news
தலையங்கம்
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தொண்டும், துறவும்!
“என் உன்னதமான இந்தியத் திருநாட்டின் இளைஞனே! சமுதாய வீதியில் நீ கைவீசி நடக்கும்போது, நீ மட்டும் தனியாக நடப்பதாக ஒருபோதும் சோர்ந்துவிடாதே! உனக்குப் பின்னால் இந்த மண்ணின் பல நூறாண்டுச் சிறப்புமிக்க, மரபார்ந்த பெருமைகளும் தொடர்ந்து வருவதை உணர்ந்து கொள்வாய்” என்றார் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர். இந்திய மண்ணின் மரபார்ந்த பெருமை எது? என்ற கேள்விக்கு, ‘துறவு, தொண்டு இரண்டு மட்டுமே இப்பூமியின் அரிய தேசிய இலட்சியங்கள்’ என்கிறார் அவர்.

துறவு என்பது எல்லாருக்கும் எளிதாகக் கிட்டுவதில்லை; அது பேரருள், பெரும் வரம், உன்னதக் கொடை! அது ஒரு சிலருக்கே வழங்கப்படும் வரம்; அளிக்கப்படும் அருள்; கொடுக்கப்படும் கொடை! அத்தகைய துறவு வாழ்க்கையில், ஓர் உண்மையான துறவிக்கான இலக்கணம் வகுத்தவர் இவர். ‘சமயம் என்பது சக மனிதனை நேசிப்பது’ என்பதைத் துறவு வாழ்வின் இலக்கணமாகக் கொண்டவர்; அதை முழுமையாக அடைவதையே முழுமூச்சாகக் கொண்டவர் இவர்.

‘ஆன்மிகத்துக்கும், சமூகத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு’ என மேடைதோறும் முழங்கி, ஒன்றில் மற்றொன்றைக் கண்டவர்; அதனுடைய வளமைக்கும், செழுமைக்கும், சிறப்புக்கும் சிறப்பாகப் பங்களிப்புச் செய்தவர் இவர். சுயநலமின்றி உயிர்கள் அனைத்தின் மீதும் அளவுகடந்த அன்பு செலுத்தி ஆரத்தழுவியவர் இவர். அத்துணை உயிர்களுக்காகவும்,  அவற்றின் நலனுக்காகவும் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தவர் இவர்.

துறவு என்பது வாழ்வைத் துறப்பது அன்று; மாறாக, செய்யும் செயலின் பலனைத் துறப்பதே என்பதை ஆழமாக உணர்ந்தவர், உணர்த்தியவர் இவர். இத்தகைய புரிதலோடு பொதுவாழ்வில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் இவர். தொண்டும், துறவும்தான் பொதுவாழ்வின் இரு கண்கள் எனக் கொண்டவர் இவர். காவி உடை அணிந்து ‘கருமமே கண்ணாய் இருந்து’ துறவுக்கு இலக்கணம் வகுத்தவர் இவர். மாமதுரை மக்கள் பேராயர் மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி ஆண்டகையுடன் கரம் கோர்த்து, மனித நேயமும், மதநல்லிணக்கமும், சமூக மேம்பாடும், தமிழ்த் தொண்டும் கூறுகளாகக் கொண்ட ‘திரு அருட்பேரவை’ கண்டவர் இவர்.

திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் 45 - ஆம் குரு மகா சன்னிதானமாகப் பொறுப்பேற்று, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடிக்கு முகவரி தந்தவர். சமயத் திருமடங்களின் தலைவர்கள் மிகவும் பக்திபூர்வமாக குரு மகா சன்னிதானம், சுவாமிகள், தேசிகர் என்று அழைக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மக்கள் தொண்டையே முதன்மைப்படுத்துகிற வகையில் ‘அடிகள்’ என்ற அடையாளத்துடன் அன்போடு அழைக்கப்பட்டு ‘குன்றக்குடி அடிகளாராக’ வலம் வந்தவர்தான் திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாச்சலத் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் என்ற இயற்பெயர் கொண்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

சமூக அக்கறை கொண்டு ஆன்மிகப் பணிக்கான இலக்கணம் தந்து, செயலாக்கம் கண்ட குன்றக்குடி அடிகளாரின் பிறப்பின் நூற்றாண்டு விழாக் காலத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் மதநல்லிணக்கத் தளத்தில் இப்பேராளுமையை அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

அரங்கநாதனாகப் பிறந்து, கந்தசாமி பரதேசியாக வளர்ந்து, கந்தசாமி தம்பிரானாக உயர்ந்து, தவத்திரு குன்றக்குடி அடிகளாராக வலம் வந்த இப்பேராளுமை பதித்தத் தடங்கள் ஏராளம். சிறுவனாக இருந்தபோது வீதிகள்தோறும் வீடுகளில் பால் ஊற்றி வந்த இவர், சிறு வயதிலேயே தமிழ்ப்பாலும், ஞானப்பாலும்  கொண்டார் என்பது வரலாறு கூறும் பேருண்மை. அறம், பொருள், இன்பம் என முப்பால் வடித்து, அறநெறி வாழ்வுக்கு வரையறை தந்த ஐயன் வள்ளுவரின் திருக்குறளினை ஆழ்ந்து படித்து, துறவு வாழ்வுக்கு அணிசேர்த்த இவர் ஓர் இலக்கிய ஆளுமையாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சகவயது தோழர்களோடு ஒன்றிணைந்து மேற்கொண்ட சமூகப் பணிகளில் இளம் வயதிலேயே ஒரு சமூகத் தொண்டனாகத் தன்னை வளர்த்துக் கொண்டார். இலக்கிய மன்றங்களுக்கும், பேருரைத் தளங்களுக்கும் மேடை அமைத்து, தமிழ்ப் புலமையோடு, இலக்கிய வளத்தோடு பட்டிமன்றங்கள் அமைத்த பெருமையும் இவருக்கு உண்டு.

சமயம், பக்தி, வழிபாடு, தொழுகை என்பது உணர்வு சார்ந்தது; அவ்வுணர்வை வெளிப்படுத்துவதே மொழி  என்றுணர்ந்த அடிகளார், வழிபாடு இதயம் கலந்ததாக அமைய வேண்டும் என முழங்கினார். ஆகவே, திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை வேண்டுமென ஆதரித்தார். இது வடமொழிக்கு எதிரான வெறுப்பு அல்ல; மாறாக, வழிபடுவோரும் பொருள் உணர்ந்து வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. ஆகவேதான், ‘திருக்கோவில்களில் மணிகள் அசைந்தால் போதாது; மனித இதயங்களும் அசைய வேண்டும்’ என்றார்.

‘நாத்திகர்’ என ஆன்மிகவாதிகளால் ஒதுக்கப்பட்ட தந்தை பெரியாருடன் நேசம் காட்டினார். தமிழில் வழிபாட்டு உரிமை, அனைத்துச் சாதியினரும் ஆலய நுழைவு போன்ற தந்தை பெரியாரின் சமூக நீதிப் போர்களில்  இரட்டைக் குழல் துப்பாக்கியாக அவருடன் இணைந்து களத்தில் நின்றார். “அடிகளாரைப் போல பத்து பேர் தமிழ்நாட்டில் இருந்திருந்தால், எனது தொண்டுக்கே வேலை இருந்திருக்காது” என்றார் பெரியார்.

மண்டைக்காடு கலவரத்தால் குமரி மண் பற்றியெரிந்தபோது, ‘மக்கள் பேராயர்’ மரியானுஸ் ஆரோக்கியசாமி ஆண்டகையுடன் கைகோர்த்துக் கிறிஸ்தவர்களை ஆற்றுப்படுத்தினார். மதப்பித்துக் கொண்டோரை அடங்கவும் வைத்தார். தனது பொதுவாழ்வில் ஒடுக்கப்பட்டோரின் தோழமையாக வலம் வந்ததால், ‘காவி உடையில் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று இடதுசாரிகளால் பெருமிதத்துடன் அடையாளப்படுத்தப்பட்டார்.

ஆதீனத்தின் தொன்மை மரபுகளை முறையாகப் பின்பற்றுவதோடு, புதுமையான திட்டங்களையும், செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினார். திருவள்ளுவர் திருநாள், தமிழ்த் திருநாள் எனக் குன்றக்குடி ஆதீனத்தில் பல விழாக்கள் எடுத்த அடிகளார், சாதி சமய வேறுபாடு அற்ற சமத்துவ வழிபாட்டு முறைகளையும் முன்வைத்தார். கிராமங்கள் தன்னிறைவுகொள்ள பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுத்தார். குறிப்பாக, குன்றக்குடி பகுதிகளில் மக்கள் சமூக பொருளாதார மேம்பாடு காண வழிகாட்டினார். அறிவியல் பற்றாளர்களையும், கற்றறிந்தோரையும் ஒன்றிணைத்து அறிவியல் கழகங்கள் அமைத்துப் பணியாற்றினார். மேலும், ‘அருள்நெறி திருப்பணி மன்றம்’ அமைத்துக் கல்வியை யாவருக்கும் பரவலாக்கினார். குறிப்பாக, பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகள் அமைத்து இளையோரை ஆசிரியர் பணிக்குத் தயார்படுத்தினார்.

மரம் நடுதல், இயற்கை வேளாண்மை, தோட்டக் கலை என இயற்கை நேயம் கொண்டார். சாதி சமய வேறுபாடுகள் களைந்து எல்லா விழாக்களிலும், நிகழ்வுகளிலும், பொதுப் பிரச்சினைகளிலும், உரிமைப் போராட்டங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சமய  நல்லிணக்கராகப் போற்றப்பட்டார். பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களுடனும், ஆன்மிகத் தலைவர்களுடனும் நட்புப் பாராட்டினாலும், தான் கொண்ட கருத்தியலில், கொள்கைகளில் வழுவாது நின்று மனிதநேயம், மதநல்லிணக்கம், இயற்கை நேயம், பல்லுயிர் நேயம், மானுட உரிமை என்னும் பல்வேறு தலங்களில் குரல் கொடுத்து இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சமய - சமூக - ஆன்மிக ஆளுமையாக வலம் வந்தார்.

ஒவ்வொரு சொல்லையும் மந்திரம் போல் பயன்படுத்திய மனிதர்களை உலகம் எல்லாக் காலங்களிலும் மாலையிட்டு மரியாதை செய்தது என்பது வரலாறு. மானுடம் போற்றும் தொண்டையும், துறவையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த ‘அடிகளார்’ எனும் இப்பேராளுமை போன்று நாம் இனி காண்பது அரிது! இத்தகைய சமய, சமூக இலக்கணங்களுடன் வாழும் ஒரு துறவியை இன்றைய நமது வாழ்காலச் சமுதாயம் சந்திக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்!

‘நிறைகுடம் தழும்பாது’ என்பதும், ‘விளைந்த கதிர்களே தரைநோக்கிப் பணிந்து நிற்கும்’ என்பதும் அடக்கத்தின் அடையாளங்கள். அடக்கம் என்ற ஒற்றைப் புள்ளியிலேதான் அனைத்து நற்பண்புகளும் அடங்கி இருக்கின்றன. அடக்கம் உள்ள இடத்தில்தான் ஆண்டவனும் குடியிருக்கிறான். அடக்கம் பொதுநலத்தின் தேவாலயம். ஆகவே, மகத்தான மனிதர்கள் இறைவன் வாழும் ஆலயங்களே! அமைதியாக, சலனம் இன்றி இறைத் தொண்டாற்றிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழ்க் குடிகளின் இதய அரியணையில்  எந்நாளும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார் என்பதே பேருண்மை! வாழ்க அடிகளார்! வளர்க அவர் திருத்தொண்டு!

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
news
தலையங்கம்
யாருக்காக? இந்த நிதிநிலை யாருக்காக?
ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி தலைமையில் பா.ச.க.  கூட்டணி அரசு அடுத்த ஐந்து ஆண்டுக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள இச்சூழலில், இந்தக் கூட்டணி அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை மக்கள் மன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்திருக்கிறது. நிதி அமைச்சர்களாக இருந்த மொரார்ஜி தேசாய், மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோரைவிட ஏழாவது முறையாகத் தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் முதல் மத்திய நிதி அமைச்சர் என்ற பெருமையையும், முதல் பெண் நிதி அமைச்சர் என்ற புகழையும் தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பெறுகிறார்.

இந்தியத் திருநாட்டை உலகளவில் தலைநிமிரச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையைக் கண்டது நம் மக்களவை. இந்திய நாட்டின் பொருளாதாரச் சமூகக் கட்டமைப்புகளை உயர்த்தி, மிகப்பெரிய பொருளாதார வலிமையுள்ள நாடாக இந்தியாவை மாற்றிய நிதிநிலை அறிக்கைகளும், அதே வேளையில் கூரிய இலக்கும், தெளிந்த சிந்தனையும், முறையான கட்டமைப்பும், செயல்பாடுகளும் கொண்டிராத நிதிநிலை அறிக்கைகளையும் இந்த நாடு கண்டிருக்கிறது. அந்த வகையில், 2024-25 - ஆம் ஆண்டுக்கான, இந்த நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சருக்குப் பாராட்டுதலைக் கொண்டு வந்தாலும், குறிப்பிடத்தக்க சிறப்புக் கூறுகள் ஏதும் காணப்படாத வகையில் இது பெருத்த ஏமாற்றமான நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது.

கூட்டணி அரசுகளின் தயவோடு இயங்கும் இந்த அரசு, தனது கூட்டணிச் சகாக்களுக்குச் சலுகை வார்க்கும் நிதி நிலையாகவே இது விமர்சிக்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் பீகாருக்குச் சிறப்புத் திட்டங்களையும், பெரும் பொருள் உதவிகளையும் வழங்கும் இந்த நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த வகையான சிறப்புத் திட்டங்களையும், நிதி உதவிகளையும் அறிவிக்காத வகையில், இது ஒரு பாரபட்சம் கொண்ட நிதிநிலை அறிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சீர்திருத்தம் எனப் பல்வேறு உட்கூறுகளைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை இருந்தாலும், இளையோர், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் அதிகமாகச் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும், வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், அது நடைமுறையிலும் தொடர வேண்டும் என்பதே நமது அவா.

கவர்ச்சிகரமான திட்டங்கள் அலங்கார வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டிருப்பதாகவும், செயல்பாட்டில் எந்தச் சாத்தியக்கூறுகளையும் இந்த அறிக்கை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை என்றும் பொருளியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கான சிறப்புச் சலுகைகளைக் காணும் சூழலில், ‘கூட்டணிக் கட்சிகளைத் திருப்திபடுத்த பிற மாநிலங்களைக் காவு கொடுப்பதா?’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி. மேலும், இந்த நிதிநிலை அறிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியதோடு, இந்த நிதிநிலை அறிக்கை அம்பானி-அதானிகளுக்கானதே தவிர, இந்த நாட்டின் சாதாரண குடிமகனுக்கானது அல்ல என்ற உண்மையையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கும், பா.ச.க. ஆளும் மாநிலங்களுக்கும் அதீதமாக நிதி ஒதுக்கீடு வழங்கி, மற்ற மாநிலங்களை மாற்றாந்தாய் சிந்தனையோடு புறந்தள்ளியிருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை.

ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது பன்முக வளர்ச்சி கொண்டதாகவே அமைய வேண்டும். அந்த வளர்ச்சி எங்கும், எதிலும் சீரான வளர்ச்சி கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் வளர்ந்து கொண்டிருந்தால் அது வளர்ச்சியல்ல, வீக்கம்! இது நாட்டின் சமநிலையையே குலைத்துவிடும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும், மறு கண்ணுக்குச் சுண்ணாம்பும் வைக்கும் இந்த நிதி நிலைப்பாட்டால், நாட்டின் ஒரு பகுதி வீக்கம் அடைவதும், மற்றொரு பகுதி வீழ்ச்சி அடைவதும் ‘வலிமையான பாரதத்திற்கு’ நல்லதல்ல.

“இத்தகைய நடுநிலையற்ற நிர்வாகத்தால் நாட்டின் கூட்டாட்சித் தத்துவங்கள் சிதைக்கப்படும்” என்றும், “ஏற்ற-இறக்கம் கொண்ட சமூக நீதியற்ற சமூகத்தை இது உருவாக்கும்” என்றும் ஒன்றிய அரசை எச்சரிக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். மேலும், தமிழ், தமிழ்நாடு, தமிழர் என எந்த வார்த்தைகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் காணப்படவில்லை என்பதும், பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க உதவி நாடிய போதும் சட்ட ரீதியாகவே வழங்கப்பட வேண்டிய உதவிகள் இன்னும் வழங்கப்படாததும் பா.ச.க. தலைமையிலான ஒன்றியக் கூட்டணி அரசு தமிழ்நாட்டிற்கு இழைக்கும் பெரிய அநீதி என்றும் விமர்சித்திருக்கிறார். அவ்வாறே, இந்த நிதிநிலை அறிக்கை ஒருசாராரைத் திருப்திபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதுபோல இருப்பதாகவும், ஆகவே, ‘இது நிதிநிலை அறிக்கை அல்ல; கூட்டணி ஒப்பந்தம்’ எனவும் அவர் எள்ளி நகையாடி இருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் குறிப்பிடுவது போல, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அசாம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் ஆகிய மாநிலங்களுக்குப் பெரும் நிதி உதவி வழங்கியுள்ள இச்சூழலில், நாம் சந்தித்த சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி பெரும் வெள்ளச் சேதங்களுக்கு ஒரு சிறு துளி கூட பொருளுதவி அளிக்காதது பெருத்த ஏமாற்றமே; இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமே!

அனைத்து வகைகளிலும் தமிழ்நாடு இந்த நிதிநிலை அறிக்கையில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது; இது பெரும் கண்டனத்துக்குரியது! நாமும் இந்தியர்கள்; பிற மாநிலங்களை விட அதிக வரி செலுத்துபவர்கள்! குறிப்பாக, தென் மாநிலங்கள் அதிலும் சிறப்பாகத் தமிழ்நாடு அதிகமாகவே ஒன்றிய அரசுக்கு வரி செலுத்தும் சூழலில், நாம் கைமாறாக நிதிநிலை அறிக்கையில் எதுவுமே திரும்பப் பெற முடியாத சூழலில் இருப்பது பெரும் கவலைக்குரியதே!

“இந்த நிதிநிலை அறிக்கை வடமாநிலங்களையும், பா.ச.க. கூட்டணிக் கட்சிகளையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைச் சமநிலையோடு ஊக்குவிப்பதாக அமையவில்லை” எனக் குறிப்பிடும் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “தமிழ்நாட்டிற்கு எந்த விதமான திட்டங்களும் அறிவிக்கப்படாத நிலையில், இது தமிழ்நாட்டின் மீது ஒன்றிய பா.ச.க. அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது” என்றும் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றிய பா.ச.க.  அரசின் முறையற்ற நிதிநிலைக் கொள்கையால் இந்திய நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்திருக்கிறது என்பதே உண்மை. அது இன்றைய ஒன்றிய பா.ச.க. கூட்டணி ஆட்சியிலும் தொடர்வது மிகுந்த வேதனைக்குரியது. மேலும், “பா.ச.க. அரசின் நிதிநிலை அறிக்கை ஒருபோதும் ஏழை மக்களுக்கானதாக இருந்ததில்லை” எனக் குறிப்பிடுகிறார் திரு. வைகோ. ஆகவே, “இந்த நிதிநிலை அறிக்கை, குறைந்த விலையில் மக்களின் நிலத்தைக் கையகப்படுத்தி முதலாளிகளுக்குத் தருவதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைக் கூலிகளாக அடையாளப்படுத்துவதாகவும், முதலாளிகளுக்கு வரிகளையும், வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்துவிட்டு, ஏழை மக்களின் வரிப்பணத்தை மூலதனமாக வாரி வழங்குவதாகவும் இருக்கிறது” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன்.

மனித வளம், இயற்கை வளம், தொழில் வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி எனப் பல்வேறு வளங்களை இந்தியத் திருநாடு கொண்டிருந்த போதிலும், அது முறையாகக் கணிக்கப்படாததும், சரியாக முறைப்படுத்தப்படாததும், சீராகப் பகிரப்படாததும் ஆளும் ஒன்றிய பா.ச.க. அரசின் நிர்வாகக் கையறு நிலையையே குறிக்கிறது. இத்தகைய வளங்கள் இருந்தும், எல்லா மக்கள் மீதும் முறையான அன்பும், அக்கறையும், கரிசனையும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களும் கொண்டிராத ஓர் அரசால், அரசனால் எந்தப் பயனும் கிட்டுவதில்லை. இதையே பொதுமறை தந்த ஐயன் திருவள்ளுவர்,

‘ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு’ (குறள் 740)

என்று குறிப்பிடுகிறார். அதாவது, எல்லா விதமான செல்வ வளங்கள் இருந்தாலும், குடிமக்கள்மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் எந்தப் பயனும் அமையப் போவதில்லை என்றே குறிப்பிடுகிறார்.

இறுதியாக, ஒன்றிய பா.ச.க. அரசின் ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் இளையோரின் கனவு தொடர்ந்து சிதைக்கப்படுவது பெரும் கவலை அளிக்கிறது. ‘நல்ல காலம் விடியும்’ என்னும் நம்பிக்கையில் உள்ள இளையோருக்கு இது பெருத்த ஏமாற்றமே. பொற்காலத்தை இந்திய மண்ணில் காணும் அவர்களின் கனவைச் சிதைப்பதாகவே இருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை. கூட்டணிச் சகாக்களுக்கு வரிப்பணத்தை வாரி வழங்கும் இந்த அரசின் நிதிநிலை அறிக்கையை, ‘சந்தர்ப்பவாத நிதிநிலை அறிக்கை’ என்று அழைப்பதே பொருத்தம். சந்தர்ப்பவாதம் சவாரி செய்யாத நல்ல அரசியல் களம்தான் எங்கே  இருக்கிறது? வல்லரசு நாடு, டிஜிட்டல் இந்தியா, ‘மேக் இன் இந்தியா’ என்று மார்தட்டிக் கொள்ள வளமையான இந்தியாவைக் காண கனவு கொண்டிருக்கும் பா.ச.க. அரசு தீட்டும் திட்டங்களும், வெளியிடும் நிதிநிலை அறிக்கைகளும் அனைத்துத் தளங்களிலும்  தோல்விக்கானதாகவே இருக்கின்றன. பா.ச.க. அரசின் இத்தகைய நிலையைக் காணும்போது...

‘குதிரை ஏறப்போவதாகக் கூறிக்கொண்டே
காலம் முழுவதும் கழுதை மேல் ஊர்வலம்!’
என்ற கவிஞர் அரவிந்தனின் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகிறது.

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
news
தலையங்கம்
என்று விடியும் எங்கள் உரிமை வாழ்வு?
வாழ்க்கையில் போராட்டங்கள் எழலாம்; ஆனால், போராட்டமே வாழ்க்கையாகக் கூடாது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் இந்திய மண்ணில் சாதியமும் தீண்டாமையும் தலைவிரித்தாடுவது அவலத்திலும் அவலம். அதில் உரிமைக்காகப் போராட்டங்கள் தொடர்வது பேரவலம். எனவேதான், அண்ணல் அம்பேத்கர் அவர்கள், “பண்பாட்டு ஒற்றுமையில் இந்தியாவுக்கு ஈடு இணை இல்லை! இந்தியா புவியியல் ஒற்றுமையோடு அதனினும் ஆழமான பண்பாட்டு ஒற்றுமையையும் கொண்டுள்ளது. ஆனால், இங்குச் சாதி என்பதே புரிந்துகொள்ள இயலாப் பிரச்சினையாக இருக்கிறது” என்றார்.

உலகில் எங்குமே காணாது, இந்திய மண்ணில் மட்டுமே மக்களின் சமூகக் கட்டமைப்பும் வாழ்வியலும் வர்ணாசிரமம் வார்த்தெடுத்த சாதிய முறையால் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக மத ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், சமூகக் கட்டுப்பாடாகவும் இன்றுவரை தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் இச்சமூகக் கட்டமைப்பை முற்றிலுமாக அறுத்தெறிய முனைந்து நின்றார் அம்பேத்கர். ஆனால், தீண்டாமையை வேரறுத்து, தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்திலேயே இருக்கச் செய்ய இறுதிவரை முயன்றவர் ‘தேசப்பிதா’ காந்தியடிகள். தனி வாக்காளர் தொகுதிகளை வழங்கி, தாழ்த்தப்பட்டவர்களை நிரந்தரமாக இந்துகளுக்கு எதிராக நிறுத்த பிரிட்டிஷ் அரசு சதி செய்வதாகக் கூறி  உண்ணா நோன்பிருந்தார் காந்தியடிகள் என்பதும் வரலாறு. “வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர்நீச்சல் போட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் எம்மக்களுக்கு இம்மதம் பாதுகாப்பு வழங்கவில்லை; மாறாக, சமூகத்தில் பழகுவதற்குக் கூடத் தகுதியற்றவர்களாக இவர்கள் தள்ளி வைக்கப்படுகிறார்கள்; புறக்கணிக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் ஈவிரக்கம் இன்றி அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்;  ஆகவே, மற்றவர்களுக்கு அடிமைகளாக வாழ எம்மவரை ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்”  என்றே உறுதி பூண்டார் அம்பேத்கர்.

இக்கரையில் இருந்து அக்கரை நோக்கிய நம்மவர்கள் வானிலும் வாழ்விலும் விடியல் தென்படுவதாகக் கண்டு, இந்தியர்களாக-இந்துகளாக இருந்தவர்கள் அரசியல் அமைப்புச் சட்டம் தந்த உரிமையை ஏற்று கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் மார்க்கமாகத் தழுவிக் கொண்டாலும் அடிப்படையில் நாம் இந்தியர்களாகவே வாழ்ந்து வருகிறோம். ஆயினும், அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் சாதி, மதம், இனம் என்ற பட்டியலுக்குள் அடக்கப்பட்டுப்  பிளவுபடுத்தப்படுகிறார்கள் என்பதே எதார்த்தம். தீண்டாமையை, சாதி ஒழிப்பைக் களம் கண்டு ஒழிக்க வேண்டிய அரசியல் தலைவர்கள், அதிகாரச் சுகங்களை அனுபவிக்க சாதி வெறியைத் தூண்டுபவர்களாகவே செயல்படுவதுதான் சமூகத்தின் மிகப்பெரிய சாபம்!

சமூகக் கட்டமைப்பின் மேல்தட்டு வரிசையில் சுகம் காணும் ஒருசாராரும், அடிமையின் பிடியில், ஆதிக்கச் சுரண்டலில், பொருளாதார வறுமையில், வாழ்விழந்த சூழலில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மறுமுனையிலும் இருக்கும் இந்த முரண் களையப்பட வேண் டும். சாதியத் திமிரும், அதன் கோரப்பிடியும் ஒடுங்கினால்தான் அரசியல், பொருளாதார, வாழ்வியல் சீர்திருத்தங்களை ஒரு சமூகம் காண முடியும்.

அநீதியான சமூக ஏற்றத்தாழ்வுகளினால் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களில் பின்னடைவுகளைச் சந்திக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களை அவர்களின் சமூக அவலங்களில் இருந்து மீட்டு, உரிமை வாழ்வுக்கு அழைத்துச் செல்வதே மானுடப் பண்பாகும். ஆனால், பொதுநலனை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமநீதியை, ஒற்றுமையை, மனித தர்மத்தை, பொதுநலச் சிந்தனையை ‘சாதியம்’ கொன்று அழித்து விட்டது. சமுதாயத்தின் கடைக்கோடியில் தள்ளப்பட்டவர்களைக் கண்கொண்டு பார்க்க இந்த நாட்டில் நாதியில்லை. சாதிய அடிப்படையில் படிப்புரிமை, சொத்துரிமை மறுக்கப்பட்டு விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு உரிமை வாழ்வு வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக நீதி.

பிற்படுத்தப்பட்ட இந்துகள் பட்டியல் இனத்தவராகச் சேர்க்கப்பட்டு அரசின் உரிமைகளும் சலுகைகளும் பெற்று வாழ்கின்றபோது கிறிஸ்தவ, இஸ்லாமியப் பிற்படுத்தப்பட்ட மக்கள் மட்டும் உரிமைகளை இழந்து நிற்பது திட்டமிட்டு, சட்ட வடிவம் கொண்டு அவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியே!

இந்நிலையில் உரிமைக்கான குரல் கடந்த எழுபது ஆண்டுகளாக இந்த மண்ணில் எதிரொலித்தாலும் கேட்கச்செவியற்றவர்களாகவே அரசியல் தலைவர்கள் இருப்பது வெட்கக்கேடு. ஆயினும், ஆண்டுதோறும் ஆகஸ்டு 10-ஆம் நாள் நாம் கடைப்பிடிக்கும் ‘கறுப்பு தினம்’ கிறிஸ்தவத் தலித் மக்களின் உரிமைக்கான விடியல் தினமாகவே கொண்டாடப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு-15, ‘சாதி, சமயம், இனம், மொழி, பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் அரசு தன் மக்களை ஒருபோதும் பிளவுபடுத்திப் பார்க்கக்கூடாது’ என்றே குறிப்பிடுகிறது. மேலும், மதச்சுதந்திரத்திற்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் 25 முதல் 28 வரையிலான பிரிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால், 1950 -ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் வெளியிட்ட ஆணைப்படி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தலித் கிறிஸ்தவர்கள் நீக்கப்பட்டிருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்கு எதிரானதே!

‘நிர்வாகச் சட்டக் காரணங்களுக்காக’ என முத்திரை குத்தப்பட்ட இந்த ஆணை, மற்றொரு நிர்வாகச் சட்டத்தால் ஏன் மாற்றி அமைக்கப்படக் கூடாது? என்பதே நமது கேள்வி.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் நீதியை, உரிமையை, சலுகையை யாவரும் சமமாகப் பெற வேண்டும் என்பதே சமூகநீதி. “இந்து சமயத்திலிருந்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவச் சமயங்களுக்கு மதம் மாறிய தலித் மற்றும் பழங்குடி மக்களும், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியில் சேர்க்கப்பட்டு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என நீதியரசர் இரங்கநாத் மிஸ்ரா அறிக்கை குறிப்பிடுகிறது. ஆகவே, தலித் கிறிஸ்தவர்களும் பட்டியலினத்தவர் வரிசையில் சேர்க்கப்பட்டு வேலைவாய்ப்பு, கல்வி, இடஒதுக்கீடு, தேர்தல் பங்களிப்பு எனச் சட்டப்பூர்வமாக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையே இந்நாளில் நாம் முழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்ட இந்தக் கறுப்பு தினம் அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் பல அதிர்வுகளைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதே உண்மை. ஆயினும், இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்களை இன்னும் வீரியத்தோடு நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும். “தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது ஏதோ இது தலித் கிறிஸ்தவர்களுக்கான பிரச்சினை அல்ல; இது அனைவருக்குமான பிரச்சினை. இது நீதிக்கான பிரச்சினை; இது நாட்டுக்கான பிரச்சினை; இது திரு அவைக்கான பிரச்சினை. எனவே, இந்த உரிமைப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று விடியல் வரும்வரை போராட வேண்டும்” என்று அழைப்பு விடுக்கிறார் பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள்.

அவ்வாறே செங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள், “இன்றைக்கு எங்குப் பார்த்தாலும் சமத்துவம், சமூகநீதி என்பது முழங்கப்படுகிறது. அரசியல் மேடைகளானாலும் சரி, ஆலயப் பீடங்களானாலும் சரி, சமத்துவம் சமூக நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், வேதனை மிகுந்த எதார்த்த உண்மை என்னவென்றால், சமூகத்தில் சமத்துவம் இல்லை; சமயம் சார்ந்த இடத்திலும் சமத்துவம் இல்லை. இத்தகைய சூழல் சமூகத்திலும் திரு அவையிலும் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்; மனித மாண்புடன் அவர்கள் வாழ வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்” என அழைப்பு விடுக்கிறார்.

நீதி என்பது யாவருக்கும் சரியானது, சமமானது, பொதுவானது என்பதே நியதி. அத்தகைய சமூக நீதியே அனைவருடைய ஒற்றைச் சிந்தனையாய் அமைந்திட முயற்சியும் எழுச்சியும் புரட்சியும் கொண்டிடுவோம்.

‘சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணி’ (குறள் 118)

எனும் ஐயன் வள்ளுவனின் வாக்குக்கேற்ப ஆட்சியாளர்களும் எப்பக்கமும் சாயாமல் நீதி வழுவாது நின்று தராசு போல சமநிலையில் யாவரையும் பாவிக்கும் சமத்துவச் சமூகம் படைக்கச் செய்வோம்! சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளை, உரிமைகளை, சலுகைகளை வழங்கி சமத்துவச் சமுதாயம் படைத்திடுவோம்.

விழிப்போடு இருப்போம்... சதி செய்கிறது சாதி... சமத்துவம் என்பதே நீதி!

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
news
தலையங்கம்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்
‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்றார் ஒளவையார். ஆகவேதான் மாதா, பிதா, குரு-தெய்வம் எனப் பெற்றோருக்கு அடுத்த நிலையில் குருவை இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றுகிறது இச்சமூகம். ஆயிரம் பணிகள் இந்த உலகை அலங்கரித்தாலும், ஆசிரியப் பணியே அனைத்திற்கும் ஆதாரம்; அடித்தளம். ஆசிரியப் பணிதான் அத்துணை பணிகளையும் பணியாளர்களையும் உருவாக்குகிறது. ‘ஆசிரியர்’ என்னும் ஒற்றைப் புள்ளியில்தான் இந்த உலகம் கல்வி வளர்ச்சியில், அறிவுத்தேடலில், ஒழுக்க மேன்மையில் மையம் கொண்டிருக்கிறது. ஆகவே, ஆசிரியர் என்னும் எழுதுகோலால்தான் மாணாக்கரின் வாழ்க்கை என்னும் பாடம் வரையப்படுகிறது; வார்க்கப்படுகிறது. நண்பனாய், தோழனாய், பெற்றோராய் உடனிருந்து, கரம்பிடித்து உடன் நடப்பவரே நம் மேன்மைமிகு ஆசிரியப் பெருமக்கள்!

‘வாழ்க்கை என்பது தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுப்பதே!’ என்றார் பிரஞ்சு படைப்பாளி விக்டர் ஹயூக்கோ. பிறரை உயர்த்தி விடும் தியாக உள்ளம் ஒன்றுதான் மனித வாழ்வைப் பொருள் பொதிந்ததாக ஆக்குகிறது. ஆசிரியப் பணி என்பது சமூகநல மேம்பாட்டுக்காய் பெரும் அர்ப்பண உணர்வுடன் தம் வாழ்வைத் தியாகம் செய்யும் அறப்பணி! அது மாணாக்கரின் வாழ்வில் இருள் அகற்றி அக  ஒளியேற்றும்; உயர ஏற்றி வைத்து அழகு பார்க்கும்; வளர்ச்சி கண்டு பெருமை கொள்ளும்; சாதனை கண்டு சலனம் இன்றிப் பூரிப்படையும்; ‘எதிர்காலம் என் கையில், அது சிறப்புற வேண்டும்’ என்ற உயர்ந்த நோக்கம் கொண்டு தன்னையே தியாகம் செய்யும்.

‘மனித குலத்தை எது ஒன்றுபடுத்துகிறதோ அதுவே மேலானது; அழகானது; சிறப்பானது’ என்றார் டால்ஸ்டாய். மனித குலத்தை ஒன்றுபடுத்தும் அன்பையும் ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் கற்றுத்தரும் கல்வியும் கல்விக் கூடமுமே மேலானவை; அழகானவை; சிறப்பானவை. அதன் உயிர்நாடியாய் விளங்கும் ஆசிரியரே உன்னதமானவர்கள்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் நாள் இந்தியத் திருநாட்டின் மேனாள் குடியரசுத் தலைவர் பாரத இரத்னா டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடுவது வாடிக்கை நிகழ்வாக அமையாமல், நமது வாழ்வின் வைகறை வானில் விடியல் விளக்கேற்றிய ஆதவனாய் அவர்கள் என்றும் கொண்டாடப்பட வேண்டும் என்ற சிந்தனையை உரக்கச் சொல்கிறது இந்த நாள். ஆசிரியர்கள் நமது வாழ்வில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; மாறாக, தலை வணங்கப் பட வேண்டியவர்கள் என்ற பேருண்மையை உணர்த்துகிறது இந்த நாள்!

தனித்தன்மையை அடையாளப்படுத்தி, இலக்கைக் கூர்மைப்படுத்தி, தடத்தைச் செம்மைப்படுத்தி, பயணத்தை ஊக்கப்படுத்தி வாழ்வில் வெற்றிக்கனியைச் சுவைக்கச் செய்பவர் ஆசிரியரே! ‘ஒரு நல்ல ஆசிரியரை அடைந்தவர் வாழ்வில் எல்லா வளங்களையும் அடைந்ததற்குச் சமம்’ என்கிறது முதுமொழி. அனைத்தையும் ஆக்க வல்ல கல்வியைத் தந்து, அகிலத்தையே அடையச் செய்யும் ஆக்கத்தின் திறவுகோலாய், பேராற்றலாய் நம்முள் செயல்படுபவர்களும் அவர்களே!

உரோமை சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரையில் கீழ்நோக்கிக் கவிழ்ந்திருக்கும் விதானப் பரப்பில் உயிர் உள்ள ஓவியங்களைத் தீட்டிய மைக்கேல் ஏஞ்சலோவின் வாழ்க்கையே நம் நினைவுக்கு வருகிறது. திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் அவரை அழைத்து இப்பணியை ஒப்படைத்தபோது ‘நானோ!’ என்று அதிர்ந்து போன ஏஞ்சலோ, ‘நான் ஓவியன் அல்லன்; நான் ஒரு சிற்பி’ என்றார். அதற்குத் திருத்தந்தை, ‘உங்கள் ஆசிரியர் கிர்லாண்டையோ கற்றுத் தந்ததை நினைவில் கொண்டு பணியில் இறங்குங்கள்’ என்றார். தயங்கி நின்ற ஏஞ்சலோவின் செவிகளில் ஆசிரியரின் பெயர் கேட்டதும் விழிகளில் ஒளி பிறந்தது; உள்ளத்தில் நம்பிக்கை எழுந்தது; கரங்களில் ஓவியம் பிறந்தது; உலகமே பூரிப்படைந்தது. அவர் விழிகளில் வெற்றியின் வெளிச்சம் வீசிடக் காரணமானது அந்த ஆசிரியரே! ஆசிரியர் வாழ்வும் வாழ்வியல் தத்துவமும், ‘உன்னால் முடியும்’ என்ற தாரக மந்திரமும் ஏஞ்சலோவைப் பெரும் ஓவியராக உலகிற்கு அடையாளப்படுத்தியது. திருவிவிலியத்தில் விரவிக் கிடக்கும் படைப்பின் காட்சிகளைச் சிஸ்டைன் தேவாலயத்தின் விதானத்தில் விரிந்து கிடக்கச் செய்து தலை சிறந்த கலைப்படைப்பைத் தந்தார் ஏஞ்சலோ. இத்தாலியின் தலை சிறந்த ஓவியராக விளங்கிய இரஃபேல், ஏஞ்சலோவின் கைவன்மையைக் கண்டு மெய்சிலிர்த்து மண்டியிட்டார் என்பது வரலாறு.

வரலாற்றுப் பக்கங்களில் நிகழ்வுகளாக மட்டுமல்லாமல், இன்றும் ஆசிரியர்களின் ஆக்கமும் தாக்கமும் மாணாக்கர் வாழ்வில் தனிச் சிறப்பு கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆகவே, ஆசிரியர்-மாணாக்கர் உறவு என்பது உன்னதமானதாக, போற்றத்தக்கதாக, புனிதமிக்கதாக இருக்க வேண்டும். மாண்புமிகு ஆசிரியர்களை மாதிரிகளாகக் கொண்ட மாணாக்கர் மத்தியில் சில ஆசிரியர்களின் வரம்பு மீறிய செயல்பாடுகளையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கண்டிப்பு என்ற பெயரில் மாணாக்கர்மீது கடுமையான தண்டனை, சாதியம், மனஉளைச்சல், பாலியல் குற்றங்கள் ஆகியவை தவிர்க்கப் பட வேண்டும்; குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட வேண்டும்.

மறுமுனையில், நல்லாசிரியர்களாய் நல்மனம் கொண்டோராய் வாழ்க்கையைத் திறம்பட அமைத்துக் கொண்டு சிறப்புறப் பணியாற்றுவோர் கொண்டாடப்பட வேண்டும்.  கல்விக்கண் திறந்து இருளகற்றும் இந்த ஆதவன்(கள்) வணங்கப்பட வேண்டும்; அவர்களின் தனித்துவமான பணிகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்; சாதனைகள் படைக்கும் மாணாக்கரின் அறிவுத் தூணாய் விளங்கும் ஆளுமைகள் பாராட்டப்பட வேண்டும். ஒட்டுமொத்தத்தில், ஆசிரியர் பணி மேன்மையுடன் நோக்கப்பட வேண்டும்; ஆசிரியர்கள்  மாண்புடன் போற்றப்பட வேண்டும். அவர்கள் பணி நிறைவு பெறும் காலத்தில் பேரன்புடன் காக்கப்பட வேண்டும். இன்றைய இளம் சமுதாயத்திற்கும் நாளைய சமூகத்திற்கும் விடியல் தரும் இந்தச் சூரியன்(கள்) இன்றைய காலச்சக்கரத்தில் தமிழ்நாட்டில் ‘விடியல் தரும் சூரியன்’ ஆட்சியில் பல கோரிக்கைகளை முன்வைத்தும் அவர்கள் தங்கள் வாழ்வில் விடியல் காணாதிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

“ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்” எனத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது இன்றும் பேசுபொருளாக்கப்படவில்லையே என்பதும், ஆசிரியர்களின் பல சலுகைகள் மறுக்கப்பட்டு வருவதும் பெரும் ஆதங்கமாகவே இருக்கின்றன. புதிய கல்விக்கொள்கை, ஆசிரியர் தகுதித் தேர்வு, பணி நியமன விதிமுறைகள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமனம், பதவி உயர்வு எனப் பல சூழ்நிலைகளில் இன்றைய ஆசிரியர்கள், குறிப்பாக சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். விடியல் அரசு இவர்கள் வாழ்விலும் விடியல் தர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

இன்றைய நாளில் இந்திய, தமிழ்நாடு அரசின் தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியப் பெருமக்களை மனதார வாழ்த்துகிறோம். ஆசிரியர்களின் அறப்பணியைப் போற்றுவோம்! அவர்களை என்றும் கொண்டாடுவோம்! அவர்களை மாண்புடன் பேணுவோம்!

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
news
தலையங்கம்
தாய்க்குத் தாலாட்டு!
‘நிலவெனும் வதனம் நெற்றி
                நெடுமழை அனைய கூந்தல்
மலரெனும் கண்கள் கைகள்
                மரியம்மை அழகின் தெய்வம்!’

என்றார் ‘இயேசு காவியம்’ எனும் இறவாக் காவியம் படைத்த கவியரசர் கண்ணதாசன். ‘மரியம்மை’ எனும் பெயர் ‘மிரியம்’ என எபிரேய மொழியைத் தழுவி ‘அன்பிற்குரியவர்’ என்றே பொருள் கொள்கிறது. அன்புக்கு உரியவராக, இறையன்பு குடிகொண்டவராக, கடவுளின் பேரன்பு நிறைந்தவராக, இறைவன் வரைந்த ஓவியமாக, அழகின் தெய்வமாக விளங்கும் நம் அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழாவை இந்நாளில் கொண்டாடுகிறோம். இச்சிறப்பு மிக்க நாளை அகில உலகம் பெண் குழந்தைகள் தினமாக நினைவு கூர்கின்றது.

அன்னையின் பிறப்பு நாள் அகிலத்தின் பேரேட்டில் விடியலின் திருநாள்; அது பெருநாள். கருவிலே புனிதம் கொண்ட, பிறப்பிலே மகிமை கண்ட ‘அருள் நிறைந்த இல்லிடமாய்’ இறைவன் தமக்கென தேர்ந்தெடுத்த அற்புதக் குழந்தை நம் அன்னை மரியா. மண்ணில் மலர்ந்த மனித குலம் பேரொளி காண கருணையாளன் தந்த கலங்கரை விளக்கு அன்னை மரியா. அன்பும் அமைதியும், மகிழ்வும் மாசில்லா வாழ்வும் வாழ மானிட குலத்திற்கு ஒளி சுமந்து வந்த திருவிளக்கு அன்னை மரியா! அன்னையின் பிறப்புப் பெருவிழா அன்னையாம் திரு அவைக்கு மணிமகுடம்; அவர்தம் பிள்ளைகளாம்  நமக்குப் பெரும் மகிழ்வு!

இக்கொண்டாட்டம் நமது சமூகத்தில் பெண்ணினம் போற்றப்படவும், பெண் குழந்தைகள் காக்கப்படவும் அழைப்பு விடுக்கிறது. ஏன் இந்த அழைப்பு? என்ற கேள்வி உள்ளத்தை உளுக்குகிறது. காலச்சக்கரம் சுழலும் போக்கில் அது நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம். நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும் கணத்த காயங்களையே பதிவுகளாக விட்டுச் செல்கின்றன. குறிப்பாக, பெண்மை, பெண்ணினம், பெண் குழந்தைகள் எனும் தளங்களில் காணக்கிடக்கும் கசப்பு நிறைந்த, வலி மிகுந்த நினைவுகளும் நிகழ்வுகளும் இன்னும் இச்சமூகத்தில் ஆணாதிக்க மனநிலையையே பிரதிபலிக்கின்றது; அதுவே நம்மை வெட்கித் தலைகுனியச் செய்கிறது.

‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்றான் பாரதி. ‘உலகம் முழுவதையும் அன்பினால் அரவணைக்க வேண்டும்; அத்தகைய அன்பை வழங்குவது பெண்மையே!’ என்றார் டால்ஸ்டாய். ஆனால், இன்றும் பெண்ணினம் சந்திக்கும் சமூகச் சவால்கள் ஏராளம்; அவர்கள்மீது குறிப்பாக, பெண் குழந்தைகள் கருவில் உருவான கணம் தொட்டு, பச்சிளம் சிறுமிகளாக வளரும் நிலை தொடர்ந்து சந்திக்கும் பாலியல் துன்பங்களும், வாழ்வியல் சவால்களும் ஏராளம் ஏராளம். ரோஜா மலர்களாக மலர்ந்து, மகிழ்ந்து, மணம் பரப்ப வேண்டியவர்கள், மொட்டுகளாகவே கருகி மடிந்து கண்மூடுவது வேதனையளிக்கிறது.

‘பெண்ணுக்குக் காவல் இளமையில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் பிள்ளைகள்’ என்று வரையறை தந்து வேலி அமைத்த ஆணாதிக்கச் சமூகமே இன்று நிகழும் அவலங்கள் கண்டு பல்லிளிக்கின்றன. ‘வேலியே பயிரை மேயும்’ அவலங்களும் அவமானங்களுமே தொடர்கின்றன. நமது நாட்டில் 10 முதல் 18 வயது வரையுள்ள பெண் குழந்தைகளில் 26 விழுக்காடு உடல் ரீதியான தொந்தரவுகளையும், 1.4 விழுக்காட்டினர் பாலியல் பிரச்சினைகளையும் சந்திப்பதாகவும், 2021-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி பெண் குழந்தைகள் மீது நிகழ்ந்த குற்றப் பதிவுகள் 53,874 என்றும் தேசியக் குடும்ப நலவாழ்வு ஆணையம் குறிப்பிடுகிறது.

மேலும், இத்தகைய பிரிவுகளில் உலகளாவிய புள்ளி விவரங்கள் இன்னும் அதிர்ச்சி தருவதாகவே இருக்கின்றன. குழந்தைகள் நல அமைப்பான UNICEF தரும் புள்ளிவிவரமோ, முப்பது நாடுகளில் ஏறக்குறைய 200 மில்லியன் பெண் குழந்தைகள் பாலியல் துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்கிறது. WHO எனும் உலக நலவாரிய அமைப்பானது, பத்தில் ஒரு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதைக் குறிப்பிடுகிறது. மேலும், ஐந்தில் ஒரு குழந்தை 18 வயதிற்கு முன்பே குழந்தைத் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடுகிறது.

இத்தகைய சூழலில், காலம் கடந்து கண்விழித்த மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளைக் குறிப்பாக, பெண் குழந்தைகளைக் காக்க நல வாரியமும், பல்வேறு நலத்திட்டங்களும் மேற்கொண்டிருப்பது சற்றே ஆறுதல் தருகிறது. கருவறை முதல் கல்வி பயிலும் வகுப்பறை தொடர்ந்து, வாழ்க்கைப் பயணத்திலும் அரசு துணை நிற்பது பாராட்டத்தக்கதே! தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளில் உயர் கல்விக்கான ‘புதுமைப் பெண்’ திட்டம், திருமண உதவித் தொகை எனத் தொடரும் மாநில அரசின் நலத் திட்டங்கள் பாராட்டுக்குரியனவே. அவ்வாறே, ஒன்றிய அரசின் Beti Bachao Beti Padhao (BBBP), Sukanya Samriddhi Yojana (SSY) மற்றும் National Scheme of Incentive to Girls for Secondary Education (NSIGSE) ஆகியன பாராட்டத்தக்கவையே!

இத்தகைய திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளைக் காக்கவும் வளர்க்கவும் ஆசைகொள்ளும் அரசு, அதேவேளையில் இக்குழந்தைகள் மீது நிகழும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்சி, இனம், பதவி, பணம் என எந்தவித தலையீடுமின்றி, பாரபட்சமுமின்றி, குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனைக்குரிய நடவடிக்கைகளை அரசியல் சாசன சட்டம் சார்ந்து எடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை. திரையில் ஆயிரம் கவர்ச்சித் திட்டங்களைக் காட்டிவிட்டு, திரைமறைவில் அவர்களின் வாழ்வைச் சூறையாடும் கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நமது குரல்.

இந்தியாவின் வல்லரசு கனவு, வாஞ்சையோடு பெண் குழந்தைகளைக் காப்பதிலும், பெண்மையைப் போற்றுவதிலும், பெண்ணினம் சமத்துவம் அடைவதிலுமே அடங்கியிருக்கிறது. ஒரு நாட்டின் கல்வி, அறிவியல், பொருளாதார, வர்த்தக மேம்பாடு என்பது நாகரிக சமூகத்தின் கட்டமைப்பில்தான் உருவாகிறது. நாகரிக சமூகம் என்பது ஆணாதிக்க அடக்குமுறையற்ற, பாலியல் சுரண்டலும், வன்கொடுமையும் இல்லாத, யாவரையும் சமமாக மதித்துப் பேணிப் பாதுகாக்கின்ற வாழ்விடத்தை, வாழ்வியல் முறையைக் கொண்டதே! அத்தகைய நாகரிகச் சமூகம் காண பெண்மையைப் போற்றுவோம்! பெண் குழந்தைகளைக் காப்போம்! அன்னையின் பிறந்த நாளில் நம் ஆழ்மனதில் உறுதி ஏற்போம்!

கண்மணிகள் காக்கப்படட்டும்;
காலமும் போற்றப்படட்டும்!

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
news
தலையங்கம்
வியப்பூட்டும் ஊடக உலகம்!
‘ஊடகம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கி இருக்கிறது இன்றைய உலகம். நவீன உலகின் வியப்புக்குரிய பலவற்றில் தனி இடம் பிடித்திருக்கிறது ஊடகம். இன்று ஊடகத் தொழில்நுட்பத்தால் உலகம் மாபெரும் அறிவியல் புரட்சியையே கண்டிருக்கிறது; இன்றும் கண்டுகொண்டிருக்கிறது! மானுட வாழ்வியலின் எல்லாத் தளங்களிலும் இந்த ஊடகம் இன்று இரண்டறக் கலந்திருக்கிறது. எனவே, ஊடக வளர்ச்சி என்பது காலத்தால் இன்று கணிக்க முடியாதது; அதன் பயன்பாடு என்றும் தவிர்க்க இயலாதது.

ஆகவேதான் திரு அவை, இவ்வூடகத்தின் சிறப்புகளைக் கண்ணுற்று, இது ‘இறைவனின் மாபெரும் கொடை’ எனக் கருதுகிறது. அவ்வாறே, சமூகத்தில் வாழும் மானுடத்தின் ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் பேணி வளர்க்கக் கூடிய உயர்ந்த நோக்கத்தையும் அவை கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மானுடமும், அதன் தொடர்பியலும் பூமிப்பந்தில் ஒருபோதும் பிரிக்க முடியாததே! ஒருவருக்கொருவர் நாம் தொடர்பு கொண்டிருப்பது என்பது மானுடத்தின் அடிப்படைப் பண்பு. அது மிக அவசியமானதும் கூட.

ஊடகங்களின் வருகை உலக மக்களின் அறிவு வளர்ச்சியிலும், பண்பாட்டு வளர்ச்சியிலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளன. அன்று அறியாமை இருட்டில் மூழ்கிக் கிடந்த மக்களுக்குப் புதிய வெளிச்சத்தைக் காட்டிய பெருமை ஊடகங்களையே சாரும்! அச்சு இயந்திரங்கள், பத்திரிகைகள், நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, கணினி, எண்ணிம தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என இன்று ஊடகம் உச்சம் தொட்டு இருக்கிறது. இவை சமூகம், பண்பாடு, கலை, அறிவியல், பொருளாதாரம், அரசியல், வணிகம், மருத்துவம், விவசாயம் என மக்கள் வாழ்வில் ஒன்றித்த பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவையும், தெளிவையும் நாளுக்கு நாள் சுமந்து வருகின்றன.

இத்தகைய ஊடகங்கள் ‘பொதுமக்களின் எண்ணங்களைத் தெளிவாக அறிந்து அதை வெளிப்படுத்துவது; மக்கள் மனங்களில் விரும்பத்தக்க நல்லுணர்வை வளர்த்தெடுப்பது; மற்றும் மக்களின் குறைகளை எந்த அச்சமும் இன்றி எடுத்துரைப்பது’ என அடிப்படையில் மேலான மூன்று நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.

இப்பேருண்மையை ஆழமாக உணர்ந்த திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் 2005-ஆம் ஆண்டு, ஜனவரி 24-ஆம் நாள் வெளியிட்ட தனது இறுதி திருத்தூது மடலான ‘அதிவேக வளர்ச்சி’ (The Rapid Development)  எனும் மடலில், ‘புதிய தொழில்நுட்பம் கண்டு அஞ்சாதீர்கள்! புதியவைகளைக் கண்டுபிடிக்க அதைப் பயன்படுத்திக் கொள்ளவும், அதன் மூலம் ‘உண்மையை’ (Truth) உலகிற்கு அறியச் செய்யவும், தமது வியத்தகு கொடைகளில் ஒன்றான ஊடகத்தைக் கடவுள் நமக்குத் தந்திருக்கிறார்’ என்று குறிப்பிடுகிறார் (எண்:14). அத்தகைய ஊடகம் சமூகத்தில் இன்று பல தளங்களில், பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதோடு, சமயம் சார்ந்த பல செயல்பாடுகளிலும் குறிப்பாக, நமது தலத் திரு அவையிலும், உலகளாவிய திரு அவையிலும் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன என்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதே!

இந்த ஊடகப் பயன்பாட்டைத் திரு அவை பெரிதும் வரவேற்பதுடன், அதன் பயன்பாடு படைத்தவரின் திட்டத்திற்கு மாறாகச் செல்லும்போது சமூகத்திற்குப் பெரும் அழிவை ஏற்படுத்தும் எனத் தம் மக்களை எச்சரிக்கவும் தவறவில்லை. மேலும், தனது மக்களைச் சிறந்த ஊடகங்களாகத் திகழ திரு அவை உற்சாகப்படுத்துவதுடன், அனைத்து ஊடக வழிமுறைகளையும், கருவிகளையும் சமூக மேம்பாட்டிற்காக நேரிய வழியில் பயன்படுத்த வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

நாகரிகம் வளர வளர மனிதன் செய்யும் குற்றங்களும், பாவங்களும் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. வணிகக் கலாச்சாரத்தில் மூச்சுத்திணறும் இன்றைய சமூகச் சூழலில் பிரச்சினைகள் தீர்க்க முடியாத வண்ணம் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவை குறித்துச் சரியான புரிதலும், அவற்றைத் தெளிவுபடுத்தும் செய்திகளும், தீர்வை நோக்கிய முறையான வழிகாட்டுதலும் ஊடகங்களால்தான் வழங்க முடியும் என்கிறார்கள் ஊடகவியலாளர்கள். ஆகவே, இத்தகைய சூழ்நிலைகளில் துல்லியமாகவும், முழுமையாகவும், உண்மையாகவும், விருப்பு-வெறுப்புக்கு இடமில்லாமலும் நடுநிலைக் காத்து, ஊடகங்கள் உண்மையை உரைக்க அறிவுறுத்தப்படுகின்றன.

‘தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம், குடிசைகளையும் எரிக்கலாம்’ என்பது ஊடகத்திற்கு முற்றிலும் பொருந்தும். வான்மேகம் பொழிகின்ற நீர் தூயது; ஆனால், நிலத்தின் தன்மைக்கேற்ப, மண்ணின் நிறத்திற்கேற்ப ஓடுகின்ற நீர் நிறம் மாறுவது போல, ஊடகங்கள் இன்று உண்மையை வழங்குவதில் தளத்திற்குத் தளம் மாறுபட்டு நிற்கின்றன.

இந்திய மண்ணில் விடுதலை கண்விழித்த தொடக்கக் காலங்களில் ஊடகம் பெரிதும் மதிக்கப்பட்டது; அதன் தேவை உணரப்பட்டது; தனித்துவம் போற்றப்பட்டது; தனிச்சுதந்திரம் வழங்கப்பட்டது; சிறப்பாக அரசியலமைப்பைத் தாங்கும் தூணாக உயர்த்தப்பட்டது. ஆகவே, அவ்வேளையில் ஊடகங்களின் உரிமைக்குப் பங்கம் ஏதும் பெரிதாக நேர்ந்துவிடவில்லை. ஆனால், இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊடகச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அண்மைக் கால பா.ச.க. ஆட்சியில் ஊடகச் சுதந்திரம் பெரிதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது; ஊடக உரிமை மறுக்கப்படுகிறது; குரல்வளை நெரிக்கப்படுகிறது; உண்மை மறைக்கப்படுகிறது; ஊடகவியலாளர்கள் மரணிக்கப்படுகிறார்கள். பொய்மையும், போலிகளுமே இங்கே இன்று கட்டமைக்கப்பட்டு உலா வருகின்றன.

‘கருத்துகளைச் சுதந்திரமாக எடுத்துச்சொல்லும் பேச்சுரிமை நமக்கு மறுக்கப்பட்டால், வெட்டப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படும் ஆடுகளைப் போல நாம் ஊமையாக, அமைதியாக இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்றே பொருள்’ என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன். ஆகவே, ‘நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வுக்குச் சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஒவ்வோர் ஊடகத்தாரின் சுதந்திரம் என்பதும் மிகவும் முக்கியம்’ என்கிறார் அவர். அவ்வாறே ‘கருத்துகளை ஆக்கவும், அறியவும், வெளிப்படுத்தவும், கற்பிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு’ என்றும், ‘இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று’ என்றும் எடுத்துரைக்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் - 19 (1.a). மேலும், ‘கருத்துகளைத் தேடவும், பெறவும், பகிர்ந்து கொள்ளவும் அனைவருக்கும் உரிமை உண்டு’ என  1948-ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அமைப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஆகவேதான், இன்று ஆட்சியாளர்கள் ஊடகங்களைக் கண்டு அஞ்சுகின்றனர். அவர்கள் நேரிய வழியில் ஆட்சி செய்தால், ஊடகங்களைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? அச்சு ஊடகங்களும், புத்தகங்களும், பத்திரிகைகளும் பிரஞ்சு புரட்சிக்கும், அமெரிக்க விடுதலைப் போருக்கும் அடித்தளம் அமைத்தன என்ற உண்மையை அவர்களால் மறுக்கவும் முடியாது; மறக்கவும் முடியாதல்லவா! அதுபோலவே சர்வாதிகாரர்களுக்குச் சாவுமணி அடித்த சரித்திரமும் ஊடகங்களுக்கு உண்டு என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள் அல்லவா! ஊடகம் என்பது குறைகளை மட்டுமே காண்பதல்ல; குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், நிறைகளைத் தட்டிக் கொடுப்பதிலும் தனி இடம் பிடிப்பவை. ஆகவேதான், ‘ஊடகம் என்பது மக்களைக் கவர்வதற்கு உருவாக்கப்பட்டது அல்ல; மாறாக, அவர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதற்கே!’ என்கிறார் தேவ் வில்லிஸ் என்னும் எண்ணிம தொழில்நுட்ப ஊடகவியலாளர்.

கற்காலம் தொடங்கி, கணினி காலமான இன்று வரை மனித வாழ்வில் ஊடகத்தின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கின்றது. மனித குலத்தின் நன்மைகளுக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் இன்று மனித குலம் சிதைந்து கிடப்பது வேதனையளிக்கிறது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் ஊடகம் என்ற வார்த்தையின் எல்லை விரிந்து இருக்கிறது. ஆகவே, பரந்து விரிந்த இந்த ஊடகத் தளத்தில் மேன்மையான சமூகக் குடும்ப மற்றும் தனிமனித வாழ்வியல் தரம் உயர்ந்திருக்க வேண்டும்.

‘ஊடகம் முறையாகப் பயன்படுத்தப்படுமாயின், அது மனிதகுலத்திற்கு மாபெரும் பயனளிக்கக் கூடியதாக அமையும். மேலும், பொழுதுபோக்கிற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் ஊடகம் பங்காற்றுவது போல, இறையரசைப் பறைசாற்றும் பணிக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கும்’ எனக் குறிப்பிடும் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க ஏட்டின் (Inter Mirifica, 2) வழிநின்று இளையோர் எண்ணிம நற்செய்திப் பணியாளர்களாக (Digital Evangelizers) மாறவேண்டுமென அழைப்பு விடுக்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகவே, அழிவுக்குரிய வாசல் விரிந்திருந்தாலும், வாழ்வுக்குரிய குறுகிய பாதையை இனம் கண்டு இளையோர் புலனம், வலையொளி, படரி, கீச்சகம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும், எண்ணிம தொழில்நுட்ப ஊடகங்களிலும் பயணித்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மனிதகுலத்தின் பயன்பாட்டிற்காகவும், உலகின் மீதான கடவுளின் திட்டம் நிறைவேறவும், புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்பங்களையும் நாமும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவோம்! தீயவை களைந்து, நல்லவை பெருக்குவோம்!

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்