news
தலையங்கம்
மீண்டெழுந்த ட்ரம்ப் - மீண்டும் அமெரிக்க அதிபராகிறார்!

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 - அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சார்ந்த வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸைத் தோற்கடித்ததன் மூலமாக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

1893 -ஆம் ஆண்டு கிரோவர் கிளீவ்லேண்டின் வெற்றியில் நிகழ்ந்தது அந்த வரலாறு. அதாவது, தோல்வி அடைந்த ஓர் அதிபர் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் போட்டியிட்டு மீண்டும் அதிபரானார். அந்த வரலாறு மீண்டும் அமெரிக்காவில் தற்போது அரங்கேறியிருக்கிறது.

இந்த வரலாற்றுப் பதிவுடன் 2020 - ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது 77 வயதில் போட்டியிட்டு வெற்றி கண்ட  தற்போதைய அதிபர்  ஜோ பைடனின் வயதையும் கடந்து, தனது 78- வது வயதில் அமெரிக்காவின் அதிபர் ஆகிறார் ட்ரம்ப்இதன் மூலம் அதிக வயதில் அமெரிக்க அதிபராகத் தேர்வானவர் என்ற பைடனின் சாதனையையும் இவ்வெற்றியின் மூலம் முறியடித்திருக்கிறார்.

6.71 கோடி பொதுமக்கள் வாக்குகளையும், 224 பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெற்ற கமலா ஹாரிஸைவிட, 7.19 கோடி பொதுமக்கள் வாக்குகளையும், 295 பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெற்று மிகப்பெரிய வெற்றியைக் கண்டிருக்கும் ட்ரம்ப், அமெரிக்க நாட்டின் 47-வது அதிபராக ஜனவரி 20, 2025 அன்று அரியணை ஏறுகிறார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் சற்றே வித்தியாசமானது. புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க குடிமக்கள் நேரடியாக வாக்களிப்பதுபோலத் தோன்றினாலும், அந்த வாக்குகள் ஒவ்வொரு மாகாணத்திலும் கட்சியின் சார்பாக இருக்கும் தேர்தல்-பிரதிநிதிகளுக்கே (எலக்ட்ரஸ்) கிடைக்கும். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மாகாணங்கள் சார்பாக உள்ளசெனட்டர்எனப்படும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்தல்-பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்.

மக்கள்தொகை அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடாது என்பதற்காகவும், ஒவ்வொரு மாகாணத்திற்கும் சம பங்களிப்பு இருக்க வேண்டும்; கறுப்பின மக்களுக்கும், அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் சமமான, முறையான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வாக்குமுறை அங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் 535 மக்கள் பிரதிநிதிகள் உள்ள நிலையில், கொலம்பியா மாகாணத்திற்குக் கீழவையில் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் அந்த மாவட்டம் சார்பாகத் தனியாக மூன்று பிரதிநிதிகள் கணக்கிடப்பட்டு, 50 மாகாணங்களுக்குமாக மொத்தம் 538 பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களான 270 பேரின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.

மாகாணங்களில் பொதுமக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் வேட்பாளர் அந்த மாகாணங்களில் உள்ள அனைத்துத் தேர்தல்-பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெறுகிறார். குறிப்பாக, டெக்ஸஸ் மாகாணத்தில் 56.3 விழுக்காடு பொதுமக்கள் வாக்குகளைப் பெற்ற ட்ரம்ப், அம்மாகாணத்தின் தேர்தல்-பிரதிநிதிகளான 40 நபர்களின்  வாக்குகளையும் பெறுகிறார்.

ட்ரம்பின் இந்த வெற்றியை எளிதாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. இவருடைய வெற்றி மிகப்பெரிய சரிவிருந்து மீண்டு வந்த வெற்றி! 2020 -ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்த சில தினங்களில் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கலகம் செய்தனர். அவ்வேளையில்ட்ரம்ப் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்என்றும், அவரது அரசியல் வாழ்க்கை சரியத் தொடங்கிவிட்டது, முடிவை நோக்கி நகர்கிறது என்றும் உலக அரசியலே அன்று கணித்தது.

ஆயினும், குற்றவியல் வழக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகள், இரு கொலை முயற்சிகள்... எனத் தன்மேலுள்ள பல தடைகளையும் தாண்டி இன்று வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் ட்ரம்ப்.

பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது அவரது காதை உரசிச் சென்ற துப்பாக்கித் தோட்டா ஓர் அங்குலம் தள்ளிப் பாய்ந்திருந்தால் அமெரிக்க வரலாறே மாறியிருக்கும்என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தொடரும் வழக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரைத் தகுதி நீக்கம் செய்யப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எல்லாச் சவால்களையும் எதிர்த்துப் போராடி அமெரிக்க வரலாற்றில் அரசியலின் அடி ஆழத்துக்கு அழுத்தப்பட்டு அதிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையைப்போல் மீண்டெழுந்த தலைவர் என்ற புதிய வரலாற்றை எழுதியிருக்கிறார் ட்ரம்ப்.

ட்ரம்பின் இத்தகைய வெற்றியால் அவருடைய அரசியல் வருகை உலக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா எல்லாரும் குடியேறும் பரந்த நாடாக இருக்கும் தன்மையிலிருந்து மாறி, இனி எல்லைப் பாதுகாப்பில் அதிகக் கவனம் கொண்டிருக்கும். எளிதாக இனி அமெரிக்காவில் எவரும் குடியேற முடியாது. குடியேற்றச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் எனக் கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அதை மெய்ப்பிக்கும் வண்ணம் தனது வெற்றிக்குப் பின் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்காவின் எல்லையை நாம் பாதுகாக்கப் போகிறோம்; அமெரிக்காவின் ஒவ்வொரு தன்மைகளையும் மாற்றி நாட்டைச் சரிசெய்யப் போகிறோம்; இனி நான் ஓய்வெடுக்கப் போவதில்லை. மக்களுக்காகத் தினமும் களம் காணப் போகிறேன். அமெரிக்காவின் பொன்னான காலமாக இனி இது இருக்கப் போகிறது. ‘Make America Great Againஎன்ற கொள்கைக்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம்என்று சூளுரைத்திருக்கிறார்.

ட்ரம்பின் இந்த வெற்றியால் அமெரிக்காவின் வளர்ச்சியில் மட்டுமின்றி, உலக வர்த்தகம், பொருளாதாரம், கல்வி, அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, மனிதவளம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல தளங்களில் உலகளாவிய மாற்றங்களும் தாக்கங்களும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெற்ற அதிபரை வாழ்த்தும் உலக நாடுகளின் தலைவர்களின் வாழ்த்துச் செய்தியும் கூற்றும் இதை உறுதி செய்வதாகவே இருக்கின்றன. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், “சுதந்திரம், சனநாயகம் உள்ளிட்டவற்றைக் காப்பதோடு, வளர்ச்சி, பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் என வரும் காலங்களில் அமெரிக்கா -பிரிட்டனிடையிலான உறவு சிறப்புற செழிப்படையும்என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனேசியும் தங்கள் நாடுகளுக்கிடையே மிகப்பெரிய உறவுக் கூட்டணி நிகழும் எனவும், தொடர்ந்து ஒன்றாகப் பணியாற்ற வலுவான கட்டமைப்பை உருவாக்குவதாகவும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். ஜெர்மனியின் பிரதமர் ஓலா சோர்ஸ், “இரு நாடுகளும் இணைந்து தங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்ட பணிகளைத் தொடர வேண்டும்என அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்தியப் பிரதமரோ, பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் வலுப்பெறும் வகையில் மீண்டும் இணைந்து பணியாற்றத் தான் காத்திருப்பதாக அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய விரிவான மற்றும் வியூகக் கூட்டாண்மை மேலும் வலுப்பெறுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது வெற்றியின் மூலம் வரலாற்றுச் சாதனைகள் படைத்திருக்கும் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வாழ்த்துவோம். உலக நாடுகளுக்கிடையே அமைதியையும், ஒற்றுமையையும் பேணவும், உலக அளவில் ஒட்டு மொத்த மானுட வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றவும் வேண்டுவோம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
மாற்றம் தந்த மகான்!

விடுதலைஎன்னும் மெய்யியல், இறையியல், உளவியல், அரசியல், ஆன்மிகக் கோட்பாடு இன்று சமூகவியல் நிலைப்பாடாக உருமாறியிருக்கிறது. சமூக-அரசியல் தளத்தில் விடுதலை என்பது தனி மனிதனின் தன்னுரிமை மற்றும் அறநெறிப் பொறுப்புகள் என்பதை உணர்த்துகின்றன. விடுதலை - சமூகப் பொருளாதார வாழ்வில் சமத்துவத்திற்கான அறைகூவல்.

நம் சமுதாயப் பொருளாதார வாழ்வில் இன்னும் எத்தனை காலம் நாம் சமத்துவத்தை மறுக்க முடியும்? கூடிய விரைவில் இந்த முரண்பாட்டை அகற்றாவிடில், ஏற்றத்தாழ்வினால் அவதியுறும் மக்கள்அரசியல் சனநாயகம்என்ற கட்டமைப்பை வெடிவைத்துத் தகர்த்து விடுவர்என்றார் அரசியல் நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர். “பணக்காரருக்கும் பசித்தவருக்கும் இடையில் பிளவு நீடிக்கும் வரை அகிம்சை சார்ந்த அரசுக்கான சாத்தியம் இல்லை; பணம் படைத்த வர்க்கம் தன் செல்வத்தையும் அதிகாரத்தையும் தாமே முன்வந்து ஏழையுடன் பகிர்ந்து கொள்ளத் தவறினால் வன்முறை மிகுந்த இரத்தப் புரட்சி ஒரு நாள் தவிர்க்க முடியாததாகிவிடும்என்று (India of my dreamsகுறிப்பிடுகிறார் மகாத்மாகாந்தி. நாடு அரசியல் விடுதலை அடைந்தாலும் மக்களின் சமூக, பொருளாதார விடுதலை அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள் இந்த மகான்கள்.

நாடுகள் விடுதலை அடைந்தாலும், மக்கள்உரிமை, ‘வாழ்வுஎன வசந்தம் கொண்டாலும் அவர்களின் சமூகச் சிந்தனையில் படிந்துகிடந்த அடிமை, ஏற்றத்தாழ்வு, வறுமை, ஏழ்மை என்ற இருள்சூழ் தன்மைகளைக் கிழித்திடும் விடுதலைச் சிந்தனைகளைப் பரப்பிட உதித்த சூரியன்தான் ‘21 -ஆம் நூற்றாண்டின் சமூகச் சிற்பிஎன அழைக்கப்படும்ஏழைகளின் பாதுகாவலர்குஸ்டாவோ குட்டியரஸ்.

இவர் விடுதலை இறையியல் என்னும் தனது ஆழமான கருத்தியல் வாயிலாக ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் கிறிஸ்துவின் இருத்தலைப் பற்றிய புதிய பார்வையைத் திரு அவைக்கு அறிமுகப்படுத்தியவர். நீதி, அமைதி, மனித மாண்பிற்கான சிந்தனைகளைத் திரு அவை கடந்து உலக அளவில் வழங்கியதால்ஏழைகளின் திருத்தூதர் (Apostle of the Poor) என்றும் அழைக்கப்படுகிறார்.

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் லீமா நகரில் 1928 -ஆம் ஆண்டு ஜூன் எட்டாம் நாள் பிறந்த இவர், டொமினிக்கன் துறவற சபை அருள்பணியாளராகவும், இறையியல் பேராசிரியராகவும், விடுதலை இறையியலின் தந்தையாகவும் அறியப்படுகிறார். 1971-ஆம் ஆண்டு வெளியிட்ட தனதுவிடுதலை இறையியல் (A Theology of Liberation) என்னும் நூலின் வழியாக இக்கருத்தியலை முன்வைத்து இலத்தீன்-அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் ஒடுக்குமுறையைக் களைவதற்கான திரு அவையின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் பற்றித் தெளிவுபடுத்தினார்.

விடுதலை இறையியல் என்பதை வெறுமனே இறையியல் சிந்தனையில் மலர்ந்த ஒரு புதிய கூடுதல் கருத்தாக்கமாகக் கருதாமல், புதிய இறையியலாக்கச் சிந்தனையாக, செயல்முறையாக வரையறுத்துக் கொடுத்தார். விடுதலை மற்றும் மேய்ப்புப்பணி இறையியல் என்பது செய்முறை அல்லது செயல்முறை இறையியல் (Practical Theology) என்று உருமாற்றம் பெறவும் வழிகாட்டினார்.

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்திற்குப் பிறகு எழுந்த இந்த மாற்றுச் சிந்தனை, இறையியலாளர்கள் மத்தியிலும் திரு அவைப் பணியாளர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, புரட்சியை விதைத்து அவர்களின் மேய்ப்புப்பணியில் ஏழையோரின் நிலைப்பாட்டை முன்னெடுக்க வைத்தது. பல்வேறு அருள்பணியாளர்கள் ஏழைகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக அர்ப்பணத்துடன் பணியாற்றவும் வழிகாட்டியது.

அநீதியைச் சுட்டிக்காட்டுவதும் உண்மையை எடுத்துரைப்பதும், துணிந்த நேர்கொண்ட பார்வை கொண்டிருப்பதும் ஓர் இறைவாக்கினருக்குரிய அளவுகோல். அத்தகைய பார்வையில் நம் காலத்து இறைவாக்கினராகவே இவர் அறியப்படுகிறார்.

கடவுள் உங்களை அன்பு செய்கிறார் என்று எப்படி ஏழைகளிடம் சொல்லமுடியும்?” என்ற ஒற்றைக் கேள்வியில் எழுந்ததுதான் இவருடைய மேய்ப்புப்பணியும், இறையியல் சிந்தனையும். ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் சமூகப் பொருளாதார நிலைப்பாட்டை உயர்த்தும் வாழ்வியல் முறையே மீட்பு (Salvation), விடுதலை (Liberation) என்னும் இறையியல் கொள்கையோடு தொடர்புடையது என வலியுறுத்தினார். சமூகப் பொருளாதார அநீதிகளே மக்களின் ஏழ்மைக்கான அடிப்படைக் காரணங்களாக வரையறுத்தார். இந்த அநீதிகள் அகற்றப்படும் பொழுது கடவுளின் நீதி நிறைந்த இறையரசை (Kingdom of God) மண்ணில் கட்டி எழுப்ப முடியும் என்று  உறுதி பூண்டார். ஆகவே, விடுதலை இறையியல் என்பது இலத்தீன்-அமெரிக்க நாடுகளிலும், அடிமைச் சூழல் கொண்ட சமூகத்திலும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கான அழைப்பாக, இறைக் கோட்பாடாக முன்னெடுக்கப்பட்டன.

விடுதலை இறையியலின் கூற்றுப்படி, “ஒரு நீதியான சமூகத்தை நோக்கி நாம் நகர வேண்டும்; சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை மக்கள் வாழ்வில் கொண்டுவர வேண்டும்; அடிமைப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, நசுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத் திற்கு வாழ்வு கொடுக்க வேண்டும். ஏழையாகப் பிறந்த இயேசு, தம்மை ஏழை எளியவரோடும், தாழ்த்தப்பட்டவரோடும், விளிம்புநிலை சமூகத்தோடும் அடையாளப்படுத்தி, அவர்களை மையம் கொண்ட பணிகளை மேற்கொண்டதுபோல, அவருடைய சீடர்களும்-சீடத்திகளும் அத்தகைய பணியில் ஈடுபட வேண்டும்என அழைப்பு விடுத்தார்.

ஆகவே, விடுதலை இறையியல்ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையைவலியுறுத்தும் ஓர் இறையியல் அணுகுமுறையாகவும், சமூகப் பொருளாதாரப் பகுப்பாய்வுகளில் ஈடுபட்டு  ஏழை மக்களின்மீது சமூக அக்கறை கொண்டுஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விடுதலைஎன்ற அறைகூவலோடு சமத்துவத்தை நிலைநாட்டும் ஓர் உன்னதக் கோட்பாடாகவும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வறுமை மற்றும் சமூக அநீதிக்கு எதிர்வினை என்னும் சிந்தனையில் மலர்ந்த விடுதலைக் கூறுகளால்தான் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் மலர்ந்த கறுப்பின விடுதலை இறையியல், பெண்ணிய விடுதலை இறையியல், இந்தியத் துணைக் கண்டத்தில் மலர்ந்த தலித் விடுதலை இறையியல், பழங்குடியினர் விடுதலை இறையியல், சூழலியல் விடுதலை இறையியல், தமிழ்த் தேசிய விடுதலை இறையியல் என்ற சிந்தனைகள் தளிர்விட்டிருக்கின்றன. ஏழைகளின் தளத்தில் அவர்களின் பார்வையில் இருந்து விடுதலைக்கான கூறுகளை ஆராய்ந்து, தெளிவான முன்னெடுப்புகளை மறுமலர்ச்சி எண்ணங்களில் எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த இறையியலின் அடிப்படைக் கூறாக அமைந்திருக்கிறது. இத்தகைய பெரும் மாற்றுச்சிந்தனையைத் திரு அவையிலும், உலக அளவிலும் ஏற்படுத்தியவர் குஸ்டாவோ குட்டியரஸ்.

ஆகவேதான், அவருடைய இறுதிச்சடங்குக்கான இரங்கல் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அருள்பணியாளர் குஸ்டாவோ அவர்கள் திரு அவையில் ஓர் உயர்ந்த மனிதர்என்றும், “மறைபரப்புக்கான கனிகளையும், வளமான இறையியலையும் எவ்வாறு வழங்குவது என்பதன் அடையாளமாகஇருப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.

அவ்வாறே, இந்தியத் திரு அவையும், “குஸ்டாவோ அவர்களின் கருத்துகள் திரு அவையின் பணியினை ஆழமாக வடிவமைத்துள்ளனஎன்றும், “ஒன்றிப்பு மற்றும் பணிக்கான புதுப்பிக்கப்பட்ட புரிதலுக்கு வழிவகுத்ததுடன் இரக்கமுள்ள, நீதியுள்ள உலகிற்காக உழைக்க எண்ணற்றவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்என்றும் புகழாரம் சூட்டுகிறது.         

திரு அவை சமூக நீதியை முன்னிலைப்படுத்திய மேய்ப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த அருள்பணியாளரானவிடுதலை இறையியலின் தந்தைகுஸ்டாவோ அவர்கள் தனது 96-வது வயதில் (அக்டோபர் 22, 2024) மறைந்தாலும், அவருடைய கருத்தியல் காலத்தால் அழியாத கருவூலம். சாதி, சமயம், இனம், வர்க்கம், நாடு, பாலினம் எனும் அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட இச்சமூக அமைப்பைத் தகர்த்து சமத்துவமும், சகோதரத்துவமும் கொண்ட ஏற்றத்தாழ்வற்ற புத்துலகம் படைக்க பல புரட்சியாளர்களைத் திரு அவையிலும், சமூகத்திலும் இக்கருத்தியல் தொடர்ந்து உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

சமத்துவ விடியல் தூரமில்லை;

சமதர்மம் தழைக்கும் வானமே எல்லை!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்


news
தலையங்கம்
‘திராவிடம்’ குறித்த அவதூறுகள்: ‘ஆரியக்’ கூத்தாடும் ஆளுநர்!

2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-லிருந்து தமிழ்நாட்டு அரசியல் மேடையில் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் இரவீந்தர நாராயண இரவி எனப்படும் தமிழ்நாடு ஆளுநர் R.N. இரவி. ‘பாவம்’ என்று இவர்மீது பரிதாபப்படுவதா, இல்லை... ‘ஏன் இப்படிச் செய்கிறார்?’ என்று இவர்மீது கோபப்படுவதா? ஒன்றும் புரியவில்லை.

ஒரு பொம்மை வேகமாக இயங்குவதற்குத் தொடர்ந்து சாவி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு சாவி கொடுக்கப்பட்டவுடன் பொம்மை அதிவேகமாக இயங்கும்; அதன் பிறகு சற்றே மெதுவாக நிலைத்தன்மை அடையும். அது மீண்டும் சாவி கொடுக்கப்பட்டவுடன் வேகமாக இயங்கத் தொடங்கும். இதுவே தொடர்கதையாகும். அவ்வப்போது டெல்லி சென்று வரும் ஆளுநரின் கதையும் அப்படியாகத்தான் இருக்கிறது.

சிலருக்கு ‘தொட்டதெல்லாம் துலங்கும்’ என்பார்கள். பாவம், இவருக்குத் தொட்டதெல்லாம் தொடக்கத்திலிருந்தே சர்ச்சையாக வெடிக்கிறது. திருவிளையாடலில் வரும் தர்க்கக் காட்சியில் தருமி கேட்கும் ‘சேர்ந்தே இருப்பது?’ என்ற கேள்விக்கு இன்றைய நவீன விடையாக ‘ஆளுநரும் - சர்ச்சைகளும்’ என்றுதான் பதில்கூற வேண்டியிருக்கிறது.

சென்னை, தூர்தர்ஷன் (டிடி தமிழ்) தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்துடன் நடைபெற்ற ‘இந்தி மாதக் கொண்டாட்டம்’ நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு ஆளுநர் அண்மையில் கலந்துகொண்டபோது, அவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டது தற்போது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையாகவும், பேசுபொருளாகவும் இருக்கிறது. இதற்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆளுநரைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் நினைவிருக்கலாம்.

‘திராவிடம்’ என்பது தமிழைக் குறிக்கும் சொல்லாகப் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருவதும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பன திராவிட மொழிகளின் குடும்பம் என்பதும்  ஆய்வுப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட பேருண்மை. திராவிட மொழிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட இராபர்ட் கால்டுவெல், ‘திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்’ (Comparative grammar of the Dravidian or South Indian family of languages) என்னும் தனது நூலில்  குறிப்பிடும் வரலாற்றுப் பதிவு இது. 1856-இல் இந்நூல் வெளியிடப்பட்ட பின்னரே இச்சொல் பரவலாகத் திராவிட இனக் குடும்பத்தை ஆழமாகக் குறிப்பிடத் தொடங்குகிறது என்கிறார்கள் மொழி வல்லுநர்கள். 

தென்னிந்தியாவில் பேசப்படும் இந்தத் திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் தவிர்த்த ஏனைய மொழிகள் பெருமளவு வடமொழிச் சொல் கலப்பிற்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. ஆயினும், தமிழ் மட்டுமே திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்றும் இருந்து வருகிறது. தனித்து நின்று வளம் சேர்க்கும் இத்தாய்மொழி, செம்மொழியாக உயர்ந்திருப்பது இதன் பெரும் அடையாளம்.

‘திராவிடர்’ என்னும் சொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி ஒன்றைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும் சொல்லாடலாகும். இந்திய மண்ணில் வடக்கே வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுடன் அடிப்படையில் எந்தத் தொடர்பும் இல்லாத மொழிக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படுவதை மொழி வல்லுநர்கள் கண்டறிந்தார்கள். அடிப்படையில் தனி இனமாக உருவெடுத்த அந்த இனத்தை ‘திராவிடர்’ என அடையாளப்படுத்தினர். ஆதிக் குடிகளாக அவர்கள் அறியப்பட்டார்கள். ஆகவே, ‘திராவிடம்’ என்ற சொல் ஆதித் தமிழ் குடியின் அடையாளம்; இது கூட்டுக் குடும்பத்தின் அடையாளம். தமிழ் மொழி தன் குழந்தைகளை வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்டதன் பெரும் அடையாளம்-திராவிடம்.

தமிழ்நாட்டு மண்ணில் தனித்தமிழ் இயக்கங்கள் பல தோன்றினாலும், திராவிடக் குடும்பத்தின் பண்பாடும், கலாச்சாரமும், மொழி ஒற்றுமையும் இம்மண்ணில் உயர்ந்தே நிற்கிறது. ‘திராவிடம்’ என்ற சொல்லாடலையும், கால்டுவெல் என்னும் மொழிப் புலமைகொண்ட ஆளுமையையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஆரியமும்,  ஆரிய சித்தாந்தம் கொண்டவர்களும் திராவிடக் கருத்தியலைச் சிதைக்க மேற்கொண்ட போராட்டங்கள் நேற்று இன்று அல்ல; இது வரலாறு கண்ட நிகழ்வு. தமிழ் நாட்டின் ஆளுநர் அதன் நீட்சியாகவே இன்று நிற்கிறார். ஒன்றிய அரசுக்குக் கீழ் செயல்படும் நிர்வாக அதிகாரியான இவர், தன் எஜமான் இட்டக் கட்டளையைக் கருத்தாய்ச் செய்து வருகிறார்.

தமிழ்நாடு அரசு விழாக்களில் பிற மொழிப் பாடல்களைத் தவிர்க்கும் வகையிலும், சமயச் சார்பற்ற அரசின் நோக்கிற்கு ஏற்ப சமயச் சார்பினைத் தவிர்க்கும் வகையிலும் தமிழ் வாழ்த்துப் பாடல் ஒன்றினை அறிமுகப்படுத்த அண்ணா விரும்பினார். இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்த தமிழறிஞர் பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை எழுதிய ‘மனோன்மணியம்’ என்னும் நாடக நூலில் அமைந்த ‘நீராருங் கடலுடுத்த’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும், கரந்தை கவியரசுவின் ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே’ என்னும் பாடலும் பரிந்துரை செய்யப்பட்டபோது,  ‘நீராரும் கடலுடுத்த’ என்னும் பாடல் தேர்வு செய்யப்பட்டு, அண்ணாவின் மரணத்திற்குப் பிறகு 1970, மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் இப்பாடல் பாடப்பட்டு, ‘இனிமேல் அரசு விழாக்களில் பாட வேண்டும்’ என அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டது. பின்பு 1970, ஜூன் 17 அன்று அது அரசாணையாக வெளியிடப்பட்டு, நவம்பர் 23 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்பாடலுக்கு அழகுற இசை அமைத்துப் பெருமை சேர்த்தவர் இசை மாமேதை எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள்.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஆட்சி அமைந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அரசு விழாக்களிலும், அரசு சார்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் விழாக்களிலும் பாடப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்த இப்பாடலை 2021 -ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநிலப் பாடலாக அறிவித்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு கட்டாயம் பாடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பித்தார்.

மாநிலப் பாடல் என்பது தேசிய கீதத்திற்குச் சமமாக, சிறப்பும் மதிப்பும் வாய்ந்தது. மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து சாதி, சமய வேறுபாடு இன்றி மக்களை ஒன்றுபடுத்துவதில் மாநிலப் பாடல்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆயினும், உலகெங்கும் வாழும் தமிழரின் அடையாளமாகவும், பெருமையாகவும் பேசப்படும் இப்பாடல் அவ்வப்போது ஆரிய சித்தாந்தத்தால் சீண்டப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

புனித தேவசகாயம் அவர்கள் 2022 -ஆம் ஆண்டு மே 15 -ஆம் நாள் புனிதராக உயர்த்தப்பட்ட திருச்சடங்கில் உரோமையில் உலகளாவிய கத்தோலிக்கத் திரு அவையின் முன்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது நமக்குப் பெருமை. ஆயினும், 2018 -ஆம் ஆண்டு ஜனவரி 24 -ஆம் நாள் சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததும் காட்சியானது; இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அவ்வாறே ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். தமிழ்நாட்டையும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆளுநரின் ஒவ்வொரு சர்ச்சைக்குப் பிறகும் அந்தக் கருப்பொருள் மிகப்பெரும் அளவில் பேசு பொருளாக இருப்பது கண்கூடாகிறது. இதுவும் அப்படித்தான். கடந்த சில நாள்களாகத் தமிழ்த்தாய் வாழ்த்து உலகமெங்கும் மீண்டும் மீண்டும் பாடப்படுவதும், பகிரப்படுவதும் இப்பாடலின் மேன்மையை இன்னும் உரக்கச் சொல்கிறது. ஆரியப் படையில் பல இரவிக்கள் வந்தாலும், மொழி-அடையாள விமர்சனங்கள் தந்தாலும் தமிழும் தமிழினமும் ஒருபோதும் தாளாது; என்றும் வீழாது!

இவ்வேளையில்,

‘எழுத்தும் நீயே, சொல்லும் நீயே!

பொருளும் நீயே, பொற்றமிழ் தாயே!

அகமும் நீயே, புறமும் நீயே!

முகமும் நீயே, முத்தமிழ் தாயே!

உனக்கு வணக்கம் தாயே,

என்னை உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!’

என்னும் கவிஞர் வைரமுத்துவின் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தொண்டும், துறவும்!
“என் உன்னதமான இந்தியத் திருநாட்டின் இளைஞனே! சமுதாய வீதியில் நீ கைவீசி நடக்கும்போது, நீ மட்டும் தனியாக நடப்பதாக ஒருபோதும் சோர்ந்துவிடாதே! உனக்குப் பின்னால் இந்த மண்ணின் பல நூறாண்டுச் சிறப்புமிக்க, மரபார்ந்த பெருமைகளும் தொடர்ந்து வருவதை உணர்ந்து கொள்வாய்” என்றார் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர். இந்திய மண்ணின் மரபார்ந்த பெருமை எது? என்ற கேள்விக்கு, ‘துறவு, தொண்டு இரண்டு மட்டுமே இப்பூமியின் அரிய தேசிய இலட்சியங்கள்’ என்கிறார் அவர்.

துறவு என்பது எல்லாருக்கும் எளிதாகக் கிட்டுவதில்லை; அது பேரருள், பெரும் வரம், உன்னதக் கொடை! அது ஒரு சிலருக்கே வழங்கப்படும் வரம்; அளிக்கப்படும் அருள்; கொடுக்கப்படும் கொடை! அத்தகைய துறவு வாழ்க்கையில், ஓர் உண்மையான துறவிக்கான இலக்கணம் வகுத்தவர் இவர். ‘சமயம் என்பது சக மனிதனை நேசிப்பது’ என்பதைத் துறவு வாழ்வின் இலக்கணமாகக் கொண்டவர்; அதை முழுமையாக அடைவதையே முழுமூச்சாகக் கொண்டவர் இவர்.

‘ஆன்மிகத்துக்கும், சமூகத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு’ என மேடைதோறும் முழங்கி, ஒன்றில் மற்றொன்றைக் கண்டவர்; அதனுடைய வளமைக்கும், செழுமைக்கும், சிறப்புக்கும் சிறப்பாகப் பங்களிப்புச் செய்தவர் இவர். சுயநலமின்றி உயிர்கள் அனைத்தின் மீதும் அளவுகடந்த அன்பு செலுத்தி ஆரத்தழுவியவர் இவர். அத்துணை உயிர்களுக்காகவும்,  அவற்றின் நலனுக்காகவும் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தவர் இவர்.

துறவு என்பது வாழ்வைத் துறப்பது அன்று; மாறாக, செய்யும் செயலின் பலனைத் துறப்பதே என்பதை ஆழமாக உணர்ந்தவர், உணர்த்தியவர் இவர். இத்தகைய புரிதலோடு பொதுவாழ்வில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் இவர். தொண்டும், துறவும்தான் பொதுவாழ்வின் இரு கண்கள் எனக் கொண்டவர் இவர். காவி உடை அணிந்து ‘கருமமே கண்ணாய் இருந்து’ துறவுக்கு இலக்கணம் வகுத்தவர் இவர். மாமதுரை மக்கள் பேராயர் மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி ஆண்டகையுடன் கரம் கோர்த்து, மனித நேயமும், மதநல்லிணக்கமும், சமூக மேம்பாடும், தமிழ்த் தொண்டும் கூறுகளாகக் கொண்ட ‘திரு அருட்பேரவை’ கண்டவர் இவர்.

திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் 45 - ஆம் குரு மகா சன்னிதானமாகப் பொறுப்பேற்று, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடிக்கு முகவரி தந்தவர். சமயத் திருமடங்களின் தலைவர்கள் மிகவும் பக்திபூர்வமாக குரு மகா சன்னிதானம், சுவாமிகள், தேசிகர் என்று அழைக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மக்கள் தொண்டையே முதன்மைப்படுத்துகிற வகையில் ‘அடிகள்’ என்ற அடையாளத்துடன் அன்போடு அழைக்கப்பட்டு ‘குன்றக்குடி அடிகளாராக’ வலம் வந்தவர்தான் திருவருள் திரு தெய்வசிகாமணி அருணாச்சலத் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் என்ற இயற்பெயர் கொண்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

சமூக அக்கறை கொண்டு ஆன்மிகப் பணிக்கான இலக்கணம் தந்து, செயலாக்கம் கண்ட குன்றக்குடி அடிகளாரின் பிறப்பின் நூற்றாண்டு விழாக் காலத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் மதநல்லிணக்கத் தளத்தில் இப்பேராளுமையை அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

அரங்கநாதனாகப் பிறந்து, கந்தசாமி பரதேசியாக வளர்ந்து, கந்தசாமி தம்பிரானாக உயர்ந்து, தவத்திரு குன்றக்குடி அடிகளாராக வலம் வந்த இப்பேராளுமை பதித்தத் தடங்கள் ஏராளம். சிறுவனாக இருந்தபோது வீதிகள்தோறும் வீடுகளில் பால் ஊற்றி வந்த இவர், சிறு வயதிலேயே தமிழ்ப்பாலும், ஞானப்பாலும்  கொண்டார் என்பது வரலாறு கூறும் பேருண்மை. அறம், பொருள், இன்பம் என முப்பால் வடித்து, அறநெறி வாழ்வுக்கு வரையறை தந்த ஐயன் வள்ளுவரின் திருக்குறளினை ஆழ்ந்து படித்து, துறவு வாழ்வுக்கு அணிசேர்த்த இவர் ஓர் இலக்கிய ஆளுமையாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சகவயது தோழர்களோடு ஒன்றிணைந்து மேற்கொண்ட சமூகப் பணிகளில் இளம் வயதிலேயே ஒரு சமூகத் தொண்டனாகத் தன்னை வளர்த்துக் கொண்டார். இலக்கிய மன்றங்களுக்கும், பேருரைத் தளங்களுக்கும் மேடை அமைத்து, தமிழ்ப் புலமையோடு, இலக்கிய வளத்தோடு பட்டிமன்றங்கள் அமைத்த பெருமையும் இவருக்கு உண்டு.

சமயம், பக்தி, வழிபாடு, தொழுகை என்பது உணர்வு சார்ந்தது; அவ்வுணர்வை வெளிப்படுத்துவதே மொழி  என்றுணர்ந்த அடிகளார், வழிபாடு இதயம் கலந்ததாக அமைய வேண்டும் என முழங்கினார். ஆகவே, திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை வேண்டுமென ஆதரித்தார். இது வடமொழிக்கு எதிரான வெறுப்பு அல்ல; மாறாக, வழிபடுவோரும் பொருள் உணர்ந்து வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. ஆகவேதான், ‘திருக்கோவில்களில் மணிகள் அசைந்தால் போதாது; மனித இதயங்களும் அசைய வேண்டும்’ என்றார்.

‘நாத்திகர்’ என ஆன்மிகவாதிகளால் ஒதுக்கப்பட்ட தந்தை பெரியாருடன் நேசம் காட்டினார். தமிழில் வழிபாட்டு உரிமை, அனைத்துச் சாதியினரும் ஆலய நுழைவு போன்ற தந்தை பெரியாரின் சமூக நீதிப் போர்களில்  இரட்டைக் குழல் துப்பாக்கியாக அவருடன் இணைந்து களத்தில் நின்றார். “அடிகளாரைப் போல பத்து பேர் தமிழ்நாட்டில் இருந்திருந்தால், எனது தொண்டுக்கே வேலை இருந்திருக்காது” என்றார் பெரியார்.

மண்டைக்காடு கலவரத்தால் குமரி மண் பற்றியெரிந்தபோது, ‘மக்கள் பேராயர்’ மரியானுஸ் ஆரோக்கியசாமி ஆண்டகையுடன் கைகோர்த்துக் கிறிஸ்தவர்களை ஆற்றுப்படுத்தினார். மதப்பித்துக் கொண்டோரை அடங்கவும் வைத்தார். தனது பொதுவாழ்வில் ஒடுக்கப்பட்டோரின் தோழமையாக வலம் வந்ததால், ‘காவி உடையில் ஒரு கம்யூனிஸ்ட்’ என்று இடதுசாரிகளால் பெருமிதத்துடன் அடையாளப்படுத்தப்பட்டார்.

ஆதீனத்தின் தொன்மை மரபுகளை முறையாகப் பின்பற்றுவதோடு, புதுமையான திட்டங்களையும், செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்தினார். திருவள்ளுவர் திருநாள், தமிழ்த் திருநாள் எனக் குன்றக்குடி ஆதீனத்தில் பல விழாக்கள் எடுத்த அடிகளார், சாதி சமய வேறுபாடு அற்ற சமத்துவ வழிபாட்டு முறைகளையும் முன்வைத்தார். கிராமங்கள் தன்னிறைவுகொள்ள பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் முன்னெடுத்தார். குறிப்பாக, குன்றக்குடி பகுதிகளில் மக்கள் சமூக பொருளாதார மேம்பாடு காண வழிகாட்டினார். அறிவியல் பற்றாளர்களையும், கற்றறிந்தோரையும் ஒன்றிணைத்து அறிவியல் கழகங்கள் அமைத்துப் பணியாற்றினார். மேலும், ‘அருள்நெறி திருப்பணி மன்றம்’ அமைத்துக் கல்வியை யாவருக்கும் பரவலாக்கினார். குறிப்பாக, பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகள் அமைத்து இளையோரை ஆசிரியர் பணிக்குத் தயார்படுத்தினார்.

மரம் நடுதல், இயற்கை வேளாண்மை, தோட்டக் கலை என இயற்கை நேயம் கொண்டார். சாதி சமய வேறுபாடுகள் களைந்து எல்லா விழாக்களிலும், நிகழ்வுகளிலும், பொதுப் பிரச்சினைகளிலும், உரிமைப் போராட்டங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சமய  நல்லிணக்கராகப் போற்றப்பட்டார். பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களுடனும், ஆன்மிகத் தலைவர்களுடனும் நட்புப் பாராட்டினாலும், தான் கொண்ட கருத்தியலில், கொள்கைகளில் வழுவாது நின்று மனிதநேயம், மதநல்லிணக்கம், இயற்கை நேயம், பல்லுயிர் நேயம், மானுட உரிமை என்னும் பல்வேறு தலங்களில் குரல் கொடுத்து இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சமய - சமூக - ஆன்மிக ஆளுமையாக வலம் வந்தார்.

ஒவ்வொரு சொல்லையும் மந்திரம் போல் பயன்படுத்திய மனிதர்களை உலகம் எல்லாக் காலங்களிலும் மாலையிட்டு மரியாதை செய்தது என்பது வரலாறு. மானுடம் போற்றும் தொண்டையும், துறவையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த ‘அடிகளார்’ எனும் இப்பேராளுமை போன்று நாம் இனி காண்பது அரிது! இத்தகைய சமய, சமூக இலக்கணங்களுடன் வாழும் ஒரு துறவியை இன்றைய நமது வாழ்காலச் சமுதாயம் சந்திக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்!

‘நிறைகுடம் தழும்பாது’ என்பதும், ‘விளைந்த கதிர்களே தரைநோக்கிப் பணிந்து நிற்கும்’ என்பதும் அடக்கத்தின் அடையாளங்கள். அடக்கம் என்ற ஒற்றைப் புள்ளியிலேதான் அனைத்து நற்பண்புகளும் அடங்கி இருக்கின்றன. அடக்கம் உள்ள இடத்தில்தான் ஆண்டவனும் குடியிருக்கிறான். அடக்கம் பொதுநலத்தின் தேவாலயம். ஆகவே, மகத்தான மனிதர்கள் இறைவன் வாழும் ஆலயங்களே! அமைதியாக, சலனம் இன்றி இறைத் தொண்டாற்றிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழ்க் குடிகளின் இதய அரியணையில்  எந்நாளும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார் என்பதே பேருண்மை! வாழ்க அடிகளார்! வளர்க அவர் திருத்தொண்டு!

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
news
தலையங்கம்
யாருக்காக? இந்த நிதிநிலை யாருக்காக?
ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி தலைமையில் பா.ச.க.  கூட்டணி அரசு அடுத்த ஐந்து ஆண்டுக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள இச்சூழலில், இந்தக் கூட்டணி அரசு தனது முதல் நிதிநிலை அறிக்கையை மக்கள் மன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்திருக்கிறது. நிதி அமைச்சர்களாக இருந்த மொரார்ஜி தேசாய், மன்மோகன் சிங், ப. சிதம்பரம் ஆகியோரைவிட ஏழாவது முறையாகத் தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் முதல் மத்திய நிதி அமைச்சர் என்ற பெருமையையும், முதல் பெண் நிதி அமைச்சர் என்ற புகழையும் தற்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பெறுகிறார்.

இந்தியத் திருநாட்டை உலகளவில் தலைநிமிரச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையைக் கண்டது நம் மக்களவை. இந்திய நாட்டின் பொருளாதாரச் சமூகக் கட்டமைப்புகளை உயர்த்தி, மிகப்பெரிய பொருளாதார வலிமையுள்ள நாடாக இந்தியாவை மாற்றிய நிதிநிலை அறிக்கைகளும், அதே வேளையில் கூரிய இலக்கும், தெளிந்த சிந்தனையும், முறையான கட்டமைப்பும், செயல்பாடுகளும் கொண்டிராத நிதிநிலை அறிக்கைகளையும் இந்த நாடு கண்டிருக்கிறது. அந்த வகையில், 2024-25 - ஆம் ஆண்டுக்கான, இந்த நிதிநிலை அறிக்கை நிதி அமைச்சருக்குப் பாராட்டுதலைக் கொண்டு வந்தாலும், குறிப்பிடத்தக்க சிறப்புக் கூறுகள் ஏதும் காணப்படாத வகையில் இது பெருத்த ஏமாற்றமான நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது.

கூட்டணி அரசுகளின் தயவோடு இயங்கும் இந்த அரசு, தனது கூட்டணிச் சகாக்களுக்குச் சலுகை வார்க்கும் நிதி நிலையாகவே இது விமர்சிக்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் பீகாருக்குச் சிறப்புத் திட்டங்களையும், பெரும் பொருள் உதவிகளையும் வழங்கும் இந்த நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த வகையான சிறப்புத் திட்டங்களையும், நிதி உதவிகளையும் அறிவிக்காத வகையில், இது ஒரு பாரபட்சம் கொண்ட நிதிநிலை அறிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சீர்திருத்தம் எனப் பல்வேறு உட்கூறுகளைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை இருந்தாலும், இளையோர், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் அதிகமாகச் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும், வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், அது நடைமுறையிலும் தொடர வேண்டும் என்பதே நமது அவா.

கவர்ச்சிகரமான திட்டங்கள் அலங்கார வார்த்தைகளால் வர்ணிக்கப்பட்டிருப்பதாகவும், செயல்பாட்டில் எந்தச் சாத்தியக்கூறுகளையும் இந்த அறிக்கை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை என்றும் பொருளியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கான சிறப்புச் சலுகைகளைக் காணும் சூழலில், ‘கூட்டணிக் கட்சிகளைத் திருப்திபடுத்த பிற மாநிலங்களைக் காவு கொடுப்பதா?’ எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி. மேலும், இந்த நிதிநிலை அறிக்கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியதோடு, இந்த நிதிநிலை அறிக்கை அம்பானி-அதானிகளுக்கானதே தவிர, இந்த நாட்டின் சாதாரண குடிமகனுக்கானது அல்ல என்ற உண்மையையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். கூட்டணிக் கட்சிகளுக்கும், பா.ச.க. ஆளும் மாநிலங்களுக்கும் அதீதமாக நிதி ஒதுக்கீடு வழங்கி, மற்ற மாநிலங்களை மாற்றாந்தாய் சிந்தனையோடு புறந்தள்ளியிருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை.

ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது பன்முக வளர்ச்சி கொண்டதாகவே அமைய வேண்டும். அந்த வளர்ச்சி எங்கும், எதிலும் சீரான வளர்ச்சி கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் வளர்ந்து கொண்டிருந்தால் அது வளர்ச்சியல்ல, வீக்கம்! இது நாட்டின் சமநிலையையே குலைத்துவிடும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய்யும், மறு கண்ணுக்குச் சுண்ணாம்பும் வைக்கும் இந்த நிதி நிலைப்பாட்டால், நாட்டின் ஒரு பகுதி வீக்கம் அடைவதும், மற்றொரு பகுதி வீழ்ச்சி அடைவதும் ‘வலிமையான பாரதத்திற்கு’ நல்லதல்ல.

“இத்தகைய நடுநிலையற்ற நிர்வாகத்தால் நாட்டின் கூட்டாட்சித் தத்துவங்கள் சிதைக்கப்படும்” என்றும், “ஏற்ற-இறக்கம் கொண்ட சமூக நீதியற்ற சமூகத்தை இது உருவாக்கும்” என்றும் ஒன்றிய அரசை எச்சரிக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். மேலும், தமிழ், தமிழ்நாடு, தமிழர் என எந்த வார்த்தைகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் காணப்படவில்லை என்பதும், பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க உதவி நாடிய போதும் சட்ட ரீதியாகவே வழங்கப்பட வேண்டிய உதவிகள் இன்னும் வழங்கப்படாததும் பா.ச.க. தலைமையிலான ஒன்றியக் கூட்டணி அரசு தமிழ்நாட்டிற்கு இழைக்கும் பெரிய அநீதி என்றும் விமர்சித்திருக்கிறார். அவ்வாறே, இந்த நிதிநிலை அறிக்கை ஒருசாராரைத் திருப்திபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதுபோல இருப்பதாகவும், ஆகவே, ‘இது நிதிநிலை அறிக்கை அல்ல; கூட்டணி ஒப்பந்தம்’ எனவும் அவர் எள்ளி நகையாடி இருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் குறிப்பிடுவது போல, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அசாம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் ஆகிய மாநிலங்களுக்குப் பெரும் நிதி உதவி வழங்கியுள்ள இச்சூழலில், நாம் சந்தித்த சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி பெரும் வெள்ளச் சேதங்களுக்கு ஒரு சிறு துளி கூட பொருளுதவி அளிக்காதது பெருத்த ஏமாற்றமே; இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமே!

அனைத்து வகைகளிலும் தமிழ்நாடு இந்த நிதிநிலை அறிக்கையில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது; இது பெரும் கண்டனத்துக்குரியது! நாமும் இந்தியர்கள்; பிற மாநிலங்களை விட அதிக வரி செலுத்துபவர்கள்! குறிப்பாக, தென் மாநிலங்கள் அதிலும் சிறப்பாகத் தமிழ்நாடு அதிகமாகவே ஒன்றிய அரசுக்கு வரி செலுத்தும் சூழலில், நாம் கைமாறாக நிதிநிலை அறிக்கையில் எதுவுமே திரும்பப் பெற முடியாத சூழலில் இருப்பது பெரும் கவலைக்குரியதே!

“இந்த நிதிநிலை அறிக்கை வடமாநிலங்களையும், பா.ச.க. கூட்டணிக் கட்சிகளையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைச் சமநிலையோடு ஊக்குவிப்பதாக அமையவில்லை” எனக் குறிப்பிடும் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “தமிழ்நாட்டிற்கு எந்த விதமான திட்டங்களும் அறிவிக்கப்படாத நிலையில், இது தமிழ்நாட்டின் மீது ஒன்றிய பா.ச.க. அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது” என்றும் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றிய பா.ச.க.  அரசின் முறையற்ற நிதிநிலைக் கொள்கையால் இந்திய நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்திருக்கிறது என்பதே உண்மை. அது இன்றைய ஒன்றிய பா.ச.க. கூட்டணி ஆட்சியிலும் தொடர்வது மிகுந்த வேதனைக்குரியது. மேலும், “பா.ச.க. அரசின் நிதிநிலை அறிக்கை ஒருபோதும் ஏழை மக்களுக்கானதாக இருந்ததில்லை” எனக் குறிப்பிடுகிறார் திரு. வைகோ. ஆகவே, “இந்த நிதிநிலை அறிக்கை, குறைந்த விலையில் மக்களின் நிலத்தைக் கையகப்படுத்தி முதலாளிகளுக்குத் தருவதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைக் கூலிகளாக அடையாளப்படுத்துவதாகவும், முதலாளிகளுக்கு வரிகளையும், வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்துவிட்டு, ஏழை மக்களின் வரிப்பணத்தை மூலதனமாக வாரி வழங்குவதாகவும் இருக்கிறது” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன்.

மனித வளம், இயற்கை வளம், தொழில் வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி எனப் பல்வேறு வளங்களை இந்தியத் திருநாடு கொண்டிருந்த போதிலும், அது முறையாகக் கணிக்கப்படாததும், சரியாக முறைப்படுத்தப்படாததும், சீராகப் பகிரப்படாததும் ஆளும் ஒன்றிய பா.ச.க. அரசின் நிர்வாகக் கையறு நிலையையே குறிக்கிறது. இத்தகைய வளங்கள் இருந்தும், எல்லா மக்கள் மீதும் முறையான அன்பும், அக்கறையும், கரிசனையும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களும் கொண்டிராத ஓர் அரசால், அரசனால் எந்தப் பயனும் கிட்டுவதில்லை. இதையே பொதுமறை தந்த ஐயன் திருவள்ளுவர்,

‘ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

வேந்தமை வில்லாத நாடு’ (குறள் 740)

என்று குறிப்பிடுகிறார். அதாவது, எல்லா விதமான செல்வ வளங்கள் இருந்தாலும், குடிமக்கள்மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் எந்தப் பயனும் அமையப் போவதில்லை என்றே குறிப்பிடுகிறார்.

இறுதியாக, ஒன்றிய பா.ச.க. அரசின் ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் இளையோரின் கனவு தொடர்ந்து சிதைக்கப்படுவது பெரும் கவலை அளிக்கிறது. ‘நல்ல காலம் விடியும்’ என்னும் நம்பிக்கையில் உள்ள இளையோருக்கு இது பெருத்த ஏமாற்றமே. பொற்காலத்தை இந்திய மண்ணில் காணும் அவர்களின் கனவைச் சிதைப்பதாகவே இருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை. கூட்டணிச் சகாக்களுக்கு வரிப்பணத்தை வாரி வழங்கும் இந்த அரசின் நிதிநிலை அறிக்கையை, ‘சந்தர்ப்பவாத நிதிநிலை அறிக்கை’ என்று அழைப்பதே பொருத்தம். சந்தர்ப்பவாதம் சவாரி செய்யாத நல்ல அரசியல் களம்தான் எங்கே  இருக்கிறது? வல்லரசு நாடு, டிஜிட்டல் இந்தியா, ‘மேக் இன் இந்தியா’ என்று மார்தட்டிக் கொள்ள வளமையான இந்தியாவைக் காண கனவு கொண்டிருக்கும் பா.ச.க. அரசு தீட்டும் திட்டங்களும், வெளியிடும் நிதிநிலை அறிக்கைகளும் அனைத்துத் தளங்களிலும்  தோல்விக்கானதாகவே இருக்கின்றன. பா.ச.க. அரசின் இத்தகைய நிலையைக் காணும்போது...

‘குதிரை ஏறப்போவதாகக் கூறிக்கொண்டே
காலம் முழுவதும் கழுதை மேல் ஊர்வலம்!’
என்ற கவிஞர் அரவிந்தனின் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகிறது.

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
news
தலையங்கம்
என்று விடியும் எங்கள் உரிமை வாழ்வு?
வாழ்க்கையில் போராட்டங்கள் எழலாம்; ஆனால், போராட்டமே வாழ்க்கையாகக் கூடாது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் இந்திய மண்ணில் சாதியமும் தீண்டாமையும் தலைவிரித்தாடுவது அவலத்திலும் அவலம். அதில் உரிமைக்காகப் போராட்டங்கள் தொடர்வது பேரவலம். எனவேதான், அண்ணல் அம்பேத்கர் அவர்கள், “பண்பாட்டு ஒற்றுமையில் இந்தியாவுக்கு ஈடு இணை இல்லை! இந்தியா புவியியல் ஒற்றுமையோடு அதனினும் ஆழமான பண்பாட்டு ஒற்றுமையையும் கொண்டுள்ளது. ஆனால், இங்குச் சாதி என்பதே புரிந்துகொள்ள இயலாப் பிரச்சினையாக இருக்கிறது” என்றார்.

உலகில் எங்குமே காணாது, இந்திய மண்ணில் மட்டுமே மக்களின் சமூகக் கட்டமைப்பும் வாழ்வியலும் வர்ணாசிரமம் வார்த்தெடுத்த சாதிய முறையால் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக மத ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், சமூகக் கட்டுப்பாடாகவும் இன்றுவரை தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஆகவே, தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் இச்சமூகக் கட்டமைப்பை முற்றிலுமாக அறுத்தெறிய முனைந்து நின்றார் அம்பேத்கர். ஆனால், தீண்டாமையை வேரறுத்து, தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்திலேயே இருக்கச் செய்ய இறுதிவரை முயன்றவர் ‘தேசப்பிதா’ காந்தியடிகள். தனி வாக்காளர் தொகுதிகளை வழங்கி, தாழ்த்தப்பட்டவர்களை நிரந்தரமாக இந்துகளுக்கு எதிராக நிறுத்த பிரிட்டிஷ் அரசு சதி செய்வதாகக் கூறி  உண்ணா நோன்பிருந்தார் காந்தியடிகள் என்பதும் வரலாறு. “வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர்நீச்சல் போட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் எம்மக்களுக்கு இம்மதம் பாதுகாப்பு வழங்கவில்லை; மாறாக, சமூகத்தில் பழகுவதற்குக் கூடத் தகுதியற்றவர்களாக இவர்கள் தள்ளி வைக்கப்படுகிறார்கள்; புறக்கணிக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் ஈவிரக்கம் இன்றி அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்;  ஆகவே, மற்றவர்களுக்கு அடிமைகளாக வாழ எம்மவரை ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்”  என்றே உறுதி பூண்டார் அம்பேத்கர்.

இக்கரையில் இருந்து அக்கரை நோக்கிய நம்மவர்கள் வானிலும் வாழ்விலும் விடியல் தென்படுவதாகக் கண்டு, இந்தியர்களாக-இந்துகளாக இருந்தவர்கள் அரசியல் அமைப்புச் சட்டம் தந்த உரிமையை ஏற்று கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் மார்க்கமாகத் தழுவிக் கொண்டாலும் அடிப்படையில் நாம் இந்தியர்களாகவே வாழ்ந்து வருகிறோம். ஆயினும், அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் சாதி, மதம், இனம் என்ற பட்டியலுக்குள் அடக்கப்பட்டுப்  பிளவுபடுத்தப்படுகிறார்கள் என்பதே எதார்த்தம். தீண்டாமையை, சாதி ஒழிப்பைக் களம் கண்டு ஒழிக்க வேண்டிய அரசியல் தலைவர்கள், அதிகாரச் சுகங்களை அனுபவிக்க சாதி வெறியைத் தூண்டுபவர்களாகவே செயல்படுவதுதான் சமூகத்தின் மிகப்பெரிய சாபம்!

சமூகக் கட்டமைப்பின் மேல்தட்டு வரிசையில் சுகம் காணும் ஒருசாராரும், அடிமையின் பிடியில், ஆதிக்கச் சுரண்டலில், பொருளாதார வறுமையில், வாழ்விழந்த சூழலில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மறுமுனையிலும் இருக்கும் இந்த முரண் களையப்பட வேண் டும். சாதியத் திமிரும், அதன் கோரப்பிடியும் ஒடுங்கினால்தான் அரசியல், பொருளாதார, வாழ்வியல் சீர்திருத்தங்களை ஒரு சமூகம் காண முடியும்.

அநீதியான சமூக ஏற்றத்தாழ்வுகளினால் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களில் பின்னடைவுகளைச் சந்திக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களை அவர்களின் சமூக அவலங்களில் இருந்து மீட்டு, உரிமை வாழ்வுக்கு அழைத்துச் செல்வதே மானுடப் பண்பாகும். ஆனால், பொதுநலனை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமநீதியை, ஒற்றுமையை, மனித தர்மத்தை, பொதுநலச் சிந்தனையை ‘சாதியம்’ கொன்று அழித்து விட்டது. சமுதாயத்தின் கடைக்கோடியில் தள்ளப்பட்டவர்களைக் கண்கொண்டு பார்க்க இந்த நாட்டில் நாதியில்லை. சாதிய அடிப்படையில் படிப்புரிமை, சொத்துரிமை மறுக்கப்பட்டு விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கு உரிமை வாழ்வு வழங்கப்பட வேண்டும் என்பதே சமூக நீதி.

பிற்படுத்தப்பட்ட இந்துகள் பட்டியல் இனத்தவராகச் சேர்க்கப்பட்டு அரசின் உரிமைகளும் சலுகைகளும் பெற்று வாழ்கின்றபோது கிறிஸ்தவ, இஸ்லாமியப் பிற்படுத்தப்பட்ட மக்கள் மட்டும் உரிமைகளை இழந்து நிற்பது திட்டமிட்டு, சட்ட வடிவம் கொண்டு அவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியே!

இந்நிலையில் உரிமைக்கான குரல் கடந்த எழுபது ஆண்டுகளாக இந்த மண்ணில் எதிரொலித்தாலும் கேட்கச்செவியற்றவர்களாகவே அரசியல் தலைவர்கள் இருப்பது வெட்கக்கேடு. ஆயினும், ஆண்டுதோறும் ஆகஸ்டு 10-ஆம் நாள் நாம் கடைப்பிடிக்கும் ‘கறுப்பு தினம்’ கிறிஸ்தவத் தலித் மக்களின் உரிமைக்கான விடியல் தினமாகவே கொண்டாடப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு-15, ‘சாதி, சமயம், இனம், மொழி, பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில் அரசு தன் மக்களை ஒருபோதும் பிளவுபடுத்திப் பார்க்கக்கூடாது’ என்றே குறிப்பிடுகிறது. மேலும், மதச்சுதந்திரத்திற்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் 25 முதல் 28 வரையிலான பிரிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால், 1950 -ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் வெளியிட்ட ஆணைப்படி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து தலித் கிறிஸ்தவர்கள் நீக்கப்பட்டிருப்பது இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்கு எதிரானதே!

‘நிர்வாகச் சட்டக் காரணங்களுக்காக’ என முத்திரை குத்தப்பட்ட இந்த ஆணை, மற்றொரு நிர்வாகச் சட்டத்தால் ஏன் மாற்றி அமைக்கப்படக் கூடாது? என்பதே நமது கேள்வி.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் நீதியை, உரிமையை, சலுகையை யாவரும் சமமாகப் பெற வேண்டும் என்பதே சமூகநீதி. “இந்து சமயத்திலிருந்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவச் சமயங்களுக்கு மதம் மாறிய தலித் மற்றும் பழங்குடி மக்களும், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியில் சேர்க்கப்பட்டு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என நீதியரசர் இரங்கநாத் மிஸ்ரா அறிக்கை குறிப்பிடுகிறது. ஆகவே, தலித் கிறிஸ்தவர்களும் பட்டியலினத்தவர் வரிசையில் சேர்க்கப்பட்டு வேலைவாய்ப்பு, கல்வி, இடஒதுக்கீடு, தேர்தல் பங்களிப்பு எனச் சட்டப்பூர்வமாக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதையே இந்நாளில் நாம் முழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடெங்கும் கடைப்பிடிக்கப்பட்ட இந்தக் கறுப்பு தினம் அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் பல அதிர்வுகளைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதே உண்மை. ஆயினும், இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டங்களை இன்னும் வீரியத்தோடு நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும். “தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது ஏதோ இது தலித் கிறிஸ்தவர்களுக்கான பிரச்சினை அல்ல; இது அனைவருக்குமான பிரச்சினை. இது நீதிக்கான பிரச்சினை; இது நாட்டுக்கான பிரச்சினை; இது திரு அவைக்கான பிரச்சினை. எனவே, இந்த உரிமைப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று விடியல் வரும்வரை போராட வேண்டும்” என்று அழைப்பு விடுக்கிறார் பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்கள்.

அவ்வாறே செங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள், “இன்றைக்கு எங்குப் பார்த்தாலும் சமத்துவம், சமூகநீதி என்பது முழங்கப்படுகிறது. அரசியல் மேடைகளானாலும் சரி, ஆலயப் பீடங்களானாலும் சரி, சமத்துவம் சமூக நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், வேதனை மிகுந்த எதார்த்த உண்மை என்னவென்றால், சமூகத்தில் சமத்துவம் இல்லை; சமயம் சார்ந்த இடத்திலும் சமத்துவம் இல்லை. இத்தகைய சூழல் சமூகத்திலும் திரு அவையிலும் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும்; மனித மாண்புடன் அவர்கள் வாழ வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்” என அழைப்பு விடுக்கிறார்.

நீதி என்பது யாவருக்கும் சரியானது, சமமானது, பொதுவானது என்பதே நியதி. அத்தகைய சமூக நீதியே அனைவருடைய ஒற்றைச் சிந்தனையாய் அமைந்திட முயற்சியும் எழுச்சியும் புரட்சியும் கொண்டிடுவோம்.

‘சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணி’ (குறள் 118)

எனும் ஐயன் வள்ளுவனின் வாக்குக்கேற்ப ஆட்சியாளர்களும் எப்பக்கமும் சாயாமல் நீதி வழுவாது நின்று தராசு போல சமநிலையில் யாவரையும் பாவிக்கும் சமத்துவச் சமூகம் படைக்கச் செய்வோம்! சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளை, உரிமைகளை, சலுகைகளை வழங்கி சமத்துவச் சமுதாயம் படைத்திடுவோம்.

விழிப்போடு இருப்போம்... சதி செய்கிறது சாதி... சமத்துவம் என்பதே நீதி!

அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்