news-details
ஆன்மிகம்
தெய்வீகத் தடங்கள் - 15

அலைகளை எதிர்கொண்டு...

இரவு எவ்வளவுதான் நீண்டிருந்தாலும், விடிந்தே தீரும்என்பது ஓர் ஆப்பிரிக்கப் பழமொழி. எவ்வளவு காலம் இது நீடிக்கும்? இதுபோன்ற ஐயம் நிறைந்த கேள்விகள் எரிமலைகள் போல என் சிந்தனையின் ஆழத்தில் குமிழியிடும். ‘அதுவிரைவில் முடிந்து விடுமா? நான் அனுபவித்த / அனுபவிக்கும் அனைத்தும் தேவைதானா? இப்படிப்பட்ட சவால்கள் நிறைந்த சூழலை நான் ஏன் எதிர்கொள்ள வேண்டும்? ஏதாவது மாற்றுவழி உண்டா? போதும்போதும்... யாரும் எதுவும் எனக்கு நேரடியான உடனடியான விடை தருவதில்லை. நான் முரணான உணர்வுகளால் நிறைந்திருக்கிறேன். நான் மரத்துப் போய் உணர்வின்றி இருக்கிறேன். என்னுடைய ஆழமான நம்பிக்கைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன. என் விரக்தி அதிகரிக்கிறது; நான் நம்பிக்கை இழந்து போகிறேன்.

ஆனால், ஐயமும் கவலையும் என் சிந்தனையை அலைக்கழிக்கத் தொடங்கும்போது எனது ஆன்மா மற்றொரு பக்கத்தை ஆராயக் கேள்விகளைக் கேட்கிறது. எனது திட்டங்களினாலேயே நான் அழுத்தங்களுக்கு உட்படுகிறேனா? பத்து ஆண்டுகளை இறுதியென்று கணக்கிடுவதை நான் ஏன் விட்டுவிடக்கூடாது? சுவர்களை நோக்கி என்னைத் தள்ளிக்கொள்ள என்ன அவசரம்? தகுதியான நேரம் எது என்று யார் தீர்மானிப்பதுஇந்த நிலைக்குக் கொண்டு வரவும், இந்த நீண்ட வலிமிகுப் பயணத்தை மேற்கொள்ளவும் எது காரணம்? இந்த ஆன்ம சோதனைக் கேள்விகள் மெய்நிலைக்கு நான் வரக் காரணமாயின.

படைத்தவர் இயற்கையைச் சில இயக்கங்கள் உள்ளேயே இருக்குமாறு வடிவமைத்திருக்கிறார். மனித உடல் அதற்குக் குணமாக்கல் தேவைப்படும்போது, அதனைச் செய்ய தன்னுள்ளேயே உள்நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. இந்த மெய் நிலையை ஏற்கும் உலகும்காலம் குணமளிக்க மிகச்சிறந்த மருந்துஎன்று கூறுகிறது.

எனது கணிப்புகளும், எளிய வழிகளும் என்னுடைய தவறான எதிர்பார்ப்புகளால் வருகின்றன. இந்த எதிர்பார்ப்புகள் வெளியுலக நடப்புகளோடு ஒப்பிடுவதால் உருவானவை. எனது உடைந்த உயிரின் தொடுவானத்தில் தெய்வீகத் தடங்களை நான் ஏன் தேடவில்லை? எனது ஆன்மா மனத்தைக் கட்டும் எதிர்வினையுடன் எழுகிறது. உணர்வு நரம்பின் ஒவ்வொரு செல்லும் புதிதாக வளரும்போது, ஒவ்வொரு கணமும் புது காலை விடிகிறது. வளர்தலும், சீராதலும் என்னுள் ஒரு தொடர் நிகழ்ச்சி. செல்கள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை எனக்கு அன்றாடம் சத்தூட்டி, நான் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க உதவுகிறது; இந்த மெய்நிலைகளைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்ப்பதற்கு என்னுள் மிகப் பெரும் வலிமை தேவைப்படுகிறது.            

எனது முன்னுரையில் திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கூறியதை மேற்கோள்காட்டியிருந்தேன். அவல நிகழ்வுகள் வலிமைக்கான வளங்களாகவே இருக்கவேண்டும். எப்படிப்பட்ட அறைகூவல்களைச் சந்திக்க நேரும்போதும், நமது அனுபவங்கள் துன்பம் தரும்போதும் நம்பிக்கையை இழப்பதுதான் பேரிடர். எனவே, நான் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையை விடாமல் பற்றிக்கொள்ள வேண்டும். வாழ்க்கை எனக்கு அளிக்கக் காத்திருக்கும் அனைத்தையும் மகிழ்ச்சியோடும் மரியாதையோடும் ஏற்கத் தேவையான வலிமையை மறுபிறப்படைந்த எனது கண்ணோட்டங்கள் கொடுக்கின்றன. துன்பத்திலிருந்து மீண்டுவராவிட்டால் வாழ்க்கை வீணாகி விடும். அதனை ஐயம் எனும் காற்று அணைக்க முயலும்போது, நம்பிக்கை என்ற தீயை ஆன்மாவினுள் மீண்டும் பற்றவைக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னர், ஒருவர் என் உடல் நிலை குறித்து விசாரித்தார். குறிப்பாக வலது கை பற்றிக் கேட்டார். நான், “அதற்கு இன்னும்  சிறிது காலம் பிடிக்கும். சில ஆண்டுகள்கூட ஆகலாம்என்று சொன்னேன். உடனே அவரிடமிருந்து பதில் வந்தது: “உங்களுக்குக் கடவுளிடம் நம்பிக்கை இல்லை; இல்லையென்றால் இதற்குள் உங்களுக்குப் புதுமையாகக் குணமாயிருக்கும்என்றார்அவருடைய விடை என்னுள் புதுமைகள், அற்புதங்கள், அருங்குறிகள் பற்றிப் புரிந்துகொள்ளும் ஆசையைத் தூண்டிற்று. என்னுடைய விசுவாசம், கடவுளில் நம்பிக்கை ஆகியவற்றின் தாக்கங்களைப் புரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

குருத்துவத்திற்கு என்னுடைய நீண்ட தயாரிப்பின்போது வெவ்வேறு மெய்நிலைகளை அறிய வாய்ப்பு கிடைத்தது. மக்களோடும், சூழ்நிலைகள், கள நிலவரங்கள் ஆகியவற்றோடும் தொடர்பு கொண்டது தனிமனிதமாக என் வளர்ச்சியில் நிரந்தரத் தாக்கத்தை ஏற்படுத்திற்று. இந்த வளர்ச்சி எனது உடல், அறிவு, உணர்ச்சி, உள்ள, ஆன்மிக வாழ்வில் வளம் கூட்டியது. என்னைக் குருவாக உருவாக்கிய அந்த ஆண்டுகளில் நான் விழுமியங்கள் பலவற்றை எனதாக்கிக் கொண்டேன். இவற்றோடு விபத்தில் நான் கற்றவையும் சேர்ந்து என்னுள் வலுவான மனத்திண்மையையும், எந்தத் தடைகளையும் வெற்றிகொள்ளும் உறுதிப்பாட்டையும், எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும் ஆன்மிக நம்பிக்கைகளையும் தந்தன.

கங்கா மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர்களது நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த முறைகளை நான் பெரிதும் மதிக்கிறேன். எலும்பு நோய், நுண் அறுவை சிகிச்சைத் துறைகளில் இருந்த மருத்துவர்கள் பேரா. ராஜா சபாபதி, ஹரி வெங்கட்ரமணி. ஆர். ரவிந்திர பாரதி, பர்வீன் பரத் வாஜ், முதலானோர் பலதரப்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை அளித்தார்கள். கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் எப்போதும் புன்னகை செய்துகொண்டு, நோயாளிகளை உற்சாகப்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய அன்பான நடத்தையும், ஊக்கமூட்டும் தன்மையும் அவர்களது நோயாளிகள்முடியாதுஎன்று தோன்றியவற்றைக் கூட முயற்சி செய்துபார்க்கத் தூண்டின. நோயாளிகளின் முதுகில் தட்டி அவர்கள் வருங்காலத்தில் நம்பிக்கையைக் காட்டினார்கள். அப்படிப்பட்ட மனப்போக்குகளும், செயல்களும், புதுமைகளும், அற்புதங்களும் நடக்குமாறு செய்தன.

(தொடரும்)