news
தலையங்கம்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்
‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்றார் ஒளவையார். ஆகவேதான் மாதா, பிதா, குரு-தெய்வம் எனப் பெற்றோருக்கு அடுத்த நிலையில் குருவை இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுகிறது இச்சமூகம். ஆயிரம் பணிகள் இந்த உலகை அலங்கரித்தாலும், ஆசிரியப் பணியே அனைத்திற்கும் ஆதாரம்; அடித்தளம். ஆசிரியப் பணிதான் அத்துணை பணிகளையும் பணியாளர்களையும் உருவாக்குகிறது. ‘ஆசிரியர்’ என்னும் ஒற்றைப் புள்ளியில்தான் இந்த உலகம் கல்வி வளர்ச்சியில், அறிவுத்தேடலில், ஒழுக்க மேன்மையில் மையம் கொண்டிருக்கிறது. ஆகவே, ஆசிரியர் என்னும் எழுதுகோலால்தான் மாணாக்கரின் வாழ்க்கை என்னும் பாடம் வரையப்படுகிறது; வார்க்கப்படுகிறது. நண்பனாய், தோழனாய், பெற்றோராய் உடனிருந்து, கரம்பிடித்து உடன் நடப்பவரே நம் மேன்மைமிகு ஆசிரியப் பெருமக்கள்!

‘வாழ்க்கை என்பது தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுப்பதே!’ என்றார் பிரஞ்சு படைப்பாளி விக்டர் ஹயூக்கோ. பிறரை உயர்த்தி விடும் தியாக உள்ளம் ஒன்றுதான் மனித வாழ்வைப் பொருள் பொதிந்ததாக ஆக்குகிறது. ஆசிரியப் பணி என்பது சமூகநல மேம்பாட்டுக்காய் பெரும் அர்ப்பண உணர்வுடன் தம் வாழ்வைத் தியாகம் செய்யும் அறப்பணி! அது மாணாக்கரின் வாழ்வில் இருள் அகற்றி அக  ஒளியேற்றும்; உயர ஏற்றி வைத்து அழகு பார்க்கும்; வளர்ச்சி கண்டு பெருமை கொள்ளும்; சாதனை கண்டு சலனம் இன்றிப் பூரிப்படையும்; ‘எதிர்காலம் என் கையில், அது சிறப்புற வேண்டும்’ என்ற உயர்ந்த நோக்கம் கொண்டு தன்னையே தியாகம் செய்யும்.

‘மனித குலத்தை எது ஒன்றுபடுத்துகிறதோ அதுவே மேலானது; அழகானது; சிறப்பானது’ என்றார் டால்ஸ்டாய். மனித குலத்தை ஒன்றுபடுத்தும் அன்பையும் ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் கற்றுத்தரும் கல்வியும் கல்விக் கூடமுமே மேலானவை; அழகானவை; சிறப்பானவை. அதன் உயிர்நாடியாய் விளங்கும் ஆசிரியரே உன்னதமானவர்கள்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் நாள் இந்தியத் திருநாட்டின் மேனாள் குடியரசுத் தலைவர் பாரத இரத்னா டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடுவது வாடிக்கை நிகழ்வாக அமையாமல், நமது வாழ்வின் வைகறை வானில் விடியல் விளக்கேற்றிய ஆதவனாய் அவர்கள் என்றும் கொண்டாடப்பட வேண்டும் என்ற சிந்தனையை உரக்கச் சொல்கிறது இந்த நாள். ஆசிரியர்கள் நமது வாழ்வில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; மாறாக, தலை வணங்கப் பட வேண்டியவர்கள் என்ற பேருண்மையை உணர்த்துகிறது இந்த நாள்!

தனித்தன்மையை அடையாளப்படுத்தி, இலக்கைக் கூர்மைப்படுத்தி, தடத்தைச் செம்மைப்படுத்தி, பயணத்தை ஊக்கப்படுத்தி வாழ்வில் வெற்றிக்கனியைச் சுவைக்கச் செய்பவர் ஆசிரியரே! ‘ஒரு நல்ல ஆசிரியரை அடைந்தவர் வாழ்வில் எல்லா வளங்களையும் அடைந்ததற்குச் சமம்’ என்கிறது முதுமொழி. அனைத்தையும் ஆக்க வல்ல கல்வியைத் தந்து, அகிலத்தையே அடையச் செய்யும் ஆக்கத்தின் திறவுகோலாய், பேராற்றலாய் நம்முள் செயல்படுபவர்களும் அவர்களே!

உரோமை சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரையில் கீழ்நோக்கிக் கவிழ்ந்திருக்கும் விதானப் பரப்பில் உயிர் உள்ள ஓவியங்களைத் தீட்டிய மைக்கேல் ஏஞ்சலோவின் வாழ்க்கையே நம் நினைவுக்கு வருகிறது. திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் அவரை அழைத்து இப்பணியை ஒப்படைத்தபோது ‘நானோ!’ என்று அதிர்ந்து போன ஏஞ்சலோ, ‘நான் ஓவியன் அல்லன்; நான் ஒரு சிற்பி’ என்றார். அதற்குத் திருத்தந்தை, ‘உங்கள் ஆசிரியர் கிர்லாண்டையோ கற்றுத் தந்ததை நினைவில் கொண்டு பணியில் இறங்குங்கள்’ என்றார். தயங்கி நின்ற ஏஞ்சலோவின் செவிகளில் ஆசிரியரின் பெயர் கேட்டதும் விழிகளில் ஒளி பிறந்தது; உள்ளத்தில் நம்பிக்கை எழுந்தது; கரங்களில் ஓவியம் பிறந்தது; உலகமே பூரிப்படைந்தது. அவர் விழிகளில் வெற்றியின் வெளிச்சம் வீசிடக் காரணமானது அந்த ஆசிரியரே! ஆசிரியர் வாழ்வும் வாழ்வியல் தத்துவமும், ‘உன்னால் முடியும்’ என்ற தாரக மந்திரமும் ஏஞ்சலோவைப் பெரும் ஓவியராக உலகிற்கு அடையாளப்படுத்தியது. திருவிவிலியத்தில் விரவிக் கிடக்கும் படைப்பின் காட்சிகளைச் சிஸ்டைன் தேவாலயத்தின் விதானத்தில் விரிந்து கிடக்கச் செய்து தலை சிறந்த கலைப்படைப்பைத் தந்தார் ஏஞ்சலோ. இத்தாலியின் தலை சிறந்த ஓவியராக விளங்கிய இரஃபேல், ஏஞ்சலோவின் கைவன்மையைக் கண்டு மெய்சிலிர்த்து மண்டியிட்டார் என்பது வரலாறு.

வரலாற்றுப் பக்கங்களில் நிகழ்வுகளாக மட்டுமல்லாமல், இன்றும் ஆசிரியர்களின் ஆக்கமும் தாக்கமும் மாணாக்கர் வாழ்வில் தனிச் சிறப்பு கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆகவே, ஆசிரியர்-மாணாக்கர் உறவு என்பது உன்னதமானதாக, போற்றத்தக்கதாக, புனிதமிக்கதாக இருக்க வேண்டும். மாண்புமிகு ஆசிரியர்களை மாதிரிகளாகக் கொண்ட மாணாக்கர் மத்தியில் சில ஆசிரியர்களின் வரம்பு மீறிய செயல்பாடுகளையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கண்டிப்பு என்ற பெயரில் மாணாக்கர்மீது கடுமையான தண்டனை, சாதியம், மனஉளைச்சல், பாலியல் குற்றங்கள் ஆகியவை தவிர்க்கப் பட வேண்டும்; குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட வேண்டும்.

மறுமுனையில், நல்லாசிரியர்களாய் நல்மனம் கொண்டோராய் வாழ்க்கையைத் திறம்பட அமைத்துக் கொண்டு சிறப்புறப் பணியாற்றுவோர் கொண்டாடப்பட வேண்டும்.  கல்விக்கண் திறந்து இருளகற்றும் இந்த ஆதவன்(கள்) வணங்கப்பட வேண்டும்; அவர்களின் தனித்துவமான பணிகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்; சாதனைகள் படைக்கும் மாணாக்கரின் அறிவுத் தூணாய் விளங்கும் ஆளுமைகள் பாராட்டப்பட வேண்டும். ஒட்டுமொத்தத்தில், ஆசிரியர் பணி மேன்மையுடன் நோக்கப்பட வேண்டும்; ஆசிரியர்கள்  மாண்புடன் போற்றப்பட வேண்டும். அவர்கள் பணி நிறைவு பெறும் காலத்தில் பேரன்புடன் காக்கப்பட வேண்டும். இன்றைய இளம் சமுதாயத்திற்கும் நாளைய சமூகத்திற்கும் விடியல் தரும் இந்தச் சூரியன்(கள்) இன்றைய காலச்சக்கரத்தில் தமிழ்நாட்டில் ‘விடியல் தரும் சூரியன்’ ஆட்சியில் பல கோரிக்கைகளை முன்வைத்தும் அவர்கள் தங்கள் வாழ்வில் விடியல் காணாதிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

“ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்” எனத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது இன்றும் பேசுபொருளாக்கப்படவில்லையே என்பதும், ஆசிரியர்களின் பல சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதும் பெரும் ஆதங்கமாகவே இருக்கின்றன. புதிய கல்விக்கொள்கை, ஆசிரியர் தகுதித் தேர்வு, பணி நியமன விதிமுறைகள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு எனப் பல சூழ்நிலைகளில் இன்றைய ஆசிரியர்கள், குறிப்பாக சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். விடியல் அரசு இவர்கள் வாழ்விலும் விடியல் தர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

இன்றைய நாளில் இந்திய, தமிழ்நாடு அரசின் தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியப் பெருமக்களை மனதார வாழ்த்துகிறோம். ஆசிரியர்களின் அறப்பணியைப் போற்றுவோம்! அவர்களை என்றும் கொண்டாடுவோம்! அவர்களை மாண்புடன் பேணுவோம்!

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
news
தலையங்கம்
தாய்க்குத் தாலாட்டு!
‘நிலவெனும் வதனம் நெற்றி
                நெடுமழை அனைய கூந்தல்
மலரெனும் கண்கள் கைகள்
                மரியம்மை அழகின் தெய்வம்!’

என்றார் ‘இயேசு காவியம்’ எனும் இறவாக் காவியம் படைத்த கவியரசர் கண்ணதாசன். ‘மரியம்மை’ எனும் பெயர் ‘மிரியம்’ என எபிரேய மொழியைத் தழுவி ‘அன்பிற்குரியவர்’ என்றே பொருள் கொள்கிறது. அன்புக்கு உரியவராக, இறையன்பு குடிகொண்டவராக, கடவுளின் பேரன்பு நிறைந்தவராக, இறைவன் வரைந்த ஓவியமாக, அழகின் தெய்வமாக விளங்கும் நம் அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழாவை இந்நாளில் கொண்டாடுகிறோம். இச்சிறப்பு மிக்க நாளை அகில உலகம் பெண் குழந்தைகள் தினமாக நினைவு கூர்கின்றது.

அன்னையின் பிறப்பு நாள் அகிலத்தின் பேரேட்டில் விடியலின் திருநாள்; அது பெருநாள். கருவிலே புனிதம் கொண்ட, பிறப்பிலே மகிமை கண்ட ‘அருள் நிறைந்த இல்லிடமாய்’ இறைவன் தமக்கென தேர்ந்தெடுத்த அற்புதக் குழந்தை நம் அன்னை மரியா. மண்ணில் மலர்ந்த மனித குலம் பேரொளி காண கருணையாளன் தந்த கலங்கரை விளக்கு அன்னை மரியா. அன்பும் அமைதியும், மகிழ்வும் மாசில்லா வாழ்வும் வாழ மானிட குலத்திற்கு ஒளி சுமந்து வந்த திருவிளக்கு அன்னை மரியா! அன்னையின் பிறப்புப் பெருவிழா அன்னையாம் திரு அவைக்கு மணிமகுடம்; அவர்தம் பிள்ளைகளாம்  நமக்குப் பெரும் மகிழ்வு!

இக்கொண்டாட்டம் நமது சமூகத்தில் பெண்ணினம் போற்றப்படவும், பெண் குழந்தைகள் காக்கப்படவும் அழைப்பு விடுக்கிறது. ஏன் இந்த அழைப்பு? என்ற கேள்வி உள்ளத்தை உளுக்குகிறது. காலச்சக்கரம் சுழலும் போக்கில் அது நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம். நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும் கணத்த காயங்களையே பதிவுகளாக விட்டுச் செல்கின்றன. குறிப்பாக, பெண்மை, பெண்ணினம், பெண் குழந்தைகள் எனும் தளங்களில் காணக்கிடக்கும் கசப்பு நிறைந்த, வலி மிகுந்த நினைவுகளும் நிகழ்வுகளும் இன்னும் இச்சமூகத்தில் ஆணாதிக்க மனநிலையையே பிரதிபலிக்கின்றது; அதுவே நம்மை வெட்கித் தலைகுனியச் செய்கிறது.

‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்றான் பாரதி. ‘உலகம் முழுவதையும் அன்பினால் அரவணைக்க வேண்டும்; அத்தகைய அன்பை வழங்குவது பெண்மையே!’ என்றார் டால்ஸ்டாய். ஆனால், இன்றும் பெண்ணினம் சந்திக்கும் சமூகச் சவால்கள் ஏராளம்; அவர்கள்மீது குறிப்பாக, பெண் குழந்தைகள் கருவில் உருவான கணம் தொட்டு, பச்சிளம் சிறுமிகளாக வளரும் நிலை தொடர்ந்து சந்திக்கும் பாலியல் துன்பங்களும், வாழ்வியல் சவால்களும் ஏராளம் ஏராளம். ரோஜா மலர்களாக மலர்ந்து, மகிழ்ந்து, மணம் பரப்ப வேண்டியவர்கள், மொட்டுகளாகவே கருகி மடிந்து கண்மூடுவது வேதனையளிக்கிறது.

‘பெண்ணுக்குக் காவல் இளமையில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் பிள்ளைகள்’ என்று வரையறை தந்து வேலி அமைத்த ஆணாதிக்கச் சமூகமே இன்று நிகழும் அவலங்கள் கண்டு பல்லிளிக்கின்றன. ‘வேலியே பயிரை மேயும்’ அவலங்களும் அவமானங்களுமே தொடர்கின்றன. நமது நாட்டில் 10 முதல் 18 வயது வரையுள்ள பெண் குழந்தைகளில் 26 விழுக்காடு உடல் ரீதியான தொந்தரவுகளையும், 1.4 விழுக்காட்டினர் பாலியல் பிரச்சினைகளையும் சந்திப்பதாகவும், 2021-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி பெண் குழந்தைகள் மீது நிகழ்ந்த குற்றப் பதிவுகள் 53,874 என்றும் தேசியக் குடும்ப நலவாழ்வு ஆணையம் குறிப்பிடுகிறது.

மேலும், இத்தகைய பிரிவுகளில் உலகளாவிய புள்ளி விவரங்கள் இன்னும் அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றன. குழந்தைகள் நல அமைப்பான UNICEF தரும் புள்ளிவிவரமோ, முப்பது நாடுகளில் ஏறக்குறைய 200 மில்லியன் பெண் குழந்தைகள் பாலியல் துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்கிறது. WHO எனும் உலக நலவாரிய அமைப்பானது, பத்தில் ஒரு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதைக் குறிப்பிடுகிறது. மேலும், ஐந்தில் ஒரு குழந்தை 18 வயதிற்கு முன்பே குழந்தைத் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடுகிறது.

இத்தகைய சூழலில், காலம் கடந்து கண்விழித்த மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளைக் குறிப்பாக, பெண் குழந்தைகளைக் காக்க நல வாரியமும், பல்வேறு நலத்திட்டங்களும் மேற்கொண்டிருப்பது சற்றே ஆறுதல் தருகிறது. கருவறை முதல் கல்வி பயிலும் வகுப்பறை தொடர்ந்து, வாழ்க்கைப் பயணத்திலும் அரசு துணை நிற்பது பாராட்டத்தக்கதே! தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளில் உயர் கல்விக்கான ‘புதுமைப் பெண்’ திட்டம், திருமண உதவித் தொகை எனத் தொடரும் மாநில அரசின் நலத் திட்டங்கள் பாராட்டுக்குரியனவே. அவ்வாறே, ஒன்றிய அரசின் Beti Bachao Beti Padhao (BBBP), Sukanya Samriddhi Yojana (SSY) மற்றும் National Scheme of Incentive to Girls for Secondary Education (NSIGSE) ஆகியன பாராட்டத்தக்கவையே!

இத்தகைய திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளைக் காக்கவும் வளர்க்கவும் ஆசைகொள்ளும் அரசு, அதேவேளையில் இக்குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்சி, இனம், பதவி, பணம் என எந்தவித தலையீடுமின்றி, பாரபட்சமுமின்றி, குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனைக்குரிய நடவடிக்கைகளை அரசியல் சாசன சட்டம் சார்ந்து எடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை. திரையில் ஆயிரம் கவர்ச்சித் திட்டங்களைக் காட்டிவிட்டு, திரைமறைவில் அவர்களின் வாழ்வைச் சூறையாடும் கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது குரல்.

இந்தியாவின் வல்லரசு கனவு, வாஞ்சையோடு பெண் குழந்தைகளைக் காப்பதிலும், பெண்மையைப் போற்றுவதிலும், பெண்ணினம் சமத்துவம் அடைவதிலுமே அடங்கியிருக்கிறது. ஒரு நாட்டின் கல்வி, அறிவியல், பொருளாதார, வர்த்தக மேம்பாடு என்பது நாகரிக சமூகத்தின் கட்டமைப்பில்தான் உருவாகிறது. நாகரிக சமூகம் என்பது ஆணாதிக்க அடக்குமுறையற்ற, பாலியல் சுரண்டலும், வன்கொடுமையும் இல்லாத, யாவரையும் சமமாக மதித்துப் பேணிப் பாதுகாக்கின்ற வாழ்விடத்தை, வாழ்வியல் முறையைக் கொண்டதே! அத்தகைய நாகரிகச் சமூகம் காண பெண்மையைப் போற்றுவோம்! பெண் குழந்தைகளைக் காப்போம்! அன்னையின் பிறந்த நாளில் நம் ஆழ்மனதில் உறுதி ஏற்போம்!

கண்மணிகள் காக்கப்படட்டும்;
காலமும் போற்றப்படட்டும்!

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
news
தலையங்கம்
வியப்பூட்டும் ஊடக உலகம்!
‘ஊடகம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கி இருக்கிறது இன்றைய உலகம். நவீன உலகின் வியப்புக்குரிய பலவற்றில் தனி இடம் பிடித்திருக்கிறது ஊடகம். இன்று ஊடகத் தொழில்நுட்பத்தால் உலகம் மாபெரும் அறிவியல் புரட்சியையே கண்டிருக்கிறது; இன்றும் கண்டுகொண்டிருக்கிறது! மானுட வாழ்வியலின் எல்லாத் தளங்களிலும் இந்த ஊடகம் இன்று இரண்டறக் கலந்திருக்கிறது. எனவே, ஊடக வளர்ச்சி என்பது காலத்தால் இன்று கணிக்க முடியாதது; அதன் பயன்பாடு என்றும் தவிர்க்க இயலாதது.

ஆகவேதான் திரு அவை, இவ்வூடகத்தின் சிறப்புகளைக் கண்ணுற்று, இது ‘இறைவனின் மாபெரும் கொடை’ எனக் கருதுகிறது. அவ்வாறே, சமூகத்தில் வாழும் மானுடத்தின் ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் பேணி வளர்க்கக் கூடிய உயர்ந்த நோக்கத்தையும் அவை கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மானுடமும், அதன் தொடர்பியலும் பூமிப்பந்தில் ஒருபோதும் பிரிக்க முடியாததே! ஒருவருக்கொருவர் நாம் தொடர்பு கொண்டிருப்பது என்பது மானுடத்தின் அடிப்படைப் பண்பு. அது மிக அவசியமானதும் கூட.

ஊடகங்களின் வருகை உலக மக்களின் அறிவு வளர்ச்சியிலும், பண்பாட்டு வளர்ச்சியிலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளன. அன்று அறியாமை இருட்டில் மூழ்கிக் கிடந்த மக்களுக்குப் புதிய வெளிச்சத்தைக் காட்டிய பெருமை ஊடகங்களையே சாரும்! அச்சு இயந்திரங்கள், பத்திரிகைகள், நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, கணினி, எண்ணிம தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என இன்று ஊடகம் உச்சம் தொட்டு இருக்கிறது. இவை சமூகம், பண்பாடு, கலை, அறிவியல், பொருளாதாரம், அரசியல், வணிகம், மருத்துவம், விவசாயம் என மக்கள் வாழ்வில் ஒன்றித்த பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவையும், தெளிவையும் நாளுக்கு நாள் சுமந்து வருகின்றன.

இத்தகைய ஊடகங்கள் ‘பொதுமக்களின் எண்ணங்களைத் தெளிவாக அறிந்து அதை வெளிப்படுத்துவது; மக்கள் மனங்களில் விரும்பத்தக்க நல்லுணர்வை வளர்த்தெடுப்பது; மற்றும் மக்களின் குறைகளை எந்த அச்சமும் இன்றி எடுத்துரைப்பது’ என அடிப்படையில் மேலான மூன்று நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.

இப்பேருண்மையை ஆழமாக உணர்ந்த திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் 2005-ஆம் ஆண்டு, ஜனவரி 24-ஆம் நாள் வெளியிட்ட தனது இறுதி திருத்தூது மடலான ‘அதிவேக வளர்ச்சி’ (The Rapid Development)  எனும் மடலில், ‘புதிய தொழில்நுட்பம் கண்டு அஞ்சாதீர்கள்! புதியவைகளைக் கண்டுபிடிக்க அதைப் பயன்படுத்திக் கொள்ளவும், அதன் மூலம் ‘உண்மையை’ (Truth) உலகிற்கு அறியச் செய்யவும், தமது வியத்தகு கொடைகளில் ஒன்றான ஊடகத்தைக் கடவுள் நமக்குத் தந்திருக்கிறார்’ என்று குறிப்பிடுகிறார் (எண்:14). அத்தகைய ஊடகம் சமூகத்தில் இன்று பல தளங்களில், பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதோடு, சமயம் சார்ந்த பல செயல்பாடுகளிலும் குறிப்பாக, நமது தலத் திரு அவையிலும், உலகளாவிய திரு அவையிலும் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன என்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதே!

இந்த ஊடகப் பயன்பாட்டைத் திரு அவை பெரிதும் வரவேற்பதுடன், அதன் பயன்பாடு படைத்தவரின் திட்டத்திற்கு மாறாகச் செல்லும்போது சமூகத்திற்குப் பெரும் அழிவை ஏற்படுத்தும் எனத் தம் மக்களை எச்சரிக்கவும் தவறவில்லை. மேலும், தனது மக்களைச் சிறந்த ஊடகங்களாகத் திகழ திரு அவை உற்சாகப்படுத்துவதுடன், அனைத்து ஊடக வழிமுறைகளையும், கருவிகளையும் சமூக மேம்பாட்டிற்காக நேரிய வழியில் பயன்படுத்த வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

நாகரிகம் வளர வளர மனிதன் செய்யும் குற்றங்களும், பாவங்களும் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. வணிகக் கலாச்சாரத்தில் மூச்சுத்திணறும் இன்றைய சமூகச் சூழலில் பிரச்சினைகள் தீர்க்க முடியாத வண்ணம் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவை குறித்துச் சரியான புரிதலும், அவற்றைத் தெளிவுபடுத்தும் செய்திகளும், தீர்வை நோக்கிய முறையான வழிகாட்டுதலும் ஊடகங்களால்தான் வழங்க முடியும் என்கிறார்கள் ஊடகவியலாளர்கள். ஆகவே, இத்தகைய சூழ்நிலைகளில் துல்லியமாகவும், முழுமையாகவும், உண்மையாகவும், விருப்பு-வெறுப்புக்கு இடமில்லாமலும் நடுநிலைக் காத்து, ஊடகங்கள் உண்மையை உரைக்க அறிவுறுத்தப்படுகின்றன.

‘தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம், குடிசைகளையும் எரிக்கலாம்’ என்பது ஊடகத்திற்கு முற்றிலும் பொருந்தும். வான்மேகம் பொழிகின்ற நீர் தூயது; ஆனால், நிலத்தின் தன்மைக்கேற்ப, மண்ணின் நிறத்திற்கேற்ப ஓடுகின்ற நீர் நிறம் மாறுவது போல, ஊடகங்கள் இன்று உண்மையை வழங்குவதில் தளத்திற்குத் தளம் மாறுபட்டு நிற்கின்றன.

இந்திய மண்ணில் விடுதலை கண்விழித்த தொடக்கக் காலங்களில் ஊடகம் பெரிதும் மதிக்கப்பட்டது; அதன் தேவை உணரப்பட்டது; தனித்துவம் போற்றப்பட்டது; தனிச்சுதந்திரம் வழங்கப்பட்டது; சிறப்பாக அரசியலமைப்பைத் தாங்கும் தூணாக உயர்த்தப்பட்டது. ஆகவே, அவ்வேளையில் ஊடகங்களின் உரிமைக்குப் பங்கம் ஏதும் பெரிதாக நேர்ந்துவிடவில்லை. ஆனால், இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊடகச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அண்மைக் கால பா.ச.க. ஆட்சியில் ஊடகச் சுதந்திரம் பெரிதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது; ஊடக உரிமை மறுக்கப்படுகிறது; குரல்வளை நெரிக்கப்படுகிறது; உண்மை மறைக்கப்படுகிறது; ஊடகவியலாளர்கள் மரணிக்கப்படுகிறார்கள். பொய்மையும், போலிகளுமே இங்கே இன்று கட்டமைக்கப்பட்டு உலா வருகின்றன.

‘கருத்துகளைச் சுதந்திரமாக எடுத்துச்சொல்லும் பேச்சுரிமை நமக்கு மறுக்கப்பட்டால், வெட்டப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படும் ஆடுகளைப் போல நாம் ஊமையாக, அமைதியாக இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்றே பொருள்’ என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன். ஆகவே, ‘நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வுக்குச் சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஒவ்வோர் ஊடகத்தாரின் சுதந்திரம் என்பதும் மிகவும் முக்கியம்’ என்கிறார் அவர். அவ்வாறே ‘கருத்துகளை ஆக்கவும், அறியவும், வெளிப்படுத்தவும், கற்பிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு’ என்றும், ‘இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று’ என்றும் எடுத்துரைக்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் - 19 (1.a). மேலும், ‘கருத்துகளைத் தேடவும், பெறவும், பகிர்ந்து கொள்ளவும் அனைவருக்கும் உரிமை உண்டு’ என  1948-ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அமைப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஆகவேதான், இன்று ஆட்சியாளர்கள் ஊடகங்களைக் கண்டு அஞ்சுகின்றனர். அவர்கள் நேரிய வழியில் ஆட்சி செய்தால், ஊடகங்களைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? அச்சு ஊடகங்களும், புத்தகங்களும், பத்திரிகைகளும் பிரஞ்சு புரட்சிக்கும், அமெரிக்க விடுதலைப் போருக்கும் அடித்தளம் அமைத்தன என்ற உண்மையை அவர்களால் மறுக்கவும் முடியாது; மறக்கவும் முடியாதல்லவா! அதுபோலவே சர்வாதிகாரர்களுக்குச் சாவுமணி அடித்த சரித்திரமும் ஊடகங்களுக்கு உண்டு என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள் அல்லவா! ஊடகம் என்பது குறைகளை மட்டுமே காண்பதல்ல; குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், நிறைகளைத் தட்டிக் கொடுப்பதிலும் தனி இடம் பிடிப்பவை. ஆகவேதான், ‘ஊடகம் என்பது மக்களைக் கவர்வதற்கு உருவாக்கப்பட்டது அல்ல; மாறாக, அவர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதற்கே!’ என்கிறார் தேவ் வில்லிஸ் என்னும் எண்ணிம தொழில்நுட்ப ஊடகவியலாளர்.

கற்காலம் தொடங்கி, கணினி காலமான இன்று வரை மனித வாழ்வில் ஊடகத்தின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கின்றது. மனித குலத்தின் நன்மைகளுக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் இன்று மனித குலம் சிதைந்து கிடப்பது வேதனையளிக்கிறது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் ஊடகம் என்ற வார்த்தையின் எல்லை விரிந்து இருக்கிறது. ஆகவே, பரந்து விரிந்த இந்த ஊடகத் தளத்தில் மேன்மையான சமூகக் குடும்ப மற்றும் தனிமனித வாழ்வியல் தரம் உயர்ந்திருக்க வேண்டும்.

‘ஊடகம் முறையாகப் பயன்படுத்தப்படுமாயின், அது மனிதகுலத்திற்கு மாபெரும் பயனளிக்கக் கூடியதாக அமையும். மேலும், பொழுதுபோக்கிற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் ஊடகம் பங்காற்றுவது போல, இறையரசைப் பறைசாற்றும் பணிக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கும்’ எனக் குறிப்பிடும் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க ஏட்டின் (Inter Mirifica, 2) வழிநின்று இளையோர் எண்ணிம நற்செய்திப் பணியாளர்களாக (Digital Evangelizers) மாறவேண்டுமென அழைப்பு விடுக்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகவே, அழிவுக்குரிய வாசல் விரிந்திருந்தாலும், வாழ்வுக்குரிய குறுகிய பாதையை இனம் கண்டு இளையோர் புலனம், வலையொளி, படரி, கீச்சகம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும், எண்ணிம தொழில்நுட்ப ஊடகங்களிலும் பயணித்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மனிதகுலத்தின் பயன்பாட்டிற்காகவும், உலகின் மீதான கடவுளின் திட்டம் நிறைவேறவும், புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்பங்களையும் நாமும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவோம்! தீயவை களைந்து, நல்லவை பெருக்குவோம்!

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
news
தலையங்கம்
வேளாண் திட்டங்களும் வேலையில்லாத் திண்டாட்டங்களும்!
தமிழரின் சங்க காலம் தொட்டே வேளாண் உளவுத் தொழில் மானுடச் சமூக வாழ்வில் சிறப்பிடம் கொண்டதாக இருக்கிறது. இது உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைத் தொழிலாகக் கருதப்பட்டதால் அனைத்துத் தொழில்களுக்கும் ஆதாரமானதாகக் கணிக்கப்பட்டது; உழவர் சமூகம் முதலிடத்தில் வைக்கப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்டது. எனவேதான்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள் 1033)

என்றார் ஐயன் வள்ளுவர். ‘வேள்’ என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல்லாடல் பொதுவாகக் கொடை, ஈகை எனப் பொருள் கொள்கிறது. அதாவது, விளைபொருள்கள் அனைத்தும் நிலத்தின் கொடையாதலால் அவ்வாறு கருதப்பட்டது. மேலும், வேளாண் என்னும் சொல், வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருள் கொள்கிறதாம். இவ்வாறாக, வேளாண்மை என்ற சொல் ‘விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்’ என்றே பொருள் கொள்கிறது.

அவ்வாறே, Agricultura என்னும் இலத்தீன் சொல்லாடலில் இருந்து பிறந்த Agriculture என்னும் ஆங்கிலச் சொல், Ager  (நிலம்), Cultura (பண்படுத்துதல்) என்னும் அதன் மூலச் சொற்களைத் தழுவி நிலத்தைப் பண்படுத்தும் செயல் எனக் குறிப்பிடுகிறது. நாடோடிகளாக இருந்த மனித இனம் நீர் நிலைகளைத் தேடிச்சென்று, நிலையான வாழ்விடங்களை அமைத்து, மண்ணையும், தங்கள் மனங்களையும் பண்படுத்தலாயினர்; நாகரிக எழுச்சி கண்டனர். ஆகவே, உணவு, பண்பாடு, இயற்கை, வழிபாடு என மனித இனத்தின் உயர் நிலைச் செயல்பாடுகளை முன்வைத்து மானுட வாழ்வியலின் பரிணாமத்தில் சமூக-பொருளாதார மாற்றத்திற்கு வழிவகுத்தது இந்த வேளாண்மைத் தொழிலே!  ‘வேளாண்மையே மற்ற எல்லாக் கலைகளுக்கும் முறைப்படுத்தப்பட்ட சட்ட அமைப்புகளுக்கும் காரணமாக அமைந்தது’ என்கின்றனர் வரலாற்றுப் பேராசிரியர்கள். ஆகவேதான், பண்டைய தமிழ் மரபில் ‘உழவர்’ என்ற சிறப்புப் பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டிருக்கிறது.

வேளாண்மைத் தொழில் இல்லாமல் நாட்டில் எதுவும் இல்லை. உலகில் பொருளீட்ட எத்தனை தொழில்கள் இருந்தாலும், நமக்கு உணவூட்ட முன்னிருப்பது விவசாயம் மட்டுமே, விவசாயிகள் மட்டுமே! கடும் வெயிலிலும் மழையிலும் காணி கண்டு, இவ்வுலகிற்கு உணவளிக்கும் உன்னதமான மனிதர்கள் அவர்கள். உலகம் பல்வேறு தொழில்களைச் செய்து சுழன்றாலும் ஏர்த்தொழிலின் பின்னிருப்பது என்பதை உரக்கச் சொல்கிறார் வள்ளுவர்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் 1031)

என்கிறார். மானுட வாழ்வியலுக்குக் கலாச்சாரப் பண்பாட்டைக் கற்றுத்தந்த இத்தகைய சிறப்புப் பெற்ற உழவுத் தொழில், இருபதாம் நூற்றாண்டின் கவர்ச்சிமிகு நாகரிக வளர்ச்சியால், வசதி வாய்ப்புகள் கொண்ட பேராசையால், மேற்கத்தியக் கலாச்சார மோகத்தால், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியால் அதன் முக்கியத்துவம் சிதைக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.

உழவன் கண்டுகொள்ளப்படாததும், உழவுத் தொழில் சிறுமைப்படுத்தப்படுவதும், அவனது உரிமைகள் மறுக்கப்படுவதும், வாழ்வாதாரம் பெரும் முதலாளிகளால் சூறையாடப்படுவதும் இந்திய அரசியல் சூழலில் அன்றாட நிகழ்வுகளாக அரங்கேறுவதே கவலை அளிக்கிறது.

1991 மற்றும் 2011 -ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு இடையே 20 ஆண்டுகளில் விவசாயிகளின் எண்ணிக்கை 72 இலட்சம் குறைந்திருக்கிறது என்பதும், திட்டக் கமிஷனின் புள்ளி விவரப்படி 2005 முதல் 2010 -ஆம் ஆண்டு கால இடைவெளியில் விவசாயத் துறைகளில் 140 இலட்சம் வேலை இழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதும் அதிர்ச்சியளிக்கின்றன. மேலும், தேசியக் குற்றப் பதிவு மையம் (National  Crime Records Bureau) 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட புள்ளி விவரப்படி 1995 முதல் 2013 வரையிலான 18 ஆண்டுகளில் மூன்று இலட்சம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதும், இது பெண்கள், தலித் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் தற்கொலையைத் தவிர்த்த புள்ளி விவரம் என்பதும் உள்ளத்தை உலுக்குகிறது. இப்புள்ளி விவரத்தின் நீட்சியாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில் நமது நாட்டில் ஒவ்வொரு 32 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இவர்களின் உரிமைக்கான போராட்டம் ஓராண்டு, நான்கு மாதம், இரண்டு நாள்கள் (ஆகஸ்டு 9, 2020 - டிசம்பர் 11, 2021) நீடித்த போதும் கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ச.க. அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், அண்மைக் காலத்தில் ஒன்றிய அமைச்சரவை அளித்த வேளாண் திட்ட ஒப்புதல் வாயிலாகவும் கபட நாடகமாடுகிறது. கண்களைக் குருடாக்கி விட்டு சூரிய நமஸ்காரத்திற்கு அழைக்கிறது.

விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களை வலுப்படுத்திவிட்டு, 14 கோடியில் ஏழு புதிய வேளாண் திட்டங்கள் எனக் கவர்ச்சி வலை விரிக்கிறது. இதுவும் மத்திய-மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு உத்திகள் போலத்தான் தெரிகிறது.

1) விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த எண்ம (டிஜிட்டல்) வேளாண்மை இயக்கத் திட்டமும், 2) காலநிலையைத் தாங்கும் பயிர்களைப் பயிரிடும் நடைமுறையைப் பரவலாக்கி உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டமும், 3) இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆகிய கல்வித்துறைகளை வலுப்படுத்தும் திட்டமும், 4) கால்நடை சுகாதார மேலாண்மை மற்றும் கால்நடைக் கல்வி, பால் உற்பத்தித் தொழில்நுட்ப மேம்பாடுகளை உள்ளடக்கிய திட்டமும், 5) மருத்துவ மற்றும் நறுமண வகைத் தாவரங்களை உள்ளடக்கிய தோட்டக்கலை வளர்ச்சிக்கான திட்டமும், 6) நாடு முழுவதும் 700 -க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வேளாண்மை அறிவியல் மையங்களான கிருஷி விக்யான் கேந்திரங்களை (கே.வி.கே.) வலுப்படுத்தும் திட்டமும், 7) இயற்கை வள மேலாண்மைக்கான திட்டங்களும் என ஏழு திட்டங்களை முன்வைத்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலையும் பெற்றிருக்கிறது பா.ச.க. அரசு.

இத்திட்டங்கள் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என ஒன்றிய பா.ச.க. அரசு அறிவித்தாலும், வருவாய் ஈட்டவிருக்கின்ற பெரும் முதலாளிகள் யார் என்பதை ஊரும் நாடும், ஏன் உலகமுமே அறியும். வேளாண் மற்றும் உழவர் நலன் துறை சார்ந்த ஒன்றிய அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பேற்றது முதல் கூடுதல் கவனம் வேளாண் துறை மீது செலுத்தப்படுவதாகக் காட்சிப்படுத்தப்பட்டாலும், திரை மறைவில் பெரும் முதலாளிகள், இடைத் தரகர்கள், வங்கிக்கடன் வழியாகத் திட்டமிட்டு சிறு-குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்குவதுமே இலக்காகத் தென்படுகிறது. ‘டிஜிட்டல் (எண்ம) வேளாண்மை மிஷன் திட்டம்’ எனத் திட்டங்கள் கவர்ச்சியாக இருந்தாலும், ‘சிங்கிள் டீ’ செலவுக்குக்கூட வசதி இல்லாத நிலையிலேயே உழவனின் அன்றாட நாளும் பொழுதும் விடிகிறது என்பதே எதார்த்தம்.

விவசாயம் இலாபம் ஈட்டும் தொழிலாக இன்னும் முன்னேறவில்லை என்பதே உண்மை. ‘உழுபவன் உழுதுகொண்டே இருக்கிறான்; இடை வருபவனோ உறிஞ்சி கொழுத்துக் கொண்டே இருக்கிறான்’ என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது.

போதிய அளவு வேளாண் கடன் உதவி வழங்குவது, மானிய முறையில் விதைபொருள்கள், உரம், வேளாண் கருவிகள் வழங்குவது, விளைப்பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வது, அரசே விளைப்பொருள்களைக் கொள்முதல் செய்வது, உழவர்களுக்கு மருத்துவ வாழ்வாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் வழங்குவது, இளைய தலைமுறையினரிடத்தில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து விவசாயத் தொழில் உள்கூறுகளை முன்னெடுக்க ஊக்குவிப்பது, விவசாயிகளின் பிள்ளைகளுக்குக் கல்வி ஊக்கத்தொகை, அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவது என அரசு பரந்த நோக்குடன் உழவுச் சமூகத்தைப் பார்க்க வேண்டும். கவர்ச்சித் திட்டங்களால் களவாடப்படும் அவர்களின் வாழ்வுரிமை காக்கப்பட வேண்டும். மேலும், வேளாண் துறை சார்ந்த தொழில்நுட்பப் புரிதல் கொண்டுள்ள அதிகாரிகள் கணினி, எண்ம தொழில்நுட்பப் பயிற்சி பற்றி விவசாயிகளுக்கு நல்ல புரிதலும் பயிற்சியும் முதலில் வழங்க முயல வேண்டும்.

ஒன்றிய பா.ச.க. அரசின் கடந்த பத்து ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இளமையைக் கழிக்கும் இளையோர் மாற்றுச் சிந்தனையுடன் விவசாயம் சார்ந்த தொழில்துறைகளில் நவீன தொழில்நுட்பம் கொண்டு பயணிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.

உழவர் காப்பீட்டுத் திட்டம், உழவர் ஊக்கத் தொகை, ‘விவசாயிகளுடன் ஒருநாள்’ என உழவர் வாழ்வு மேம்பட இங்கே தமிழ்நாடு அரசு சில சிறப்புத் திட்டங்களை முன்னெடுத்தாலும், இன்னும் சிறப்புச் சலுகைகள் வழங்கி உழவுத் தொழிலுக்கும், உழவர் வாழ்வுக்கும் அரசு உயிர் கொடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
news
தலையங்கம்
உலகமே உற்றுநோக்கும் அமெரிக்கத் தேர்தல்!
உலகின் மிக உயர்ந்த, சக்தி வாய்ந்த பதவியாகக் கருதப்படும் அமெரிக்க நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும், இந்திய உறவுமுறை வழிவந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் சனநாயகக் கட்சி வேட்பாளராகவும் இந்தத் தேர்தலில் களம் காண்கின்றனர்.
உலகின் மிகப் பழமையான சனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபர் பதவியில் இருக்கும் நபருக்கு, தங்கள் நாட்டிலும் உலக அளவிலும் பல அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. தங்கள் நாட்டின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், காலநிலை மாற்றம், தேசியப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் எனப் பல முக்கியத் துறைகளில் நாட்டை வழிநடத்துவதோடு, இத்துறைகளில் உலகளாவிய பங்களிப்புச் செய்யும் பொறுப்பாகவும் அது பார்க்கப்படுகிறது.
அதிபர் பொறுப்பில் இருக்கும் நபர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும், கையொப்பமிடும் முன்னெடுப்புகளும், மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஒப்பந்தங்களும் பல கோடி அமெரிக்கர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடியவை. மேலும், அமெரிக்கா உலக வல்லரசு நாடாக இருப்பதால், அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு பொருளாதார வர்த்தக மாற்றங்களும் முன்னெடுப்புகளும் புதிய சிந்தனைகளும் உலகமெங்கும் எதிரொலிக்கக் கூடியவை.
அமெரிக்காவின் அடுத்த நான்கு ஆண்டு காலம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தீர்மானிக்கும் தேர்தல்தான் இந்த அதிபர் தேர்தல். எனவே, இது அமெரிக்காவையும் தாண்டி, எப்போதும் சர்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாகவே கணிக்கப்படுகிறது. காரணம், அமெரிக்கப் பொருளாதாரத்தில் அதிபர் எடுக்கும் முடிவுகள் மிகவும் முக்கியமானவை. மேலும், அதிபராக இருப்பவர் அமெரிக்காவின் பிரதிநிதியாகவே உலக நாடுகளுக்கிடையே அடையாளப்படுத்தப்படுகிறார்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தமட்டில் பல கருத்துக் கணிப்புகள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் பரப்புரையின் போது நடத்தப்பட்ட படுகொலை முயற்சியில் இருந்து டொனால்ட் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பியதால் அவருக்கு அனுதாப அலைகள் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் எனப் பேசப்படுகிறது; ஆயினும், அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண், முதல் கறுப்பினத்தவர், முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற சாதனைகளைப் படைத்திருப்பவர் கமலா ஹாரிஸ். ஆகவே, பல நூற்றாண்டு கால அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர், அதிலும் முதல் கறுப்பினப் பெண் அதிபர், முதல் ஆசிய-இந்திய உறவுமுறை வழிவந்த அதிபர் (கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்; தந்தை ஜமைக்கா நாட்டவர். இவர்கள் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தவர்கள்) போன்ற பல்வேறு சாதகமான சூழல்களைக் கொண்டிருப்பதால் கமலா ஹாரிசுக்கு இவை வெற்றிக்கான கூடுதல் சாத்தியக் கூறுகள் எனக் கணிக்கப்படுகின்றன.
இந்தத் தேர்தல் தொடர்பாக பல ஊடகங்களும், ஆய்வு அமைப்புகளும் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் அனைத்துமே தொடக்கத்திலிருந்து வெற்றி வாய்ப்பு கமலா ஹாரிஸ் பக்கம் இருப்பதாகவே தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் செய்தி ஒளிபரப்பு முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் \'ஏ.பி.சி. நியூஸ்\' மற்றும் \'இப்சாஸ்\' (IPSAS - International Public Sector Accounting Standards) நிறுவனமும் நடத்திய கருத்துக்கணிப்பில் 50 விழுக்காட்டினர் கமலா ஹாரிசையும், 46 விழுக்காட்டினர் மட்டுமே டிரம்பையும் ஆதரிப்பதாகக் கருத்து வெளியிட்டிருக்கின்றன.
அவ்வாறே, CBS நியூஸ், CNN மற்றும் FOX நியூஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களும் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் எனத் தெரிவிக்கின்றன. CNBC 54%, CNN 53%, ABC செய்தி நியூஸ் 49% கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆயினும், பல்வேறு ஊடகங்கள் மேற்கொண்ட ஆய்வுகளிலும் கருத்துக்கணிப்புகளிலும் இருவருக்கும் இடையேயான இடைவெளி மிகச் சிறிதளவு எனவும், எனவே, வெற்றியைத் தீர்மானிக்கவிருப்பது நடுநிலையாளர்கள் எனவும் குறிப்பிடுகின்றன.
கமலா ஹாரிஸின் சனநாயகக் கட்சி உறுப்பினர்கள், பன்முகத்தன்மையை ஆதரிப்போர், கல்லூரி பட்டதாரிகள் இவர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதி பெரும் நகரங்கள். இந்நகர மக்கள் அவர் பக்கம் இருக்கிறார்கள். மறுபக்கம், மத உணர்வும், நிற சகிப்புத்தன்மை இல்லாத வெள்ளை இன உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் கிராமப்புறங்களை உள்ளடக்கிய மாகாணங்கள் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக இருக்கின்றன எனக் கருத்துக் கணிப்பு வெளிப்படுத்துகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களாலும், சட்ட விரோதமாகக் குடியேறிய நபர்களாலும் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அமெரிக்க மக்களுக்கு வேலையின்மை ஏற்படுவதாகவும் டிரம்ப் தனது பரப்புரையில் கருத்துகளை முன்வைக்கிறார். தான் நடுத்தரப் பொருளாதாரப் பின்புலத்தில் இருந்து வருவதாகவும், தன்னைத் தேர்ந்தெடுத்தால் அமெரிக்காவின் வர்த்தகம், பொருளாதார மேம்பாடு அடித்தட்டில் இருந்து நோக்கப்படும் எனவும், அவர்கள் வளர்ச்சிக்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் கமலா ஹாரிஸ் தனது பரப்புரையை முன்வைக்கிறார்.
ஆயினும், அமெரிக்கப் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கருக்கலைப்பு, சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய கருத்துகளில் இந்த வேட்பாளர்களின் நிலைப்பாடு, அவர்கள் கட்சியின் அணுகுமுறை ஆகியவை தேர்தல் முடிவிற்கு முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி போட்டியிடும் அதிபர் வேட்பாளர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற விவாதத்தில் டிரம்பைக் காட்டிலும் கமலா ஹாரிஸ் சிறப்பாகச் செயல்பட்டதாக அமெரிக்க அரசியல் பகுப்பாய்வு நிறுவனமான \'பாலி மார்க்கெட்\' தெரிவித்திருக்கிறது. விவாதத்தைக் கைக்கொள்ளும் விதம், கருத்துகளை முன்வைக்கும் முறை, தன் வாதத்தைத் தெளிவுற விளக்கும் விதம், நிதானத்துடன் எதிர் வேட்பாளரின் கேள்வியைக் கையாளும் விதம், பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் முன்வைக்கப்படும் திட்டங்கள் ஆகியவை அதிபரைத் தேர்ந்தெடுக்க மக்கள் மேற்கொள்ளும் அளவுகோல்களாகப் பார்க்கப்படுகின்றன.
அத்தகைய வகையில், கமலா ஹாரிஸ் இந்த முதல் விவாதத்தை நேர்மறையாகக் கைக்கொண்டதாகவும், மிகவும் நிதானமாகவும் பொறுமையோடும் பேசியதால் மக்கள் மனங்களில் அவர் இருப்பார் எனவும், தேர்தலில் இதுபோன்ற கடும் போட்டி நிலவும்போது கோபப்படும் தலைவரை மக்கள் விரும்புவதில்லை எனவும் அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
கமலா ஹாரிசுக்குக் கிடைக்கும் இந்த நேர்மறை எண்ணங்களுடன், ஒரு பெண் அமெரிக்காவை ஆள வேண்டும் எனப் பெண்ணியக் கருத்தியல் கொண்டவர்களும், \'பெண் வாக்கு ஒரு பெண்ணுக்கு\' என ஆதரவு தரும் பெண்ணிய அமைப்புகளும் கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்கின்றன.
இத்தகைய சூழலில், டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியாவே கமலா ஹாரிஸ்தான் வெல்ல வேண்டும் என்று நினைப்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார் வெள்ளை மாளிகையின் முன்னாள் தகவல் தொடர்பு செயலாளர் அந்தோணி இஸ்காரமுச்சி. அவ்வாறே குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி. வான்ஸ், கமலா ஹாரிஸின் குழந்தை பாக்கியம் பற்றி விமர்சித்த கருத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், பெண்ணியவாதிகள், சமூகச் செயல்பாட்டாளர்கள், ஊடகப் பிரபலங்கள் எனப் பலரையும் கமலா ஹாரிஸ் பக்கம் நிலைப்பாடு எடுக்கச் செய்திருக்கிறது.
மேலும், ஒபாமா, அதிபர் ஜோ பைடன் மற்றும் இரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட பலருடைய ஆதரவு கமலா ஹாரிசுக்கு இருக்கும் நிலையில், அவருக்கான வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவே பலரும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
ஒபாமாவைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பினப் பெண் அதிபராக ஆவதும், அதுவும் முதல் பெண் அதிபராக இருப்பதும், அவர் இந்தியா-தமிழ்நாடு உறவு வழிமுறை வந்தவர் என்பதும் நமக்குப் பெருமைதானே! அவர் வெற்றி பெற வாழ்த்துவோம்!
அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்