news
தலையங்கம்
எல்லை தாண்டிய பயங்கரவாதமும் கருத்துப் பேதமும்!

பகல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர், எல்லை தாண்டிய பயங்கரவாதம், காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பும் அத்துமீறலும்... என்ற பதங்கள் கடந்த இரு வாரங்களாக உலகளவில் ஊடகத் தலைப்புச் செய்திகளாயின.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான பகல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22-ஆம் நாள், 26 பேரை உயிர்ப்பலி கொண்ட பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூடு, அண்மைக்காலங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் மிகவும் கொடூரமானது என்றே கணிக்கப்படுகிறது. இதுவரை நடந்திராத வகையில் பெண்கள், குழந்தைகளின் முன்னிலையில் பெயர் மற்றும் மதத்தைக் கேட்டு அப்பாவிகளைப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதும், கண்முன்னே தம் கணவரை இழந்த மனைவியரின் கண்ணீர் கதறலும் நாட்டையே உலுக்கியிருந்தன.

இக்கொடுஞ்செயலின் வேதனையின் வெளிப்பாடாகத்தான்பயங்கரவாதத்தை ஒருபோதும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது; கோழைத்தனமான ஒரு தாக்குதலை நடத்திவிட்டு, தப்பி ஓடிய பயங்கரவாதிகளுக்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுக்கும்; இத்தாக்குதலில் ஈடுபட்ட ஒவ்வொரு பயங்கரவாதியும் வேட்டையாடப்படுவர்; பயங்கரவாதத்தைத் துடைத்தெறியும்வரை இந்த அரசு ஓயாதுஎன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்திருந்தார்.

இப்பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதற்கும் இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உலக நாடுகள் பேராதரவு அளித்ததும், தேசியப் புலனாய்வு முகமையின் (national Investigation Agency - NIA) பல்வேறு குழுக்கள் களமிறக்கப்பட்டு ஆதாரங்களைத் திரட்டிய விதமும் பாராட்டத்தக்கவை. இப்பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பு, எதிரிகளின் சுவடுகளைத் துடைத்தெறியும் வீரச்செயலாக எழுந்ததுதான்ஆப்ரேஷன் சிந்தூர்.’

வரலாறு இங்கு மீள்பார்வை செய்து பார்க்கப்பட வேண்டும்! இந்தியா-பாகிஸ்தான் உறவு தொப்புள்கொடி உறவாக இருந்தாலும், பாகிஸ்தானில் வேரூன்றி வரும் பயங்கரவாதம், எல்லை தாண்டி வளரும் நச்சுக்கொடியாகவே படர்கின்றது; அது இன்றும் தொடர்கின்றது. பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ஆதரித்து ஊக்குவிக்கிறது என்பதற்குப் பல சாட்சியங்கள் இருந்தாலும், அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப்பும், பிலாவல் புட்டோவும் வெளிப்படையாகவேஎங்களது அரசு பயங்கரவாதிகளை ஆதரிக்கிறதுஎன்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவேதான், “பாகிஸ்தான் மூர்க்கத்தனமான நாடு என்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்பதும் வெளிப்பட்டுவிட்டதுஎன்கிறார் நம் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்.

காஷ்மீரில் அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையில், பள்ளிகள், கல்லூரிகள் துடிப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சூழலில், உள்கட்டமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், சனநாயகம் திரும்பிக் கொண்டிருந்த தருணத்தில், அங்குச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்நேரத்தில், மக்களின் வருவாய் பெருகிக் கொண்டிருந்த சூழலில் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி உறுதிசெய்யப்படும்; தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் சதிகாரர்களுக்கும் மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படும்எனச் சூளுரைத்த நாட்டின் பிரதமர் மோடி, ‘ஒற்றுமையும் 140 கோடி மக்களின் ஒருமைப்பாடுமே மிகப்பெரிய பலம்எனத் தெரிவித்திருந்தார்.

நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட இந்த எதிர்வினையில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாததும், பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் எவர் மீதும் தாக்குதல் நடத்தாததும், இராணுவத் தளங்கள்மீது தாக்குதல் நடத்தாமல் பயங்கரவாதிகளின் தளங்களை மட்டுமே தகர்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரோஷி ஆகிய இரு பெண் அதிகாரிகள் இத்தாக்குதலைத் தலைமையேற்று நடத்தியிருப்பது நாம் இன்னும் பெருமைப்படக்கூடியதே!

ஆப்ரேஷன் சிந்தூர்நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பங்களிப்பு திறன்மிக்கதாகக் கணிக்கப்படுகிறது. பாகிஸ்தான் எல்லையைக் கடக்காமலேயே அந்நாட்டின் ஒவ்வொரு மூலையையும் தாக்கும் வல்லமையுடன் இந்தியப் போர் விமானங்கள் செயல்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. இதன்மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான நமது நிலைப்பாட்டையும், நாம் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்கள் பெருமளவில் வளர்ந்திருப்பதையும் உலகிற்கு நாம் உணர்த்தியிருக்கிறோம்.

மே 7-ஆம் தேதி தொடங்கியஆப்ரேஷன் சிந்தூர்பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையின்படி கடந்த 10-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. ஆனால், இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும், வர்த்தகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி இப்போரைத் தான் நிறுத்தியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பது மற்றொரு பேசுபொருளாகியிருக்கிறது.

தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது; அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்நாடு வாக்குறுதி அளித்தது. அதன் பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலனை செய்தது. ஆயினும், இந்தச் சண்டை நிறுத்தம் தற்காலிகமானது. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொறுத்தே அதன் எதிர்காலம் இருக்கும்என்கிறார் நம் பிரதமர்.

அவ்வாறே, ‘ஆப்ரேஷன் சிந்தூர்நடவடிக்கை தொடங்கப்பட்டது முதல் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதுவரை இந்தியா-அமெரிக்கா இடையிலான எந்த ஒரு விவாதத்திலும் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. மேலும்இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்த உடன்பாட்டில் அமெரிக்காவிற்கோ, அந்நாட்டு அதிபருக்கோ எந்தப் பங்குமில்லைஎன்கிறார் நம் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.

இவ்வாறாக, உலக நாடுகளின் பார்வை நம்மீது இருக்கும் இச்சூழலில், பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடுவது மட்டுமின்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை முழுமையாக மீண்டும் நம் வசமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க 1994-இல்  நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை அரசு மீண்டும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதும் நமது வேண்டுகோள்.

மேலும், இந்தியாவின்மீது பாகிஸ்தான் கொண்டிருக்கும் தொடர் வன்மத்தை அது மாற்றிக்கொள்ள வேண்டும். காஷ்மீர் ஆக்கிரமிப்புகளிலிருந்து அந்நாடு வெளியேற வேண்டும். காஷ்மீரில் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதையும் எல்லைகளில் பதற்றத்தை ஏற்படுத்துவதையும் இனி பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அவ்வாறே, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள பாகிஸ்தான், பயங்கரவாதத்தை முற்றிலும் அடியோடு விட்டுவிட வேண்டும் என்று உலக நாடுகள் விரும்பும் வேளையில், ‘ஆப்ரேஷன் சிந்தூர்நடவடிக்கையின் மூலம் இலஷ்கர்--தொய்பா, ஜெய்ஷ்--முகமது போன்ற  பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் தகர்க்கப்பட்ட சூழலில், மீண்டும் அவற்றைக் கட்டமைக்க பாகிஸ்தான் முயற்சித்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

இந்தப் பயங்கரவாதத் தாக்குதலானது தேசப் பிரிவினையின் தீர்க்கப்படாத கேள்விகளின் விளைவாக இருக்கலாம்என்று காங்கிரஸ்- முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் சந்தேகிக்கும் வேளையில், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், இந்தியாவில் மதக்கலவரத்தை ஏற்படுத்தவுமே பாகிஸ்தான் திட்டமிட்டிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், “இந்தியாவின் பாதுகாப்புக் குறைபாடுகள்தான் காஷ்மீரில் நிகழும் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணம்என்னும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் தவிர்க்க இயலாது!

இந்நிலையில், பயங்கரவாதச் செயல்பாடுகளில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்துப் பிற நாடுகளுக்கு விளக்கம் அளிக்கவும், தீவிரவாதிகளுக்குத் தஞ்சம் அளிப்பது, நிதி உதவி வழங்குவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு உதவி செய்வது... எனத் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே  தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தான் செயல்பட்டு வருவது குறித்து உலக நாடுகளிடம் ஆதாரங்களுடன் விளக்கவும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அனுப்ப ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் இடையே அமெரிக்காவின் தலையீட்டை இந்தியப் பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளாரா? பாகிஸ்தானுடன் நடு நிலையான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதா? வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காகச் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இந்தியா அடிபணிந்திருக்கிறதா? போன்ற கேள்விகள் மக்கள் மனத்தில் எழுகின்றன.

ஆகவே, இந்தியா-பாகிஸ்தான் மோதலால் உலக அரங்கில்எல்லை தாண்டிய பயங்கரவாதம்விவாதப் பொருளான சூழலில், தாக்குதல் நிறுத்தம் மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருவது கருத்துப் பேதமாகவே பார்க்கப்படுகிறது!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
எப்போது தொடங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு?

2025, ஏப்ரல் 30-ஆம் நாள் இந்திய அரசியல் வரலாற்றில் சிறப்பானதொரு நாள். ‘நடைபெறவுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும்என்ற முக்கிய அறிவிப்பை ஒன்றிய பா... அரசு வெளியிட்டிருக்கிறது.

காங்கிரஸ், தி.மு.. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த வேளையில், இப்போது அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றமும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கோரி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த இந்திய  மரபு, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் நின்றுபோனது. 2021-ஆம் ஆண்டுக்கான இப்பணிகள், 2020 ஏப்ரல் மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் இந்தப் பணி தள்ளி வைக்கப்பட்டு, இன்றுவரை அது தொடங்கப்படாமலே கடந்து வருகிறது.

இந்திய நாட்டின் சாபக்கேடு சாதிய அமைப்பு. ஒரே இயல்புள்ள தனித்த ஒரு கூட்டத்தின் உருவாக்கமே இந்தச் சாதி என்னும்சதி.’  சமூகத்தைச் சீரழிக்க வந்த இந்தச் சாதிய அழுக்கு, சனாதனத் தர்மத்தின் சாதுரியமான நகர்வுகளால் சாபமாகவே இந்திய மண்ணில் தொடர்கிறது.

இங்குசாதிக்குச் சாவில்லையோ?’ என்ற கேள்வி ஒவ்வொரு சாமானியனின் எண்ணத்திலும் தொக்கி நிற்கிறது; இங்கே வர்க்க வேற்றுமையில் சாதிச் சாக்கடை சமூகமெங்கும் நாற்றமடிக்கிறது. சாதிய ஒழிப்பு முன்னெடுப்புகள் நிகழ்ந்தாலும், முற்றிலும் அதை ஒழிப்பது இங்குச் சாத்தியமானதாகத் தென்படவில்லை!

சாதிய வேற்றுமையால் மனித மாண்பு அடியோடு சூறையாடப்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேதனையளிக்கிறது. துடைத்து எறியப்பட வேண்டிய இந்த வர்க்கக் கட்டமைப்பு, தூக்கி நிறுத்தப்படுவதை என்னவென்று சொல்வது?

ஆயினும், இந்த மண்ணில் தந்திரக் கூட்டத்தின் சந்ததியினர் ஒருபுறம் எல்லாம் பெற்று இன்புற்று இருப்பதையும், மறுபுறம் ஏதுமின்றி ஒரு கூட்டம் ஏமாந்து நிற்பதையும் எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்வது?

அடிமை இந்தியாவில் விடியல் விரவி வரும் வேளையில், சாமானிய மக்கள் கண் விழிக்கும் கணப்பொழுதில், ஒரு சாரார் மட்டும் விழிகளை விசாலமாக்கிக் கொண்டார்கள். பதவிகளை அவர்கள் பறித்துக் கொண்டதால், ஒடுக்கப்பட்டவரில் ஒருவர் கூட அரியணையை அலங்கரிக்க இயலவில்லை. அத்தகைய சூழலில் எழுந்ததுதான் சாதிய அடிப்படையில் இடஒதுக்கீடு குறித்த சிந்தனைகள்.

எந்த நாட்டிலும் கல்வித் துறையிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஆனால், இங்கு மட்டும் அது நிகழ்கிறது; காரணம், இங்குதானே வர்ணாசிரமம் வடிவெடுத்து நிற்கிறது; சனாதனம்  சந்தி வரை வீறு கொண்டு விளைகிறது! மதம், அமைப்பு, தத்துவம், சட்டம், சமூகம் எனப் பல நிலைகளில் இங்குதானே சமூகம்மாற்றம்காண முடியாத வகையில் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது!

இந்திய அரசியல், சமூகச் சூழலில் ஒன்றை மட்டும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்னும் இலக்கை அடைவதற்கான தடையற்ற சூழல் வரலாற்றில் ஒருபோதும் இங்கு இருந்ததில்லை. பலர் எளிதாக உரிமைகளைப் பெற்று மகிழும்போது, அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய குழுவாக ஒருசாரார் வஞ்சிக்கப்பட்டிருப்பது காலத்தின் கோலம்!

இந்தத் தடைகள் நீக்க முடியாதவை அல்ல; ஆனால், இவை நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்பதையும், அவற்றை நியாயப்படுத்தப் பெரும்பான்மை கருத்தியல்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த முரண்களைத் தகர்க்க, அரசியல் தளங்களில் ஒலிக்கத் தொடங்கிய பல்வேறு சமூகக் குரல்களின் ஒட்டுமொத்த எதிரொலிப்பால் இன்று சாத்தியமானதுதான் இந்தச் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு.

இன்றைய சூழலில், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது சமூகத்தின் ஒருமித்த வளர்ச்சிக்கான, சமூக நீதிக்கான போராட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய வர்க்க முரண்பாட்டின் அடித்தட்டில் இருக்கும் ஒரு சமூகம் மேன்மை அடைவதற்கும், சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், அச்சமூகம் தன்னிறைவு அடைவதற்கும் இது காலத்தின் கட்டாயமாகிறது. காலத்திற்கேற்ற சமூக நீதிக்கான வரையறை இன்று மீண்டும் மீள்பார்வை செய்யப்பட வேண்டும். இது எப்போது நிகழும்? அது சாதிவாரிக் கணக்கெடுப்பாக அமையுமா?” என்று (அக்டோபர் 20, 2024) ஆசிரியர் பக்கத்தில் யாம் முன்பு கேள்வி எழுப்பியிருந்ததை இங்கு நினைவுகூர்கின்றோம்.

சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் முன்வைத்தபோதுமக்களைப் பிளவுபடுத்துகிறார்கள்என்று குற்றம் சாட்டிய ஒன்றிய முதன்மை அமைச்சர், இப்போது அதே கோரிக்கைக்குப் பணிந்திருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோமக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்க்கும் ஒன்றிய அரசின் முடிவு நலிவடைந்த அனைத்துப் பிரிவு மக்களின் நிலையை மேம்படுத்த உதவும்என்ற பேருண்மையை இன்றுதான் கண்டுணர்ந்திருப்பார்போல!

தரமான அறிவிப்பாக இது இருந்தபோதும் இதனை வரவேற்பதுடன், இதைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்த வேண்டும்என எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி  வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வழக்கம்போல எதிர்க்கட்சிகளை வாயடைக்க இந்த அறிவிப்பை இப்போது வெளியிட்டிருக்கும் ஒன்றிய அரசு, இந்தக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? எப்போது முடியும்? என்பதற்கான விளக்கம் எதையும் குறிப்பிடவில்லை. ஆயினும், இதன் பின்புலத்தை உணர்ந்த தமிழ்நாடு முதல்வர்இது தற்செயலான அறிவிப்பு அல்ல; மாறாக, பீகார் மாநிலத் தேர்தலில் சமூக நீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால்தான் சந்தர்ப்பவாத நடவடிக்கையாகத் தற்போது இதை அறிவித்திருக்கிறார்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட ஒன்றிய அரசு, அனைத்திலும் தோல்வி கண்ட பிறகு இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறதுஎன்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதுவரை ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுப் பிரிவினர் என நான்கு பிரிவுகளின் அடிப்படையில் மட்டுமே மக்களை அரசு வகைப்படுத்தி, அதன் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனச் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது.

மிகவும் நலிவுற்றவரைத்  தூக்கிவிடும் வகையில் இன்று சில மாற்றங்களை மேற்கொண்டு, சாதிய அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனச் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சிந்தனையில் மலர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு, முறையான திட்டங்களை வகுப்பதற்கும், மக்கள் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதற்கும், மெய்யான சமூக நீதியை அடைவதற்கும் இன்றியமையாததாக அமைகிறது. இத்தகைய புள்ளி விவரங்களால் மட்டுமே சரியான நீதியை நிலைநாட்ட முடியும். அநீதிக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் முதலில் அதன் அளவை அறிந்தாக வேண்டுமல்லவா! இப்பேருண்மையை உணர்ந்த ஐயன் வள்ளுவர்,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள் 948)

என்கிறார். அதாவது, நோயைக் குறிகளால் அறிந்து, அதற்குரிய காரணத்தைத் தெளிந்து, நோயைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்து ஒரு மருத்துவன் மருத்துவம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

சமூகக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சாதிவாரி ஆய்வுக்குப் பதில், சாதிவாரிக் கணக்கெடுப்பை மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியிருக்கும் சூழலில், இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 246-இன் கீழ் ஒன்றிய அரசே மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அதிகாரம் கொண்டிருப்பதால், ஒன்றிய அரசு இதனைவிரைவில்முன்னெடுக்க வேண்டுமென்பதே நமது எதிர்பார்ப்பு.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
கடவுளின் கொடை! (Donum Dei)

என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்என்கிறார் நம் கடவுள் (எரே 3:15).

புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ (LEO XIV, 14-ஆம் சிங்கராயர்) இறைவன் தந்த உன்னதக் கொடை! மக்களின் மனங்களை உள்ளார்ந்து அறிகின்ற இறைவன், காலத்தின் அறிகுறிகளைக் கணித்துத் தந்திருக்கும் ஒப்பற்ற கொடை இவர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு, புதிய திருத்தந்தையை இறைவன் நமக்கு வழங்கிட வேண்டுமெனத் திரு அவை இறைவேண்டலில் ஒன்றித்திருந்தது. புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கர்தினால்களின் கூடுகைத் தொடங்கிய நாளிலிருந்து மக்கள் வெண்புகைக்காக ஆவலோடு காத்திருந்தார்கள்.

இரண்டு நாள்கள், ஏறக்குறைய 48 மணி நேரம் கடந்த வேளையில், மே மாதம் 8-ஆம் நாள் உரோமை நேரப்படி மாலை 6:08 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 9:38) ‘புதிய திருத்தந்தை கிடைத்துவிட்டார்என்னும் அறிவிப்பைத் தெரியப்படுத்தும் விதமாக, சிஸ்டைன் சிற்றாலயத்திலிருந்து வெண் புகை வெளிவந்தது. பெருங்கோவிலின் மணிகள் தொடர்ந்து ஒலிக்க, மணியோசை வானவர் வாழ்த்தை இசைத்தன. பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டம் கரவொலி எழுப்பி ஆரவாரத்துடன் ஒன்றுகூடி, புதிய திருத்தந்தையின் திருமுகத் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.

வத்திக்கான் மேல்மாடத்தில் தோன்றிய கர்தினால் தோமினிக் மம்பார்தி அவர்கள்Annuntio vobis gudium: Habemus Papam!” - அதாவதுநான் உங்களுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியை அறிவிக்கிறேன்; நாம் ஒரு புதிய திருத்தந்தையைப் பெற்றிருக்கிறோம்என்று கூறியதுடன், “கர்தினால் இராபர்ட் பிரான்சிஸ் பிரவோஸ்ட் 267-வது திருத்தந்தையாகக் கிடைத்திருக்கிறார்; அவர் 14-ஆம் லியோ என்ற பெயரிலே அழைக்கப்படுவார்என்றும் அறிவிக்கிறார். திருச்சிலுவை முன்வர, திருத்தந்தை அம்மாடத்திற்கு அழைத்து வரப்படுகிறார். மக்களின் கரவொலியும் ஆரவாரமும் விண்ணை முட்டுவதும், அவர்கள் முகங்களில் மகிழ்ச்சி பொங்குவதும் கண்கொள்ளாக் காட்சியாகிறது!

இருகரம் உயர்த்தி மக்களை நோக்கிக் கையசைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தைUrbi et Orbi’ (ஊர்பி எத் ஓர்பி) எனும் ஊருக்கும் உலகிற்குமான ஆசிரை வழங்குகிறார். “உங்கள் அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்!” என்ற ஆசிரோடு தன் உரையைத் தொடங்கிய புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ, “கடவுளின் மந்தையாம் மக்களுக்காகத் தனது உயிரைக் கொடுத்த நல்லாயனாம் உயிர்த்த இயேசு கிறிஸ்து கூறிய முதல் வார்த்தைகள் இவை. இந்த அமைதியின் வாழ்த்து, உங்கள் இதயங்களில் நுழைந்து உங்கள் குடும்பங்களுக்கும் உலகின் எல்லாத் திசைகளில் இருக்கும் மக்கள் அனைவருக்கும், பூமியெங்கும் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்என்றார்.

இது உயிர்த்தெழுந்தக் கிறிஸ்துவின் அமைதி; ஆயுதங்களைக் களையும் அமைதி; தாழ்ச்சி மற்றும் விடாமுயற்சி உள்ள அமைதி; நம் அனைவரையும் அளவின்றி அன்பு செய்யும் கடவுளிடமிருந்து வரும் அமைதிஎன்று உயிர்ப்பு நாளில் அமைதியின் பரிணாமங்களை எடுத்துக் கூறிய மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நினைவுகூர்ந்து, “அவருடைய குரல் இன்று நமது காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது; அதே ஆசிரை நானும் இன்று உங்களுக்கு வழங்குகிறேன்என்றும் மக்களைத் திடப்படுத்தினார்.

கடவுள் நம்மை அன்பு செய்கிறார்; நம் அனைவரையும் அன்பு செய்கிறார்; தீமை வெற்றி பெறாது; நாம் அனைவரும் கடவுளின் கைகளில் இருக்கிறோம்; எனவே, பயமின்றிக் கடவுளுடன் ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து முன்னேறுவோம்; நாம் கிறிஸ்துவின் சீடர்கள். கிறிஸ்து நம்முன் செல்கிறார்; உலகத்திற்கு அவருடைய ஒளி தேவை; கடவுளையும் அவரது அன்பையும் அடைய உதவும் பாலமாக மனிதகுலத்திற்கு அவருடைய ஒளி தேவை. உரையாடல், சந்திப்பு வழியாகப் பாலங்களைக் கட்டவும், ஒரே மக்களாக அனைவரும் ஒன்றிணைந்திருக்கவும் ஒருவருக்கொருவர் உதவுவோம்என்னும் அவருடைய செய்தி மறைந்த திருத்தந்தையின் எண்ண ஓட்டங்களையும் அவருடைய உணர்வுகளையும் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தன.

உங்களுடன் நான் ஒரு கிறித்தவன்; உங்களுக்காக ஓர் ஆயர்என்று கூறும் அகுஸ்தினாரின் சபையைச் சார்ந்த அவரது மகன் என்று தன்னைச் சிறப்பான வகையில் அடையாளப்படுத்திக் கொண்ட புதிய திருத்தந்தையின் பிறப்பும் வாழ்வும் பணியும், அவர் தேர்ந்தெடுத்திருக்கும் புதிய பெயரும் உலகிற்கு ஆயிரம் அர்த்தங்களைச் சொல்கின்றன.

அமெரிக்க ஐக்கிய நாட்டிலே, இலினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ பட்டணத்தில் பிறந்த இவர், புனித அகுஸ்தினார் துறவற சபையில் தன்னை இணைத்துக்கொண்டு குருவாக அருள்பொழிவு பெற்று, இறையழைத்தல் ஊக்குநராக, பேராசிரிய ராகப் பயணித்து, வழிகாட்டியாகப் பரிணமித்து, அச்சபையின் தலைவராக வழிநடத்தி, பின் பெரு நாட்டில் சிக்லாயோ மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றி, 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். ஆயர்களுக்கான திருப்பீடத் துறையின் தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர்.

அமெரிக்க நாட்டில் வளமையான பிறப்பும், தூய அகுஸ்தினார் சபையில் பெற்ற ஆழமான ஆன்மிகமும், பெரு நாட்டில் மக்களின் வறுமை வாழ்வில் கண்ட அனுபவங்களும் இவரைப் பெரிதும் புடமிட்டிருக்கின்றன என்பது இவருடைய முதல் உரையில் எதிரொலிக்கிறது.

தன்னுடைய இயற்பெயரிலேயே தன் முன்னவர் பிரான்சிஸ் அவர்களின் பெயரைத் தாங்கி வரும் இவர், அவரோடு பயணித்துப் பெற்ற பணி அனுபவங்கள், சமூகச் சிந்தனைகள், திரு அவைக்கான முன்னெடுப்புகள் யாவும் குன்றாமல் குறையாமல் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றாக இணைந்து பயணிப்பது, உடனிருப்பது, உரையாடல் மேற்கொள்வது, அனைவருக்கும் அன்பைக் கொடுப்பது, உலகிற்கு அமைதியை வழங்குவது என்னும் சிந்தனை ஓட்டங்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையே நினைவுபடுத்துகின்றன.

கத்தோலிக்கத் திரு அவையின் இறையியல், தத்துவவியல், சமூகவியல், அரசியல் தளங்களுக்குத் தூய அகுஸ்தினார், தூய தாமஸ் அக்குவினாஸ் ஆகியோரின் இறையியல் சிந்தனைகளை அடிப்படையாகக் கட்டமைத்த மாபெரும் மனிதர் திருத்தந்தை பதிமூன்றாம் லியோ. தனது 93 ஆண்டுகால மண்ணக வாழ்வில், 25 ஆண்டுகள் திருத்தந்தையாக நீண்ட காலம் பணிசெய்து, மறுமலர்ச்சி கண்டவர் அவர். தொழிலாளர்களின் உரிமைகள், அவர்களுக்கான நியாயமான ஊதியம், பணித்தளப் பாதுகாப்பு என்பது பற்றி தன்னுடையRerum Novarum (1891) என்னும் திருத்தூது மடல் வழியாகக் குரல் எழுப்பி பணியாளர்களின் உரிமைக்காக நிலைப்பாடு எடுத்தவர். ஆகவே, அவர்பணியாளர்களின் திருத்தந்தை (Pope of the workers) என்றே அழைக்கப்பட்டார். மேலும், ‘திருச்செபமாலையின் திருத்தந்தை (Rosary pope), ‘சமூகத் திருத்தந்தை (social pope) என்று பெயர் பெற்ற திருத்தந்தையின் வரிசையில் தன்னுடைய திருத்தந்தைக்கான நாமத்தைப் பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை.

திருத்தந்தை 14-ஆம் லியோவின் பணிக்காலம் நம்பிக்கையாளர்களின் ஆன்மிகத்தை ஆழப்படுத்தும், திரு அவையின் செயல்பாடுகளை மேன்மைப்படுத்தும் என்றே நம்புகிறோம். இத்தகைய பணிகளை முன்னெடுத்துச் செல்ல நமது இறைவேண்டல் அவருக்கு அன்றாடம் அவசியமாகிறது. நோபல் பரிசு பெற்ற தாகூர், கீதாஞ்சலியில் குறிப்பிடுவதுபோல...

இறைவா....

வலுவற்ற இந்தப் பாத்திரத்தைத்

துடைத்துத் துடைத்து

உன் புதிய உயிர்க்காற்றை

அதனுள் நிரப்புவதில் நீ இன்புறுகிறாய்!

இந்தச் சின்னஞ்சிறு மூங்கில் குழலுடன்

காடு மலைகளெல்லாம் சுற்றித் திரிந்து

என்றென்றைக்கும் புதுமையான இசை வெள்ளத்தை அதனுள் பரவவிடுகிறாய்!

எல்லையற்ற, அளவற்ற உன் பரிசுகள்

என் சிறு கைகளை நிறைக்கின்றன!

காலங்காலமாய் உன் பரிசுகள்

பொழியப்பட்டே வந்தாலும்,

இன்னும் சிறிது இடம்

இந்தக் கைகளில் மீதமாகவே இருக்கிறது!’

என்ற இறைவேண்டலைப்போல திருத்தந்தையின் கரங்களை இறைவன் வலுப்படுத்தவும், இறை ஆசி நிறைவாக வழங்கிடவும், உடல் உள்ள நலன் தந்திடவும் இக்காலச்சூழலில் துணிவுடன் தெளிவுடன் திரு அவையை முன்னெடுத்துச் செல்லவும் அவருக்காக நாம் தொடர்ந்து இறைவேண்டல் செய்திடுவோம்!

நீடூழி வாழ்க திருத்தந்தையே!

Viva  papa!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
குடிமைப் பணியும் தமிழ்க் குடியும்!

நம் நாட்டின் எல்லாத் துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் பெற்று, நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற ஆளுமைகள்தான் குடியுரிமைப் பணியாளர்கள் (Civil Servants). அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் உருவாக்கத்திலும் அதை அமல்படுத்துவதிலும் குடிமைப்பணி அதிகாரிகளின் பங்களிப்பு அளப்பரியது. இப்பணிக்கு, நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் விருப்பமும், கல்விப் புலமையுடன் கூடிய நிறைந்த அனுபவமும் அளவுகோலாகக் கணிக்கப்படுகின்றன.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC) நடத்தும் இத்தேர்வில் வெற்றிக் கனியை எட்டிப் பறிக்க விடாமுயற்சியும் பயிற்சியும் உயிர்நாளமாய் அமைய வேண்டும். தெளிவான இலக்கு, கூர்மைப்படுத்தப்பட்ட நோக்கம்திட்டமிட்ட பயிற்சி, பொது அறிவு, கூடுதல் திறமைகளில் கவனம், மனவலிமை, ‘வெற்றி நிச்சயம்எனும் தன்னம்பிக்கை ஆகிய படிநிலைகளில் பயணிக்கின்றபோது, வெற்றி என்பது யாவருக்கும் எளிதில் கைகூடுகிறது.

அகில இந்தியப் பணிகள், மத்திய குடிமைப் பணிகள் (குரூப் A, குரூப் B) என மூன்று கட்டங்களாக நடத்தப்படும் இத்தேர்வுகளில், 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்ட யாவரும் பங்கெடுக்க வயதுவரம்பு இருந்தபோதிலும், சிறப்புப் பிரிவின் கீழ் தனி இடஒதுக்கீட்டின்படி 40 வயது வரை விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வின் முதற்கட்டத் தேர்வு அறிவிப்பிலிருந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலான முழு செயல்முறையும் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு நடைபெறுகிறது. தொடர் வெற்றி காணும் ஒரு பங்கேற்பாளரின் தேர்வு நேரம், ஒரு வருட கால முழுமையான செயல்முறையில் 32 மணி நேரம் தேர்வில் பங்கேற்கிறார்.

ஒன்பது தாள்கள் கொண்ட முதன்மைத் தேர்வு முடிந்ததும் ஆளுமைத் தேர்வு எனப்படும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இந்த நேர்காணலின் நோக்கம், ஒரு பணிக்குப் பொருத்தமானவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டு அமர்வே தவிர, பங்கேற்பாளரைத் திணறடிப்பதற்கான முயற்சி அல்ல! திறமையான பாரபட்சமற்ற தேர்வுக் குழுவால்  நடத்தப்படும் இந்த ஆளுமைத் தேர்வு, பங்கேற்பாளரின் மனத்திடத்தையும் அறிவுத்திறனையும் மதிப்பிடுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்கேற்பாளருடைய அறிவுசார் குணங்களை மட்டுமல்ல, சமூகப் பண்புகள், நடப்புச் செயல்பாடுகள்மீது கொண்டிருக்கும் ஆர்வம், அதை மதிப்பிடும் விதம், மனவலிமை, சமூக விழிப்புணர்வு, ஒருங்கிணைக்கும் திறன், விமர்சனப் பார்வை, தெளிவான தக்க ரீதியான விளக்கம், தீர்ப்பின் சமநிலைபன்முகத்தன்மை, கொண்டிருக்கும் ஆர்வத்தின் ஆழம், சமூக ஒற்றுமை பற்றிய புரிதல், தலைமைத்துவத்திற்கான திறன், அறிவுசார் செயல்பாடு, தார்மீக ஒருமைப்பாடு யாவும் மதிப்பிடப்பட வேண்டிய குணங்களாகக் கணிக்கப்படுகின்றன. நேர்காணல் என்பது நுட்பமான, கடுமையான குறுக்கு விசாரணை என்ற மன நிலையைத் தவிர்த்து, இது அறிவார்ந்த ஓர் ஆளுமையைத் தேடுவதற்கான முயற்சி எனக் கொள்ள வேண்டும்.

2024-இல் நடைபெற்ற குடிமைப் பணித் தேர்வில், இந்திய அளவில் 5.83 இலட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் 1009 பேர் (2.5%) முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்கள் கடந்த காலங்களைவிட தற்போது  இத்தேர்வில் சிறப்பாகத் தடம் பதித்திருக்கிறார்கள். 2023-இல் தமிழ் நாட்டிலிருந்து 45 பேர் தேர்வாகியிருந்த நிலையில், 2024-இல் 54 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகக் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாடு எதிர்பார்த்த அளவில் தேர்ச்சி காணாத நிலையில், இந்த முறை நம்பிக்கையூட்டும் வகையில் தேர்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன. அதேவேளையில், 2023-இல் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டில் முதன்மையான மாணவராகத் தேர்வானவர் தேசிய அளவில் 107-வது இடத்தையே பெற்றார். உயர்கல்வியின் மொத்தச்சேர்க்கை விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மையான இடத்தில் இருந்தும், குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறாதது கவலையளிக்கும் செய்தியாகவே நீடித்தது.

இவ்வேளையில், குடிமைப் பணிக்குப் பயிற்சி நிறுவனங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் எனவும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கி வரும்நான் முதல்வன்திட்டத்தின் வாயிலாகக் குடிமைப் பணித் தேர்வின் முதல்நிலைத் தேர்வு எழுதுபவர்களுக்கு பத்து மாதங்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுவதும் பாராட்டத்தக்கதே! மேலும், நேர்முகத் தேர்வுவரை செல்பவர்களுக்கு, ரூபாய் 50,000/- வரை வழங்கப்படும் என இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பொதுவாகக் குடிமைப்பணித் தேர்வுகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு மீண்டும் மீண்டும் தேர்வுக்குத் தயாராகும் வகையில் குடும்பப் பின்னணியோ, பொருளாதாரச் சூழலோ  அமையாததால், இத்தேர்வு எழுதுபவர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்; குடிமைப் பணியின் சிறப்புகள் குறித்துப் பள்ளிகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டப்பட வேண்டும்; பாடக்கல்வியுடன் சிந்திக்கும் திறன், பகுப்பாய்வுத் திறன் போன்றவற்றையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். அரசு முன்னெடுக்கும் பல முயற்சிகளில் கல்வி நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  என்பதையும் நாம் இங்கே வலியுறுத்த விரும்புகிறோம்!

வானம் வசப்படும்; வானவில்லும் கைப்படும்என்று வீண் வசனம் பேசுவதைத் தவிர்த்து, கடின உழைப்பிலும் விடாமுயற்சியிலும் தன்னம்பிக்கையிலும் இளையோர் உறுதிபட வேண்டும். வாழ்க்கை என்பது நம்பிக்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது; நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை! ‘நாளை இருப்போம்என்ற நம்பிக்கையில்தான் நாம் இன்று பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே, ‘கைகூடும்என்ற நம்பிக்கையில் பயணிக்கின்றபோதுதான் எதுவும் இங்கே சாத்தியமாகும்!

என்னால் முடியும்என்ற நம்பிக்கையே விடியலைத் தரும். ‘எனக்குத் தேவையான அனைத்து ஆற்றலும் எனக்குள்ளேயே உண்டுஎன உணர்பவன்தான் வெற்றிப் படியில் எட்டி நடக்கிறான். புறச்சூழல் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நம்மை நாமே ஆழ்மன எண்ணங்களால் ஊக்குவித்துக் கொண்டு, நம்மையும் நாம் சார்ந்த சமூகத்தையும் சேர்த்து உயர்த்தக்கூடிய மேலான குறிக்கோளோடு இன்றைய  இளையோர்  பயணிக்க வேண்டும்.

பொத்தாம் பொதுவாகப் பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்காமல், என்னவாக வேண்டும் என்ற குறிக்கோள் நம்மில் கூர்மைப்படுத்தப்பட வேண்டும்; அதை அடையத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்தத் துறையில் சாதித்தவர்களை முன்மாதிரிகளாகக் கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். அவர்களைவிடச் சிறந்த சாதனை புரிய என்ன செய்ய வேண்டும் எனவும், அதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். வீணான பொழுதுபோக்குகளில் நேரத்தையும் கவனத்தையும் செலவழிக்காமல் தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் ஒருநாள் நாம் நம் இலட்சியத்தை அடைய முடியும்.

இதற்குச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தீட்டும் வைர வரிகள் வளமான வாழ்வியலை நமக்கு முன்வைக்கின்றன:

அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;

பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்:

உளநாள் வரையாது; ஒல்லுவது ஒழியாது;

செல்லும் தேஎத்துக்கும் உறுதுணை தேடுமின்!’

அதாவது, சிறந்த சான்றோர்கள் ஒன்றுகூடும் அவையில் அமர்ந்து, அந்த மேன்மக்கள் வழங்கக் கூடிய மிகச்சிறந்த கருத்துகளை எல்லாம் உள்வாங்கி, அதன்படி வாழ்வைச் செம்மைப்படுத்துவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அறத்துக்குப் புறம்பான சிந்தனைகளைக் கொண்டவர்கள் கூடும் இடத்தை விட்டு அகல வேண்டும். கிடைத்தற்கரிய வாழ்நாளை வீணாக்கி விடாது, ஒவ்வொரு நொடியையும் அர்த்தமுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும். கடமைகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அந்தக் கடமைகள் அனைத்திலிருந்தும் விலகிவிடாமல் பொறுப்புடன் வாழ்ந்து, அதை நிறைவேற்ற வேண்டும்; அதற்கு ஒவ்வொரு தருணத்தையும் நன்முறையில் பயன்படுத்த வேண்டும். மறுமை வாழ்வுக்குச் செல்லும்போது இம்மண்ணில் பின்பற்றிய அறம் என்பதைத் துணையாக அழைத்துச் செல்ல வேண்டும்.

ஆகவே, பெற்றோரே, ஆட்சியாளர்களேவளமான நாட்டிற்கு நலமான கல்வியாளர்கள் வேண்டும். நம் இளையோர் உயர்ந்த கல்வியாளர்களாகவும் நேரிய ஆட்சியாளர்களாகவும் நிர்வாகத் திறன் கொண்ட தலைவர்களாகவும் சிறந்த, வளமான, வலிமையான இந்தியாவைக் கண்முன் கொண்ட சிற்பிகளாகவும் உருவாக அவர்களை ஊக்குவிப்பது நமது கடமையாகிறது!

இளையோரே! எழுந்து வாருங்கள்...

வென்று காட்டுங்கள்!

நாளைய இந்தியா உங்கள் கைகளில்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
விடைபெற்றார்... ஏழைகளின் ஏந்தல்!

பிப்ரவரி 11, 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டின் பணி ஓய்வு அறிவிப்பில் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளான 130 கோடி கத்தோலிக்கர்களில் நானும் ஒருவன். ஆயினும், அந்த அதிர்ச்சி நெடுநாள் நீடிக்காத வகையில், மார்ச் 13, 2013 அன்று இரவு 8:12 மணிக்குதிருத்தந்தை பிரான்சிஸ்வடிவில் எளிமையும் தாழ்ச்சியும் துணிவும் தெளிவும் பணிவும் கொண்ட ஒரு வழிகாட்டியைத் திரு அவைக்குத் தந்த இறைவனுக்கு நன்றி கூறிய குரலொலியில் சேர்ந்தது எனது குரலும்தான்.

மகிழ்ச்சியில் திளைத்த மக்கள் மெய்சிலிர்க்க, மாடத்தில் தோன்றிய வெண்புறாபிரான்சிஸ்என்ற பெயர் தாங்கி, தன் சிறகுகள் விரித்ததும் என் இதழ் செபித்தது; உலகோர் உள்ளங்களும் அவ்வாறே! மக்களின் ஆசி வேண்டி அவர் சிரம் தாழ்த்தியது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. “திரு அவையின் பயணத்தில், பிறரன்புடனும் சகோதரத்துவ உணர்வுடனும் நடப்போம்; ஒருவர்  மற்றொருவருக்காகச் செபிப்போம்; உலகிற்காகச் செபிப்போம்!” என்ற அவரின் முத்தான முதல் பதம், 130 கோடி கத்தோலிக்கர்களை மட்டுமல்ல, உலகோர் அனைவரின் இதயத்தையும் முத்தமிட்டது போலவே இருந்தது.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கால்பந்து விளையாட்டு. அத்தகைய சிறப்புப் பெற்ற அர்ஜென்டினா நாட்டில், 1936-ஆம் ஆண்டு, டிசம்பர் 17-ஆம் நாள் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, தனது 33 வயதில் சேசு சபை குருவாகி, 1992-இல் பியூனஸ் அயர்ஸ் உயர்மறைமாவட்டத் துணை ஆயராகவும், 1998-இல் அந்த உயர் மறைமாவட்டத்தின் பேராயராகவும், 2001-இல் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களால் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டு, தனது 76 வயதில் உலகளாவிய கத்தோலிக்கத் திரு அவையின் தலைமைப் பணியாளராகப் பொறுப்பேற்றார்.

சேசு சபை உறுப்பினர் ஒருவர் திருத்தந்தையானதும், ஐரோப்பியர் அல்லாதவர் திருத்தந்தையானதும் இதுவே முதல் முறை. கத்தோலிக்க இறை நம்பிக்கையில் ஆழமானவர், உறுதி கொண்டவர் என்பதையெல்லாம்விட, திரு அவையின் மீது அளப்பரிய பற்றுக் கொண்டவராகவும், மாபெரும் நம்பிக்கையாளராகவும், இரக்கம் நிறைந்த தந்தையாகவும் அவர் பயணித்தார் என்பதுதான் அவரின் தனிச்சிறப்புஏழைகள் மற்றும் உரிமை மறுக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்A passionate defender of the poor and dissenfranchisedஎன்று அர்ஜென்டினா மக்களால் அழைக்கப்பட்டவர், திரு அவையின் தலைமைப் பொறுப்பிலும் அதை இறுதிவரை வாழ்ந்து காட்டியதால், உலக மக்களால்ஏழைகளின் ஏந்தலாகவேபோற்றப்படுகிறார்.

இவரது சிந்தனை உயர்ந்தது; எண்ணம் பரந்தது; செயல்பாடுகள் சிறந்தது. 2001-இல் அனைவரும் அதிர்ச்சியடையும்படியாகக் கர்தினால் ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, பியூனஸ் அயர்ஸில் உள்ள முனிஸ் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 12 எய்ட்ஸ் நோயாளிகளின் பாதங்களைக் கழுவி, அவர்களின் கால்களுக்கு முத்தமிட்டு, சமூகத்தில் நோயாளிகளும் ஏழைகளும் மறக்கப்படக்கூடாது என்று நினைவூட்டினார்.

சமூக நீதிக்கொள்கைகளில் உறுதியாக இருந்த திருத்தந்தை பிரான்சிஸ், அகதிகளுக்கும் புலம்பெயர்வுக்கும் எப்போதும் தனது ஆதரவைத் தெரிவித்து வந்தார். ட்ரம்பின் முந்தைய ஆட்சியின்போது மெக்சிகோ மக்களின் புலப்பெயர்வுக்கு எதிராக அவர் சுவர் எழுப்பியபோது, உலகத் தலைவர்கள் மௌனித்தார்கள்; ஆனால், திருத்தந்தை பிரான்சிஸோ ஏதிலியரின் கூக்குரலாக வெளிப்பட்டார். ‘கட்டப்பட வேண்டியது சுவர்கள் அல்ல, பாலங்களேஎன இடித்துரைத்தார். போர் இல்லாத அமைதியான உலகுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த திருத்தந்தை, போரினால் துன்புறும் மக்களைத் தனது வேண்டுதல்களில் எப்போதும் நினைவுகூர்ந்தார். உலகில் அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இயேசுவின் சீடனாக, இறைவாக்குரைக்கும் ஓர் இறைவாக்கினனாக, அநீதிகளைச் சுட்டிக்காட்டுவதிலும், தவறுகளை எடுத்துரைப்பதிலும், உண்மையை முழக்கமிட்டு அறிவிப்பதிலும் அவர் ஒருபோதும் தளர்ந்ததில்லை.

மனிதநேயப் பண்பாளராக, ஏழைகளின் பங்காளனாக, இளையோரின் எழுச்சி நாயகனாக, ஏதிலியரின் உரிமைக் குரலாக, இயற்கையின் இனிய நேசனாக, இரக்கத்தின் தூதுவனாக, பெண்ணிய மாண்பு கண்ட பேராளுமையாக, திரு அவை வழிபாட்டு முறையில் சீர்திருத்தம் கண்ட சிற்பியாக, பல்லுயிர்  நேயம் கொண்டு உலகைக் காத்திட உலகோர் அனைவருக்கும்  அழைப்பு விடுத்த பொதுவுடைமைவாதியாக அறியப்பட்ட 21-ஆம் நூற்றாண்டின் மாபெரும் பேராளுமையாக வலம் வந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். அன்று கணியன் பூங்குன்றனார் முழங்கியயாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற கோட்பாட்டின் வழியில்யாவரும் உடன்பிறந்தோர்என்று முழங்கி உறவுச் சமூகத்தைக் கட்டியெழுப்பப் பேராவல் கொண்ட பொதுநலவாதி இவர்.

திரு அவையின் நம்பிக்கை கோட்பாடுகளைக் காப்பதில் இரும்புக் கரமும், ஏழை எளிய மக்களை, ஒடுக்கப்பட்டோரை அரவணைப்பதில் இளகிய உள்ளமும் கொண்ட எளிமையும் தாழ்ச்சியும் நிறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ற நம்பிக்கையூட்டும் தலைவர் என்பதை எவராலும் மறுக்க இயலாது.

மேய்ப்புப் பணி பற்றிய சிந்தனைகளையும் நடைமுறை எதார்த்தங்களையும் எளிமையையும் கற்றுக்கொள்ள இறைவன் தந்த மாபெரும் கொடையே இப்பேராளுமை! இவரின் சிந்தனையில் தெளிவு; செயல்களில் பணிவு; போதனையில் துணிவு இவை யாவரையும் பிரமிக்க வைத்தது என்றால் அது மிகையல்ல!

காலத்தின் குறிப்பறிந்து அவர் திருவாய் மலரும் அமுத மொழிகள் தனிமனிதனை, சமூகத்தை, ஏன் இந்த உலகத்தையே தன்பால் திருப்பிப் பார்க்க வைத்தன. இவர் வழங்கிய மறையுரைகள், மூவேளைச்  செய்திகள், பொதுச்சந்திப்புகள், சொற்பொழிவுகள், கடிதங்கள், செய்திகள், திருத் தூது மடல்கள், சுற்றறிக்கைகள், மேற்கொண்ட பயணங்கள், உலகோருக்கு வழங்கியUrbit et orbiஎனப்படும் சிறப்பு ஆசிரும் செய்தியும் உலகோரின் கவனத்தை ஈர்த்தன. சாதாரண அடிப்படை உறவு நிலைகளை, கருத்தியலை எளிய நடையில் எடுத்துரைப்பதே இவரது தனிச்சிறப்பு. அது ஒவ்வொரு மனிதரையும் தங்கள் வாழ்வைப் புடமிட்டுப் பார்க்க வைத்தன.

நற்செய்தியை நவிலவும், அமைதியை அறிவிக்கவும், நலந்தரும் செய்தியை உரைக்கவும்... வருவோரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன!” என்று உரைத்த எசாயாவின் கூற்று (52:7) இவரின் சொல்லிலும் செயலிலும் இறைவாக்குப் பணியிலும் முற்றிலும்  ஒன்றித்திருக்கிறது. இத்தகைய பொற்பாதங்கள் படைத்தோரை விண்ணகத்தில் இறைக்கூட்டம் வரவேற்பதைத் திருவாசகத்தில் மாணிக்கவாசகர்,

மின்னேர் அனைய பூங்கழல்கள்

                அடைந்தார் கடந்தார் வியனுலகம்

பொன்னேர் அனைய மலர் கொண்டு

                போற்றா நின்றார் அமரரெல்லாம் (50:1)

என்று குறிப்பிடுகிறார். அதாவது, மின்னலையொத்த இறைவனின் அழகிய திருவடிகளை அடைந்தவர்கள் உலகச் செயல்பாடுகளைக் கடந்தார்கள். இறைவனின் திருப்பாதம் சென்றிருக்கும்  அத்தகைய விண்ணகவாசிகள் பொன்னொத்த மலர்கள் தூவி அவரை வழிபடுகின்றனர். அத்தகைய அருளைத் தனக்கு வழங்க வேண்டும் என வேண்டுகிறார். மேலும்,

வேண்டும் வேண்டும் மெய்யடியார்

                உள்ளே விரும்பி எனை அருளால்

ஆண்டாய் அடியேன் இடர்களைந்த

                அமுதே அருமாமணி முத்தே

தூண்டா விளக்கின் சுடரனையாய்

                தொண்ட  னேற்கும் உண்டாங்கொல்

வேண்டா தொன்றும் வேண்டாது

                மிக்க அன்பே மேவுதலே (38:4)

என்று வேண்டுகிறார். அதாவது, உன் அருளை நாடிய அன்பர் கூட்டத்தில் என்னையும் சேர்த்து வைத்தாய். எண்ணில் பேரொளி தந்தாய்; சுடரொளி வீசும் உம்மைக் காணச் செய்தாய். இந்த விளக்கின் சுடரொளி என்றும் எரிய உமது அன்பைத் தவிர வேறொன்றும் எனக்கு வேண்டாம் என்று பாடுவது போல, நாமும் நம் திருத்தந்தைக்காகஇறைவா! உம் அடியார் இவர் உமது பேரின்ப வீட்டில் அணையா விளக்காக எந்நாளும் ஒளி வீச அன்பினால் முழுமையாய் ஆட்கொள்வீராக!’ என்று மன்றாடுவோம்.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
உடல்மொழிக் கூறுகளும் வாய்மொழிச் சொற்களும்...

ஒருவருடைய சிந்தனையும் சொல்லும் செயலுமே அவரின் தரத்தை வரையறுக்கின்றன. எப்போதும் மிக உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, பிறருக்குப் பயன்படும் சிறந்த செயல்களைச் செய்பவர்களை இவ்வுலகம்அவர்கள் தெய்வப் பிறவிகள்என்றே அழைக்கிறது!

ஆகவே, உயர்ந்த வாழ்க்கை வாழும் மனிதர்கள் தெய்வமாக அனைவராலும் மதிக்கப்படுகிறார்கள். ஆயினும், உயர்ந்த சிந்தனைகள் ஏதுமின்றி, தரமற்றச் சொற்களையும் தவறான செயல்களையும் கொண்ட மனிதர்கள்விலங்குவாழ்க்கையே வாழ்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது கம்பராமாயணம். ‘இது சரி, இது தவறுஎன்று சிந்திக்காமல், மனத்திற்குத் தோன்றியபடி வாழ்கின்ற மக்கள் விலங்குகள் ஆகிவிடுகிறார்கள் என்றும், மறுபுறம் நெறிபிறழாமல் வாழ்வது, ஒரு விலங்காக இருந்தாலும் அது தெய்வ நிலையை அடைகிறது என்றும் விளக்கம் அளிக்கிறது கம்பனின் கவிதை.

தக்க இன்ன, தகாதன இன்ன என்று

ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள

மக்களும் விலங்கே, மனுவின் நெறி

புக்க வேல், அவ்விலங்கும்  புத்தேளிரே

ஒருவர் பேசும் சொற்கள்... நெறியாகவும் அளவாகவும் உரமாகவும் வரமாகவும் அறமாகவும் தரமாகவும் நாணயமாகவும் நாணமாகவும் கற்பாகவும் கலையாகவும் காமக்கூறுகளைக் களைந்ததாகவும் இருக்க வேண்டும் என்கிறது செம்மொழிச் சிறப்புக் கண்ட தமிழ் இலக்கியம். அதுதான் எவர் மனத்தையும் புண்படுத்தாத உறவை, சமூகத்தை, உலகைக் கட்டமைக்கும்.

பிறர் மனத்தைப் புரிந்துகொண்டு, மதிப்பளித்து, அதற்கேற்ப தாம் பேசுவது, செயல்படுவது என வரையறை கொண்டு வாழ்கின்ற சக மனிதர்களைமேன்மக்கள்என்றே இச்சமூகம் அடையாளப்படுத்துகிறது. இலக்கியத்திலும் சங்க காலத்திலும் வாழ்ந்த இப்பேராளுமைகளும் மேன்மக்களும், நாம் வாழும் இச்சமூகத்திலும் உலா வருவது இச்சமூகம் கண்ட, கொண்ட பெரும் வரமே!

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மானுடச் சமூகத்தின் மேன்மைக்கும் உரமாகவும் வரமாகவும் அமைவது - மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம். இவை மூன்றுமே ஊடகமாக வெவ்வேறு தளங்களில் தனித்தும் இணைந்தும் பயணித்தாலும் முன்னிருக்கும் மூத்த ஊடகம்மொழியே!

மொழியும், மொழிக்கு வளம் சேர்க்கும் சொற்களும், சொற்களுக்கு வலிமை சேர்க்கும் உடல்மொழிக் கூறுகளும் ஒரு சமூகத்தின், பண்பாட்டின் அளவுகோலாகக் கணிக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று தளர்ந்தாலும், பண்பாட்டின் மேன்மையும் மாண்பும் சிறுமைப்படுத்தப்படும்; நாகரிகமும் பண்பாடும் அற்ற அநாகரிகச் செயலாகவே அது அடையாளப்படுத்தப்படும். எனவே, தகுந்த இடத்தில், தகுந்த வார்த்தைகளை, தகுந்த உடல்மொழிக் கூறுகளோடு வெளிப்படுத்துவதே கற்றறிந்தோரின் அறமாகும். இங்கு உடல்மொழிக் கூறுகளும் வாய்மொழிச் சொற்களும் அறம் தவறாது இணைந்து பயணிக்க வேண்டும்.

உடல்மொழி என்பது முகபாவனைகள், சைகைகள் மற்றும் தோரணைகள் போன்ற உடல் நடத்தைகளைப் பயன்படுத்தி வாய்மொழியாகத் தொடர்பு கொள்வதைக் குறிக்கிறது. இது உணர்ச்சிகள், மனப்பான்மைகள் மற்றும் நோக்கங்களைப் பெரும்பாலும் அறியாமலேயே வெளிப்படுத்தக்கூடிய ஒரு சக்திவாய்ந்த தகவல்தொடர்பு வடிவமாகும்.

உடல்மொழி, வார்த்தைகளை விட உணர்ச்சிகள், நோக்கங்கள் மற்றும் மனப்பான்மைகளை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்துவதால், பயனுள்ள தகவல் தொடர்புக்கு மிகவும் முக்கியமானதாகிறது. உடல்மொழியைப் புரிந்துகொள்வதும் பயன்படுத்துவதும் ஒருவர் மற்றவர் மேல் கொண்ட நல்லுறவை மேம்படுத்துகிறது; நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் தொடர்புகளில் தெளிவை மேம்படுத்துகிறது. இது கலாச்சாரங்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்கப் பங்காற்றுகிறது.

நேர்மறையான உடல்மொழி, மற்றவர்களுடன் நல்லுறவையும் நம்பிக்கையையும் வளர்க்க உதவும். மேலும், உடல்மொழி என்பது தகவல் தொடர்புகளின் ஒருங்கிணைந்த ஒன்றாகும்; இது வாய்மொழிச் செய்திகளுக்கு ஆழத்தையும் அர்த்தத்தையும் சேர்க்கிறது. அவ்வாறே, வார்த்தைகளால் மட்டும் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளையும் நோக்கங்களையும் வெளிப்படுத்த இது உதவுகிறது. உடல்மொழியைப் புரிந்துகொள்வதும், திறம்படப் பயன்படுத்துவதும் மேம்பட்ட தகவல்தொடர்பாகும். இத்தகைய வலுவான உறவுகள் நம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கும்.

அண்மைக் காலங்களில் சட்டமன்றத்திலும் அரசியல் மேடைகளிலும் பொதுவெளிகளிலும் அரசியல் தலைவர்களின் உடல்மொழிக் கூறுகளும் வாய்மொழிச் சொற்களும் அருவருக்கத்தக்கவையாக அமைகின்றன. தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்ற அமர்விலே வெளிநடப்புச் செய்தபோது அமைச்சர்களின் உடல்மொழிக் கூறுகளும், அண்மையில் மூத்த அரசியல் தலைவர்களின் சர்ச்சைக்குரிய அநாகரிக மேடைப் பேச்சுகளும், சமநீதி, சமூக நீதி எங்கும் முழக்கம் பெறும் இச்சூழலில், சமத்துவம் மற்றும் பெண்ணிய மாண்பு முன்வைக்கப்படும் அரசியல் தளங்களில் ஆணாதிக்க மனநிலையோடு ஒருவர் கருத்துகளைப் பகிர்வதும் இரு பொருள் கொண்ட அநாகரிகச் சொல்லாடல்களைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.

மாற்றுத்திறனாளிகள், கைம்பெண், திருநங்கை, திருநம்பி, மூன்றாம் பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்கள்... எனப் புதிய சொல்லாடல்கள் மதிப்புமிக்க வார்த்தைகளாகச் சமூகத்தில் உலா வரும் இச்சூழலில், சில அருவருக்கத்தக்க வார்த்தைகள் அரசியல் தளங்களில் எதிரொலிப்பது, இன்னும் சமூகம் விழிப்படையவில்லையோ? அது தன்னை இன்னும் இச்சமூகம் புடமிட்டுக்கொள்ளவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

கழக நிர்வாகிகள், மூத்தவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் செயல்பாடுகள் பிறரைச் சிறுமைப்படுத்துவது போல ஆகிவிடக் கூடாது; பொது இடங்களில் சிலர் நடந்துகொள்வது விமர்சனத்திற்கு உள்ளாகி விடுகிறது. ஆகவே, அனைவரிடத்திலும்நாவடக்கம்என்பது பேணப்பட வேண்டும்என அவ்வப்போது தமிழ்நாடு முதல்வர் தன் கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தி வருவதும் இங்கு நினைவுகூரத்தக்கதே.

நாவடக்கமின்றிப் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் இப்படி வார்த்தைகளை உதிர்ப்பது, ஒரு மனிதனின் மனத்தில் இருக்கும் குரூர வக்கிரத்தின் உச்சக்கட்டம்; இத்தகைய பேச்சுகள் அநாகரிகமானவை; இவை பொதுமக்களிடையே மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றனஎன்னும் எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றும் இங்கே சிந்திக்கத்தக்கதே!

ஆகவேதான், ஐயன் வள்ளுவரும்...

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (குறள் 127)

என்னும் குறளில், ‘ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்; இல்லையேல், அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்திற்குக் காரணமாகிவிடும்என்று எச்சரிக்கிறார்.

தமிழ்மொழி என்பது வெறும் அடையாளம் அல்ல; தமிழ்நாடு என்பது வெறும் மாநிலம் அல்ல; மாறாக, இது இந்தியத் திருநாட்டின் பெருமிதம்; உலக நாடுகளின் உன்னதம்!

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? அவனது சமூக வாழ்வு எப்படி அமைய வேண்டும்? எதற்காகப் பொதுநலம் பேண வேண்டும்? எப்படிச் சுயநலம் தவிர்க்க வேண்டும்? பொதுநலத்தை முன்னிறுத்தி எப்படித் தன்னடக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்? என உலகோருக்கு வழிகாட்டியது இந்தமூத்தகுடி.’ ஆகவே, அறவழி நின்று, மெய்மொழிப் பேசி, நல்வழி வாழ்வதே உன்னத வாழ்வு.

மேலும், உடல்மொழிக் கூறுகளும் வாய்மொழிச் சொற்களும் நமது அன்றாட வாழ்வின் தகவல் தொடர்புகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்வேறு உடல்மொழிக் கூறுகள் மொழியைப் புரிந்துகொள்வதற்கும் கருத்துகளைத் தெளிவுற விளக்குவதற்கும் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.

ஆகவே, சரியான உடல்மொழிக் கூறுகளாலும் வாய்மொழிச் சொற்களாலும் வலுவான உறவுகளை உருவாக்குவோம். நம்மில் தவறான புரிதல்களைத் தவிர்த்திடுவோம்.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்