காயப்பட்ட சிறகுகள்!
தெருவோரக் குழந்தைகளின்
போராட்டங்கள்
சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சிகளைப் போல முகமலர்ந்து சிரிக்கும் குழந்தைகளுக்கு நவம்பர் மாதம் என்பது மிகவும் சிறப்பான மாதம். ஏனெனில், நவம்பர் மாதத்தில் அவர்கள் இரண்டு முறை கொண்டாடப்படுகிறார்கள். நவம்பர் 14-ஆம் தேதி அன்று நம் நாட்டின் முதல் பிரதமரான பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளானது, நம் நாட்டில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சில நாள்களுக்குப் பிறகு, நவம்பர் 20 அன்று, உலகளாவிய குழந்தைகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
இந்தக்
கொண்டாட்டங்கள், குழந்தைகள் சமுதாயத்தில் எத்தனை பெரிய அங்கம் வகிக்கின்றனர் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது. குழந்தைகளின் மதிப்பீடுகளையும், அவர்களின் கள்ளமற்ற குணத்தையும் விண்ணகத்தின் திறவுகோலாக இயேசு குறிப்பிட்டு, தம்முடைய போதனைகளில் அவர்களுக்குச் சிறப்பிடம் அளிக்கின்றார். அதுபோல, பல இதிகாசங்களிலும், புராணங்களிலும் கடவுளாகப்
போற்றப்பட்டவர்களின் குழந்தைப் பருவங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். ஏனெனில், ஒரு மனிதனின் வாழ்வில் குழந்தைப் பருவம் என்பது மிகவும் முக்கியமான பருவம். இந்தப் பருவம் அனைவருக்கும் சிறகடிக்கும் பருவமாக இருக்க வேண்டும்; ஆனால், சிலர் மட்டும் சிறகொடிந்து சிரமத்துடன் வாழ்கின்றனர்.
குழந்தைப்
பருவத்தில், பிறரைப் பார்த்து ‘மாதிரி கொள்தல்’
(Imitate) என்ற
இயல்பான கற்றல் முறையின் மூலம் குழந்தைகள் தங்கள் கற்றல் முயற்சியைத் தாமாகத் தொடங்குகின்றனர். அவர்களின் கற்றல் ஆர்வத்தின் பலனாக, பெரியவர்களைக் கூர்ந்து கவனித்து, அவர்களைப் போல பேசுகின்றார்கள். பெரியவர்கள் செய்யும் வேலைகளைச் செய்ய முயற்சி செய்கின்றனர். இந்த
முயற்சியில் குழந்தைகள் செய்யும் சுட்டிச்செயல்கள் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆனால், சில குழந்தைகள் மட்டும் தங்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்த, பெரியவர்களைப் போலக் கடினப்பட்டு, உடலை வருத்தி வீதிகளில் உழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. பலருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியான, அமைதியான குழந்தைப் பருவம், சில குழந்தைகளின் வாழ்வில் கனவாக மட்டுமே இருக்கின்றது.
இந்த
வண்ணத்துப் பூச்சிகளின் அழகிய சிறகுகள் சாலையோரத் தூசிகளால் மாசுபடுகின்றன. புத்தகங்களைச் சுமந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள், குப்பைகள் நிரப்பப்பட்ட பைகளைச் சுமந்துகொண்டு குப்பைக்கிடங்குகளில் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்துகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தெருக்களில் வாழ்ந்து கொண்டு தங்கள் குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ தெருக்களில் வசிக்கும் குழந்தைகளைத் தெருவோரக் குழந்தைகள் என ஐ.நா.
அழைக்கின்றது.
ஆதரவின்றியும்,
அரவணைப்பின்றியும் வீதிகளில் வாழும் இந்தக் குழந்தைகள் சமூகத்தின் பல கேடுகளுக்குப் பலியாகின்றனர்.
கவனிப்பதற்கும், கண்டிப்பதற்கும் யாரும் இல்லாத இக்குழந்தைகள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக, புகை பிடிக்கின்றனர் மற்றும் பசை மோப்பம் செய்கின்றனர் (Glue Sniffing). பாலியல்
சார்ந்த வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். சிலர் போதைப்பொருள்கள் தயாரிக்கும் உற்பத்தியிலும், விற்பனை செய்வதிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஒரு
மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு, உடை மற்றும் உறைவிடமின்றியும், சமூகப் பாதுகாப்பின்றியும் மிக ஆபத்தான சூழ்நிலைகளில் வாழும் தெருவோரக் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையைப் பல போராட்டங்களுடன் நகர்த்துகின்றனர். இதுபோன்ற பல
பிரச்சினைகளை முழுமையான உடல் வளர்ச்சியும், மன முதிர்ச்சியும் இல்லாத
தெருவோரக் குழந்தைகள் சந்திக்கின்றனர். இதனால், மன அழுத்தம், வாழ்க்கையைக்
குறித்த அச்சம், நம்பிக்கையின்மை, கோபம் போன்ற குணங்கள் இவர்களிடத்தில் மற்றக் குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. மனமகிழ்ந்து சிறகடிக்க வேண்டியவர்கள் சிறகிழந்து, சிக்கல்களின் நடுவில் வாழ்கின்றார்கள். எண்ணற்ற வாழ்க்கை அம்புகளால் துளைக்கப்படும் இவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகின்றது. இவர்கள் வாழ்க்கையை உயர்த்த அரசு சாரா அமைப்புகளும், அரசும் பல முயற்சிகள் எடுத்தாலும்,
அவை பெரிதளவில் உதவுவதில்லை. 23.05.2022 அன்று அரசு வெளியிட்ட அரசாணை 17-இல் தெருவோரக் குழந்தைகளின் மறுவாழ்வு பற்றிப் பல அம்சங்கள் இடம்பெற்றன.
ஆனால், அவற்றை நடமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.
அதற்குக்
காரணம், தெருவோரக் குழந்தைகள் என்றால் யார்? உலகில் மொத்தம் எத்தனை தெருவோரக் குழந்தைகள் உள்ளனர்? எதன் அடிப்படையில் தெருவோரக் குழந்தைகளைக் கணக்கிட வேண்டும் போன்ற கேள்விகளுக்கு இன்றுவரை சரியான பதில்கள் இல்லை. பல சமூக ஆர்வலர்களாலும்,
களப்பணியாளர்களாலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. ஆயினும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனம் (UNICEF – United nations
Children’s fund) மிக
முக்கியப் பங்களித்துள்ளது. அவர்களின் முயற்சிகள் தெருவோரக் குழந்தைகளைப் பற்றிய சில தெளிவை அளித்தாலும், அவையும் முழுமையானதாக இல்லை.
தெருவோரக்
குழந்தைகளை, ‘யுனிசெப்’
அமைப்பு மூன்று வகைகளாக வகைப்படுத்துகின்றது. அவை, 1) தினசரி வேலைகளை முடித்து விட்டு இல்லம் திரும்பி, பெற்றோர்களோடு வாழும் குழந்தைகள். 2) தெருக்களில் வாழ்ந்து கொண்டு அரிதாகத் தங்கள் பெற்றோர்களைச் சந்திக்கும் குழந்தைகள். 3) யாரும் இல்லாமல் தெருக்களில் வசிக்கும் குழந்தைகள்.
மேற்குறிப்பிட்ட
மூன்று வகைக் குழந்தைகளும் தெருக்களில் வேலை செய்வதற்கான காரணங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் வெவ்வேறு விதமானவை. முதல் மற்றும் இரண்டாம் வகையைச் சார்ந்த பெரும்பாலான தெருவோரக் குழந்தைகள் அரசு சார்ந்த ஆவணங்கள் வைத்துள்ளனர். இவர்கள் அரசாங்கத்தால் அறியப்பட்டவர்கள்; மேலும், சட்ட விரோதமாகக் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர் அல்லது வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்.
மூன்றாம் வகைக் குழந்தைகள் முறையான அரசு ஆவணங்களும், பெற்றோரும் இல்லாதவர்கள். இவர்களைப் பற்றிய சரியான தகவல்கள் எதுவும் அரசிடத்தில் இல்லை. இந்தக் காரணங்களால் தெருவோரக் குழந்தைகளைக் கணக்கிடுவது சாத்தியமற்றதாகின்றது.
இருப்பினும்,
‘யுனிசெப்’ உலகெங்கும்
18 மில்லியன் தெருவோரக் குழந்தைகள் இருப்பதாக 2000-ஆம் ஆண்டில் கணக்கிட்டது. இன்று இந்தியாவில் மட்டும் 18 மில்லியன் தெருவோரக் குழந்தைகள் உள்ளனர். இது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 1.3 சதவிகிதமாகும்.
இந்த
மில்லியன் கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வில் சொல்ல முடியாத எண்ணற்ற பல துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
மார்ச் 2013-இல் கரண் என்ற தெருவோரச் சிறுவன் மும்பையிலும், மே 2014-இல் கார்த்திக் என்ற சிறுவன் பெங்களூருவிலும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த இரண்டு வழக்குகளிலும் சரியான தீர்ப்பு இன்றுவரை கிடைக்கவில்லை.
2020-ஆம் ஆண்டு
குழந்தைகள் கடத்தல் வழக்கில் இராஜஸ்தானில் 100 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இவை நாம் அறிந்தவை. இதுபோன்று, வெளிவராத எத்தனையோ நிகழ்வுகள் இந்தக் குழந்தைகளைச் சுற்றி நடக்கின்றன.
இவர்களை
ஆற்றுப்படுத்துவதற்கும்
வழி நடத்துவதற்கும் சரியான வழிகாட்டிகள் தேவைப்படுகின்றார்கள். இந்த
ஆதரவற்றக் குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லாததால், சமூகத்தில் இவர்களுக்காகக் குரல் கொடுக்கவும், இவர்களின் நலம் காக்கவும் எவரும் முன்வருவதில்லை.
குழந்தைகள்
தினத்தை வருடந்தோறும் கொண்டாடும் நாம், வீதியில் சிதறிக்கிடக்கும் உடைந்த சிறகுகளைத் தெரிந்தெடுத்து திடப்படுத்த முயல்வோம். வீழ்ந்த பட்டாம்பூச்சிகளுக்குப் புதுச் சிறகளித்துப் பறக்கவிடுவோம்.