கிறிஸ்து எனும் அருளடையாளம்
(தந்தை அன்பு செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
மார்த்தா:
“பாதர், கடவுளின் அருளைப் பெறுவதற்கு அருளடையாளங்கள் தேவை என்று சொன்னீர்கள். அது குறித்து மேலும் சில கருத்துகளைச் சொல்லுங்களேன்.”
அருள்பணி:
“தத்துவார்ந்த ரீதியில் பார்க்கும்போது, திருவருள்சாதனங்கள் ‘குறியீடு’
(sign) என்கின்ற
வகையைச் சார்ந்தவை. ஒன்றைச் சுட்டிக்காட்ட மற்றொன்றைப் பயன்படுத்துவதே ‘குறியீடு’
என்பது! உதாரணமாக, ஒரு சாலையில் ‘மதுரை’ என்று எழுதப்பட்ட பலகை இருந்தது என்றால், அது மதுரையைச் சுட்டிக்காட்டும் குறியீடு ஆகும். அதாவது, பார்க்கக்கூடிய ஒன்றை வைத்து, பார்க்கக்கூடிய மற்றொன்றைச் சுட்டிக்காட்டுவதே குறியீடு என்பது. குறியீடோடு தொடர்புடைய மற்றொரு வார்த்தை ‘அடையாளம்’
(symbol) என்பது!
அடையாளம் என்பது குறியீட்டையும் தாண்டி இன்னும் ஒருபடி மேலானது. இரண்டு வகைகளில் அது மேலானது. முதலாவதாக, அடையாளம் என்பது பார்க்கக்கூடிய ஒன்றை வைத்து, பார்க்க இயலாத ஒன்றைச் சுட்டிக்காட்டுவது. இரண்டாவதாக, அடையாளம் மற்றொன்றைச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், சுட்டிக்காட்டப்படும் பொருளின் தன்மையை ஓரளவுக்குத் தன்னிலே தாங்கியிருப்பதாகும்.”
கிறிஸ்டினா:
“தந்தையே! நீங்கள் சொல்வது புரிந்தது மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது. ஓர் உதாரணம் தாருங்களேன்!”
மார்த்தா:
“நான் சொல்கிறேன் பாதர்! ரோஜா அன்பிற்கான சிறந்த அடையாளம். முதலாவதாக, ரோஜா பார்க்கப்படக்கூடியது. அது சுட்டிக்காட்டும் அன்போ பார்க்கப்பட முடியாதது. இரண்டாவதாக, அன்பின் மென்மைத்தன்மையை ரோஜா மலர் தன்னிலே தாங்கியிருக்கிறது. எனவேதான் அது அன்பிற்கான சிறந்த அடையாளமாகக் கருதப்படுகிறது என்று நினைக்கின்றேன்.”
அருள்பணி:
“மிகவும் சரி! காண இயலாத கடவுளையும், அவரது பிரசன்னத்தையும், பண்புநலன்களையும் சுட்டிக்காட்டி, அவற்றில் மனிதர்கள் பங்கெடுப்பதற்கான மிகச்சிறந்த அடையாளங்களாக இருப்பவையே அருளடையாளங்கள். ‘கண்களால் காண முடியாத இறைவனுக்குக் காணக்கூடிய ஓர் அடையாளமாக விளங்குவதே அருளடையாளம்’ என்கிறார்
புனித பெர்னார்டு. காணக்கூடிய பொருள்கள் வழியாகக் காண இயலாத அம்சங்களை வெளிப்படுத்துவதே திருவருள்சாதனச் செயல்பாட்டின் அடிப்படைத் தன்மை. எல்லாத் திருவருள்சாதனங்களுமே கடவுளைச் சுட்டிக்காட்டுபவையாக இருப்பதோடு, கடவுளின் தன்மையைத் தங்களிலே பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, அப்பமும் இரசமும் பார்க்கக்கூடியவை. இந்த அப்பமும் இரசமும் காண இயலாத இறைவனின் பிரசன்னத்தைத் தாங்கக்கூடியவையாக மாறுவது திருவருள்சாதனச் செயல்பாட்டாலேயே! திரு அவை வரலாற்றை உற்றுநோக்கும்போது, ஒரு சாதாரண அழிந்துபோகக்கூடிய பருப்பொருள், அழியாத ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியும் என்ற செய்தியை ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் புனித அகுஸ்தினார். புனித அகுஸ்தினாரின் கருத்துபடி, இவ்வுலகின் புனிதத்தின் அடையாளமாகத் திருவருள் சாதனம் இருக்கிறது.”
அகஸ்டின்:
“பாதர்! ஏழு அருளடையாளங்களும் எவ்வாறு கடவுளின் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டுகின்றன எனச் சொல்லுங்களேன்...”
அருள்பணி:
“அதற்கு முன்பாக ஒரு கருத்தைப் பற்றி நாம் பேசவேண்டும். கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பொறுத்த அளவில், திருவருள்சாதனங்கள் அனைத்தும் இறைமகன் கிறிஸ்துவிலிருந்தும், அவரது வாழ்விலிருந்தும்தான் ஊற்றெடுக்கின்றன. கிறிஸ்துவின் வாழ்வே ஒரு திருவருள்சாதன வாழ்வுதானே! அதாவது, கிறிஸ்து காண இயலாத இறைவனை வெளிப்படுத்துகின்ற அருளின் கருவியாக விளங்கினார். எனவேதான் இறையியலில் கிறிஸ்து, ‘அடிப்படைத் திருவருள்சாதனம்’ (basic
sacrament) என்று அழைக்கப்படுகின்றார்.”
அன்புசெல்வன்:
“பாதர், நீங்கள் இதைச் சொல்லும்போது ‘என்னைக்
காண்கிறவன் தந்தையையே காண்கின்றான்’ (யோவா
14:9) என்ற இயேசுவின் வார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. இயேசுவின் வாழ்வே ஓர் அடிப்படைத் திருவருள்சாதனமாக (basic sacrament) இருந்தது
என்பதை இவ்வார்த்தைகள் எடுத்துரைக்கின்றன என்று நினைக்கின்றேன்.”
அருள்பணி:
“மிகச் சரியாகச் சொன்னீர்கள். மேலும், இவ்வார்த்தைகள் அவர் ஒரு தனித்துவமிக்க, வேறு எதற்கும் இணையாக முடியாத திருவருள்சாதனமாக விளங்குகின்றார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. உங்கள் வீட்டில் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு (Catechism of the Catholic Church) உள்ளதா?”
அன்புசெல்வன்:
“இருக்கிறது தந்தையே! உங்களுக்கு முன்பாக இருந்த அருள்தந்தை ஒரு முறை மறையுரையில் அது குறித்துப் பேசியபோது, அதை வாங்கி அவ்வப்போது
வாசித்து வருகிறேன். திரு அவையின் மறைப்போதனைகளைத் தெளிவாகவும் ஆழமாகவும் நான் புரிந்துகொள்ள அது எனக்கு உதவுகிறது.”
அருள்பணி:
“மிகவும் நல்லது. கிறிஸ்டினா, அப்புத்தகத்தைத் திறந்து, எண் 1151-ஐ வாசிக்க முடியுமா?”
கிறிஸ்டினா:
“இறையரசின் மறைபொருளை விளக்குவதற்காக இயேசு தமது போதனைகளில் அடிக்கடி படைப்புப் பொருள்களை அடையாளமாகப் பயன்படுத்துகின்றார். அவர் தமது குணமளிப்புச் செயல்பாடுகளிலும், போதனைகளிலும் சில பொருள் சார்ந்த குறியீடுகளையும், அடையாளச் செயல்பாடுகளையும் பயன்படுத்துகிறார்; பழைய உடன்படிக்கைக்கு, முக்கியமாக விடுதலைப் பயண நிகழ்விற்கும், பாஸ்குவிழா நிகழ்விற்கும் புதிய அர்த்தத்தை வழங்குகின்றார். இதற்கான காரணம் இச்செயல்பாடுகள் அனைத்திற்கும் பின்னே உள்ள குறியீடாக அவரே விளங்குவதுதான்.”
அருள்பணி:
“உனக்கு இதிலிருந்து என்ன புரிகிறது கிறிஸ்டினா?”
மார்த்தா:
“பாதர், அது எனக்கே புரியவில்லை. அவளுக்கு எங்கே புரியப்போகிறது?”
அருள்பணி:
“அதன் பொருள் இதுதான்: ‘இயேசு தமது புதுமைகளிலும், போதனைகளிலும் காணக்கூடிய பொருள்கள் மற்றும் நிகழ்வுகள் வழியாகக் காண இயலாத கடவுளைச் சுட்டிக்காட்டினார். இதற்கான காரணம், அவரது வாழ்வே காண இயலாத கடவுளைச் சுட்டிக்காட்டும் காணக்கூடிய அடையாளமாக இருந்ததே! வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நாம் கொண்டாடும் அருளடையாள நிகழ்வுகளுக்கான ஆழமான அர்த்தத்தையும், அளப்பரிய ஆற்றலையும் தருவது கிறிஸ்துவின் வாழ்வும், இறப்பும், உயிர்ப்புமேயன்றி வேறெதுவும் இல்லை.”
அகஸ்டின்:
“தந்தையே! இப்பொழுது எனக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. கடவுளைச் சுட்டிக்காட்டும் மாபெரும் அடையாளமாக விளங்குபவர் கிறிஸ்து. அவரது மீட்புச்செயலை உலகமனைத்தும் எடுத்துச் செல்வதற்கான கருவிகளாக ஏற்படுத்தப்பட்டவையே திருவருள்சாதனங்கள்.”
அருள்பணி:
“ஆம்! திருவருள்சாதன நிகழ்வுகள் வழியாக இறைமகன் இயேசுவின் மீட்புப் பணியானது உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைவதற்கான வாய்ப்பை, திரு அவை இறைவனின் துணையோடு மேற்கொள்கிறது. இவ்வாறு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட நற்செயல் இன்றும் தொடர்ந்து ஆற்றப்படுகிறது.”
(தொடரும்)