உண்மையின் அரசரே வருக! நிலையான ஆட்சி தருக!
இன்று
நாம் கிறிஸ்து அரசர் திருநாளைக் கொண்டாடுகிறோம். திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறும் இன்றுதான். கிறிஸ்து அரசர் திருநாளை, திருத்தந்தை 11 -ஆம் பயஸ் அவர்கள் 11-12-1925 அன்று ‘Quas Primas’ என்ற
சுற்றுமடல் வழியாக நிறுவினார். அது அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை கொண்டாட வேண்டுமெனப் பணித்தார். 1960-ஆம் ஆண்டு வழிபாட்டு அட்டவணையைத் திருத்தம் செய்த திருத்தந்தை 23-ஆம் ஜான் இவ்விழாவை முதன்மை விழாவாகத் தரம் உயர்த்தினார். 1969-ஆம் ஆண்டு திருத்தந்தை 6-ஆம் பால் வெளியிட்ட ‘Mottu Proprio’ என்ற
மடலின் வழியாக இந்த விழாவின் பெயரை ‘கிறிஸ்து அனைத்துலகின் அரசர்’ என மாற்றினார். மேலும்,
வழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறு கொண்டாட சில மாற்றங்களை உருவாக்கினார்.
2020 -ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் கிறிஸ்து அரசர் திருநாள் திருப்பலியை வத்திக்கானில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பலியின் இறுதியில், ‘2021 -ஆம் ஆண்டு கிறிஸ்து அரசர் திருநாளோடு உலக இளைஞர் நாளும் இணைத்துச் சிறப்பிக்கப்படும்’ என்று
அறிவித்தார். திருத்தந்தை புனித 2-ஆம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் புனித வாரத்தின் முதல் நாளான குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டு வந்த உலக இளைஞர் நாள், தற்போது கிறிஸ்து அரசர் திருநாளன்று சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. “ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ ஓடுவர்; களைப்படையார்” (காண்.
எசா 40:31) என்பது இந்நாளில் நாம் கொண்டாடும் உலக இளைஞர் நாளின் மையப்பொருளாகும்.
திருத்தந்தை
11 -ஆம் பயஸ் இவ்விழாவை முதன்முதலில் ஏற்படுத்த முக்கியக் காரணம், 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட உலகப் போர்கள், கிறித்தவத் தன்மை விலகி சர்வாதிகார மனநிலைகள் எழுந்தன. பல இடங்களில் கிறித்தவ
நம்பிக்கையாளர்கள் அடக்குமுறையைச் சந்தித்தனர். முதலாம் உலகப் போர் முடிந்தாலும், உலகத்தில் பகைமை, பழிவாங்கும் வெறி அடங்கவில்லை. திரு அவையின் அதிகாரம் கேள்விக்குள்ளானது; கிறித்தவம் கலக்காத ஆட்சி அமைக்கப் பல ஐரோப்பியத் தலைவர்கள்
முனைந்தனர்; கடவுள் அந்நியப்பட்டுப் போனார். இந்த நெருக்கடி நிலையில், திருத்தந்தை 11 -ஆம் பயஸ், இந்தக் கொடுங்கோல் மனம்கொண்ட தலைவர்கள்/அரசர்களுக்கு மாற்று அடையாளமாக, கிறிஸ்துவை அரசராக அறிவித்தார்.
இயேசுவை
அரசராக எண்ணும் போது, அவர்தம் வாழ்நாளில் தம்மை ஓர் அரசராகக் காட்டிக்கொண்டது இல்லை. பதவியை அவர் வலிந்து கட்டிக்கொண்டதுமில்லை. அரசராகக் கொண்டாடப்பட வேண்டியவர் பிலாத்து முன் தீர்ப்புக்காக ஒரு விசாரணைக் கைதியாக நிற்கிறார். அவர் எப்படி ஓர் அரசராக இருக்க முடியும்? அவர் அரசர் என்றால் அவரது அரசு எத்தகையது? யார் அவருடைய ஆட்சிக்குரிய மக்கள்? அரண்மனையே அடைக்கலம் என வாழ்ந்த அரசர்கள்
மத்தியில் இயேசுவின் ஆட்சி வேறுபட்டிருக்கக் காரணம் என்ன? போன்ற வினாக்கள் நம்முன் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் இந்நாள் விடையளிக்கிறது.
இன்றைய
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் தானியேல் கடவுளின் நிலையான, அழிக்க முடியாத அரசு வானத்தின் மேகங்கள்மீது இறங்கி வருவதையும், ஏனைய கொடுங்கோல் அரசுகளை வெல்வதையும் காண்கிறார். அவர் கண்ட காட்சியில் குறிப்பிடும் தொன்மை வாய்ந்தவர் கடவுளே! அவரே எல்லா அரசுகளுக்கும் அதிகாரம் அளிப்பவர்; தீர்ப்பும் வழங்குபவர். அவர் அருகில் இருப்பவர் இயேசு கிறிஸ்து என விளக்கம் பெறுகிறோம்.
‘கிறிஸ்து’
என்ற கிரேக்கச் சொல்லுக்கும், ‘மெசியா’ என்ற எபிரேயச் சொல்லுக்கும் ‘திருப்பொழிவு செய்யப்பட்டவர்’ என்பது
பொருள். இஸ்ரயேல் வரலாற்றில் அரசர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
எனவே, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர்கள் திருஎண்ணெயால் திருப்பொழிவு செய்யப்படுவது வழக்கம். இங்கே கடவுளே திருப்பொழிவு செய்த புதிய அரசர் இயேசு. அவர் நிறுவிய ஆட்சியே இறையாட்சி. இயேசு நிறுவிய ஆட்சியில் இராணுவம் கிடையாது. எனவே, போர் தொடுப்பது இல்லை. அவர் நிறுவிய ஆட்சிக்கு நிலப்பரப்பு கிடையாது. எனவே, நிலத்தைக் காக்கக் கோட்டைக் கொத்தளங்கள் தேவையில்லை. ‘வரி’ என்ற பெயரில் மக்களைச் சுரண்ட வேண்டிய அவசியமும் இல்லை. யாரையும் அடக்கவோ, ஒடுக்கவோ தேவை இல்லை. மாறாக, மதிப்பீடுகளின் அடிப்படையில் இயேசு கட்டியமைத்த ஆட்சியே இறையாட்சி. அங்கு அதிகாரம் அல்ல; சேவையே முக்கியம். சொத்துகளைக் குவிப்பது அல்ல; தன்னை இழப்பதே மையம். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, சமத்துவம், சகோதரத்துவமே தமது கொள்கை என எங்கும் முழங்கினார்.
‘உண்மையை எடுத்துரைப்பதே தமது பணி’ என்று சொல்லி, பணிவிடை பெற வந்த அரசர்கள் மத்தியில் தம்மைப் பணிவிடை புரியும் ஒரு தொண்டனாக அடையாளப்படுத்தி ஏழ்மையின் அரசாட்சியை நிறுவினார்.
இயேசு
நிறுவிய ஆட்சிக்கு இறைவன் ஒருவரே தேவை. அவர் ஒருவரே போதும் என்று சொல்லக் கூடிய மக்களின் மனங்களில்தான் இந்த ஆட்சி அமையும். இயேசுவின் ஆட்சியில் ‘யார் பெரியவர்?’ என்ற கேள்விக்கு இடமில்லை. எல்லாருக்குமே இயேசுவின் ஆட்சியில், அவரது அரியணையில் பங்கு உண்டு. எல்லாரும் சமமே. இங்கே அரசன் என்றும், அடிமை என்றும் வேறுபாடுகள் இல்லை. ‘எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஓர் இனம், எல்லாரும் மன்னர்கள்’
என்று பாரதி கண்ட சமத்துவச் சமூகமே இயேசுவின் இறையாட்சிச் சமூகம்.
இன்றைய
நற்செய்தியில் இயேசுவை ஓர் அரசராகப் புரிந்துகொள்கிறோம். இயேசுவுக்கு எதிரான முக்கியக் குற்றச்சாட்டு அவர் தம்மையே ஓர் அரசராக ஆக்கிக்கொள்கிறார் என்பதுதான். இந்தக் குற்றச்சாட்டு உரோமைப் பேரரசுக்கு எதிரான பெருங்குற்றம், துரோகம் ஆகும். இதுவே அவரது கொலைக்குக் காரணமாக அவரது சிலுவையின்மேல் எழுதி வைக்கப்பட்ட குற்றச்சாட்டு. எனவே, இயேசுவின்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உறுதிசெய்யும் நோக்கில்தான் சீசரின் கைப்பொம்மையாக இருக்கும் பிலாத்து இயேசுவிடம், “நீ யூதரின் அரசனா?”
என வினவுகிறார் (லூக் 18:33). பிலாத்து நினைக்கும் முறையிலான அரசர் அல்லர் இயேசு. அவரிடம் ஆயுதங்களும் இல்லை, ஆள்பலமும் இல்லை. அவர் உரோமை அரசுக்குப் போட்டி அரசரும் அல்லர். அவரது ஆட்சி வேறுபட்டது; அவரது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல (18:36). அது இறை உலகு சார்ந்தது. அது அன்பு, நீதி, அமைதி, மகிழ்ச்சி போன்ற இறையாட்சியின் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது. அது வாழ்வின் அரசு. இத்தகைய அரசுக்கு இயேசுவே தலைவர். இப்பொருளில் இயேசு ஓர் அரசரே.
“நீ யூதரின் அரசனா?”
என்ற பிலாத்துவின் கேள்விக்கு இயேசு நேரடியாகப் பதில் கொடுக்கவில்லை. தாம் ஓர் அரசர் என்றால் பிலாத்து அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளமாட்டார்; யூதரின் குற்றச்சாட்டு உண்மையென நினைத்துக்கொள்வார். தாம் ஓர் அரசர் இல்லை என்றால், அது தம் அரச நிலையை மறுப்பது போலாகிவிடும். எனவே, எந்த வித நேரடிப் பதிலையும் தராமல், “அரசன் என்று நீர் சொல்லுகிறீர்” (18:37) எனப்
பதிலளித்து, தம் அரசின் தன்மையை விளக்குகிறார் இயேசு. அதாவது உண்மையை நிலைநாட்டி, மக்களுக்கு வாழ்வு வழங்கும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதே தம் பணி என அடித்துக் கூறுகிறார்.
தன்
மனசாட்சியும், மனைவியும் கூறும் உண்மைகளையும் காண மறுத்து, எப்போது தன் பதவி போய்விடுமோ என்ற பயத்தில், அரியணையில் தன்னையே இறுக்கமாக அறைந்துகொண்ட பிலாத்துவைப்போல ஆயிரமாயிரம் தலைவர்களை நாம் அறிவோம். கொள்கை என்ற பெயரில், மதம் என்ற பெயரில், இவ்வுலகில் இவர்கள் விதைப்பதெல்லாம் வெறுப்பும், வேதனையும்தான். சுயநலமற்ற அரசர்களையோ, தலைவர்களையோ காண்பது மிக அரிது.
நிறைவாக,
கிறிஸ்துவை அரசர் என்று கொண்டாடும் நாம், நம்மை அடிமைகளாக்கி, நம்மைச் சுரண்டுவதில் சுகம் கண்டு, பதவி-புகழே நிரந்தரம் என வாழும் தலைவர்களையும்,
தலைவிகளையும் இனங்கண்டு, அவர்களைத் துதிபாடும் மனநிலை நம்மிடமிருந்து களைய உறுதியேற்போம். உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் இணைந்து உழைக்க முன்வருவோம். இவ்வுலகப் புகழையும், மகிமையையும் அதிகாரத்தையும் விரும்பாதது தம் அரசு என்று இயேசு வெளிப்படையாகக் காட்டுவதைக் காணும் நாம், பிறருக்கு ஆற்றும் பணியில் மகிழ்ச்சி காண்போம்.
அமைதி,
சுதந்திரம் மற்றும் வாழ்வின் முழுமையை விரும்பும் நாம் ஒவ்வொருவரும் நம் இதய அரியணையில் இயேசுவை அரசராக அமர வைத்து, உண்மைக்குச் சான்று பகர்ந்து, நீதிக்குக் குரல் கொடுக்கும் கிறிஸ்து அரசரின் ஆட்சிக்குரிய மக்களாக வாழ விண்ணக அரசியாம் அன்னை மரியா நமக்கு உதவி புரியட்டும். சிறப்பாக, இன்று தங்கள் உலக நாளைக் கொண்டாடும் இளைஞர்கள் கிறிஸ்துவின் தலைமைத்துவத்தை ஏற்று, எதிர்காலத்தில் நல்ல தலைவர்களாக இவ்வுலகைக் கட்டியெழுப்ப வேண்டும் என அனைத்துலக அரசராம்
கிறிஸ்துவிடம் மன்றாடுவோம்.