news-details
ஆன்மிகம்
அறிவும் ஆன்மிகமும் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 6)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச் செல்வன்: தந்தையே, 2000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பூமியில் வாழ்ந்த இயேசு, தமது மீட்புச் செயலை இன்றும் அருளடையாளங்கள் வழியாகச் செய்து கொண்டிருக்கிறார் என்று நீங்கள் சொன்னது, இந்த வாரத் திருப்பலியில் நான் ஆர்வத்தோடும் கவனத்தோடும் பங்கெடுக்கத் தூண்டுகோலாக இருந்தது.”

அருள்பணி:எட்வர்டு ஸ்கிலபெக்ஸ் (Edward Schillibeeckx) என்பவர் ஒரு புகழ்பெற்ற இறையியலாளர். அவரது புத்தகங்கள் இரண்டின் தலைப்புகள் இதோ: ) ‘அருளடையாளங்களில் கிறிஸ்துவைச் சந்தித்தல் (The Sacraments as an Encounter with Christ). ) ‘கிறிஸ்து: கடவுளைச் சந்திப்பதற்கான அருளடையாளம் (Christ, the Sacrament of the Encounter with God). இந்த இரு தலைப்புகளையும் கூர்ந்துநோக்கினால் ஓர் உண்மை புலப்படும். அருளடையாளங்களை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும்போது நாம் கிறிஸ்துவைச் சந்திக்கிறோம். கிறிஸ்துவைச் சந்திப்பது என்பது கடவுளைச் சந்திப்பதாகும்.”

அகஸ்டின்:தந்தையே, நீங்கள் சொன்ன இந்தக் கருத்தைப் பற்றி என் நண்பர்களோடு நான் பகிர்ந்துகொண்டிருந்தேன். அதாவது நம் எல்லா வழிபாடுகளின் மையம் அங்குக் குடியிருக்கின்ற கிறிஸ்துவின் பிரசன்னம் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது என் நண்பன் ஒருவன், ‘அகஸ்டின், இதை நீ நம்புகிறாயா? 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து இருந்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இப்பொழுது ஆலயத்தில் இருக்கிறார் என்று சொல்வதை உன் அறிவு ஏற்றுக் கொள்கிறதா?’ என்ற கேள்வியைக் கேட்டான். அவனுக்கு எப்படிப் பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.”

கிறிஸ்டினா:என் தோழிகளுக்கும் எனக்கும் இதே சந்தேகம் இருக்கிறது தந்தையே! ஆலயத்திலும், அருளடையாளக் கொண்டாட்டங்களிலும் கிறிஸ்து பிரசன்னமாயிருக்கிறார் என்று சொல்வது எங்கள் அறிவுக்குப் புறம்பானதாகத் தெரிகிறது.”

மார்த்தா: இப்படித்தான் பாதர்! இவங்க இரண்டு பேரும் சேரக்கூடாத சேர்க்கைகளோடு சேர்ந்து, கேட்கக்கூடாத கேள்விகளையெல்லாம் கேட்டு, செய்யக்கூடாத காரியங்களையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கிறாங்க. ‘கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா?’, ‘கிறிஸ்து நற்கருணையில் இருக்கிறாரா?’ போன்ற குதர்க்கமான கேள்விகளை, யாரோ நாத்திகத்தனமாகக் கேட்கிறதை இவர்களும் நம்பி, அதே கேள்விகளைக் கேட்டு கோவிலுக்கு வருவதற்குத் தயங்குறாங்க. மதம் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஏன் பாதர் அறிவை நுழைக்கிறாங்க? சொல்லிக் கொடுப்பனவற்றை அப்படியே நம்பிவிட்டுப் போவதுதானே!”

அருள்பணி:அகஸ்டின், கிறிஸ்டினா... நீங்க இரண்டு பேரும் இங்கு நாம் விவாதிக்கும் கருத்துகளை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொண்டு, அது குறித்த கேள்விகளை எழுப்புவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இது உங்களிடம் இருக்கின்ற தேடலையும், திறந்த மன நிலையையும், ஆர்வத்தையும் சுட்டிக் காண்பிக்கிறது. இத்தகைய தேடலும் திறந்த மனமும், ஆர்வமும் இறைவனை உணர்வதற்கான அடிப்படைக் காரணிகள்!”

மார்த்தா:என்ன பாதர் சொல்றீங்க! மதம் குறித்த நம்பிக்கைகளை இவர்கள் கேள்விக்குட்படுத்துவதைச் சரி என்று சொல்கிறீர்களா?”

அருள்பணி:மார்த்தா, ஆன்மிகத்தைப் பொறுத்த அளவில், நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டவற்றை அப்படியே கண்மூடித்தனமாக நம்புவதை நாம்சரிஎன்று சொல்லிவிட முடியாது. அது ஒருவிதமான மூடநம்பிக்கைக்கு (fideism) இட்டுச் சென்றுவிடும். அறிவிற்கு இடம் கொடுக்காத நம்பிக்கை விரைவில் மூடநம்பிக்கையாக மாறிவிடும். எனவே, ஒருசில கேள்விகளை எழுப்புவது நல்லது. அது நம் வழிபாட்டு நிகழ்வுகளைக் குறித்த தெளிவுகளை நாம் பெற உதவும்.”

அன்புச் செல்வன்:ஒரு கிரேக்கக் கதை என் ஞாபகத்திற்கு வருகிறது தந்தையே! ஹோமர் என்ற உலகப் புகழ்பெற்ற கிரேக்க எழுத்தாளர் தனதுஒடிசி (Odyssey) என்ற புத்தகத்தில் இக்கதையை எழுதுகிறார். கிரேக்கர்கள் ட்ராய் (Troy) என்கின்ற நகரை வெற்றிகொள்வதற்காக அதை முற்றுகையிட்டனர். ஆனால், ட்ராய் நகரைச் சுற்றி இருந்த கோட்டை மிகவும் வலுவானதாக இருந்ததன் காரணமாக, கிரேக்கர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக இந்த முற்றுகை தொடர்ந்தது. இச்சூழ்நிலையில், கிரேக்கப் படை ஒரு சூழ்ச்சி செய்தது. ட்ராய் நகரத்தவரின் கடவுள் நம்பிக்கையைத் தங்களது சார்பாகப் பயன்படுத்த முடிவெடுத்தது. ஒரு பெரிய மரக்குதிரையைச் செய்து, அதற்குள் கிரேக்கப் படைவீரர்கள் ஒரு சிலரை வைத்து மூடினர். அக்குதிரையின்மீதுகடவுளின் கொடைஎன்கின்ற வார்த்தைகளை எழுதி, ட்ராய் நகர வாயிலின் அருகில் ஓரிரவு வைத்து விட்டு, கிரேக்கப் படையினர் பின்வாங்கிவிட்டனர். மறுநாள் காலை ட்ராய் நகர காவல்வீரர்கள் எதிரிகளின் படை பின்வாங்கியிருப்பதையும், கோட்டையின் நுழைவாயிலுக்கு அருகே பெரிய மரக்குதிரை இருப்பதையும் பார்த்தனர். தங்களது தெய்வம்தான் எதிரிகளைப் பின்வாங்கச் செய்ததோடு, மரக்குதிரையைக் கொடையாக வானிலிருந்து அனுப்பியிருக்கிறது என்று நம்பினர். எனவே, மேளதாளத்துடனும், ஆரவாரத்துடனும் அக்குதிரையைத் தங்களது நகருக்குள் எடுத்துச் சென்றனர். இரவில் ட்ராய் நகர மக்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், மரக்குதிரைக்குள் இருந்த கிரேக்கப் படைவீரர்கள் வெளியே வந்து கோட்டையின் கதவுகளைத் திறக்க, கிரேக்கப் படை ட்ராய் நகரத்துக்குள் புகுந்தது. அந்நகர் தீக்கிரையாக்கப்பட்டது.”

அருள்பணி:மனித உறவாக இருந்தாலும் சரி, கடவுள் உறவாக இருந்தாலும் சரி, அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து பாராமல் அப்படியே நம்புவது சரியானதாக இருக்க முடியாது.”

கிறிஸ்டினா:தந்தையே, நீங்கள் எங்கள் பக்கம்!”

அருள்பணி:அதேநேரத்தில், எல்லாவற்றையும் கேள்வி கேட்டு, அதற்கு அறிவுப்பூர்வமான, தீர்க்கமான பதில்கள் கிடைத்தால்தான் ஏற்றுக் கொள்வேன் என்று சொல்கின்ற அணுகுமுறையும் சரியானதாக இருக்க முடியாது.”

அகஸ்டின்:அதில் உள்ள பிரச்சினை என்ன தந்தையே?”

அருள்பணி:இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும் நாம் நம் அறிவின் உதவியோடுதான் புரிந்துகொள்கிறோம். பிரச்சினை என்னவென்றால் நம் அறிவுக்கு எல்லைகளும் வரையறைகளும் உண்டு. வாழ்க்கை என்பது அறிவை விட மேலானது. வாழ்க்கை என்கின்ற மிகப்பெரிய கட்டடத்தில், அறிவு என்பது ஓர் அறை மட்டுமே! எனவே, நம் மனத்தால் எல்லாவற்றையும் சரியாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள இயலாது. ஆன்மிகமும் சரி, உறவுகளும் சரி, நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. எனவே, அவற்றை அறிவால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்கின்ற அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

(தொடரும்)