21-ஆம் நூற்றாண்டு - அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சம், விண்வெளிப் பயணங்கள், செயற்கை நுண்ணறிவு என மானுடம் தன்னை ஒரு நாகரிகமடைந்த சமூகமாகப் பறைசாற்றிக்கொள்ளும் காலம். ஆனால், இந்த ‘நாகரிக’ முகமூடிக்குப் பின்னால், மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமையும், சாக்கடைக் குழிகளில் மனித உயிர்கள் கருகும் அவலமும் இன்றும் தொடர்வது நம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு பெரும் வினாவாகும். இந்திய ஒன்றிய அரசின் அண்மைக்காலத் தணிக்கை அறிக்கைகளும், சமூக ஆய்வுகள் வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களும் நாம் இன்னும் கற்கால மனநிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறோம் என்பதையே தோலுரித்துக் காட்டுகின்றன.
ஒன்றிய
அரசு அண்மையில் வெளியிட்ட சமூகத் தணிக்கை அறிக்கையின்படி (Social Audit 2025), சாக்கடைக்
கழிவுகளைச் சுத்தம் செய்யும்போது நிகழும் மரணங்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை, எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொழிலாளர்கள் பணிபுரிந்ததாலேயே நிகழ்ந்துள்ளன. அவ்வாறே, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த 54 மரணங்களை ஆய்வு செய்ததில், 47 நிகழ்வுகளில் அவர்களுக்கு எவ்வித இயந்திரச் சாதனங்களும் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இறந்த தொழிலாளர்களில் ஐவருக்கு மட்டுமே கையுறைகளும், ஒரே ஒரு நபருக்கு மட்டுமே காலணிகளும் இருந்துள்ளன. மிக முக்கியமாக, 27 நிகழ்வுகளில் அத்தொழிலாளர்களிடம் ஒப்புதல்கூடப் பெறப்படவில்லை.
மேலும்,
1993 முதல் இன்று வரை 1,035 பேர் இத்தகைய அபாயகரமான துப்புரவுப் பணியின்போது உயிரிழந்துள்ளனர். இதில் 948 குடும்பங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல; அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் அநியாயமாகக் கொல்லப்பட்ட மனித உயிர்களின் பட்டியல்.
இந்தியாவில்
துப்புரவுப் பணி என்பது வெறும் தொழிலாளர் நலன் சார்ந்த சிக்கல் மட்டுமல்ல; அது ஆழமாக வேரூன்றிய சாதியக் கட்டமைப்பின் ஒரு நீட்சி என்பதை நாம் புரிந்தாக வேண்டும். ‘துப்புரவுத் தொழிலாளி’
என்ற சொல்லாடலுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இப்பணியைச் செய்யவேண்டும் என்ற எழுதப்படாத விதி, இன்றும் நிலவுவது பேரபத்தமானது.
‘மனுதர்மம்’
போதித்த படிநிலைச் சமூகம், மனிதர்களை அவர்கள் பிறப்பின் அடிப்படையில் ‘தூய்மையானவர்கள்’ என்றும்,
‘தீண்டத்தகாதவர்கள்’ என்றும்
பிரித்து வைத்தது. அந்த இழிவான மனநிலைதான், நவீன காலத்திலும் ஒரு சக மனிதனை மலம்
நிறைந்த குழிக்குள் இறங்கச் சொல்லும் துணிவைத் தருகிறது. சாக்கடைக் குழிக்குள் இறங்குபவன் ‘தீண்டத்தகாதவன்’ என்றும்,
அவனது மரணம் வெறும் செய்தியாகக் கடந்து போகவேண்டிய ஒன்று என்றும் கருதும் மனநிலை நிலவும் வரை, சட்டம் மட்டும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்றத்தையும் தந்துவிடாது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில்
வேற்றுமை யான்’
(குறள்
972)
என்றார்
ஐயன் வள்ளுவர். பிறப்பினால் அனைவரும் சமம்; ஆயினும், செய்கின்ற தொழில்களால் உயர்வு-தாழ்வு வேறுபாடுகள் இல்லை; மாறாக, செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காணமுடியும், காண வேண்டும் என்பதை நாம் உணர்ந்ததாகவேண்டும்.
படித்த
மேதாவிகள் வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலும், அரசு அலுவலகங்களிலும் இன்றும் சாக்கடை அடைப்பை நீக்க இயந்திரங்களைவிட மனிதர்களையே தேடுவது எத்தகைய நாகரிகம்? மனிதக் கழிவுகளைக் கைகளால் அள்ளும் கொடுமை சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், நாட்டின் பல பகுதிகளில் அது
இன்னும் நடைமுறையில் உள்ளதே! குறிப்பாக, கிராமப் புறங்களில் உலர்ந்த கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் பெண்கள் இன்றும் ஈடுபடுத்தப்படுவதும், அவர்கள் மூங்கில் கூடைகளில் மனிதக் கழிவுகளைச் சுமந்து செல்லும் காட்சியும் இந்திய சனநாயகத்தின் மீது பூசப்பட்ட கரி என்பதை மறந்துவிடக்கூடாது.
உத்தரப்
பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்கள் இப்பணியைச் செய்ய மறுத்தால், அவர்கள் ஊரை விட்டு வெளியேற்றப்படுவதும், வன்முறைக்கு ஆளாவதும் தொடர்கதையாகிறது. கல்வி கற்றும் பட்டதாரி இளைஞர்கள் கூடத் தங்கள் சாதியின் காரணமாகத் துப்புரவுப் பணிக்குத் தள்ளப்படும் அவலத்தை, மனித உரிமை கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) அறிக்கை
சுட்டிக்காட்டுகிறது.
“நான்
வங்கியியல் பயின்றவன்; ஆனால், பஞ்சாயத்து நிர்வாகம் என்னைக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய சொன்னது; ஏனெனில், நான் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவன்”என்ற
கைலாஷ் போகர்ஜி போன்ற இளைஞர்களின் வாக்குமூலம் நம் கல்வி முறையையும், சமூக அறத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
2014-ஆம் ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கைலாஷின் நிகழ்வு, இந்தியாவில் கையால் மலம் அள்ளுவதும், அது சாதி அடிப்படையிலான பாகுபாடு தொடர்பானது என்பதையும் தோலுரித்துக் காட்டுகிறது. பல சட்டத் தடைகள்
இருந்தபோதிலும், இந்த மனிதாபிமானமற்ற நடைமுறை இன்றும் தொடர்கிறது
என்பதும், அது சாதிப் படிநிலைகளில் வேரூன்றி உள்ளூர் அதிகாரிகளால் நிலைநிறுத்தப்படுகிறது என்பதும் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்தியாவில்
மலம் அள்ளும் கொடுமையை ஒழிப்பதற்காகப் பல ஆண்டுகளாகப் பல்வேறு
சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. 1993-ஆம் ஆண்டின் மலம் அள்ளுவோர் வேலைவாய்ப்பு மற்றும் உலர் கழிப்பறை கட்டுமானத் தடைச்சட்டம், மலம் அள்ளும் தொழிலைக் குற்றமாக்குவதற்கான முதல் முயற்சியாகும்; இருப்பினும், இது முறையாக நடைமுறைப்படுத்தப்படாதது கவலைக்குரியதே. அவ்வாறே, 2013-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘மனிதக் கழிவுகளைக் கைகளால் அள்ளுதல் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு செய்தல் சட்டம்’
(PEMSR Act) இப்பணியை
முற்றிலும் தடை செய்தது. ஆனால், இன்றும் கள நிலவரம் வேறாக
உள்ளது. அரசு அதிகாரிகள் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்காமல், ஒப்பந்த முறையில் தொழிலாளர்களைத் திரட்டி, அவர்களுக்கு எவ்விதப் பயிற்சியும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் மரணக் குழிகளுக்குள் தள்ளுகின்றனர்.
மேலும்,
2013-ஆம் ஆண்டின் மலம் அள்ளுவோர் மறுவாழ்வுச் சட்டம், அவர்களுக்கான பண உதவி, வீட்டு
வசதி, கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டதுடன், ஒன்றிய அரசு ‘நமஸ்தே’ போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அவை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதே எதார்த்தம்.
குஜராத்தின்
தாரத் நகரில், 23 வயதே ஆன உமேஷ் பாமினியா
சாக்கடையைச் சுத்தம் செய்யும் போது உயிரிழந்தார். அவர் உயிரிழந்த பத்து நாள்களில் அவரது மகன் பிறந்தான். அஞ்சனா என்ற அவருடைய மனைவி தன் கைக்குழந்தையுடன் “என் குழந்தையை இனி எப்படி வளர்ப்பேன்?” என்று கேட்கும் கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. அதேபோல், சென்னையில் தொழிற்சாலை ஒன்றில் சாக்கடை சுத்தம் செய்ய சென்று மூச்சுத்திணறி உயிரிழந்த மோசஸின் மனைவி அன்னம்மா, தன் கணவர் இப்பணியைச் செய்கிறார் என்பதே தெரியாமல் வாழ்ந்திருக்கிறார். “என் பிள்ளைகளிடம் அவர்களின் தந்தை மலக்குழியில் இறந்து போனார் என்று எப்படிச் சொல்வேன்?” என்ற அன்னம்மாவின் கதறல், இந்தச் சமூகம் அந்தத் தொழிலாளர்களுக்கு இழைத்த மாபெரும் துரோகத்தின் சாட்சியே (26 October 2023, BBC News).
நாடெங்கும்
எதிரொலிக்கும் இந்த அவலக் குரல்கள் மறைய, சாக்கடை மற்றும் கழிவுத் தேக்கங்களைச் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது இனி 100 விழுக்காடு நிறுத்தப்படவேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். மேலும், இப்பணியிலிருந்து விடுபடுபவர்களுக்குக் கௌரவமான மாற்றுத்தொழில், கல்வி மற்றும் வீட்டு வசதி வாய்ப்புகளை அரசு வழங்கிடவேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன், தூய்மைப் பணி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கடமை என்ற பிற்போக்குச் சிந்தனையைப் பாடப்புத்தகங்கள் முதல் பொதுவெளிகள் வரை நாம் வேரறுக்கவேண்டும்.
இறுதியாக,
மானுட மாண்பு என்பது அனைவருக்கும் சமமானது; ஒருவர் தன் வயிற்றுப் பிழைப்புக்காகச் சகமனிதனின் கழிவை அள்ளும் நிலையும், நச்சு வாயுவில் மூச்சுத்திணறிச் சாகும் அவலமும் நீடிக்கும் வரை, நாம் நம்மை ‘நாகரிகமடைந்த சமூகம்’ என்று அழைத்துக்கொள்ளும் தார்மிக உரிமையை இழந்துவிடுகிறோம். இவ்வேளையில்,
‘தினம்
மாறும்
உலகில்
நிறம் மாறும்
மனிதர்கள்;
காயங்கள் ஆற
காட்சிகள் மாறவேண்டும்!’
எனும்
புதுக்கவிதைதான் நினைவுக்கு வருகின்றது.
துப்புரவுத்
தொழிலாளர்களின் மரணம் என்பது விபத்தல்ல; அது ஒரு சமூகப் படுகொலை! இந்நிலை மாற, இந்த இழிநிலையைத் துடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒன்றிணைவோம்!
சமத்துவச் சமுதாயம் படைப்போம்!!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
எண்ணும் எழுத்தும் இரு கண் என்பர் - வாழ்வில்
எளிமையும்
தியாகமும் ‘நல்ல கண்ணு’ என்போம்!
தமிழ்நாட்டு
அரசியல் வானில் ஒரு நூற்றாண்டு காலம் அப்பழுக்கற்ற நேர்மையோடும், சமரசமற்ற உறுதிப்பாட்டோடும் சுடர்விட்டுக் கொண்டிருந்த ஒரு மாபெரும் ஒளி அணைந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவு என்பது, ஒரு தனிமனிதரின் முடிவு அல்ல; அது நேர்மையெனும் அறத்தின் ஒரு சகாப்தம் நிறைவுற்ற தருணம்.
1925-ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 26-ஆம் நாள், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தின் செம்மண்ணில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிக்காலத்திலேயே இந்தியத் தேசத்தின் விடுதலைக் கனலை நெஞ்சில் சுமந்தார். தனது 15-வது வயதிலேயே பொதுவுடைமைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, 18-வது வயதில் முறைப்படி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அன்று அவர் ஏந்திய செங்கொடி, அவர் இறுதி மூச்சுவரை ஒருபோதும் தாழ்ந்ததில்லை என்பதே பேருண்மை.
சுதந்திரப்
போராட்டக் காலத்திலும், அதன் பின்னரும் திரு. நல்லகண்ணு அவர்கள் சந்தித்த அடக்குமுறைகள் கல்நெஞ்சையும் கரைக்கக்கூடியவை. 1949-இல் தலை மறைவு வாழ்க்கையில் இருந்தபோது, காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டார். ‘மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடுவோம்’
என்று மிரட்டியபோதும், சக தோழர்களைக் காட்டிக்கொடுக்க
மறுத்த மாவீரன் இவர்!
ஆத்திரமடைந்த
காவல்துறை அதிகாரி, இவரது கையில் விலங்கிட்டு, தலைகீழாகத் தொங்கவிட்டு, மீசையையும் கன்னத்தையும் தீயிட்டுக் கொளுத்திய அந்த வன்முறைச் செயல், இவர் மீசை வளர்க்காததற்கான வரலாற்றுச் சாட்சியானது. நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, தன் இளமையின் ஏழு ஆண்டுகளைச் சிறைக்கதவுகளுக்குப் பின்னே கழித்தபோதும், ‘மக்களுக்காகத் தியாகம் செய்வதில் ஒரு பேரின்பம் உண்டு’ என்று கொண்ட கொள்கையில் பாறையென
உறுதியாக நின்றார்.
“நல்லகண்ணு போன்ற தலைவர்கள் ஒருமுறை கூட தேர்தலில் வெற்றி பெறவில்லையே” என்பது
அரசியல் விமர்சகர்களின் கசப்பான ஆதங்கமாக இருக்கலாம். 1967, 1977 சட்டமன்றத் தேர்தல்களிலும், 1999 மக்களவைத் தேர்தலிலும் களம் கண்டார். ஆனால், வெற்றி கைகூடவில்லை. உண்மையில் தோற்றது நல்லகண்ணு அல்ல; தகுதியான ஒரு தலைவனை அடையாளம் காணத் தவறிய சமூகமே!
சாதியப்
பிடிப்புகளும் பணபலமும் தாண்டவமாடும் தேர்தல் அரசியலில், கொள்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்ட ஒரு துறவிக்கு இடமில்லாமல் போனது காலத்தின் முரண். இருப்பினும், சட்டப்பேரவைக்குச் செல்லாமலேயே தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய பல போராட்டங்களை இவர்
முன்நின்று நடத்தினார்.
எளிமைக்கு
ஓர் இலக்கணம் இவர். இவருடைய எளிய வாழ்க்கை நவீன காலத்து அரசியல்வாதிகளுக்கு ஒரு பெரும் பாடம். இன்று பஞ்சாயத்துத் தலைவர் கூட சொகுசு காரில் வலம் வரும் வேளையில், 13 ஆண்டுகள் ஒரு பேரியக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்தும், ஒரு சிறிய வாடகை வீட்டிலேயே தன் வாழ்நாளைக் கழித்தவர் இவர்.
தனது
80-வது பிறந்த நாளின்போது கட்சித் தொண்டர்கள் அன்பளிப்பாக வழங்கிய ஒரு கோடி ரூபாயை அப்படியே கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர் இவர். 2022-இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ‘தகைசால் தமிழர்’ விருதையும், அதன் பத்து இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பொதுநிதிக்கே வழங்கிய இந்தப் பெருந்தன்மை ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்’ என்ற
சங்கத் தமிழ் வரிகளுக்குச் சான்றாக அமைந்தது.
தோழர்
நல்லகண்ணு அவர்களின் மறைவுச் செய்தி கேட்டதும் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரும் கட்சிப் பாகுபாடின்றித் தங்கள் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தனர். தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின்
அவர்கள் விடுத்த செய்தியில், “எனக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு’
என்று முத்தமிழறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட மகத்தான தலைவர் மறைந்தது பெரும் துயரத்தை அளிக்கிறது” என்று
குறிப்பிட்டுள்ளார். மேலும், “கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை இவர். அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமையே. தமிழினத்தின் ஈடு இணையற்ற தியாகச் சுடரான தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும்”
என்று முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
காங்கிரஸ்
கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, “தமிழ்நாட்டு அரசியலில் அரிதாகிப்போன நேர்மை மற்றும் தூய்மையின் வரலாற்றுச் சாட்சியாகத் திகழ்ந்தவர் நல்ல கண்ணு; அவரது மறைவு சமூக நீதிக்கான போராட்டங்களுக்குப் பேரிழப்பு”
என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, “எங்கள் இயக்கத்தின் இதயம் நின்றுவிட்டது; கடைசி மூச்சு வரை செங்கொடி ஏந்திய ஒரு மாபெரும் போராளியை இழந்து தவிக்கிறோம்” என்று
இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அரசியல்
போராட்டங்களுக்கு அப்பால், அவருடைய வாழ்க்கை இயற்கையோடு இயைந்த போராட்டமாக இருந்தது; தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைக் காப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டார். தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க, 80 வயதைக் கடந்த நிலையிலும் அவரே நேரில் நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடித் தடை பெற்றார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டமாகட்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமாகட்டும், நல்லகண்ணுவின் குரல் எப்போதும் முதல் குரலாக ஒலித்தது.
“பார்வை ஒரு கண்ணில் குறைந்தாலும், அகக்கண் கொண்டு மக்கள் நலனைக் காண்பவர்”
என்று போற்றப்பட்ட நல்லகண்ணுவின் 101 ஆண்டுகாலப் பயணம் இன்று முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவர் விட்டுச் சென்ற நேர்மை, எளிமை, தூய்மை மற்றும் தியாகம் ஆகிய விழுமியங்கள் தமிழ்நாட்டு அரசியலின் திசைக் காட்டியாக என்றும் நிலைத்திருக்கும். அதிகாரத்தின் நிழல்படாத, ஆடம்பரத்தின் வாடை தீண்டாத ஒரு மகத்தான மனிதரைத் தமிழ்நாடு இன்று இழந்து நிற்கிறது. அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கலாம்; ஆனால், அவர் விதைத்த கொள்கைகள் ஆயிரமாயிரம் புதிய நல்ல கண்ணுகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. அவரது உடல் அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்படும் வேளையில், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் அவருக்குச் ‘செவ்வணக்கம்’ செலுத்துகிறது.
இவ்வேளையில்,
‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று’
(குறள் 236)
எனும்
ஐயன் வள்ளுவரின் வாக்கே நம் சிந்தையில் எழுகின்றது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
மானுட நாகரிகம் தன் பரிணாம வளர்ச்சியில் எண்ணற்றத் தொழில்நுட்பப் புரட்சிகளைக் கண்டுள்ளது. சக்கரம் முதல் நீராவி இயந்திரம் வரை, மின்சாரம் முதல் இணையம் வரை ஒவ்வொன்றும் மனித வாழ்வியலை மறுசீரமைத்துள்ளன; அடுத்தடுத்த தலைமுறைகளின் மாற்றங்களால் ஏற்படுகின்ற பரிணாமப் புரட்சியை விதைத்துள்ளன.
ஆனால்,
இன்று நாம் நின்றுகொண்டிருக்கும் ‘செயற்கை நுண்ணறிவு’
(AI - Artificial Intelligence) என்னும் தளம்,
முந்தைய கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் அறநெறி சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும் பல வினாக்களை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, மானுடத்தின் அறநெறி வாழ்வுக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் இன்றைய தேவை இயற்கை நுண்ணறிவா? செயற்கை நுண்ணறிவா? என்ற கோணத்தில் தர்க்கமும் கருத்துப் பரிமாற்றமும் கற்றறிந்தோர் அவைகளில் நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன. ஒருபுறம், பொருளாதார மேம்பாட்டிற்கான ‘மந்திரக்கோலாக’ இது
பார்க்கப்படும் வேளையில், மறுபுறம் மனிதனின் ‘இயற்கை நுண்ணறிவு’
(Natural Intelligence) மழுங்கடிக்கப்படுகிறதா?
என்ற அச்சமும் இயல்பாகவே நம்மில் எழுகிறது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய AI உச்சிமாநாடு,
இந்த விவாதத்திற்குப் புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளது.
பொருளாதார
மேம்பாட்டைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு என்பது தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. அதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. டெல்லியில் நடைபெற்ற ‘கார்னகி-அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண் டேஷன்’ நிகழ்வில் உரையாற்றிய பிரிட்டனின் மேனாள் பிரதமர் ரிஷி சுனக், இந்தியாவின் நிலையை மிகவும் நேர்மறையாகக் கணித்துள்ளார். அதாவது, “இந்தியா செயற்கை நுண்ணறிவில் முன்னிலை வகிப்பதற்கும், அதனைச் சமூகத்தில் பெருமளவில் பயன்படுத்துவதற்கும் மிகச்சரியான நிலையில் உள்ளது” என்றும், “மேற்கத்திய நாடுகளில் AI குறித்த
அச்சமும், வேலைவாய்ப்பு இழப்பு பற்றிய கவலையும் நிலவும் சூழலில், இந்தியாவில் பெரும் வியப்பூட்டும் வகையில் நம்பிக்கையும் உற்சாகமும் இருப்பதை என்னால் காண முடிகிறது”
என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர்
சுட்டிக்காட்டியபடி, இந்தியாவின் ‘எண்ணிமப் பொதுக் கட்டமைப்பு’ (டிஜிட்டல்)
என்பது AI தொழில்நுட்பத்தைக்
கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு செல்வதற்கான ‘பரவலாக்கப் பாதைகளாக’
அமைந்துள்ளன. ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்குத் தொழில்நுட்பம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்தத் தொழில்நுட்பம் எத்தகைய அடித்தளத்தில் கட்டமைக்கப்படுகிறது என்பதே பெரும் கேள்வி.
பொருளாதாரத்
தரவுகளைத் தாண்டி, ஒரு தனி மனிதனின், சமூகத்தின், நாட்டின் ‘அறநெறி வாழ்வு’ என்பது அந்தந்தத் தளங்களில் அதன் நேர்மையிலும், நிர்வாகத் திறனிலும் அடங்கியுள்ளது. டெல்லியில் நடந்தேறிய AI உச்சி
மாநாடு குறித்து ஒன்றிய பா.ச.க.
அரசு பெரும் வெற்றியென முழங்கினாலும், உண்மையில் அம்மாநாடு இந்தியாவிற்கு வழங்கிய பிம்பம் சற்று கவலையளிப்பதாகவே உள்ளது என்கின்றனர் பல தொழில்நுட்ப வல்லுநர்களும் முதலீட்டாளர்களும்.
மூத்த இதழியலாளர் வீர் சங்வி தனது வலைதள பக்கத்தில் (virsanghvi.com, பிப். 19, 2026, 3:35 pm) பதிவிட்டுள்ள
விமர்சனக் கட்டுரையில் இந்த மாநாட்டைத் ‘தலைகுனிய வைத்த நிகழ்வு’ என்று சாடுகிறார்.
செயற்கை
நுண்ணறிவைக் கொண்டாடும் ஒரு மாநாட்டில், அடிப்படை ‘இயற்கை நுண்ணறிவு’
(Natural Intelligence) மற்றும்
பொது நிர்வாகத் திறன் பற்றாக்குறையாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார். மாநாடு நடந்த இடத்தில் நிகழ்ந்த திருட்டுகள், வைஃபை (Wi-Fi) குளறுபடிகள்
மற்றும் ‘டிஜிட்டல் இந்தியா’ என்று முழங்கிக்கொண்டே யூ.பி.ஐ.
(UPI) பரிவர்த்தனைகளை
மறுத்து, கூப்பன்களை வற்புறுத்தியது போன்றவை ஒரு தொழில்நுட்ப வல்லரசிற்கு அழகல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
மிக
முக்கியமாக, ‘கல்கோட்டியாஸ்’ போன்ற
கல்வி நிறுவனங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரோபோ நாயைத் தாங்களே கண்டு பிடித்ததாகக் கூறி ஏமாற்ற முயன்றது, நம் நாட்டின் ‘ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு’ துறையில்
நிலவும் அறநெறி வீழ்ச்சியையே காட்டுகிறது. குறுக்கு வழியில் புகழ்பெறத் துடிக்கும் இத்தகைய மனநிலை, செயற்கை நுண்ணறிவைவிட ஆபத்தானது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அறநெறி
வாழ்வு என்பது சக மனிதனை மதிப்பதில்
தொடங்குகிறது. டெல்லி மாநாட்டின் போது வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், சாதாரண குடிமக்களின் நலனை முற்றிலும் புறந்தள்ளியுள்ளது. சாலைகள் மூடப்பட்டதால் முடங்கிய போக்குவரத்து, ஒரு தொழில்நுட்ப மாநாட்டின் வெற்றியை விடவும் நிர்வாகத்தின் தோல்வியையே உலகிற்குப் பறைசாற்றியது. வீர் சங்வி குறிப்பிட்டது போல, 30 நிமிடப் பயணத்தை 5 மணி நேரமாக மாற்றும் நிர்வாகத் திறமையின்மை ‘நுண்ணறிவு’
என்ற சொல்லுக்கே முரணானது.
செயற்கை
நுண்ணறிவு, தொழிலாளர் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம். ஆனால், சில வேலைகள் மறையும்; பல வேலைகள் மறுவடிவமைப்பு
செய்யப்படும் என்பதே நம் கண்முன் நிற்கும் கள எதார்த்தம். ரிஷி
சுனக் குறிப்பிட்டது போல, இந்த மாற்றத்தைத் தடுப்பது மட்டுமல்ல ஓர் அரசின் பணி! மாறாக, மக்கள் புதிய பணிகளைத் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ள ‘மறுதிறன்’
பயிற்சியும், கல்விச் சீர்திருத்தமும் வழங்கவேண்டும் என்பதே!
இங்கேதான்
அறநெறி சார்ந்த கேள்வி எழுகிறது. தரம் குறைந்த கல்வி நிறுவனங்கள் விளம்பரங்களை மட்டுமே நம்பி அப்பாவிப் பெற்றோர்களை ஏமாற்றிப் பணம் ஈட்டும் சூழலில், உண்மையான ‘அறிவாற்றல் மேம்பாடு’
என்பது பலருக்கு எட்டாக் கனியாகவே இருக்கும். கல்வி என்பது வெறும் வணிகமாக மாறும்போது, அங்கு இயற்கை நுண்ணறிவு மரித்துப்போகிறது.
ரிஷி
சுனக் தனது உரையில் ஓர் ஆழமான தத்துவார்த்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். கூரை மேலிருந்து முழங்கப்பட வேண்டிய பேருண்மை அது. அதாவது, “செயற்கை நுண்ணறிவிடம் மிகுதியான ‘அறிவு’
(Knowledge) இருக்கலாம்;
ஆனால், அறிவு என்பது ‘ஞானம்’
(Wisdom) அல்ல
என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது”என்கிறார்
ரிஷி சுனக். இது அறிவை விடவும் ஞானமே மிக
முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. ஆகவே, தொழில்நுட்ப வளர்ச்சியின் மையத்தில் எப்போதும் மனிதனின் முடிவெடுக்கும் திறனே இருக்க வேண்டும்.
இயற்கை
நுண்ணறிவு என்பது தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில், சரியான முறையில் அறநெறிக் கோட்பாடுகளுடன் அந்தத் தகவலைப் பயன்படுத்துவதாகும். ஓர் இயந்திரம் தரவுகளை ஆராயலாம்; ஆனால், அதனால் ‘அன்பு’ செலுத்த முடியாது; ‘இரக்கம்’ காட்ட முடியாது; ‘நேர்மை’ பேண முடியாது; ‘ஞானத்துடன்’ முடிவெடுக்க
முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
அறிவு
என்பது கற்றல், அனுபவம் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் கிடைப்பது. ஒரு மருத்துவர் நோயைக் குணப்படுத்தும் முறையை அறிந்திருப்பது அறிவு; ஒரு பொறியாளர் விண்ணை முட்டும் கட்டடத்தை எழுப்பும் நுட்பத்தைப் புரிந்திருப்பது அறிவு; ஒரு கணினி வல்லுநர் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவது அறிவு. இவை அனைத்தும் உலகியல் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவையே! அறிவு என்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதைக்கொண்டு அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றவும் முடியும்; அதே கத்தியைக் கொண்டு உயிரைப் பறிக்கவும் முடியும். ஆனால், ஞானம் என்பது வெறும் மூளை சார்ந்தது அல்ல; மாறாக, அது இதயம் மற்றும் அறம் சார்ந்தது. ஒரு செயலால் தனக்கு இலாபம் கிடைக்குமா? என்று பார்ப்பது அறிவு; அந்தச் செயலால் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுமா? என்று சிந்திப்பது ஞானம். அறிவு ‘எப்படி?’ (How) என்பதை
விளக்கும்; ஞானம் ‘ஏன்?’ (Why) என்பதை
உணர்த்தும்.
எனவே,
மானுடத்தின் எதிர்காலம் என்பது செயற்கை நுண்ணறிவைத் தூற்றுவதிலோ அல்லது இயற்கை நுண்ணறிவை முற்றிலுமாக மறப்பதிலோ இல்லை; மாறாக, இவை இரண்டையும் ‘அறநெறி’ என்னும் நூலால் இணைப்பதிலேயே உள்ளது. பொருளாதார மேம்பாட்டிற்குச் செயற்கை நுண்ணறிவை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம்; ஆனால், அந்தப் பொருளாதாரத்தை வழிநடத்தும் ‘அறநெறி’ என்பது மனிதனின் இயற்கை நுண்ணறிவிலிருந்தே வரவேண்டும்.
இதுவே
டெல்லி மாநாடு நமக்குக் கற்றுத்தந்த பாடம். எவ்வளவு சிறந்த தொழில்நுட்பம் கைவசம் இருந்தாலும், அடிப்படை நேர்மையும், நிர்வாகத் திறனும், குடிமக்கள் மீதான அக்கறையும் இல்லையெனில் அது வெறும் ‘செயற்கை’ அலங்காரமாகவே முடியும். மானுடத்தின் அறநெறி வாழ்வு சிறக்க, இயந்திரத்தின் ‘அறிவை’ விடவும், மனிதனின் ‘ஞானமே’ இன்றைய தலையாயத் தேவை.
தரவுகள்
யாவும் அறிவாகும் - அதைத்
தர்மம்
காக்கப் பயன்படுத்துதல் ஞானமாகும்!
பெருகும்
கணினி அறிவிலும் - என்றும்
பேணும்
மனிதநேய ஞானமே மேலானது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில், சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க முண்டாசுக் கவிஞன் பாரதி விடுத்த அழைப்பு உன்னதமானது. சாதி, இன, மத வேறுபாடின்றி அனைவரும் ஒரே குலம், ஒரே இனம் என்று முழங்கிய அக்கவிஞன்,
‘எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும்
இந்திய மக்கள்;
எல்லாரும்
ஓர்நிறை, எல்லோரும் ஓர்விலை,
எல்லாரும்
இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும்
இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும்
இந்நாட்டு மன்னர் - வாழ்க!’
என்று
பாடினான். பாரதியின்
இக்கனவை நனவாக்கும் பெரும் பொறுப்பு நம் கல்வி நிறுவனங்களுக்கே பெரிதும் உண்டு. சாதி, மதம், இனம் கடந்த ஒரு சமத்துவக் கல்விச் சூழலே ஒரு தேசத்தின் உண்மையான வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இருப்பினும், நவீன இந்தியாவின் உயர் கல்வி வளாகங்கள் அவ்வப்போது சாதியப் பாகுபாடுகளின் நிழலில் சிக்குவது ஒரு கசப்பான எதார்த்தமாகவே நீடிக்கிறது.
இந்தப்
பாகுபாடுகளைக் களையும் நோக்கில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்த ‘2026-ஆம் ஆண்டு புதிய விதிமுறைகள்’ தற்போது
ஒரு மிகப்பெரிய சட்ட மற்றும் அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு, இந்தியக் கல்வித்துறையில் நிலவும் ஆழமான சமூக முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்த
விதிமுறைகளை மேலோட்டமாகப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இவை ‘தெளிவற்றவை’ என்றும்,
‘தவறாகப் பயன்படுத்தப்படக்கூடியவை’ என்றும்
தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்துப்படி, இத்தகைய விதிகள் ஒரு நுணுக்கமான சட்ட வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, இவை சமூகத்தில் தேவையற்ற கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், ஒரு தகுதிவாய்ந்த நிபுணர் குழுவின் மூலம் இந்த விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த
சனவரி 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தப் புதிய விதிமுறைகள், உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யப் பல கட்டமைப்பு மாற்றங்களை
முன்மொழிந்தன. அதன்படி, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் புகார்களைத் தீர்க்கச் ‘சம வாய்ப்பு மையங்களை’ நிறுவவேண்டும்
என அறிவுறுத்தியுள்ளது.
மேலும்,
தடையின்றி (24 x 7) செயல்படும் உதவி எண்கள், சமத்துவக் குழுக்கள் மற்றும் உயர்மட்டக் கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதன் மூலம் ‘பாதுகாப்பான மற்றும் பாகுபாடற்ற வளாகங்களை’
உருவாக்குவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறே, புகார்களைப் பெற்றவுடன் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் நடவடிக்கை எடுத்து, அது குறித்த ஆண்டறிக்கையை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள், இந்திய அரசமைப்பின் சமத்துவக் கோட்பாடுகளுக்கும், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் நோக்கங்களுக்கும் ஒத்திருப்பதாக ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும்,
இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டவுடனே, அதன் மொழி மற்றும் வடிவமைப்பு குறிப்பாக, பட்டியல் சாதி, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான பாதுகாப்புகள் எனும் சொல்லாடல்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்படுவதாக எதிர்ப்புகள் எழுந்தன. நாடு முழுவதும் போராட்டங்களும், அரசியல் கொந்தளிப்புகளும் வெடித்தன. குறிப்பாக, ஆளும் ஒன்றிய பாரதிய சனதா கட்சியின் சில பொறுப்பாளர்கள் இந்த விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தங்கள் பதவிகளை விட்டு விலகியிருப்பது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எதிர்ப்பாளர்களின்
முதன்மையான வாதம், யு.ஜி.சி.யின் இறுதி வரைவு அறிக்கையிலிருந்து ‘பொய்ப் புகார்கள்’
(False complaints) குறித்த பிரிவு நீக்கப்பட்டதுதான். தொடக்க வரைவில், பாகுபாடு குறித்து யாராவது பொய்ப் புகார் அளித்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இறுதி விதிகளில் இப்பிரிவு நீக்கப்பட்டது, உயர் சாதி அமைப்புகளிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ‘மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்’ எனும்
மூத்தோர் சொல்தான் நினைவுக்கு வருகின்றது. இந்த விதிகள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர்.
சென்னை
I.I.T. மற்றும் பல உயர்கல்வி நிறுவனங்களில்
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் நிர்வாகத்திலும், பேராசிரியர் பணியிடங்களிலும் மேலோங்கி
இருப்பதும், அங்கு மற்ற சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் ஏன்... பேராசிரியர்களும் சாதியப் பாகுபாடுகளைச் சந்திப்பதும் அன்றாடச் செய்தியாவதை நாம் அறிவோம்.
இத்தகைய
சூழலில், கல்வி வளாகங்களில் சமத்துவத்தை நிலைநாட்ட முனையும் ஒரு சட்டமியற்றல், ஏன் இத்தனை போராட்டங்களுக்கு உள்ளாகிறது? என்பது பெரும் ஆய்வுக்குரியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வளாகங்களில் சந்திக்கும் நுட்பமான பாகுபாடுகளைத் தடுப்பது அரசின் கடமை. அதே வேளையில், எந்தவொரு சட்டமும் ஒரு சார்புடையதாகவோ அல்லது பழிவாங்கும் கருவியாகவோ மாறிவிடக்கூடாது என்பதில் நீதித்துறை உறுதியாக உள்ளதும் வரவேற்கத்தக்கதே.
ஆயினும்,
உச்ச நீதிமன்றத்தின் தடை என்பது இச்சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது அல்ல; மாறாக, இச்சட்டத்தின் வடிவமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்துவதில் இருக்க வேண்டிய தெளிவின்மைக்கான எச்சரிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
ஆகவே,
இனிவரும் காலங்களில், உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த நிபுணர் குழு இச்சட்டத்தை எவ்வாறு மறுசீரமைக்கப் போகிறது என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. சமத்துவத்தை உறுதி செய்யும் அதே வேளையில், தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், பொய்ப் புகார்கள் தவிர்க்கப்படுவதையும் அவர்கள் உறுதி செய்யவேண்டும் என்றே சட்ட வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக,
விதிமுறைகளில் உள்ள ‘பாகுபாடு’
எனும் சொல்லிற்கான தெளிவான சட்ட வரையறை கொடுக்கப்படவேண்டும் என்றும், புகார்களை விசாரிக்கும் குழுக்களில் அனைத்துத் தரப்புப் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்ய வேண்டுமென்றும், பொய்ப் புகார்களைத் தடுக்கவும், அதேசமயம் உண்மையான புகார்களைப் பதிவு செய்ய அஞ்சுவோருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் சமநிலையான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுள்ளன.
இறுதியாக,
மண்ணின் மாண்பு என்பது நிலத்தில் இல்லை; அந்த நிலத்தில் பயிலும் மாணவர்களின் மனங்களில் இருக்கிறது. கல்வி நிறுவனங்கள் சாதியத்தின் வேர்களிலிருந்து விடுபட்டு, அறிவின் ஒளியால் ஒளிரவேண்டும். ‘2026 யு.ஜி.சி.’
விதிகள் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் சில அடிகள்! இந்த விதிகள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தலையீடு, ஒரு நீதியான மற்றும் முறையான சட்டக் கட்டமைப்பை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் என்று நம்புவோம். சட்டம் என்பது தண்டனைக்கான கருவி மட்டுமல்ல, அது சமூக மாற்றத்திற்கான ஒரு மென்மையான ஊன்றுகோலாகவும் இருக்க வேண்டும்.
‘சமூக நீதி’ என்பது ஒரு தரப்பினரின் வெற்றியும் மற்றொரு தரப்பினரின் தோல்வியும் அல்ல; மாறாக, அது ஒட்டுமொத்த தேசமும் இணைந்து முன்னேறும் ஒரு கூட்டுப் பயணமே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு
அல்ல பிற’
(குறள்: 61)
என்ற
வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு செல்வங்கள், பதவிகள் என ஒருவன் அடையும்
மற்ற எல்லாப் பேறுகளையும்விட, நல்லொழுக்கம் கொண்ட, அறிவில் சிறந்த குழந்தைகளைப் பெறுவதே இல்வாழ்க்கையின் தலையாயப் பேறு என்கிறது. ஆகவே, ஒரு சமூகத்தின் ஆகச் சிறந்த செல்வமாகத் திகழ்வது அந்தச் சமூகத்தின் வருங்காலத் தூண்களாகிய இளைய தலைமுறையினரே!
ஆனால்,
அண்மைக்காலமாக தமிழ்நாடு முதல் டெல்லிவரை கல்விக்கூடங்களில் அரங்கேறி வரும் மாணவர் தற்கொலைச் சம்பவங்கள், அச்சமூகத்தின் ஆன்மாவை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. பசுமையான புல்வெளியில் படரவேண்டிய கொடிகள், பூத்துக்குலுங்கும் முன்பே கருகி உதிர்வதுபோல, நமது கல்வி நிலையங்கள் இன்று மாணவர்களின் மன அழுத்தக் கூடாரங்களாக
உருமாறி வருவது வேதனைக்குரிய முரணாகும்.
ஊடகங்களில்
கவனம்பெறும் அன்றாடச் செய்திகளும், அண்மைக்காலப் புள்ளி விவரங்களும் நம்மைப் பேரதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. 2025, 2026-ஆம் ஆண்டுகளில் பதிவான நிகழ்வுகள், கல்வி என்பது அறிவுத்தேடல் என்பதையும் கடந்து, ஓர் உயிர்வாழும் போராட்டமாக மாறியுள்ளதைக் காட்டுகின்றன.
டெல்லியில்
புனித கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆசிரியர்களின் மனரீதியான தொல்லை தாங்காது தற்கொலை செய்துகொண்டதும், ஜெய்ப்பூரில் நான்காம் வகுப்பு பிஞ்சு பாலகன் சக மாணவர்களின் ஏளனத்தாலும்,
ஊழியர்களின் அலட்சியத்தாலும் உயிரை மாய்த்துக் கொண்டதும் அதிகார வர்க்கத்தின் பிடியில் சிக்கிய மழலைகளின் அவலத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
இத்தகைய
துயரங்களில் தமிழ்நாட்டின் தளிர்கள் தந்த தழும்புகள் மிகவே கொடியவை. கடந்த மாதம், 2026 சனவரியில் சென்னையில் 15-வது மாடியிலிருந்து குதித்த பொறியியல் மாணவர் முதல், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 12-ஆம் வகுப்பு மாணவர் (சனவரி 6, 2025) மற்றும் திருச்சி - துவாக்குடியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி விடுதியில் (ஆகஸ்டு, 2025) தற்கொலை செய்துகொண்ட 12-ஆம் வகுப்பு மாணவர் வரை, இவர்களின் மரணம் எழுப்பும் ஒரே கேள்வி: ‘மதிப்பெண் பட்டியல்கள் மனித உயிரை விட மதிப்புயர்ந்தவையா?’ என்பதுதான்.
இவ்வரிசையில்,
கல்வி அறிவில் சிறந்த நமது அண்டை மாநிலமான கேரளமும் இதற்கு விதிவிலக்கல்ல. கொச்சியில் 26-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன், சக மாணவர்களின் ‘ராகிங்’ கொடுமைக்குப்
பலியானது சமூக விலகல் எவ்வளவு கொடியது என்பதை உணர்த்துகிறது.
தேசியக்
குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2023-ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியாவில் ஒரே ஆண்டில் 13,892 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிடுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத உச்சம். இதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அவை தனிப்பட்ட காரணங்கள் அல்ல; மாறாக, கட்டமைக்கப்பட்ட சமூகக் காரணங்களே என்பது புலப்படுகிறது.
குறிப்பாக,
ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமையையும் வெறும் மூன்று மணி நேரத் தேர்வில் அடக்கிப் பார்க்கும் நமது கல்வி முறை, அவர்களைத் தோல்வியைக் கண்டு அஞ்சும் கோழைகளாக்குகிறது. அவ்வாறே, ‘என் பிள்ளை மருத்துவராகவோ, பொறியாளராகவோ மட்டுமே ஆகவேண்டும்’ என்ற
பெற்றோரின் பிடிவாதம் மாணவர்களின் கனவுகளை நசுக்குகிறது.
இத்தகைய
வெளிப்புற அழுத்தத்தில் ‘மனச் சிதைவு’ கொள்ளும் நம் குழந்தைகளை நெறிப்படுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் அவர்களை ஆற்றல்படுத்துவதும் பெற்றோர் மற்றும் பள்ளிகளைக் கடந்து நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். ஆயினும், இதில் முன்னிற்பவர்கள் பள்ளிகளில் பணிபுரியும் மனநல ஆலோசகர்களே! ஆனால், இன்று அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது கவலைக்குரியது. மீட்டா செங்குப்தா எனும் கல்வியாளர் கூறுவது போல, 800 மாணவர்களுக்கு ஓர் ஆலோசகர் என்பது ஒரு ‘பெருந்தொற்று’ காலத்தின்
அவல நிலையே!
அதிகமான
வீட்டுப்பாடம், படிப்பின் மீதான வெறுப்பு, குடும்ப எதிர்பார்ப்பு, ஆசிரியர்களின் கண்டிப்பு, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் பாலியல்
தொந்தரவுகள், தனிமைப்படுத்தப்படுதல், வெறுமை உணர்வு, வெறுப்புணர்வு, கேலி - கிண்டல் என ஏளனங்களைச் சந்திப்பது,
மறைமுகமாய் இன்றும் தொடரும் ‘ராகிங்’,
ஆரோக்கியமற்ற அல்லது ஏமாற்றம் கண்ட நட்பு எனப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும்,
இன்றைய இணையதள விளையாட்டு அடிமைத்தனம், மேலைநாட்டுக் கலாச்சார மோகம் என்பதும் தற்கொலைக்கான காரணிகளாக அமைவதைக் கேள்வியுறும்போது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியப்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றும் ஷாமிகா ரவி மற்றும் உளவியல் நிபுணர் டாக்டர் மிமான்சா சிங் ஆகியோர் வலியுறுத்துவது போல, ‘கல்வி என்பது வெறும் பாடத்திட்டம் சார்ந்தது அல்ல; மாறாக, அது மனநலம் சார்ந்தது! ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் பாடங்களை ஒப்புவிப்பவர்கள் அல்லர்; மாறாக, மாணவர்களின் மனக் குமுறல்களைக் கண்டறியும் ’முதல் நிலை உதவியாளர்களாக’ இருக்கவேண்டும்.
மாணவன் உதவி கோரும் சிறு சைகையைக் கூட கவனிக்கத் தவறினால், அது ஒரு பேரழிவிற்கு வழிவகுக்கும்’ என்பதை
நாம் மறந்துவிடக் கூடாது.
இத்தகைய
சூழலில், காரிருளில் சில மின் மினிப் பூச்சிகளாய் சில பள்ளிகள் முன்னெடுக்கும் முயற்சிகள் நம்பிக்கை அளிக்கின்றன; அவை பெரிதும் பாராட்டத்தக்கவையே! சில பள்ளிகளில் ‘படி பெஞ்ச்’
(Buddy Bench))
எனும் முறை சக வயது - வகுப்பு
மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், இணக்கமாகப் பயணிக்கவும் கற்றுத்தருகிறது. அவ்வாறே, சில பள்ளிகளில் ‘கவனமாகக் கையாள்வோம்’ (Handle with Care) என்ற
குறிப்பு மூலம் பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து செயல்படும் முறையும் பாராட்டுக்குரியது.
மேலும்,
டெல்லி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஜீரோ பீரியட்’
(Zero Period)
மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள், வெளிப்படையான உரையாடலுக்கு வித்திடுகின்றன. அவ்வாறே, ஒன்றிய அரசுப்பள்ளிகளில் ‘மனோதர்ப்பன்’ மற்றும்
‘டெலி-மானஸ்’ போன்ற திட்டங்கள் இருந்தாலும், அவை கடைக்கோடி மாணவரையும் சென்றடைவதை நாம் உறுதி செய்யவேண்டும்.
இறுதியாக,
இம்மானிடப் பிறவியின் மகத்துவமே அதன் வளர்ச்சிப் பாதையில்தான் மிளிர்ந்து நிற்கிறது! இங்கே, ஒரு மாணவனின் தற்கொலை என்பது ஒரு தனிநபர் தோல்வியல்ல; மாறாக, அது ஒரு சமூகத்தின், ஒரு கல்வி முறையின், ஒரு குடும்பத்தின் தோல்வி. மதிப்பெண்களைக் காட்டிலும் மாணவர்களின் மன வைராக்கியத்தையும், தோல்விகளை எதிர்கொள்ளும்
பக்குவத்தையும் வளர்ப்பதே நமது உண்மையான கல்வியாக இருக்க வேண்டும். ‘வாழ்க்கை என்பது ஒரு தேர்வு அல்ல; அது ஒரு கொண்டாட்டம்’ என்பதை
இளைய உள்ளங்களுக்கு நாம் உணர்த்திட வேண்டும்.
ஆசிரியர்,
பெற்றோர் மற்றும் அரசு என முத்தரப்பினரும் இணைந்து, மாணவரின்
மனநலனை ஒரு ‘கூட்டுப் பொறுப்பாக’
ஏற்றால் மட்டுமே, இந்தத் தற்கொலைப் பெருந்தொற்றிலிருந்து நம் வருங்காலத் தூண்களைக் காக்க முடியும்.
நமது
குழந்தைகள் நமது எதிர்காலம்! அவர்களின் சிரிப்பிலும் கனவுகளிலும்தான் நாளைய உலகின் ஒளி நிறைந்துள்ளது. அவர்களைப் பாதுகாப்பது நம் அனைவரின் தார்மிகக் கடமை! விழிப்புணர்வு
என்பது வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு வகுப்பறையிலும், ஒவ்வொரு வீட்டிலும் அன்பாகப் பரிணமிக்கவேண்டும்.
நம்
இளந்தளிர்களைக் காப்போம்;
அதுவே
நம்
சமூகத்தின் கடமையென ஏற்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
ஒவ்வோர் ஆண்டும் இந்திய ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்படும் மத்திய நிதிநிலை அறிக்கை என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு வரைபடம் என்றும், இந்தியாவின் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஆவணம் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால்,
2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை உற்றுநோக்கினால் இது ‘மக்களுக்கானது’ என்பதை
விட, ‘மன்னர்களுக்கானது’ (கார்ப்பரேட்
நிறுவனங்கள்) என்பது போலவே காட்சியளிக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சில தனிநபர்களின் கைகளில் குவிக்கப்படுவதையும், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் நசுக்கப்படுவதையும் இந்த நிதிநிலை அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது.
குறிப்பாக,
மக்களும், அம்மக்கள் வாழும் இவ்வுலகும் அழிந்தாலும் கவலையில்லை; பணம் சேர்ப்பதொன்றே குறி என்று இயங்கும் மிகப்பெரிய முதலீட்டாளர்களும்,
பெரிய வணிக நிறுவனங்களைக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கல்லாவை நிரப்புவதற்கான ஒரு தந்திரமான ஆவணமாகவே இது காட்சியளிக்கிறது. எனவேதான், எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, “இந்த நிதிநிலை அறிக்கை பிரதமரின் நண்பர்களான அதானி மற்றும் அம்பானிக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு பரிசுப் பெட்டி” என்றும், “இதில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தவிக்கும் இளைஞர்களுக்கோ, விலையேற்றத்தால் தவிக்கும் ஏழைகளுக்கோ எதுவுமில்லை” என்றும்
கடுமையாகச் சாடியுள்ளார்.
நாட்டின்
ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் ‘K-வடிவ’ பாதையில் பயணிக்கும் வேளையில், இந்த நிதிநிலை அறிக்கை விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பெருமுதலாளிகளின் நலன்களையே தாங்கிப்பிடிக்கிறது. மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழ்நாடு போன்ற வளர்ச்சி சார்ந்த மாநிலங்களைப் புறக்கணிப்பதும், கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பதுமான, சனநாயகத்திற்கு எதிரான முகத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்தியாவின்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது பெரிய பங்களிப்பை வழங்கும் மாநிலம் நம் தமிழ்நாடு. ஆயினும், ஒன்றிய பா.ச.க.
அரசு தமிழ்நாட்டை ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே கடந்த 12 ஆண்டுகளாக அணுகுகிறது என்பதற்கு இந்த நிதிநிலை அறிக்கையும் மற்றொரு சான்று. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி வேறாக இருப்பதாலேயே, மாநிலத்தின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன.
சென்னை
மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான நிதி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முழுமையான ஒதுக்கீடு, பேரிடர் நிவாரண நிதி என தமிழ்நாடு விடுத்த எந்த ஒரு
கோரிக்கையும் இந்த நிதிநிலை அறிக்கையில் செவிமடுக்கப்படவில்லை. ‘தமிழ்நாடு இந்தியாவின் வரைபடத்தில் இல்லையோ?’ என்று ஐயுறும் அளவிற்குப் புறக்கணிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆகவேதான்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ள ஒன்றிய பா.ச.க.
அரசு, தேர்தலில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்தே இந்த வஞ்சனையைச் செய்கிறது. மாநில சுயாட்சியை ஒடுக்கும் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு ‘வெற்று அறிவிப்பு’
ஆவணம்” என்று
கடுமையாக விமர்சித்துள்ளார். அவ்வாறே, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், “இரயில்வே திட்டங்களில் தென்னிந்தியா குறிப்பாக, தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது; இது நாட்டின் நிதிநிலை அறிக்கை அல்ல; மாறாக, பா.ச.க.-வின் அரசியல் நிதிநிலை அறிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து ‘கார்ப்பரேட்மயம்’ ஆக்கப்பட்டு
வருவதால் நாளைய நிலைகுறித்த எண்ணங்கள் பெரும் கவலையளிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் பெருநிறுவனங்களுக்கான திட்டங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி.
மற்றும் பண மதிப்பிழப்பின் பாதிப்பிலிருந்து
இன்னும் மீளமுடியாமல் விழிபிதுங்கி நிற்கும் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வட்டிச்சலுகையோ, கடன் தள்ளுபடியோ இந்த நிதிநிலை அறிக்கையில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
நாட்டில்
குடிமக்களின் பொருளாதார இயக்கத்தில் முற்றிலும் முரண் ஓங்கி நிற்கிறது. ஒட்டுமொத்தச் செல்வமும் ஒரு விழுக்காட்டு மக்களிடமே குவிந்துகிடக்கும் வேளையில், எஞ்சியுள்ள 99% மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவிக்கின்றனர். கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்ட போதிலும், ஏழைகள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் மீதான மறைமுக வரிகள் குறைக்கப்படவே இல்லை. ஆகவேதான், தொல். திருமாவளவன், “இது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளில் ஒரு பகுதியைக்கூட ஏழை விவசாயிகளுக்கு வழங்க இவர்களுக்கு மனமில்லை”
என்று சாடியுள்ளார்.
இந்தியாவின்
ஒட்டுமொத்தக் கடன் சுமையும் இன்று அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. 2026-ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, நாட்டின் கடன் - ஜி.டி.பி.
விகிதம் சுமார் 55.6 விழுக்காடாக உள்ளது. அரசு வாங்கும் கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே நிதிநிலை அறிக்கையின் பெரும்பகுதி செலவிடப்படுகிறது. ‘வருமானம் இல்லை; ஆனால், கடன் மட்டும் மலைபோல உயர்கிறது’
என்பதுதான் இன்றைய இந்தியாவின் எதார்த்த நிலையாக உள்ளது. இந்தக் கடன்சுமை எதிர்காலத் தலைமுறையினரின் தோள்மேல் சுமத்தப்படும் பெரும் பாரமாகும்.
இன்று
இந்திய மண்ணில் பாமரன் படும்பாடு, பெரும்பாடு! ஒருபுறம், சிலிண்டர் விலை உயர்வு; மறுபுறம், பெட்ரோல், டீசல் விலையேற்றம். நிதி நிலை அறிக்கையில் இதற்கான எந்தவொரு தீர்வும் இடம்பெறவில்லை. தனிநபர் வருமான வரி விகிதத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாதது நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆகவே, நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகளின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவது, கிராமப் புற ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
பொருளாதாரம்
வளர மக்கள் பொருள்களை வாங்கவேண்டும். ஆனால், இன்று
நுகர்வில் சரிவு ஏற்பட்டுள்ளது. வருமான வரி அடுக்கில் பெரிய மாற்றங்கள் இல்லாததால், நடுத்தர வர்க்கத்தினரின் கையில் செலவு செய்யப் பணம் இருப்பதில்லை.
இந்நிலையைக்
கூர்ந்து நோக்குகின்ற பொருளாதார வல்லுநர்கள், “இந்த நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட் வரிக்குறைப்பு மற்றும் சலுகைகள் மேல்நோக்கிய கோட்டை வலுப்படுத்துகின்றன; ஆனால், ஏழைகளுக்கான மானியக் குறைப்பு கீழ் நோக்கிய கோட்டை மேலும் பள்ளத்தில் தள்ளுகிறது” என்கின்றனர்.
மேலும், ஒன்றிய அரசு வசூலிக்கும் ‘செஸ்’ வரிகள் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இந்தப் பட்ஜெட்டில் ‘செஸ்’ வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன; இது மாநிலங்களின் நிதிச் சுயாட்சியைப் பறிக்கும் செயல் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அவ்வாறே,
கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடும் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளது. இவ்வேளையில்...
‘எங்கள் வீட்டில்...
எரியும்
அடுப்பில் எண்ணெய் இல்லை;
எங்கள்
தலையிலும் எண்ணெய் இல்லை!
பிறகே
காரணம் அறிந்து கொண்டேன்...
எங்களை
ஆள்பவர்கள் தலையில்
எதுவுமே
இல்லையென்று!’
எனும்
புதுக்கவிதை வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.
இன்றைய
ஒன்றிய அரசோ பொருளைச் சேர்ப்பதில் காட்டுகின்ற ஆர்வமும் திட்டமும் சூழ்ச்சியும், அதை முறையாகப் பகிர்ந்தளிப்பதில் காட்டுவதில்லை. மாற்றாந்தாய் மனநிலையில் பாரபட்சமே காட்டுகிறது. தன் விருப்பத்திற்கு இணங்கும் மாநிலங்களுக்கு வாரி வழங்குவதும், உரிமைக் குரல் எழுப்பும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பட்டினி போடுவதும் எந்த விதத்தில் அறமாகும்?
பட்ஜெட்
என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல; அது மக்களின் நம்பிக்கை. ஆனால், 2026-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, பெருநிறுவனங்களின் கல்லாவை நிரப்பும் ஒரு கருவியாகவே உள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் இந்தப் போக்கு இந்தியச் சனநாயகத்திற்கு நலமானதல்ல. மாநிலங்களின் பங்களிப்பை அங்கீகரிக்காத எந்த ஒரு நிதிநிலை அறிக்கையும் முழுமையானதாக இருக்க முடியாது.
இறுதியாக,
தமிழ்நாட்டைப் புறக்கணிப்பது என்பது வெறும் அரசியல் இலாப-நஷ்டம் அல்ல; அது ஒரு தேசியக் குற்றம். கார்ப்பரேட் முதலாளிகளின் கைத்தடியாகச் செயல்படுவதை நிறுத்தி விட்டு, பாமர மக்களின் பசி தீர்க்கும் திட்டங்களை அரசு முன்னெடுக்காதவரை இத்தகைய நிதிநிலை அறிக்கைகள் காகிதப் பூக்களாகவே இருக்கும். அவை மலர்ந்திருக்கும்; ஆனால், மணமிருக்காது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்