4. மரியாவினுடைய பங்களிப்பைப் புரிந்து கொள்வதில் திரு அவை வளர்ந்துள்ளது
1. இதற்கு
முந்தைய நமது மறைபோதனையில் ‘மரியா இறைவனின் தாய்’ என்ற மறைக்கோட்பாடு எவ்வாறு அதனுடைய முதல் வடிவமான ‘இயேசுவின் தாய்’ என்பதிலிருந்து, மனுக்குல மீட்பில் அவருடைய தாய்மைப் பங்களிப்பை உறுதிப்படுத்தி ‘கிறிஸ்துவின் தாய்’ என்பதை விளக்கும் வண்ணம் மிகவும் தெளிவான மற்றும் முழுமையான வடிவமாக மாறியது என்பதைப் பற்றி பார்த்தோம்.
மரியியல்
கோட்பாட்டின் மற்றக் கூறுகளை விளக்கவும், மரியாவைப் பற்றிய வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளினுடைய வெளிப்படையானதொரு வரையறையை அடைவதற்கும் பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன.
மீட்பின் வரலாற்றில் மரியாவின் பங்களிப்புப்
பற்றிய ஆழமான கண்டுபிடிப்பு இந்த நம்பிக்கைப் பயணத்தினுடைய குறிப்பிடத்தக்க உதாரணங்களாக, எனக்கு முந்தைய திருத்தந்தையர்களான இறை ஊழியர் ஒன்பதாம் பத்திநாதர் அவர்களால் கி.பி. 1854-இல்
அறிவிக்கப்பட்ட ‘மரியாவின் அமலோற்பவம்’ மற்றும்
பன்னிரண்டாம் பத்திநாதர் அவர்களால் யூபிலி ஆண்டான கி.பி. 1950-இல்
அறிவிக்கப்பட்ட ‘மரியாவின் விண்ணேற்பு’ பற்றிய
கோட்பாடுகள் இருக்கின்றன.
மரியியலானது
இறையியல் தேடலின் குறிப்பிடத்தக்கதொரு களமாக இருக்கின்றது. கிறித்தவ மக்களின் மரியாவுக்கான அன்பு இதில் உணரப்படுகின்றது. மேலும், கன்னி மரியாவின் மறையுண்மைகள் பற்றிய குறிப்பிடத்தக்க பண்புக் கூறுகள் இறையியலாளர்கள் மற்றும் ஆயர்களுடைய கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் இருக்கின்றது.
இயேசுவின் தாய்
மீட்பின்
வரலாற்றில்
பங்காற்றினார்
2. முதலில்,
நற்செய்தி நூல்கள் மரியாவின் வாழ்வு மற்றும் ஆளுமையைப் பற்றிப் போதுமான அளவு ஆதாரங்களைத் தரவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கடவுளின் தாயைப் பற்றி மிக நன்றாக அறிந்துகொள்ள உதவக்கூடிய முழு ஆதாரங்களையும் பெற உறுதியாக நாம் ஆசைப்படுவோம்.
இந்த
எதிர்பார்ப்பானது நிறைவேற்றப்படாத ஒன்றாகவே உள்ளது. மேலும், மரியாவைப் பற்றிய வெளிப்படையான கோட்பாட்டு வளர்ச்சியைத் தருகின்ற மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களில்கூட இது நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. கிறிஸ்து மற்றும் அவருடைய பணி பற்றிய ஒரு சிறந்த சிந்தனையைத் தருகின்ற புனித பவுல் அடியாருடைய கடிதங்கள்கூட
மிகவும் குறிப்பிடத்தக்க பகுதியான, “கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்” (கலா
4:4) என்று கூறிச் சுருக்கிக் கொள்கின்றன.
மரியாவின் குடும்பத்தைப்
பற்றி மிகச் சுருக்கமாகவே கூறப்பட்டிருக்கின்றது. இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றிய விவரிப்பை (Infancy narratives) நீக்கினால்,
மரியாவைப் பற்றிய
இரண்டே வாக்கியங்களைத்தான் நாம் ஒத்தமைவு நற்செய்திகளில் காண்கின்றோம்:
ஒன்று,
இயேசுவை நாசரேத்துக்குத் திரும்பவும் கூட்டிச் செல்ல அவருடைய ‘சகோதரர்கள்’ மற்றும்
உறவினர்களுடைய முயற்சி பற்றியது (மாற் 3:21, மத் 12:48); மற்றது இயேசுவின் தாயினுடைய திருவருள்பேறு பற்றிய ஒரு பெண்ணினுடைய புகழுரைக்கான பதில் பற்றியது (லூக் 11:27).
எனினும்,
லூக்கா தனது குழந்தைப் பருவ நற்செய்தியில் கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு, எலிசபெத்தைச் சந்தித்தல், கிறிஸ்துவினுடைய பிறப்பு, கோவிலில் குழந்தை இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல் மற்றும் பன்னிரண்டு வயதில் காணாமல் போன இயேசுவைக் கோவிலில் மறை வல்லுநர்களிடையே கண்டுபிடித்தது போன்ற பகுதிகள் சில முக்கியமான உண்மைகளை நமக்குத் தருவதோடு, ஒருவகையான அடிப்படை ஆர்வத்துக்கான ‘மரியியல்-மூலத்தை’
(proto-mariology) தருகின்றது.
யோசேப்புக்கான
அறிவிப்பின் விவரிப்பில் (மத் 1:18-25) கன்னிமை குன்றாமல் இயேசு கருத்தரிக்கப்படுதலோடு தொடர்புடைய விவரங்களைத் தருவதில் மட்டும் நற்செய்தியாளர் லூக்காவின் தகவல்கள் நற்செய்தியாளர் மத்தேயுவால் மறைமுகமாக
நிறைவு செய்யப்படுகின்றன.
மேலும்,
இயேசுவின் பொதுவாழ்வின் தொடக்கம் மற்றும் இறுதியில் மரியாவின் உடனிருப்பைப் பதிவு செய்ததன் வழியாக, யோவான் நற்செய்தியானது மீட்பின் வரலாற்றில் இயேசுவின் தாயினுடைய பங்களிப்பின் அவசியம் பற்றிய நம்முடைய அறிவை ஆழப்படுத்துகின்றது. குறிப்பாக,
இறக்கும் தருவாயில் இருந்த இயேசுவிடமிருந்து, தாம் அன்பு செய்த சீடருடைய மற்றும் அவர் வழியாக அனைத்துக் கிறித்தவர்களுக்கும் தாயாக இருப்பதற்கான பொறுப்பைப் பெற்ற மரியாவின் கல்வாரி உடனிருப்பானது (ஒப்பிடுக. யோவா 2:1-12; யோவா 19:25-27) குறிப்பிடத்தக்கது.
இறுதியாக,
திருத்தூதர் பணிகள் நூலானது தூய ஆவியாரை எதிர்பார்த்திருந்த அந்த முதல் குழுமத்தின் பெண்களிடையே, இயேசுவின் தாயையும் தெளிவாகக் காட்டுகின்றது (ஒப்பிடுக. திப 1:14).
இருப்பினும்,
இதர புதிய ஏற்பாட்டுச் சான்று மற்றும் நம்பகமான வரலாற்றுச் சான்றுகளும் இல்லாமல் போனதால், பெந்தகோஸ்து நிகழ்வுக்குப் பிந்தைய மரியாவின் வாழ்வு பற்றியும், அவருடைய இறப்புக்கான தேதி மற்றும் சூழல்கள் பற்றியும் நமக்கு ஒன்றும் தெரியவில்லை. மரியா
திருத்தூதர் யோவானோடு தொடர்ந்து வாழ்ந்தார் எனவும், முதல் கிறித்தவக் குழுமத்தினுடைய வளர்ச்சியில் மிகவும் நெருக்கமாக ஈடுபட்டிருந்தார் எனவும் நம்மால் யூகிக்க முடியும்.
3. மரியாவின்
மண்ணக வாழ்வு பற்றிய செய்தியானது
இன்றைய திருவிவிலிய விளக்கவுரையாளர்களில் கவனத்தோடு வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு அதனுடைய இறையியல்
வளமையினால் மெருகூட்டப்பட்டிருக்கின்றது.
மேலும்,
நற்செய்தியாளர்களுடைய
பார்வையானது முற்றிலும் கிறித்தியல் சார்ந்ததாக இருப்பதோடு மகனைப் பற்றிய மகிழ்ச்சியான அறிவிப்பில் மட்டுமே தாயோடு தொடர்புபடுத்தப்பட்டிருக்கின்றது.
புனித அம்புரோஸ் கூறுகின்றவாறு, “நற்செய்தியாளர், கிறிஸ்து பிறப்பினுடைய மறைபொருளை வெளிப்படுத்துகையில், மறைபொருளினுடைய போதனையாளர் என்பதைவிட, கன்னி மரியாவினுடைய பாதுகாவலராகத் தோன்றி விடக் கூடாது என்பதற்காக மரியாவைப் பற்றிய
பிற சாட்சிகளைத் தேடாமல் இருப்பது நல்லதென நம்பினார்”
(Exp. in Lucam, 2, 6: PL 15, 1555).
மேலே
கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், திரு அவையில் கிறிஸ்துவின் மறைபொருளினுடைய முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதற்கான ஆய்வினுடைய ஒரு முயற்சியை ஊக்கப்படுத்த விரும்பி, மரியாவினுடைய வாழ்வு
பற்றிய விளக்கங்களில் மூழ்க விரும்பாமல், மீட்புப் பணியில் அவருடைய பங்களிப்பு, அவருடைய தனிப்பட்ட புனிதத்துவம் மற்றும் கிறித்தவ வாழ்வில் அவருடைய தாய்மைப் பணியைக் கண்டுபிடிக்க முயல்வதை நாம் அறிய முடியும்.
மரியாவின் புனிதத்துவத்தைப்
பொதுமக்களின்
நம்பிக்கையானது
அங்கீகரித்தது
4. மரியாவின்
மனநிலையை எடுத்துக் கொண்டு தன்னையே அர்ப்பணிப்பதில் திரு அவையினுடைய முயற்சியைத் தூய ஆவியானவர் வழிநடத்துகிறார். இயேசுவின் பிறப்பு பற்றிய பதிவில், அவருடைய தாய் எவ்வாறு அனைத்து நிகழ்வுகளையும் ‘தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்’ (லூக்
2:19); அதாவது, அவரே சிறந்ததொரு
சாட்சியாக இருக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் ஓர் ஆழமான பார்வையோடு ‘ஒன்றிணைப்பதற்கு’ (symballousa)
முயற்சிக்கிறார் என்று குறிப்பிட்டி ருக்கிறார்.
அதேபோல,
கிறிஸ்துவின் மறையுண்மையோடு நெருங்கிய தொடர்புடைய அவருடைய பணி பற்றிய அறிவைப் பெறுவதற்காக மரியாவைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்ற அனைத்தையும் பற்றிய ஆழமானதொரு புரிதலுக்காக அதே தூய ஆவியாரால் இறைமக்களும் தூண்டப்பட்டிருக்கின்றனர்.
மரியியல்
வளர்வதால், கிறித்தவ மக்களுடைய குறிப்பிடத்தக்க பங்களிப்பும் வெளிப்படுகின்றது. நம்பிக்கை
என்னும் கொடையையும் கிறித்தவ அனுபவத்தையும் தெளிவாக
விளக்குவதிலும், ஆழப்படுத்துவதிலும் இறையியலாளர்களுடைய பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும்கூட, மரியியல் கோட்பாட்டினுடைய வளர்ச்சியில் இயல்பாக இறையியலாளர்களுடைய பங்களிப்பு மட்டுமல்லாமல், இறைமக்களும் தங்களுடைய நம்பிக்கை சாட்சியத்தாலும், உறுதிப்பாட்டினாலும் ஒத்துழைக்கிறார்கள்.
சாதாரண
மக்களுடைய நம்பிக்கையானது தந்தையினுடைய நன்மைத்தனத்தின் வியக்கத்தக்க வெளிப்பாட்டை அதில் கண்டுகொண்ட (ஒப்பிடுக. மத் 11:25; லூக் 10:21) கிறிஸ்துவால் வியந்து புகழப்படுகின்றது.
ஞானிகளிடமிருந்து
மறைக்கப்பட்ட மேன்மையான மீட்பின் வரலாற்றைத் திரு அவையானது தொடர்ந்து அறிவிக்கின்றது. மரியாவினுடைய எளிமையோடு இணைந்த இந்த நம்பிக்கை அவருடைய தாய்மையினுடைய மதிப்பின் சிறப்பையும், அவருடைய தனிப்பட்ட புனிதத்துவத்தையும் உறுதிப்படுத்துவதில் முன்னோக்கி இட்டுச் சென்றிருக்கின்றது.
மரியாவின் மறைபொருள்
ஒவ்வொரு கிறித்தவனையும் கிறிஸ்துவினுடைய தாய் பற்றி நற்செய்தி வெளிப்பாடு என்ன உறுதிப்படுத்துகின்றதோ அதை திரு அவையோடு இணைந்து ‘அவருடைய உள்ளத்தில் இருத்திச் சிந்திப்பதற்கு’ பணிக்கிறது.
மரியாவின் புகழ்
பாடலின் (Magnificat)) அடிப்படையில்,
மரியாவின் முன்னுதாரணத்திற்குப்பின் ‘அருளால்
நிறைந்த’ அவர்
வழியாக மூவொரு இறைவனால் செய்யப்பட்ட வியக்கத்தக்க செயல்களில் மனிதனுக்கான கடவுளுடைய அன்பை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பர் மற்றும் கடவுளுடைய கருணையின் ஓர் அடையாளத்தைக் கண்டுகொள்வர்.
மூலம்:
Pope John Paul II,
Church grew in understanding of
Mary’s role, in L’Osservatore Romano, Weekly Edition in English,
15 November 1995, p.11.