news-details
சிறப்புக்கட்டுரை
உலக ஏழையர் தினம்-நவம்பர்-17

ஏழைகளின் அழுகுரலை வசப்படுத்தும் ஆண்டவர்!

திருத்தந்தையின் சிந்தனைத் தாக்கம்

திரு அவை கொண்டாடும் எட்டாவது ஏழைகள் ஞாயிறுக்கான (17.11.2024) செய்தி மடலில்ஏழைகளின் வாயினின்று எழும் விண்ணப்பம் கடவுளின் செவிகளை எட்டும் (சீராக் 21:5) என்பதை  மையச் சிந்தனையாகத்  திருத்தந்தை தந்திருக்கிறார்.

நமது இறைவேண்டல் இறை சன்னிதானத்தை அடையும் என்பது கிறித்தவர்களின் எதிர்நோக்கு. அதிலும் ஏழையின் இறைவேண்டல் நிச்சயம் இறைவனைச் சேரும். ஏழைகளுக்காக நாமும் மன்றாடும்போது, அவர்களின் துன்பங்களில் ஒன்றிக்கிறோம் என்பதையும் திருத்தந்தை இந்தச் சுற்றுமடல் வழியாகத் தெளிவுபடுத்துகிறார்.

சீராக் ஆசிரியர் பென்சீரா எருசலேமில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானமுள்ள மனிதர். தன்னுடைய ஞானத்தேடல் பயணத்தில்இறைவனின் இதயத்தில் ஏழைகள் சிறப்பிடம் பெறுகிறார்கள்என்கிற அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறார். ஏழைகளுக்கு நீதி வழங்கும் வரை பொறுமையின்றி இறைவன் இருக்கிறார் என்பதையும் பதிவு செய்கிறார்.

தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை. உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை; அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார். ஆண்டவர் காலம் தாழ்த்தமாட்டார் (சீராக் 35:17-19).

அக்கறையுள்ள தந்தையாய் கடவுள் இருப்பதால் பிள்ளைகளின் துயரங்களை அறிகிறார். ஏழைகள், விளிம்புநிலையினர், துயரப்படுவோர், மறக்கப்பட்டோர் அனைவரின் நிலைகளையும் உணர்ந்து பாதுகாக்கிறார். கடவுளின் கண்களில் நாம் ஏழைகளாய் இருப்பதால் அவரது இதயத்துக்கு நெருக்கமானவர்களாக மாறிவிடுகிறோம்.

கடவுளின் முன்பு நாம் அனைவரும் பிச்சைக்காரர்கள் என்பதை மறந்து, தலைவர்கள் போல பலர் நம்மைக் காட்டிக்கொள்கிறோம். பெரியவன், பெயர் பெற்றவன், சொத்துகளுக்கு அதிபதி என்று அடையாளப்படுத்துகின்ற இந்த உலகில், ஏழைகளின் உரிமைகளையும் மாண்பையும் மதிக்காமல் இங்கு எவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆற்றல் மிக்க தலைவர்கள் என்று நினைத்துப் போர்களை ஏற்படுத்தும் ஆணவமிக்கத் தலைவர்கள் கடவுளின் பார்வையில் ஏழையராகத்தான் இருக்கிறார்கள்.

போர் தளவாடங்களால் எவ்வளவு மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்? எவ்வளவு அப்பாவி மக்கள் பலியாகிறார்கள்? இவர்களும் இறைவனின் சாயலாக நமக்குத் தெரியவேண்டும்; நமது ஆதரவை அவர்கள் பெறவேண்டும்ஒவ்வொரு கிறித்தவரும் ஏழையின் விடுதலைக்காக, வளர்ச்சிக்காக, கடவுளின் கருவிகளாக இருக்குமாறு அழைக்கப்பட்டுள்ளோம். ஏழைகளின் அழுகுரலை வசப்படுத்தவும் கவனத்தோடு கேட்கவும், அவர்கள் உதவிக்கு வரவும் வேண்டுகிறது (நற்செய்தியின் மகிழ்ச்சி, 187).

இறைவேண்டல் ஆண்டில் ஏழைகளின் இறைவேண்டல் நமதாகவும், அவர்களோடு இணைந்து வேண்டுவதும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இன்று ஏழைகள் அனுபவிக்கிற மிக மோசமான நிலை என்பது அவர்களுக்கு ஆன்மிகக் கவனத்தைக் கொடுக்காததுதான். கடவுளின் நட்பை, இறையாசிரை, வார்த்தையை, அருளடையாளங்களின் கொண்டாட்டத்தை இறைநம்பிக்கையில் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிகொண்ட ஒரு பயணத்தை அவர்களுக்கு அளிக்கத் தயங்கக்கூடாது. ஏழைகளுக்கான தனிக்கவனம் அவர்களுக்குச் சிறப்பான சமயப் பராமரிப்பாக மாறவேண்டும் (நற்செய்தியில் மகிழ்ச்சி, 200)

ஏழை என்பதை ஏற்றுக்கொள்ளத் தாழ்ச்சி மிகவும் தேவை. “உண்மையான ஏழையாக வாழ்வதே சமூகத்தில் நல்லதுஎன்கிறார் புனித அகுஸ்தினார். ஊதாரி மகனைப் போல, ஏழையர் கடவுளின் இரக்கமிகு அன்புக்காக ஏங்கி நிற்கிறார்கள். கடவுள் அவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்னும் உறுதிப்பாட்டில் ஏழையர் நிலைத்திருக்கிறார்கள்.

நமது வேண்டுதல் கேட்கப்படாதபோது கடவுள் அக்கறையற்றவர் என நினைத்துவிடக்கூடாது. மாறாக, அவரது விருப்பத்திற்கு நம்மை நாம் கையளிக்க முன்வர வேண்டும். “இறைவனின் நீதித்தீர்ப்பு ஏழைகளுக்கு உரித்தானது (சீராக் 21:5) என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். வறுமையில்தான் எதிர்நோக்கின் பாடல் புலப்படும். எப்போதெல்லாம் நமது உள்ளார்ந்த வாழ்வு  சுயநல விருப்புகளால் நிறைந்திருக்கிறதோ அப்போது பிறருக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு இடம் இருப்பதில்லை; கடவுளின் குரல் கேட்கப்படுவதும் இல்லை; நன்மை செய்வதற்கான விருப்பமும் மங்கி விடுகிறது (நற்செய்தியில் மகிழ்ச்சி, 2).

ஏழைகளின் உடனிருப்பை உணர்த்தும் அற்புதமான நாள் இந்த நாள். ஏழையரின் இறை விண்ணப்பத்திற்கு நாம் செவிசாய்த்துச் செயல்பட இந்த நாள் அழைப்பு விடுக்கிறது. ஏழைகளுக்காகச் செவிமடுக்கும் மனிதர்களுக்காக நன்றி சொல்வோம். அன்னை தெரேசா ஏழை எளியவருக்காக அவர்களின் துன்பத்தில் கூடவே நின்று பணியாற்றியதற்கு இறைவேண்டலும் ஓர் அடிப்படைக் காரணம் என்பதையும் நாம் மறக்கக் கூடாது என்பதையும் திருத்தந்தை இங்கே நினைவூட்டுகிறார்.

உறுதியான செயல்பாடு இல்லாத இறைவேண்டல் வீணானது. “நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும் (யாக்கோபு 2:17). உண்மையான இறைவேண்டல் அனுதினமும் இல்லை என்றால், நமது செயல்கள் வெறுமையான ஒன்றாகவே மாறிவிடும் (திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்).

பிரான்சிலிருந்து உரோமைக்குத் திருப்பயணியாக வந்த புனித பெனடிக்ட் ஜோசப் அவர்கள் துறவற இல்லங்களின் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டாலும், ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தவர். ‘கடவுளின் நாடோடிஎன்று அழைக்கப்பட்டவர். நற்கருணை முன் அதிக நேரம் செலவிட்டவர். புதிய ஏற்பாட்டையும், ‘கிறிஸ்துவழி வாழ்வுஎன்ற புத்தகத்தையும் ஆழமாய்ப் படித்து, தன் வாழ்வையே செபமாகக் கடவுள் முன் உயர்த்தி நின்றவர் இந்தப் புனிதர்.

எதிர்நோக்கின் திருப்பணிகளாகப் பயணிக்கும் நாம் அன்பின் சிறிய காரியங்களில் கவனம் செலுத்துவோம் (மகிழ்ந்து களிகூறு, 145). தேவையில் இருக்கும் மனிதர்களைக் கடந்து போகாமல், அவர்களை நின்று சந்திப்போம்; அவர்களை அரவணைப்போம்; புன்னகைப்போம்; ஆறுதலின் வார்த்தைகளை உதிர்ப்போம். இந்த அர்ப்பணமிகு செயல்பாடுகளுக்கு இறைவேண்டல் மிக அவசியம். போர்களால் சூழப்பட்ட உலகில் அமைதிக்காக மன்றாடுவோம். இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஏழைகளின் நண்பர்களாய் வாழும் நிலையை உருவாக்குவோம்.

ஏழைகளின் கன்னிஎன்று  பெல்ஜியம் நாட்டின் பேனக்ஸில் தன்னை அறிமுகப்படுத்திய அன்னை மரி ஏழைகளோடு தோள் கொடுக்கும் நம் பயணத்திலும் உடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் ஏழைகள் ஞாயிறை ஏழைகளோடு இணைந்து ஏழைகளாகக் கொண்டாடுவோம்.