“எனக்குச் சாப்பாடு வேண்டாம்” எனச் சொல்லி விட்டுப் படுத்திருக்கிறார் அந்தக் காவல்துறை அதிகாரி. அவரது மனைவி வந்து அருகில் அமர்ந்துகொண்டு, “ஏனுங்க சாப்பாடு வேண்டாம்?” எனக் கேட்கிறார்.
“எனக்குப் பசியில்ல”
என்கிறார் அதிகாரி.
“என்ன நடந்தது? சொல்லுங்க?”
“நம்ம வீட்டுக்குப் பக்கத்துல அவ்வளவு இடம் சும்மாதானே கெடக்குது? அந்த ஆள் அதை நமக்கு வித்தான்னா, இந்த வீட்டை இன்னும் கொஞ்சம் எக்ஸ்டென்ட் பண்ணி பெருசாக்கலாம். ஒரு ஸ்விம்மிங் பூல் கட்டலாம்னு நெனச்சேன்.”
“சரி. அந்த ஆள் கிட்ட பேசினீங்களா?”
“பேசினேன். விலை எவ்வளவு சொன்னாலும் நான் வாங்கிக்குறேன். ஒயிட்ல வேணும்னாலும் தர்றேன், பிளாக்ல வேணும்னாலும் தர்றேன்னெல்லாம் சொல்லிப் பார்த்தேன்.”
“என்ன சொன்னான் அந்த ஆளு?”
“விக்க முடியாதுன்னுட்டான். அவங்க அப்பா ஆசையா வாங்கிப் போட்டதாம். யாருக்கும் வித்துடாதேன்னு சொல்வாராம். அவங்க அப்பா பேருல வீடு கட்டப் போறானாம். பணத்துக்காகக் காத்திருக்கானாம். கிடைச்சதும் வீடு கட்டுற வேலையை ஆரம்பிச்சுடுவானாம்.”
“அந்த ஏமாற்றத்துலயும், கோபத்துலயும் வந்து படுத்துக்கிட்டு ‘எனக்குச் சாப்பாடு வேண்டாம், எனக்குப் பசி இல்லை’ன்னு கதை விடுறீங்க. நீங்க யாருன்றது உங்களுக்கு நினைவிருக்கா? எவ்வளவு பெரிய காவல்துறை அதிகாரி. நீங்க நினைச்சா அந்த ஆளை என்ன வேணும்னாலும் செய்யலாம். ஏதாவது பொய்க் கேசைப் போட்டு ஆள உள்ள தள்ளுங்க.
பொய்க் கேசு போடுறதுக்குப் போலீஸ்காரங்களுக்குச் சொல்லியா தரனும்? உள்ளே தள்ளக் கூட வேணாம்; உள்ள தள்ளிடுவேன்னு பயமுறுத்துங்க. தானா வழிக்கு வந்துருவான்” என்கிறார்
மனைவி.
காவல்துறை
அதிகாரி மனைவியை வெறித்துப் பார்க்கிறார். என்ன சொல்வதென்று புரியவில்லை. ‘நேர்மையான, நல்ல அதிகாரி என்று பெயரெடுத்திருக்கிறேன். மனைவி சொல்வது போல செய்யலாமா?’ என்றெல்லாம் யோசித்துக் குழம்புகிறார்.
அவருக்கு
யார் வழிகாட்ட முடியும்? இந்த வேளையில் அவருக்குத் தேவைப்படும் ஞானத்தை அவர் எங்கிருந்து பெற முடியும்?
அந்தப்
பெண் கண்ணை மூடிக்கொண்டு காதலில் விழுந்த பெண் அல்ல; தனது சூழலை உற்றுப்பார்த்து, பல ஆண்களோடு ஒப்பிட்டு,
மிக நல்லவர் என்று உணர்ந்தே காதலித்தவர். காதலித்தவரைக் கரம் பற்றி, வாழும் காலமெல்லாம் அவரோடு வாழவேண்டும் என்று உறுதிபூண்ட இப்பெண், தன் குடும்பமே அதற்குத் தடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
என்ன
சொல்லி அவரது குடும்பம் அவரின் திருமணத்தைத் தடுக்கப் பார்த்தது?
‘அவரது இனம் வேறு, நமது இனம் வேறு.’
இனம்
வேறாக இருந்தால் என்ன? குணத்தை அல்லவா பார்க்க வேண்டும்? அவரின் மனத்தை அல்லவா ஆய்வு செய்ய வேண்டும்? வேற்று இனத்தவர் நல்லவராக இருக்க இயலாதா? தன்னைப் புரிந்துகொள்ளாத, தன் விருப்பத்தை மதிக்காத, தன் வாழ்வைத் தானே தீர்மானிக்கும் உரிமை தனக்குண்டு என்பதை ஏற்காத தன் குடும்பத்தை உதறி ஒதுக்கிவிட்டு, தான் தேர்ந்துகொண்ட ஆணையே துணிவோடு மணந்துகொள்கிறார் அந்தப் பெண்.
அவர்களின்
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும், மன நிறைவும் மிகுந்ததாக
அமைகிறது. கணவனின் தாய் தன் சொந்த மகளைப் போலவே அவரை நடத்துகிறார். தன் தாய்கூட தன்னை இத்தனை அன்போடும் அக்கறையோடும் பார்த்துக் கொண்டதில்லை என்று அவளுக்குத் தோன்றியது. மாமனார் இறந்து இத்தனை ஆண்டுகள் துணையில்லாத் தனிமையில், தன் அன்பு மாமியார் வாழ்வது இவள் மனத்தை உறுத்தியது.
திருமணம்
முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பிள்ளை இல்லையே என்ற மனக்குறை தவிர, எதிர் மறையாய் எதுவும் இல்லை. திடீரென்று இடி விழுந்தது போன்று அந்தச் செய்தி வந்தது. ஒரு சாலை விபத்தில் அவளது கணவன் இறந்து விட்டான். அந்தப் பெரும் துயரினின்று மீள அவளுக்குப் பேருதவியாக இருந்தது மாமியாரின் அன்பு.
மகன்
இறந்ததால் மருமகளின் வாழ்வு இருண்டு போகத் தேவையில்லை. அவளுக்கு வயதிருக்கிறது. அழகிருக்கிறது. நடந்ததை மறந்து மற்றொரு திருமணம் செய்துகொண்டு அவள் மகிழ்ச்சியோடு வாழ முடியும். அத்திருமணத்தில் அவளுக்குப் பிள்ளைகள் பிறக்கலாம். தாயும், பிள்ளைகளுமாய் அவள் வாழ்வு தொடரலாம் என்பதை உணர்ந்ததும் மருமகளைத் தன் சொந்த ஊருக்குத் திரும்பச் சொன்னார் மாமியார். அவளது சொந்தங்கள் அவளை ஏற்றுக்கொண்டு அவளது மறுமணத்திற்கான முயற்சிகளைச் செய்யலாம் என்று அவர் நினைத்தார். பல்லாண்டுகளுக்கு முன் தன் கணவரை இழந்துவிட்ட தன் மாமியார் இப்போது தன் மகனையும் இழந்து தனி மரமாய் ஆகிவிட்டதை உணர்ந்த மருமகளின் மனத்தில் குழப்பம். மாமியாரைத் தன்னந்தனியாய் விட்டுவிட்டு புது வாழ்வு தேடிப் போகலாமா? தன்மீது இத்தனை அன்பு காட்டிய மாமியாரை இந்நிலையில் விட்டுவிட்டுப் போவது சரிதானா? அவள் குழம்பினாள்.
அவளுக்கு
யார் வழிகாட்ட முடியும்? இந்த வேளையில் அவளுக்குத் தேவைப்படும் ஞானத்தை அவள் எங்கிருந்து பெற முடியும்?
உங்கள்
நண்பர் ஒரு முக்கியமான காரியத்திற்காக மனமுருகி இறைவனை வேண்டுகிறார். அவர் கேட்டதைக் கடவுள் தர வேண்டும் என்று
விரும்புகிறார். என்ன செய்தால் அவரின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து, கடவுள் அவர் கேட்டதைக் கண்டிப்பாகத் தருவார் என்று யோசிக்கிறார்.
“இதை மட்டும் செஞ்சு கொடுங்கய்யா. பத்து பவுன்ல உங்களுக்கு மோதிரம் போடுறேன். எந்தச் சந்தேகமும் வேண்டாம். இந்த வேலையை நீங்க செஞ்சு கொடுத்த இரண்டாவது நாளில், நான் உங்க கைவிரல்ல மோதிரத்தை மாட்டுறேன்” என்று
சொன்னதும், அந்த அரசியல்வாதி உடனே அவர் கேட்டதைச் செய்ததும் நினைவுக்கு வருகிறது.
அதே
உத்தியைக் கடவுளிடமும் பயன்படுத்தினால் என்ன என்று உங்கள் நண்பருக்குத் தோன்றுகிறது. அதே வேளையில், “இவர்கள் மனிதர்கள். நான் வேண்டுவது கடவுளிடம். கடவுளுக்கு நாம் என்ன பெரிதாய்ச் செய்துவிட முடியும்?” என்று குழம்புகிறார்.
உங்கள்
நண்பருக்கு யார் வழிகாட்ட முடியும்? இந்த வேளையில் அவருக்குத் தேவைப்படும் ஞானத்தை அவர் எங்கிருந்து பெற முடியும்?
மனைவியின்
பேச்சைக் கேட்கலாமா? கூடாதா? என்று குழம்பும் காவல்துறை அதிகாரியும் சரி; இந்த வயதில் - இந்த நிலையில் மாமியாரைத் தனியே விட்டுவிட்டுச் சொந்தங்களைத் தேடிப் போய்விடலாமா? கூடாதா? என்று குழம்பும் மருமகளும் சரி; கடவுளுக்கு ஏதாவது செய்வதாக, ஏதாவது தருவதாக வாக்களிக்கலாமா? கூடாதா? என்று குழம்பும் உங்கள் நண்பரும் சரி, இவர்கள் எங்கும் போக வேண்டியது இல்லை.
இத்தகைய
தருணங்களில் அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ஞானியைத் தேடி அவர்கள் அலைய வேண்டியதில்லை. அவர்களுக்குத் தேவைப்படும் ஞானம் நம் வீட்டில் இருக்கிற, நம் மேஜையில் இருக்கிற திருவிவிலியத்தில் இருக்கிறது.
நாம்
செய்ய வேண்டியதெல்லாம் இறைவன் புகட்டும் ஞானம் திருவிவிலியத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து, நம்பி அதைக் கவனமாகப் படிக்க வேண்டியதுதான்.
திருவிவிலியத்தில்
எப்பகுதியைக் கவனமாகப் படித்து, யோசித்து இருந்தால் காவல்துறை அதிகாரியின் குழப்பம் தீர்ந்திருக்கும்? அந்த வேளையில் அவருக்குத் தேவைப்பட்ட ஞானம் திருவிவிலியத்தில் எங்கு இருக்கிறது? 1அரசர்கள் 29-இல் நாம் காணும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் மனைவியும், காவல்துறை அதிகாரியின் மனைவியைப் போன்றவர்தான். ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்ற எந்த அக்கிரமத்தையும் செய்யத் தயங்காதவர். அவர் பெயர் ஈசபேல். ஆங்கிலத்தில் ஜெசபெல்.
நாபோத்து
எனும் சாதாரண குடிமகனின் திராட்சைத் தோட்டம் ஆகாபின் அரண்மனைக்கு அருகில் உள்ளது. அந்தத் தோட்டத்தைத் தனக்கு விற்று விடுமாறு நாபோத்துவிடம் கேட்கிறான் ஆகாப். கேட்டது அரசனே என்றாலும், ‘இந்தத் திராட்சைத் தோட்டம் என் மூதாதையரின் உரிமைச் சொத்து’ எனச் சொல்லி நாபோத்து மறுத்துவிட, ‘உணவு வேண்டாம்’
எனச் சொல்லி படுத்திருக்கிறான் அரசன். அவனது மனைவி ஈசபேல் நடந்ததை எல்லாம் கேட்டுவிட்டு, “எழுந்து உணவருந்தி மகிழ்ந்திருங்கள். அந்தத் திராட்சைத் தோட்டத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன்” என்று
சொல்கிறாள்.
நகரில்
செல்வாக்கு மிக்க மனிதர்களுக்கு அரசனின் முத்திரையோடு கடிதம் எழுதி நாபோத்துவின்மீது பொய்ப் பழி சுமத்தி, கல்லால் எறிந்து அவனைக் கொல்லச் சொல்கிறாள். தோட்டத்தின் உரிமையாளன் இறந்து விட்டதால் அது அரசன் ஆகாபுக்குச் சொந்தமாகி விடுகிறது. மனைவியின் தீய அறிவுரையைக் கேட்டு அதன்படி நடந்த அரசன் ஆகாபிற்கும், அவனை அப்படி வழி நடத்திய ஈசபேலுக்கும் என்ன நிகழ்கிறது என்பதைப் படித்திருந்தால் காவல்துறை அதிகாரி சுதாரித்துக் கொண்டு மனைவியின் பேச்சைக் கேட்க உறுதியாய் மறுத்திருப்பார்.
மாமியாரைத்
தனியே விட்டுவிட்டுப் போவதா? வேண்டாமா? என்று குழம்பித் தவித்த மருமகள் எதைப் படித்திருந்தால் குழப்பம் நீங்கி, தான் செய்ய வேண்டியதை உணர்ந்திருப்பாள்? அவளுக்கு அவ்வேளையில் தேவைப்பட்ட ஞானம் திருவிவிலியத்தின் ரூத்து நூலில் உள்ளது.
தன்னைப்
பற்றிக் கவலைப்படாமல் அவளது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, சொந்தங்களைத் தேடிப் போகச் சொல்லும் மாமியார் நகோமியிடம் கணவனை இழந்த மருமகள் ரூத்து என்ன சொல்கிறார்? “உம்மோடு வராமல், உம்மைப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன். உமது இல்லமே எனது இல்லம். உம்முடைய இனமே எனது இனம். உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம். நீர் எங்கே இறப்பீரோ அங்கேயே நானும் இறப்பேன். சாவிலும் உம்மை விட்டு நான் பிரியேன்”
என்கிறார் (ரூத்து 1:6-17).
ரூத்து
எனும் அந்த மருமகளுக்குக் கிடைத்த ஆசிகளையும், புதிய வாழ்வையும் கவனமாகப் படித்தால் இந்த மருமகளுக்கு என்ன செய்வது என்று புரிந்துவிடும்.
கடவுளுக்கு
ஏதாவது தருவதாக உறுதி அளிப்பது சரியா? தவறா? என்று குழம்பும் உங்கள் நண்பருக்குத் தேவையான ஞானம் திருவிவிலியத்தில் எங்கிருக்கிறது? நீதித் தலைவர்கள் 11-இல் இருக்கிறது.
இஸ்ரயேலுக்குத்
தலைமை தாங்கி அம்மோனியருக்கு எதிராக அவர்களை வழிநடத்தும் இப்தா (ஆங்கிலத்தில் ஜெப்தா) கடவுளிடம் என்ன வாக்களிக்கிறான்? ‘போரில் வெற்றி கிடைத்தால் தன் வீட்டில் இருந்து முதலில் யார் வருகிறார்களோ, அவரை எரித்துப் பலியிடுவேன்’ என்று
கடவுளிடம் வாக்களிக்கிறான். போரில் பெரும் வெற்றி கிடைக்கிறது. இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய தனது தந்தை இப்தாவைப் பாராட்ட அவரது ஒரே மகள் ஆடிப் பாடிக் கொண்டு வருகிறாள். ஏற்கெனவே கடவுளுக்கு வாக்குக் கொடுத்து விட்டதால் தன் ஒரே மகளை எரித்துப் பலியிடும் அவலத்திற்கு இப்தா ஆளாகிறான்.
அதற்குக்
காரணம் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் கேட்க மறந்த கேள்விகளை உங்கள் நண்பர் கேட்க வேண்டும். மனிதர்களைப் போல செயல்படுபவரா கடவுள்? ‘நான் உனக்கு இதைச் செய்ய வேண்டுமானால், நீ எனக்கு இதைத்
தர வேண்டும்’
என்று மூன்றாம்தர அரசியல்வாதிகளைப் போல பேரம் பேசுபவரா கடவுள்? அன்பே உருவான இறைத்தந்தை, தாம் படைத்த மனிதர்களைப் பலி கேட்பாரா? தமக்காகத் தம் பெயரால் மனிதர்கள் கொல்லப்பட வேண்டும் என்று இறைத்தந்தை விரும்புவாரா?
வாழ்வின்
பல்வேறு கட்டங்களில் நமக்குத் தேவைப்படும் ஞானம் திருவிவிலியம் முழுவதிலும் மறைந்திருக்கிறது - நிலத்திற்கு அடியில் உள்ள தங்கம் போல! எந்தப் பாதையில் பயணிப்பது என்று குழம்பித் தவிக்கும் நமக்கு, திருவிவிலியம் முழுவதும் வழிகாட்டிப் பலகைகள் உள்ளன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவற்றைப் பார்த்து, படித்து, பயணிக்க வேண்டியதுதான்.
(உங்கள்
கருத்துகளை +91
9445006852 என்ற எண்ணிற்கு வாட்சப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெசெஜ் வடிவிலோ அனுப்புங்கள்)