news-details
ஞாயிறு மறையுரை
10, நவம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு - 1அர 17:10-16; எபி 9:24-28; மாற்கு 12:38-44

இறைவனில் இழக்கத் துணிந்த மனம்!

இறைவனுக்குக் காணிக்கை கொடுக்கும் வழக்கம் எல்லாச் சமயங்களிலும் இருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால், இறைவனுக்கு எதை நாம் காணிக்கையாகக் கொடுக்க முடியும்? நமக்குச் சொந்தமானதைக் கொடுத்தால்தானே அது காணிக்கையாகும்! நம்முடையது என நாம் நினைக்கும் எதுவும் நம்முடையதல்லவே. இந்தப் பூமி நம்முடையதல்ல... நம் உடல், உயிர் நம்முடையதல்ல... ஏன் நம் பெற்றோர்கூட நாம் தேர்ந்தெடுத்தவர்கள் அல்லர்... நாம் இறக்கும்போது ‘இது என்னுடையது’ என எதையும் கொண்டு செல்லவும் முடியாது. 

ஒன்றுமே கொண்டு வராத நமக்கு இறைவன் வழங்கியதில் சிறியவற்றை மீண்டும் அவருக்கே திருப்பிக் கொடுப்பது எப்படிக் காணிக்கை ஆகும்? இறைவனுக்குத் தேவைகள் ஏதேனும் உண்டோ? இறைவன் எந்தத் தேவையும் அற்றவர். இறைவன் பெறுபவர் அல்லர்; அவர் தருகிறவர்! பிறகு ஏன் காணிக்கை? 

காணிக்கை தருவது உண்மையில் ஒரு வழிபாடு. ‘இறைவா நான் உமக்குத் தருபவை எதுவும் என்னுடையதல்ல; அது உம்முடையது. உம்முடையதை உமக்கே திருப்பித் தருகிறேன்’ என்ற உணர்வோடு அனைத்தையும் இறைவனுக்கே கொடுக்கும் ஓர் உள்ளார்ந்த வழிபாடுதான் காணிக்கை. இந்த உணர்வோடு இறைவனுக்குக் கொடுக்க முன்வருபவர்கள் விளம்பரம் தேட மாட்டார்கள்; வீண் பெருமையை நாட மாட்டார்கள். 

இன்று தர்மம் செய்வதுகூட ஒரு வியாபாரமாகி விட்டது. “நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்” (மத் 6:5) என்கிறது திருவிவிலியம். உயர்ந்த அறத்தின் இலக்கணமும் இதுவல்லவா! ஆனால், இன்று பலர் தண்டோரா போட்டுத் தர்மம் செய்கிறார்கள். தங்கள் புகைப்படம் பத்திரிகையில் வரவேண்டும் என்பதற்காகத் தர்மம் செய்கிறார்கள். தங்கள் பெயர்கள் கல்வெட்டுகளில் பதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உதவி செய்கின்றனர். ஆலயங்களில் தர்மம் செய்யும்போதுகூட சிலர் தங்கள் பெயர்களைப் பெரிதாகப் போட்டு, ‘இன்னார் உபயம்’ என்று எழுதி வைத்துள்ளதைப் பார்த்திருக்கிறோம். இவை அனைத்தும் தர்மமாகுமோ? அது முதலீடு; அது பண்டமாற்று. உண்மையில் தர்மம் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த கடனைத் திரும்பக் கொடுப்பதுவே. 

‘நான் மிகப்பெரிய செல்வந்தன்’ என்ற ஆணவத்திலும், ‘எல்லாம் என்னுடையதே’ என்ற அறியாமையிலும் தம்பட்டம் அடித்துத் தானதர்மங்கள் செய்யும் விளம்பர விரும்பிகளுக்கு நடுவில், எவ்வித விளம்பரமும் தேடாமல், எவருடைய கவனத்தையும் ஈர்க்காமல், இறைவன்மீது மட்டில்லாப் பற்றுகொண்டு வாழ்ந்த இரண்டு ஏழைக் கைம்பெண்கள் இன்றைய வார்த்தை வழிபாட்டில் நாம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய உயர் ஆளுமைகள்.

இன்றைய முதல் வாசகத்தில் எலியா என்ற இறைவாக்கினர் சந்திக்கும் சாரிபாத்துக் கைம்பெண்ணை நாமும் சந்திக்கிறோம். சாரிபாத்து ஒரு பெனிசிய துறைமுக நகர். இது ஒரு புறவின மக்கள் வாழும் இடம். இஸ்ரயேலில் (வட நாடு) பணியாற்றிய மிக முக்கியமான இறைவாக்கினரான எலியா இஸ்ரயேல் குலத்தவரல்லாத பெண்ணைச் சந்திக்கிறார். அந்தக் கைம்பெண்ணும், அவரது மகனும் வாழ்ந்த வாழ்க்கை என்பது வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் தினந்தோறும் போராடும் பல கோடி ஏழைகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. அடுத்த நாள் விடியாமலே இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கத்தோடு படுக்கச் செல்லும் கோடிக்கணக்கான ஏழைகளில் இவர்களும் அடங்குவர். ஒரு பானையில் கையளவு மாவு... கலயத்தில் சிறிதளவு எண்ணெய்... இவ்வளவுதானே இந்த ஏழைத்தாயின் சொத்து மதிப்பு. இருப்பதை இன்றோ, நாளையோ உண்டுவிட்டு மாண்டுவிட வேண்டியதுதான் என்று தங்களுக்குத் தாமே மரணத் தீர்ப்பு எழுதிவிட்டனர் (1அர 17:12).

விரக்தியின் விளிம்பில் விம்மிக்கொண்டிருந்த இந்தக் கைம்பெண்ணின் வாழ்க்கையில் கடவுள், இறைவாக்கினர் எலியா வழியாகக் குறுக்கிடுகிறார். இறைவனின் குறுக்கீடு என்பது அந்தப் பெண்ணின் வாழ்வில் இறைவன் நிகழ்த்தப்போகும் வல்ல செயல்களைக் காண்பதற்கான ஓர் அழைப்பு அல்லவா!  குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்ட எலியா, தொடர்ந்து ‘கொஞ்சம் உணவும் (அப்பமும்) தருவாயா?’ என விண்ணப்பிக்கிறார். அந்தப் பெண்ணோ தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினாலும், தன்னுடைய வறுமையிலும் பசியிலும் மற்றொரு மனிதரின் பசியைப் போக்க முன்வருகிறார். ஆம், ஏழைகளின் மனம் அப்படிப்பட்டதுதானே! அவர்களுக்குத்தான் பிறர் பசி என்பது என்னவென்று அனுபவப்பூர்வமாகத் தெரியும். எனவேதான், மகனின் பசியையும்கூட மறந்து, எலியாவின் பசியைத் துடைப்பதே பெரிது என எண்ணுகிறார். 

எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் தன்னுடைய வாழ்வுக்காக வைத்திருந்த அனைத்தையும் கொடுத்த இந்த சாரிபாத்துக் கைம்பெண்ணைப்போல, மற்றொரு கைம்பெண்ணை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கிறோம். இந்த ஏழைக் கைம்பெண்ணைக் குறித்து நற்செய்தி கூறும் வார்த்தைகள் ஆழமானவை.

பிறர் பாராட்ட வேண்டுமென மிகுதியிலிருந்து மிகுதியாய்க் காணிக்கைக் கொடுத்தனர் செல்வர்கள். ஆனால், இந்த ஏழைக் கைம்பெண்ணோ தமக்குப் பற்றாக்குறை இருப்பது தெரிந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே காணிக்கைப் பெட்டியில் போடுகிறார். இந்தக் கைம்பெண் போட்டது என்னமோ இரண்டு செப்புக்காசுகள்தாம். அதாவது, சிறிதும் மதிப்பற்ற மிகச்சிறிய நாணயங்கள் அவை. இவர் போட்ட இரண்டு காசுகள் ஒரு கொதிராந்துக்கு இணையானவை என மாற்கு குறிப்பிடுகிறார். ஒரு கொதிராந்து என்பது ஒரு தெனாரியத்தில் 128 -இல் ஒரு பகுதி. அதாவது ஒரு தெனாரியம் என்பது ஒரு நாள் கூலி. அப்படியெனில், அப்பெண் காணிக்கைப் பெட்டியில் போட்டது மிக மிகச் சிறிய காசு. ஆனால், அப்பெண்ணின் பார்வையில் அக்காசு மிகவும் மதிப்புக்குரியது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பல ‘வித்தைகளை’ செய்த மறைநூல் அறிஞர்கள் நடுவில், அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க எத்தகைய முயற்சியையும் எடுக்காத இப்பெண்ணின் செயலைக் கூர்ந்து கவனித்த இயேசு, அவரை மட்டுமே சிறப்பாகப் பாராட்டுகிறார். 

“இறைவன் அளவுகளையும், எண்ணிக்கைகளையும் கருதுபவர் அல்லர். அவர் தரமான வாழ்வைக் கருதுபவர். உள்ளத்தின் சிந்தனைகளை நன்கு அறியும் இறைவன், தூய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்ததை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம் (மூவேளைச் செப உரை, 11.11.2018).

இறைவனுக்கு அளிக்கும் காணிக்கை நம் அன்புக்கு உரியதாக, சிறந்ததாக இருக்க வேண்டும். அதைத் தரும்போது மனம் உவந்து தரவேண்டும். இல்லை என்றால், அது காணிக்கை ஆகாது. காணிக்கை என்பது தியாக உணர்வின் வெளிப்பாடு. தியாகம் அன்பை அளக்கும் அளவுகோல். இந்தக் கைம்பெண் தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறார். இறைப்பராமரிப்பில் தன்னையே இழக்கிறார். கைம்மாறு கருதாமல் தன்னையே கடவுளிடம் கொடுக்கிறார். கடவுள் தன் தியாகத்தைப் பார்த்து ஏதாவது செய்வார் என்று அவர் இப்படிச் செய்யவில்லை. எனவேதான், காணிக்கை செலுத்திய நிறைவுடன் காணாமல் போய் விடுகிறார். ‘கடவுளே, நான் இவ்வளவு தருகிறேன், நீ இவ்வளவு தா’ என்றால் அது வியாபாரம். 

சங்க காலத்தில் ஆய் அண்டிரன் என்ற ஒரு சிற்றரசன் இருந்தான். அவனது கொடை குணத்தைப் பாராட்டி, புலவர் ஏணிச்சேரி முடமோசியார் இவ்வாறு பாராட்டிப் பாடுகிறார்:

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்; 

பிறரும் சான்றோர் சென்ற நெறி என

ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே”

(புறநானூறு 134)

இந்தப் பிறவியில் அறம் செய்தால் அது மறுபிறவியில் பயன் தரும் என்று எண்ணிக்கொண்டு ஆய் அறம் செய்வதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால் அது அறமல்ல, வணிகம் என்று நினைப்பவன் ஆய். அறம் என்பது சான்றோர்கள் வாழ்ந்து காட்டிய ஒரு வழிமுறை என்று எண்ணிக்கொண்டு கொடை வழங்குபவன் ஆய் என்று புகழ்ந்து பாடுகிறார் புலவர்.

இன்றைய வாசகங்களில் நாம் சந்தித்த இவ்விரண்டு கைம்பெண்களும் தங்களுடைய செலவுகள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொள்ளாது, அனைத்தையும் கொடுத்துவிட்டு, இறைவனுக்கு முன் வெறுமையாகத் திரும்புகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நன்மைகள் செய்த இவர்கள், இறைவனின் இதயத்தில் இடம்பிடித்தனர். எவ்விதப் பலனையும் எதிர்பாராமல், இவ்விரு கைம்பெண்கள் செய்த செயல்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, கவிஞர் கலீல் கிப்ரான் அவர்கள் எழுதிய ‘கொடுப்பது’ என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. ‘நீ சேர்த்து வைத்துள்ள உடைமைகளிலிருந்து நீ கொடுக்கும்போது, குறைவாகவே கொடுக்கிறாய். எப்போது நீ உன்னையே கொடுக்கிறாயோ, அப்போதுதான் உண்மையிலேயே கொடுக்கிறாய்.’

எனவே, கடவுளுக்கும், பிறருக்கும் தரும்போது, எதையும் எதிபார்க்காமல், நம்மையே வருத்திக் கொடுக்க முன்வருவோம். இந்த இரு கைம்பெண்களைப்போல, தங்கள் வாழ்வு முழுவதையும் தியாகப் பலியாகத் தந்துள்ள ஆயிரமாயிரம் கைம்பெண்களை நினைத்துப் பார்ப்போம். வறுமையில் வாழ்ந்தாலும், தன்னை முற்றிலும் இறைவனில் இழந்த அன்னை மரியாவைப்போல நம்மையே இறைவனில் இழக்க முன்வருவோம்.