news-details
ஆன்மிகம்
‘சொல் நோன்பு’ இறைவேண்டல்! (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 29)

மது இறைவேண்டல் வலிமை பெற வேண்டுமென்றால், நாம் நோன்பிருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உண்ணா நோன்பு, புலால் நோன்பு, ஊடக நோன்பு இவற்றோடு நாம் இணைத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு நோன்புசொல் நோன்பு. நமது பேச்சில் நாம் கையாளும் தன் கட்டுப்பாடு, விழிப்புணர்வு, தியாகத்தையேசொல் நோன்புஎன அழைக்கிறோம்.

திருவிவிலியம் சொற்களின் வலிமையைப் பற்றி நிறையச் சொல்கின்றது. குறிப்பாக, பழைய ஏற்பாட்டில் சீராக்கின் ஞானநூல் பேச்சின் ஆற்றலை எடுத்துரைக்கிறது. “சொல் மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம் (சீஞா 27:7) என்பது அருமையான செய்தி.

குறைவாகப் பேசுபவரே ஞானிகள்என்னும் பார்வையை இந்நூலின் பல இடங்களில் பார்க்கிறோம். “மக்கள் தலைவர் தம் பேச்சைக் கொண்டே ஞானியாய் மதிக்கப்படுகிறார். வாயாடியைக் கண்டு அவர்களின் நகரத்தார் அஞ்சுவர். உளறு வாயரை ஊரார் வெறுப்பர் (சீஞா 9:17-18); “அமைதி காப்போர் ஞானியராக எண்ணப்படுகின்றனர். வாயாடிகள் வெறுப்புக்கு ஆளாகின்றனர் (சீஞா 20:5); “அறிவற்றோர் எளிதாகப் பிதற்றுவர். நுண்ணறிவு கொண்டோர் சொற்களை அளந்து பேசுவர் (சீஞா 21:25); “அறிவிலார் சிந்திக்கும் முன் பேசுவர். அறிஞர் பேசுமுன் சிந்திப்பர் (சீஞா 21:26); “எதைப் பேசுவது எனத் தெரியாமல் அமைதியாய் இருப்போரும் உண்டு. எப்போது பேசுவது எனத் தெரிந்தவராய் அமைதி காப்போரும் உண்டு (சீஞா 20:6) ஆகிய இறைமொழிகள் குறைவாகப் பேச வேண்டும் என்று  அறிவுறுத்துகின்றன.

நமது பேச்சில் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

திறந்த உள்ளத்துடன் எல்லாரிடமும் பேசாதே (சீஞா 8:19); “மற்றவருக்குச் செவிசாய்க்குமுன்பே, மறுமொழி சொல்லாதே. அடுத்தவர் பேசும்போது குறுக்கே பேசாதே (சீஞா 11:8); “உனக்குத் தெரிந்தால் மறுமொழி கூறு. இல்லையேல், வாயை மூடிக்கொள் (சீஞா 5:12); “உன்னிடம் கூறப்பட்டதை மற்றவர்களிடம் சொல்லாதே. சொல்லாவிடில், உனக்கு ஒன்றும் குறைந்து விடாது (சீஞா 19:7); “விரைந்து செவிசாய், பொறுத்திருந்து விடை கூறு (சீஞா 4:23) என்று அறிவுறுத்துகிறது சீராக்கின் ஞானநூல்.

ஞானம் நிறைந்த இறைமகன் இயேசு, சொற்களின் வலிமையை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, சொற்களைப் பற்றி அவர் தெளிவாகப் போதித்தார். “மரத்தை அதன் கனியால் அறியலாம். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் (மத் 12:34); “மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும் (மத் 12:36); “உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்;… குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள் (மத் 12:37). எனவே, “நீங்கள் பேசும்போதுஆம்என்றால்ஆம்எனவும், ‘இல்லைஎன்றால்இல்லைஎனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடமிருந்து வருகிறது (மத் 5:37).

இயேசுவின் அடிச்சுவட்டில் நடந்த பவுலடியாரும் சொற்களில் கவனம் கொள்ளுமாறு தொடக்கத் திரு அவையினருக்கு அறிவுரை பகர்ந்தார். “மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல் ஆகியவை தகாதவை (எபே 5:4) என்றார். “கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி தேவைக்கேற்றவாறு, அருள் வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள் (எபே 4:29) என்று பணித்தார். “யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலம் தரும் வார்த்தைகளைப் பேசு (தீத் 2:8) என்றார்.

சொற்களின் வலிமையைப் பற்றி ஆழமாகப் பேசிய மற்றொரு புதிய ஏற்பாட்டு எழுத்தாளர் திருத்தூதர் யாக்கோபு. “நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது. சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது. தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே. கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே. போற்றலும், தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது (யாக் 3:8-10) என்றார் யாக்கோபு.

புனித வாழ்வுக்குப் பேச்சைக் குறைப்பது அவசியம் என்பதை உணர்ந்த எல்லாப் புனிதர்களும், துறவியரும் பேச்சைக் குறைத்து, உழைப்பில் ஈடுபட்டனர்.

உளவியல் பார்வையிலும் அதிகமாகப் பேசுவது ஆணவம், தன்னை முன்னிலைப்படுத்துதல், உயர்வு மனநிலை ஆகியவற்றின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறதுகுறைவாகப் பேசுவது எளிமை, பணிவு, தன் ஆய்வு, தன்னறிவு போன்றவற்றின் வெளிப்பாடாகிறது.

வாழ்வியல் பார்வையிலும் இன்று நாம் ஒலி மாசு (noise pollution) பற்றிய விழிப்புணர்வு பெற்றுள்ளோம். வாகனங்களின் இரைச்சல், விழாக்கள், வழிபாடுகளின்போது ஏற்படும் பேரொலி போன்றவை நமது உடலுக்கும், மனத்துக்கும் தீங்கு விளைவிக்கின்றன. ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு ஒலி அளவைக் குறைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

எனவே, வெள்ளிக்கிழமை தோறும் உண்ணா நோன்பு, புலால் நோன்பு, ஊடக நோன்பு இவற்றுடன் சொல் நோன்பையும் கடைப்பிடிப்போமாக. பேச்சைக் குறைத்து, அமைதி காப்போம். பண்பற்ற, தேவையற்ற, காயப்படுத்துகின்ற சொற்களை அறவே தவிர்ப்போம். இனிய, பயனுள்ள, ஊக்குவிக்கும் சொற்களை அன்று முழுவதும் பயன்படுத்துவோம்.

அமைதியின் கனியே இறைவேண்டல்என்றார் அன்னை தெரேசா. சொல் நோன்பு நம் இறைவேண்டலை மட்டுமல்ல; நம் உறவுகளையும், வாழ்வையுமே மேம்படுத்தும் என்பது அனுபவம் கற்றுத் தரும் பாடம்.