news-details
ஞாயிறு மறையுரை
17 நவம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறு - தானி 12:1-3; எபி 10:11-14,18 மாற் 13:24-32

கடவுளின் தீர்ப்பு ஏழைகளுக்கே சாதகம்!

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாளோடு இந்தத் திருவழிபாட்டு ஆண்டை நிறைவு செய்கிறோம். வரும் திருவருகைக்கால முதல் ஞாயிறு, திருவழிபாட்டின் புதிய ஆண்டாக அமைகிறது. நாம் நிறைவு செய்யும் இந்தத் திருவழிபாட்டு ஆண்டு முழுவதும் ஞாயிறு திருப்பலிகளில் மாற்கு நற்செய்தியின் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

2016-ஆம் ஆண்டு நாம் சிறப்பித்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் உலக வறியோர் நாளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார். அதன் அடிப்படையில், நவம்பர் மாதம் 17-ஆம் நாள், அதாவது பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறை எட்டாவது உலக வறியோர் தினமாகச் சிறப்பிக்கின்றோம். இந்நாளைக் குறித்து ஜூன் மாதம் 13-ஆம் நாள் கொண்டாடப்பட்ட  புனித அந்தோனியார் திருநாளன்று, சீராக் நூலாசிரியர் எடுத்துக்காட்டும் “ஏழைகளின் செபம் இறைவனை நோக்கி எழுகிறது (சீரா 21:5) என்ற இறைவார்த்தையை மையக்கருத்தாகத் திருத்தந்தை தெரிவு செய்துள்ளார்.

உலக வறியோர் தினத்தைக் கொண்டாடத் திரு அவை பணித்த இந்நாளில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்கள் இறுதிநாள்களைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன. வாழ்வின் இறுதிநாள் எப்போது, எவ்விதம் வரும் என்பது தந்தையைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஆனால், அந்த இறுதிக்காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு.

யூத மக்கள் மத்தியில் இறுதிநாள் சார்ந்த எண்ணங்கள் பரவலாகப் பேசப்பட்டன. அதுவும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே உலக முடிவு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் அதிகம் இருந்தது. இறுதிக்காலத்தைப் பற்றி யூதர்கள், இறுதி நாள் மிகுந்த அச்சம் தரும் நாளாக விடியும் என அஞ்சினர். அது கடவுளின் கோபம் எனவும், உலக அழிவு எனவும் எண்ணினர் (1அர 8:37; எரே 4:11-26; எசே 5:120). கொடுமையான அரசர்கள் பிடியில் சிக்கித் தவித்து, அடிமைகளாக வாழ்ந்தபோது, அதுவே உலக அழிவின் காலம் என நினைத்தனர். குழப்பங்கள், போர்கள், இயற்கை அழிவுகள் போன்றவை உலக இறுதிநாளின் முன்னோட்டம் எனவும் எண்ணினர். நம் காலத்திலும் புயல், வெள்ளம், நிலநடுக்கம் ஆகிய இயற்கைப் பேரிடர்களாலும், ‘கொரோனா எனும் பெருந்தொற்றினால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த வேளைகளிலும் ‘இதுதான் உலக முடிவா?’ என்ற கேள்விகளும் எழுந்தன என்பதை நாம் அறிவோம்.

2000-ஆம் ஆண்டு நெருங்கிய வேளையில் உலக முடிவைப் பற்றிய வதந்திகளும், பல குழப்பங்களும் உருவாகின. இறுதிநாளின் அச்சத்தை மிகவும் மிகைப்படுத்தி, வர்த்தகர்களும், ஏன், ஒரு சில சமயப் போதகர்களும் இலாபம் தேடினர் என்பது உண்மை. எருசலேம் நகரில், இயேசுவின் விண்ணேற்றக் குன்றருகே ‘ஒலிவ மலை ஹோட்டல் (Mount of Olives Hotel) என்ற விடுதியை நடத்தும் உரிமையாளர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களுக்கு 1998 -ஆம் ஆண்டு ஒரு மடலை அனுப்பியிருந்தனர். “2000 -ஆம் ஆண்டு, இயேசுவின் ‘இரண்டாம் வருகை நிகழும்போது, ஒலிவ மலையில் நீங்கள் காத்திருக்க வேண்டாமா? எங்கள் ஹோட்டலில் ஓர் அறையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கிறோம். முன்பதிவு செய்துகொள்ளுங்கள் என்பதே அக்கடிதத்தில் கூறப்பட்ட விளம்பர வரிகள்.

வர்த்தக உலகமும், சில சமயப் போதகர்களும் ‘உலக முடிவு, ‘இரண்டாம் வருகை ஆகியவற்றைக் கேலிப்பொருளாக மாற்றி, இலாபம் தேடுவதில் தீவிரம் காட்டும் வேளையில், உலக முடிவு என்ற உண்மை, நம்மில் எவ்வகை எண்ணங்களை எழுப்ப வேண்டும், எவ்வகையான உறுதியைத் தரவேண்டும், இறுதிக் காலத்தை நாம் எவ்விதம் தயார் செய்வது போன்ற கேள்விகளை எழுப்புவது நல்லது.

இன்றைய முதல் வாசகம், இறுதிக்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றது. துன்பங்களில் நிலைகுலையாது நிலைத்திருக்கும் நல்லவரை ஆண்டவர் கைவிடமாட்டார் எனவும், அவர்கள் பெயர்கள் வாழ்வின் நூலில் இடம்பெறும் எனவும் நம்பிக்கை தருகிறது. இன்றைய நற்செய்திப் பகுதி மானிட மகனின் வருகையைப் பற்றி எடுத்துரைக்கின்றது. மனிதராகப் பிறந்து பாடுபட்ட இயேசு மிகுந்த வல்லமையோடு மீண்டும் வருவார்; வரும்போது வானில் பெரும் அடையாளங்கள் காணப்படும். தம்மைப் பின்பற்றி, இறைநம்பிக்கை கொண்டு நேரிய வழியில் நடப்போர் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை; இறைவனது விருப்பத்தை நிறைவேற்றி வாழ்வோர் இறைவனின் மாட்சியில் பங்குகொள்வர் என இயேசு எடுத்துரைக்கிறார்.

நல்வாழ்வின் அடிப்படையிலேயே ஒருவர் முடிவில்லா வாழ்வை வெகுமதியாகப் பெறமுடியும் என்பதே இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்கள் நமக்குத் தரும் அழைப்பு. திருத்தந்தை உரையாற்றிய மூவேளைச் செப உரையிலும், “இறுதிநாள் குறித்து நாம் எப்போதும் விழிப்பாயிருக்கும் வகையில், நிகழ் காலத்தைச் செம்மையான முறையில் நாம் வாழ வேண்டும் எனக் கூறுகிறார் (வத்திக்கான், 18.11.2018).

நாம் வாழும் இந்த வாழ்க்கை இறப்போடு முற்றிலும் முடிந்து விடுவதில்லை. இவ்வுலகைத் தாண்டி, மற்றொரு வாழ்வு உண்டு. மறுவாழ்வு குறித்து திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ள பல கருத்துகளில் ‘இறுதித்தீர்ப்பு என்பது ஒரு முக்கியமான பாடம். 

மூவகை மனநிலைகளில் வாழும் மனிதர்களைச் சந்திக்கிறோம். முதலில், எப்படியும் ஒருநாள் சாகத்தான் போகிறோம்; அதனால், உண்போம், குடிப்போம், எப்படியும் வாழ்வோம் என்ற சுயநல மனநிலையில் வாழ்பவர்கள்; இரண்டாம் நிலையில், என்னதான் நல்லவற்றைச் செய்தாலும், எல்லாமே ஒருநாள் அழியத்தான் போகிறது; பின் ஏன் நல்லவற்றைச் செய்ய வேண்டும்? என்ற விரக்தி மனநிலையோடு வாழ்பவர்கள்; மூன்றாம் நிலையில், எல்லாமே அழியத்தான் போகிறது, நானும் சாகப்போகிறேன்; அதற்கு முன் உள்ள நேரத்தில், என்னால் முடிந்தவரை நல்லது செய்வேன் என்ற நம்பிக்கை உணர்வில் வாழ்பவர்கள். இந்த நம்பிக்கை உணர்வுக்குக் கூடுதல் அர்த்தம் தருவது, மறுவாழ்வு என்ற எண்ணம். நம் வாழ்வு இவ்வுலகத்தோடு முடிவடையாமல் அது மறு உலகிலும் தொடரும் என்ற உணர்வே இவ்வுலகப் பயணத்தைப் பயனுள்ள பாதையில் தொடர்வதற்கு உதவியாக உள்ளது.

இவ்வுலகில் வாழும் நாம் இறுதிநாளில் தகுந்த வெகுமதியோ, தண்டனையோ எதனடிப்படையில் பெறுகிறோம்? ‘வறியோருக்கு நாம் என்ன செய்தோம்?’ என்ற ஒரே ஒரு கேள்விதான் மறுவாழ்விற்குள் நாம் அடியெடுத்து வைக்க அனுமதி தரும் நுழைவுச்சீட்டு. அதிலும், குறிப்பாக, தேவையில் இருக்கும் வறியோருக்கு நாம் என்ன செய்தோம் என்பது ஒன்றே மறுவாழ்வின் வாசலில் நம் வாழ்வை எடைபோடப் போகும் தராசு.

நாம் எத்தனை முறை கோவிலுக்குச் சென்றோம், எத்தனை மறைநூல்களைக் கற்றுத்தேர்ந்தோம், எத்தனை பக்தி முயற்சிகளில், திருப்பயணங்களில் பங்கேற்றோம், எத்தனை நாள் உண்ணா நோன்புகளைக் கடைப்பிடித்தோம் என்பவை மட்டும் மறுவாழ்வில் நாம் நுழைவதற்கு அளவுகோல்களாக இருக்காது. வறியோரிடமிருந்து பெறக்கூடிய பரிந்துரைக் கடிதம் இன்றி, மறுவாழ்வில் அடியெடுத்து வைக்க முடியாது. தேவையில் இருப்போர் சார்பில் என்னென்ன செய்தோம் அல்லது செய்ய மறுத்தோம் என்பதே நம்மை ‘முடிவில்லா வாழ்வுக்கு அல்லது ‘முடிவில்லா அழிவுக்கு இட்டுச் செல்லும்.

உலக வறியோர் தினத்திற்காகத் தமது செய்தியில், ‘கடவுள் தமது குழந்தைகளின் துன்ப துயரங்களை அறிந்திருக்கிறார்; ஏனென்றால் அவர் நம்மீது கவனமும் அக்கறையும் கொண்ட ஒரு தந்தை என்றும், ‘ஒரு தந்தையாக தேவையில் இருப்போராகிய ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், துன்பப்படுபவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களை மிகவும் நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் என்றும் விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ‘நாம் நாள்தோறும் சந்திக்கும் ஏழைகளின் முகங்களிலும் முகவரியிலும் இந்த இறைவார்த்தையைப் படித்துச் சிந்திப்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் (உலக வறியோர் தின உரை, 13.06.2024).

பல்வேறு துன்பங்களால் தங்கள் முகத்தையும், முகவரியையும் இழந்து, அடையாளம் ஏதுமின்றி அலையும் ஏழை மக்களுடன் தம்மையே இணைத்துக்கொண்ட இயேசு,  அதே இணைப்பை இறுதித்தீர்ப்பு நேரத்திலும் உருவாக்குகிறார். மனிதர்கள் என்ற அடையாளமே இன்றி உருக்குலைந்து போயிருக்கும் இம்மனிதர்களே, இறுதித்தீர்ப்பு வேளையில் இயேசுவோடு இணைந்து, நமக்குத் தீர்ப்பு வழங்க வருவர். எனவே, தேவையில் இருக்கும் ஒருவருக்காவது நன்மைகள் செய்து, அவரிடமிருந்து நற்சான்றிதழ் பெற்று, விண்ணரசில் நுழையும் தகுதி பெற இன்றே முயல்வோம்.

ஏழைகளுக்காக மன்றாடும்போதும், அவர்களுக்காகப் பிறரன்புச் செயல்களில் ஈடுபடும்போதும் நாம் கடவுளோடு ஒன்றிக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம். ஏழைகளுக்கு உதவுவதில் முன்மாதிரியாய் இருந்து, தேவையில் இருப்போருக்கு விரைந்துசென்று உதவிய அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம். அச்சம் தவிர்த்து, இறுதிநாளில் மானிட மகனை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்.