தண்ணீரில் கால் வைத்து செந்நீரில் நாள் கடந்து,
கண்ணீரில்
கரைகிறது மீனவர் வாழ்க்கை!
அலைகளோடு
போராடும் ஆழி கொண்ட வாழ்க்கை,
அமைதியின்றியே
அலைக்கழிக்கப்படுகின்றது.
இரவின்
மடியில் தொடங்கும் வாழ்க்கை
விடிந்த
போதும் விடியாப் பொழுதே!
வலிகள்
நிறைந்த வாழ்வியல் சூழல்
விடைகள்
தேடியே விடை பெறுகின்றன.
எல்லை
மீறியதாய் எதிர்வரும் அவலங்கள்
யார்
அங்கு மீறுவது? நீயே சொல் தாயே!
கனவுகள்
கொண்ட நாளைய வாழ்வு
கலைந்தே
கரைந்தே கரை சேர்கிறது.
இந்திய
- இலங்கை கடல் எல்லைப் பகுதியில் நாளும் தொடரும் இலங்கையின் அத்துமீறல்கள்தான் நம் இதயக் கதவைத் தகர்த்துச் செல்கின்றன. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு தாக்கப்படுவதும், வலைகள் அறுக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் பல வேளைகளில் படகுகள்
பறிமுதல் செய்யப்பட்டு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்டுச் சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டு வதைக்கப்படுவதும், ‘தினத்தந்தி’யின்
முற்றுப்பெறாத ‘கன்னித்தீவு’ தொடர்
கதையாகிக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய தொடர் நிகழ்வுகள் இந்திய ஒன்றிய அரசின் கையறு நிலையையே படம்பிடித்துக் காட்டுகின்றன.
இலங்கையிலும்
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு இதுவரை எத்தகைய நிரந்தரத் தீர்வும் எட்டப்படவில்லை என்பது நாமனைவருமே வெட்கப்படவேண்டிய ஒன்று.
அண்மையில்
(நவம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை அன்று) கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
இந்த
ஆண்டில் மட்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 65 படகுகளைப் பறிமுதல் செய்த இலங்கைக் கடற்படையினர், 485 மீனவர்களையும் சிறைப்பிடித்து இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
மீனவர்கள்
தொடர்ந்து இவ்வாறு தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் வன்மையாகக் கண்டிப்பதோடு, இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்நாட்டு மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களைத் தாயகம் அழைத்துவர ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு ஆயர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இராமேஸ்வரத்திலிருந்து
மீன் பிடிக்கச் சென்ற நம் மீனவர்களை, ‘எல்லை தாண்டிய’ பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டி இலங்கை அரசு தொடர்ந்து சிறைப்பிடித்து வருவது பெரும் கண்டனத்திற்குரியது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை நாட்டு எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
வேலியிடப்படாத
பெருங்கடலில் நமது பகுதி எங்கே முடிகிறது? அவர்களின் பகுதி எங்கே தொடங்குகிறது? எனச் சாமானிய மீனவர் கண்டுணர்வது எங்ஙனம்?
கடந்த
அக்டோபர் மாதம் 23 -ஆம் தேதி இராமேஸ்வரத்தைச்
சேர்ந்த 16 மீனவர்களும், அதைத்
தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் அக்டோபர் 26 -ஆம் தேதி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழாண்டில் மட்டும் மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் 30 ஆக அதிகரித்திருக்கிறது. 140 மீனவர்களுடன், 200 மீன்பிடிப் படகுகளும் தற்போது இலங்கை அரசின் வசம் உள்ளதாக அறியப்படுகிறது.
இத்தகைய
நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும், தீர்க்கமான முடிவுகள் காணப்பட இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதும் தமிழ்நாடு அரசின், நம் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. அத்தகைய கோரிக்கைகளைத்
தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்
முன்வைத்ததன் பேரில் கடந்த ஆண்டு அக்டோபர் 21 -ஆம் தேதி கொழும்பில்
நடைபெற்ற கூட்டத்தில், மீனவர்களுக்கு எதிராகப் படைபலத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர்
வலியுறுத்தியது பாராட்டத்தக்கதே!
ஆனாலும்,
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டும்போது கைது செய்யப்படுவதும், தமிழ் மக்களின் கொந்தளிப்பால் இந்திய அரசின் வெளியுறவுத்துறை நிர்வாகத் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது. நமது
எதிர்ப்புகளை வெறும் காகிதக் கணைகளாக இலங்கை அரசு கருதுகிறதோ... என்னவோ!
அண்மைக்
காலங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதும், அவர்களது உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும், மிகப்பெரும் அபராதம் தண்டனையாக விதிக்கப்படுவதும் அதிகரித்து வருவது நமக்குப் பல்வேறு ஐயங்களை உருவாக்குகிறது. எல்லை
தாண்டியதுதான் பிரச்சினை என்ற வாதத்தை அது கேள்விக்குள்ளாக்குகிறது.
கடுமையான
அபராதத் தொகையைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தாலும், படகுகளை நெடுங்காலத்திற்கு இலங்கை அரசு தன்வசம் வைத்துக் கொள்வதாலும் தமிழ்நாட்டு மீனவர்களின் இருப்பும், வாழ்வியலும் பெரும் சிக்கலுக்குள்ளாவதோடு, மனத்தளவிலும், உடல் அளவிலும், சமூக-பொருளாதார நிலையிலும் அவர்கள்
பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை இந்த நாட்டு அரசும், அண்டை நாட்டு அரசும் உணர்ந்திடல் வேண்டும்.
தேர்தல்
நேரத்தில் தெவிட்டாது, தேனொழுகப் பேசிய ஒன்றிய அரசு வழக்கம்போல இன்று கள்ள மௌனம் காக்கின்றது. தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் புதிய அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற அனுரகுமார திசாநாயக்கா வெற்றிக்குப் பிறகு ‘மாற்றங்கள் நிகழும்’ என்ற கூற்று, எவ்வித மாற்றமும் இன்றி பொய்த்துப் போனது.
ஒன்றிய
அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை அதிபரைச் சந்தித்துப் பல்வேறு திட்டங்களைப் பற்றிப் பேசி வந்த போதிலும், மீனவர் பிரச்சினையில் எவ்விதத் தீர்க்கமான முடிவும், உறுதியான வலியுறுத்தலும் அவர் மேற்கொள்ளாதது நமக்கு ஏமாற்றமளிக்கிறது.
கடந்த
நாற்பது ஆண்டுகளாக அன்றாட நிகழ்வாகத் தொடரும் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வியல் அவலம் குறித்துத் தீர்க்கமான முடிவெடுக்க தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் பலமுறை டெல்லி சென்றபோதும், ஒன்றிய அரசு காட்டிய ‘மாற்றாந்தாய் மனநிலை’ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தன.
கடந்த
ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அதிக அளவில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதை இனியும் தொடரவிடாது தடுக்கவும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை, அவர்களது படகுகளை விடுவிக்கவும் உடனடியாகத் தூதரக நடவடிக்கைகளை இந்திய ஒன்றிய அரசு உடனே முடுக்கி விட்டு, தமிழர்களும் இந்தியாவின் குடிகள்தாம் என்பதை இந்த உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டும் என்பதே நமது கோரிக்கை!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்