news
தலையங்கம்
அமைதி மலரட்டும்; ஆனந்தம் நிறையட்டும்!

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதியைத் தருவதே மதங்களின் முதன்மையான நோக்கம்.

முரணும் மோதலும் இல்லாத சமுதாயத்தை  உருவாக்கிட மனிதகுல நலனுக்காகப் பிறந்ததுதான் மதமே தவிர, மனிதர்கள் முரண்படவும் மோதிக் கொள்ளவும் அது ஒருபோதும் காரணியாவதில்லை; ஆயினும், மனிதர்கள் ஏனோ மதத்தால் நம்பிக்கையால் வழிபாடுகளால் முரண்பட்டு மோதிக் கொள்கிறார்கள்!

உண்மை ஒன்றுதான், அதுதான் பல வடிவங்களில் பார்க்கப்படுகிறது; ஒளி ஒன்றுதான், வழிகள்தான் வெவ்வேறு என்பதை ஏனோ அவர்கள் அறியாமலிருக்கிறார்கள்!

அன்பு சார்ந்த பண்புகளை ஒவ்வொருவர் இதயத்திலும் விதைப்பதே மதங்களின் உன்னத நோக்கம். அன்பையே சிந்தித்து, அன்பையே மூச்சுக்காற்றாகச் சுவாசித்து, ஆண்டவனையும் அன்பின் வடிவாகவே தரிசித்து மனிதம் வளர்ப்பதுதான் மதம். ஆகவேதான், சுவாமி விவேகானந்தர், “உலகில் இப்போதிருக்கும் எல்லா மதங்களையும், இனி பிறக்கப் போகும் புதிய மதங்களையும் இரு கை நீட்டி வரவேற்கிறேன்என்றார்.

எவரையும் வெறுப்பதல்ல மதத்தின் நோக்கம்; அன்பையும் அமைதியையும்  அகிம்சையையும்  வளர்ப்பதே மதம். மதம் மனிதர்களை இணைப்பதற்குத்தானே தவிர, பிரிப்பதற்கில்லைஎன்கிறார் தேசத்தந்தை மகாத்மா காந்தி.

அவ்வகையில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்கள் இணக்கமாகப் பகிர்ந்துகொள்ளும் கச்சத்தீவில் அமைந்திருக்கும் புனித அந்தோணியார் திருத்தலம் இரு நாட்டு மக்களின், அப்பகுதி மீனவர்களின் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளவும் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அன்போடு உறவு கொள்ளவும் வழிவகுக்கிறது. இலங்கை யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தால் திருத்தலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் கச்சத்தீவு - புனித அந்தோணியார் திருத்தலம்  நூற்றாண்டு கடந்து நிற்கும் பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது.

இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அன்றைய மதுரை கத்தோலிக்க உயர் மறைமாவட்ட எல்லைக்கு உட்பட்ட 280 ஏக்கர் பரப்பளவு கொண்ட இத்தீவு, 1975-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தியா-இலங்கை இரு நாட்டுக் கூட்டு ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கைக்குச் சொந்தமாகும் வண்ணம் இந்திய அரசால் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை... “கச்சத்தீவு மீட்டெடுக்கப்பட வேண்டும், இந்திய-தமிழ்நாடு கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இந்த ஒப்பந்தம் திரும்பப் பெறவேண்டும்...” என்னும் போர்க்கொடி எழுந்து, போராட்டங்கள் தொடர்ந்து, இன்றும் இது தீர்வு காணப்படாத ஒரு தொடர் கதையாகிக் கொண்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது

ஆயினும், இரு நாட்டு மீனவர்கள் கடல் எல்லைகளை இணக்கமாகப் பகிர்ந்து கொண்டதாலும் உறவு பாராட்டிக் கொண்டதாலும்இரு நாட்டு மீனவர்கள் சந்தித்து மீன்வலைகளைப் பழுதுபார்க்கவும் உலர்த்திக் கொள்ளவும் சங்கமிக்கும் ஓர் இடமாக இத்தீவு திகழ்ந்ததால் இறை வேண்டுதலுக்கு ஓர் இல்லம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன் நீட்சியாக உயர்ந்து நிற்பதுதான் பதுவை புனித அந்தோணியாருக்கு நேர்ந்தளிக்கப்பட்ட இந்தத் திருத்தலச் சிற்றாலயம். அன்றைய இராமநாதபுர கத்தோலிக்க இறைச் சமூகத்தால் குறிப்பாக, சீனிகுப்பன் படையாட்சி என்பவரால் இவ்வாலயம் 1905 -ஆம் ஆண்டு கட்டப்பட்டு புனித அந்தோணியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்று இப்பகுதி இலங்கை வசம் இருப்பதால், யாழ்ப்பாண மறைமாவட்டத்தால் புதிய ஆலயம் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

1982-ஆம் ஆண்டு முதல் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு இந்திய-தமிழ்நாடு மீனவர்களுக்கு குறிப்பாக, இராமேஸ்வரம் தீவில் வாழும் மக்களுக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தொடர்ந்த இனப்படுகொலை காலங்களில் இவ்விழாக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டதுடன், இரு நாட்டு மீனவர்களும் வழிபாட்டிற்குச் செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஏறக்குறைய 27 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, 2010-ஆம் ஆண்டு முதல் இவ்விழாவானது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

உலகெங்கும் பல்வேறு இடங்களில் பல்வேறு சமய விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், கச்சத் தீவில் நிகழும் புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா தனித்துவம் பெற்றது. மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழா இந்திய-இலங்கை உறவுக்கு ஒரு தொப்புள்கொடியாக அமைகிறது. இலங்கையில் நிகழ்ந்த போருக்கு முன்னும் போருக்குப் பின்னும் இரு நாட்டு மக்களையும் இணைக்கும் பாலமாக இவ்விழா தொடர்வது வரவேற்கத்தக்கது.

தற்போது, ஆண்டுதோறும் நிகழும் இவ்விழாவில் இரு நாடுகளைச் சார்ந்த அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இறைமக்கள் எனப் பெருந்திரளான மக்கள் கூடுவதும்திருப்பலி, திருச்சிலுவைப் பாதை, திருச்செபமாலை என நிகழ்வுகளில் பங்கெடுப்பதும் குறிப்பாக, பாக் சலசந்தியின் இருபுறமும் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் தங்கள் உறவினர்களுடன் மீண்டும் இணைவதும் இறந்த உறவுகளை நினைவுகூர்வதும் அவர்களுக்காக இறைவேண்டல் மேற்கொள்வதும் உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து தங்கள் மனக் காயங்களை ஆற்றிக்கொள்ளவும் பெரும் பங்கு வகிக்கிறது இப்பெருவிழா.

இவ்வாண்டு ஏறக்குறைய 9,000 மக்கள் கூடிய  இக்கச்சத்தீவு புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா, வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து முதன் முறையாகச் சிவகங்கை மறைமாவட்ட ஆயரும், தமிழ்நாடு ஆயர் பேரவையின்நம் வாழ்வுஅச்சு ஊடகப் பணியகத்தின் தலைவருமான மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு, இப்பெருவிழாவிற்கான கொடியை ஏற்றிவைத்து, திருவிழா சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி இறையாசிரைப் பெற்றுத் தந்ததும் இவ்விழாவில் கலந்துகொண்டு இலங்கைக் கத்தோலிக்க மறைமாவட்டங்களின் நிர்வாகத்தினர், கடற்படை உயர் அதிகாரிகள், அரசுத் தலைவர்கள் எனப் பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்ததும் இரு நாட்டு உறவுகளுக்கான அமைதி முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது. இராமேஸ்வரம் தீவிலும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும் இந்திய-இலங்கை மீனவர் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிவகுக்கும் என்றே கருதப்படுகிறது.

குறிப்பாக, அண்மையில் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட 40  மீனவர்களின் விடுதலை தொடர்பாக யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களைச் சந்தித்து மேற்கொண்ட முயற்சிகளும், அதன் விளைவாக அந்த 40 மீனவர்களும் திருவிழா கொடியேற்ற நாளில் வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டதும், இதன் நீட்சியாக இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் இரு நாட்டு ஆயர்களைச் சந்தித்ததும், இப்பிரச்சினைகளுக்குச் சுமூகமான தீர்வு கிட்டும் என்றே நம்பிக்கை அளிக்கிறது.

இவ்விழா சிறப்புற நிகழ இரு நாட்டு அரசுத் தலைவர்களும் பேராதரவளிப்பதும் கடற்படையினர் ஒத்துழைப்பு தருவதும் பாராட்டத்தக்கதே! இவர்கள் நம் நன்றிக்குரியவர்களே! இவ்விழாவிற்கும் தற்போது மீனவர்களின் விடுதலைக்கும் பேருதவி புரிந்த யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் அவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்!

இவ்விழாவில் கலந்துகொள்ள இரு நாட்டு மக்களும் கொண்டிருந்த ஆர்வமும், விழாவில் கலந்துகொண்ட ஈடுபாடும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மற்ற திருத்தலங்களைப்போல போதிய இடவசதி, தங்குமிடம், அடிப்படைத் தேவைகள், உணவு, குடி நீர் இல்லாதிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் இங்குக் கூடுவது அவர்களின் மதம் கடந்த மனித நேயத்தையும், வழிபாடு கடந்த வாழ்வியலையும், உறவு கடந்த உள்ள ஒன்றிப்பையும் எண்பிக்கிறது.

இது ஏதோ கிறித்தவர்களின் ஒரு விழாவாகப் பார்க்கப்படுவதில்லை; மாறாக, இப்பகுதியில் கடல் தாயை நம்பி தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டமைத்துக்கொள்ளும் எல்லா மதத்து மீனவர்களும், இக்கடலையும் கடல் தந்த வளங்களையும் ஆதாரமாகக் கொண்ட பல வணிகர்களும் சாதி, மதம், இனம், மொழி கடந்து ஒன்றுகூடும் இப்பெருவிழாவானது சமத்துவத்தின் கூறாகவும், சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது என்பதே பேருண்மை!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
தாய்மொழி நம்... முகம்-முகவரி-உயிர்!

தாயின் கருவில் நாம் உருவாகும்போதே உயிர்நாடியில் இரண்டறக் கலந்தது நம் தாய்மொழி! நம் செவித்திறன் உணர்வில் முதன்முதலாக ஒலித்ததும் நம் தாய்மொழியே!

ஆகவேதான், தாயைப் புறக்கணிப்பதும் தாய்மொழியைப் புறக்கணிப்பதும் மனிதர்கள் செய்யும் பாவங்களிலேயே மன்னிக்க முடியாத பெரும் பாவம் என்பார்கள். இனிமையும் வளமையும் செழுமையும் கொண்ட செம்மொழியாம்தமிழ்நாம் பேசும் தாய்மொழியாக வாய்த்தது நமக்குக் கிடைத்த மாபெரும் வரமே!

ஓர் இனத்தின் தொன்மையான நாகரிகத்தையும் கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களையும் வாழையடி வாழையாக வளர்த்தெடுப்பதும் அடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்துவதும் அந்த இனத்தை அழியாமல் காத்து வருவதும் அதன் தாய்மொழி ஒன்றுதான். தாய்மொழியே அந்த இனத்தின் முகம், முகவரி, உயிர்நாடி! மொழி அழிந்தால் அந்த இனத்தின் முகம் அழியும்; மொழி தொலைந்தால் அந்த இனத்தின் தனித்துவமான அடையாளங்கள் மறைந்து போகும்.

ஆகவேதான், “மக்கள்தொகையில் வலிமை வாய்ந்த பெரும்பான்மையோரிடையே சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள், அந்தப் பெரும்பான்மையில் கலந்து, காலப்போக்கில் கரைந்து விடாது, தங்களது அடையாளத்தைக் காப்பதற்கு, அவர்களுக்கு இருக்கும் ஒரே கவசம் மொழிதான். அவர்கள் தங்கள் மொழியுடன், பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் தொடர்பு அற்றுப்போகாது வாழ வேண்டும். இதற்கான தேவைகளில் தலையாயது தமிழறிவு, அதன்வழி தமிழ்க்கலை, தமிழ் இலக்கிய வாழ்வோடு தொடர்புஎன்கிறார் அறிஞர் வா.செ. குழந்தைசாமி.

உலகம் ஏற்றுக்கொள்ளும் பேருண்மை இது! தாய்மொழியைப் பயன்படுத்துபவர்கள் உள்ளவரைதான் ஒரு மொழி வாழும், வளரும். அடுத்த தலைமுறைக்கு முறையாக வழங்கப்படாத மொழிகள் யாவும் வழக்கொழிந்து போகும். இன்றைய அரசியல் சூழலும், ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களின் திட்டங்களும்மெல்லத் தமிழினிச் சாகும்என்னும் பாரதியின் கூற்றை எண்பித்து விடுமோ என்றே  அச்சம் கொள்ளச் செய்கிறது.

மதத்தைக் கையில் எடுத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிவரும் ஒன்றிய பா... அரசு, இன்று மொழியைத் துணைக்கு அழைத்துக் கொண்டது. இந்தியப் பிரதமர் செல்லும் இடமெல்லாம்தமிழ் தொன்மையானது, ‘இனிமையானது, ‘இலக்கிய நயமானது, ‘இது ஒரு மூத்த மொழிஎன்றெல்லாம் புகழ் பாடி ஆட்சிக் கட்டிலில் அமர வழி வகுத்துக்கொண்டு, இன்று இம் மொழிக்கு ஊறு விளைவிக்கும் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறார். இவ்வேளையில்...

உன்னை

மொழிகளுக்கெல்லாம்

முதல் மொழி என்றார்...

அதனால் உன்னை

முதலாகப் போட்டு

வியாபாரம் தொடங்கி விட்டார்!’

எனும் கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

தமிழின் சிறப்பைப் பற்றிப் பேசும் பிரதமர், காசி தமிழ்ச்சங்க விழா எடுக் கும் பா... அரசு எனத் தமிழுக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோரணையில், இவர்கள் தமிழின் தொன்மையை அழிக்கும் திட்டங்களைத் திரைமறைவில் தீட்டுவது அதிர்ச்சியளிக்கிறது.

இருமொழிக் கொள்கையை உயிர் நாடியாகக் கொண்ட தமிழ் மண்ணில், தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நாடெங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

பழம்பெரும் நாகரிகத்தின் மூத்த மொழியான தமிழ்மொழி, நம் தாய் மொழியாகவும் இணைப்பு மொழி ஆங்கில மொழியாகவும் இருக்கும் இச்சூழலில், மூன்றாம் மொழியின் அவசியம் தான் என்ன? என்ற அடிப்படைக் கேள்வி நமக்கு எழுகிறது.

மும்மொழிக் கொள்கை என்பது தாய்மொழி அல்லது வட்டார மொழி, ஆங்கிலம், வேறு ஓர் அயல் மொழி, அதாவது மற்றோர் இந்திய மொழி இந்தக் கொள்கையின்  அடிப்படையில்தான்  கட்டமைக்கப்படுகிறது. வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் மாணவர்கள் பெருக்கிக்கொள்வதற்கு மாநிலங்களின் ஆட்சி மொழியையும், ஒன்றிய அரசின் இரண்டு ஆட்சி மொழிகளையும் பயில வேண்டும். அத்துடன் நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாரம்பரியத்தையும் பின்பற்றுவதற்கு மற்றொரு மொழியையும் படிக்க வேண்டும் என்ற நிலையில்தான் நாளை இது கட்டாயமாக்கப்படும்.

தமிழ் நமது தனித்த அடையாளம். மொழி வாரியாக அமைந்திருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான அடையாளங்கள் மேம்பட்டு இருக்கின்றன. அத்தகைய மாநில ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் இருக்கிற வேறு எந்த மொழியும் இங்கு அவசியம் இல்லை. தமிழ்நாட்டு மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கு ஆங்கிலம் போதும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் நாம் பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கை.

மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதன் நோக்கம் என்ன? தமிழ்மொழியால் நாம் நம் மாநிலத்திற்குள் அடையாளப்படுத்தப்படுகிறோம்; ஆங்கில மொழியால் நாம் உலக அளவில் அடையாளப்படுத்தப்படுகிறோம். வேறு ஏதேனும் ஓர் இந்திய மொழி எனக் குறிப்பிடும் இம்மும்மொழிக் கொள்கை, பிறகு இந்தியன் என அடையாளப்படுத்தப்படுவதற்கு இந்தி மொழி அவசியம் எனச் சட்டம் இயற்றாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இத்தகைய சூழலில் மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது மாநில உரிமையைப் பறிப்பதாகும். கல்வி என்பது மாநிலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு ஒத்திசைவுப் பட்டியலுக்குச் சென்றிருக்கிறதே தவிர, மத்திய அரசுப் பட்டியலில் கல்வி இல்லை. மத்திய அரசுப் பட்டியலில் கல்வி முழுமையாக இருப்பதைப்போல மாநில உரிமைகளின்மீது எதேச்சதிகாரம் கொண்டிருப்பது மொழிக்கொள்கையின் ஆணிவேரில் அமிலத்தை ஊற்றுவதற்குச் சமமாகும்.

இந்தியாவின் பொதுமொழி (Common Language) இந்தி என்கிறது அரசமைப்புச் சட்டம். மாநில மொழிகள் அனைத்தும் வட்டார மொழிகள் எனப்படுகின்றன. இந்தி உள்பட எந்த மொழியும் இன்று தேசிய மொழி (National Language) இல்லை என்பதே எதார்த்தம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்தி வட மாநிலங்களில் பொது மொழியாக இருக்கிறதே தவிர, அது தேசிய மொழியாக இன்றுவரை வரையறுக்கப்படவில்லை. Hindi may be a common language in the Northern part of India, but not the National Language.

ஆட்சிமொழி குறித்து நாடாளுமன்றக் குழு அறிக்கையின்மீது விவாதம் நடந்தபோது, நேரு குறுக்கிட்டு, “இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி திணிக்கப்படமாட்டாதுஎன்று 1959, ஆகஸ்டு 7 அன்று வழங்கிய இந்த உறுதிமொழி  இன்றுவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. தங்கள் தாய்மொழியோடு ஆங்கிலம் ஒரு கூடுதல் மொழியாக நீடிக்க வேண்டும், ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாகவோ அல்லது கூடுதல் மொழியாகவோ மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வது குறித்து முடிவு செய்யும் பொறுப்பை இந்தி பேசாத மக்களிடம் விட்டுவிட வேண்டும் என்பதுதான் நேரு வழங்கிய உறுதி மொழியின் உட்பொருள்.

அப்படி இருக்க, ஒன்றிய பா... அரசு தற்போது இந்தியை வலியத் திணிப்பதும் மற்ற மொழிகளின் மீது பாரபட்சம் காட்டுவதும் ஏன்? இந்தி மொழித் திணிப்பால் தமது தாய்மொழிகளை இழந்த வட மாநிலங்களின் நிலை நமக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதே நம் ஆதங்கம்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு உயர் கல்வி முதல் பொது சுகாதாரம் வரை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையில் படித்தவர்களில் 99 விழுக்காட்டினர் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் திறம்படப் பணியாற்றுகின்றனரே! பிறகு எதற்கு மும்மொழிக் கொள்கை?

ஆகவே, அரசியல் ஆதாயத்திற்காக மும்மொழிக் கொள்கையைச் சுமந்து வரும் ஒன்றிய அரசு அதைக் கைவிட வேண்டும். இருமொழிக் கொள்கையிலேயே சிறப்புற்று விளங்கும் நம் வாழ்வியலுக்கு மும்மொழிக் கொள்கை ஒவ்வாததும் தேவையற்றதும் என்றே கருதுகிறேன்! ‘விடுதலை வானில் பறந்திட எனக்குச் சொந்த சிறகுகள் இருக்க, இரவல் சிறகுகள் எனக்கு ஏன்?’ என்றே கேட்கத் தோன்றுகிறது.

இவ்வேளையில்...

தனித்தன்மை விடு

என் கூடவே இரு

என்கிறான்...

அவன் இறக்கைகளில்

நான் பறப்பது எப்படி?’

என்ற ஈழத்துக் கவிஞன் காசி ஆனந்தனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
மேற்கில் உதித்த சூரியன்!

திரு அவைக்குப் புனிதர்களை அள்ளித் தந்த புண்ணிய பூமி பிரான்ஸ். மரியன்னையின் காட்சிகளால், அருள் நிறைந்த திருத்தலங்களால் புனிதம் தளும்பும் இப்புண்ணிய பூமியிலிருந்து எண்ணற்ற புனிதர்கள் திரு அவையை அலங்கரித்திருக்கிறார்கள். புனித பெர்னார்டு, ஜோன் ஆப் ஆர்க், புனித லூயி, புனித வின்சென்ட் தே பவுல், புனித பிரான்சிஸ் சலேசியார், புனித ஜான் மரிய சாந்தாள், புனித லூயி தே மாண்ட்போர்ட், புனித கத்தரின் இலபோரே, புனித பெர்னதெத், புனித மார்கிரேட் மேரி அலகோக், புனித ஜான் மரிய வியான்னி, குழந்தை இயேசுவின் புனித தெரசாள்... என அதன் பட்டியல் நீள்கிறது.

அவ்வாறே, பிரான்ஸ் நாடு - தமிழ்நாடு திரு அவைக்கும்  எண்ணற்ற மறைப்பணியாளர்களைத் தந்திருக்கிறது. வணக்கத்திற்குரிய மில்கியோர் தே மரியோன் பிரசியாக், அருள்தந்தை லூயி சவீனியன் துப்புயி, அருள்தந்தை லூயி இரவேல், அருள்தந்தை அதிரியான் கௌசானல் எனத் தொடரும் இப்பட்டியலில் இறை ஊழியர் அருள்தந்தை லூயி மரி லெவே தமிழகம் போற்றும் தவிர்க்க முடியாத மறைப்பணியாளர்.

தந்தை லூயி லெவே  இந்தியாவில் தம் குருத்துவப் பயிற்சிக் கால முதல் 65 ஆண்டுகள் மறைப்பணி செய்து அதிலும் குறிப்பாக, மறவ நாட்டுப் பகுதியில் ஆண்டாவூரணி, சருகணி, இராமநாதபுரம் பங்குத்தளங்களில் 52 ஆண்டுகள் திறம்படப் பணியாற்றி, மக்களை இறை ஞானத்திலும் இறை நம்பிக்கையிலும் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிலும் வளர, உயர வழிகாட்டினார்.

பங்குப் பணி, சமூகப் பணி, கல்விப் பணி என விரியும் தந்தை லெவேயின் ஆன்மிகமும் அவரது பணித்தள வாழ்வியலும் நமக்கு மிகப்பெரிய அறநெறிப் பாடங்கள். தந்தையின் வாழ்வியல் கூறுகளை, அவர் வாழ்ந்த புண்ணிய பூமியிலிருந்தும் அவர் உருவாக்கிய பல பேராளுமைகளின் அனுபவங்களிலிருந்தும் அறிந்தவன் என்ற வகையில் பெரும் மகிழ்வடைகிறேன்.

பெற்றோர், ஞானப்பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கும் அடுத்தத் தலைமுறைக்கும் கொடுக்கும் மதிப்புமிக்க சொத்து என்பது, தங்கள் மூதாதையரிடமிருந்து தாங்கள் பெற்றநம்பிக்கைஎன்னும் செல்வத்தைக் குறைவின்றி அவர்களுக்கு வழங்குவதே!” என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். அத்தகைய எண்ணத்தில் சிவகங்கை மறைப்பணித்தளத்தில் தந்தையின் பணிவாழ்வைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் முந்தைய தலைமுறை வழங்கியதும் வழங்கி வருவதும் தனிச்சிறப்புக்குரியது.

தந்தையின் விண்ணகப் பிறப்பு (மார்ச் 21, 1973) அரை நூற்றாண்டு காலம் கடந்தாலும், பொன்விழா காணும்நம் வாழ்வுவார இதழ் தனது தொடக்கக் காலங்களிலேயே குறிப்பாக, 1978-79 -களில் தந்தையின் மறைப்பணி வாழ்வின் சிறப்புகளைக் கட்டுரைகளாக வடித்திருக்கிறது என்பது தனிச்சிறப்பு.

எவரிடத்தில் விருப்பும் வெறுப்பும் இல்லையோ, அவரே உண்மையான துறவி, இறைத் தொண்டன்; ஆசையும் தேவையுமற்ற நிலையில் ஒரு மனிதருக்குள் நிகழும் மாற்றமே துறவு வாழ்வு; உறவுப் பந்தங்களிலிருந்து விலகி நிற்பதும், உலகப் பற்றுகளை விலக்கி நிற்பதும் துறவு வாழ்வின் அடிப்படைக் கூறுகள்என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து மதுரை மறைப்பணித்தளம் நோக்கிய அவரது பார்வை துறவு வாழ்வின் மேன்மையை எடுத்துக்கூறுகிறது. இளம் வயதிலேயே தந்தையை இழந்திருந்தாலும், அவ்வேளையில் நோய்வாய்ப்பட்டிருந்த அன்புத் தாயைப் பிரிந்து, உறவுகளைத் துறந்து இந்தியா நோக்கி, தன் பயணத்தில் விழிகளைப் பதித்தது போற்றத்தக்கது. தாய்மண்ணிலிருந்து விடைபெறும் முன் அன்னை மரியா பெர்னதெத்துவுக்குக் காட்சி கொடுத்த லூர்து நகர் மசபியேல் குகைக்குச் சென்று முழந்தாள்படியிட்டு அன்னையையும் அவரது அன்பு மகனையும் பற்றிக்கொண்ட வாழ்வு...

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 

பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

என்னும் வள்ளுவரின் வாக்கை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது.

இயேசுவின் சீடத்துவமும் அவரது குருத்துவமும் தனித்துவம் வாய்ந்தவை. “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத்  தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும் (மத் 16:24) என்கிறார் இயேசு. இயேசுவின் சீடத்துவம் என்பது சுயநலம் துறப்பதாகும்; தன் நலனிலும் தன்னைச் சார்ந்தவர் நலனிலும் மட்டுமே நாட்டம்கொள்ளும் சாதாரண உலக வாழ்வைத் துறந்து, உலகம் முழுவதையும் தன் உறவாக ஏற்று, எல்லா உயிர்களின் நலனுக்காகவும் செயல்படும் பெருவாழ்வின் பேரருளில் கரைந்து போவதாகும். தந்தை லெவேயின் வாழ்வு இக்கூற்றுக்கு முற்றிலும் சான்று பகர்கிறது.

ஒரு மனிதனுக்கு முகவரி தருபவை மூன்று: ஒன்று, அவன் பிறந்த நாடு (Nationality); இரண்டு, அவன் பிறந்த ஊர் (Place of Birth); மூன்று, அவன் பிறந்த குடும்பம், அவன் பிறந்த வீடு (House of Birth / Ancestral Clan). அதாவது, அவனுடைய பெற்றோர், அவன் யாருடைய பிள்ளை என்ற அடையாளம். இவற்றில் ஒன்று தவறினாலும் முகவரி சிதைந்து விடும்.

ஆபிரகாமை அழைத்த இறைவன், “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல் (தொநூ 12:1) என்கிறார். இது முற்றிலுமாகத் தன் சொந்த முகவரியைத் துறந்து, புது முகவரியை நோக்கி மேற்கொள்ளும் பயணம். நம்பிக்கையோடு பயணம் மேற்கொண்ட ஆபிரகாமுக்கு, அங்கு புதிய நாடு, புதிய உறவு, புதிய வாழ்விடம் (கூடாரம்) வழங்கப்பட்டன. ஆண்டவர் அவருக்கு நிறைவான ஆசி வழங்கினார்; அவரைப் பெரிய இனமாக்கினார்; அவர் பெயரைச் சிறப்புறச் செய்தார். அவரோ பல தலைமுறையினருக்கும் ஆசியாக விளங்கினார். நம்பிக்கையின் மாபெரும் தந்தை ஆனார்.

தந்தை லெவேயின் வாழ்வும் ஆபிரகாமின் வாழ்வைப் போன்றதே! தன் சொந்த மண்ணையும் மக்களையும் உறவையும் உடைமையையும் விட்டு விட்டு இறைவன் விதைத்த இறையழைத்தலின் மாண்பினை உணர்ந்து, அனைத்தையும் துறந்து, இயேசு சபையினரின் மதுரை மறைப்பணித்தளம் நோக்கி அவர் மேற்கொண்ட பயணம் அவரை மறவ நாட்டில் நம்பிக்கையின் தந்தையாக உயர்த்தியது.

சேசுவே, அன்பின் அரசே!

உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்!’

என்று அவருடைய உதடுகள் உச்சரித்த இந்தச் செபம், இன்றும் இப்பகுதியில் செபிக்கப்படாத வீடுகள் இல்லை; உச்சரிக்காத உதடுகள் இல்லை.

எளிய மறைக்கல்வி, ஆழமான பக்தி, இடைவிடாத இறை வேண்டல், விரல்களை விட்டு விடை பெறாத செபமாலை, எளிமையான உடை, மறவ நாட்டில் மறைச்சாட்சியான அருளானந்தரின் செந்நீர் தியாகத்தை உணர்த்தும் சிவப்பு நிறக்கச்சை, முதுமையில் தன்னைத் தாங்கிப் பிடிக்கும் ஊன்றுகோல், அருளே உருவான திருமுகம், அன்பும் பரிசும் அமைதியும் மகிழ்வும் தரும் கிறிஸ்துமஸ் தாத்தாவை நினைவூட்டும் வெண்ணிறத் தாடியோடு கூடியதாத்தா சாமியின் உதவும் எண்ணம், ‘ஏழைப் பங்காளனாய்மக்களோடு மக்களாக வாழ்ந்த எளிமையான வாழ்வு என இவருடைய ஒட்டு மொத்த வாழ்வும் வாழ்வியலும் இறைநம்பிக்கையிலும், அது பிறப்பெடுக்கும் ஆன்மிகத்திலும், அது செயலாக்கம் பெறும் மக்கள் பணியிலும்  மையம் கொண்டிருந்தது.

மேற்கே உதித்த இந்தச் சூரியன், கிழக்கு நோக்கிப் பயணித்து, இம்மறவ நாட்டின் இருளகற்றி மக்கள் வாழ்வில் இறை ஒளி ஏற்றியதே, இம்மேற்கத்திய சூரியனின் புகழ் இன்றும் ஓங்கியிருக்கக் காரணம். மண்ணுலகில் மறைந்த இச்சூரியன் விண்ணுலகில் இன்றும் ஒளி வீசிக்கொண்டிருக்கும் என்பதே எமது நம்பிக்கை. இவ்வொளியை மீண்டும் நாம் தரிசிப்போம் என்பதே எமது எதிர்நோக்கு. தனது அர்த்தமுள்ள அர்ப்பண வாழ்வால், கிறிஸ்துவின் சீடத்துவத்திற்குப் பெருமை சேர்த்து, தன் எடுத்துக்காட்டான வாழ்வால் குருக்களுக்கு உன்னத மாதிரியாய் முன்னிற்கும் தந்தை லூயி லெவே, புனிதரின் திருக்கூட்டத்தில் அணிசெய்யப்பட வேண்டும் என்பதே எமது செபம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
பெண்மை வாழ்கவே!

உறவுச் சமூகங்களைக் கட்டியெழுப்புபவள் பெண்; இப்பூமிப்பந்தை அன்பிலும் அறிவிலும் உறவிலும் வாழ்விலும் வளப்படுத்துபவளும் அவளே. அப்பெண்ணின் பெருமையைப் போற்றும் இந்நாளில் மகளிர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்!

ஆண்டுக்கு ஒருமுறை அல்ல, அன்றாடம் நினைத்து நாம் பெருமைப்பட வேண்டிய உறவு பெண்ணினம். ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!’ என்னும் பாரதியின் வைர வரிகள் உயிர்பெற்றெழும் இச்சூழலில், பட்டங்கள் ஆள்வதில் பார்போற்ற உயர்ந்து வரும் பெண் சமுதாயம், சட்டங்கள் செய்வதிலும் மேன்மை கண்டிட  அவர்களின் திறமையை அறிந்து, பெருமையைப் பகிர்ந்து, தடங்கள் பதித்திட வாழ்த்திடும் நன்னாளே இப்பொன்னாள்!

பெண்ணிய விடுதலையை முன்வைத்து, அவள் கொண்ட அடிமை இருள் போக்க, ஆண்-பெண் சமத்துவச் சமுதாயத்தைப் படைக்க, ஓங்கி ஒலித்ததே இந்த வரிகள். பெண் விடுதலையே சமூக விடுதலை; பெண் விடுதலையே நாட்டு விடுதலை; பெண் விடுதலையே மானுட விடுதலை என முழங்கிய இந்த வரிகள், பெண்-சமூகத்தின் கண் எனவும், பெண் சக்தி கொண்டவள் எனவும் பறைசாற்றின. ஆகவேதான், கவிமணி  தேசிக விநாயகம் பிள்ளை, ‘மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!’ என்று பாடினார். பெண்மையின் பெருமை கண்ட பாரதி...

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!

பெண்மை வெல்க என்று கூத்திடு வோமடா!

துன்பம் தீர்வது பெண்மயி னாளடா!

சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோமடா!

 

பெண்ண றத்தினை ஆண் மக்கள் வீரந்தான்

பேணு மாய்ற் பிறகொரு தாழ்வில்லை!

கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே

காத லின்பத்தைக் காத்திடு வோமடா!

 

உயிரைக் காக்கும், உயரினைச் சேர்த்திடும்;

உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;

உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!

ஊதுக்கொம்புகள்; ஆடு களி கொண்டே!

 

போற்றி தாய்என்று தாளங்கள் கொட்டடா!

போற்றி தாய்என்று பொற்குழ  லூதடா!

அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்

ஆனை காட்டில் அனலை விழுங்குவோம்!

என்று பெண்மையின் பெருமையைபோற்றி தாய்எனப் பாடினான். உயிர்களை உருவாக்கி, நல்வழிப்படுத்தி உலகை மேன்மையுறச் செய்வதே பெண்ணுக்குரிய அறம் என்றும், வாழ்வில் இன்பத்தைப் பெருக்கி உலகை உய்விப்பதுதான் பெண்மையின் மேன்மை எனவும் கண்டுபெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடாஎன்று பரவசம் பொங்கப் பாடினான் அந்த முண்டாசுக் கவிஞன்.

பெண் - மகளாகத் தோன்றி, மனைவியாக வாழ்ந்து, தாயாகத் தொண்டு செய்து, தெய்வமாகக் காட்சி தருபவள்என்றார் திரு.வி.. பெண்ணின் ஏழு வகைப் பருவங்களான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் எனும் வளர் பருவ நிலைகளில் எந்த நிலையில் இருந்தாலும், தாயாகவும் தாய்மையாகவும் பார்க்கப்படுகிறாள். தான் பெற்ற குழந்தையில் தன் தாயைப் பார்க்கும் சமூகம் இதுபெண்மையின் தாய்மைக்கு உலகில் ஈடு இணையில்லை.

உலகத்தின் எல்லா மொழிகளிலும் மிக அழகான சொல்லாடல்அம்மாஎன்பதுதான். உலகைப் படைத்த இறைவன் எல்லா இடங்களிலும் எல்லா உயிர்களிலும் உடனிருக்கவே தாயைப் படைத்தான் என்பது சீனப் பழமொழி. ஆகவே, தாயும் தெய்வமும் தனித்தனி வடிவங்கள் அல்ல; தாயும் தெய்வமும் ஒன்றே! இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய தாயில் தரிசனம் தருகிறார்.

அன்பின் அழகுதான் உண்மையிலேயே அழகு; அது தாய்மையில் பொதிந்து கிடப்பதால்தான் பெண் அழகுள்ளவளானாள். தாய் அன்பின் வடிவம். ஒரு தாய் தன் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் மகிழ்ச்சியை எங்கேனும் நாம் கண்டால், அங்கே நாம் உண்மையான அன்பின் வடிவத்தைக் கண்டுகொள்கிறோம்.

தாயை வேறு எந்த மொழியிலும் விளக்கினாலும் கிடைக்காத உள்பொருள் தமிழில்அம்மாஎன அழைக்கும்போது ஆழமாகப் பொருள்படுகிறது. தாய் தன்னுடைய குழந்தைக்கு உயிர் கொடுக்கிறாள். கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்கு மெய் (உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்த பின்பு அதை உலகத்தில் உயிர் மெய்யாய் உலவ விடுகிறாள். இப்பேருண்மையை உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் குவிந்துஅம்மாஎன அழைக்கப்படுகிறாள் என்கிறது தமிழ் மரபு.

உலகில் தாய் அன்புக்கு ஈடு இணையில்லை; தாய் அன்பு கலப்படமற்ற அன்பு. நிறைவான அன்பையும் தன்னலமற்ற உணர்வையும், பிறர் நலம் கொண்ட உழைப்பையும் தாய் ஒருவரிடம் மட்டுமே நாம் காண முடியும்.

மேலை நாடுகளில் பெண் ஒருவரால் மனைவியாகப் பார்க்கப்படுகிறாள். ஆனால், கிழக்கில் அவள் எப்போதும் தாயாகவே போற்றப்படுகிறாள். இந்தியாவில் பெண் என்பவள் நம் கண்களுக்குத் தரிசனம் தரும் தெய்வம். அவள் தன் முழு வாழ்க்கையையும் தாய்மைக்கே அர்ப்பணிக்கிறாள்என்கிறார் சுவாமி விவேகானந்தர். அவ்வாறே, “என்னுடைய எல்லா நல்ல குணங்களுக்கும் நான் என் தாய்க்குக் கடன்பட்டவன்என்கிறார் ஆபிரகாம் லிங்கன்.

பூ - அரும்பாகி, மலராகி, கனியாய்க் கனிவது போல் பெண்ணுக்கும் வாழ்வில் பெண்மை, தாய்மை, இறைமை என மூன்று நிலைகள் இருக்கின்றன. பெண்மைக்குள் தாய்மை மலர்ந்தால் இறைமை தானாய் மலரும் என்கிறது சமூகம். சாலையோரம் கிடைக்கும் ஒரு கல்லுக்கு  மதிப்பொன்றும் இல்லை; ஆனால், அது ஒரு சிற்பியின் கையில் பட்டு அழகுச் சிலையாகும்போது அதற்குத் தனி மரியாதை இருக்கிறது. அச்சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்படும்போது தொழுகைக்குரிய தெய்வமாகிறது. பெண்ணும் ஒரு கல்லைப் போன்றவளே. மங்கையாக அவள் மணம் முடிக்கின்றபோது, இல்லற வாழ்க்கையில் அவள் சிற்பமாகச் செதுக்கப்படுகிறாள்; அங்குத் தாயாகும்போது குடும்பம் என்னும் கோவிலின் கருவறைக்குள் அவள் கடவுளாக்கப்படுகிறாள்.

உலகத்தின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள்கூட துறக்க முடியாத உறவு தாயின் உறவு என்பார்கள். ஒரு துறவியை அவரைப் பெற்ற தந்தையைச் சந்திக்க நேர்ந்தால் தந்தைதான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் என்றும் ஆனால், தாய் சந்திக்க நேர்ந்தால் துறவி அவருடைய திருவடிகளில் விழுந்து தொழ வேண்டும் என்பதும் சில மதங்களில் மரபு. தந்தைக்கு இல்லாத மதிப்பை இந்தச் சமூகம் தாய்க்குத் தந்திருக்கிறது.

தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறதுஎன்றார் நபிகள் நாயகம். ‘அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்என்கிறது சீராக்கின் ஞான நூல் (3:4). ஆகவேதான், ‘ஒரு மனிதனின் அழிக்க முடியாத பாவங்களில் ஒன்று தாயையும், தந்தையையும் புறக்கணிப்பதுஎன்கிறது திருக்குர்-ஆன்.

இன்று பெண்மை வஞ்சிக்கப்படுகிறது; உதாசீனப்படுத்தப்படுகிறது; புறந்தள்ளப்படுகிறது; பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறது. பெண்ணியம் மாண்பு பேணப்படப் போதிய சட்ட திட்டங்கள் இருந்தபோதிலும், குற்றங்களுக்கான தண்டனைகள் தீவிரப்படுத்தப்படாத வரையிலும் ஆயிரம் பாரதிகள் பிறந்தாலும் சமத்துவம் காண்பது சவாலே! அது பெரும் சவாலே!

பாலியல் ரீதியாகப் பெண்மை சீண்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்; அன்னையர்கள் அனாதையாவதைச் சமூகம் தடுக்க வேண்டும்.

எங்கள் வீட்டின் பெயர்

அன்னை இல்லம்

அன்னை இருப்பதோ அனாதை இல்லம்

என்னும் புதுக்கவிதை, இன்றைய உறவுச் சமூகத்தின் அவலத்தை எடுத்துக் கூறுகிறது.

தாயைப் போற்றுவோம்; அவள் கொண்ட தாய்மையைப் புகழ்வோம்; அவளின் பெண்மையின் பெருமையைப் பறைசாற்றுவோம். இவ்வேளையில்,

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே

அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே!’

என்னும் வாலியின் வைர வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. பெண்மை வாழ்கவே!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
வேட்டையாடும் வேலிகள்!

மலர்கள் வேறுபடலாம்; ஆனால், தேன் ஒன்றுதான்என்றார் கவிக்கோ அப்துல் இரகுமான். இங்கு மலர்கள் ஒன்றுதான்; ஆனால், அவற்றில் சில பொதித்து வைத்திருக்கும் தேனிலோ விஷம் கலந்திருப்பதே அதிர்ச்சியளிக்கிறது.

மாதா, பிதா, குரு, தெய்வம்என்கிறது முதுமொழி. தாயையும் தந்தையையும் கல்வி கற்றுத்தரும் ஆசானையும் தெய்வங்களாகப் போற்றி மதித்தது இச்சமூகம். அவர்கள் அறநெறியில் மேலோங்கி, வாழ்வியலில் சிறந்தோங்கியதால் அருள்பாவிக்கும் இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டனர். மனிதர்கள் தெய்வங்கள் ஆகலாம் என்பதற்கான சான்றுகள் இவர்கள்.

மனிதன் என்ற பெயர் எப்படி வந்தது? சமஸ்கிருதத்தில்மன்என்றால் மனம் என்று பொருள்; மனம் என்ற ஒன்றைப் பெற்றிருப்பதால் அவன்மனுஷன்மனிதனாகிறான்.

மற்ற உயிர்களுக்கு மனம் இல்லை. மனம் இருப்பதாலேயே மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டான், மற்ற உயிரினங்களை விட உயர்ந்து நின்றான். ஆக, மனம் மனிதனுக்கு வரமா? என்றால் ஆம், பலருக்கு வரம்; சிலருக்கு அது சாபம். மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டவர்களுக்கு அது வரமே! அது போகின்ற போக்கிலேயே அதை அலைய விடுபவர்களுக்கு அது சாபமே!

எல்லா உணர்வுகளிலும் உச்சம் தொட்டவன் மனிதன். ஆயினும், அதை நெறிப்படுத்தும் தன்மையையும் ஆற்றலையும் அவன் கொண்டதால்தான் அவன் படைப்பின் சிகரமாக இருக்கிறான். நல்லது-தீயது என ஆய்ந்து அறிகிறான்; உண்மை-பொய்மை என வேறுபடுத்திப் பார்க்கிறான்; சரி-தவறு எனத் தெளிவுபடுத்திக் கொள்கிறான். இந்த வேற்றுமை அறியாதவர்களை, இந்த வேறுபாட்டை உணராதவர்களை எந்த வரையறையில் வைப்பது? இவர்கள் மனம் கொண்ட மனிதர்களா? சிந்தனைத் தெளிவு கொண்ட படைப்பின் சிகரங்களா? புனிதத்தின் சாயல் கொண்ட மனிதர்களா? என்னவென்று சொல்வது?

மதிப்பீடு (Values), உரிமை (Rights), ஒழுங்குமுறைகள் (Rules and Regulations), கட்டுப்பாடு (Discipline) என்பவை யாவும் மானுட சமூகத்தின், அறநெறிக் கட்டமைப்பின், அதன் நாகரிகத்தின் அளவுகோல்கள். இவற்றுள் ஒன்று பிறழ்ந்தாலும் உன்னதச் சமூகம் படைப்பது அரிது.

உடல், மனம், உணர்வு என்பவை சங்கமித்து அறநெறி வரையறைக்குள் தெளிந்த நீர்ப்பரப்பாகப் படைப்பின் மேன்மைகளைச் சுமந்து வந்த மானிடர் என்னும் நதி, கட்டவிழ்த்துவிடப்பட்ட புதிய கலாச்சாரம் கொண்டு வந்து குவித்த காமச் சேறும், பாவச் சகதியும் மனிதனின் மனநிலையை அடியோடு மாற்றிவிட்டன.

இங்கு ஆசை என்பது வரையறை கடந்து, அதை அடையும் வேட்கை என்பது வெறியாகிவிட்டது. இங்கே காந்தியடிகளின் வார்த்தைகளே நம் நினைவுக்கு வருகின்றன: “கட்டுப்பாடு என்பதே நாகரிகமற்றது என்று நினைத்தால், எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வதே மனிதகுலச் சட்டமாகி விடும். இயற்கையிலேயே மனிதன், மிருகத்தை விட உணர்ச்சிவயப்பட்டவன். கட்டுப்பாடு  இல்லையெனில், மனிதரின் அடங்காத காமம் முடிவில் மனித இனத்தையே அழித்துவிடும். தன்னைக் கட்டுப்படுத்துவதிலும் பிற நலனுக்காகத் தியாகம் செய்வதிலும் மிருகத்திடம் இல்லாத ஆற்றல் மனிதரிடம் இருப்பதால்தான், உயர் நிலையில் மனித இனம் இருக்கிறதுஎன்றால் கண்காணிக்க வேண்டியவர்களே கபளீகரம் செய்யும்போது... “வேலியே பயிரை மேய்கிறதுஎன்பார்கள். ஆனால், அண்மைக் காலங்களில் வேலிகளே வேட்டையாடுகின்றன. அன்பும் அறனும் கொண்ட கல்வியைக் கற்றுத் தரும் ஆசான்கள் பள்ளிகளில் குழந்தைகளைப் பாலியல்  துன்புறுத்துதலுக்கு உள்ளாக்குவதை வேறு எப்படிச் சொல்ல முடியும்?

அறிவுக் கண் கொண்டிருக்கும் ஆசான்கள், காமவெறி கொண்ட கயவர்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்று தோன்றத் தொடங்கிவிட்டார்கள். ‘நுகர்வு வெறிகொண்டவர்க்கு நாணமுமில்லை; மானமும் இல்லைஎன்பார்கள். இவர்களும் அப்படித்தான் போல!

வாழும்போதே முழுமையாக வாழ்ந்திட வேண்டும்; எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பதைவிட, எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் என்பார்கள். ஒவ்வொரு கணப்பொழுதும் நாம் சிறப்புடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ‘சிறப்புஎன்பது பொருள் அல்ல; பதவியல்ல; பணமும் அல்ல; மாறாக, அது ஒழுக்கநெறி பிறழாத வாழ்வியல்!

ஒவ்வொரு மனிதருக்கும் தனிமனிதக் கட்டுப்பாடு அவசியம்; அதையும்  கடந்த சமூகக் கட்டுப்பாடு என்பது இன்னும் மேலோங்கியிருக்க வேண்டும். “சமூகக் கட்டுப்பாடுகளில்தான் சுகமும், அமைதியும் பிறக்கின்றனஎன்கிறார் வால்டேர். இன்று காம வெறியர்களால் கட்டற்ற சமுதாயம் நம் கண்முன்னே கட்டமைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கிருஷ்ணகிரியில் எட்டாம் வகுப்பு மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான செய்தி ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்குவதற்குள், மணப்பாறையில் தனியார் பள்ளி மாணவியிடம் அப்பள்ளியின் அறங்காவலர் வகுப்பறையிலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகள் நம்மைப் பெரிதும் பதைபதைக்க வைக்கின்றன.

இத்தகைய பள்ளி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சூழலில், இப்புகார்களில் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி இரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மாநிலம் முழுவதும் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்கள் பட்டியலையும் அவர்கள் மீதான நடவடிக்கை விவரங்களையும் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டுமெனத் துறை இயக்குநருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதும், அதன் தொடர்ச்சியாகமருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும்எனத் தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருப்பதும் சற்றே ஆறுதல் தந்தாலும், கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே இச்சமூகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

இச்சம்பவங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான அரசாணை - 121, 2012-ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டிருப்பதும், ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 12 (2) கீழ் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புகள் இருந்தபோதும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கும் வகையில்போக்சோசட்டத்தில் அண்மையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோதும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாதது கவலையளிக்கிறது.

ஆயினும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவ-மாணவிகளிடம் தவறான செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன்படி தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக் கல்வித்துறையில் 175 என மொத்தம் 255 ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது; இவர்கள்மீது மார்ச் மாதமே நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே!

இத்தகைய சூழலில் ஒன்று, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்குப் பாலியல் கல்வி, பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அரசின் சட்ட நடவடிக்கைகள் பற்றிய தெளிவு முறையாக வழங்கப்பட வேண்டும்.

இரண்டு, வீட்டிலும் பள்ளியிலும் பொதுவெளியிலும் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதிப்படுத்தும் வகையில், அரசும் சமூகமும் இன்னும் தீவிரக் கவனம் கொண்டிருக்க வேண்டும். போதிய பாதுகாப்புச் சட்டங்களும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகளும் உறுதி செய்யப்பட்ட போதிலும், சமூகத்தில் எதிர்வரும் தலைமுறையினரிடமும் மனித மாண்பு, பாலியல் சமத்துவம், அறநெறி மதிப்பீடுகள் பற்றி  முறையாகக்  கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இத்தகைய மதிப்பீட்டுக் கல்வி நம் குடும்பங்களிலிருந்து தொடங்கப்பட வேண்டுமென வலியுறுத்த விரும்புகிறோம்!

மூன்று, தாயாக, தந்தையாக, நல்வழி காட்டும் ஆசானாகப் பயணிக்க வேண்டிய மேன்மக்கள் தங்கள் சமூகக் கடமைகளை, பொறுப்பு மிக்க செயல்பாடுகளை அறநெறி பிறழாது பின்பற்ற வேண்டும். “வேலிகள் பயிர்களைக் காப்பதற்காகவே அன்றி, அவற்றை வேட்டையாடுவதற்காக அல்லஎன்பதை உணர்ந்தாக வேண்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
அடிப்படைக் கல்வி: அதிர்ச்சி தரும் அறிக்கை!

இந்திய மண்ணில் சுதந்திரம் கண்விழித்து 78 ஆண்டுகள் கடந்த பின்னும், எழுத்தறிவின்மை என்பது முற்றிலும் ஒழிக்க முடியாத பெரும் சவாலாகவே நீடிக்கிறது. அறியாமை இருள் சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் அவலம் இன்றும் தொடர் கதையாகிக் கொண்டே இருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 86-வது திருத்தம், கல்வியை அடிப்படை உரிமைகளில் ஒன்றாகச் சேர்த்திருந்தாலும், அனைவருக்கும் தரமான கல்வி என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. கல்வி அமைப்பின் இரட்டைத் தன்மையே இதற்குக் காரணsம் என்கிறது ஆச்சாரியார் இராமமூர்த்தி கமிட்டியின் அறிக்கை. அதாவது, பணம் படைத்தவருக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியும், அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு அறிவும் திறனும் வளர்க்க ஆதாரமற்றக் கல்வியும் வழங்கப்படுவதுதான்சமூக நீதிஎன்று இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஆயினும், விடுதலை அடைந்ததிலிருந்து இன்றுவரை, இந்தியாவில் கல்வி வளர்ச்சியே இல்லை என்றும் எவராலும் கூறிவிட முடியாது. கல்விநிலையங்கள் எண்ணிக்கைகளில் அதிகரித்திருப்பதும், அங்கே பாடத்திட்டங்களில் அதன் உள்பிரிவுகளில் பல்வேறு நுண்துறைகள் வளர்ச்சி கண்டிருப்பதும் வெள்ளிடைமலை. ஆயினும், கற்றறிந்த அறிவுச் சமூகத்தை முற்றிலும் நம்மால் காண இயலவில்லையே? என்பதுதான் இங்குக் கவலையளிக்கிறது.

ஆரம்பக்கல்வியில் அடியெடுத்துவைக்கும் 100 குழந்தைகளில் 10 பேர் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிப்பதில்லை; எட்டாம் வகுப்பிற்கு மேல் 30 குழந்தைகள் நின்று விடுகின்றனர்; உயர்கல்வி நிலையங்களின் உள்ளே வெறும் 20 பேர் மட்டுமே நுழைகின்றனர்! அந்த 20 பேரிலும் பெரும்பான்மையினர், பணம் படைத்தோரின் வாரிசுகள். இத்தகைய சூழலில், ‘எல்லாருக்கும் கல்விஎன்ற யுனெஸ்கோ அமைப்பின் கனவு எப்போது இங்கு நனவாகும்? என்பதே நமது கேள்வி.

ஆரம்பக் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒன்றிய-மாநில அரசுகள் உயர்கல்வியைத் தனியாரிடம் தாரை வார்த்து விட்டன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புது டெல்லி ஆகிய மாநிலங்கள் தவிர்த்து பல்வேறு மாநிலங்களில் அரசுப் பொறுப்பில் நடக்கும் தொடக்கப் பள்ளிகள் பலவற்றில் அடிப்படை வசதிகள்கூட இல்லை என்பது வருத்தமளிக்கும் செய்தி. இந்தியா முழுவதும் 75 ஆயிரம் பள்ளிகளில் வகுப்பறைகளே கிடையாது என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி.

காளான் குடைகள் போல் அங்குமிங்கும் பெருகிக் கிடக்கும் மழலையர் பள்ளிகளும், ஆங்கில வழிப் (மெட்ரிக்குலேஷன்) பள்ளிகளும் நிர்ணயித்திருக்கும் கல்விக் கட்டணத் தொகை சாமானியரை விழிபிதுங்க வைக்கிறது. ‘இந்தியாவில் பல்கலைக்கழகங்களில் படிப்பதைவிட, தொடக்கப் பள்ளிகளில் படிப்பதற்கு அதிகம் செலவாகிறதுஎன்கிறது புள்ளிவிவரம். சற்றே விழித்துக் கொண்ட மாநில அரசுகள் சிறிது உறக்கம் கலைந்து, பள்ளிக் கட்டணத்துக்கு உச்சவரம்பு விதித்திருப்பது பாராட்டத்தக்கது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இன்று அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டில் உயர்ந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. ஆயினும், அண்மையில் வெளிவந்திருக்கும் கல்வியின் வருடாந்திர நிலை அறிக்கை - 2024 (ASER - Annual Status of Education Report - 2024) பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 65 மாவட்டங்களில், 17,997 கிராமங்களில், 15,728 பள்ளிகளில், 3,52,028 குடும்பங்களில், 6,49,491 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த வருடாந்திரக் கல்விநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இது குழந்தைகளின் பள்ளிப் படிப்பு மற்றும் கற்றல் நிலை குறித்த நாடு தழுவிய தரவுகளாகும். நாட்டின் கிட்டத்தட்ட அனைத்துக் கிராமப்புற மாவட்டங்களுக்கும் சென்று குழந்தைகளின் பள்ளிப் படிப்பு நிலை, அடிப்படை வாசிப்பு மற்றும் எண்கணித நிலைகள் குறித்த அறிக்கையை இது வெளிப்படுத்துகிறதுஇவ்வறிக்கையில், 3 முதல் 16 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் பள்ளிப் படிப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது; 5 முதல் 16 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளின் எளிய உரையைப் படிக்கும் திறனும் அடிப்படை எண்கணிதத்தைச் செய்யும் திறனும் சோதிக்கப்பட்டிருக்கிறது. 14 முதல் 16 வயதுடைய மூத்த குழந்தைகளின் எண்ணிமத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) அணுகல் மற்றும் தனித் திறன்களின் மதிப்பீடுகளும் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.

இதில், மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் 76 விழுக்காடு மாணவர்கள் மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் 55 விழுக்காடு மாணவர்களால் இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்கள் தங்கள் தாய்மொழியில் இருந்தபோதும், அதைப் படிக்க முடியவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வகுப்புகளில் உள்ள 66 விழுக்காடு மாணவர்களால் சாதாரண இரண்டு இலக்கக் கூட்டல், கழித்தல், வகுத்தல் கணக்குகளைப் புரிந்துகொள்ளவும் விடை காணவும் முடியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

2022-ஆம் ஆண்டு அறிக்கை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டிலுமே வாசிப்பதில் உள்ள பெரிய கற்றல் இழப்புகளைச் சுட்டிக்காட்டியது. ஆயினும், 2024-ஆம் ஆண்டு அறிக்கை மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே காணப்படும் கற்றல் இழப்பு கல்வியின் தரத்தைப் பெரிய அளவில் பின்னடையச் செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. எண்கணிதத்தைப் பொறுத்த வரையில் அகில இந்திய அளவில் இழப்பு இருந்தபோதிலும், வாசிப்பில் ஏற்பட்ட இழப்புடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகவே இருக்கிறது.

உலகையே உலுக்கியகொரோனாபெருந்தொற்றுக் காலகட்டத்திற்கு முன்பிருந்த நிலையை விட, மாணவர்களின் கல்வித்தரம் தற்போது சற்றே உயர்ந்திருந்தாலும், அது சொற்ப அளவிலேயே உள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தமட்டில் 30 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே எளிமையான கணிதங்களுக்கு விடை காண முடிகிறது; மீதம், 70 விழுக்காடு மாணவர்கள் கணித விடைகளைக் கண்டறிய திணறுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இத்தரவுகளில் வட மாநிலங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.

குழந்தைகளிடம் குறைந்து வரும் எண்கணித அறிவுத்திறனும் கற்றல் இழப்பும் வாசிப்புக் குறைவும் கடந்த 10 ஆண்டுகளில் இருந்த நிலையை விட மிக அதிகமாகத் தற்போது இருக்கிறது. மேலும், வாசிப்புப் பின்னடைவு எல்லாப் பள்ளிகளிலும் பின்தங்கி இருப்பதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆயினும், எண்கணிதத்தில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் அதிக முன்னேற்றம் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட் டில் தொடக்கக் கல்வி முதலே குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அடிப்படைக் கல்வியின் தரம் நாடு முழுவதும் சரி செய்யப்பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. எட்டாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறை மீண்டும் விவாதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. நாட்டின் இதர மாநிலங்களின் புள்ளிவிவரங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு சற்று முன்னேற்றம் கண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பைக் கடந்து உயர்நிலைக் கல்விக்குச் செல்லும் மாணவர்களைச் சமாளிக்க முடியவில்லை என்று புலம்பும் ஆசிரியர்களும் நம் கண்முன் வருகின்றனர்.

1990-களில் தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 62 விழுக்காடு; இன்றைக்கு அது, 80 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. அதேநேரம் பள்ளி செல்லும் குழந்தைகளின் வாசிப்புத் திறன் சரிந்துகொண்டே வருவதைத் தேசிய அளவிலான ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நமது குழந்தைகள் தாய்மொழியில் வாசிக்கவே திணறுகிறார்கள். மேலும், பள்ளிக் குழந்தைகள் புத்தகத்தைக் கையில் எடுத்து சுயமாக வாசிக்க உருவானதுதான்வாசிப்பு இயக்கம்.’ அத்தகைய செயல்பாடுகள் இன்று ஊக்குவிக்கப்பட வேண்டும்.

தன்னை அறியவும் தன் ஆற்றலை வெளிப்படுத்தவும் ஒழுக்கம் செறிந்த நெறிகளைப் பேணிப் பராமரிக்கவும் உதவுவதற்குப் பெயர்தான்கல்வி.’ கல்வியின் பயன் அறிவு; அறிவின் பயன்பண்பாடுஎன்ற புரிதல் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் வர வேண்டும். கல்வியின் நோக்கம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது அன்று; மாறாக, நாம் வாழும் வாழ்க்கையைப் பலப்படுத்துவது என்பதை உணர்ந்து, குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை வளமான கல்வியாக மாற்ற முயலுவோம்.

நாளையத் தலைவர்கள் தோன்றும் நாற்றங்கால் தொடக்கக்கல்விக் கூடங்கள். நாட்டின் எதிர்காலச் சிற்பிகளுக்குச் சிறப்பான கல்வி தருவோம்! நானிலம் போற்றிடும் நன்மக்களாய் வளர்த்தெடுப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்