2024-ஆம் ஆண்டு புனித சவேரியாரின் உடல் விசுவாசிகளின் பார்வைக்கு நவம்பர் 21 முதல் கீழே இறக்கி வைக்கப்பட்டுள்ளது. 472 ஆண்டுகள் ஆகியும் அழியாத உடல், இந்தியத் திரு அவையை அழியாத, ஆழமான, அர்ப்பணமுள்ள விசுவாசத்தில் வளர்த்திருக்கிறது. இந்த அழியாத உடல் பேசும் தெய்வீகத் தியாகத்தை அறிந்து, உணர்ந்து, வணங்கி விசுவாசத்தில் வேரூன்றுவோம். இப்புனிதரைப் போல இறை-மனிதத் தோழமை உறவு, பங்களிப்பு, நற்செய்திப் பணியிலும் வளர்ந்திடுவோம்!
அழியாத ஆன்மாவும்
அழியாத
உடலும்: உடல்
அழிவது இயற்கை; ஆன்மா அழியாதது என்பது நம்பிக்கை. ஒரு
சிலர் தாங்கள் செய்த தியாகச் சேவையால் அழியாத உடலைப் பெற்று திரு அவையின் நம்பிக்கைக்குச் சாட்சியாகின்றனர். 472 வருடங்கள் கடந்தும் உடல் அழியா வரம் பெற்ற புனிதர் தூய சவேரியார். நம் தாய்த் திருநாடு இவரின் தியாகச் சேவையையும், அழியாத உடலையும் பெற்றிடக் கொடுத்து வைத்திருக்கிறது. இந்த அழியா உடலுக்கு அப்பால், அவர் செய்த தியாகங்கள் நமது உடலையும் உதிரத்தையும் உலுக்கிப் போடுகிறது.
துறவு வாழ்வில்
தியாகம்:
ஸ்பெயின் நாட்டில் நவாரே
என்ற ஊரில் 1506, ஏப்ரல் 7-ஆம் தேதி அரண்மனையில் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இவர், 1534-ஆம் ஆண்டு இயேசு சபையைத் தொடங்குவதில் புனித இஞ்ஞாசியாரோடு சேர்ந்து முக்கியப் பங்கு வகித்தவர். புனித இஞ்ஞாசியாரிடமிருந்து நேரடியாகப் பெற்ற ஆன்மிகப் பயிற்சிகள் வழியாகத் தான் பெற்ற தெய்வீகத் தியாகமே இவரது அழியாத உடலின் அடித்தளமானது. இயேசு சபையில் சேர்ந்து முற்றிலும் ஏழ்மையில் இயேசுவைப் பின்பற்றுகிறார். இவரிடம் இருந்த சொத்தே பாடுபட்ட சுரூபம், குருக்களின் கட்டளைச் செபம், மாற்று உடை, குறிப்பேடு மட்டுமே.
கீழ்ப்படிதலைப்
பொருத்தமட்டில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன், புனித இஞ்ஞாசியாருக்கு இவர் எழுதிக் கொடுத்தது யாதெனில், “உலகின் எந்தப் பகுதியில் நான் இருந்தாலும், என் தலைவர் இஞ்ஞாசியாருக்கு எல்லாவற்றிலும் நான் கீழ்ப்படிவேன் என்றும், அத்தோடு இன்னும் இரண்டு வார்த்தைப்பாடுகளின்படி தவறாமல் நடப்பேன்”
என்பதுமாகும்.
கற்பு வார்த்தைப்பாட்டைப் பொறுத்தமட்டில் புனித இஞ்ஞாசியார் இட்டக் கட்டளைக்கு முழுமையாக எந்நேரத்திலும், எச்சூழ்நிலையிலும் தயாராக இருந்ததே துறவு வாழ்வில் தியாகத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
தோழமையில் தியாகம்: புனித இஞ்ஞாசியாருக்குக் கிடைத்த முதல் தோழமை புனித பீட்டர் பேபரும், புனித சவேரியாரும். புனித இஞ்ஞாசியார், புனித பீட்டர் பேபரிடம் மரியாதை வைத்திருந்தார் என்றால், புனித பிரான்சிஸ் சவேரியாரிடம் பாசமும், அதிக அன்பும் கொண்டிருந்தார். தன்னைவிட 15 வயதிற்குக் குறைவாக இருந்தாலும், சக தோழமையின் ஆழம்,
அகலம் அதிகமாகவே இருந்தது. புனித இஞ்ஞாசியார் இவரைத் தனது செயலராகவும், உற்ற நண்பராகவும் வைத்திருந்தார். 1530 முதல் 1535 வரை இவர்களிடமிருந்த ஆழமான தோழமை தனக்குப் பின் சரியான தலைவராகக்கூட இவரை நினைத்திருக்கலாம். புனித சவேரியாரைப் பற்றி பல இடங்களில் இஞ்ஞாசியார்
புகழ்ந்து பேசியிருக்கிறார்.
புனித
சவேரியாருக்கு மட்டும் இஞ்ஞாசியார் எழுதிய கடிதங்களில் ‘இயேசு சபைத் தலைவர்’ என்று குறிப்பிடாமல், ‘இனிகோ’ என்று செல்லமாக, பாசமாக, தனது கையொப்பத்தை வைத்து எழுதுகிறார். 1540-ஆம் ஆண்டு புனித இஞ்ஞாசியார்
இந்தியாவுக்குச் சவேரியாரை அனுப்பிட அழைப்பு விடுத்தவுடன், ‘உடனே தயார்’ என்று சொல்லிப் புறப்படுகிறார் சவேரியார். இங்கு புனித இஞ்ஞாசியார் தனது இதயத்தைக் கிழித்தது போன்ற உணர்வு இருந்ததாகச் சொல்கிறார். தன் தோழர் புனித இஞ்ஞாசியாருக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு என்று வந்தாரோ, அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பு. அதன்பின் இருவரும் இறுதிவரை சந்திக்கவே இல்லை. இதயங்கள் உடைய உதயமானதுதான் இந்தியத் திரு அவை.
பணிவாழ்வில் தியாகம்:
உரோமையில் 1537, ஜூன் 24 -ஆம் தேதி அன்று வெனிஸ் மறைமாவட்ட ஆயரால் புனித இஞ்ஞாசியாருடன் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் புனித சவேரியார். 1534, ஆகஸ்டு மாதம் முதல் இவர் செய்த பணி நோயாளிகளின் படுக்கைகளை ஒழுங்குபடுத்தி, அவர்களைக் குளிப்பாட்டி உணவூட்டி விடுவது, சிறுநீர் மற்றும் மலச்சட்டிகளைத் துப்புரவு செய்வது, தரையைப் பெருக்கி சுத்தம் செய்வது, ஆதரவற்று இறந்தவர்களுக்குக் கல்லறை தோண்டி, அவர்களை அடக்கம் செய்வது, இரவில் நோயாளிகளுக்குப் பக்கத்தில் கண்விழித்து உதவுவது போன்றவை. கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இப்பணிகளைச் செய்யும் அளவிற்கு மிகுந்த தாழ்ச்சியையும், தியாகத்தையும் பெற்றிருந்தார்.
மறைபரப்புப்
பணிக்காக கோவா
வந்தடைந்த நம் புனிதர் கால்நடையாகவே தன் பணியைச் செய்கிறார். அவர் நடந்தது மட்டும் இலட்சக்கணக்கான மைல் தூரம். திருமுழுக்குக் கொடுத்துக் கொடுத்து கைகள் வலிப்பதாகக் கடிதம் எழுதுகிறார். திருத்தந்தையின் தூதராக வந்தவர் இங்கே மிக ஏழ்மையில் பணிசெய்துள்ளார். அதற்குச் சாட்சியாக மணப்பாடு குகைக்கோவிலில் உருவாகும் நன்னீர் ஊற்று இன்றும் சான்று பகர்கிறது.
ஜப்பானிலிருந்து
சவேரியார் எழுதிய கடிதம் ஒன்றில் “என் தந்தைக்குப் பெரும் நன்றியுணர்வோடு மண்டியிட்டு எழுதுகிறேன். கடவுளின் சித்தத்தை அறியவும், துணிவோடு அதைச் செயல்படுத்தவும் செபிக்கும்படி தங்களை வேண்டுகிறேன். நீவிர் வாழ்க! - வெகு தொலைதூர நாடு கடந்து வாழும் தங்களின் மிகச்சிறிய மகன்” என்று குறிப்பிடுகிறார். இறுதியாக, சீனாவில் பணியாற்ற விரும்பி சாங்சோங் தீவில் இருந்தபோது உடல் நலக்குறைவால் 1552, டிசம்பர் 3-ஆம் தேதி இறைப்பதம் அடைந்தார். 46 வயதில் இறைபதம் அடைந்து அழியா உடல் பெற்ற இவர் புனித இஞ்ஞாசியாருக்கு மிஞ்சிய சீடனாகிறார்.