உண்ணாநோன்பு வேண்டல்
இறைவேண்டலோடு உண்ணாநோன்பும் இணைய வேண்டும் என்பது திருவிவிலியம் காட்டும் பாடம். இறைவேண்டல் வலிமைபெற வேண்டுமென்றால், நோன்பிருக்க வேண்டும் என்னும் பாடத்தை இயேசுவே நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.
‘எங்களால் ஏன் ஒரு பேயை ஓட்ட முடியவில்லை?’ என்று சீடர்கள் இயேசுவிடம் வினவியபோது, “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும்,
நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது” (மத்
17:21) என்று பதிலளித்தார் இயேசு. இதன் வழியாகச் சில வேளைகளில் நோன்பின்றி இறைவேண்டல் வலிமை பெறாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
திருவிவிலியம்
முழுவதும் நோன்பின் காட்சிகள் பலவற்றைக் காண்கிறோம். நோன்பிருக்க வேண்டும் என்பது கடவுளே தந்த கட்டளை என்பதை லேவியர் நூல் நமக்கு எடுத்துரைக்கிறது. “ஏழாம் மாதம் பத்தாம் நாள் குடிமக்களும், உங்களோடு வாழும் அந்நியரும் வேலை ஒன்றும் செய்யாமல் நோன்பிருக்க வேண்டும். இது உங்களுக்கு என்றுமுள நியமம் ஆகும்”
(லேவி 16:29,31) என்கிறது லேவியர் நூல்.
பழைய
ஏற்பாட்டில் பல காரணங்களுக்காக நோன்பு
கடைப்பிடிக்கப்பட்டது.
பாவ மன்னிப்புக்காக (1சாமு 7:6, யோனா 3:5) மக்கள் நோன்பிருந்தனர். துயரத்தின் காரணமாக நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. சவுல் இறந்தபோது மக்கள் நோன்பிருந்தனர் (2சாமு 1:12). இருப்பினும், இறைவேண்டல் செய்யும்போது, அதனை வலிமைப்படுத்த நோன்பிருந்து மன்றாட வேண்டும் என்பதே பழைய ஏற்பாட்டின் முதன்மை வலியுறுத்தல்.
தனது
குழந்தை சாகக்கிடந்தபோது தாவீது உண்ணாநோன்பிருந்து மன்றாடினார் (2சாமு 12:16). இஸ்ரயேல் மக்களின் பாதுகாப்புக்காக மன்றாட எஸ்ரா உண்ணாநோன்பு ஒன்றை அறிவித்தார். “நாங்கள் நோன்பிருந்து இதற்காக எங்கள் கடவுளிடம் வேண்டிக்கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார்” (எஸ்
8:23) என்று சான்றுபகர்கிறார் எஸ்ரா.
இஸ்ரயேலரின்
மற்றொரு தலைவரான நெகேமியாவும் இறைவேண்டலோடு நோன்பையும் இணைத்துக்கொள்ள மக்களை ஊக்குவித்தார். அவரே நோன்பிருந்து விண்ணகக் கடவுளின் முன்பு மன்றாடினார் (நெகே 1:4). எஸ்தர் (4:3,16), யூதித்து (8:6), தானியேல் (9:3) போன்ற இறையடியார்கள் நோன்பிருந்து மன்றாடுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இறைவாக்கினர்களான
எசாயா (58:6), எரேமியா (14:12), யோவேல் (2:12) ஆகியோரும் நோன்பின் அவசியத்தைப் பற்றிப் போதித்தனர். ஆனால், உண்மையான நோன்பு வெளிவேடமற்றதாகவும், அன்பு, அறம், பகிர்வு, நீதி, உண்மையான மனமாற்றம் ஆகிய மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகவும் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
புதிய
ஏற்பாடும் நோன்பின் அவசியத்தை வலியுறுத்திப் பேசுகிறது. ஆண்டவர் இயேசுவே தமது பணிவாழ்வின் தொடக்கத்தில் “நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார்” (மத்
4:2) என்பது கிறிஸ்தவர் அனைவருக்கும் ஊக்கமூட்டும் எடுத்துக்காட்டு. இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி தொடக்க காலக் கிறிஸ்தவர் நோன்பிருந்து இறைவேண்டல் செய்தனர் என்பதைத் திருத்தூதர் பணிகள் நூல் பதிவு செய்துள்ளது.
பர்னபாவும்,
சவுலும் நற்செய்திப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது நோன்பு இறைவேண்டலால்தான் (திப 13:2). அவர்கள் திருப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டபோது இதர கிறிஸ்தவர்கள் அவர்களுக்காக “நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்” (திப
13:3). மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து, திருப்பணிக்காக ஆண்டவரிடம் ஒப்படைக்கும்போது நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள் (திப 14:23).
இந்த
மரபைப் பின்பற்றி திரு அவையின் வரலாறு முழுவதும் புனிதர்களும், இறையடியார்களும், இறைமக்களும் நோன்பிருந்தனர். புனித பெனடிக்ட், கத்தரீன், சார்லஸ் பொரோமியோ, வின்சென்ட் தே பவுல், பவுஸ்தினா
போன்ற எண்ணற்றப் புனிதர்கள் நோன்பிருந்து இறைவேண்டல் செய்ததை அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
திருமுழுக்குப்
பெற்ற கத்தோலிக்கர்கள் தவக் காலத்திலும், வெள்ளிக்கிழமைகளிலும் ஒறுத்தல்களைக் கடைப்பிடிக்க அழைக்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி (எண்: 1438). சாம்பல் புதன், பெரிய வெள்ளி ஆகிய இரு நாள்களில் கண்டிப்பாகவும், முடிந்தால் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் உண்ணாநோன்பு கடைப்பிடிக்க வலியுறுத்துகிறது திரு அவைச் சட்டம் (எண்கள்: 1250-53).
எனவே,
நம் இறைவேண்டல் வாழ்வில் உண்ணாநோன்பைத் தவறாது இணைத்துக் கொள்வோமாக. உணவில் நாம் செய்யும் தியாகமே உண்ணாநோன்பு. எனவே, ஒருமுறை மட்டுமே உணவு உண்பது அல்லது உணவின் அளவைக் குறைத்துக்கொள்வது, அல்லது பிடித்த உணவுகளைத் தவிர்ப்பது அல்லது பிடிக்காத உணவையும் தியாகத்தோடு உட்கொள்வது என ஏதாவது ஒரு
வடிவத்தில் குழந்தைகள் உள்பட அனைவரும் உண்ணாநோன்பைக் கடைப்பிடிப்பது சிறந்தது.
உண்ணாநோன்பிருக்கும்போது
வெளிவேடம் தவிர்த்து, மறைவாயிருக்கும் தந்தைக்கு மட்டும் தெரியுமாறு நோன்பிருக்கக் கூறினார் இயேசு (மத் 6: 16-18). வாரத்தில் இருமுறை நோன்பிருந்தாலும், இறுமாப்பு, தற்பெருமை போன்றவை அதன் பலன்களை நீக்கிவிடும் என்று ‘பரிசேயரும், வரி தண்டுபவரும்’ (லூக்
18:9-14) உவமையின் வழியாகக் கற்பித்தார். “தங்கள் பாவங்களுக்காக நோன்பிருப்போர் வெளியில் சென்று மீண்டும் அதே பாவங்களைச் செய்தால் யார் அவர்களது வேண்டுதலைக் கேட்பார்? அவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்வதால் பயன் என்ன?” (சீஞா 34:26) என்று எச்சரிக்கிறது இறைவார்த்தை. எனவே, விழிப்புணர்வோடு நோன்பிருப்போம். இறைவேண்டல் வாழ்வை வளப்படுத்துவோம்.
(தொடரும்)