2. மரியா இறைவனின் கன்னித்தாய்
(Mary is the Virgin Mother of God)
நாள்: 13 செப்டம்பர்
1995
தொடக்கத்திலிருந்தே
திரு அவையானது மரியாவின் கன்னித் தாய்மையை அதாவது, அவர் தூய ஆவியாரால் கருத்தரித்ததை அங்கீகரித்து வருகின்றது.
1. ‘இறைத்திட்டத்தில் திரு அவை’ என்ற
சங்க ஏட்டில் திருச்சங்கமானது, “தலைவராகிய கிறித்துவோடும், அவருடைய தூயோர் அனைவரோடும் ஒன்றித்து, நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறித்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு, நம்பிக்கை கொண்டோர்கள் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும்”
(இறைத் திட்டத்தில் திரு அவை, எண். 52) என்று கூறுகின்றது. இச்சங்க ஏடானது இந்த வார்த்தைகளை உரோமைத் திருப்பலியிலிருந்து பயன்படுத்துகின்றது. இதன் வழியாக மரியாவினுடைய இறைத்தாய்மையின் மீதான நம்பிக்கை கிறித்தவச் சிந்தனையில் முதல் நூற்றாண்டுகளிலிருந்து எவ்வாறு உள்ளது என்பதை வலியுறுத்துகிறது.
புதிதாகப்
பிறந்த திரு அவையில் மரியா ‘இயேசுவின் தாய்’ என்ற பெயரோடு நினைவுகூரப்படுகின்றார். திருத் தூதர் பணிகள் நூலில் அதன் ஆசிரியராகிய தூய லூக்காவும் நற்செய்திகளில் சொல்லப்பட்டிருப்பதோடு மிகவும் பொருந்தக் கூடிய பெயராகிய இந்தப் பெயரையே கொடுக்கின்றார். மாற்கு நற்செய்தியாளருடைய விவரிப்பின்படி, “இவர் மரியாவினுடைய மகன்
அல்லவா?” என நாசரேத்து ஊரார்
வியக்கின்றனர் (மாற் 6:3). மேலும், “இவருடைய தாய் மரியா அல்லவா?” (மத்13:55) என்பதுதான் மத்தேயு நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற கேள்வியாக இருக்கின்றது. மரியாவின் தாய்மை திரு அவையையும் தொடர்புபடுத்துகின்றது
2. சீடர்களுடைய
பார்வையில் விண்ணேற்பிற்குப் பின் அவர்கள் கூடி வந்தபொழுது ‘இயேசுவினுடைய தாய்’ என்ற பெயர் அதனுடைய முழு அர்த்தத்தையும் பெறுகின்றது. அவர்களைப் பொறுத்தவரை மரியா ஒரு தனித்துவமான நபர். மரியா மனுக்குலத்தினுடைய மீட்பரைப் பெற்றெடுப்பதற்கெனத் தனிப்பட்டதோர் அருளைப் பெற்றிருந்தார். அவர் நெடுங்காலமாக இயேசு அருகிலேயே வாழ்ந்தார். மேலும், அன்புச் சீடருக்கும், அவர் வழியாக ஒட்டுமொத்த திரு அவைக்கும் ஒரு ‘புதிய தாய்மையை’
கொண்டு வர சிலுவையில் அறையப்பட்ட
இயேசு கிறிஸ்துவால் கல்வாரி மலையில் மரியா அழைக்கப்படுகின்றார்.
இவைகளினால்
இயேசுவை நம்புகிறவர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு ‘இயேசுவினுடைய தாய்’ என்பது ஒரு வணக்கத்திற்குரிய மற்றும் பெருமைக்குரிய பெயராகும். மேலும், இத்தகைய பெயர் திரு அவையினுடைய வாழ்விலும், நம்பிக்கையிலும் என்றும் நிலைத்திருக்கும். குறிப்பாக, இந்தப் பெயரின் வழியாக இயேசுவின் மனித இயல்புக்கு ஏற்ப, ஆவியில் அவரைப் பெற்றெடுத்த பெண்ணின் பங்கை ஒப்புக்கொள்ளாமல் அவருடைய தோற்றத்தைக் குறிப்பிட முடியாது என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.
அவருடைய
தாய்மைப் பங்கு திரு அவையினுடைய பிறப்பையும் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறு, இயேசுவினுடைய வாழ்வில் மரியாவினுடைய பங்கை
நினைத்துப் பார்க்கையில், நம்பிக்கையாளர்கள் அவர்களுடைய சொந்த ஆன்மிகப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் அவருடைய உன்னதமான உடனிருப்பைக் கண்டு கொள்வர்.
3. தொடக்கத்திலிருந்தே,
திரு அவையானது மரியாவினுடைய கன்னித் தாய்மையை அங்கீகரித்தது. இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள் மரியாவினுடைய கன்னித்
தாய்மையை நாம் புரிந்துகொள்ள உதவுவதால், தொடக்ககால கிறித்தவக் குழுமங்கள், மீட்பருடைய கருத்தரிப்பு மற்றும் பிறப்பு நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத சந்தர்ப்பங்களைப் பற்றிய மரியாவின் நினைவுகளைச்
சேகரித்தனர். குறிப்பாக, கிறித்து பிறப்பு அறிவிப்பு பற்றிய தொகுப்பானது உயிர்த்த கிறித்துவின் மண்ணுலக வாழ்வின் தொடக்கத்தோடு தொடர்புடைய நிகழ்வுகள் பற்றிய ஆழமான அறிவைப் பெறவேண்டுமென்ற சீடர்களுடைய விருப்பத்திற்குப் பதிலளிக்கின்றது. இதன் இறுதிப் பகுப்பாய்வில், தூய ஆவியாரின் செயல்பாட்டின் வழியாகக் கன்னி கருத்தரிப்பின் மறையுண்மையின் திருவெளிப்பாட்டினுடைய தோற்றத்தில் மரியா இருக்கின்றார்.
இயேசுவின்
இறைத்தோற்றத்தைக் காட்டும் இந்த மறையுண்மையானது, அதன் முக்கியத்துவத்திற்காக முதல் கிறித்தவர்களால் உடனடியாகப் புரிந்துகொள்ளப்பட்டது மற்றும் அவர்களின் நம்பிக்கையின் முக்கிய உறுதிமொழிகளில் சேர்க்கப்பட்டது. சட்டத்தின்படி யோசேப்பின் மகனாகிய இயேசு, உண்மையில் தூய ஆவியின் தலையீட்டால் பிறந்ததனால், தமது மனித இயல்பில் மரியாவினுடைய மகன்
மட்டுமே; ஏனென்றால், அவர் மனிதனின் பங்களிப்பு இல்லாமல் பிறந்தவர்.
இயேசு
இறைவனுடைய மகன் என்னும் தன்மையைக் கொண்டிருந்தார். இவ்வாறு மரியாவினுடைய கன்னித்தன்மை
ஒரு தனிப்பட்ட மதிப்பைப் பெறுகிறது என்பதற்கு கன்னிப் பிறப்பே அடையாளமாக இருப்பதால், இயேசுவினுடைய பிறப்பானது அவர் இறைமகன் என்ற மறையுண்மைக்கு ஒரு
புதிய வெளிச்சத்தைத் தருகின்றது.
திரு
அவைத் தந்தையர்களுடைய நம்பிக்கையினால் அறிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட கன்னித் தன்மையை, நாம் ஒருபோதும் இயேசுவினுடைய அடையாளத்திலிருந்து பிரிக்க முடியாது. கன்னி மரியாவிடமிருந்து பிறந்ததினால் உண்மையான கடவுள் மற்றும் உண்மையான மனிதன் என்று நீசேன் நம்பிக்கை அறிக்கையில் நாம் அறிவிப்பதைப் போன்று மரியா மட்டுமே தாயாக இருக்கின்ற ஒரு கன்னியாகின்றார். நாசரேத்து கன்னியினுடைய தனிச்சிறப்புமிக்க இணை-உடனிருத்தலானது இந்த இரண்டு கொடைகளால் (தாய் மற்றும் கன்னி) கிறித்தவர்கள் அவருடைய தாய்மையைக் கொண்டாடி மரியாவை ‘கன்னி’ என்றழைக்க இட்டுச் செல்கின்றது.
இவ்வாறு,
மரியாவினுடைய கன்னித்தன்மையானது,
ஆண்டவரால் அழைக்கப்பட்ட அனைவராலும் வாழப்பட வேண்டிய கன்னிமை வாழ்வு என்பது கிறித்தவக் குழுமத்தில் பரவுவதற்கான தொடக்கத்தைத் தருகின்றது.
கிறிஸ்துவின்
முன்மாதிரியில் அதன் உச்சத்தை அடையும் இந்தச் சிறப்பு அழைப்பானது ஒவ்வொரு காலகட்டத்திலும் மரியாவில் உத்வேகத்தையும் மாதிரியையும் காண்கின்ற அளவிட முடியாத ஆன்மிகச் செல்வத்தைத் திரு அவைக்குத் தருகின்றது. இறைமக்கள் பக்தியின் வெளிப்பாடே ‘இறைவனின் தாய் மரியா.’
4. ‘இயேசு கன்னி
மரியாவிடமிருந்து பிறந்தார்’
என்ற நிலைப்பாடானது, ஏற்கெனவே இந்த நிகழ்வின் ஒரு வெளிப்படையான மறையுண்மையை வெளிப்படுத்துகின்றது. இயேசுவினுடைய இறை மகனுக்கான மறையுண்மையில் மட்டுமே இதை மிக முழுமையாக நாம்
காணமுடியும். மரியாவினுடைய இறைத்தாய்மையின்
மறையுண்மையானது இந்தக் கிறித்தவ நம்பிக்கைக் கோட்பாட்டிற்கு மைய வாக்கியமாக நெருக்கமான முறையில் இணைந்திருக்கின்றது. அவர் ‘உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக’ இருக்கின்ற வார்த்தை மனுவுருவானவருடைய தாய் ஆவார்.
‘இறைவனின் தாய்’ என்ற பெயரானது ஏற்கெனவே மத்தேயு நற்செய்தியில் ‘இம்மானுவேலின் தாய்’ அதாவது ‘கடவுள் நம்மோடு’
(ஒப்பிடுக. மத் 1:23) என்று அதற்கு இணையான ஒரு பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக நடந்த தொடர் சிந்தனைகளுக்குப் பிறகே கொடுக்கப்பட்டது. எகிப்தில் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவர்கள்தான் மரியாவை தேயோடோகோஸ் (Theotokos), அதாவது ‘இறைவனின் தாய்’ என்று அழைத்தனர்.
கிறித்தவ
மக்களின் பக்தியில் மிகவும் பரவலாக எதிரொலிக்கின்ற இந்தப் பெயரோடு மரியா அவருடைய உண்மையான தாய்மை நிலையில் பார்க்கப்படுகின்றார். அவருடைய மனித இயல்பிற்கு ஏற்றாற்போல கன்னித் தன்மையில் யாரைப் பெற்றெடுத்து தாயன்போடு வளர்த்தாரோ, அந்த இறைமகனின் தாயாக மரியா இருக்கின்றார். இவ்வாறு, மனித குலத்தின் தலைவிதியை மாற்றியமைக்க வந்த இயேசுவினுடைய மனித வளர்ச்சியில்
மரியா தமது பங்கை அளிக்கிறார்.
5. மிகவும்
குறிப்பிடத்தக்க வகையில், மரியாவுக்கான மிகப் பழமையான செபமான ‘உமது பாதுகாவலின் கீழ்’
‘Sub Tuum Praesidium’ என்ற
பாடலில் மரியா ‘Theotokos’ அதாவது ‘இறைவனின் தாய்’ என்ற பெயரினால் அழைக்கப்படுவதைக் காணலாம். இந்தப் பெயர் உண்மையிலேயே இறையியலாளர்களுடைய சிந்தனையிலிருந்து வந்த ஒன்று அல்ல; மாறாக, கிறித்தவ மக்களுடைய இறைநம்பிக்கையின் உந்துதலிலிருந்து வந்த ஒன்றாகும். இயேசுவை யாரெல்லாம் கடவுளாக ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் மரியாவை ‘இறைவனின் தாய்’ என்று அழைக்கின்றனர். மேலும், வாழ்க்கையின் சோதனை நேரங்களில் அவருடைய வல்லமைமிக்க உதவியைப் பெறுவதில் நம்பிக்கை வைக்கின்றனர்.
கி.பி. 431-இல் எபேசு நகரில் நடந்த திருச்சங்கம் அதிகாரப்பூர்வமாக மரியாவுக்கு ‘இறைவனின் தாய்’ என்ற கோட்பாட்டை உண்மைக் கடவுளாகவும், உண்மை மனிதனாகவும் இருக்கின்ற ஒரே ஆளான கிறித்துவைக் குறிக்கின்ற வகையில் வரையறை செய்தது.
திரு
அவை மரியாவின் தாய்மையில்
கொண்டிருக்கின்ற நம்பிக்கையைத் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே ‘இயேசுவின் தாய்’,
‘கன்னித் தாய்’ மற்றும் ‘இறைவனின் தாய்’ என்ற இந்த மூன்று பெயர்களில் விவரிக்கின்றது. அதாவது, மரியாவினுடைய தாய்மையானது மனுவுருவாதல் என்ற மறையுண்மையோடு மிக நெருங்கிய விதத்தில் இணைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. இவை கிறிஸ்துவினுடைய அடையாளத்தை வரையறுக்க உதவக்கூடிய மற்றும் மக்களுடைய பக்தியோடு இணைக்கப்பட்ட கொள்கையினுடைய உறுதிப்பாடுகள் ஆகும்.
மூலம்:
Pope John Paul II, Mary is the Virgin Mother of God, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 20 September 1995, p. 7.