தத்துவப் பேராசிரியராய் பரிணமித்து, திரு மறைப் போதகராய் பயணித்து, இன்று திரு அவையின் மேய்ப்பனாய் உயர்ந்து நிற்கிறார் மேதகு ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள்.
இவரின்
குருத்துவப் பணி வாழ்வின் ஏற்றங்களைக் காணும்போது இறவாக் காவியம் படைத்த கண்ணதாசனின்...
‘தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே !
சத்திய
வேதம் நின்று நிலைத்தது
தரணி மீதினிலே!
எத்தனை
உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை
நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!’
என்னும்
வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
தத்துவ
ஞானத்தில் தனிப்பெரும் புலமை கொண்டு, தன்னிலை அறிவதில் புத்தொளி கண்டு, தர்க்க விவாதத்தில் தனித்துவம் படைத்து, கற்ற கல்வியைக் கடையனுக்கும் புகுத்தி, மனித மாண்பை மாண்புறச் செய்ய, ‘மாற்றமே உன்னில் மானுட ஏற்றம்’ என்னும் தாரக மந்திரத்தோடு சென்னை - பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடத்தில் உதவி இல்லத்தந்தையாய், ஆசானாய், நண்பனாய், வழிகாட்டியாய், ஆன்ம குருவாய் பயணித்து, மாணவர் உள்ளத்தில் எழும் அறியாமை இருளகற்றி சிந்தனைச் சுடர் ஏற்றியவர் புதிய ஆயர் அம்புரோஸ் அவர்கள்.
தத்துவ
நடைபயின்ற இவ்வித்தகர், தன்னிலே தனித்துவம் கொண்டதனால் தனது பணி வாழ்வில் பல ஏற்றங்கள் கண்டார்.
மறைமாவட்ட முதன்மைக் குருவாக, பேராலயப் பங்குப்பணியாளராக, கல்வி நிறுவனங்களின் இயக்குநராகப் பயணித்த இவரை, இந்தியத் திரு அவை தனக்கெனச் சொந்தம் கொண்டாடிக் கொண்டது. இந்தத் தத்துவப் போதகரைத் திரு அவையின் திருத்தூது மறைப் போதகராக வாரி அணைத்துக்கொண்டது அகில உலகத் திரு அவை. இத்தகைய அருள் நிறைந்த பயணத்தில், இவர் கொண்ட பன்முகத்தன்மைக்கும் பரந்துபட்ட பணித்தள அனுபவத்திற்கும் நிறைந்த ஞானத்திற்கும் கிடைத்த அங்கீகாரமே இந்த ஆயர் பணி.
திருத்தந்தையின்
இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குநராகவும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் மறைபரப்புப் பணிக்குழுச் செயலராகவும் இவர் ஆற்றி வரும் பணிகளை அங்கீகரிக்கும் வண்ணம் அண்மையில் பிராந்திய பொறுப்பாளர்கள் கூடிய அமர்வில் திருத்தந்தையின் திருத்தூதுப் பணிக்கழகத்தின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியத் திரு அவையின் நம் மறைபரப்புப் பணிக்குக் கிடைத்த மணிமகுடமே!
எளிய
தோற்றமும், இனிய புன்முறுவலும், கனிந்த உள்ளமும் கொண்ட புதிய ஆயர் அவர்கள், தன் ஆயர் பணிவாழ்வின் இலச்சினையாக ‘இரக்கமும் எதிர்நோக்கும்’ என்னும்
விருதுவாக்கைக் கொண்டிருப்பது,
அவர் மேற்கொண்டிருந்த பணிகளையும், இனி ஆற்றவிருக்கும் பணித்தள முன்னெடுப்புகளையும் கூர்மைப்படுத்துகிறது.
‘அன்பாய்’ இருக்கும் கடவுளின் திருப்பெயருக்கான பட்டியலில், கடவுளின் திருப்பெயர் ‘இரக்கம்’
- அதாவது, “The Name of God is Mercy” என்கிறார் கர்தினால்
வால்டர் கஸ்பார். “கிறிஸ்துவின் அன்பு, தந்தையாம் கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்துகிறது; அவரே இரக்கமிகு தந்தையின் திருமுகம்”
என்றும் (இயேசுவின்
திரு இருதயப் பெருவிழா மறையுரை, 2014), “அந்த இயேசுவின் திறந்த இதயம் நமக்குமுன் சென்று, நிபந்தனையின்றி அவருடைய அன்பையும் நட்பையும் நமக்கு வழங்கவே நமக்காகக் காத்திருக்கிறது” என்றும்
(அவர் நம்மை அன்பு செய்தார்: Dilexit Nos, no.1)
குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்தக் கனிந்த, இரக்கம் நிறைந்த இயேசுவின் முகமாய், முகவரியாய்த் தன்னை அடையாளப்படுத்த முன்வருகிறார் புதிய ஆயர்.
‘எதிர்நோக்கு’ என்பது
தனிமனித மற்றும் சமூக மாற்றத்தையும், புதிய நாளுக்கான நிறைவாழ்வின் விடியலையும், ஆழ்ந்த பொருள் கொண்ட ஆன்மிக வாழ்வையும் கட்டமைக்கும் அடித்தளம். ஆகவேதான் தூய பவுல், “எதிர்நோக்கு கொண்டோர் மிகுந்த துணிச்சலோடு செயல்படுவர்; அங்கே தூய ஆவி சார்ந்த திருப்பணிகள் மாட்சி பொருந்தியதாயிருக்கும்...” என்று குறிப்பிடுகிறார் (2கொரி 3:8-12).
அவ்வாறே
தனது வேலூர் மறைப்பணித்தளத்தில் புதிய பரிணாமத்தை, மக்களின் ஏற்றமிகு வாழ்வை, புதிய விடியலை, மறுமலர்ச்சி காணும் திரு அவையை உருவாக்கிட எதிர்நோக்கை
இலக்காகத் தீட்டியிருக்கிறார் நம் புதிய ஆயர். இரக்கம், எதிர்நோக்கு எனும் இவ்விரு மதிப்பீடுகளைத் தன் பணித்தள விருதுவாக்காகக் கொண்டிருக்கும் ஆயரின் பணி சிறந்தோங்க, செழித்தோங்க வாழ்த்துவோம்!
இத்தகையோர் இருப்பதனால்தான் நானிலம் நலம் பெற்றிருக்கிறது என்று எண்ணும்போது...
‘கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான்
உண்டிவ் வுலகு’
(குறள் 571)
எனும்
ஐயன் வள்ளுவரின் வார்த்தையே நம் எண்ணத்தில் நிழலாடுகிறது. அதாவது, இந்த உலகம் ‘அன்பு, இரக்கம் இணைந்த கண்ணோட்டம்’ எனப்படுகிற
பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது என்கிறார். ஆகவே, அன்பினாலும்
இரக்கத்தாலும் தூண்டப்பட்ட புதிய ஆயரின் வாழ்வும், எதிர்நோக்கினால் கட்டமைக்கப்பட்ட புது விடியலுக்கான பணிகளும், மூவொரு இறைவனின் வல்லமையால், அன்னையின் பரிந்துரையால் நல்லாயன் வழியில் சிறப்புற அமைந்திட வாழ்த்தி செபிப்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இந்தியா சுதந்திரம் பெற்ற சூழலில், அரசியல் அரங்கை அறிவாளிகளும் நேர்மையாளர்களும் மட்டுமே அலங்கரித்தனர்; அவர்களே முன்வரிசையில் வீற்றிருந்தனர். எதையும் கட்சிக் கண்ணோட்டத்திலும், மதவாதப் போக்கிலும், பாசிச எண்ணத்திலும் அணுகும் அருவருப்பான நடைமுறை அன்றைய அரசியல் தலைவர்களிடம் அறவே காணப்படவில்லை. ஆனால், இன்றைய சூழலோ முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. சுருதி பேதம் இல்லாமல் துதி பாடுபவருக்குப் பதவி நாற்காலி வழங்கப்படுகிறது. அப்பழுக்கற்ற திறமைசாலிகளும், உண்மையை உரக்கச் சொல்ல நினைப்பவர்களும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். நீதி வழி நடப்போரைக் காண்பது இன்று அரிதாகிப் போனது.
முதல்
தரமான மனிதர்கள் மூன்றாம் இடத்திலும், மூன்றாம் தரமான நபர்கள் முதல் இடத்திலும் இருக்க வேண்டும் என்பது இன்றைய கலியுலக அரசியல் களத்தின் நியதியாகிப் போனது. அரசியல் தரம் அநாகரிகம் போர்த்தப்பட்டு, அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், மனித உரிமைகள் என்னும் அரசியல் சாசனத்தின் விழுமியங்கள் இவர்களால் விழுங்கப்படுகின்றன.
கடந்த
11 ஆண்டுகளாக ஒன்றிய பா.ச.க.
அரசின் காலத்தில் அரசுத்துறைகள் எல்லாம் அச்சுறுத்தும் துறைகளாகிப் போயின. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என யாவும் அவர்கள்
பக்கம் வரிந்து கட்டி நிற்கின்ற போதும், கூடுதலாக இன்று மாநில அரசு இயந்திரங்களின் அதிகாரத்தையும், மாநகராட்சி, நகராட்சி அதிகாரங்களையும் பா.ச.க.
ஆளும் மாநிலங்களில் அரசு நிர்வாகம் கையில் எடுத்திருப்பது பேரவலமானது.
அத்தகைய
செயல்பாடுகளில் ஒன்று மத்தியப் பிரதேசத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் மற்றும் பா.ச.க.
ஆளும் மாநிலங்களிலும்
புரையோடிக் கிடக்கும் ‘புல்டோசர்’
நடவடிக்கை. உத்திரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசால் தொடங்கப்பட்ட புல்டோசர் நடவடிக்கை இப்போது பல மாநிலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு
வருவதும், பா.ச.க.
ஆளும் அரியானா, குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களில் இவை தொடர்வதும் மிகுந்த கவலையளிக்கிறது.
இத்தகைய
நடவடிக்கைகள் நிகழும் மாநிலங்களில் சாமானியனின் சார்பாக உச்ச நீதிமன்றம் தன் கண்டனக் குரலை எழுப்பியிருக்கிறது. குற்றச் சம்பவத்தில் தொடர்புள்ளவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை, விதிகளை மீறியதாகக் கூறி புல்டோசர் மூலம் இடிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை ‘சட்ட விரோதமானது’ என
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய்,
கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வில் அண்மையில் நவம்பர் 13 அன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இதுவரை
1.5 இலட்சம் வீடுகள் புல்டோசரால் இடிக்கப்பட்டு இருப்பதும், இதில் 7.3 இலட்சம் பேர் வீடிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருப்பதும் பெரும் கவலையளிக்கிறது. இந்த நடவடிக்கையின் உள்நோக்கத்தை ஆய்ந்த உச்ச நீதிமன்றம், இது விளிம்பு நிலை மக்களுக்கும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் எதிராகப் போராடிய முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்படும் செயல்பாடாகவே அடையாளப்படுத்துகிறது.
இம்மனுவை
விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பதற்காக மட்டுமே ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்?’ என்ற கேள்வியோடு, இப்படிப்பட்ட அநாகரிகச் செயல்களால் அக்குடும்பத்தில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் படும் துயரத்தைக் குறிப்பிட்டிருக்கிறது.
சட்டவிரோத
நடவடிக்கைகளிலிருந்து
குடிமக்களைப் பாதுகாப்பதும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதுமே மாநில அரசின் கடமையாகும். சனநாயகம் மற்றும் நல்லாட்சிக்கு இதுவே அவசியமானதும் கூட. ஆனால், இதற்கு மாறாக, நீதிபதிகள் போன்று அரசு அதிகாரிகள் செயல்பட்டு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான கட்டடங்களை இடித்துத் தண்டனை அளிப்பது என்பது அதிகாரப்பகிர்வுத் தத்துவத்தை மீறும் செயலாகும். ஆகவே, சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் ‘குற்றவாளி’
எனக் குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்ற வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டவருக்கு எதிராக இதுபோன்ற தன்னிச்சையான, மிகக் கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசோ அல்லது அரசு அதிகாரிகளோ மேற்கொள்ள முடியாது எனக் கடுமையாக எச்சரித்திருக்கின்றனர்.
‘ஒருவர் குற்றவாளி என்பதால் அவரது வீட்டை எப்படி இடிக்க முடியும்? அவர் குற்றவாளியே ஆனாலும் கூட, அவரைத் தண்டிக்க முறையான சட்ட வழிமுறைகள் இருக்கின்றனவே! ஒருவரைத் தண்டிக்கும் உரிமை நீதித்துறைக்குத்தானே தவிர, அரசுக்குக் கிடையாது’
எனவும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.
ஒருவர்
குற்றம் சாட்டப்பட்டவராக இருந்தாலும் அல்லது குற்றவாளியாக இருந்தாலும் அவர்களுக்கென குறிப்பிட்ட உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை அரசியல் அமைப்புச் சட்டத்திலும், குற்ற நடவடிக்கைச் சட்டத்தின் கீழும் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பாதிக்கப்பட்டவருக்கு முறையான சட்டப் பாதுகாப்பு அவகாசம் வழங்காமல் அவர்களது உறைவிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கும் நடவடிக்கையைச் சனநாயகத்தில் நம்பிக்கை உடைய எவரும் ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள்.
ஒருவருக்கு
வீடு என்பது அடையாளம், வாழ்விடம், பாதுகாப்பு அரண்! பல ஆண்டுகள் மேற்கொண்ட
கடின உழைப்பின் கனவு அது. இத்தகைய சூழலில் ஒரே இரவில் இந்த நடவடிக்கைகள் இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி விடுகின்றன. இது தனி மனிதனின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும், எதிர்கால வாழ்வியல் நலனுக்கும், இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் முரணானவை.
தங்குமிடத்துக்கான
உரிமை என்பது வாழ்வதற்கான உரிமை, தனி உரிமை ஆகியவற்றின் ஓர் அங்கம் என அரசமைப்புச் சட்டத்தின்
21-வது கூறு உறுதியளிக்கிறது. “இத்தகைய உரிமை மீறல் அரசமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்”
என எச்சரித்திருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. ஆர். கவாய்.
இத்தகைய
செயலை அன்றே முன் குறித்த ஐயன் வள்ளுவர்,
‘கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை
செய்தொழுகும் வேந்து’ (குறள்
551)
என்கிறார்.
அதாவது, குடிமக்களைத் துன்புறுத்தும் எண்ணத்தில் முறையற்ற செயல்களை மேற்கொண்டு, தவறாக ஆளும் ஓர் அரசு, பகைவெறி கொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது என்கிறார். மக்களாட்சியையும், மனித உரிமையையும் வெறும் பார்வையாளர்களாக மாற்றி, புல்டோசர்களைப் புதிய நிர்வாக நடவடிக்கையாக மாற்றி வரும் பா.ச.க.வின் நடவடிக்கைகளைப்
பார்க்கும்போது,
‘ஆட்சிக் கட்டிலின்,
ஐந்தாண்டு
புருஷர்கள்
பசிக்கப்
பசிக்கப் புசிப்பது
இந்தியாவின்
ஈரல்...’
என்னும்
ஈரோடு தமிழன்பனின் கவிதை வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.
இத்தகைய
கொடுஞ்செயல்கள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். ஆயினும், ஆறுதலாக வந்த இந்தத் தீர்ப்பு இறுதித்தீர்ப்பின் முன்னோட்டமாக அமையட்டும்.
இப்போதைக்குப்
‘புல்டோசர் நடவடிக்கை’
முடக்கப்பட்டிருப்பது
ஆறுதல் அளித்தாலும், மானுட உரிமைகளை, மானுட வாழ்வியல் தத்துவங்களை அழிவுக்கு இட்டுச் செல்லும் இத்தகைய அராஜக நடவடிக்கைகள் முற்றுப் பெற உரிமைக் குரல் எழுப்புவோம்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
தண்ணீரில் கால் வைத்து செந்நீரில் நாள் கடந்து,
கண்ணீரில்
கரைகிறது மீனவர் வாழ்க்கை!
அலைகளோடு
போராடும் ஆழி கொண்ட வாழ்க்கை,
அமைதியின்றியே
அலைக்கழிக்கப்படுகின்றது.
இரவின்
மடியில் தொடங்கும் வாழ்க்கை
விடிந்த
போதும் விடியாப் பொழுதே!
வலிகள்
நிறைந்த வாழ்வியல் சூழல்
விடைகள்
தேடியே விடை பெறுகின்றன.
எல்லை
மீறியதாய் எதிர்வரும் அவலங்கள்
யார்
அங்கு மீறுவது? நீயே சொல் தாயே!
கனவுகள்
கொண்ட நாளைய வாழ்வு
கலைந்தே
கரைந்தே கரை சேர்கிறது.
இந்திய
- இலங்கை கடல் எல்லைப் பகுதியில் நாளும் தொடரும் இலங்கையின் அத்துமீறல்கள்தான் நம் இதயக் கதவைத் தகர்த்துச் செல்கின்றன. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு தாக்கப்படுவதும், வலைகள் அறுக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் பல வேளைகளில் படகுகள்
பறிமுதல் செய்யப்பட்டு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்டுச் சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டு வதைக்கப்படுவதும், ‘தினத்தந்தி’யின்
முற்றுப்பெறாத ‘கன்னித்தீவு’ தொடர்
கதையாகிக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய தொடர் நிகழ்வுகள் இந்திய ஒன்றிய அரசின் கையறு நிலையையே படம்பிடித்துக் காட்டுகின்றன.
இலங்கையிலும்
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு இதுவரை எத்தகைய நிரந்தரத் தீர்வும் எட்டப்படவில்லை என்பது நாமனைவருமே வெட்கப்படவேண்டிய ஒன்று.
அண்மையில்
(நவம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை அன்று) கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
இந்த
ஆண்டில் மட்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 65 படகுகளைப் பறிமுதல் செய்த இலங்கைக் கடற்படையினர், 485 மீனவர்களையும் சிறைப்பிடித்து இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
மீனவர்கள்
தொடர்ந்து இவ்வாறு தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் வன்மையாகக் கண்டிப்பதோடு, இலங்கையில் உள்ள அனைத்து தமிழ்நாட்டு மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களைத் தாயகம் அழைத்துவர ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு ஆயர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இராமேஸ்வரத்திலிருந்து
மீன் பிடிக்கச் சென்ற நம் மீனவர்களை, ‘எல்லை தாண்டிய’ பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டி இலங்கை அரசு தொடர்ந்து சிறைப்பிடித்து வருவது பெரும் கண்டனத்திற்குரியது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை நாட்டு எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
வேலியிடப்படாத
பெருங்கடலில் நமது பகுதி எங்கே முடிகிறது? அவர்களின் பகுதி எங்கே தொடங்குகிறது? எனச் சாமானிய மீனவர் கண்டுணர்வது எங்ஙனம்?
கடந்த
அக்டோபர் மாதம் 23 -ஆம் தேதி இராமேஸ்வரத்தைச்
சேர்ந்த 16 மீனவர்களும், அதைத்
தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் அக்டோபர் 26 -ஆம் தேதி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழாண்டில் மட்டும் மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் 30 ஆக அதிகரித்திருக்கிறது. 140 மீனவர்களுடன், 200 மீன்பிடிப் படகுகளும் தற்போது இலங்கை அரசின் வசம் உள்ளதாக அறியப்படுகிறது.
இத்தகைய
நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும், தீர்க்கமான முடிவுகள் காணப்பட இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதும் தமிழ்நாடு அரசின், நம் மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருக்கிறது. அத்தகைய கோரிக்கைகளைத்
தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்
முன்வைத்ததன் பேரில் கடந்த ஆண்டு அக்டோபர் 21 -ஆம் தேதி கொழும்பில்
நடைபெற்ற கூட்டத்தில், மீனவர்களுக்கு எதிராகப் படைபலத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர்
வலியுறுத்தியது பாராட்டத்தக்கதே!
ஆனாலும்,
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டும்போது கைது செய்யப்படுவதும், தமிழ் மக்களின் கொந்தளிப்பால் இந்திய அரசின் வெளியுறவுத்துறை நிர்வாகத் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டது. நமது
எதிர்ப்புகளை வெறும் காகிதக் கணைகளாக இலங்கை அரசு கருதுகிறதோ... என்னவோ!
அண்மைக்
காலங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் கடுமையாகத் தாக்கப்படுவதும், அவர்களது உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும், மிகப்பெரும் அபராதம் தண்டனையாக விதிக்கப்படுவதும் அதிகரித்து வருவது நமக்குப் பல்வேறு ஐயங்களை உருவாக்குகிறது. எல்லை
தாண்டியதுதான் பிரச்சினை என்ற வாதத்தை அது கேள்விக்குள்ளாக்குகிறது.
கடுமையான
அபராதத் தொகையைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தாலும், படகுகளை நெடுங்காலத்திற்கு இலங்கை அரசு தன்வசம் வைத்துக் கொள்வதாலும் தமிழ்நாட்டு மீனவர்களின் இருப்பும், வாழ்வியலும் பெரும் சிக்கலுக்குள்ளாவதோடு, மனத்தளவிலும், உடல் அளவிலும், சமூக-பொருளாதார நிலையிலும் அவர்கள்
பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை இந்த நாட்டு அரசும், அண்டை நாட்டு அரசும் உணர்ந்திடல் வேண்டும்.
தேர்தல்
நேரத்தில் தெவிட்டாது, தேனொழுகப் பேசிய ஒன்றிய அரசு வழக்கம்போல இன்று கள்ள மௌனம் காக்கின்றது. தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் புதிய அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற அனுரகுமார திசாநாயக்கா வெற்றிக்குப் பிறகு ‘மாற்றங்கள் நிகழும்’ என்ற கூற்று, எவ்வித மாற்றமும் இன்றி பொய்த்துப் போனது.
ஒன்றிய
அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை அதிபரைச் சந்தித்துப் பல்வேறு திட்டங்களைப் பற்றிப் பேசி வந்த போதிலும், மீனவர் பிரச்சினையில் எவ்விதத் தீர்க்கமான முடிவும், உறுதியான வலியுறுத்தலும் அவர் மேற்கொள்ளாதது நமக்கு ஏமாற்றமளிக்கிறது.
கடந்த
நாற்பது ஆண்டுகளாக அன்றாட நிகழ்வாகத் தொடரும் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வியல் அவலம் குறித்துத் தீர்க்கமான முடிவெடுக்க தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் பலமுறை டெல்லி சென்றபோதும், ஒன்றிய அரசு காட்டிய ‘மாற்றாந்தாய் மனநிலை’ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்தன.
கடந்த
ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அதிக அளவில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதை இனியும் தொடரவிடாது தடுக்கவும் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை, அவர்களது படகுகளை விடுவிக்கவும் உடனடியாகத் தூதரக நடவடிக்கைகளை இந்திய ஒன்றிய அரசு உடனே முடுக்கி விட்டு, தமிழர்களும் இந்தியாவின் குடிகள்தாம் என்பதை இந்த உலகுக்கு உரத்துச் சொல்ல வேண்டும் என்பதே நமது கோரிக்கை!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 - அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சார்ந்த வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸைத் தோற்கடித்ததன் மூலமாக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.
1893 -ஆம் ஆண்டு
கிரோவர் கிளீவ்லேண்டின் வெற்றியில் நிகழ்ந்தது அந்த வரலாறு. அதாவது, தோல்வி அடைந்த ஓர் அதிபர் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் போட்டியிட்டு மீண்டும் அதிபரானார். அந்த வரலாறு மீண்டும் அமெரிக்காவில் தற்போது அரங்கேறியிருக்கிறது.
இந்த
வரலாற்றுப் பதிவுடன் 2020 - ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது 77 வயதில் போட்டியிட்டு வெற்றி கண்ட தற்போதைய
அதிபர் ஜோ
பைடனின் வயதையும் கடந்து, தனது 78- வது வயதில் அமெரிக்காவின் அதிபர் ஆகிறார் ட்ரம்ப். இதன்
மூலம் அதிக வயதில் அமெரிக்க அதிபராகத் தேர்வானவர் என்ற பைடனின் சாதனையையும் இவ்வெற்றியின் மூலம் முறியடித்திருக்கிறார்.
6.71 கோடி பொதுமக்கள்
வாக்குகளையும், 224 பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெற்ற கமலா ஹாரிஸைவிட, 7.19 கோடி பொதுமக்கள் வாக்குகளையும், 295 பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெற்று மிகப்பெரிய வெற்றியைக் கண்டிருக்கும் ட்ரம்ப், அமெரிக்க நாட்டின் 47-வது அதிபராக ஜனவரி 20, 2025 அன்று அரியணை ஏறுகிறார்.
அமெரிக்காவில்
அதிபர் தேர்தல் சற்றே வித்தியாசமானது. புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க குடிமக்கள் நேரடியாக வாக்களிப்பதுபோலத் தோன்றினாலும், அந்த வாக்குகள் ஒவ்வொரு மாகாணத்திலும் கட்சியின் சார்பாக இருக்கும் தேர்தல்-பிரதிநிதிகளுக்கே (எலக்ட்ரஸ்) கிடைக்கும். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மாகாணங்கள் சார்பாக உள்ள ‘செனட்டர்’
எனப்படும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்தல்-பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்.
மக்கள்தொகை
அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடாது என்பதற்காகவும், ஒவ்வொரு மாகாணத்திற்கும் சம பங்களிப்பு இருக்க
வேண்டும்; கறுப்பின மக்களுக்கும், அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் சமமான, முறையான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வாக்குமுறை அங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்
அடிப்படையில் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் 535 மக்கள் பிரதிநிதிகள் உள்ள நிலையில், கொலம்பியா மாகாணத்திற்குக் கீழவையில் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் அந்த மாவட்டம் சார்பாகத் தனியாக மூன்று பிரதிநிதிகள் கணக்கிடப்பட்டு, 50 மாகாணங்களுக்குமாக மொத்தம் 538 பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களான 270 பேரின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.
மாகாணங்களில்
பொதுமக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் வேட்பாளர் அந்த மாகாணங்களில் உள்ள அனைத்துத் தேர்தல்-பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெறுகிறார். குறிப்பாக, டெக்ஸஸ் மாகாணத்தில் 56.3 விழுக்காடு பொதுமக்கள் வாக்குகளைப் பெற்ற ட்ரம்ப், அம்மாகாணத்தின் தேர்தல்-பிரதிநிதிகளான 40 நபர்களின் வாக்குகளையும்
பெறுகிறார்.
ட்ரம்பின்
இந்த வெற்றியை எளிதாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. இவருடைய வெற்றி மிகப்பெரிய சரிவிருந்து மீண்டு வந்த வெற்றி! 2020 -ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி
அடைந்த சில தினங்களில் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கலகம் செய்தனர். அவ்வேளையில் ‘ட்ரம்ப் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்’ என்றும்,
அவரது அரசியல் வாழ்க்கை சரியத் தொடங்கிவிட்டது, முடிவை நோக்கி நகர்கிறது என்றும் உலக அரசியலே அன்று கணித்தது.
ஆயினும்,
குற்றவியல் வழக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகள், இரு கொலை முயற்சிகள்... எனத் தன்மேலுள்ள பல தடைகளையும் தாண்டி
இன்று வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் ட்ரம்ப்.
“பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது அவரது காதை உரசிச் சென்ற துப்பாக்கித் தோட்டா ஓர் அங்குலம் தள்ளிப் பாய்ந்திருந்தால் அமெரிக்க வரலாறே மாறியிருக்கும்” என்கிறார்கள்
அரசியல் விமர்சகர்கள்.
தொடரும்
வழக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரைத் தகுதி நீக்கம் செய்யப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட
போதிலும், எல்லாச்
சவால்களையும் எதிர்த்துப் போராடி அமெரிக்க வரலாற்றில் அரசியலின் அடி ஆழத்துக்கு அழுத்தப்பட்டு அதிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையைப்போல் மீண்டெழுந்த தலைவர் என்ற புதிய வரலாற்றை எழுதியிருக்கிறார் ட்ரம்ப்.
ட்ரம்பின்
இத்தகைய வெற்றியால் அவருடைய அரசியல் வருகை உலக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா எல்லாரும் குடியேறும் பரந்த நாடாக இருக்கும் தன்மையிலிருந்து மாறி, இனி எல்லைப் பாதுகாப்பில் அதிகக் கவனம் கொண்டிருக்கும். எளிதாக இனி அமெரிக்காவில் எவரும் குடியேற முடியாது. குடியேற்றச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் எனக் கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதை
மெய்ப்பிக்கும் வண்ணம் தனது வெற்றிக்குப் பின் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்காவின் எல்லையை நாம் பாதுகாக்கப் போகிறோம்; அமெரிக்காவின் ஒவ்வொரு தன்மைகளையும் மாற்றி நாட்டைச் சரிசெய்யப் போகிறோம்; இனி நான் ஓய்வெடுக்கப் போவதில்லை. மக்களுக்காகத் தினமும் களம் காணப் போகிறேன். அமெரிக்காவின் பொன்னான காலமாக இனி இது இருக்கப் போகிறது. ‘Make America Great Again’ என்ற கொள்கைக்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம்”
என்று சூளுரைத்திருக்கிறார்.
ட்ரம்பின்
இந்த வெற்றியால் அமெரிக்காவின் வளர்ச்சியில் மட்டுமின்றி, உலக வர்த்தகம், பொருளாதாரம், கல்வி, அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, மனிதவளம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல தளங்களில் உலகளாவிய
மாற்றங்களும் தாக்கங்களும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி
பெற்ற அதிபரை வாழ்த்தும் உலக நாடுகளின் தலைவர்களின் வாழ்த்துச் செய்தியும் கூற்றும் இதை உறுதி செய்வதாகவே இருக்கின்றன. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், “சுதந்திரம், சனநாயகம் உள்ளிட்டவற்றைக் காப்பதோடு, வளர்ச்சி, பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் என வரும் காலங்களில்
அமெரிக்கா -பிரிட்டனிடையிலான உறவு சிறப்புற செழிப்படையும்” என
நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனேசியும் தங்கள் நாடுகளுக்கிடையே மிகப்பெரிய உறவுக் கூட்டணி நிகழும் எனவும், தொடர்ந்து ஒன்றாகப் பணியாற்ற வலுவான கட்டமைப்பை உருவாக்குவதாகவும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். ஜெர்மனியின் பிரதமர் ஓலா சோர்ஸ், “இரு நாடுகளும் இணைந்து தங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்ட பணிகளைத் தொடர வேண்டும்”
என அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்தியப்
பிரதமரோ, பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் வலுப்பெறும் வகையில் மீண்டும் இணைந்து பணியாற்றத் தான் காத்திருப்பதாக அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய விரிவான மற்றும் வியூகக் கூட்டாண்மை மேலும் வலுப்பெறுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது
வெற்றியின் மூலம் வரலாற்றுச் சாதனைகள் படைத்திருக்கும் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வாழ்த்துவோம். உலக நாடுகளுக்கிடையே அமைதியையும், ஒற்றுமையையும் பேணவும், உலக அளவில் ஒட்டு மொத்த மானுட வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றவும் வேண்டுவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘விடுதலை’ என்னும் மெய்யியல், இறையியல், உளவியல், அரசியல், ஆன்மிகக் கோட்பாடு இன்று சமூகவியல் நிலைப்பாடாக உருமாறியிருக்கிறது. சமூக-அரசியல் தளத்தில் விடுதலை என்பது தனி மனிதனின் தன்னுரிமை மற்றும் அறநெறிப் பொறுப்புகள் என்பதை உணர்த்துகின்றன. விடுதலை - சமூகப் பொருளாதார வாழ்வில் சமத்துவத்திற்கான அறைகூவல்.
“நம் சமுதாயப் பொருளாதார வாழ்வில் இன்னும் எத்தனை காலம் நாம் சமத்துவத்தை மறுக்க முடியும்? கூடிய விரைவில் இந்த முரண்பாட்டை அகற்றாவிடில், ஏற்றத்தாழ்வினால் அவதியுறும் மக்கள் ‘அரசியல் சனநாயகம்’
என்ற கட்டமைப்பை வெடிவைத்துத் தகர்த்து விடுவர்” என்றார் அரசியல் நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர். “பணக்காரருக்கும் பசித்தவருக்கும் இடையில் பிளவு நீடிக்கும் வரை அகிம்சை சார்ந்த அரசுக்கான சாத்தியம் இல்லை; பணம் படைத்த வர்க்கம் தன் செல்வத்தையும் அதிகாரத்தையும் தாமே முன்வந்து ஏழையுடன் பகிர்ந்து கொள்ளத் தவறினால் வன்முறை மிகுந்த இரத்தப் புரட்சி ஒரு நாள் தவிர்க்க முடியாததாகிவிடும்” என்று
(India of my dreams) குறிப்பிடுகிறார் மகாத்மாகாந்தி. நாடு அரசியல் விடுதலை அடைந்தாலும் மக்களின் சமூக, பொருளாதார விடுதலை அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள் இந்த மகான்கள்.
நாடுகள்
விடுதலை அடைந்தாலும், மக்கள் ‘உரிமை’,
‘வாழ்வு’ என
வசந்தம் கொண்டாலும் அவர்களின் சமூகச் சிந்தனையில் படிந்துகிடந்த அடிமை, ஏற்றத்தாழ்வு, வறுமை, ஏழ்மை என்ற இருள்சூழ் தன்மைகளைக் கிழித்திடும் விடுதலைச் சிந்தனைகளைப் பரப்பிட உதித்த சூரியன்தான் ‘21 -ஆம் நூற்றாண்டின் சமூகச் சிற்பி’ என அழைக்கப்படும் ‘ஏழைகளின்
பாதுகாவலர்’ குஸ்டாவோ
குட்டியரஸ்.
இவர்
விடுதலை இறையியல் என்னும் தனது ஆழமான கருத்தியல் வாயிலாக ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் கிறிஸ்துவின் இருத்தலைப் பற்றிய புதிய பார்வையைத் திரு அவைக்கு அறிமுகப்படுத்தியவர். நீதி, அமைதி, மனித மாண்பிற்கான சிந்தனைகளைத் திரு அவை கடந்து உலக அளவில் வழங்கியதால் ‘ஏழைகளின் திருத்தூதர்’ (Apostle of the Poor) என்றும் அழைக்கப்படுகிறார்.
தென்
அமெரிக்காவின் பெரு நாட்டில் லீமா நகரில் 1928 -ஆம் ஆண்டு ஜூன் எட்டாம் நாள் பிறந்த இவர், டொமினிக்கன் துறவற சபை அருள்பணியாளராகவும், இறையியல் பேராசிரியராகவும், விடுதலை இறையியலின் தந்தையாகவும் அறியப்படுகிறார். 1971-ஆம் ஆண்டு வெளியிட்ட தனது ‘விடுதலை இறையியல்’
(A Theology of Liberation) என்னும்
நூலின் வழியாக இக்கருத்தியலை முன்வைத்து இலத்தீன்-அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் ஒடுக்குமுறையைக் களைவதற்கான திரு அவையின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் பற்றித் தெளிவுபடுத்தினார்.
விடுதலை
இறையியல் என்பதை வெறுமனே இறையியல் சிந்தனையில் மலர்ந்த ஒரு புதிய கூடுதல் கருத்தாக்கமாகக் கருதாமல், புதிய இறையியலாக்கச் சிந்தனையாக, செயல்முறையாக வரையறுத்துக் கொடுத்தார். விடுதலை மற்றும் மேய்ப்புப்பணி இறையியல் என்பது செய்முறை அல்லது செயல்முறை இறையியல் (Practical Theology) என்று
உருமாற்றம் பெறவும் வழிகாட்டினார்.
இரண்டாம்
வத்திக்கான் திருச்சங்கத்திற்குப் பிறகு எழுந்த இந்த மாற்றுச் சிந்தனை, இறையியலாளர்கள் மத்தியிலும் திரு அவைப் பணியாளர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, புரட்சியை விதைத்து அவர்களின் மேய்ப்புப்பணியில் ஏழையோரின் நிலைப்பாட்டை முன்னெடுக்க வைத்தது. பல்வேறு அருள்பணியாளர்கள் ஏழைகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக அர்ப்பணத்துடன் பணியாற்றவும் வழிகாட்டியது.
அநீதியைச்
சுட்டிக்காட்டுவதும் உண்மையை எடுத்துரைப்பதும், துணிந்த நேர்கொண்ட பார்வை கொண்டிருப்பதும் ஓர் இறைவாக்கினருக்குரிய அளவுகோல். அத்தகைய பார்வையில் நம் காலத்து இறைவாக்கினராகவே இவர் அறியப்படுகிறார்.
“கடவுள் உங்களை அன்பு செய்கிறார் என்று எப்படி ஏழைகளிடம் சொல்லமுடியும்?” என்ற ஒற்றைக் கேள்வியில் எழுந்ததுதான் இவருடைய மேய்ப்புப்பணியும், இறையியல் சிந்தனையும். ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் சமூகப் பொருளாதார நிலைப்பாட்டை உயர்த்தும் வாழ்வியல் முறையே மீட்பு (Salvation), விடுதலை (Liberation) என்னும் இறையியல் கொள்கையோடு தொடர்புடையது என வலியுறுத்தினார். சமூகப் பொருளாதார
அநீதிகளே மக்களின் ஏழ்மைக்கான அடிப்படைக் காரணங்களாக வரையறுத்தார். இந்த அநீதிகள் அகற்றப்படும் பொழுது கடவுளின் நீதி நிறைந்த இறையரசை (Kingdom of God) மண்ணில்
கட்டி எழுப்ப முடியும் என்று உறுதி
பூண்டார். ஆகவே, விடுதலை இறையியல் என்பது இலத்தீன்-அமெரிக்க நாடுகளிலும், அடிமைச் சூழல் கொண்ட சமூகத்திலும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கான அழைப்பாக, இறைக் கோட்பாடாக முன்னெடுக்கப்பட்டன.
விடுதலை
இறையியலின் கூற்றுப்படி, “ஒரு நீதியான சமூகத்தை நோக்கி நாம் நகர வேண்டும்; சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை மக்கள் வாழ்வில் கொண்டுவர வேண்டும்; அடிமைப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, நசுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத் திற்கு வாழ்வு கொடுக்க வேண்டும். ஏழையாகப் பிறந்த இயேசு, தம்மை ஏழை எளியவரோடும், தாழ்த்தப்பட்டவரோடும், விளிம்புநிலை சமூகத்தோடும் அடையாளப்படுத்தி, அவர்களை மையம் கொண்ட பணிகளை மேற்கொண்டதுபோல, அவருடைய சீடர்களும்-சீடத்திகளும் அத்தகைய பணியில் ஈடுபட வேண்டும்”
என அழைப்பு விடுத்தார்.
ஆகவே,
விடுதலை இறையியல் ‘ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையை’
வலியுறுத்தும்
ஓர் இறையியல் அணுகுமுறையாகவும், சமூகப் பொருளாதாரப் பகுப்பாய்வுகளில் ஈடுபட்டு ஏழை
மக்களின்மீது சமூக அக்கறை கொண்டு ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விடுதலை’ என்ற அறைகூவலோடு சமத்துவத்தை நிலைநாட்டும் ஓர் உன்னதக் கோட்பாடாகவும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வறுமை
மற்றும் சமூக அநீதிக்கு எதிர்வினை என்னும் சிந்தனையில் மலர்ந்த விடுதலைக் கூறுகளால்தான் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் மலர்ந்த கறுப்பின விடுதலை இறையியல், பெண்ணிய விடுதலை இறையியல், இந்தியத் துணைக் கண்டத்தில் மலர்ந்த தலித் விடுதலை இறையியல், பழங்குடியினர் விடுதலை இறையியல், சூழலியல் விடுதலை இறையியல், தமிழ்த் தேசிய விடுதலை இறையியல் என்ற சிந்தனைகள் தளிர்விட்டிருக்கின்றன. ஏழைகளின் தளத்தில் அவர்களின் பார்வையில் இருந்து விடுதலைக்கான கூறுகளை ஆராய்ந்து, தெளிவான முன்னெடுப்புகளை மறுமலர்ச்சி எண்ணங்களில் எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த இறையியலின் அடிப்படைக் கூறாக அமைந்திருக்கிறது. இத்தகைய பெரும் மாற்றுச்சிந்தனையைத் திரு அவையிலும், உலக அளவிலும் ஏற்படுத்தியவர் குஸ்டாவோ குட்டியரஸ்.
ஆகவேதான்,
அவருடைய இறுதிச்சடங்குக்கான இரங்கல் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அருள்பணியாளர் குஸ்டாவோ அவர்கள் திரு அவையில் ஓர் உயர்ந்த மனிதர்” என்றும், “மறைபரப்புக்கான கனிகளையும், வளமான இறையியலையும் எவ்வாறு வழங்குவது என்பதன் அடையாளமாக”
இருப்பதாகவும்
புகழாரம் சூட்டினார்.
அவ்வாறே,
இந்தியத் திரு அவையும், “குஸ்டாவோ அவர்களின் கருத்துகள் திரு அவையின் பணியினை ஆழமாக வடிவமைத்துள்ளன” என்றும்,
“ஒன்றிப்பு மற்றும் பணிக்கான புதுப்பிக்கப்பட்ட புரிதலுக்கு வழிவகுத்ததுடன் இரக்கமுள்ள, நீதியுள்ள உலகிற்காக உழைக்க எண்ணற்றவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்றும்
புகழாரம் சூட்டுகிறது.
திரு
அவை சமூக நீதியை முன்னிலைப்படுத்திய மேய்ப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த
அருள்பணியாளரான ‘விடுதலை இறையியலின் தந்தை’ குஸ்டாவோ அவர்கள் தனது 96-வது வயதில் (அக்டோபர் 22, 2024) மறைந்தாலும், அவருடைய கருத்தியல் காலத்தால் அழியாத கருவூலம். சாதி, சமயம், இனம், வர்க்கம், நாடு, பாலினம் எனும் அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட இச்சமூக அமைப்பைத் தகர்த்து சமத்துவமும், சகோதரத்துவமும் கொண்ட ஏற்றத்தாழ்வற்ற புத்துலகம் படைக்க பல புரட்சியாளர்களைத் திரு அவையிலும்,
சமூகத்திலும் இக்கருத்தியல் தொடர்ந்து உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
சமத்துவ விடியல்
தூரமில்லை;
சமதர்மம் தழைக்கும்
வானமே
எல்லை!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-லிருந்து தமிழ்நாட்டு அரசியல் மேடையில் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் இரவீந்தர நாராயண இரவி எனப்படும் தமிழ்நாடு ஆளுநர் R.N. இரவி. ‘பாவம்’ என்று இவர்மீது பரிதாபப்படுவதா, இல்லை... ‘ஏன் இப்படிச் செய்கிறார்?’ என்று இவர்மீது கோபப்படுவதா? ஒன்றும் புரியவில்லை.
ஒரு பொம்மை வேகமாக இயங்குவதற்குத் தொடர்ந்து சாவி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு சாவி கொடுக்கப்பட்டவுடன் பொம்மை அதிவேகமாக இயங்கும்; அதன் பிறகு சற்றே மெதுவாக நிலைத்தன்மை அடையும். அது மீண்டும் சாவி கொடுக்கப்பட்டவுடன் வேகமாக இயங்கத் தொடங்கும். இதுவே தொடர்கதையாகும். அவ்வப்போது டெல்லி சென்று வரும் ஆளுநரின் கதையும் அப்படியாகத்தான் இருக்கிறது.
சிலருக்கு ‘தொட்டதெல்லாம் துலங்கும்’ என்பார்கள். பாவம், இவருக்குத் தொட்டதெல்லாம் தொடக்கத்திலிருந்தே சர்ச்சையாக வெடிக்கிறது. திருவிளையாடலில் வரும் தர்க்கக் காட்சியில் தருமி கேட்கும் ‘சேர்ந்தே இருப்பது?’ என்ற கேள்விக்கு இன்றைய நவீன விடையாக ‘ஆளுநரும் - சர்ச்சைகளும்’ என்றுதான் பதில்கூற வேண்டியிருக்கிறது.
சென்னை, தூர்தர்ஷன் (டிடி தமிழ்) தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்துடன் நடைபெற்ற ‘இந்தி மாதக் கொண்டாட்டம்’ நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு ஆளுநர் அண்மையில் கலந்துகொண்டபோது, அவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டது தற்போது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையாகவும், பேசுபொருளாகவும் இருக்கிறது. இதற்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆளுநரைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் நினைவிருக்கலாம்.
‘திராவிடம்’ என்பது தமிழைக் குறிக்கும் சொல்லாகப் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருவதும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பன திராவிட மொழிகளின் குடும்பம் என்பதும் ஆய்வுப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட பேருண்மை. திராவிட மொழிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட இராபர்ட் கால்டுவெல், ‘திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்’ (Comparative grammar of the Dravidian or South Indian family of languages) என்னும் தனது நூலில் குறிப்பிடும் வரலாற்றுப் பதிவு இது. 1856-இல் இந்நூல் வெளியிடப்பட்ட பின்னரே இச்சொல் பரவலாகத் திராவிட இனக் குடும்பத்தை ஆழமாகக் குறிப்பிடத் தொடங்குகிறது என்கிறார்கள் மொழி வல்லுநர்கள்.
தென்னிந்தியாவில் பேசப்படும் இந்தத் திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் தவிர்த்த ஏனைய மொழிகள் பெருமளவு வடமொழிச் சொல் கலப்பிற்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. ஆயினும், தமிழ் மட்டுமே திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்றும் இருந்து வருகிறது. தனித்து நின்று வளம் சேர்க்கும் இத்தாய்மொழி, செம்மொழியாக உயர்ந்திருப்பது இதன் பெரும் அடையாளம்.
‘திராவிடர்’ என்னும் சொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி ஒன்றைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும் சொல்லாடலாகும். இந்திய மண்ணில் வடக்கே வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுடன் அடிப்படையில் எந்தத் தொடர்பும் இல்லாத மொழிக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படுவதை மொழி வல்லுநர்கள் கண்டறிந்தார்கள். அடிப்படையில் தனி இனமாக உருவெடுத்த அந்த இனத்தை ‘திராவிடர்’ என அடையாளப்படுத்தினர். ஆதிக் குடிகளாக அவர்கள் அறியப்பட்டார்கள். ஆகவே, ‘திராவிடம்’ என்ற சொல் ஆதித் தமிழ் குடியின் அடையாளம்; இது கூட்டுக் குடும்பத்தின் அடையாளம். தமிழ் மொழி தன் குழந்தைகளை வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்டதன் பெரும் அடையாளம்-திராவிடம்.
தமிழ்நாட்டு மண்ணில் தனித்தமிழ் இயக்கங்கள் பல தோன்றினாலும், திராவிடக் குடும்பத்தின் பண்பாடும், கலாச்சாரமும், மொழி ஒற்றுமையும் இம்மண்ணில் உயர்ந்தே நிற்கிறது. ‘திராவிடம்’ என்ற சொல்லாடலையும், கால்டுவெல் என்னும் மொழிப் புலமைகொண்ட ஆளுமையையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஆரியமும், ஆரிய சித்தாந்தம் கொண்டவர்களும் திராவிடக் கருத்தியலைச் சிதைக்க மேற்கொண்ட போராட்டங்கள் நேற்று இன்று அல்ல; இது வரலாறு கண்ட நிகழ்வு. தமிழ் நாட்டின் ஆளுநர் அதன் நீட்சியாகவே இன்று நிற்கிறார். ஒன்றிய அரசுக்குக் கீழ் செயல்படும் நிர்வாக அதிகாரியான இவர், தன் எஜமான் இட்டக் கட்டளையைக் கருத்தாய்ச் செய்து வருகிறார்.
தமிழ்நாடு அரசு விழாக்களில் பிற மொழிப் பாடல்களைத் தவிர்க்கும் வகையிலும், சமயச் சார்பற்ற அரசின் நோக்கிற்கு ஏற்ப சமயச் சார்பினைத் தவிர்க்கும் வகையிலும் தமிழ் வாழ்த்துப் பாடல் ஒன்றினை அறிமுகப்படுத்த அண்ணா விரும்பினார். இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்த தமிழறிஞர் பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை எழுதிய ‘மனோன்மணியம்’ என்னும் நாடக நூலில் அமைந்த ‘நீராருங் கடலுடுத்த’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும், கரந்தை கவியரசுவின் ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே’ என்னும் பாடலும் பரிந்துரை செய்யப்பட்டபோது, ‘நீராரும் கடலுடுத்த’ என்னும் பாடல் தேர்வு செய்யப்பட்டு, அண்ணாவின் மரணத்திற்குப் பிறகு 1970, மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் இப்பாடல் பாடப்பட்டு, ‘இனிமேல் அரசு விழாக்களில் பாட வேண்டும்’ என அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டது. பின்பு 1970, ஜூன் 17 அன்று அது அரசாணையாக வெளியிடப்பட்டு, நவம்பர் 23 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்பாடலுக்கு அழகுற இசை அமைத்துப் பெருமை சேர்த்தவர் இசை மாமேதை எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஆட்சி அமைந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அரசு விழாக்களிலும், அரசு சார்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் விழாக்களிலும் பாடப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்த இப்பாடலை 2021 -ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநிலப் பாடலாக அறிவித்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு கட்டாயம் பாடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பித்தார்.
மாநிலப் பாடல் என்பது தேசிய கீதத்திற்குச் சமமாக, சிறப்பும் மதிப்பும் வாய்ந்தது. மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து சாதி, சமய வேறுபாடு இன்றி மக்களை ஒன்றுபடுத்துவதில் மாநிலப் பாடல்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆயினும், உலகெங்கும் வாழும் தமிழரின் அடையாளமாகவும், பெருமையாகவும் பேசப்படும் இப்பாடல் அவ்வப்போது ஆரிய சித்தாந்தத்தால் சீண்டப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
புனித தேவசகாயம் அவர்கள் 2022 -ஆம் ஆண்டு மே 15 -ஆம் நாள் புனிதராக உயர்த்தப்பட்ட திருச்சடங்கில் உரோமையில் உலகளாவிய கத்தோலிக்கத் திரு அவையின் முன்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது நமக்குப் பெருமை. ஆயினும், 2018 -ஆம் ஆண்டு ஜனவரி 24 -ஆம் நாள் சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததும் காட்சியானது; இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அவ்வாறே ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். தமிழ்நாட்டையும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆளுநரின் ஒவ்வொரு சர்ச்சைக்குப் பிறகும் அந்தக் கருப்பொருள் மிகப்பெரும் அளவில் பேசு பொருளாக இருப்பது கண்கூடாகிறது. இதுவும் அப்படித்தான். கடந்த சில நாள்களாகத் தமிழ்த்தாய் வாழ்த்து உலகமெங்கும் மீண்டும் மீண்டும் பாடப்படுவதும், பகிரப்படுவதும் இப்பாடலின் மேன்மையை இன்னும் உரக்கச் சொல்கிறது. ஆரியப் படையில் பல இரவிக்கள் வந்தாலும், மொழி-அடையாள விமர்சனங்கள் தந்தாலும் தமிழும் தமிழினமும் ஒருபோதும் தாளாது; என்றும் வீழாது!
இவ்வேளையில்,
‘எழுத்தும் நீயே, சொல்லும் நீயே!
பொருளும் நீயே, பொற்றமிழ் தாயே!
அகமும் நீயே, புறமும் நீயே!
முகமும் நீயே, முத்தமிழ் தாயே!
உனக்கு வணக்கம் தாயே,
என்னை உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!’
என்னும் கவிஞர் வைரமுத்துவின் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.
அன்புத் தோழமையில்,
அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்
முதன்மை ஆசிரியர்