news-details
சிறப்புக்கட்டுரை
நீதிதேவன் மயக்கம்!

பேரறிஞர் அண்ணா எழுதிய நாடக நூல்நீதி தேவன் மயக்கம்.’ இராவணன் இரக்கமில்லா அரக்கன் என்ற கம்பரின் தீர்ப்பு! தீர்ப்பைச் சீராய்வு செய்ய இராவணனே நாடகக் காட்சிகளில் தனக்காக வாதிடுகிறான். நாடகத்தின் இறுதிக் காட்சியில் இராவணனின் கேள்விகளுக்கு விடை தெரியாமல் நீதிதேவன் மயக்கம் அடைகிறான். இந்தியச் சமூக அமைப்பில் இராவணன் திராவிடத்தின் குறியீடாகக் கட்டமைக்கப்படுகிறான்.

தேசத்தில் மறுக்கப்படுகிற சமூக நீதிக்கு உரிமைக் குரல்கள் எழுப்பப்படுவது தார்மீகமும், அடிப்படை அறனும், நீதி பரிபாலனம் மீதான முழு நம்பிக்கையையும் கொண்டதாகும். அது சமூகச் சமத்துவத்திற்கும், மானுடத் தர்மத்திற்கும் உட்பட்டதுநீதிமன்றங்களே  இந்திய அரசியலமைப்பில் சாமானிய மக்களின் இறுதி நம்பிக்கை. வழக்கறிஞர்கள் மூலம் தங்கள் கண்ணீர் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையில் பாமர மக்கள் நீதியரசர்கள் முன் வருகிறார்கள்.

நீதி தேவதை யாருக்காகவும், எதற்காகவும் நீதியை வளைக்கக்கூடாது; தராசின் தட்டுகள் சரியாக இருக்க, துலாக்கோல் மையப்பட வேண்டும். நீதியின் முன் அனைவரும் சமம், யார் எனத் தெரியக் கூடாது என நீதி தேவதையின் கண்களில் கறுப்புத் துணி. அந்தக் கறுப்புத் துணி வேறு வண்ணம் மாறிடக் கூடாது என்பதே  நம் ஆதங்கம்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், தமிழ்நாடு அரசின் தேர்வாணையம் குறித்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வருகிறது. வழக்கில் முன்பே, இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒருவர் அமர்வில் இருக்கிறார். தமிழ்நாடு அரசிற்காக வாதிடுகிற மூத்த வழக்கறிஞர் வில்சன் இதைச் சுட்டிக்காட்டி வாதத்தைத் துவங்குகிறார். கடுங்கோபம் கொண்ட மற்றொரு நீதிபதி ஆர். சுப்பிரமணியம், வில்சன் கேட்காத, ஆட்சேபம் தெரிவிக்காத நீதிபதி குறித்த விவரங்களைத் தானே கற்பனை செய்து, ‘நீங்கள் யார் அதை முடிவு செய்ய?’ எனக் கண்ணியக் குறைவாகப்  பேசுகிறார்.

இந்தக் காட்சிகள் யாரோ ஒருவரால், நீதிமன்ற  அனுமதியின்றி பதிவு செய்து, எடிட் செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில்வில்சனுக்கு நீதிபதியிடம் விழுந்த டோஸ்என்ற வகையில் பரப்பப்படுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த முன்னாள் நீதியரசர் அரி பரந்தாமன், “நீதிபதி கோபமாகப் பேசுகிறார். தவறாகப் புரிந்துகொண்டது குறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் தன்னிலை விளக்கம் அளிக்கிறார்என்று கூறுகிறார்.

முன்னாள் நீதியரசர் சந்துரு ஒருபடி மேலே போய் சொல்கிறார்: “நீதிபதியின் உள்மனத்தில் இருப்பதைப் பேசக்கூடாது. நீதிபதிநீ ராஜ்யசபா உறுப்பினர்தானே? அங்கே போய் இப்படிப் பேசுஎனக் கடுமை காட்டுகிறார்என்கிறார்.

தமிழ்நாடு - புதுச்சேரி  வழக்கறிஞர் சங்கமும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமும்வழக்கறிஞர்களைக் கண்ணியத்தோடு நடத்த வேண்டும்; நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட விதிமுறைகளை வகுக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து நீதிமன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்என்ற கோரிக்கைகளை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முன் வைத்தனர்.

அகில இந்திய வழக்கறிஞர் சங்கச் செயலாளர்  ஆதிஷ் அகர்வாலாவும், தங்கள் சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கோரிக்கையும், புகாரும் வைத்தார். இம்மியளவும் கண்டனங்கள் பதியப்படவில்லை என்பதே வழக்கறிஞர்களின் கையறு நிலை. நீதிபதி வழக்கை வேறு அமர்விற்கு மாற்றியும், ‘நீதிமன்ற அனுமதியின்றி நீதிமன்ற நடவடிக்கைகளைப் பதிவு செய்தது யார்?’ என விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்: தமிழ் நாட்டின் தெற்கு, வடக்கு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் வண்ணக் கயிறுகள் கட்டிக்கொண்டு பள்ளிகளுக்கு வருவது வழக்கமாக இருந்தது. இது சாதிய ரீதியான குழு மோதல்களுக்கு வழிவகுத்தது. அடிதடிகள் பள்ளி வளாகத்தில், தெருக்களில் நடந்தன. தமிழ்நாடு அரசு நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்துத் தீர்வு தேடியது. ‘வண்ணக் கயிறுகள் கட்டத் தடைஎனப் பரிந்துரைக்கப்பட்டு, அரசாணைகள் வந்தன.

அந்நேரத்தில் வேறு ஒரு வழக்கில், தேவை இல்லாமல் வழக்கிற்குச் சம்பந்தம் இல்லாமல் பேசிய நீதிபதி ஆர். சுப்பிரமணியம், “அந்த  அறிக்கை வந்ததிலிருந்துதான் நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டு, நீதிமன்றம் வருகிறேன்எனத் தெளிவாகக் கூறிவிட்டார்.

இதுபோன்றே கடந்த மாதங்களில் நடந்த ஜக்கி வாசுதேவ் குறித்த வழக்கும் கவனம் கொள்ளக்கூடியதே. தன் இரண்டு மகள்களைச் சட்ட விரோதமாக கோவை ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைத்திருப்பதாக அவர்களது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்தார். கோவை, ஈஷா யோகா மையத்தின் மீதுள்ள வழக்குகளுக்காக அங்குள்ளவர்களை விசாரிக்க காவல்துறைக்குச் சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்குத் தடை கோரிய கோவை ஈஷா யோகா மையத்தின் கோரிக்கை வழக்கின்போது, அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தனக்கு மாற்றிக்கொண்டது. வழக்கு விசாரணை அறிக்கை தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை, ஈஷா யோகா மையத்தின்மீது வன அழிப்பு, வன இட ஆக்ரமிப்பு, யானைத் தடம் அழிப்பு, அனுமதியின்றி விதிமுறைகளை மீறிக் கட்டடங்கள் கட்டுவதுபாலியல் குற்றச்சாட்டுகள், போதை பொருள்கள் உபயோகம், ஆள்கள் காணாமல் போதல், அரசின் அனுமதியின்றித் தகன மேடை அமைத்தது எனச் சட்ட விரோதக் குற்றச்சாட்டுகள் அதிகம். ஏராளமான வழக்குகள் பதியப்பட்டு, நகராமல் நிற்கின்ற நிலை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜக்கி வாசுதேவ் குறித்து தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய பொதுவெளிக் குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளன. எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாத மாமனிதராக  ஜக்கி இருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் அவரது கடந்த மாத வழக்கில் இவ்வாறு சொல்கிறது: “ஈஷா போன்ற ஒரு நிறுவனத்திற்குள் நீங்கள் இராணுவத்தையோ அல்லது காவல்துறையையோ அனுமதிக்க முடியாது.”

இது யாரின், எந்த  மனநிலையைக் காட்டுகிறது? என்பதை உங்கள் யூகங்களுக்கே விட்டு  விடுகிறேன்ஆயிரம் குற்றச்சாட்டுகள் உள்ள ஈசா, சட்டப்படி தன்னை நிரூபித்து வெளி வந்தால் மட்டுமே, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்படும் என்பதே நடுநிலையாளர்களின் நம்பிக்கை.

இருப்பினும் வரலாற்றுச் சம்பவம் ஒன்றை இங்குப் பதிந்தே தீர வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. 03.06.1984 அன்று அமிர்தசரஸ் பொற்கோவிலில்நீல நட்சத்திர நடவடிக்கைஎன்ற பெயரில் இந்திய இராணுவம் உள்ளே புகுந்தது. சொல்லப்பட்ட காரணம்: ‘காலிஸ்தான் எனும் தனி சீக்கிய  நாடு கோரும் தீவிரவாதிகள் பொற்கோவிலில் இருந்தார்கள்; அதன் தலைவர் பிந்தரன் வாலேவும் இருந்தார்என்பதே.

பொற்கோவில் சீக்கிய மத நூலான ஆதி கிரந்தம் வைக்கப்பட்டுள்ள புனித இடம். பொற்கோவில் சீக்கியர்களின் மத நம்பிக்கையின் முழு அடையாளம். இன்றும் சீக்கியத் தன்னார்வலர்களால் தினம் இலட்சம் பேருக்கு உணவளிக்கிற கோவில். அத்தகைய பொற்கோவிலில் குண்டு மழை பொழிந்தது. இதனால், இந்திய இராணுவத்தில் கலவரம், இந்திரா காந்தி படுகொலை, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை என இரத்தம் தோய்ந்த வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்.

வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் போகாது; போகவும் கூடாது.