திருவிவிலியமும் திருமரபும் நமக்குப் பல நோன்புகளைக் கற்றுத்தருகின்றன. உண்ணா நோன்பு, புலால் நோன்பு, ஊடக நோன்பு, சொல் நோன்பு வரிசையில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய மற்றொரு நோன்பு உடலின்ப நோன்பு. என்ன வியப்பாய் இருக்கிறதா? திருவிவிலியத்தையும், திரு அவை வரலாற்றையும் நோக்கும்போது நம் வியப்பு மறைந்து, ஊக்கம் பிறக்கிறது.
திருமணத்தைக்
கடவுளே ஏற்படுத்தினார். எனவே, திருமணம் புனிதமானது. “திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள்” (எபி
13:4) என்கிறது திருமறை. இயேசுவும், “கணவனும் மனைவியும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவரல்லர், ஒரே உடல்”
(மாற்கு 10:8) என்று திருமண உறவை ஏற்பிசைவு செய்தார்.
இறைமொழியின்
ஒளியில் கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வியும் திருமணத்தால் ஏற்படும் உடலுறவை ‘உயர்ந்தது, மேன்மையானது’ என்கிறது.
மேலும், திருமண உடலுறவு இன்பம் மற்றும் மகிழ்ச்சியின் ஊற்று என்றும், திருமண இணையர்கள் உடலிலும், உள்ளத்திலும் இன்பமும், மகிழ்ச்சியும் அனுபவிக்க வேண்டும் என்பது கடவுளின் ஏற்பாடு என்றும் சொல்கிறது (கதிம எண்: 2362).
இருப்பினும்,
சில வேளைகளில் தேவையை முன்னிட்டு மண இணையர்கள் உடலின்பத்தையும்
மறுக்கலாம், ஒத்திப்போடலாம். இதுவே உடலின்ப நோன்பு எனப்படுகிறது.
தொடக்க
காலக் கிறித்தவர்களுக்குப் பவுலடியார் கொடுத்த அறிவுரைகளுள் உடலின்ப மறுப்பு பற்றியும் பேசியுள்ளார். “மண வாழ்க்கைக்குரிய உரிமைகளை ஒருவருக்கொருவர்
மறுக்காதீர்கள். இருவரும் ஒத்துக்கொண்டால் இறைவேண்டலில் ஈடுபடுவதற்காகச் சிறிது காலம் பிரிந்து வாழலாம். ஆனால், உணர்ச்சிகளை அடக்க முடியாத நிலையில் சாத்தான் உங்களைச் சோதிக்காதபடி, பிரிந்த நீங்கள் மீண்டும் கூடி வாழுங்கள்”
(1கொரி 7:5-6) என்பது அவரது வியப்புக்குரிய பரிந்துரை. எனவே, இறைவேண்டல் செய்வதற்காகவோ, தவத்தின் அடையாளமாகவோ அல்லது குறிப்பிட்ட தேவைக்காக மன்றாடும்போது, ஒரு தியாகமாகவோ இருவரும் மனமொத்து உடலின்ப நோன்பைக் கடைப்பிடிப்பது சிறப்பானது.
தோபித்து
நூலில் இத்தகைய ஒரு காட்சியைக் காண்கிறோம். இரகுவேலின் மகளான சாரா ஏழு முறை திருமணமாகி, முதலிரவிலேயே அசுமதேயு என்னும் அலகை மணமகனைக் கொன்றுவிடுவதால், ஏழு முறையும் கைம்பெண்ணாகி விடுகிறார். இறைவனின் திருவுளத்தால் தோபித்தின் மகனான தோபியா சாராவைத் திருமணம் செய்ய முன்வருகிறார். ஆனால், இதற்கு முன்பு நடந்தவைகளை அறிந்ததனால், மணமக்கள் இருவரும் தங்கள் முதலிரவில் இறைவேண்டல் செய்கிறார்கள்.
“எங்கள் மூதாதையரின் இறைவா போற்றி!” என்று இறைப்புகழ்ச்சியோடு தொடங்கி, “என்மீதும், இவள்மீதும் இரக்கம் காட்டும். நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை இணைபிரியாது வாழச் செய்யும்”
என்று மன்றாட்டில் முடிக்க, இருவரும் “ஆமென், ஆமென்”
(தோபி 8:4-8) என்று இறைவேண்டலை நிறைவு செய்தனர். உடலின்பத்தைத் தியாகம் செய்து, இறைவேண்டல் செய்ததனால், கடவுள் அவர்களுக்கு நிறைவான ஆசிகளை வழங்கினார்.
திருமண
வாழ்வின் சிக்கல்கள் பற்றிய உரையாடலின்போது இயேசுவின் சீடர்கள் “கணவர்-மனைவியர் உறவுநிலை இத்தகையது என்றால், திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள். அதற்கு இயேசு, “அருள்கொடை பெற்றவரன்றி
வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவுகொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக்கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” (மத்
19:10-12) என்றார்.
உடலின்ப
மறுப்பு ஒரு திருவிவிலிய மதிப்பீடு, இறையாட்சியின் ஓர் அடையாளம். “உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. அவர்கள் விண்ணகத் தூதரைப் போல் இருப்பார்கள்” (மத்
22:30) என்பது இயேசுவின் கூற்று.
இத்தாலியிலுள்ள
பொம்பெயி செபமாலை அன்னை திருத்தலத்தைத் தோற்றுவித்து, பேராலயமாகக் கட்டியெழுப்பி, அதைத் திருத்தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு, இறுதிவரையில் செபமாலை பக்தியைப் பரப்பியவர் பர்த்தோலோ லோங்கோ என்னும் பொதுநிலையினர். தன் இளம் வயதில் வழக்கறிஞர் பணியை விட்டுவிட்டு, மரியன்னை பக்தியைப் பரப்பும்போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கைம்பெண்ணான சீமாட்டி மரியானா. இருவரையும் பற்றித் தவறான செய்திகள் பரவியபோது, திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களின் அறிவுரையின்படி 1885 -ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், திருமண உறவில் ஈடுபடாமல், கற்பு நிலையைக் கடைப்பிடித்தனர் என்னும் வியப்பான செய்தியை அவர்களது வரலாறு பதிவு செய்துள்ளது. 1980 -ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் பர்த்தோலோ லோங்கோவை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.
இறையாட்சியின்
பொருட்டு உடலின்பத்தைத் துறக்கும் துறவியர், அருள்பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அந்தப் பேற்றின் ஒரு பகுதியைத் திருமணம் செய்தவர்களும் உடலின்ப நோன்பின் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம். தம் இறைவேண்டலும், அருள்வாழ்வும் வலிமை அடைய வேண்டுமென்றால் மண இணையர்கள் உடலின்ப
நோன்பையும் கடைப்பிடிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். “கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன்” (1பேது 5:2) செய்யும் எதையும் கடவுள் மகிழ்வுடன் ஏற்கிறார்.
இறைவேண்டல்
வலிமையடைய வேண்டுமென்றால் நோன்பை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது திருவிவிலியமும், திரு அவை மரபும் நமக்குக் கற்றுத் தரும் பாடம். தியாகமற்ற வேண்டல் வீரியம் குறைந்தது. எனவே, நமது இறைவேண்டலோடு அனைத்து நோன்புகளையும் இணைத்துக்கொள்வோமாக!