டிசம்பர் மாதம் என்றாலே நம் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். காரணம், நாம் கொண்டாடும் கிறிஸ்து பிறப்பு விழா. கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாட நான்கு வாரங்கள் நாம் தயாரிக்கிறோம். எதற்காக? ஆண்டவருடைய முதல் வருகையைப் பொருள் உணர்ந்து ஆடம்பரமாகக் கொண்டாடி, நாம் எல்லாரும் உண்மையாகவே விண்ணகம் நோக்கிய பயணத்தில் ஆர்வமாகப் பயணிப்பதற்காக.
நம்
கடவுள் வாக்கு மாறாதவர். இன்று மனிதர்கள் தாங்கள் கொடுத்த வாக்கை மீறலாம் அல்லது ஒருவர் மற்றவரை ஏமாற்றலாம். ஆனால், கடவுள் ஒருபோதும் எவரையும் ஏமாற்றக்கூடியவர் அல்லர். இஸ்ரயேல் மக்களைத் தனிப்பட்ட அன்பினால் தேர்ந்தெடுத்த ஆண்டவர், அவர்கள் பாவம் செய்த போதும் அவர்களைத் திருத்துவதற்காகவே கண்டித்தார். ‘எல்லாம் முடிந்துபோய் விட்டது; இனிமேல் வாழ்வு இல்லை’ என்று நினைத்தபொழுது இறைவாக்கினர்கள் வழியாக நம்பிக்கையின் செய்தியை ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்தார். “இதோ! நாள்கள் வருகின்றன. அப்போது இஸ்ரயேல் வீட்டாருக்கும், யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்” (எரே
33:14) என்கிறார். நமக்கும் ஆண்டவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்.
பல
வேளைகளில் நாம் மனமுடைந்து போயிருக்கலாம். ‘ஆண்டவர் மறந்துவிட்டாரோ’ என்று
நினைத்திருக்கலாம். ஆண்டவர் நம்மை மறப்பாரோ? ஒருபோதும் நம்மை அவர் மறக்கமாட்டார். “அந்நாள்களில் நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்” (எரே
33:15) என்கிறார் ஆண்டவர்.
நமக்கு
நிகழும் அநீதியைக் குறித்து அல்லது நேர்மை இல்லாத செயல்களைக் குறித்து நாம் கவலை கொள்ளலாம். ஆண்டவர் மெசியாவைப் பிறக்க வைக்கிறார். தாவீதிலிருந்து ஒளிர்கின்ற தளிர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துதாம். அவரே நீதியை நிலைநாட்டுவார். ‘ஆண்டவர் என்னைக் கைவிடமாட்டார்; என் ஆண்டவர் நல்லவர்; என் ஆண்டவர் வல்லவர். அவரையே நம்பி இருப்பேன். தம்முடைய வாக்குறுதிகளை எனக்கு நிறைவேற்றுவார். நீதி பெருகச் செய்வார். நேர்மையை நிலைநாட்டுவார். பாதுகாப்புடன் நான் இருப்பேன்’
என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள இந்தத் திருவருகைக் காலம் நம்மை அழைக்கின்றது.
திருவருகைக்
காலத்தின் முதல் வாரத்தில் நமக்குக் கொடுக்கப்படுகின்ற செய்தி: “திகிலா? அச்சமா? உடல்நலனைக் குறித்த கவலையா? குழந்தைகளைக் குறித்த வேதனையா? ஆண்டவரைப் பற்றிக்கொண்டிரு! இதோ நாள்கள் வருகின்றன. நான் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்” என்று
சொல்கிறார் ஆண்டவர்.
இரண்டாவது
செய்தி, முதல் மூன்று வாரங்கள், அதாவது ஏறக்குறைய 16-ஆம் நாள் வரைக்கும் வல்லமையோடு வரப்போகும் ஆண்டவரின் இரண்டாம் வருகை குறித்து ஆவலோடு எதிர் கொள்ள எப்பொழுதும் தயாராய் இருக்க வேண்டும் என்பதாகும். இறுதித்தீர்ப்பு, உலக முடிவு, ஆண்டவரின் இரண்டாம் வருகை குறித்து நிச்சயமாகப் பலருக்கும் அச்சம் உருவாகலாம். ஏனென்றால், மானிட மகனின் வருகையின் போது, “கடலில் கொந்தளிப்பு ஏற்படும்; மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர்; வான்வெளிக்கோள்கள் அதிரும்; இயற்கையில் சீற்றங்கள் ஏற்படும்”
என்றெல்லாம் நற்செய்தியாளர் லூக்கா சொல்கிறார் (லூக் 21:25,26).
ஆனால்,
கடவுளைப் பற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு
அவர் சொல்லும் செய்தி, “நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” (லூக்
21:28) என்பதே. கடவுள்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர் நல்லதை மட்டுமே செய்வார். எனவே, அன்றாடக் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். இவர்களே ஆண்டவர் வரும் வேளையில் தலைநிமிர்ந்து நிற்பவர். அவர்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடங்களைச் செய்த குழந்தைகள் ஆசிரியர்களைக் கண்டு அச்சப்படாமல் இருப்பதுபோல, குடும்பங்களில் அன்பைப் பேணுதல், பிள்ளைகளை நன்றாக வளர்த்தல், முதியோரைப் பராமரித்தல் போன்ற அன்றாடக் கடமைகளைச் செய்யும்போது இறுதி நாளைக் குறித்து நாம் கவலைகொள்ளத் தேவையில்லை.
எனவே,
“உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” என
எச்சரிக்கும் இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்”
(லூக் 21:34-35) என்கிறார்.
இன்று
அலைப்பேசியின் பயன்பாட்டால் அருகில் இருப்பவர்களோடு உரையாட மறந்துவிடுகிறோம். இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையால் அமைதியை இழந்துவிடுகிறோம். தேவைகளைப் பெருக்கிக்கொள்ள ஆசைப்படுகிறோம்.
இன்று
மூன்று செயல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க ஆண்டவர் அழைப்பு விடுக்கிறார்:
1. குடிவெறி,
2. களியாட்டம், 3. உலகைப் பற்றிய கவலை. இதற்கு மாற்றாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று செயல்கள்: 1. விழித்திரு, 2. செபித்திரு, 3, ஆண்டவருக்காய் ஆவலுடன் காத்திரு என்பதாகும். அதாவது நம் குழந்தைகளைக் குறித்தும், வாழும் வாழ்க்கை முறையைக் குறித்தும் எப்பொழுதும் விழிப்பாய் இருக்க வேண்டும். இயேசு தம் வாழ்நாளில் செபத்திற்கு நேரத்தை ஒதுக்கியதுபோல, நாமும் செபத்திற்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். செபமின்றி வெற்றி இல்லை!
“இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் குற்றமின்றி தூய்மையாக இருக்கவேண்டும். கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையைக் கற்றுக்கொள்ள வேண்டும்”
(1தெச 3:12; 4:1). தூய்மையான உள்ளத்தோடு அவருக்காகக் காத்திருக்க வேண்டும். எனவே, கடவுள் நம்மேல் அன்பாய் இருப்பது போல, நாமும் ஒருவர் மற்றவர்மேல் அன்பாய் இருப்போம். நம்மைச் சந்திக்க வரும் ஆண்டவரை அவருக்குகந்த வாழ்க்கையோடு, அன்பு நிறைந்த செயல்களோடு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்தோடு அவரைச் சந்திக்க விழிப்புடன் காத்திருப்போம்.