கண்கள் கொண்ட சக்கரங்கள்!
‘இறை ஊழியர்’ லூயிஸ் சவீனியன் துப்புயீ என்ற மனிதர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்காவிட்டாலும், அவர் நிறுவிய தூய இதய மரியன்னையின் பிரான்சிஸ்கன் சகோதரிகள் சபை (FIHM) பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தியப் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முதல் துறவியர் சபை இது. இதன் சகோதரிகள் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 120 இடங்களில் பணி செய்கிறார்கள். கல்வி, மருத்துவம், சமூகச் சேவை, நற்செய்தி அறிவிப்பு எனப் பரந்துபட்ட அக்கறை கொண்டவர்கள். பாண்டிச்சேரியில் உருவானதாலும், அவர்கள் அணியும் தனித்துவமான் நீல முக்காடு காரணமாகவும், ‘Pondy Blue Sisters’ என்று பொதுவாக அறியப்படுகிறார்கள். அண்மை காலத்தில் அருள்சகோதரிகளின் சீருடைகள் மாற்றம் பெற்றதன் விளைவாக, உடையின் நீலம் ஏறக்குறைய வணங்கி விடை பெற்றுவிட்டது; பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.
நிறுவுநர்
துப்புயீ பிரான்சு நாட்டவர். பாரிசு அயல்நாட்டு மறைபரப்புச் சபையைச் சார்ந்த அருள்பணியாளர். 1832-ஆம் ஆண்டு மறைபரப்புப் பணியாளராக இந்தியாவிற்கு வந்தார். 1874-இல் இறக்கும் வரை ஒருமுறை கூட தன் தாய் நாட்டிற்குத் திரும்பச் செல்லவில்லையாம் (நான் சென்ற இரண்டு மாதங்களில் மட்டும் மூன்று முறை வீட்டுக்குப் போய் வந்தேன்). இடைப்பட்ட 40 சொச்சம் ஆண்டுகளில் இந்த வெள்ளை மனிதர் இந்தியத் திரு அவைக்காக ஆற்றிய பணிகள் மலைப்பூட்டுபவை. மறைபரப்புப்
பணியின் அத்தனை சாத்தியங்களையும் துப்புயீ தொட்டுப் பார்த்திருக்கிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாண்டிச்சேரி Mission Printing Press-உடைய
மேலாளராகப் பணியாற்றினார். மறைபரப்புப் பணிக்கு அச்சு ஊடகத்தை மிக வலிமையான முறையில் பயன்படுத்திய முன்னோடி கிறிஸ்தவ ஊடகவியலாளர்களில் தந்தை துப்புயீ ஒருவர்.
இவர்
ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று திராவிட மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். ஆன்மிகம் தவிர, பொதுப்பயன்பாட்டிற்காகவும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். பிரெஞ்சு இலக்கண நூல், தமிழ் இலக்கண நூல், தமிழ்-பிரெஞ்சு அகராதி... இன்னும்
பல. தமிழின் மகத்தான இலக்கியப் படைப்புகளைச் சாதாரண மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் திருக்குறள், தேம்பாவணி போன்ற நூல்களுக்கு விளக்கவுரைகள் எழுதியுள்ளார். உங்களுக்குத் தெரியுமா? முதல் நற்கருணை விருந்துக்கு குழந்தைளைத் தயார் செய்ய இன்றைக்கும் தமிழ்நாடு திரு அவையில் பயன்படுத்தப்படும் ‘சின்னக் குறிப்பிடம்’ தந்தை
துப்புயீ அவர்கள் தொகுத்ததே (‘எத்தனை சர்வேசுரன்? ஒரே சர்வேசுரன்!’ - யார் மறக்க முடியும்?).
‘இறை ஊழியர்’ துப்புயீ அவர்கள் ‘புனிதர்’ நிலைக்கு உயர்த்தப்பட தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தந்தை அவர்கள் எழுதி வெளியிட்ட பல
ஆன்மிக நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவற்றை நவீன கிறித்தவ வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தும் பணியில் சபைத் தலைமை ஈடுபட்டுள்ளது. இது
தன் வேர்களைத் தேடும் ஒரு துறவற அமைப்பின் புதுப்பித்தல் முன்னெடுப்பும் கூட. இந்தப் பெரும் திட்டத்தின் ஓர் அங்கமாக தந்தை துப்புயீ எழுதிய ‘நன்றாய் நினை’ என்ற ஆன்மிக நூலை ‘Olmette Media Works’ என்ற சென்னை நிறுவனம் தொழில்முறை ரீதியாக மொழிபெயர்க்க, அதை மேற்பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என் வாழ்வின் பேறு என்று சொல்வேன். பல மாதங்கள் எடுத்துக்கொண்டு,
ஒவ்வொரு பக்கமாகச் சகோதரிகளின் பொறுமையைச் சோதிக்கும் வேகத்தில் பெயர்த்து முடித்துக் கொடுத்த இந்தப் பணியின் நிதான முன்னேற்றத்திற்குக் காரணமாக நிர்வாகச் சிக்கல்கள், பணிச்சுமை, கிறித்தவக் கருத்துகளை உள்வாங்குவதில் பிறமத மொழிபெயர்ப்பாளர்களுக்கு உள்ள கடினம்... போன்ற பல இருந்தாலும், நூலின்
மொழியை முக்கியமாகக் குறிப்பட வேண்டும்.
‘நன்றாய் நினை’-19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டு, கையெழுத்து வடிவத்தில் மட்டுமே கிடைத்துள்ள ஒரு தமிழ் நூல். ஒரு வெளிநாட்டவர் எழுதியது. அந்தக் காலக்கட்டத்தில் தமிழ் எவ்வாறு எழுதப்பட்டது, பேசப்பட்டது என்பதை அறிந்துகொள்ள இந்த நூல் ஒரு சாட்சி. தமிழும், வட மொழியும் கலந்துகட்டி
வரும் மணிப்பிரவாள நடையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நவீன தமிழ் வாசகர் அதைப் புரிந்துகொள்வது கடினம்.
13-ஆம்
நூற்றாண்டில் துவங்கி, கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி வரை கோலோச்சிய இந்த எழுத்து முறைக்கு ஓர் எளிய உதாரணம் சொல்கிறேன். பின்வரும் சொற்றொடரைக் கவனியுங்கள்: “அக்கிராஸனாதிபதி அவர்களே! உப அத்யகூஷகர் அவர்களே!
எதிரே பிரஸன்னமாயிருக்கும் மஹா ஜனங்களே! உங்களுக்கு முதலில் என் நமஸ்காரம்.” இதில் ‘அவர்களே’,
‘எதிரே’, ‘உங்களுக்கு’, ‘முதலில்’, ‘என்’ ஆகியவை
மட்டுமே தமிழ்ச்சொற்கள். மற்றவை எல்லாம் வடமொழி. ‘அக்கிராஸனாதிபதி’ என்றால்
அவைத்தலைவர் என்று அர்த்தம். ‘உப
அத்யகூஷகர்’ என்றால்
துணைத் தலைவர் என்று அர்த்தம். ஜனங்கள் - மக்கள். பிரஸன்னமாயிருக்கும்
- வீற்றிருக்கும். நமஸ்காரம் - வணக்கம். இப்படி ஒரு முழு நூலும் போனால் எப்படி இருக்கும்? யூகித்துக் கொள்ளுங்கள்.
ஏற்கெனவே
ஒரு குழுவினர் ‘நன்றாய் நினை’யின் கையெழுத்துப்
பிரதியை நவீன தமிழுக்கு மாற்ற எடுத்திருந்த ஒரு முயற்சி வடிவத்தைச் செப்பனிட்டு மீண்டும் தமிழ்ப்படுத்தி காலம், நடை, களச்சூழல் போன்ற கூறுகள் ஒரு பழமையான பிரதியில் இயல்பாக ஏற்படுத்தும் தடைகளை ஒவ்வொன்றாகத் திறந்து... திறந்து உள்ளே சென்று பார்த்தால், ஆஹா என்ன ஒரு சுவையான உள்ளடக்கம்! அங்கே நாம் காண்பது ஓர் அசலான ஆன்மிகவாதியின் ஆழமான ஆன்மிகக் கருத்துகள்!
‘நன்றாய் நினை’ என்ற நூலை நான் மிகுந்த விருப்பத்துடன் வாசித்தேன். லொயோலா இஞ்ஞாசியாரின் ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ போல
ஒரு மாதத்திற்குத் தியானிக்க வேண்டிய 31 கட்டுரைகள் கொண்ட இந்நூலில், விண்ணகம், இறப்பு, கடவுளன்பு, பிறரன்பு, அறம், மன்னிப்பு, திருப்பலி, மரியா... எனக் கிறிஸ்தவ ஆன்மிகத்தின் எல்லா ஆதாரத் தலைப்புகளையும் துப்புயீ தொட்டிருக்கிறார்.
‘நன்றாய் நினை’ என்ற நூலில் துப்புயீ ஒன்பது
வானதூதர் குழுக்கள் பற்றிக் குறிப்பிடுவது நான் இதுவரை கேள்விப்படாதது அல்லது குருமடத்தில், பேராசிரியர்கள் அதைச் சொல்லிக் கொடுத்தபோது, நான் அசந்து தூங்கியிருக்க வேண்டும். புனித பிரான்சிஸ் சவேரியார் நவநாளுக்காக துப்புயீ ஒன்பது மன்றாட்டுகள் எழுதியுள்ளர். அது ஒவ்வொன்றிலும் ஒரு வானதூதர் குழுவைக் குறிப்பிட்டு, அவர்களின் சிறப்பு இயல்புகளும், அணிகளும், பணிகளும் எப்படிச்
சவேரியார் என்கிற மாமனிதரோடு ஒத்துப் போகின்றன என்று ஒப்பிட்டு, “அவரின் பேறுபலன்களை முன்னிட்டு, நீர் எங்களுக்கு இதைச் செய்ய வேண்டும்”
என்று அவர்
கடவுளிடம் முன்வைக்கும் வேண்டல்கள் மன உருக்கமானவை.
நீங்கள்
‘ஒன்பது வானதூதர்கள் குழுக்கள்’
பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
என்னைப் போலவே உங்களுக்கும் இது புதிதென்றால், அவர்களைப்
பற்றிய சில அடிப்படையான தகவல்கள், சுருக்கமான வடிவில் இங்கே:
1) காவல் தூதர்கள் (Guardian Angels):
இவர்கள் நாம் பலமுறை கேள்விப்பட்ட குழுவினர். வானதூதர்கள் படிநிலையில் மிகவும் கீழே உள்ள வேரடிப் பணியாளர்கள். இவர்களின் முக்கியப் பணி மனிதர்களைப் பாதுகாப்பது. திருப்பாடல் 99:11: “நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம் தூதருக்கு அவர் கட்டளையிடுவார்” எனக்
குறிக்கப்படுவது இவர்களைக் குறித்தே.
2) முதன்மை வானதூதர்கள்
(Archangels):
இவர்களும் நமக்கு மிக பரிச்சயமான குழுவினர். இதில் மூவர் மிகவும் பிரபலம். மிக்கேல்,
இரபேல், கபிரியேல். இவர்கள் வழியாகவே கடவுள் மனுக்குலத்திற்கு அனுப்ப வேண்டிய செய்திகளை அனுப்புகிறார். மரியாவுக்குத் தூதுரை வழங்குபவராக கபிரியேலும் (லூக்1:26-38), தோபியாவின் வழித்துணையாக இரபேலும் (தோபித்து 5-12), அரக்கப் பாம்போடு போர் புரிபவராக மிக்கேலும் (திவெ 12:7) திருவிவிலியத்தில் குறிப்பிடப்படுகிறார்கள்.
3) ஆட்சி செலுத்துவோர்
(Principalities):
இந்தக் குழுவினர் நாடுகளையும், நகரங்களையும், ஆட்சியாளர்களையும் வழிநடத்துகின்றனர். கடவுளின் திட்டம் உலகில் நிறைவேறுவதை உறுதி செய்பவர்கள் இவர்களே. நிறுவனங்களுக்கும், பெரும் அமைப்புகளுக்கும் பாதுகாவலர்கள். ஓவியங்களில் ஆட்சி செலுத்தும் வானதூதர்கள் மகுடங்கள் அணிந்தவர்களாகவும், பதாகைகள் ஏந்தியவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். பவுலடியார் இவர்களைப் பற்றி, “அதன் மூலம் பலவகைகளில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது”
என்று குறிப்பிடுகின்றார் (எபே 3:10).
4) ஆற்றல்கள் (Powers): இவர்கள்
போர் வீரர்கள். பிரபஞ்சத்தையும், மனித ஆன்மாக்களையும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து போராடி மீட்பதே இவர்களின் பணி. உலகின் ஒழுங்கை இவர்கள் உறுதி செய்கிறார்கள். ஓவியங்களில் படைக்கலன்கள் ஏந்திய வீரர்களாக ‘ஆற்றல்கள்’
குழுவினர் சித்தரிக்கப்படுகின்றனர். பவுலடியார்
இவர்களை, ‘வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர்’ எனக்
குறிப்பிடுகிறார் (எபேசியர் 3: 10).
5) வல்லமை உடையோர் (Virtues): இயற்கை உலகின் ஒழுங்குக்கு இவர்களே பொறுப்பு. மேலும், உலகில் கடவுளின் வல்லமையை வெளிப்படுத்தி, புதுமைகள் நிகழக் காரணமாக இருக்கின்றார்கள். எபேசியர் திருமுகம் 1:21 இவர்களை ‘வல்லமை உடையோர்’ என அழைக்கிறது. கடவுளின்
ஆற்றலை வெளிப்படுத்தும் கருவிகளாக இருப்பதால் இவர்கள், ‘ஒளிரும் தூதர்கள்’
(The Shining Ones) என்றும்
வர்ணிக்கப்படுகிறார்கள்.
அறிவியல் விதிகளின்படி சீராக இயங்கும் உலகில் கடவுள் குறுக்கிட்டால் என்ன புதுமைகள் நிகழும் என்பதற்கு இவர்கள் சாட்சி.
6) அதிகாரம் கொண்டோர் (Dominions): இவர்கள் கீழ்ப்படிகளில் இருக்கும் வானதூதர்கள் மீது அதிகாரம் செலுத்தி, விண்ணகத்தில் கடவுளின் விருப்பத்தை நிலைநாட்டும் வானதூதர் குழுவினர். ஓவியங்களில் இவர்கள் கையில் செங்கோலை ஏந்தியவர்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். செங்கோலில் அதிகாரத்தைக் குறிக்கும் ஓர் ஒளி வட்டம் காணப்படுகிறது. வானதூதர்களின் மேல்மட்டக் குழுவினருக்கும், கீழ்மட்டக் குழுவினருக்கும் இடையே ஒருங்கிணைப்பாளர்களாக இவர்கள் செயல்படுகிறார்கள். கொலோசையர் திருமுகம் 1:16-இல் பவுலடியார் குறிப்பிடும்
‘அதிகாரம் கொண்டோர்’ இந்தக் குழுவினரே.
7) அரியணையில் அமர்வோர் (Thrones): இவர்கள் கடவுளின் அரியணையாக இருக்கிறார்கள். கடவுளின் அதிகாரத்தையும், நீதியையும் நிலைநாட்டுபவர்களாகச் செயல்படுகிறார்கள். ஓவியங்களில் கண்கள் கொண்ட பெரிய சக்கரங்களாக
இவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.
“இதோ! கெருபுகளின் அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு கெருபின் அருகிலும் ஒரு சக்கரம் இருந்தது. அவை நான்கும் ஒரேவிதத் தோற்றம் கொண்டிருந்தன; சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பதுபோல் தோன்றின”
(எசே 10:9-10) என்ற பகுதியில் எசேக்கியேல் குறிப்பிடும் கண்கள் கொண்ட சக்கரங்கள் இந்த வானதூதர் குழுவினரே.
8) கெருபுகள் (Cherubim): இவர்களின்
முக்கியப் பணி புனித இடங்களையும், மறை பொருள்களையும் பாதுகாப்பது. இவர்கள்தாம் விண்ணகத்தின் பாதுகாவலர்கள். மனிதன், எருமை, கழுகு, சிங்கம் போன்ற பல முகங்கள் கொண்டவர்களாகவும்,
பல கண்கள் கொண்டவர்களாகவும் கெருபுகள் சித்தரிக்கப்படுகிறார்கள். பாவம் செய்த மனிதனை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டும் கடவுள், “மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும், சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்”
என்று தொடக்க நூல் 3:24 சொல்கிறது.
9) சேராபீன்கள் (Seraphim): சேராபீன்கள்
வானதூதர்கள் குழுவில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். கடவுளுக்கு மிக நெருக்கமானவர்கள். இவர்களின் பணி, கடவுளை வழிபடுவதும், அவரை இடைவிடாமல் அன்பு செய்வதுமே. இவர்களுக்கு ஆறு இறக்கைகள் உள்ளன. இரண்டு முகத்தை மூட, இரண்டு பாதங்களை மறைக்க, இரண்டு பறக்க. எசாயா 6:1-7, சேராபீன்கள்
கடவுளின் அரியணையைச் சூழ்ந்து கொண்டு, “படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது” என்று
பாடுவதாகச் சொல்கிறது.
எத்தனை எத்தனை
வானதூதர்கள்!!
‘இறை ஊழியர்’ லூயிஸ் சவீனியன் துப்புயீ உடைய வாழ்க்கையையும், பணியையும் குறித்து
வாசிக்கும்போது எனக்குத் தோன்றுவது, ‘இவர் கூட கடவுள் அனுப்பிய ஒரு வானதூதர்தான்!’
நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்?
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)