ஊடக நோன்பு வேண்டல்
காலத்தின் அறிகுறிகளை உய்த்துணர்ந்து, அதற்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ள அழைப்பு விடுத்தது ‘இன்றைய உலகில் திரு அவை’ என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கொள்கைத் திரட்டு. அதற்கேற்ப நமது வாழ்விலும், இறைவேண்டலிலும் தேவையான மாற்றங்களைச் செய்வது நம் கடமையாகும்.
நமது
இறைவேண்டல் வாழ்வில் உண்ணா நோன்பு, புலால் நோன்பு இரண்டையும் நூற்றாண்டுகளாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால், நாம் வாழும் இந்நாள்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு நோன்புதான் ஊடக நோன்பு (Media Fast).
தொலைக்காட்சி,
அலைப்பேசி, சமூக ஊடகங்கள் அனைத்திலும் எத்தனையோ நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது. நமது திரு அவையின் நற்செய்திப் பணியே ‘மாதா தொலைக்காட்சி’ மற்றும்
சமூக ஊடகங்கள் வழியாக வெற்றிகரமாக நடைபெறுவது நாம் அறிந்ததே. இருப்பினும், அவற்றின் தீமைகளும் பெரியதே.
இன்று
தொலைக்காட்சி, அலைப்பேசி, இணையதளம், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்கள் போன்றவற்றுக்குப் பலரும், குறிப்பாக இளையோர் அடிமையாகி, ‘இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது’ என்ற
நிலைக்கு வந்துவிட்டனர். அந்நிலையிலிருந்து அவர்களால் மீள முடிவதில்லை. மேலும், இவை அறநெறிக்கும், ஒழுக்கத்திற்கும் மாறான செய்திகளையும், காணொளிகளையும், திரைப்படங்களையும் கொண்டுவந்து நமது மனத்தையும், மனச்சான்றையும் மாசுபடுத்துகின்றன. தவறுகளை நியாயப்படுத்துகின்றன. ‘எல்லாரும் செய்கிறார்கள், நான் செய்தால் என்ன?’ என்னும் மனநிலை வளர்கிறது. வாழ்வியல் சிக்கல்கள் பல நேர்கின்றன. குடும்ப
உறவுகள் சிதைகின்றன. அனைத்திற்கும் மேலாக, தனியாகவும், குடும்பமாகவும் இறைவேண்டல் செய்வதற்கு ஊடகங்களே பெரும் தடையாக இருக்கின்றன. எனவே, நாம் ஊடக விழிப்புணர்வு கொண்டு கவனமாக இருக்க வேண்டும் என்பதனை ஊடகங்களே நமக்குச் சொல்லித் தருகின்றன. தலை சிறந்த ஊடகமாகிய திருவிவிலியம் இவை பற்றியெல்லாம் நம்மை எப்போதோ எச்சரித்துவிட்டது. மானிட மகன் வரும் நாள் பற்றி கூறிய இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காத வாறும் எச்சரிக்கையாய் இருங்கள்”
(லூக்கா 21:34) என்று மொழிந்தார். இன்றைய ஊடகங்களைப் பயன்படுத்துகின்றவர்களுடைய உள்ளங்கள் மந்தம் அடைகின்றன என்னும் மாபெரும் ஆன்மிக-உளவியல் உண்மையை ஆண்டவர் இயேசு நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
எனவே,
இன்றைய நாள்களில் நமக்குத் தேவையான ஒரு நோன்பு ஊடக நோன்பு. “அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்” (1தெச
5:21-22) என்று அறிவுறுத்துகிறது இறைமொழி. எனவே, சமூக ஊடகங்களை நாம் பயன்படுத்தும் விதம் குறித்து ஆய்வு செய்து, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நல்லதைப் பற்றிக்கொண்டு, தீமையை விலக்க ஊடக நோன்பைக் கடைப்பிடிப்போம்.
வெள்ளிதோறும்
ஊடக மறுப்பு. இயேசுவின் இறப்பைக் குறிக்கும் வெள்ளிக் கிழமைகளில் நாம் ஏதேனும் ஒறுத்தல் செயல்களைச் செய்ய ஊக்குவிக்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி. எனவே, வெள்ளிதோறும் உண்ணா நோன்பு, புலால் நோன்பு இவற்றுடன் ஊடக நோன்பையும் கடைப் பிடிக்கலாம். தொலைக்காட்சிப் பெட்டியை அன்றைய நாள் முழுவதும் மூடிவிடலாம். திறன் பேசியைப் பணி தொடர்பாக (Ousibess calls) மட்டுமே
பயன்படுத்தி, சமூக அழைப்புகளைத் (Social calls) தவிர்க்கலாம்.
தகவல் தொடர்புக்காக அன்றி விளையாடுவதற்கோ, காணொளிக் காட்சிகளைப் பார்ப்பதற்கோ, சமூகத் தளங்களின் வழி நச்சுக்கருத்துகளைப் பரப்புவதற்கோ அலைப்பேசியைப் பயன்படுத்தாது பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறே,
வெள்ளிதோறும் இணையதளம் பயன்படுத்தாமை, தகவல் தொடர்புக்கு மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துவது, ஆபாசத் தளங்களை அறவே தவிர்ப்பது போன்றவற்றின் வழியாக இணையதள நோன்பையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். “இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன்” (திபா
101:3) என்று சூளுரைத்த இறையடியார்போல, நாமும் இழிவான நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி, அலைப்பேசி, இணையதளம் வழியாகக் கண்ணுறாமல் நம்மைக் காத்துக்கொள்வோமாக!
இறைவேண்டல்
வாழ்வுக்கும், ஊடக நோன்புக்கும் நேர்மறையான தொடர்பு உள்ளது. ஊடக மறுப்பைக் கடைப்பிடித்து, ஊடக நோன்பு பெருகப் பெருக, இறைவேண்டல் ஆர்வம் கூடுவதை உணரலாம். இறைவேண்டலுக்கான நேரம் அதிகரிக்கும். நம் மனத்திலும், ஆன்மாவிலும் ஊடகத்தின் தாக்கம் குறைவதால், நம் இறைவேண்டலின் தரமும் அதிகரிக்கும். ஊடகப் பயன்பாடு குறையக் குறைய உறவுகள் மேம்படுவதால், நம் வாழ்வும் வளம்பெறும்.
“இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக. அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்”
(உரோ 12:2) என்னும் இறைமொழியை இதயத்தில் ஏற்று, இன்றைய காலத்திற்குத் தேவையான தொலைக்காட்சி நோன்பு, அலைப்பேசி நோன்பு, இணையதள நோன்பு என்னும் முப்பெரும் ஊடக நோன்புகளைக் கடைப்பிடித்து, நம் அருள்வாழ்வையும், ஆளுமையையும் மேம்படுத்திக்கொள்வதே விழிப்படைந்தோருக்கான வெற்றியின் செயல்.