாக முன்னெடுக்கப்பட்டன.
விடுதலை
இறையியலின் கூற்றுப்படி, “ஒரு நீதியான சமூகத்தை நோக்கி நாம் நகர வேண்டும்; சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை மக்கள் வாழ்வில் கொண்டுவர வேண்டும்; அடிமைப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, நசுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத் திற்கு வாழ்வு கொடுக்க வேண்டும். ஏழையாகப் பிறந்த இயேசு, தம்மை ஏழை எளியவரோடும், தாழ்த்தப்பட்டவரோடும், விளிம்புநிலை சமூகத்தோடும் அடையாளப்படுத்தி, அவர்களை மையம் கொண்ட பணிகளை மேற்கொண்டதுபோல, அவருடைய சீடர்களும்-சீடத்திகளும் அத்தகைய பணியில் ஈடுபட வேண்டும்”
என அழைப்பு விடுத்தார்.
ஆகவே,
விடுதலை இறையியல் ‘ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையை’
வலியுறுத்தும்
ஓர் இறையியல் அணுகுமுறையாகவும், சமூகப் பொருளாதாரப் பகுப்பாய்வுகளில் ஈடுபட்டு ஏழை
மக்களின்மீது சமூக அக்கறை கொண்டு ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விடுதலை’ என்ற அறைகூவலோடு சமத்துவத்தை நிலைநாட்டும் ஓர் உன்னதக் கோட்பாடாகவும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வறுமை
மற்றும் சமூக அநீதிக்கு எதிர்வினை என்னும் சிந்தனையில் மலர்ந்த விடுதலைக் கூறுகளால்தான் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் மலர்ந்த கறுப்பின விடுதலை இறையியல், பெண்ணிய விடுதலை இறையியல், இந்தியத் துணைக் கண்டத்தில் மலர்ந்த தலித் விடுதலை இறையியல், பழங்குடியினர் விடுதலை இறையியல், சூழலியல் விடுதலை இறையியல், தமிழ்த் தேசிய விடுதலை இறையியல் என்ற சிந்தனைகள் தளிர்விட்டிருக்கின்றன. ஏழைகளின் தளத்தில் அவர்களின் பார்வையில் இருந்து விடுதலைக்கான கூறுகளை ஆராய்ந்து, தெளிவான முன்னெடுப்புகளை மறுமலர்ச்சி எண்ணங்களில் எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த இறையியலின் அடிப்படைக் கூறாக அமைந்திருக்கிறது. இத்தகைய பெரும் மாற்றுச்சிந்தனையைத் திரு அவையிலும், உலக அளவிலும் ஏற்படுத்தியவர் குஸ்டாவோ குட்டியரஸ்.
ஆகவேதான்,
அவருடைய இறுதிச்சடங்குக்கான இரங்கல் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அருள்பணியாளர் குஸ்டாவோ அவர்கள் திரு அவையில் ஓர் உயர்ந்த மனிதர்” என்றும், “மறைபரப்புக்கான கனிகளையும், வளமான இறையியலையும் எவ்வாறு வழங்குவது என்பதன் அடையாளமாக”
இருப்பதாகவும்
புகழாரம் சூட்டினார்.
அவ்வாறே,
இந்தியத் திரு அவையும், “குஸ்டாவோ அவர்களின் கருத்துகள் திரு அவையின் பணியினை ஆழமாக வடிவமைத்துள்ளன” என்றும்,
“ஒன்றிப்பு மற்றும் பணிக்கான புதுப்பிக்கப்பட்ட புரிதலுக்கு வழிவகுத்ததுடன் இரக்கமுள்ள, நீதியுள்ள உலகிற்காக உழைக்க எண்ணற்றவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்றும்
புகழாரம் சூட்டுகிறது.
திரு
அவை சமூக நீதியை முன்னிலைப்படுத்திய மேய்ப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த
அருள்பணியாளரான ‘விடுதலை இறையியலின் தந்தை’ குஸ்டாவோ அவர்கள் தனது 96-வது வயதில் (அக்டோபர் 22, 2024) மறைந்தாலும், அவருடைய கருத்தியல் காலத்தால் அழியாத கருவூலம். சாதி, சமயம், இனம், வர்க்கம், நாடு, பாலினம் எனும் அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட இச்சமூக அமைப்பைத் தகர்த்து சமத்துவமும், சகோதரத்துவமும் கொண்ட ஏற்றத்தாழ்வற்ற புத்துலகம் படைக்க பல புரட்சியாளர்களைத் திரு அவையிலும்,
சமூகத்திலும் இக்கருத்தியல் தொடர்ந்து உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
சமத்துவ விடியல்
தூரமில்லை;
சமதர்மம் தழைக்கும்
வானமே
எல்லை!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்