news-details
தலையங்கம்
பா.ச.க.வின் புல்டோசர் நடவடிக்கை: மனித உரிமை மீறல்!

இந்தியா சுதந்திரம் பெற்ற சூழலில், அரசியல் அரங்கை அறிவாளிகளும் நேர்மையாளர்களும் மட்டுமே அலங்கரித்தனர்; அவர்களே முன்வரிசையில் வீற்றிருந்தனர். எதையும் கட்சிக் கண்ணோட்டத்திலும், மதவாதப் போக்கிலும், பாசிச எண்ணத்திலும் அணுகும் அருவருப்பான நடைமுறை அன்றைய அரசியல் தலைவர்களிடம் அறவே காணப்படவில்லை. ஆனால், இன்றைய சூழலோ முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. சுருதி பேதம் இல்லாமல் துதி பாடுபவருக்குப் பதவி நாற்காலி வழங்கப்படுகிறது. அப்பழுக்கற்ற திறமைசாலிகளும், உண்மையை உரக்கச் சொல்ல நினைப்பவர்களும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். நீதி வழி நடப்போரைக் காண்பது இன்று அரிதாகிப் போனது.

முதல் தரமான மனிதர்கள் மூன்றாம் இடத்திலும், மூன்றாம் தரமான நபர்கள் முதல் இடத்திலும் இருக்க வேண்டும் என்பது இன்றைய கலியுலக அரசியல் களத்தின் நியதியாகிப் போனது. அரசியல் தரம் அநாகரிகம் போர்த்தப்பட்டு, அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், மனித உரிமைகள் என்னும் அரசியல் சாசனத்தின் விழுமியங்கள் இவர்களால் விழுங்கப்படுகின்றன.

கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய பா... அரசின் காலத்தில் அரசுத்துறைகள் எல்லாம் அச்சுறுத்தும் துறைகளாகிப் போயின. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என யாவும் அவர்கள் பக்கம் வரிந்து கட்டி நிற்கின்ற போதும், கூடுதலாக இன்று மாநில அரசு இயந்திரங்களின் அதிகாரத்தையும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரங்களையும் பா... ஆளும் மாநிலங்களில் அரசு நிர்வாகம் கையில் எடுத்திருப்பது பேரவலமானது.

அத்தகைய செயல்பாடுகளில் ஒன்று மத்தியப் பிரதேசத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் மற்றும் பா... ஆளும்  மாநிலங்களிலும் புரையோடிக் கிடக்கும்புல்டோசர்நடவடிக்கை. உத்திரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசால் தொடங்கப்பட்ட புல்டோசர் நடவடிக்கை இப்போது பல மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும், பா... ஆளும் அரியானா, குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களில் இவை தொடர்வதும் மிகுந்த கவலையளிக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் நிகழும் மாநிலங்களில் சாமானியனின் சார்பாக உச்ச நீதிமன்றம் தன் கண்டனக் குரலை எழுப்பியிருக்கிறது. குற்றச் சம்பவத்தில் தொடர்புள்ளவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை, விதிகளை மீறியதாகக் கூறி புல்டோசர் மூலம் இடிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கைசட்ட விரோதமானதுஎன உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வில் அண்மையில் நவம்பர் 13 அன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதுவரை 1.5 இலட்சம் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்டு இருப்பதும், இதில் 7.3 இலட்சம் பேர் வீடிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருப்பதும் பெரும் கவலையளிக்கிறது. இந்த நடவடிக்கையின் உள்நோக்கத்தை ஆய்ந்த உச்ச நீதிமன்றம், இது விளிம்பு நிலை மக்களுக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் எதிராகப் போராடிய முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்படும் செயல்பாடாகவே அடையாளப்படுத்துகிறது.

இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பதற்காக மட்டுமே ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்?’ என்ற கேள்வியோடு, இப்படிப்பட்ட அநாகரிகச் செயல்களால் அக்குடும்பத்தில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் படும் துயரத்தைக் குறிப்பிட்டிருக்கிறது.

சட்டவிரோத நடவடிக்கைகளிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதுமே மாநில அரசின் கடமையாகும். சனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கு இதுவே அவசியமானதும் கூட. ஆனால், இதற்கு மாறாக, நீதிபதிகள் போன்று அரசு அதிகாரிகள் செயல்பட்டு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை இடித்துத் தண்டனை அளிப்பது என்பது அதிகாரப்பகிர்வுத் தத்துவத்தை மீறும் செயலாகும். ஆகவே, சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல்குற்றவாளிஎனக் குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்ற வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டவருக்கு எதிராக இதுபோன்ற தன்னிச்சையான, மிகக் கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ மேற்கொள்ள முடியாது எனக் கடுமையாக எச்சரித்திருக்கின்றனர்.

ஒருவர் குற்றவாளி என்பதால் அவரது வீட்டை எப்படி இடிக்க முடியும்? அவர் குற்றவாளியே ஆனாலும் கூட, அவரைத் தண்டிக்க முறையான சட்ட வழிமுறைகள் இருக்கின்றனவே! ஒருவரைத் தண்டிக்கும் உரிமை நீதித்துறைக்குத்தானே தவிர, அரசுக்குக் கிடையாதுஎனவும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தாலும் அல்லது குற்றவாளியாக இருந்தாலும் அவர்களுக்கென குறிப்பிட்ட உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை அரசியல் அமைப்புச் சட்டத்திலும், குற்ற நடவடிக்கைச் சட்டத்தின் கீழும் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பாதிக்கப்பட்டவருக்கு முறையான சட்டப் பாதுகாப்பு அவகாசம் வழங்காமல் அவர்களது உறைவிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கும் நடவடிக்கையைச் சனநாயகத்தில் நம்பிக்கை உடைய எவரும்  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஒருவருக்கு வீடு என்பது அடையாளம், வாழ்விடம், பாதுகாப்பு அரண்! பல ஆண்டுகள் மேற்கொண்ட கடின உழைப்பின் கனவு அது. இத்தகைய சூழலில் ஒரே இரவில் இந்த நடவடிக்கைகள் இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி விடுகின்றன. இது தனி மனிதனின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும், எதிர்கால வாழ்வியல் நலனுக்கும், இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் முரணானவை.

தங்குமிடத்துக்கான உரிமை என்பது வாழ்வதற்கான உரிமை, தனி உரிமை ஆகியவற்றின் ஓர் அங்கம் என அரசமைப்புச் சட்டத்தின் 21-வது கூறு உறுதியளிக்கிறது. “இத்தகைய உரிமை மீறல் அரசமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்என எச்சரித்திருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. ஆர். கவாய்.

இத்தகைய செயலை அன்றே முன் குறித்த ஐயன் வள்ளுவர்,

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து  (குறள் 551)

என்கிறார். அதாவது, குடிமக்களைத் துன்புறுத்தும் எண்ணத்தில் முறையற்ற செயல்களை மேற்கொண்டு, தவறாக ஆளும் ஓர் அரசு, பகைவெறி கொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது என்கிறார். மக்களாட்சியையும், மனித உரிமையையும் வெறும் பார்வையாளர்களாக மாற்றி, புல்டோசர்களைப் புதிய நிர்வாக நடவடிக்கையாக மாற்றி வரும் பா...வின்  நடவடிக்கைகளைப் பார்க்கும்போது,

ஆட்சிக் கட்டிலின்,

ஐந்தாண்டு புருஷர்கள்

பசிக்கப் பசிக்கப் புசிப்பது

இந்தியாவின் ஈரல்...’

என்னும் ஈரோடு தமிழன்பனின் கவிதை வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.

இத்தகைய கொடுஞ்செயல்கள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். ஆயினும், ஆறுதலாக வந்த இந்தத் தீர்ப்பு இறுதித்தீர்ப்பின் முன்னோட்டமாக அமையட்டும்.

இப்போதைக்குப்புல்டோசர் நடவடிக்கைமுடக்கப்பட்டிருப்பது ஆறுதல் அளித்தாலும், மானுட உரிமைகளை, மானுட வாழ்வியல் தத்துவங்களை அழிவுக்கு இட்டுச் செல்லும் இத்தகைய அராஜக நடவடிக்கைகள் முற்றுப் பெற உரிமைக் குரல் எழுப்புவோம்.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்