16-ஆம் ஆயர் மாமன்றம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கிறது. மக்கள் திரு அவையாக, உலகியல் அமைப்புக்குள் ஊடுருவி மாற்றங்களை ஏற்படுத்தும் திரு அவையாக உருமாற வழிகாட்டுதல்களைத் தந்திருக்கிறது இம்மாமன்றம்.
இம்மாமன்றத்தின்
இறுதி ஏடு (Final Document) தற்போது
இத்தாலி மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்புக்காகக் காத்திருக்கிறோம். இணைந்து
பயணிக்கும் திரு அவையில் ஆங்கிலம் மற்றும் முக்கிய மொழிகளில் இறுதி ஏடு உடனடியாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
திருத்தந்தை
வழக்கம் போல ஆயர் மாமன்ற முடிவுகள் அடிப்படையில் திருத்தூது மடல் வெளியிடப்போவது இல்லை என்று கூறி இருப்பதோடு, மாமன்ற இறுதி ஏட்டுக்குத் திருத்தூது உரைக்கான ஒப்புதலும் அங்கீகாரமும் அளித்துவிட்டார். திருச்சபையின் அதிகாரப்பூர்வ மடலாக இதுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்ற
இறுதி ஏட்டில் எதிர்பார்த்த புரட்சிகரக் கருத்துகள் இல்லை என்று சிலர் கூறினாலும், இரண்டாம் வத்திக்கான் சங்கப் பாதையில் உறுதியோடு பயணிக்க உறுதி கொண்டிருப்பது, காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்து அறிந்து பயணம் செய்யும் திரு அவையாக மலர வழிகாட்டி இருப்பது பாராட்டத்தக்கது மட்டுமல்ல, நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது.
அனைத்து
நிலைகளிலும் குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் அமைப்புகளில் பொதுநிலையினர் தலைமை, பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டிற்குச் சட்ட அங்கீகாரம் (Canonical) அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டிற்கான வாய்ப்புகள் உருவாக்கம் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது.
திரு
அவையைப் பற்றி மிக முக்கியமான பார்வை முன்வைக்கப்படுகிறது. அதாவது, திரு அவை உலகெங்கும் கிளைகளைப் பரப்பிச் செயல்படும் ஒரு கார்ப்பரேட் (Corporate) நிறுவனமல்ல
என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மாறாக, திரு அவை, உலகெங்கும் உள்ள தலத் திரு அவைகளின் ஒருங்கிணையம் (Communion) அல்லது
கூட்டமைப்பு என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. தலத் திரு அவைகள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. உலகத் திரு அவை, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் திரு அவை என்பது முன்னிலைப்படுத்தப்படுகிறது.
“திரு அவை உலகின் கூக்குரலை (Cry of the World) செவிமடுத்துக்
கேட்கும் திரு அவையாக மாற வேண்டும். உலகின் அவசர மற்றும் முக்கியப் பிரச்சினைகளுக்கு, குறிப்பாக மக்களின் அழுகுரல்களுக்குப் பாராமுகத்தினராய் (Not Blind) இருக்கக்கூடாது.
முடங்கிக் கிடக்கும் (Static) திருச்சபையாக
அல்ல; இயேசுவைப் போல பயணம் செய்யும் (On Feet), பணி
செய்யும் (Always At Service), மக்களைத்
தேடிச் செல்லும் திரு அவையாக மலர வேண்டும்”
எனத் திருத்தந்தை நிறைவுத் திருப்பலியில் கூறியவை மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
சுருங்கக்
கூறினால், வரலாற்றில் வாழ்ந்த இயேசுவைப் பின்பற்றும் திரு அவையாக நம் திரு அவை உருமாற வேண்டும். ஆயர் மாமன்றம் புதிய நம்பிக்கையைத் தருகிறது. நம்பிக்கையோடு பயணிப்போம்; உலகுக்குள் ஊடுருவி மக்கள் பணி செய்யத் தயார் ஆவோம்.