1673-ஆம் ஆண்டு 26 வயது பிரான்ஸ் நாட்டு அருள்சகோதரி புனித மார்கரெட் மேரி அலகோக் (Saint Margaret Mary Alacoque) அவர்களுக்கு இயேசுவின் திரு இதயம் காட்சியளித்து 17 ஆண்டுகள் அக்காட்சி தொடர்ந்ததன் 350-ஆம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில், திருத்தந்தை அக்டோபர் 24 அன்று இயேசுவின் திரு இதயம் குறித்த ‘அவர் நம்மை அன்புகூர்ந்தார்’ (‘Dilexit nos’) என்ற தனது நான்காவது சுற்றுமடலை வெளியிட்டுள்ளார். முன்னுரை, முடிவுரையுடன் ஐந்து சிறப்புப் பகுதிகளாக இம்மடல் வரையப்பட்டுள்ளது. மொத்தம் 220 எண்கள் கொண்ட இம்மடல், இயேசுவின் உண்மை அன்பின் ஆழம், அகலம் மற்றும் அவரது எல்லையில்லாத்தன்மை பற்றிப் பேசுகிறது. “கடவுள் நம்மேல் அன்பு கூர்ந்தார்” (உரோ 8:37) என்ற பவுலின் வார்த்தையோடு இந்த மடலை திருத்தந்தை வரைந்துள்ளார். “நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது” (உரோ 8:39) என்கிற தூய பவுலின் அடிதொட்டு இம்மடல் ஆரம்பமாகிறது. இந்தச் சுற்றுமடலில் இயேசுவின் இதயத்தில் குடிகொண்டிருக்கும் இறையன்பு மற்றும் மனிதநேய அன்பு பற்றித் திருத்தந்தை விரிவாக எடுத்துரைக்கிறார். “இயேசு கிறிஸ்துவின் திரு இதயமானது மனித மற்றும் இறையன்பின் பாரம்பரியத்தையும், நிகழ்காலச் சிந்தனைகளையும் மீட்டெடுக்க அழைப்பு விடுக்கின்றது. நம்பிக்கையில் மென்மை மற்றும் மகிழ்ச்சியை மறந்துவிடாதபடி திரு இதயத்தின் உண்மையான பக்தியைப் புதுப்பிக்க அது அழைப்பு விடுக்கின்றது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நற்செய்திப்
பகுதிகளைத் தியானிப்பதன் வழியாகவும், கிறிஸ்துவின் உரையாடல்களை ஆய்ந்துணர்வதன் வழியாகவும், அவரின் அன்பை நாம் புரிந்துகொள்ள முடியும் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆண்டவர் இயேசு பிறருடன் கொண்டிருந்த உறவுகளை ஆராய்ந்து பார்ப்பதன் வழியாக, அவர் நம் ஒவ்வொருவரையும் எவ்வாறு நடத்துகிறார் என்பதை நாம் உணர முடியும் என்றும் இச்சுற்றுமடல் வழியாகத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
இயேசுவின்
திரு இதய அன்பே நம்மை அன்பு செய்ய உந்தித் தள்ளுகின்றது என்றும், அனைவரையும் உடன்பிறந்த சகோதரர்களாக எண்ணி, அவர்களை நோக்கிச் செல்ல நம்மை அனுப்புகின்றது என்றும் குறிப்பிடும் திருத்தந்தை, இயேசுவின் திறந்த இதயம் நம்மை அன்பு செய்ய நிபந்தனையின்றிக் காத்திருக்கிறது என்றும், நம்மை அன்பு செய்வதற்கும், அவருடைய அன்பைப் பெறுவதற்கும், அவரே நம்மை முதலில் அன்பு செய்தார் என்றும் எடுத்துரைத்துள்ளார். மேலும், விளிம்புநிலை மக்கள் சார்பான உடன்பிறந்த உணர்வுடன் கூடிய உலகத்தை நோக்கி ஒன்றிணைந்து நடக்கவும், கற்றுக் கொள்ளவும் அழைப்பு விடுக்கிறார்.
போர்கள்,
சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நுகர்வுக் கலாச்சாரம், தொழில்நுட்பத்தின் மனிதாபிமான மற்ற பயன்பாடு ஆகியவற்றின் பிடியில் உலகம் தன் இதயத்தை இழந்து விட்டது என்று கூறும் திருத்தந்தை, மீண்டும் இயேசுவின் இதயத்திற்குத் திரும்ப வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் பேசுகிறார். கிறிஸ்துவின் அன்பால் நிரப்பப்பட்ட புனிதர்கள்,
புனித மார்கரெட் மேரி அலகோக் பெற்ற திரு இதய காட்சிகள், கிறிஸ்துவின் திரு இதயத்தின் மீதான பக்தி, உலகை அன்பு செய்யவைக்கும் மேய்ப்புப்பணி போன்ற பல்வேறு தலைப்புகளுடன் இடம்பெற்றுள்ள இச்சுற்றுமடலானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபத்துடன் நிறைவுபெறுகின்றது.
திருத்தந்தை
பிரான்சிஸ், திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களுடன் இணைந்து, ‘Lumen fidei’
(2013) என்ற சுற்றுமடலையும், சுற்றுச்சூழல் அக்கறை குறித்த Laudato si’ (2015) என்ற
சுற்றுமடலையும், மனித உடன்பிறந்த நிலை குறித்த ‘Fratelli tutti
(2020) என்ற சுற்றுமடலையும் வெளியிட்டுள்ளார். இயேசுவின் திரு இதயம் குறித்த ‘Dilexit nos’
திருத்தந்தையின்
நான்காவது புதிய சுற்றுமடல் ஆகும்.
- முதன்மை ஆசிரியர்