news-details
ஆன்மிகம்
நிறைவின்மை என்னும் நோய்

இன்றைய உலகில்போதும்என்ற நிறைவு காண, எல்லையே இல்லாத ஒரு நிலைதான் மிகவும் அச்சத்தை விளைவிக்கும் காரணியாக உள்ளது. ‘இன்னும் வேண்டும்என்கிற வெறி நம்மை வருத்தத்தின் விளிம்புக்கு நகர்த்திச் செல்லும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் ஒன்றேபோதும்என்ற நிறைவு. செல்வம், கௌரவம், வலிமை மூன்றையும் சுவைக்கச் சுவைக்க அபாயகரமானதாக மாறிக்கொண்டே செல்லும். நவீன முதலாளித்துவம் இருவகையான சார்பு நிலைகளை உடையது. ஒன்று, செல்வத்தை உண்டாக்குவது. மற்றொன்று, பொறாமையை உண்டாக்குவது. பெரும்பாலும் இரண்டும் இணைந்தே பயணிக்கின்றனஎன்கிறார்பணம் சார் உளவியல்நூலின் ஆசிரியர் மார்க்கன் ஹெளஸ்ஸேல்.

போதும்என்கிற மனமின்மையும், ‘இன்னும் கொஞ்சம்என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் எங்கும் நம்மிடம் உள்ளதையும், நமக்குத் தேவையானதையும் பணயம் வைத்து, நம்மிடம் இல்லாததையும், நமக்குத் தேவையற்றதையும் சேர்க்கப் பாடுபடுகிறோம் என்பதே எதார்த்தம். இதில் ஏற்படும் நிறைவின்மை இறுதியில் ஏமாற்றத்தையும், விரக்தியையும் விளைவிக்கின்றன. ‘போதும்என்ற நிறைவு இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது, மகிழ்ச்சியற்றது. நிறைவு நோக்கி புறந்தேடும் எதுவும் நிலைக்கப் போவதுமில்லை; நிரந்தர நிம்மதியைத் தரப் போவதுமில்லை.

முதலாளித்துவச் சிறையில் நாம்: நம்மிடம்போதும்என்கிற நிறைவின்மையால், வெளிப்புறச் செயல்களில் காட்டும் ஆர்வமும் குறிப்பாக பணம், பதவி, அங்கீகாரம் என்பதான அணுகுமுறையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இரண்டு நிலைகளில் இதனைப் பட்டியலிடலாம்: 1. மட்டுமீறிய எதிர்பார்ப்புகள், 2. எதிலும் சாதனை அணுகுமுறை.

உண்மையான மகிழ்ச்சி என்பது எதிர்பார்ப்புகளை இழத்தலிலே ஏற்றம் பெறுகிறது. நவீன முதலாளித்துவச் சிறையில் நாம் சிக்குண்டுள்ளோமா என்பதனை எப்படிக் கண்டுகொள்வது? நிச்சயம் நமது எண்ணங்களும், செயல்களுமே அதற்குச் சான்று! 2014 -ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று வத்திக்கானில் பணியாற்றும் அனைவருக்குமான கிறிஸ்து பிறப்பு விழா தயாரிப்புக்காகத் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில் குறிப்பாக, குருக்களைப் பாதித்துள்ள பல்வேறு நோய்களைப் பட்டியலிட்டார். அவற்றைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்துவதே போதுமானதுசின்னச் சின்னக் காரியங்களில் நிறைவின்மை. பெரிது நோக்கி நகர்த்தும் எதுவும் மட்டுமீறிய எதிர்பார்ப்புகளின் விளைவே! பதவி, செல்வம், புகழ் மூன்றையும் சுவைக்கச் சுவைக்க அபாயகரமானதாக மாறிக்கொண்டே செல்லும் என்பது நியதி. நமது நிர்வாகப் பொறுப்புகளில் நாம் செயல்படும் முறைகளும், நமது எண்ணங்களும் எதனை மையம்கொண்டு செயல்படுகின்றன?

நானே எல்லாம்என்கிற ஆணவ நோய் உள்ளதா? தரப்படும் பணிகளில் மற்றவர்களோடு ஒருங்கிணைந்து செயல்படுவது கடினமாக உள்ளதா? தன்னைப் பற்றியே பெருமையாகப் பேசிக்கொள்ளும் தற்பெருமை மனநிலை உள்ளதா?

மற்றவர்களைக் குறித்துப் புறணி பேசும் மற்றும் புறங்கூறும் பழக்கம் இயல்பாக உள்ளதா? தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை எதற்கும் துதி பாடும் போக்கு உள்ளதா? எதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்யும் மனப்பாங்கு உள்ளதா பொருள் குவிக்கும் பேராசை உள்ளதா? எதார்த்த உதாரணங்களோடு சற்று சிந்திப்போம்.

களைகட்டும் மரணக் கலாச்சாரம்: முந்தைய நபரைவிட கூடுதலாக, மாறுபட்டுச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் நல்லதாயின் வரவேற்கத்தக்கதே. அதைவிடுத்து, முந்தையவரைவிட நற்பெயர் வாங்க வேண்டும்; எப்படியாவது முன்னவர் நற்பெயருக்கு மறைமுகமாகக் களங்கம் வருவிக்க வேண்டும்; அதனால், தனக்குப் புகழ் சேர வேண்டும் என்கிற எத்தனிப்பில் ஒருவர் செயல்பட ஆரம்பித்தால், அது தவறான அணுகுமுறையே. இத்தகு மனநிலைகளால் வெறுப்பும், புரிதலின்மையும், கசப்புணர்வுகளுமே கூடுகட்டிக்கொள்ளும்.

குறிப்பாக, சாதனை நோக்கிச் செயல்படும் அருள்பணியாளர்களால் மக்களின் மனநிலைகளிலும் அருள் வாழ்வு என்பதனை இரண்டாம் பட்சமாக்கிய மனநிலை உருவாகி உள்ளது. இது எவ்வளவு அபாயகரமானது! மக்களின் உரையாடல்களைக் கவனியுங்கள். ‘இவரைவிட முந்தையவர் நன்றாகச் செய்தார், ‘அவரது காலத்தில் எத்தனை பணிகள் நடந்தன, ‘எவ்வளவு சொத்துகள் வாங்கினார், கட்டடங்கள் கட்டினார்; ஆனால், இவர் வெறும் பூசை வைக்கத்தான் இலாயக்கு, வேற எதையும் கண்டுக்கிடுறதில்ல...’ இறைமக்கள் பங்குப் பணியாளரைப் பார்க்கும் பார்வை இங்ஙனம் மாறியிருக்கின்றன.

முதலீடுகளை ஈட்டும் தொழில் அதிபர்களாக இறைப்பணியாளர்களைப் பாவிக்கும் போக்கை இறைமக்களிடம் விதைத்துவிட்ட பழிபாவம் நம்மையே சாரும். இன்றைய முதலாளித்துவச் சித்தாந்தங்களில் நம்முடைய வாழ்வும் பணியும் சிறைபட்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன நிதர்சனம் தேவை?

நோய்களுக்கான மருந்தென்ன? கால ஓட்டத்தில் நம்மிடம் கறையாய்ப் படிந்துள்ள மரணக் கலாச்சாரங்களை வென்றெடுக்க திருத்தந்தை காட்டும் ஒரே வழி அன்பு! எதையும் கடமைக்காக, கட்டாயத்தினால், சட்டத்தினால், சடங்கிற்காக, சாதனைக்காகச் செய்யாமல், அன்பால் செயல்படுவதே ஏற்றம் தரும். அன்பைச் சுவைத்தவரால்தான் அன்பைப் பகிர முடியும். திரு அவையின் ஒழுக்கவியலின் மையமும் அதுவே.

புனித தாமஸ் அக்குவினாஸ் போதித்ததுபோல, பண்புகள் ((Virtues) மற்றும் அதிலிருந்து தொடங்கும் செயல்களிலும் ஒழுக்கவியல் வெளிப்படுகிறது என்றாலும், எல்லாவற்றையும் விட கணக்கில் கொள்ளக்கூடியதுஅன்பின் வழியாய் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது (கலா 5:6).  “ஒருவரின் அயலாரை நோக்கிய அன்புச் செயல்களே ஆவியின் உள்ளார்ந்த அருளின் நிறைவான, வெளிப்படையான வெளிப்பாடுகள் ஆகும் (நற்செய்தியின் மகிழ்ச்சி, எண்:37) என்கிறார் திருத்தந்தை. அன்பும் நம்பிக்கையும் பிரிக்க முடியாதவை. நம்புகிறவன் அதனை அன்பில் வெளிப்படுத்த வேண்டும்.

இறைநம்பிக்கை ஒளி (LF) சுற்றுமடல், அதிகாரம் 4- இல் திருத்தந்தை, “மனித உறவுகளின் வளத்தை உயர்த்தக்கூடியதாகவும், அதன் நீடித்திருக்கும் சக்தியையும், நம்பத்தக்கதாக நிலைப்பாட்டையும் நமது ஒட்டுமொத்த வாழ்வையும் வளமூட்டி மேம்படுத்தக்கூடியதாகவும் இறைநம்பிக்கை ஒளி உள்ளது (எண்: 51) என்கிறார். இறைப்பணியாற்ற தங்களை அர்ப்பணித்துள்ள ஒவ்வொருவரும் இதனை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

நமது நம்பிக்கை என்பது மனித உறவுகளின் அடிநாதங்களையும், அதன் இறுதி எல்லையான இறைவனையும் இறுகப் பற்றிக் கொண்டு, மனித குலத்தின் பொதுநலனுக்குத் தன்னை அர்ப்பணிக்க உதவ வேண்டும். இதன் நோக்கம் மறுவுலக வாழ்வு மட்டுமல்ல; மாறாக, இன்றைய மனிதச் சமுதாயத்தைக் கட்டி எழுப்பி, எல்லாரும் ஒன்றாக இறையரசின் நிறைவினை நோக்கி நம்பிக்கையில் நடை பயிலச் செய்வதாகும்.

இறுதியாக, நம்மிடம் இருக்கும் பகையுணர்வுகளை, வெறுப்புணர்வுகளைக் களைவதற்கு என்ன வழி? நட்பு பாராட்டுவதே! மணத்துறவின் முக்கியம் மற்றும் நட்புப் பாராட்டுதலைப் பற்றி கம்பானியா அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களிடம் திருத்தந்தை உரையாற்றியபோது (26, ஜூலை 2014) “அருள்பணியாளர்கள் மன வருத்தங்களைச் சுமந்து  பகைமையில் உழல்பவர்களாக இருக்கக்கூடாது. மன்னிப்பதில் முன்னோடிகளாக இருக்க வேண்டும்என்று வலியுறுத்தினார். ஆகவே, நாமும் அன்பின் சாட்சிகளாய் அவனியில் வலம் வருவோமா!