நவம்பர் மாதம் இறந்தவர்களைப் பற்றி மட்டும் அல்ல; நம் இறப்பைப் பற்றிச் சிந்திக்கவும் உகந்த மாதம்.
பெரிய
விருந்துகளுக்காகக் கூடியிருக்கும்போது, நான் உடன் இருப்பவர்களிடம், “வாங்க, சாப்பிட்டுச் சாவோம்” என்று சொல்வதுண்டு. இந்தச் சாதாரண ஜோக்கிற்கு அருள்பணியாளர் நண்பர்கள் மட்டும் சிரிப்பார்கள். மற்றவர்கள் குறுகுறுவெனப் பார்ப்பார்கள்... ‘என்ன பேச்சு இது?!’ என்பது மாதிரி.
சாவு
பற்றி நாம் பொதுவாக அதிகம் பேசுவதில்லை. நம் குடும்பங்களில் பெரியவர்கள் யாராவது, ‘அடுத்த ஆண்டு நான் இருக்கின்றேனோ? இல்லையோ?’ என்று ஆரம்பித்தால், உடனே
மற்றவர்கள், ‘சும்மா இருங்கள். இது மாதிரி எல்லாம் பேசாதீர்கள்’ என்று
செல்லமாகக் கண்டிப்பதைக் கேட்டிருப்போம் (அதற்கு அர்த்தம் ‘வெறுமனே சொல்லாதீங்க, செய்து காட்டுங்கள்’ என்பது).
ஆங்கிலத்தில் ‘taboo topics’ என்று சொல்வார்கள். இறப்பு ஒரு தடை செய்யப்பட்ட தலைப்பு. அது தொடர்புடைய பேச்சுகள் ஒரு ‘தீக்குறி’
(அபசகுனம்) என்று பார்க்கப்படுகிறது.
இறப்பு
என்ற சொல்கூட நேரடியாகச் சொல்லப்படுவதில்லை. ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்ல ‘காலமானார்’,
‘இயற்கை எய்தினார்’,
‘அமரரானார்’, ‘இறைவனடி
சேர்ந்தார்’ என்று
தமிழில் எத்தனை மறைமுகச் சொல்லாடல்கள்! ஆங்கிலத்திலும் இதுபோல நிறைய உள்ளன. இறப்பைப் பற்றிப் பேசாமலும், சிந்திக்காமலும், அந்தச் சொல்லை உதிர்க்காமலும் இருப்பதாலேயே, இறப்பு நமக்கு நேராமல் செய்து விடலாம் என்று மனிதன் ஆசைப்படுகிறான். இதையெல்லாம் சட்டை செய்யாமல், இறப்பு
தன் பாட்டிற்கு வந்து போய்க்கொண்டிருக்கிறது.
இறப்பைப்
பற்றி எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமான மன நிலை அல்ல;
அதுபோல, இறப்பை ஒரேயடியாக மறுதலித்து, அது இல்லவே இல்லை என்பதுபோல நடந்துகொள்வதும் சரியல்ல.
எல்லா
விசயங்களிலும் இயேசுதாம் நமக்கு முன்மாதிரி. இறப்பு விசயத்தில் கூட! இயேசு
தமது இறப்பைப் பற்றிச் சிந்தித்தாரா? ஆம், சிந்தித்தார். மூன்று
முறை அவர் தம் இறப்பை முன்னறிவித்தார் என்று நற்செய்திகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பிலிப்பு செசாரியா பகுதியில், முதல் முறையாக இயேசு தமது சாவு குறித்துச் சொன்னபோது, பேதுரு நம் வீட்டு ஆள்கள் போல, “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது”
(மத் 16:22) என்று கடிந்துகொள்கிறார். ‘இது என்ன தீக்குறி பேச்சு? ஒரு தலைவர் இப்படிப் பேசலாமா?’ இயேசுவின் சாவு குறித்த உரையாடல்கள் திருத்தூதர்களை அந்தரங்கமாகப் பதற்றத்திற்கு உள்ளாக்கின. அதை அவர்கள் இரசிக்கவில்லை. ஆனால், இயேசுவின் சொல்லிலும் செயலிலும் அவரின் இறப்பு குறித்த ஒரு நிதான விழிப்புணர்வும், தயார் நிலையும் இருந்ததை நம்மால் காண முடிகிறது. “இக்கோவிலை இடித்துவிடுங்கள்; நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்று
யோவான் 2:19-இல் அவர் சொல்கிறார். மரியா, இலாமிச்சை என்னும் நறுமணத்தைலத்தைக் கொண்டு வந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதைக் கூந்தலால் துடைத்த அன்புச் செயலை, தம் இறப்புக்கான தயாரிப்பு என விளக்கினார். “மரியாவைத்
தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்” (யோவா
12:7). விரைவில் வரவிருக்கின்ற இறப்பு குறித்த விழிப்புணர்வே அவரைத் தீயாகச் செயல்பட வைத்தது. எந்த ஓர் இடத்திலும் அவர் நிலைகொள்ளவில்லை. தேவையற்ற மனமகிழ் நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்கவில்லை. “இன்றும், நாளையும், அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!” (லூக் 13:33) என்றார்.
திருப்பாடலாசிரியர்
இறப்பு குறித்துத் தயக்கமில்லாமல் பேசுகிறார். வாழ்வின் நிலையற்ற தன்மை குறித்த ஒரு தெளிவான எண்ணம் அவரிடம் இருந்தது. “ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும். அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன்.
என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுள்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை” என்று
திருப்பாடல் 39:4-5 சொல்கிறது. மற்றோர் இடத்தில்,
அவர் மனிதரின் வாழ்வை வயல்வெளி மலர்களுக்கு ஒப்பிடுகிறார். “மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது”
(திபா 103:15-16).
மனிதரின்
ஆயுள் குறித்து ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருப்பாடல் ஆசிரியர் சொன்னது, இந்த நவீன மருத்துவ யுகத்திற்கும் பொருந்துவது ஓர் இனிக்காத ஆச்சரியம். “எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது”
(திபா 90:10). யாரும்
சாவைத் தவிர்க்க முடியாது என்பது திருப்பாடல்களில் அடிக்கடி வலியுறுத்தப்படும் ஓர் உண்மை. “என்றும் சாவைக் காணாமல் இருப்பவர் எவர்? பாதாளத்தின் பிடியினின்று தன்னைக் காத்துக்கொள்பவர் எவர்?” (திபா 89:48). இந்த விரற்கடை அளவு வாழ்வு குறித்த தரிசனம்தான் திருப்பாடல் ஆசிரியரைக் கடவுளுக்குரிய செயல்களில் தீவிரமாகச் செயல்படத் தூண்டியது. இரவில் கூட அவருக்கு ஆண்டவர் குறித்த சிந்தனைதான். “நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்” (திபா
63:6).
திரு
அவையின் புனிதர்கள் எல்லாருமே இறப்பு குறித்து ஆழமாகச் சிந்தித்துள்ளார்கள். இறப்பின் நிச்சயத்தன்மை அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கம் செலுத்தியிருக்கிறது.
கிறித்தவக்
கலைபடைப்புகளில் மண்டை ஓடு இறப்பின் நினைவூட்டலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலத்தீனில்
‘memento mori’ என்று சொல்வார்கள் - அதன் அர்த்தம், ‘Remember that you must die.’ குறைந்தது
ஏழு புனிதர்களின் ஓவியங்களிலாவது நாம் ஒரு மனித மண்டை ஓட்டைக் காணலாம். திருவிவிலியத்தை
இலத்தீனுக்கு மொழிபெயர்த்த புனித ஜெரோம், தனது எழுது மேசையில் ஒரு மண்டை ஓட்டை வைத்திருந்தாராம். அது அவருடைய எல்லாப் படங்களிலும் விழித்துக்கொண்டு ‘ஜம்’மென்று உட்கார்ந்துள்ளது. சில ஓவியங்களில் மகதல மரியா ஒரு மண்டை ஓட்டை மடியில் வைத்திருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளார். புனித பிரான்சிஸ் அசிசியார் ஆங்கிலத்தின் ‘T’ என்கிற
எழுத்து வடிவத்தில் இருக்கும் ‘Tau’ சிலுவையைத்தான்
கையெழுத்து போல பயன்படுத்தினார். ஒருமுறை சகோதரர் லியோவுக்கு பிரான்சிஸ் எழுதிய வாழ்த்து மடலில் ‘தாவ்’ சிலுவையோடு, ஒரு மண்டை ஓட்டையும் வரைந்து கொடுத்தாராம்.
திருத்தந்தை
ஏழாம் அலெக்சாண்டர், கி.பி.1655-1667 காலகட்டத்தில்
ஆட்சி செய்தவர். உரோமையில் பேதுரு
பசிலிக்காவின் முன் உள்ள பிரமாண்டமான கல்தூண் வரிசையை (colonnade) அமைத்தவர் இவரே. அறிவாளி. எழுத்தாளர். கவிஞர். இவர் பிரபலச் சிற்பி பெர்னினியிடம் (Bernini) சொல்லி,
ஒரு சவப்பெட்டியையும், பளிங்கால் ஆன ஒரு மண்டை
ஓட்டையும் செய்து வாங்கிக்கொண்டாராம். சவப்பெட்டி அவர் படுக்கையறையில் இருந்தது. பளிங்கு மண்டை ஓடு எழுது மேசையில் உட்கார்ந்திருந்தது. அவர் திருத்தந்தையாக இருந்த காலத்தில் ஒரு வருடம் ஆண்டு தியானம் வழங்க வந்த அருள்பாணியாளர் ஏழாம் அலெக்சாண்டரிடம், “திருத்தந்தை அவர்களே, இந்தத் தியானத்தில் நான் எது குறித்துப் பேச வேண்டும்?” என்று கேட்டார். அலெக்சாண்டர்
அவரிடம், “The last four things” என்று கூறினாராம். நான்கு கடைசி விசயங்கள் என்றால் என்ன? இறப்பு, தீர்ப்பு, நரகம், விண்ணகம்!
மண்டை
ஓட்டின்மீது காதல் கொண்டிருந்த நவீன காலத் திரு அவை ஆளுமைகளில் முக்கியமானவர் முத்திப்பேறுபெற்ற ஜேம்ஸ் அல்பெரியோனே. இத்தாலி நாட்டு அருள்பணியாளர். 20-ஆம் நூற்றாண்டுக்காரர். தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் நற்செய்தி அறிவித்தலைச் சிறப்பு அழைத்தலாகக் கொண்டு செயல்படும் ஏழு பெரிய தனித்தனிச் சபைகள் கொண்ட ‘Pauline Family’ - பவுலைன் குடும்பத்தைத் தோற்றுவித்தவர். அல்பெரியோனேவின் எழுது மேசையில் எப்போதும் ஒரு மண்டை ஓடு இருந்ததாம். அல்பெரியோனே தோற்றுவித்த நிறுவனங்களில் ஒன்று, பவுலின் புதல்வியர் சபை. அண்மையில் இந்தச் சபையின் ஓர் அமெரிக்க உறுப்பினர் அருள்சகோதரி தெரசா நோபல் அலத்தெயா என்பவர் பற்றி இணையத்தில் வாசித்தேன்.
நோபல்
பதின்ம வயதில் கடவுளை நம்பாதவராக வாழ்ந்தவர். ஒரு பெரும் மனமாற்ற நிகழ்வுக்குப் பின்பு, பவுலின் புதல்வியர் சபையில் சேர்ந்து அருள்சகோதரி ஆனார். ‘Memento mori’ - சிந்தனை
அவரைக் கவர்ந்தது. தன்
நிறுவுநரின் முன்மாதிரியால் தூண்டப்பட்டு, இவரும் ஒரு பீங்கான் மண்டை ஓட்டை வாங்கி தன் மேசையில் வைத்து, இறப்பு குறித்து சிந்திக்கத் துவங்கினார். பின்னர் தன் எண்ணங்களை விளையாட்டு போல Twitter-இல் (தற்போது
X) பதிவிட,
நிறையப் பேர் பின்தொடர ஆரம்பித்தார்கள். விரைவிலேயே சிஸ்டர் நோபலின் சிந்தனைத் துண்டுகள் ஆயிரக்கணக்கான பேரால் பகிரப்பட்டு ‘வைரல்’ ஆயின. இந்த ஆர்வம் சிஸ்டர் நோபலே எதிர்பாராதது. சபையின் இதர சகோதரிகள் ஆதரவோடு நோபல் இதில் தீவிரமாக ஈடுபட்டு, ‘Memento Mori: A Lenten Devotional’, ‘Memento Mori: Prayers on the
Last Things’, ‘Memento Mori Journal’ போன்ற ஆன்மிக மற்றும் இறைவேண்டல் ஏடுகளைக் கொண்டு வந்தார். அதோடு அவர் அறிமுகப்படுத்திய மண்டை ஓடு படமும், திருவிவிலிய வார்த்தைகளும் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட், ஸ்டிக்கர்,
காஃபி குவளைகள், மோதிரங்கள் போன்றவை இளம் கிறித்தவர்கள் நடுவில் பிரபலமாகின. இன்று Memento Mori என்பது
ஒரு குறிப்பிடத்தகுந்த ஆன்மிக இயக்கமாக அங்கு வளர்ந்துள்ளது.
உண்மையான
நம்பிக்கையாளர்கள், இறப்பைக் குறித்துச் சிந்திக்க அச்சப்படத் தேவையில்லை என்று சொல்லும் அருள்சகோதரி நோபல், தனக்குப் பிடித்த திருவிவிலிய வார்த்தையாக சீராக்கின் ஞானம் 7:36-ஐ குறிப்பிடுகிறார்.
“எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில் கொள்; அவ்வாறெனில் ஒருபோதும் நீ பாவம் செய்யமாட்டாய்.”
மிகவும்
உண்மை!
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)