news
தலையங்கம்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமும் பறிபோகும் வாக்குரிமையும்!

வாக்குரிமை என்பது ஒரு சனநாயக நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனு(ளு)க்கும் தேர்தலில், வாக்கெடுப்புகளில் பங்கேற்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் 326-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். உரிமையும் கடமையும் கைகோர்த்திருக்கும் ஒரு சட்ட வரையறை இது. அதாவது, ‘இந்தியக் குடிமகனா(ளா) இருக்கும் ஒவ்வொரு நபரும் பொருத்தமான சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு சட்டத்தின் கீழும் அல்லது அதன் கீழும் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் 18 வயதிற்குக் குறையாதவராகவும் இந்த அரசியலமைப்பின் கீழே அல்லது பொருத்தமான சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழ் வசிக்காமை, மனநிலை சரியில்லாத தன்மை, குற்றம் - ஊழல் அல்லது சட்டவிரோத நடைமுறை காரணமாக, தகுதி நீக்கம் செய்யப்படாமலும் இருந்தால், எந்த ஒரு தேர்தலிலும் வாக்காளராகப் பதிவு செய்ய உரிமையுண்டுஎனத் தெரிவிக்கிறது.

இது குடிமக்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சக்தியையும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பையும் அளிக்கிறது. அவ்வாறு வாக்களிப்பதன் மூலமே சனநாயகத்தை வலுப்படுத்தி நல்லாட்சியை உறுதி செய்ய முடியும். ஆகவே, இது வெறும் உரிமை மட்டுமல்ல; மாறாக, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்யும் ஒரு பொறுப்பும் கூட. மேலும், குடிமக்கள் தங்கள் அரசை அதிக ஈடுபாடு கொண்டு அதைப் பொறுப்புணர்வுடன் வைத்திருக்க இந்த வாக்குரிமை பெரும் பங்காற்றுகிறது.

அவ்வாறே, வாக்காளர் பட்டியல் முறையாக ஆண்டுதோறும் அல்லது தேர்தல் காலங்களிலும் புதுப்பிக்கப்படுவதும், குடிமக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்படுவதும் தேர்தல் ஆணையத்தின் அடிப்படைக் கடமையாகிறது. இந்தியத் திருநாட்டில் தனித்து இயங்கும் அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் அண்மைக் காலங்களில் ஒன்றிய பா... அரசின் கைப்பாவையாகச் செயல்படுவது மக்களாட்சி தத்துவத்தையும், அதன் மாண்பினையும் சீர்குலைப்பதாகவும், குடிமக்களின் மனசாட்சியைக் கேள்விக்குறியாக்குவதாகவும், வாக்குரிமையை நயவஞ்சகமாகப் பறிப்பதாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது.

ஆட்டி வைப்பவர் ஆட்டி வைத்தால், ஆடாதார் யார் இருப்பார்?’ என்பதுபோல, அண்மைக் காலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் (Special Intensie Revision-SIR) என்னும் போர்வையில், பல்வேறு திரைமறைவுச் செயல்களைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்வது மக்களின் சனநாயக உரிமையைக் கேள்விக்குள்ளாக்குவதாகவே  அமைகிறது.

முதல் கட்டமாக, பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், 7.24 கோடி வாக்காளர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலைக் கடந்த ஆகஸ்டு 1-ஆம் தேதி வெளியிட்டது. ஒரு மாத காலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகளுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியலை செப்டம்பர் 30-ஆம் நாள் வெளியிட்டது. அந்த வரைவு வாக்காளர் பட்டியலில், 21.53 இலட்சம் பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்; 3.66 இலட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

பீகாரைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இம்மாநிலங்களில் வாழும் 51 கோடி வாக்காளர்களின் பெயர்கள் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு உட்படுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒன்பதாவது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியாகும். கடந்த 2002-2004 - ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

இந்த இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி நவம்பர் 4-ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கும்  தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், “இரண்டாம் கட்டத் திருத்தப் பணியில் தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளர் விடுபடாததும், எந்த ஒரு தகுதியற்ற வாக்காளர் சேர்க்கப்படாததும் உறுதிப்படுத்தப்படும்என்று தெரிவித்திருக்கிறார்.

மத்தியில் ஆளும் ஒன்றிய பா... அரசு இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்வது பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டிருப்பதாக ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சிக்கும் சூழலில், நாமும் சற்று விழிகளை விசாலப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தச் செயல்பாட்டில்  விழிப்புடனிருந்து கடமையாற்ற வேண்டியுள்ளது என்றும், சனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமையும் பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர்  தெரிவித்திருக்கிறார். அவ்வாறே, “உழைக்கும் மக்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை இதன் மூலமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பா...-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும்  வெற்றி பெற்றுவிடலாம் எனக் கணக்குப் போடுகிறார்கள்என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும், சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்காக தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த சனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 6,36,12,950 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,11,74,027 ஆகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,24,29,083 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 9,120 ஆகவும் இருந்தது.

ஆனால், ஒவ்வொரு காலாண்டுப் பருவத்திலும் பெயர்சேர்ப்பு, நீக்கப் பணிகள் இணையதளம் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதன்படி, இதுவரை ஐந்து இலட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் வாக்காளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6.41 கோடியாக உயர்ந்துள்ளது.

நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் இந்தக் களப்பணியில் 77,000 பேர் ஈடுபட்டுள்ளனர் என்றும், இது ஒருமாத காலம் தொடரப்பட்டு, டிசம்பர் 9-ஆம் நாள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதன் அடிப்படையில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான படிவங்கள் பெறப்படும்; அதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி ஏழாம் நாள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு இருவேறு கருத்துகள் இல்லை. ஆயினும், அதை அவசர அவசரமாகச் செய்யாமல், நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, தெளிவாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம். 2026, ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் தேர்தல் வரவிருக்கும் சூழலில், அவசரக்கோணத்தில் கடமைக்காக இதைச் செய்வதும், தங்கள் வசதிக்காக இதை மாற்றுவதும் மக்களின் உரிமையைப் பறிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

பீகாரில் நடத்தேறிய சதித்திட்டங்கள் தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடாது; அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதே நமது எண்ணம். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

பசுத்தோல் போர்த்தி வரும் புலிபோல நயவஞ்சகத் திரைமறைவுத் திட்டங்களைச் சுமந்து வரும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியில் குடிமக்களாகிய நாம் நமது உரிமையையும், நம் உடன் வாழும் சகோதர-சகோதரிகளின் உரிமைகளைப் பேணுவதிலும், அதை நிலைநாட்டுவதிலும் விழிப்புடன் செயல்படுவோம்!

வாக்கு எங்கள் பிறப்புரிமை - நாட்டின் வளர்ப்

போக்கு எங்கள் பெருங்கனவு!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
சமூகம் தழைக்க சமநீதி கிடைக்க வேண்டும்! மூன்றாம் பாலினத்தவருக்கான சமவாய்ப்புக் கொள்கை!

சமூகநீதிஎனும் சொல்லாடல் சந்தை சரக்குபோல இன்று எங்கும் மலிவாகிப்போனது; அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் எத்தகைய வேறுபாடுமின்றி மேடைகள் தோறும் இக்கருத்தைக் கையாள்கின்றன; காதுகளில் அன்றாடம் இது எதிரொலிக்கிறது. ஆயினும், சமூகநீதி என்றதும் சிலர் முகம் மலர்வதும், சிலர் முகம் சுளிப்பதும், சிலர் மிகவும் கவனத்தோடு பொருள், பதம் தேடி கையாள்வதும், இன்னும் சிலர் அமைதி காப்பதும் வாடிக்கையாகிப் போனது.

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-18 - மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடைசெய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அனைவருக்குமான சமத்துவத்தை உறுதிசெய்கிறது. மேலும், அரசின்கீழ் உள்ள எந்தவோர் அலுவலகத்திலும் வேலைவாய்ப்பு அல்லது நியமனங்களில் அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்புகள் உள்ளன; ஆகவே, மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம் அல்லது வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட முடியாது என்றும்பள்ளிகள், கடைகள், உணவகங்கள், ஓட்டல்கள், கிணறுகள், சாலைகள் மற்றும் அரசால் பராமரிக்கப்படும் குளியல்தளங்கள் போன்ற பொது ஓய்வு விடுதிகளில் குடிமக்கள் சமமான அணுகலைப் பெறுகின்றனர் என்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் தெளிவுபடுத்துகிறது.

இவ்வாறு, சமமான பாதுகாப்பையும், பொது இடங்களுக்குச் சமமான அணுகலையும், அரசின் கீழ் வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பையும் உறுதி செய்து, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; எல்லாரும் சமமானவர்கள், எல்லாரும் உரிமைக் குடிமக்கள், ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் ஆயிரமாயிரம் வேறுபாடுகளைக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

எல்லாரும் சமம்எனும் சமத்துவச் சமூகத்தில், பிறகு எப்படி மையம் - விளிம்புநிலை, உயர்வு - தாழ்வு, வறுமை - வளமை என்ற வேற்றுமை எழுந்தது? மானுடச் சமூகம் இன்று, சமூக - பொருளாதார - அரசியல் - வாழ்வியல் தளங்களில் முரண்பட்டுக் கிடப்பது வெள்ளிடைமலை. இத்தகைய முரண்பாடு கொண்ட வேற்றுத் தளங்களால் ஒருசாராரின் இருத்தலும் வாழ்வியலும் கவலைக்குள்ளாகி, அடிப்படை உரிமைகள் சார்ந்த பல கேள்விகளைச் சமூகத்திற்கு முன்வைக்கின்றன.

விளிம்புநிலை மக்கள் யார்? ஏன் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டனர்? அத்தகைய மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டாமா? சமத்துவம் - சமபங்கு - சமூகநீதி என்பதெல்லாம் எப்போது பிறக்கும்? என ஆயிரம் கேள்விகள் எழும்புகின்றன.

சமத்துவமும் சமபங்கும் கைகோர்க்கும் இடம்தான் சமூகநீதி (கொ)ண்ட சமூகம் என்பதை நாம் உணரவேண்டும். சமத்துவம் (Equality), சமபங்கு (Equity) எனும் இரு சமூகத்தின் அறிவியல் கோட்பாடுகளும் சற்றே வேறுபட்டு நிற்கின்றன. சமத்துவம் என்பது தனிமனிதத் தேவைகளை, உரிமைகளைத் தனிப்பட்டவிதமாகக் கருதாது அனைவருக்கும் சமமாக, பொதுவான நலன்களை முன்வைக்கின்றது. சமபங்கு என்பது சமூகப் பிரிவுகளில் எல்லாருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைக்கவேண்டும் என்பதை உறுதி செய்கிறதுஇதையேகடையருக்கும் கடைத்தேற்றம்என்ற ஜான் ரஸ்கினின் தத்துவமும், அதிலிருந்து பிறப்பெடுத்த காந்தியின் சர்வோதயச் சமுதாயக் கொள்கையும் வலியுறுத்துவது.

இத்தகைய பின்னணியில், உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திக்காகவும் ஏன்... தங்கள் இருத்தலுக்காகவுமே போராடும் ஒரு சமூகம்தான்திருநங்கை, ‘திருநம்பிஎனும் மூன்றாம் பாலினத்தவர்.

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அதிகார அரியணை அவர்களிடமிருந்து அகன்றுவிடாதவண்ணமிருக்க முதலில் அன்றாடம் கூட்டணி அரசியல் செய்திட வேண்டும். இரண்டாம் நிலையில் இட ஒதுக்கீடு, இலவசம், கடனுதவி, சமூகநீதி என அலுவலக அரசியல் செய்திட வேண்டும். மூன்றாவதாக, உழவரின் போராட்டம், மீனவரின் வாழ்வுரிமைப் போராட்டம், நெசவாளியின் வாழ்வாதாரப் போராட்டம், துப்புரவுப் பணியாளர்களின் பணிநிரந்தரப் போராட்டம், ஓட்டுநர்களின் ஊதியப் போராட்டம், கனரக வாகனங்களின் சுங்கச் சாவடி வரிக்கு எதிரான போராட்டம் எல்லாம் பேச்சுவார்த்தை அரசியல் செய்திட வேண்டும். அதைக் கடந்துதான் மூன்றாம் பாலினத்தவர் வாழ்வுரிமை, மாற்றுத்திறனாளிகளின் பணிநியமன உரிமை எல்லாம்.

இத்தகைய சூழலில், தனது பாலின அடையாளம் காரணமாக உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள இரு கல்வி நிறுவனங்களில் வேற்றுமை பாராட்டி, தன்னை ஆசிரியர் பணியிலிருந்து நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகஜோன் கௌஷிக் என்ற திருநங்கை மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜே. பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் பணிநீக்கம் செய்யப்பட்டது குற்றம் எனத்  தீர்ப்பளித்ததுடன், அவ்விரு பள்ளிகளும், இரு மாநில அரசுகளும் தலா ஐம்பதாயிரம் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும், மூன்றாம் பாலினத்தவர் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் கொண்டுள்ள மெத்தனப் போக்கால் 2019-ஆம் ஆண்டின் மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2020 -ஆம் ஆண்டின் மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள்  பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவை பயன்பாட்டில் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கடிந்துகொண்டதுடன், அவர்களுக்குச் சமவாய்ப்பு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்

அவ்வாறே, ஒவ்வொரு மாநிலத்திலும் யூனியன் பிரதேசத்திலும் மூன்றாம் பாலினத்தவருக்கு நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்; மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்குப் பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்; இவ்விதிமுறை மீறலைத் தெரிவிக்க நாடுதழுவிய அளவில் கட்டணமில்லாத் தொலைப்பேசி எண் உருவாக்கப்பட வேண்டும்; புகார்களைப்பெற அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவருக்கான சமமான வேலைவாய்ப்புகள் மற்றும் மருத்துவச் சேவையை உறுதி செய்வதற்காக, சமவாய்ப்புக் கொள்கையை வகுப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷா மேனன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. விரைவில் அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவும், அவ்வறிக்கை கிடைத்த மூன்று மாதங்களில் சமவாய்ப்புக் கொள்கையை  மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவு உச்ச நீதிமன்றத்திற்கு அளித்துள்ள தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி, கடுமையான தீர்ப்பையும் வழிகாட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலின உறுதிப்படுத்தல் அல்லது அறுவை சிகிச்சை தலையீட்டிற்கு மூன்றாம் பாலினத்தவர் தங்கள் முதலாளியின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தது, அவர்களின் தனிப்பட்ட சுயாட்சியை உச்ச நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது. அவ்வாறே, மூன்றாம் பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இன்படி, பிறப்புச் சான்றிதழ்களில் தங்கள் பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில், அரசு தற்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டஸ்மைல் திட்டம் -The SMILE (Support for Marginalized Individuals for Livelihood and Enterprise) கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளுக்கான நிதி உதவி மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. மேலும், அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்டங்களை அணுகுவதற்கான மூன்றாம் பாலினத்தவருக்கான அதிகாரப் பூர்வ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் இப்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடிமேல் அடிவைக்கும்போது அம்மியும் நகரும் என்பது போலத்தான், நமது உரிமைக்கான குரலும் பதிவும். சமநீதியும் சமூக நீதியும் பேசும் நாம், நம்முடன் வாழும் மூன்றாம் பாலினத்தவர்களின் குரலைக் கேட்காமலிருப்பதும், அவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்காமல் இருப்பதும், அவர்களைச் சக மனிதர்களாக மதிக்காமலிருப்பதும் சமூகக் குற்றம் மட்டுமல்ல, சமூகப் பெரும் பாவமும் கூட.

இவர்களை மாண்புடன் மதிப்போம்; மனித நேயத்துடன் காப்போம். ஏனெனில், யாவரும் இந்நாட்டு மன்னர்களே!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
காலம் கடந்து வந்தாலும் கணினியில் களம் கண்டுள்ளது ‘நம் வாழ்வு’ நாளிதழ் (E-Newspaper)

என் இனிய வாசகப் பெருமக்களே,

உங்கள் பேராதரவிற்கு மிக்க நன்றி! இரு மாதங்கள், அதாவது 60 நாள்கள் - அறுபதாயிரம் வாசகர்கள் என வளர்நிலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறதுநம் வாழ்வுமின்னஞ்சல் நாளிதழ் (E-Newspaper).

நம் வாழ்வு - வார இதழ், ‘கல்விச் சுரங்கம் - மாணவர் மாத இதழ்,  ‘நம் வாழ்வுபதிப்பகம் - மாதம் ஒரு நூல்... எனப் பயணித்த தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம், இன்று உலகம் எண்ணிமத் தொழில்நுட்பத்தில் பயணிக்கும் இச்சூழலில், காலத்தின் அறிகுறிகளைக் கருத்தாய்க் கணித்து, அதன் இலக்கைச் சற்றே கூர்மைப்படுத்தி, எண்ணத்தை ஆழமாய்த் தெளிவுபடுத்தி ஐம்பது ஆண்டுகாலக் கனவை இன்று  நனவாக்கியிருக்கிறது

மிகப்பெரிய பொருள்செலவில் அச்சகம் நிறுவப்பட்டு, விலைவாசி விண்ணை முட்டி  நிற்கும் இக்காலத்தில், அன்றாட நாளிதழாக அச்சிட்டு, நாள்தோறும் பரவலாக்கம் என்பது பெரும் சவாலே. ஆயினும், இறைவன் தந்த மாபெரும் கொடை, வளர்ந்து வரும் எண்ணிம அறிவியல் தொழில்நுட்பம். இது கடவுள் தந்த களம்; காலம் தந்த தளம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் தொழில்நுட்பம் வந்த பிறகு, அதற்கான வாய்ப்புகள் கனிந்த பிறகு, நமது அச்சு ஊடகப் பணியின் செயல்பாட்டையும் பயன்பாட்டையும் சுய ஆய்வும் கள ஆய்வும் செய்ததன் வெளிப்பாடுதான், ‘எண்ணிமத் தொழில்நுட்பத்தில் நாம் தடம் பதிக்கவேண்டும்என்ற சிந்தனை. அதன் அடிப்படையில், அச்சு ஊடகப் பணியகத்தின் அத்தனை பிரிவுகளும், புதிய வலைதளம், ‘நம் வாழ்வுசெயலி, சமூக ஊடகங்களின் பயன்பாடு, ஃபிளிப் புக் (மின்னணுப் புத்தகம்), சந்தாதாரர்களின் தரவுகளைப் பாதுகாக்கும் மென்பொருள், மின்னஞ்சல் வழியாகப் பகிரப்படும் வார இதழ், உயர் தொழில்நுட்ப வடிவமைப்பு, மாதா தொலைக்காட்சி மூலம் பரவலாக்கம் என எண்ணிமத் தொழில்நுட்பத்தின் அனைத்துத் தளங்களிலும் பயணிக்கத் தொடங்கியுள்ளது

இத்தகைய தொழில்நுட்பம் கைகூடிய பிறகு திரு அவைச் செய்திகள், திருத்தந்தையின் முழக்கங்கள், உலக அமைதிக்கான அவருடைய கருத்துகள்உலகளாவிய அளவில் கிறித்தவர்களின் நிலைப்பாடு, அவர்களின் வாழ்வியல் முறை, சந்திக்கும் எதிர்வினைகள், ஆசிய-இந்திய- தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழலில் கிறித்தவர்கள், சிறுபான்மையினர் அறிய வேண்டிய தரவுகள் என யாவற்றையும் உடனுக்குடன் வழங்குவது காலத்தின் கட்டாயமானது.

புத்தக வாசிப்புபத்திரிகை வாசிப்பு, வார-மாத இதழ்களைப் புரட்டுவது என்னும் நமது அன்றாடப் பழக்கத்தை இன்றைய இளைய தலைமுறையினரிடம் காண்பது அரிதாகிப் போனது. அதேவேளையில், எண்ணிமத் தொழில்நுட்பம் அவர்களைச் சூழ்ந்துகொண்டதும், அதுவே உலகமென அவர்கள் கருதிக்கொண்டதும் காலமாகிப் போனது. அவர்களையும் வாசிப்பவர்களாக மாற்றவேண்டும், அரசியல்-ஆன்மிக-சமூகச் சிந்தனைகளில் நாட்டம் கொண்டவர்களாக வளர்க்கவேண்டும், மாண்புமிக்க மானுடச் சமூகத்தின் உலகச் சிந்தனைகளை உள்வாங்கவேண்டும் என்னும் எண்ணத்தில் பிறந்ததுதான்நம் வாழ்வுமின்னஞ்சல் நாளிதழ்.

இது இளையோருக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் கத்தோலிக்கக் கிறித்தவருக்கும்... ஏன், யாவருக்கும் பயன்படும் காலப் பெட்டகம்! இது உலகெங்கும் வாழும் தமிழ்க் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் சமூகத்தளத்திலும், ஊடக உலகத்திலும் நாளை நிறைந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகைய பொழுதைக் காண எம் கண்கள் தவமிருப்பதே எமது கனவாகிறது.

இன்றைய சமூகமும்  மானுட வாழ்வியலும் அன்றாடச் செய்திகளால் கட்டமைக்கப்படுகின்றன. உண்மையும்-பொய்மையும் கலந்தே உலா வருகின்றன. பல வேளைகளில் பொய்மை புகழப்படுகிறது, உண்மை ஓரங்கட்டப்படுகிறது; பொய்மை-பசுத்தோல் போர்த்திய புலியாக உலா வருகிறது; உண்மையற்றத் தரவுகள் ஓங்கி ஒலிக்கின்றன. போலிகள் உண்மையைப் போலவே உருவெடுத்துள்ளன; ‘கல்யாணி கவரிங்போலவே நம்மையும் நம்பவைத்து விடுகின்றன. உண்மைகள் உரசிப் பார்க்கப்படவேண்டும். அது நீதியின் தளத்தில், நேர்மையின் தடத்தில், அன்பின் வழியில் உரசிப் பார்க்கப்படவேண்டும். கிறிஸ்துவின் மனநிலையில், திருவிவிலியத்தின் வழிநின்று, இறையரசின் மதிப்பீடுகளில் நாம் அதை உரசிப் பார்க்கவேண்டும்.

இன்றைய சூழலில், ஒரு நாட்டின் சமூக-அரசியல்-பொருளாதார மற்றும் கலாச்சாரக் கட்டமைப்பை வடிவமைப்பதில் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளின் பங்கு  அளப்பரியது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டில் அரசிற்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது  இத்தகைய ஊடகமே!

குறிப்பாக, மக்கள்மன்றப் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படுவதையும் விவாதிக்கப்படுவதையும் செயல்படுவதையும் உறுதிசெய்வது இவ்வூடகமே. வரலாற்று ரீதியாகத் தகவல்களைப் பரப்புவதற்கும், ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் அதற்காகப் பொறுப்பேற்க வைப்பதற்கும், தேசிய நீரோட்டத்தில் பொதுமக்களின் ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் ஒரு மூலைக்கல்லாகச் செயல்படுவதும் ஊடகமே!

மக்கள் மத்தியில் சமூகப் பிரச்சினைகளை எடுத்துச்சென்று விழிப்புணர்வு கொடுப்பதிலும் நீதியின் வழியிலும் உண்மையைச் சுமந்த வாழ்விலும் அவர்களை இயக்கங்களாகக் கட்டமைப்பதிலும் ஊக்குவிப்பதிலும் இவ்வூடகங்களின் பங்கு மிகப்பெரிது.

மக்களின் சமூக வாழ்வியல் பிரச்சினைகளான வறுமை, கல்வி, சுகாதாரம் மற்றும் ஊழல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, உண்மை மற்றும் நீதிக்கான குரலாக இவை ஓங்கி ஒலிக்கின்றன. தவறான தகவல் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், நடுநிலை தவறாத ஊடகங்களும் சமூகத்தில் உண்டல்லவோ! ‘நம் வாழ்வுவார இதழ் இப்பணியைத் துணிவோடும் தெளிவோடும் கடந்த 50 ஆண்டுகளாக ஆற்றிவருவது பெருமைக்குரியதே!

நவீன ஊடக நிலப்பரப்பில் குறிப்பாக, இந்திய மண்ணில் கருத்துரிமை என்பது அண்மைக் காலங்களில் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. இத்தகைய சூழலில், கருத்துச் சுதந்திரம், உண்மையை எடுத்துச்சொல்வதில் சந்திக்கும் இடர்ப்பாடுகள், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆயினும், அமெரிக்காவின் மூன்றாவது அதிபராக இருந்த தாமஸ் ஜெபர்சன் குறிப்பிடுவதுபோல, “நமது சுதந்திரம் பத்திரிகை சுதந்திரத்தைப் பொறுத்தது; அதை இழந்துவிடாமல் காக்கவேண்டியது நமது கடமை.”

இவ்வேளையில் வாசிப்பு, ஊடக எழுத்தறிவு, பத்திரிகைத்துறை சார்ந்த கல்வி, செய்திகளில் உண்மைத்தன்மை, தவறான தகவல்களை எதிர்கொள்ளும் விதம், தொழில்நுட்பக் கருவிகள் பயன்பாடு உள்ளிட்ட பன்முக அணுகுமுறையில் நாமும், நமது எதிர்காலத் தலைமுறையினரும் விழிப்படைய வேண்டியுள்ளது.

சமூக நீதியை முன்னிலைப்படுத்தி, சமூக மாற்றத்திற்கு வித்திடும் முயற்சியில்நம் வாழ்வுமுன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்குத் தொடர்ந்து கரம்கொடுக்க வேண்டுகிறேன். மாற்றங்களை மனத்தில் கொண்டு நேர்மறையான அணுகுமுறையுடன் நேரிய நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி, சமூகச் சீர்திருத்தம் காண்போம்.

காட்சி ஊடகப் போதை தெளியட்டும்;

கடக்க வேண்டிய பாதை தெரியட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
கண்ணியத்துடன் பேணப்படுமா நீதித்துறையின் மாண்பு?

உண்மையுள்ள இடத்தில்தான் நீதி இருக்கும்; நீதி இருக்கும் இடத்தில்தான் வெற்றி இருக்கும். உண்மையும் நீதியும் நெருங்கியத் தொடர்பு உடையவை. உண்மை உன்னதமானது; உண்மையைவிடச் சிறந்தது உலகில் எதுவுமில்லை. உண்மை எப்போதும் உச்சம் கொண்டது. உண்மை இல்லாத இடத்தில் உயர்ந்த அறமும் இருப்பதில்லை; நீதியும் உலாவருவதுமில்லை. உண்மையும் நீதியும் ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும்.

உண்மை என்பது பின் தொடரப்படுவது அல்ல; கண்டறியப்படுவதும் அல்ல; புத்தகங்களைப் புரட்டியோ, அனுபவங்களைத் திரட்டியோ அறியக்கூடியதும் அல்ல; மாறாக, அது உண்மையாகவே என்றென்றும் நீடித்து நிற்பவைஎன்கிறார் தத்துவ ஞானி கே. கிருஷ்ணமூர்த்தி. அந்த உண்மைதான் இறைமையோடு அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த உண்மையை எடுத்துக்கூறுவதாலும் நிலைநாட்டுவதாலும் நீதிமன்ற நீதிபதிகள் உண்மையைச் சார்ந்தவர்களாக, நேர்மையாளர்கள் (noble man - my lord) என அழைக்கப்படுகிறார்கள்.

இந்திய மக்களாட்சி அரசியல் அமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் சட்டமன்றங்கள் (The Legislature), நிர்வாகத்துறை (The Executive), நீதித்துறை (The Judiciary) மற்றும் ஊடகத்துறை (The Media) எனும் வரிசையில் மிகவும் குறிப்பிடத்தக்கது நீதித்துறை. இந்திய அரசியலமைப்பு நீதித்துறையைச் சட்டத்தின் பாதுகாவலராகச் செயல்பட அதிகாரம் அளிக்கிறது. அதுவே இந்திய அரசியலமைப்பு தரும் மக்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது; அவற்றை உறுதிசெய்கிறது.

மற்ற துறைகளிலிருந்து விலகிநின்று தனித்துவமான அதிகாரம் கொண்ட அமைப்பாக நீதித்துறை விளங்குகிறது. இந்த நீதித்துறையின் முழுச் சுதந்திரம் அரசியலமைப்பின் அடிப்படை மற்றும் பிரிக்க முடியாத தன்மையாகும். சட்டச் செயல்பாடுகளில் நீதித்துறை நடுவராகச் செயல்படுவதுடன், அரசியலமைப்பில் உள்ள சிக்கல்களை மறுஆய்வு செய்யும் தளமாகவும், நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு வழங்கும் வரம்புகளை மீறுகிறதா? எனக் கண்காணிப்பதையும் அடிப்படைச் செயல்பாடாகக் கொண்டிருக்கிறது. அரசின் பிற துறைகள் நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிட முடியாது. இன்று அதுவும் கேள்விக்குறியாக இருப்பது வேறு கதை.

அரசின் எந்தவொரு துறையும் நிறுவனமும், நாட்டின் எந்தவொரு குடிமகனின் அடிப்படை உரிமையும் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்கிறது. இதுவே சட்டத்தை விளக்கி, சர்ச்சைகளைத் தீர்த்து, அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி வழங்கும் அதிகார அமைப்பாகும். சனநாயகத்தின் காவல் தெய்வமாகவும், அரசியலமைப் பின் பாதுகாவலராகவும் கருதப்படும் இந்த நீதித்துறை அண்மைக் காலங்களில் தனது மாண்பினை இழந்து வருவது மிகவும் வேதனையளிக்கிறது. நீதித்துறையின் சுதந்திரம் பராமரிக்கப்படுவதையும் பாதுகாப்பதையும் உறுதி செய்யும் பல விதிகளை அரசியலமைப்பு வழங்கியபோதும் அதன் சுதந்திரமும் அதிகாரமும் அண்மைக் காலங்களில் குறிப்பாக, பா... ஆட்சியில் கேள்விக்குறியாகிவருவது வருந்தத் தக்கது.

குறிப்பாக, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை நோக்கி வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீச முயன்ற நிகழ்வு, ஒட்டுமொத்த நீதித்துறையையே அவமானத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தச் செயலுக்கான நியாயத்தைக் குறிப்பிடும் அவர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாதுஎன்ற முழக்கத்தை எழுப்பியிருப்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளான பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நீதிமன்ற அறை எண் ஒன்றில் வழக்குரைஞர்களிடம் கேட்டறிந்து கொண்டிருந்தபோது உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே இந்நிகழ்வு நடைபெற்றிருப்பது நீதிமன்றத்தின் மாண்பினைக் கேள்விக்குறியாக்குகிறது. “இதுபோன்ற நிகழ்வுகளால் கவனம் சிதற வேண்டாம்; இது எங்களைப் பாதிக்கவில்லை; எங்களின் கவனமும் சிதறவில்லைஎன்று எந்தவிதத் தயக்கமும் இன்றி தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் குறிப்பிட்டாலும் இந்த இழிசெயலின் குற்றத்தையும் இதன் பின்னணியில் இருக்கும் சனாதன நோக்கத்தையும் நாம் எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.

உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இத்தாக்குதல் ஒவ்வோர் இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது; இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது; இத்தகைய சூழலைத் தலைமை நீதிபதி அமைதியாகக் கையாண்ட விதம் பாராட்டுக்குரியதுஎன்று ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில், “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி இதுவரை நடைபெறாத வெட்கக்கேடான நிகழ்வு; இது நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான தாக்குதலாகும். நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறைப் பதவியை அடைந்துள்ள நபரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சியாகும்; கடந்த 10 ஆண்டுகளில் நமது சமூகத்தில் வெறுப்புணர்வு, மத வெறி ஆகியவை எந்த அளவு பரவியுள்ளது என்பதை இந்தச் செயல் காட்டுகிறதுஎன்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அவ்வாறே, “தலைமை நீதிபதி பி.ஆர். கவாயைத் தாக்க முயற்சித்தது, இந்திய அரசியலமைப்பின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்; தலைமை நீதிபதியுடன் தேசம் நிற்க வேண்டும்எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் வெட்கக்கேடானது; இது நமது சனநாயகத்தின் மீது உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும். இது கடுமையான கண்ட னத்திற்குரியது; தலைமை நீதிபதி கருணை, அமைதி, பெருந்தன்மையுடன் இதற்குப் பதிலளித்த விதம் நீதித்துறையின் வலிமையைக் காட்டுகிறது; ஆனால், இந்த நிகழ்வை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; நீதிபதியைத் தாக்க முயன்றவர் தனது செயலுக்கான காரணத்தை வெளியிட்டிருப்பது நமது சமூகத்தில் அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது; நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகள் மீது மரியாதை ஏற்படுத்தும் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இத்தகைய விமர்சனங்கள் கண்டனங்கள் எழுந்த போதிலும் இச்செயலில் ஈடுபட்ட வழக்குரைஞர் சிறிதும் மனவருத்தம் தெரிவிக்காது, “கடவுள் சொல்லித்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாயைத் தாக்க முயன்றேன்; நான் எந்தத் தவறும் செய்யவில்லை; எனக்கு எந்த வருத்தமும் இல்லை; மன்னிப்பு கேட்க மாட்டேன்என்று ஆணவத்துடன் பேசுவது இந்தக் குரலுக்கான பின்புலத்தையும் நீதித்துறையில் இச்சமூகத்திற்கு இருக்கும் செல்வாக்கையும் சற்றே எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

குற்றங்களுக்கு நீதிபதிகளிடமிருந்து தண்டனை பெற்றுத்தர வழக்காடும் வழக்குரைஞரே, நீதிபதிக்கு எதிராகச் செயல்பட்ட பெருங்குற்றத்தில் சிக்கி இருப்பது வேதனை அளிக்கிறது. இது வேலியே பயிரை மேய்ந்த கதையாகத்தான் இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மேன்மையும், நீதித்துறையின் மாண்பும் அண்மைக்காலங்களில் கேள்விக்குள்ளாகி வருவது வருந்தத்தக்கதே!

இத்தகைய சூழலில் புரட்சிக் கவிஞன் பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன...

இனியொரு விதி செய்வோம் -அதை

எந்த நாளும் காப்போம்!’

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
கரூர் துயர நிகழ்வு: யாரைப் பழி கூறுவது?

தமிழ்நாட்டில் இன்று என்ன நடக்கிறது? தமிழ்க் குடிகளின் அரசியல் புரிதல் என்ன? தேர்தலை எதிர்கொள்ளும் அரசியல் கட்சிகளின் கள நிலவரம் என்ன? கேள்விக்குறியாகும் இளையோரின் எதிர்காலம்தான் என்ன? என ஆயிரம் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் அண்மைக் காலங்களில் சமூகத் தளம் நோக்கி, நம் சிந்தனை நோக்கி நாளும் பாய்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் செப்டம்பர் 27-ஆம் நாள் ஒரு கருப்பு நாளாகவே மாறிப்போனது. வரலாற்றின் கருப்புப் பக்கங்களாகிப்போன கரூர் துயர நிகழ்வு கூடுதலாக இன்னும் ஆயிரமாயிரம் கேள்விகளை  முன்வைக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பெண்கள், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பு ஓர் அரசியல் கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் இதுபோன்ற துயர நிகழ்வுகள் நடைபெற்றதில்லை என்கின்ற அளவுக்கு இந்தக் கூட்ட நெரிசல் மரணங்கள் பேசு பொருளாகியிருக்கின்றன.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களாலும் அரசியல் விமர்சகர்களாலும் சமூகச் செயல்பாட்டாளர்களாலும் இந்நிகழ்வு குறித்துப் பல்வேறு கருத்துகளும் கண்டன அறிக்கைகளும் வெளிவந்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் கூற்றை நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.

கரூர் கொடுந்துயரத்தில் பா.. தனது அரசியல் விளையாட்டைத் தொடங்கியுள்ளது; கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி உண்மையைக் கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது; இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கம் உடனடியாக இதுபோன்ற உண்மையைக் கண்டறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பி வைக்கவேண்டும்; பா..-வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடியாகத் தேவைப்படுகிறதுஎனத் தெரிவித்திருக்கிறார்.

இக்கூற்றை, தொல். திருமாவளவனின் கருத்தாகவும் குற்றச்சாட்டாகவும் விமர்சனமாகவும் பார்ப்பதையும் கடந்து, இதை ஒரு முன்னெச்சரிக்கையாகவே நாம் காணவேண்டியிருக்கிறது. “பா.. தனது அரசியல் விளையாட்டைத் தொடங்கியுள்ளது...” என்னும் சொற்றொடரில் புதைந்திருக்கிறது ஆயிரம் அர்த்தங்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்; அரசியல் அறிவோர் இதன் ஆழம் உணரட்டும், என்றே நினைவூட்ட விழைகிறேன்.

இந்தியச் சூழலில், கூட்ட நெரிசலில் விபத்துகள் ஏற்படுவது புதிதல்ல. மத நிகழ்வுகள், திருவிழாக்கள், பேருந்து - இரயில் நிலையங்கள், மக்கள் கூடும் பொதுநிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்வுகளின்போது கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்ற வரலாறு பல உண்டு. அவ்வாறே, தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க சில கூட்ட நெரிசல் விபத்துகள் பதிவாகியிருக்கின்றன. 1992-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற கும்பகோணம் மகாமக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 48 பேர் உயிரிழந்தனர். 2005-ஆம் ஆண்டு, சென்னையில் வியாசர்பாடி பகுதியில் அரசின் நிவாரண உதவிகள் பெறும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 48 பேர் உயிரிழந்தனர். இத்தகைய நிகழ்வுகள் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அறிந்திடாத அளவுக்கு கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் இத்துயர நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.

இந்தியாவில் கூட்ட நெரிசல் விபத்துகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும், 2003 முதல் 2025 காலகட்டங்களில் மட்டும் 23 கூட்ட நெரிசல் விபத்துகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் 11 துயர நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 2025-இல் மட்டும் ஆறு கூட்ட நெரிசல் விபத்துகள் நடந்தேறி இருக்கின்றன; அதில் ஒன்று கரூர் நிகழ்வு என்பது இதயத்தைக் கணக்க வைக்கிறது.

தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் நிகழ்ந்த பல்வேறு கட்சிக் கூட்டங்களில் இலட்சக்கணக்கில் மக்களும் தொண்டர்களும் கூடுவது எதார்த்தமான நிகழ்வு. அன்று முதல் இன்றுவரை, தேர்தல் பரப்புரையின்போது கட்சித்தலைவரைக் காணக் கூடுவதும் அரசியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுப் பின்தொடர்வதும் எதார்த்தமான ஒன்றே. ஆனால், இன்றைய சூழலில் அத்தகைய அரசியல் கூட்டம்ஆவேசக் கூட்டமாகமாறுவது பெரும் கவலையளிக்கிறது. கொள்கை, கோட்பாட்டு அரசியல் கூட்டங்கள், இன்றுகும்பல் அரசியல்என விமர்சிக்கப்படும் அளவுக்கு நாகரிகம் இழந்து நிற்கிறது.

தனக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்ற கும்பல் காட்டு மோகம்தான், அதை மீடியாக்களில் சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தும் செயல்பாடுகள்தான், இத்தகைய கொடிய துயர நிகழ்விற்குக் காரணமாக இருக்கிறது என்ற விமர்சனத்தையும் நாம் தவிர்க்க இயலாது.

விஜய் செல்லும் இடமெல்லாம் கூரையிலும் மரத்திலும் ஏறிக்கொண்டு அவரைப் பார்ப்பதற்கு முண்டியடிக்கிற கூட்டம், விடிந்த பொழுதிலிருந்தே காத்துக்கிடக்கும் கூட்டம், அங்கு ஏற்படும் தள்ளு முள்ளு, பொது சொத்துகள் மீது அவரின் தொண்டர்கள் ஏற்படுத்தும் சேதம்... இவையெல்லாம் குறித்து, தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்த போதிலும் கட்சியினரின் ஒழுக்கத்திற்கான கட்டமைப்போ, சீர்திருத்தமோ, ஒழுங்கு நடவடிக்கைகளோ வெளிப்படையாக ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை என்ற கருத்தும் இங்குக் கவனிக்கத்தக்கது.

விஜயின் பரப்புரை நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்பதும் குறிப்பாக, விழுப்புரம் - விக்கிரவாண்டி மாநாட்டில் 42 பேர், மதுரை மாநாட்டில் 14 பேர், திருச்சியில் நடைபெற்ற பரப்புரையின்போது 12 பேர், அரியலூரில் 6 பேர், திருவாரூர் 17 பேர், நாகப்பட்டினத்தில் 5 பேர் என, தவெக-வின் ஒவ்வொரு மாநாட்டிலும், பரப்புரைக் கூட்டத்திலும் காயம் அடைந்தோரின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

பத்தாயிரம் நபர்கள் மட்டுமே வருவார்கள் எனத் தவெக நிர்வாகிகள் அனுமதி கேட்ட மனுவில் குறிப்பிட்டிருப்பதாகவும், உளவுத்துறை 20 ஆயிரம் நபர்கள் வருவார்கள் எனக் கணித்ததாகவும் ஆனால், அங்குக் கூடியிருந்தவர்கள் 25,000 லிருந்து 27,000 வரை என்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. கூட்டத்தை அதிகரிக்க விஜய் தாமதமாக வந்ததால் நெரிசல் ஏற்பட்டது என முதல்கட்டத் தகவல் அறிக்கையும், நெடுநேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் அவதியுற்றனர் என்பதும், தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் கொடுத்து அசாதாரண சூழல்களை ஏற்படுத்தியதாலும், அதனால் நிகழ்ந்த நெரிசலால் மூச்சுத்திணறல், உயிர்ச்சேதம், படுகாயம் நிகழ்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

மறுபுறம், தமிழ்நாடு அரசு உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஒன்று ஏற்படுத்தியிருக்கிறது. அவ்வாணையம் விசாரணைகளையும் கள ஆய்வுகளையும் மேற்கொண்டு வரும் சூழலில், இந்நிகழ்வில் மிகப்பெரிய சதி வேலை நடந்து இருக்கிறது என்றும் இந்த வழக்கை தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது; எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தவெக நிர்வாகம் கேட்டிருப்பதும் இந்நிகழ்வைப் பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.

கரூரில் நடந்தது பெருந்துயரம்; கொடுந்துயரம்; இதுவரை நடக்காத துயரம்; இனி நடக்கக்கூடாத துயரம்எனக் கூறியிருக்கும் முதல்வர், நீதிபதியின் ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு, சிறப்பு ஆலோசனை மேற்கொண்டு பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கான நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இனி கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகள் பல வந்தாலும்  இந்நிகழ்வு ஒரு சாமானியனான நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் பல.

41 பேர் இறந்த இந்தத் துயர நிகழ்வில் ஐவர் மட்டுமே 50 வயதைக் கடந்தவர்கள்; 36 பேர் நடுத்தர வயதைச் சார்ந்தவர்கள், இளையோர், சிறுவர், சிறுமியர். இது இன்றைய இளையோரின் அரசியல் ஆர்வமா அல்லது இரசிகர் மன்றப் போக்கா? என்றே கேட்கத் தோன்றுகிறது. விலைமதிப்பில்லா உயிருக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.

இளமையின் வேகம் குறிப்பாக, குழு உளவியல் (Mass psychology) கட்டுப்பாடுகளைத் தகர்ப்பதும், ஒழுங்குகளுக்கு முரண்பட்டிருப்பதும், விளைவுகளைக் கண்டுகொள்ளாதிருப்பதும் தனக்கும் பிறருக்கும் பேராபத்துகளை விளைவிக்கக்கூடியது என்பதை இந்நிகழ்வு குறித்துக் காட்டுகிறது.

குழந்தைகள், பெண்கள், இளையோர் எனப் பலரும் பங்கெடுக்கும் இத்தகைய நிகழ்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முறையான வழிகாட்டுதலை, நெறிமுறைகளை வகுத்துக் கொடுக்க வேண்டும். இத்தகைய சூழல்களில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதும், பாதுகாப்பு நெறிமுறைகள், முதலுதவிப் பணிகள் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் இனி நிகழாத வண்ணம் தனி மனிதனும் சமூகமும் அரசும் உறுதி மேற்கொள்ளவேண்டும். ‘சுயம்கட்டுப்பாடு கொண்டால் மட்டுமே, ‘சமூகம்நெறிப்படுத்தப்பட முடியும். முடிந்தால் முடியாதது ஒன்றுமில்லை!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
தற்சார்பு தேசமா? தடுமாறுகிறதே தொழில் வளம்!

ஒன்றிய பா... அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் வெறிச்சோடிக் கிடந்த இந்தியக் குடிகளின் வீதிகள், இன்று வியப்பில் ஆழ்ந்து கிடக்கின்றன.

கும்பி (வயிறு) எரிந்த போதும் குடல் கருகிய போதும், கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு, இன்று சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பேசுகிறது. இந்தச் சீர்திருத்தம், “நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் ஊட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி முதலீடுகளை மேலும் ஈர்க்கும்என்று கணித்திருக்கிறார் ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி. இந்த உண்மையைக் கண்டறிய அவருக்கு 12 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது.

செல்லும் இடமெங்கும் தமிழ் இலக்கிய மேற்கோள்களைச் சுட்டிக்காட்டும் மோடி ஜி, 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் தமிழ்நாட்டிற்குத் தேர்தல் பரப்புரைக்கு வந்தபோதும் மறக்காமல் ஒளவையாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார். ஆனால், பொருள் உணர்ந்து கூறினாரா? என்பதுதான் பெரும் கேள்விக்குறி.

வரப்புயர நீர் உயரும்;

நீர் உயர நெல் உயரும்;

நெல் உயர குடி உயரும்;

குடி உயர கோல் உயரும்;

கோல் உயர கோன் உயர்வான்!”

என்னும் வரிகளை மேடை முழக்கமாகக் கூறி வந்தாரே தவிர, மக்கள் தங்கள் வாழ்வில் காண வாய்ப்புத் தரவே இல்லை.

நாட்டில் ஒருசில மாநில வரிகள் தவிர, பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்த ஜி.எஸ்.டி-யை அறிமுகம் செய்தது பா... அரசு. கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் சிறு-குறு தொழில்கள் மிகவும் நசுக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு, அவர்களின் அன்றாட வாழ்வியல் தேவையின் பணமதிப்பு உயர்ந்து, குடும்பங்களின் ஆண்டு வருமானம் சிதைந்து, ஏழ்மையும் வறுமையும் முற்றாக அகலாத மண்ணாக மாறிப்போன இந்த நாட்டில், இன்று ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பற்றிப் பேசுகிறார். ஒட்டகத்தை விட்டுவிட்டுக் கொசுவை வடிகட்டிய இவர், பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குமாட்டின் தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதையாகிப்போனார்.

பண மதிப்பிழப்பு ஒரு பக்கம் வாழ்வைப் பந்தாடுகின்ற போது, ஒன்றிய பா... அரசு, நாட்டில் 5%, 12%, 18%, 28% என நான்கு விகித ஜி.எஸ்.டி. முறையைக் கொண்டு வந்தது. வறுமைக்கோடு என்பது வறுமைக் காடாகிப் போனது. முள்செடியில் விழுந்த விதையாகத்தான் முண்டி முளைத்த யாவரும் நெருக்கப்பட்டார்கள்; நசுக்கப்பட்டார்கள். ஏழைகளின் வாழ்க்கை தற்கொலைகளில் தடம்புரண்டது. தலைமையின் பார்வை தவத்தில் ஒன்றித்திருந்தது. அப்போதெல்லாம் வராத ஞானம், எட்டு ஆண்டுகள் கழித்து இன்று அவர்களுக்கு எட்டியிருக்கிறது.

நான்கு நிலை ஜி.எஸ்.டி.-யில் 12%, 18% ஆகிய நிலைகளை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இருநிலை விகிதமுறையைச் செயல்படுத்தவும், புகையிலை போன்ற தீங்கு விளைவிக்கும் பொருள்கள் மற்றும் ஆடம்பரப் பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கும் புதிய சீர்திருத்தத்தை இன்று வெளியிட்டிருக்கிறது.

ஏறக்குறைய 375 பொருள்கள் மீதான வரிகுறைப்பால் ஏழைகள், நடுத்தர வகுப்பினர், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர் யாவரும் பெரிதும் பலனடைவர் என்றும், மருந்துகள், மருத்துவக் காப்பீடுகள், சமையல் உணவுப்பொருள்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் என அடிப்படைத் தேவைகள் மீது வரி குறைத்திருப்பதால் இத்தீபாவளி விழாசேமிப்புத் திருவிழாவாகஅமைந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோடி.

ஆயினும், எட்டு ஆண்டுகள் கழித்து இன்று விழித்துக்கொண்ட ஒன்றிய அரசு, ஜி.எஸ்.டி. குறைப்பின் மூலம்மக்கள் தங்கள் கனவுகளை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்என்று கொக்கரிக்கிறது. கனவுகள் கருகிச் சிதைந்துபோன பிறகு இன்றுகனவுகள் பூர்த்தியாகும்என்று கற்பனை கொள்கிறது.

நவராத்திரியின் தொடக்கத்தில்தற்சார்பு தேசம்என்னும் இலக்கை எட்ட, மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுக்க அடியெடுத்து வைக்கிறது நம் நாடுஎன மோடி கூறுகிறார். “நவராத்திரி தொடக்க நாளில் ஜி.எஸ்.டி. சலுகை அமலாகிறதுஎன மகிழ்ச்சியைப் பகிர்ந்த பிரதமர் அவர்களே! எட்டு ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. கொடுமையால் மக்களின் தூக்கத்தைக் கெடுத்து, அவர்கள் வாழ்வைச் சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” என்று கேட்கும் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனின் கேள்விக்குப் பதில் இல்லை.

மேலும், நடப்பாண்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூபாய் 12 இலட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது ஜி.எஸ்.டி. குறைப்பையும் கருத்தில்கொண்டால், நடுத்தர வகுப்பினருக்கு இது இரட்டை மகிழ்வு தரக்கூடியதாகும்; இவ்விரு நடவடிக்கைகளால் இந்திய மக்களின் பணம் ரூ.2.5 இலட்சம் கோடி சேமிக்கப்படும் என்று தெரிவித்திருக்கும் ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடியிடம், “இதைத்தானே தொடக்கத்திலிருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்; எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே!” என்று விமர்சித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.. ஸ்டாலின்.

இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை இந்தியக் குடிமகனாக நாம் வரவேற்றாலும், இது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் காலமும் நேரமும் கருத்தாய்க் கணிக்கப்பட வேண்டியிருக்கிறது. 2017-இல் ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் புதிய வரலாறு தொடங்கப்பட்டது; ‘ஒரே நாடு-ஒரே வரிகனவு நனவானது என்று பெருமைப்படும் ஒன்றிய அரசு, பா... ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குத் தாராளமாக ஜி.எஸ்.டி. நிதி வழங்கியதும், மற்ற மாநிலங்களை வஞ்சித்ததும் உலகறிந்த உண்மை. மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு எனப் பல கொள்கைகளுக்கு ஒத்துழைப்புத் தராத தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுத்ததும் யாவரும் அறிந்த உண்மையே!

பா... ஆளும் மாநிலங்களை வளமாக்கிய பிறகு, இன்று கடை திறந்திருக்கிறது பா... அரசு. மடை திறந்தது போன்ற மாயை கொண்டு, ஜி.எஸ்.டி. அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவின் வணிக நடைமுறைகள் உலகளாவிய வணிக நடைமுறைக்கு ஏற்றதாக மாறியிருப்பதை மறந்து விடக்கூடாது என மார்தட்டிக் கொண்டாலும், வணிகர்களின் அன்றாட வர்த்தக நடைமுறைகளில் ஆயிரம் முரண்பாடுகள் இருந்ததையும் மறுக்க இயலாது. ஜி.எஸ்.டி. என்ற பெயரில் ஏழைக் குடியானவனின் சுருக்குப்பையில் கை வைத்ததுதான் இந்தப் பா... ஆட்சியின் வெற்றியின் இரகசியம்.

குடிமக்களே கடவுள்என்னும் தாரக மந்திரமே ஜி.எஸ்.டி. குறைப்புக்கான அடிப்படைக் காரணம் என்னும் ஒன்றிய அரசின் கூற்று, இன்று அனைவருடைய நகைப்புக்கும் உள்ளாகிறது. கடவுள்கள் (மக்கள்) காணாமல் போன பின்புதான், இங்கு ஒரு பக்தன் கடவுள்களைத் தேடுகிறான். பல் துலக்கும் பற்பசை முதல், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு ஆக்சிஜன் சிலிண்டர் வரை ஜி.எஸ்.டி. விதித்தது இந்த அரசு என்பதை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். பெண்களின் வருமானம், அவர்களது தன்னிறைவு பேசும் இந்த அரசுதான், அவர்களுடைய அன்றாடத் தேவைக்கான பொருள்கள் மீதும் ஜி.எஸ்.டி. விதித்ததையும் எளிதில் எவரும் மறக்கமாட்டார்கள்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய்...’ எனப் பெருமூச்சுவிட்டுக் காத்திருந்த சூழலில், இந்தச் சீர்திருத்தத்தின் காலச்சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்வரும் பீகார், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளத் தேர்தல்களை நாம் மறந்து விடக்கூடாது.

அன்று, கி.மு., கி.பி. என்று இரண்டாகப் பிளவுபட்டது உலக வரலாறு; பா...-வின் ஆட்சி வரலாறோ தே.மு., தே.பி. என்றே பிரிகிறது: கடந்த 12 ஆண்டுகால வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள். பா.. அரசின், அரசியல் தலைவர்களின், ஆட்சிப் பொறுப்பாளர்களின் நடை, உடை, பாவனைகள் தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின் என்றே வரையறுக்கப்படுகிறது.

எது எப்படியோ, ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்!

விழித்துக் கொண்டால் விடியல் நமக்கு;

விவேகம் கொண்டால் உலகே நமக்கு!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்