news-details
ஞாயிறு மறையுரை
01, டிசம்பர் 2024, திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எரே 33:14-16; தெச 3:12-4:2 லூக் 21:25-28;34-36

மீண்டும் வருவார்... விழிப்புடன் காத்திருப்போம்!

இன்று நாம் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். இந்த ஞாயிறு புதிய திருவழிபாட்டு ஆண்டைத் துவக்கி வைக்கிறது. மூன்றாண்டு சுழற்சியில் நிகழும் திருவழிபாட்டு ஆண்டு அட்டவணையின் மூன்றாவது ஆண்டை ஆரம்பிக்கிறோம்.

திருவருகைக் காலம் அருளின் காலம்! கடவுள் நமக்குச் செய்துள்ள, செய்கின்ற, செய்யவுள்ள வாக்குறுதிகளை நமக்கு நினைவுபடுத்தும் காலம்! நம்பிக்கையை நம் உள்ளங்களில் விதைக்கும் காலம். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “நம்மிடையே குடிகொள்ளும் நோக்கத்தில் வானிலிருந்து இறங்கிவந்த இறைவனின் நெருக்கத்தை அதிகமதிகமாக உணரும் காலம் (ஞாயிறு மறையுரை, 30.11.2020).

திருவருகைக் காலம் என்பது இறைமகன் மனிதரிடையே முதல் முறை வந்ததை நினைவுகூரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் தயாரிப்புக் காலம். அவ்வாறே காலத்தின் நிறைவில் நிகழும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்திருக்க உள்ளங்கள் தூண்டப்படும் காலமும் இதுவே. இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது.

வழிபாட்டு ஆண்டு மற்றும் நாள்காட்டியின் பொது ஒழுங்கு முறைகள்எண்: 39 திருவருகைக் காலத்தின் இரு நோக்கங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது. முதலாவதாக, கிறிஸ்துவின் முதல் வருகையின் நினைவாக ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நம்மைத் தயாரிக்கும் காலமாகவும், இரண்டாவதாக, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நம்பிக்கையோடு எதிர்நோக்கி நம் வாழ்வை மாற்றி அமைத்துக்கொள்ள அருளப்படும் காலமாகவும் திருவருகைக் காலம் அமைகிறது எனக் கூறுகிறது. இவ்வகையில், கிறிஸ்துவின் முதல் வருகையை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த இஸ்ரயேல் மக்களைப் போல், அவரின் இரண்டாம் வருகையைப் புதிய இஸ்ரயேல் மக்களாகிய நாம் எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும் இருந்து எதிர்நோக்க வேண்டும் என்பதே இக்காலத்தின் மையக்கருத்து.

இன்றைய வழிபாட்டு வாசகங்கள் இயேசுவின் இரண்டாம் வருகையை மையப்படுத்தியதாக அமைகின்றது. நம் இதயத்துக்கு நெருக்கமானவர்களின் வருகைக்காகக் காத்திருப்பது போன்ற நெகிழ்ச்சியான அனுபவம் ஏதுமில்லை. இயேசு மீண்டும் வருவார் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளாக நம் மனங்களில் வேரூன்றியுள்ள ஆழமான இறைநம்பிக்கை. நாமும் அதே நம்பிக்கையோடு ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

காத்திருப்பது என்பது விழித்திருப்பது; கதவு திறந்து வைத்திருப்பது. காத்திருக்கும் விதையே மரமாகிறது; காத்திருக்கும் காய்தான் கனியாகிறது. வாழ்க்கை மரணத்திற்காகக் காத்திருக்கிறது; மரணம் வாழ்க்கைக்காகக் காத்திருக்கிறது. நாம் எல்லாரும் யாருக்கோ, எதற்கோ காத்திருக்கிறோம். வாழ்க்கை என்பது காத்திருத்தல்தான். எது தேவையோ அதற்காகக் காத்திருக்கிறோம். எதை நாம் உயர்வாக மதிக்கிறோமா, அதற்காகக் காத்திருக்கிறோம். காத்திருத்தல், எதற்காகக் காத்திருக்கிறோமோ அதன் மதிப்பைக் கூட்டுகிறது. காத்திருத்தல் ஒரு தவம். அதற்கு வரம் கிடைக்காமல் போகாது!” - கவிக்கோ அப்துல் ரகுமானின் வரிகள் இவை.

இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் கிறிஸ்துவின் வருகைக்காக மக்கள் வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்ததை நமக்கு எடுத்தியம்புகின்றன. பாபிலோனியர்கள் எருசலேமைக் கைப்பற்றி 18 மாதங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, கடைசியில் தீயிலிட்டு அழித்ததை எரேமியா இறைவாக்கினர் தன் கண்களால் கண்டார். எருசலேம் நகரமே முற்றிலுமாக அழிந்தது. இந்த அழிவைக் கண்ட மக்கள் அவநம்பிக்கைக் கொண்டனர். இப்படிப்பட்ட அவநம்பிக்கை நிறைந்த சூழலில் இறைவாக்கினர் எரேமியா மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். எசாயா இறைவாக்கினர் வழியாக இறைவன் வழங்கிய வாக்குறுதியை அவர் கட்டாயம் நிறைவேற்றுவார் என்கிறார் (எசா 11:1). ஆண்டவர்மீது நம்பிக்கைக் கொண்ட மக்கள் ஒருபோதும் விரக்தி அடைய மாட்டார்கள். ஏனெனில், ஆண்டவர் துன்பங்களிலிருந்து விடுவிப்பார் என்னும் உறுதியான நம்பிக்கையை அவர் அவர்களுக்குக் கொடுக்கிறார்.

தொடக்கக்கால கிறித்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்ததை இன்றைய இரண்டாம் வாசகம் பதிவு செய்கிறது. ஆண்டவர் விரைவில் மீண்டும் வருவார் என்றும், அப்போது அவரை நம்புவோர் இறைமாட்சியில் பங்கு பெறுவர் என்றும் பவுல் தெசலோனிக்காவில் போதித்திருந்தார். ஆனால், பலர் இயேசுவின் வருகைக்கு முன்னரே இறந்துவிட்ட நிலையில், இறந்தோரின் நிலை என்ன என்ற கேள்வி அவர்களை வருத்தியது. இதன் தொடர்ச்சியாக, தெசலோனிக்கக் கிறித்தவர்களுக்குக் கிறிஸ்துவின் வருகை குறித்த இரண்டு ஐயப்பாடுகள் எழுந்தன. ஒன்று, கிறிஸ்துவின் வருகைக்குமுன் இறந்தவர்கள் கிறிஸ்து வரும்போது நிலைவாழ்வில் பங்கு பெறுவார்களா? மற்றொன்று, எப்போது கிறிஸ்து வருவார்? இவ்விரு ஐயப்பாடுகளுக்கும் பவுல் விடையளிக்கிறார். கிறிஸ்துவின் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து, அமைதியாக உழைக்கப் பணிக்கிறார். கிறிஸ்து திரும்ப வருதல் எந்த நாளில் நிகழும் எனத் தெரியாததால், அவரது வருகைக்காக எப்போதும் தயாராயிருக்குமாறு வேண்டுகிறார். பவுல், கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ தெசலோனிக்கருக்கு அழைப்பு விடுக்கிறார். ஒவ்வொருவரும் தூயவர்களாக வாழ்வதே கடவுளுடைய திருவுளம் என்று அழுத்தமாகப் பேசுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு, மானிட மகனின் வருகையைப் பற்றித் தம் சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார். 2000 ஆண்டுகளாகக் கிறித்தவ வரலாற்றில்இயேசு எப்போது வருவார்?’ என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கின்றது. இயேசு மீண்டும் வருவார் என்பது திண்ணமான உண்மை. ஆனால், அவர் எப்போது வருவார் என்பது தந்தையைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. இயேசுஎனக்கும் தெரியாதுஎன்றே சொல்கிறார். ஆனால், நம் நடுவில் சில கிறித்தவ சபைகள் இயேசுவின் வருகை அண்மையில் உள்ளது எனவும், இயேசுவின் இரண்டாம் வருகையின் நாளையும் நேரத்தையும் துல்லியமாகத் தாங்கள் அறிந்தது போலவும் போதிப்பதைக் கேட்க முடிகிறது. இயேசு தமது இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசும்போது, பல அடையாளங்களைத் தருகிறாரே தவிர, அது எந்த ஆண்டு, எந்த மாதம், நாள், நேரம் என்று எந்த அட்டவணையையும் அவர் தரவில்லை. எனவே, இரண்டாம் வருகைக்கு நாள் குறிக்கும் சபைகளின், போதகர்களின் எண்ணங்கள் நற்செய்திக்குப் புறம்பானவை என்பதை எளிய மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மானிட மகனின் மாட்சிமிகு வருகைக்கு முன் நிகழும் சில அடையாளங்களாக, ‘போலி இறைவாக்கினர்கள் தோன்றி ஏமாற்றுவார்கள் (லூக் 21:8), ‘போர்கள் உருவாகும் (21:9), ‘நிலநடுக்கங்களும் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும் (21:11), ‘அரசு அதிகாரிகளால் துன்பங்கள் எழும் (21:12-19), ‘எருசலேம் படைகளால் சூழப்பட்டு அழிவிற்குள்ளாகும் (21:20-24), ‘உலகிலே மாற்றங்கள் ஏற்படும் (21:25-26) என்றெல்லாம் இயேசு குறிப்பிடுகிறார். அப்போது மானிட மகன் வல்லமையோடும் மாட்சியோடும் மேகங்கள்மீது வருவார் என்கிறார் (21:27-28).

இவ்வாறு, உலக முடிவைப்பற்றி இயேசு குறிப்பிடும்போது, அந்நேரத்தில் இயேசு பதுங்கி ஒளியச் சொல்லவில்லை; தப்பித்து, தலைதெறிக்க ஓடச் சொல்லவில்லை; மாறாக, ‘தலைநிமிர்ந்து நில்லுங்கள்என்று கூறுகிறார். நாம் சந்திக்கப்போவது அழிவல்ல; மீட்பு என்பதால், நம்மைத் தலைநிமிர்ந்து நிற்கச் சொல்கிறார். அழிவு என்றால் அலறி அடித்து ஓடத்தான் வேண்டும். மீட்பு என்பதால் கடவுளைச் சந்திக்க நாம் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

இயேசுவின் வருகையை அச்சமின்றி எதிர்கொள்ள இரண்டு அழைப்புகளை இயேசு நமக்குத் தருகிறார்:

1. எச்சரிக்கையாய் இருங்கள், 2. விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். எச்சரிக்கையாய் இருப்பது குறித்து இயேசு சில அறிவுரைகளைத் தெளிவாகத் தருகிறார். “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து கண்ணியைப்போல் உங்களைச் சிக்கவைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்என்று எச்சரிக்கிறார் (21:34). அதாவது, இவ்வுலகின் கவர்ச்சிகள், சோதனைகளுக்கு மயங்கி, நமது வாழ்வின் ஒப்பற்ற செல்வமாம் இயேசுவிடமிருந்து விலகிச் சென்றுவிடாதவாறு கவனமாக இருக்கவேண்டும் என்பது முதல் அறிவுரை.

இரண்டாவது, இயேசுவின் இரண்டாம் வருகையும், நமது இறப்பும் எப்பொழுது என்று உறுதியாகத் தெரியாததால், “எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள் (21:36) என்னும் அழைப்பை இயேசு தருகிறார். விழிப்பாயிருந்து நாம் நமது அன்றாடக் கடமைகளை அக்கறையோடும் அன்போடும் பொறுப்போடும் செய்ய வேண்டும். இறையாட்சியின் வருகைக்காய் காத்திருக்கும் நாம், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலைகளில் நேரத்தைத் தொலைத்துவிடாமல், தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல், கடவுள் விரும்பும் வழியில் நடக்க விழிப்பாயிருந்து மன்றாடுவோம். ‘ஆண்டவராம் இயேசுவே வாரும்என்ற சிறிய இறைவேண்டலை மீண்டும், மீண்டும், நமக்குள் எடுத்துரைப்போம்.

நம் மீட்புக்காக வரவிருக்கும் இறைவனை நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் எதிர்பார்த்துக் காத்திருப்போம். அன்றாட வாழ்வின் சவால்களும், துயர்களும் நம்மை மூழ்கடித்துவிடாமல் இருக்க விழிப்பாயிருந்து வேண்டுவோம். நம்பிக்கையற்ற செய்திகளை மட்டுமே காதிலும் கருத்திலும் வாங்கி, நம் உள்ளங்களைத் தொலைத்து விடாமல், நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை அதிகமாகப் பரப்பிட முயல்வோம். உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கி, ஆண்டவரின் வருகைக்காய் விழிப்புடன் காத்திருப்போம். இந்தக் காத்திருப்பு நமக்கானது! நம் வாழ்வுக்கானது! மீட்புக்கானது!