இந்தியா இன்று உலகப் பொருளாதார அரங்கில் ஒரு மாபெரும் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ‘அடுத்த பத்தாண்டுகள் இந்தியாவின் பத்தாண்டுகள்’ என்று உலகளாவிய நிதிநிறுவனங்கள் முழங்கி வருகின்றன. ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் பொருளாதாரம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வருவது, புவிசார் அரசியலில் நமக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.
ஆனால், இந்தக் கவர்ச்சிமிகு எண்களுக்குப் பின்னால், ஒரு சாதாரண இந்தியனின் சட்டைப் பையில் இருக்கும் வருமானம் என்ன? என்பதும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) எகிறும்போது, தனிநபர் வருமானம் ஏன் இன்னும் தரைமட்டத்திலேயே இருக்கிறது? என்பதும் அதிர்ச்சி தரும் கேள்விகளே! பெருமை பாராட்டும் இந்தியாவின் வளர்ச்சி குறித்த பிம்பத்தில் இந்தக் கேள்விகள் கரும் புள்ளிகளாகவே தொடர்கின்றன.
உலகளாவிய
நாணய நிதியத்தின் (IMF) 2025-ஆம்
ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் பெயரளவு GDP நான்கு டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. மேலும், வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் நாம் ஏற்கெனவே மூன்றாவது இடத்தில் வலுவாகவே இருக்கிறோம். ஆனால், அதே IMF தரவுகள்,
இந்தியாவின் தனிநபர் வருமானம் சுமார் 2,818 டாலர்கள் மட்டுமே என்ற மற்றொரு கசப்பான உண்மையையும் பதிவுசெய்கின்றன.
ஒப்பிட்டுப்
பார்த்தால், சீனா 13,300 டாலர்களுடனும், வளர்ந்த நாடுகள் 40,000 டாலர்களுக்கும் அதிகமான தனிநபர் வருமானத்துடனும் முன்னிலையில் உள்ளன. ஒரு நாட்டின் மொத்த வருமானம் உயரும்போது, அது மக்களிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதே ஒரு சிறந்த பொருளாதாரத்தின் அடையாளம். இந்தியாவில் அந்தப் பகிர்வு சமமாக இல்லை என்பதே உண்மை.
இந்தியப்
பொருளாதாரத்தின் போக்கை அதல பாதாளத்திற்குத் தள்ளிய மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று, 2016-இல் பா.ச.க.
அரசால் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகும். ‘கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில்’
கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கை, முறைசாராத் துறையைக் (Informal Sector) கடுமையாகச்
சிதைத்துள்ளது.
இந்தியாவின் 90% வேலைவாய்ப்புகள்
முறைசாராத் துறையில்தான் உள்ளன. ரொக்கப் பணத்தைச் சார்ந்து இயங்கிய சிறு, குறு தொழில்கள் முடங்கியதால், இலட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். அந்த இழப்பு இன்னும் மீட்டெடுக்க முடியாத நிலையிலேயே உள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சேமிப்பு கரைந்தது. இதன் தொடர்ச்சியாக வந்த ஜி.எஸ்.டி.
(GST) அமலாக்கம், பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், சிறு வணிகர்களுக்குச் சுமையாகவும் அமைந்தது கொடுமையிலும் கொடுமை! பொருளாதார வளர்ச்சி ‘மேல் மட்டத்தில்’ தெரிந்தாலும்,
‘கீழ் மட்டத்தில்’ மக்களின்
வாங்கும் திறன் குறைய இதுவே தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்பதே எதார்த்தம்.
இந்தியாவின்
தற்போதைய மிகப் பெரிய சவால் வேலையின்மை. CMIE (Centre for Monitoring Indian Economy) தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8% முதல் 9% வரை
ஊசலாடுகிறது. குறிப்பாக, படித்த இளைஞர்களிடையே இது 20%-க்கும்
அதிகமாக நீடிப்பது வேதனையிலும் வேதனை.
‘ஆக்ஸ்பாம்’
(Oxfam) அண்மை
அறிக்கையில், இந்தியாவின் 1% மிக
உயர்ந்த பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்துகள்
குவிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கீழ்மட்டத்தில் உள்ள 50% மக்களிடம்
நாட்டின் மொத்தச் சொத்தில் வெறும் 3% மட்டுமே
உள்ளது. ‘கே-வடிவ வளர்ச்சி’ (K-shaped recovery) என்று
பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடும் இந்த நிலை, வசதி படைத்தவர்கள் மேலும் வசதி அடைவதையும், ஏழைகள் மேலும் ஏழ்மை அடைவதையும் காட்டுகிறது.
தொடரும் ஒன்றிய
பா.ச.க. அரசின்
தீவிரமான தனியார்மயமாக்கல் கொள்கை இந்தியாவின் பொருளாதாரத்தைச் சிலருடைய கைகளிலே அடகுவைத்தது போலாகிறது. பொதுத்துறை நிறுவனங்களைச் சில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் செயல்கள் தொடர்கின்றன. இன்று, விமான நிலையங்கள், துறைமுகங்கள் முதல் எரிசக்தி வரை நாட்டின் முக்கியச் சொத்துகள் ஒருசில பெரும் பணக்காரர்களின் கைகளில் குவிந்து வருகின்றன.
பொருளாதார
வல்லுநர்கள் இதை ‘குரோனி கேபிடலிசம்’ (Crony Capitalism) என்கின்றனர். அதாவது, அரசின் கொள்கைகள் ஒட்டுமொத்தப் பொதுமக்களுக்கானதாக இல்லாமல், ஒருசில தொழிலதிபர்களுக்கு மட்டும் சாதகமாக வடிவமைக்கப்படுகின்றன. இதனால் நாட்டின் மொத்தச் செல்வம் உயர்கிறது; ஆனால், அது ஒருசிலரின் வங்கிக்கணக்குகளில் மட்டுமே முடங்கிக் கொள்கிறது.
மேலும், இந்திய
மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். பா.ச.க.
அரசு கொண்டு வந்த புதிய விவசாயச் சட்டங்கள் (மீளப் பெறப்பட்டாலும்), விவசாயத் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
விவசாயிகளுக்குக்
குறைந்தபட்ச ஆதார விலை (MSP) கிடைப்பதில்
நிலவும் சிக்கல்கள் மற்றும் உரங்கள், டீசல் போன்ற இடுபொருள்களின் விலை உயர்வு ஆகியவை கிராமப்புற வருமானத்தை முடக்கியுள்ளன. நகர்ப்புறங்களில் உயர்தொழில்நுட்பச் சேவைத்துறை வளர்ந்தாலும், கிராமப்புறப் பொருளாதாரம் இன்னும் தேக்கநிலையிலேயே உள்ளது கவலையளிக்கிறது. ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாழும் கிராமப்புறங்களில் வருமானம் உயராதவரை, தேசிய அளவில் தனிநபர் வருமானம் உயர்வது சாத்தியமில்லை.
ஆகவே, இந்தியா, இன்று ஓர் ‘இரட்டை எதார்த்தத்தில்’ பயணிக்கிறது.
ஒருபுறம் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து, நாடு பொருளாதார வல்லரசாக மாறிக் கொண்டிருக்கிறது; மறுபுறம், ஒரு சராசரி இந்தியன் பணவீக்கத்தாலும், குறைந்த வருமானத்தாலும் அன்றாட வாழ்க்கையை நடத்தப் போராடிக்கொண்டிருக்கிறான்.
GDP உயர்வு
என்பது தேசத்தின் கௌரவம்; ஆனால், தனிநபர் வருமான உயர்வு என்பது மக்களின் வாழ்வு. இந்த இரண்டிற்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைப்பதே இந்தியாவின் உண்மையான வெற்றியாக இருக்க முடியும். அப்போதுதான் ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவு உண்மையான அர்த்தத்தைப் பெறும். இத்தகைய அரசுக்குத்தான் அன்றே ஐயன் வள்ளுவர்,
‘இயற்றலும்
ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும்
வல்ல தரசு’
(385) என்றார்.
அதாவது,
பொருள் வரும் வழிகளை உருவாக்குதல், வந்த பொருளைச் சேர்த்தல், சேர்த்ததைக் காத்தல் மற்றும் காத்த பொருளைச் சரியாகத் திட்டமிட்டுச் செலவிடுதல் ஆகிய நான்கையும் சிறப்பாகச் செய்ய வல்லவனே சிறந்த அரசன் என்றார். இன்றைய ஒன்றிய அரசு தன்னைச் சுய ஆய்வு செய்து பார்க்க வேண்டும். பொருள் வரும் வழிகளும் முறையாக உருவாக்கப்படவில்லை; வந்த பொருளைச் சேர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை; சேர்க்கவே இயலாதபோது எப்படிக் காக்கமுடியும்? காத்த பொருளை எப்படிச் சரியாகத் திட்டமிட்ட முடியும்?
இத்தகைய
சூழலில், இந்திய நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை வெளிவர உள்ளது. இது வெறும் எண்கள் மற்றும் வரைபடங்களின் தொகுப்பு அல்ல; மாறாக, 140 கோடி இந்தியர்களின் உழைப்பையும், நாட்டின் முன்னேற்றப் பாதையையும் பிரதிபலிக்கும் கண்ணாடி அது. ஒவ்வொரு பட்ஜெட்டில் ‘யாருக்கு என்ன கிடைக்கும்?’ என்று பார்ப்பதற்குப் பதிலாக, ‘நாம் தற்போது எங்கே இருக்கிறோம்?’ என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையைத் தெரிந்துகொள்வது ஒவ்வொரு
குடிமகனுக்கும் அவசியம்.
நடப்புப் பொருளாதார
ஆய்வறிக்கையில் ‘வளர்ந்த இந்தியா - 2047’ (Viksit Bharat)) திட்டத்திற்கான
ஒரு வரைபடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து நூறு ஆண்டுகளை எட்டும்போது, உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக மாறுவதற்கான சீர்திருத்தங்கள் என்னென்ன தேவை என்பதை இந்த ஆய்வறிக்கை விரிவாக விவாதிக்க உள்ளது.
டிஜிட்டல்
பொருளாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பு போன்ற நவீனகாலத் தேவைகள் இந்த வரைபடத்தில் முக்கிய இடம்பிடித்தாலும், குடியானவனின், தனிமனிதரின் வருமானமும் வாழ்வியலும் மேம்படும்போதே, இந்தியா வளர்ந்த நாடாக அறியப்பட்டுப் போற்றப்படும்!
ஏழையோரின்
வாழ்வு உயரட்டும்!
இந்தியப்
பொருளாதாரம் சிறக்கட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
என் இனிய வாசகப் பெருமக்களே,
திரு
அவை என்பது வெறும் ஓர் அமைப்பு மட்டுமல்ல; மாறாக, அது கிறிஸ்துவின் மறையுடலாகவும், ஒரு பெரிய நம்பிக்கைக் குடும்பமாகவும் விளங்கக் கூடியது. ஒரு தாய் தன் குழந்தைகள் சாதனை படைக்கும்போது எத்தகைய பெருமிதம் அடைவாளோ, அதைவிடப் பெரிய மகிழ்ச்சியைத் தன் குழந்தைகள் ‘அருளாளர்’
(Blessed) அல்லது
‘புனிதர்’ (Saint) என்ற
நிலைக்கு உயர்த்தப்படும்போது தாய்த் திரு அவை அடைகிறது.
அருளாளர்
அல்லது புனிதர் நிலைக்கு ஒருவர் உயர்த்தப்படுவது
என்பது, அவர் இந்த உலகில் வாழ்ந்தபோது நற்செய்தி விழுமியங்களை வாழ்வாக்கினார் என்பதற்கான அங்கீகாரம். இது ஒரு தனி நபரின் வெற்றியல்ல; மாறாக, திரு அவை போதிக்கும் நம்பிக்கை அந்த மனிதரின் வாழ்வில் வெற்றி பெற்றுவிட்டது என்பதையே குறித்துக்காட்டுகிறது. அன்னை எலிஸ்வாவின் அர்ப்பண வாழ்வும் அதையே எடுத்துரைக்கிறது.
ஒருவர்
‘அருளாளர்’ அல்லது
‘புனிதர்’ என்று
அறிவிக்கப்படும்போது,
அவர் இப்போது இறைவனை முகமுகமாய்த் தரிசிக்கிறார் என்ற நம்பிக்கையைத் திரு அவை தருகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதுபோல, “புனிதர்கள் திரு அவையின் அழகைக் கூட்டுகிறார்கள்; ஒரு தோட்டத்தில் பல்வேறு வண்ணமலர்கள் பூத்துக் குலுங்குவது போல, ஒவ்வொரு புதிய புனிதரும் திரு அவையின் ஆன்மிகத் தோட்டத்தில் ஒரு புதிய நறுமணத்தைப் பரப்புகிறார்கள்.” அவ்வகையில், அன்னை எலிஸ்வா அருளாளர்
நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பது அந்தச் சபைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் திரு அவைக்குமே மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி!
சபை
தொடங்கியபோது மேற்கொள்ளப்பட்ட பல பணிகளில், அன்னை
எலிஸ்வாவின் அளப்பரிய பணி பெண்களுக்கான உயர்கல்விப் பணி. பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பள்ளிகளையும், அனாதை இல்லங்களையும் நிறுவுவதில் பெரும் பங்காற்றிய இவர், ‘பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறும்’ என்பதில்
உறுதியாக இருந்தார். இறைவனோடு இணைந்திருத்தல் (Interior Silence), தாழ்ச்சியும்
கீழ்ப்படிதலும் கொண்டிருத்தல், தன்னை முன்னிலைப்படுத்தாமல், இறைவனின் கருவியாக மட்டுமே இறுதிவரை வாழ்ந்தார்.
அருளாளர்
எலிஸ்வா ஏற்றி வைத்த அந்தச் சுடர், இன்று அவரது சபையினரால் உலகம் முழுவதும் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றது.
கல்விப் பணி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஆதரவற்றக் குழந்தைகளுக்காக இல்லங்களை நடத்தி, அவர்களுக்குப் புகலிடமும் கல்வியும் வழங்குவதோடு, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கான மறுவாழ்வு மையங்களையும் நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவப் பணி, மேய்ப்புப்பணி, ஊடகப்பணி, மறைக்கல்விப் பணி மற்றும் நற்செய்திப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். தற்போது, அச்சு ஊடகங்கள் வழியாக இறைவார்த்தையைப் பரப்பும் நவீனகால மறைப்பணிகளிலும் இச்சபை சகோதரிகள் ஆர்வமுடன் பங்கெடுத்து வருகின்றனர்.
தங்கள்
தாய்க்கு ‘அருளாளர்’
என்ற பெருமை கூடும் இந்நாளில், சேய்கள் ஒன்றிணைந்து விழா எடுப்பதும், அவ்விழாவின் நினைவாகச் சிறப்பிதழ் வெளிக்கொணர்வதும் பெரிதும் பாராட்டத்தக்கது. இம்முயற்சியை முன்னெடுத்திருக்கும் CTC சபைத் தலைவி மதர் ஷஹிலா அவர்களுக்கும், விமலா மறை மாநிலத் தலைமை அன்னை அருள்சகோ. வெரோனி அவர்களுக்கும்,
அவருடைய ஆலோசனைக் குழுவிற்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னை
எலிஸ்வா புனிதர் நிலைக்கு விரைவில் உயர்த்தப்பட எமது வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்குகின்றேன்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர் செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது இந்திய மண்ணில் வெறும் மேடை முழக்கத்திற்கான வாசகம் அல்ல; மாறாக, அது இத்திருநாட்டின் உயிர் ஆற்றல் கொண்ட ஆன்மா. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பை ‘இந்தியா’ என்ற ஒற்றைப் பெயரில் பிணைத்து வைத்திருப்பதுதான் அதன் பன்முகத்தன்மை. ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய பா.ச.க. ஆட்சி இந்த ஆன்மாவைச் சிதைத்து, மதவெறி மற்றும் இந்துத்துவ அடிப்படைவாதத்தின் மூலம் நாட்டைப் பிளவுபடுத்தும் ஓர் அபாயகரமான விளையாட்டைத் தொடர்ந்து விளையாடி வருகிறது.
அண்மையில்
குஜராத்தில் நடைபெற்ற சோம்நாத் சுய மரியாதைத் திருவிழா, இந்தியாவின் தற்போதைய அரசியல் போக்கு எத்தகைய திசையில் பயணிக்கிறது என்பதற்கான ஒரு தெளிவான சான்று. நாட்டின் பிரதமர் என்ற முறையில், ஒரு மதச்சார்பற்ற சனநாயக நாட்டின் தலைவராகப் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு முன்னெடுப்புகள், அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்தவேண்டிய திரு. நரேந்திர மோடி அவர்கள், தனது நேரத்தின் பெரும் பகுதியை ஆலய வழிபாடுகளிலும், குடமுழுக்கு விழாக்களிலும் செலவிடுவது கவலையளிக்கிறது.
சோம்நாத்
விழாவில் பேசிய பிரதமர், “நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்கள் இப்போது வாள்களுக்குப் பதிலாகப் பிற தீங்கிழைக்கும் வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன; நம்மைப் பிளவுபடுத்த முயலும் சக்திகளை ஒற்றுமையால் வீழ்த்த வேண்டும்”
என்று அறைகூவல் விடுத்துள்ளார். இங்குதான் ஒரு பெரும் முரண் எழுகிறது. உண்மையில் இந்திய மக்களை மத ரீதியாகவும் சாதி
ரீதியாகவும் பிளவுபடுத்தி, அதன் மூலம் வாக்குகளைச் சேகரிக்கும் அரசியலை முன்னெடுப்பது யார்? 11 ஆண்டுகால ஆட்சியில் சமூகங்களுக்கிடையே பிளவை உண்டாக்கும் வெறுப்புப் பேச்சுகளும், கும்பல் வன்முறைகளும் (Mob Lynching) பெருகியுள்ளதைச்
சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்களின் கேள்விகளுக்குப் பிரதமரின் உரையில் எந்தப் பதிலும் இல்லை. நாட்டின் பிரதமரே ஒரு மதத்தைச் சார்ந்த அடையாளங்களை முன்னிறுத்துவது, அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பற்ற கொள்கைக்கு விடப்பட்ட சவாலாகும்.
அதே
மேடையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் உரை, நேரடியாகவே ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான நஞ்சைக் கக்கும் வகையில் அமைந்திருந்தது. “இஸ்லாமிய மன்னர்கள் இக்கோவிலைத் தகர்த்தார்கள்; இடித்தவர்கள் அழிந்து போனார்கள்; ஆனால், கோவில் கம்பீரமாக நிற்கிறது” என்று அவர் கர்ச்சித்தது, கடந்த கால வரலாற்றுக் காயங்களை மீண்டும் கீறி விட்டு, தற்கால அரசியல் இலாபம் தேடும் முயற்சியே அன்றி வேறில்லை.
வரலாற்று
ரீதியாகச் சோம்நாத் கோவில் தாக்கப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளை இன்று வாழும் ஒரு சமூகத்தின்மீது வெறுப்பை உமிழப் பயன்படுத்துவது எவ்வகையில் நியாயம்? அமித்ஷா தனது உரையில், ‘இந்திய மக்களின் நம்பிக்கை’
என்று குறிப்பிடுவது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் அல்ல; மாறாக, அவர் முன்வைக்கும் ‘இந்துத்துவ’ கொள்கைகளை
ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே. சனாதன தர்மமே இந்தியாவின் ஒட்டுமொத்தக் கலாச்சாரம் என உருவகப்படுத்துவதன் மூலம் புத்த,
சமண, சீக்கிய, இசுலாமிய, கிறித்தவ மற்றும் திராவிடப் பண்பாட்டுத் தனித்துவங்களை அவர் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்.
பா.ச.க.-வின்
‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்ற ஒற்றைவாதக் கொள்கை, இந்தியாவின் அடிமட்ட அளவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காலங்காலமாக ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த கிராமப்புற மக்கள், இன்று மத ரீதியிலான சிறு
சிறு காரணங்களுக்காக மோதிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘உணவுத் தேர்வு’
(Food choice)
என்ற பெயரில் மாட்டிறைச்சி உண்பவர்களைக் குறிவைத்துத் தாக்குவதும், ‘லவ் ஜிகாத்’ போன்ற கற்பனையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் இன்று இந்தியா முழுவதும் ஒரு தொற்றுநோயாகப் பரவி வருகிறது.
மறுபுறம்,
இந்திய சனநாயகத்தின் தூண்களாகக் கருதப்படும் நிறுவனங்கள் தங்களின் சுயாட்சியை இழந்து வருகின்றன. இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி முன்வைக்கும் விமர்சனம் மிக முக்கியமானது: “சி.பி.ஐ.,
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்தும் இன்று
ஆட்சியாளர்களின் ஏவல் படைகளாக மாறியுள்ளன” என்ற
அவரது கூற்று மிகச்சரியானதே! குறிப்பாக, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்குவதற்கு இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுவதும், பா.ச.க.-வின் கொள்கைகளுக்கு உடன்படாத அதிகாரிகள் அச்சுறுத்தப்படுவதும் சனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயலாகும்.
இந்திய
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, மத உரிமை மற்றும்
ஊடகச் சுதந்திரம் ஆகியவை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய ஊடகச் சுதந்திரப் பட்டியலில் இந்தியா தொடர்ச்சியாகப் பின்தங்கி வருவது இதற்குச் சான்று. அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ‘தேசத்துரோகிகள்’ என
முத்திரை குத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
மேலும்
இன்றைய சூழலில், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் உரிமைகள் மெல்ல மெல்லப் பறிக்கப்படுகின்றன. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைகள் மறைமுகமாகச் சிதைக்கப்படுகின்றன. குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. இராதா
கிருஷ்ணன் குறிப்பிட்டது போல, “இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகள் நாட்டை ஒருபோதும் பிளவுபடுத்தவில்லை; மாறாக, அவை நமது நாகரிகத்தைப் பாதுகாத்து வலுப்படுத்தியுள்ளன.” ஆனால், இந்த உண்மையை மறைத்து, ‘இந்தி’ மற்றும் ‘சமஸ்கிருதத்தை’ தேசிய
அடையாளமாக முன்னிறுத்தி, பிற மாநில மொழிகளை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் முயற்சி, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைக்கிறது.
பா.ச.க. அரசு
சனாதனத் தர்மத்தை இந்தியாவின் தேசிய அடையாளமாக மாற்றத் துடிக்கிறது. ஆனால், சனாதனம் என்பது படிநிலைச் சமூக அமைப்பை (Hierarchy) வலியுறுத்துவது
என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு நேரெதிரானது இந்தச் சனாதனப் போக்கு. மதம் மற்றும் ஆன்மிகம் என்பது தனிமனித உரிமை; அதை அரசு நிர்வாகத்தோடும் தேசிய அடையாளத்தோடும் கலப்பது மதவாத ஆட்சிக்கே (Theocracy) வழிவகுக்கும்.
பா.ச.க. அரசின்
இந்தப் போக்கு, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு தந்திரமாகவும் பார்க்கப்படுகிறது. விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம், ஒரு மதவாதப் பிரச்சினையை முன்னிறுத்தி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது இந்த அரசின் வாடிக்கையாகிவிட்டது.
இந்தியா
என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கோ சொந்தமான சொத்தல்ல. இது பல கோடி மக்களின்
வியர்வையாலும் தியாகத்தாலும் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டுப் பரிமாற்றத்தாலும் உருவானது. சோம்நாத் போன்ற வரலாற்றுச் சின்னங்களைப் போற்றுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்தப் பெருமையை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான வன்மமாக மாற்றுவது தேசத் துரோகத்திற்கு இணையானது.
இறுதியாக,
மத அடிப்படைவாதமும் வெறுப்பு அரசியலும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையோ அல்லது உலகளாவிய அங்கீகாரத்தையோ ஒருபோதும் பெற்றுத்தராது. உண்மையான சுய மரியாதை என்பது பிற மதத்தவரை இழிவுபடுத்துவதில் இல்லை; மாறாக, அனைத்து மக்களையும் சமமாக நடத்துவதிலும், பசியற்ற, அச்சமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதிலுமே உள்ளது. ஆட்சியாளர்கள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகப் பன்முகத்தன்மையைச் சிதைப்பதை நிறுத்தவேண்டும்.
பன்முகத்தன்மைதான்
இந்தியாவின் பலம்; அதைச் சிதைப்பது இந்தியாவின் எதிர்காலத்தையே சிதைப்பதாகும். இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, தங்களின் சனநாயக உரிமைகளையும் பன்முகப் பண்பாட்டையும் காக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இது!
விழிப்பாய்
இருப்போம்! - என்றும்
வேற்றுமையில்
ஒற்றுமை காப்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் ‘டிஜிட்டல் இந்தியா’, ‘ஸ்மார்ட் சிட்டி’ எனும் முழக்கங்களுக்கு இடையே, ஒரு குவளை பாதுகாக்கப்பட்ட குடிநீருக்காகச் சாமானிய மக்கள் உயிரை விடும் அவலம் இந்திய மண்ணில் நீடிப்பது இச்சனநாயகத்தின்மீது படிந்திருக்கும் தீராக் கறையையே காட்டுகிறது!
மத்தியபிரதேச
மாநிலத்தின் இந்தூர் நகரில் பகீரத்புரா (Bhagirathpura) பகுதியில்
மாசுபட்ட குடிநீரால் நிகழ்ந்துள்ள உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமும் ஒன்றிய மற்றும் மாநில, ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் மெத்தனத்தையும், ஆட்சியாளர்களின் போலிப் பெருமிதங்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.
இந்தூர்
நகரம் இந்தியாவின் ‘தூய்மையான நகரம்’
(Cleanest City) எனத்
தொடர்ந்து பலமுறை விருதுகளைப் பெற்றுவரும் ஒரு பெருநகரம். ஆனால், ‘இந்தத் தூய்மை என்பது வெறும் மேலோட்டமான அலங்காரம்தானா?’ என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஹராப்பா - மொகஞ்சதாரோ, கீழடி - வைகைக்கரை நாகரிகங்களின் பெருமை கொண்ட இந்திய மண்ணில், பகீரத்புரா பகுதியில் கழிவுநீர்க் குழாயும், குடிநீர்க் குழாயும் ஒன்றோடொன்று கலந்து, மக்கள் மலம் கலந்த நீரை அருந்த நேரிட்டது என்பது ஒரு நவீன நகர நிர்வாகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம்.
அரசு
நிர்வாகம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ஏழை எளிய மக்களின் வீடுகளில் துக்கம் குடிபுகுகிறது என்பதற்கு இந்தூர் ஒரு சாட்சியாக மாறியுள்ளது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அடிப்படை உள்கட்டமைப்பான நிலத்தடி நீர்க்குழாய்களின் பராமரிப்பில் காட்டிய அலட்சியம் மன்னிக்க முடியாதது. இக்கொடுஞ்செயல் மாநில அரசின் பொறுப்பற்றத்தன்மையையே எடுத்துக்காட்டுகிறது.
மத்தியபிரதேசத்தில்
நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் பா.ச.க.
அரசு, இந்நிகழ்விற்கு முழுப் பொறுப்பேற்கவேண்டும். ஒரு பகுதியில் தொற்றுநோய் பரவுகிறது என்பது தெரிந்தும், ஆரம்பக்கட்டத்திலேயே அதைத் தடுக்கத் தவறியது ஏன்? மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் துடித்தபோது, சுகாதாரத்துறை எங்கே சென்றது? போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு அங்கே ஆட்சியாளர்கள் எவரிடமும் பதில் இல்லை.
மாநில
அரசு அங்குப் பெருநிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பதிலும், அரசியல் விளம்பரங்களில் கோடிக்கணக்கில் செலவு செய்வதிலும் காட்டும் ஆர்வத்தை, சாமானிய மக்களின் உயிர் காக்கும் சுகாதாரக் கட்டமைப்பில் காட்டவில்லை என்பது பெரும் கவலையளிக்கிறது. பகீரத்புரா போன்ற நெரிசலான பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். அவர்களின் வாக்குகள் மட்டுமே தேவைப்படும் ஆட்சியாளர்களுக்கு, அவர்களின் வாழ்க்கை ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
ஒன்றிய
பா.ச.க. அரசு
‘ஜல் ஜீவன் மிஷன்’
(Jal Jeevan Mission) மூலம்
நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதாக மார் தட்டிக்கொள்கிறது. ஆனால், குழாய்கள் வழியாக வருவது குடிநீரா? அல்லது விஷமா? என்பதை உறுதிசெய்யும் தணிக்கை முறைகள் எங்கே போயின? ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் பெரிய சாலைகளையும் மின்விளக்குகளையும் அமைப்பதில் காட்டும் வேகம், பூமிக்கடியில் இருக்கும் கழிவுநீர் மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகச் சீரமைப்பில் காட்டப்படுவதில்லை.
ஒன்றிய
பா.ச.க. அரசின்
திட்டங்கள் பெரும்பாலும் புள்ளி விவரங்களை நோக்கி இருக்கின்றனவே தவிர, மக்களின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதில் தோல்வியடைந்துள்ளன. இந்தூர் போன்ற ஒரு நகரத்திலேயே இத்தகைய நிலை என்றால், இந்தியாவின் பின்தங்கிய கிராமப்புறங்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
மாநில
அரசு, அங்கே பழைய நீர்க்குழாய்களை மாற்றாமல், புதிய இணைப்புகளை மட்டும் வழங்கிக் கொண்டே சென்றதும், குடிநீர் மாதிரிகளைத் தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டிய மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறியுள்ளதும், மக்கள் புகார் அளித்தும், அதன் தீவிரத்தை உணராமல் கோப்புகளை நகர்த்திக் கொண்டிருந்த அதிகாரத்துவமுமே இந்த உயிரிழப்புகளுக்கு நேரடிப் பொறுப்பு என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருப்பது மாநில அரசின் ஒட்டுமொத்த மெத்தனப்போக்கையே படம்பிடித்துக்காட்டுகிறது.
அண்மைக்காலங்களில்
ஒவ்வொரு மாநிலத்திலும் ‘ஸ்மார்ட் சிட்டி’-களுக்குப் பஞ்சமில்லை. எங்குப் பார்த்தாலும் ‘ஸ்மார்ட் சிட்டி’ பற்றிய அறிவிப்புகளும் விளம்பரங்களும் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. ‘ஸ்மார்ட் சிட்டி’ எனும் திட்டத்தின் அடிப்படை நோக்கமே குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான். ஆனால், இந்தூர் நிகழ்வு இங்கு ‘ஸ்மார்ட்’
என்பது வெறும் டிஜிட்டல் திரைகளிலும், பளபளப்பான கட்டடங்களிலும் மட்டுமே முடிகிறது என்பதையே உணர்த்துகின்றன. நிலத்தடியில் புதைந்துகிடக்கும் சிதைந்த குழாய்களும், அவற்றிலிருந்து கசியும் கழிவுநீரும் ‘ஸ்மார்ட்’
பட்டியலில் ஒருபோதும் சேர்க்கப்படப் போவதில்லை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒன்றிய
பா.ச.க. அரசு
முன்வைக்கும் வளர்ச்சி மாடல் என்பது மேல்தட்டு மக்களுக்கானது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி குறிப்பிடுகையில், “இந்தூரில் வீடுகளுக்கு வழங்கப்பட்டது குடிநீர் அல்ல; மாறாக, அது நஞ்சு. நிர்வாகத்தின் ஆழ்ந்த தூக்கமே இதற்குக் காரணம்; ஒவ்வொரு குடும்பமும் துக்கத்தில் வாடும் சூழலில் பா.ச.க.
தலைவர்களோ ஆணவத்துடன் பேசுகின்றனர்” என்று
குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “ஜல் ஜீவன், தூய்மை இந்தியா திட்டங்கள் குறித்து பெருமை பேசும் பிரதமர் மோடி, இந்தூர் உயிரிழப்புகள் குறித்து அமைதி காப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியதுடன், “மக்களுக்குத் தேவையான தூய்மையான குடிநீரையோ, தூய்மையான காற்றையே ஒன்றிய பா.ச.க
அரசால் மக்களுக்கு வழங்க முடியவில்லை” என்று வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளார். ஆகவே, அடிப்படைத் தேவைகளான உணவு, நீர், சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்யத் தவறும் எந்த ஓர் அரசும் தன்னை ‘வளர்ந்த அரசு’ என்று அழைத்துக்கொள்ளத் தகுதியற்றது என்பதை குறைந்தபட்சம் தேர்தல் காலங்களிலாவது குடிமக்கள் நாம் உணர்ந்தாக வேண்டும்.
மானுட
மாண்பிற்கு எதிரான இத்தகைய கொடிய நிகழ்வுகள் அரங்கேறும்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சில இலட்சங்களை நிவாரணமாக அறிவிப்பதோடு அரசு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது. ஆனால், உயிரிழந்த மனித உயிர்களுக்கு ஈடு ஏது? தவறு செய்த அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெறும் பணியிட மாற்றம் அல்லது தற்காலிகப் பணி நீக்கம் என்பது தீர்வாகாது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதற்காக அவர்கள்மீது கொலைக்குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
இறுதியாக,
நிர்வாகம் தூங்கிக் கொண்டிருந்தால், மக்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் உயிரைக் கொடுத்துதான் அந்தத் தூக்கத்தைக் கலைக்க வேண்டுமா? எனும் கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது. மத்தியபிரதேசத்தின் இந்தூர் துயரம் ஓர் எச்சரிக்கை மணி என்பதனை நாம் உணர்ந்திடவேண்டும்; ஒன்றிய மற்றும்
மாநில அரசுகள் வெற்று விளம்பரங்களைத் தள்ளி வைத்துவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்தவேண்டும்.
நமது
அரசு, ஐயன் வள்ளுவர் சுட்டிக்காட்டிய ‘மக்கள் நல அரசாக’ மாறவேண்டும்; அதுவும் சாமானிய மக்களுக்கான அரசாக மலரவேண்டும். அதாவது,
குடிமக்களை அரவணைத்து, அவர்களின் நல்வாழ்விற்காகச் செயல்பட்டு, அறவழியில் செங்கோல் செலுத்தி, நாட்டை வளம்பெறச் செய்து குடிமக்களின் மகிழ்ச்சியையும், நாட்டின் செழிப்பையும் குறிக்கோளாகக் கொண்ட, அறநெறி சார்ந்த, பொறுப்புள்ள அரசாக இருக்கவேண்டும். இதனையே வள்ளுவர்,
‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ
நிற்கும் உலகு’
(குறள் 544)
என்று
குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக,
‘அனைவருக்கும் குடிநீர்’
என்பது வெறும் தேர்தல் வாக்குறுதியாக மட்டும் இல்லாமல், மக்களின் அடிப்படை உரிமையாக, உடைமையாக மாறவேண்டும். இல்லையெனில், நிர்வாகத்தின் இந்த ஆழ்ந்த உறக்கம், இந்திய சனநாயகத்தின் எதிர்காலத்தையே பெரும் துக்கத்திற்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆட்சியாளர்கள் தங்கள் ‘வளர்ச்சி’
முழக்கங்களை நிறுத்திவிட்டு, மக்களின் மரண ஓலங்களுக்குச் செவிசாய்க்கவேண்டிய தருணம் இது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை
செய்வோம்;
வீணில்
உண்டு களித்திருப்போரை
நிந்தனை
செய்வோம்!’
என்றான்
முண்டாசுக் கவிஞன் பாரதி. தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிந்தனையைத் தழுவிய இப்பாடல் வரிகள், விவசாயம் மற்றும் அனைத்துத் தொழில்களையும் போற்றி வணங்குவதுடன், வீணாக இருப்பவர்களை இழிவாகக் கருதிடல் வேண்டுமென எடுத்துரைக்கின்றன.
உலகில்
உள்ள தொழில்கள் அனைத்திலும் உழவுத் தொழிலே சிறந்தது; உழவுத் தொழிலே உலக மக்களுக்கு உணவளிக்கும் தொழில்; நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு உழைக்கும் உழவனை நாம் மறந்துவிடக் கூடாது என்று எண்ணிய செந்தமிழ் புல(தழ்)வன், ஐயன் வள்ளுவரோ...
‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும்
உழவே தலை’
(குறள் 1031)
என்றார்.
அதாவது, உலகம் பல தொழில்களைச் செய்து
சுழன்றாலும், இறுதியில் விவசாயத்தையே சார்ந்திருக்கிறது; எனவே, எவ்வளவு துன்பம் வந்தாலும், உழவுத் தொழிலே தலையானது, சிறந்தது என்று உழவுத்தொழிலின் மேன்மையையும் அதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கும்
மேலாக ஒருபடி சென்று,
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு
பின்செல் பவர்’
(குறள் 1033)
எனப்
பாடினார். அதாவது, உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும்,
மானிடர் வாழ்க்கையில்
இன்றியமையாதது உணவு, உடை, உறைவிடம். இவற்றுள் உணவே முதன்மையான இடம் வகிக்கிறது. உணவளிப்பதற்கு உழவுத் தொழில் சிறக்க வேண்டும்; இத்தொழிலில் ஈடுபடுவோர் உண்மையிலேயே போற்றுதற்குரியவர்கள் என்பதை உணர்ந்த தமிழ் மூதாட்டி ஒளவையும் ‘நல்வழி’ பாடலில் உழவுத் தொழிலின் உயர்வைப் போற்றி
ஆற்றங்
கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த
வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு
வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு
வேறோர் பணிக்கு’
(பாடல் 12)
என்று
சிறப்புறப் பாடியிருக்கிறார். அதாவது, ஆற்றங்கரையில் உள்ள மரமும், அரசனே வியக்கும்படி வீற்றிருந்த வாழ்வும் ஒருநாள் வீழ்ந்துவிடும்; ஆனால், உழுதுண்டு வாழ்வதற்கு ஈடு இணை இல்லை என்று விவசாயத்தின் மேன்மையையும், உழுதுண்டு வாழ்வதன் சிறப்பையும் வலியுறுத்துகிறார். இத்தகைய சிறப்புமிக்கது வேளாண் தொழில்!
‘தை பிறந்தால் வழி
பிறக்கும்’ என்பது
நம் முதுமொழி. ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் உழவர்களின் வாழ்வில் அந்த ‘வழி’ இன்னும் ஒரு போராட்டக்களமாகவே நீடிக்கிறது. 2026-ஆம் ஆண்டின் விடியலில் விண்ணை முட்டும் தொழில்நுட்பப் புரட்சி ஒருபுறம் பேசப்பட்டாலும், மறுபுறம் அதலபாதாளத்தில் இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் அழுத்தங்களும்தான் முன்னெப்போதும் இல்லாத சவால்களைத் தற்போது ஏற்படுத்தி வருகின்றன.
அன்றும்
இன்றும் ஒரு விவசாயி நிலத்தில் இறங்கும்போதே கடனாளியாகத்தான் காலடி வைக்கிறான். ‘உழைப்பவன் கணக்குப் பார்த்தல் உழக்குக் கூட மிஞ்சாதாம்!’ என்ற பழமொழிக்கேற்ப, வறுமையில் பிறழும் விடியாத பொழுதே என்றும் அவனது வாழ்க்கையாகிப் போகின்றன. இத்தகைய சூழலில் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல’ இன்றைய
ஒன்றிய பா.ச.க.
அரசின் நுகர்வுக்
கொள்கைகளும் வேளாண் சட்டங்களும் இன்னும் அவர்களை மேலும் மேலும் இருளில் தள்ளுவதாகவே இருக்கின்றன. தனி முதலாளிகளின் வர்த்தகம் செழிக்க ஒட்டுமொத்த வேளாண் சமூகமும் இம்மண்ணில் பலிகடா ஆக்கப்படுகின்றன.
இடுபொருள்களின்
விலை உயர்வு குறிப்பாக, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை இன்று கணிசமாக
அதிகரித்துள்ளது. உலக வங்கி அறிக்கையின்படி, உலகளாவிய அளவில் உரங்களுக்கான செலவு உயர்ந்திருப்பது சிறு மற்றும் குறு விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
வருடம்
முழுவதும் வெயிலிலும் மழையிலும் உழைத்து விளைவித்தப் பொருள்களுக்குச் சரியான விலை கிடைக்காததும் விவசாயிகளின் ஆகப்பெரிய சோகம். உழவனின் வியர்வையில் விளைந்த பல பயிர்களுக்கு அரசு
அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட (MSP), வெளிச்சந்தையில்
மிகக்குறைவான விலையே கிடைக்கிறது. இடைத் தரகர்களின் ஆதிக்கம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளின் பற்றாக்குறை விவசாயிகளை ‘அவசர விற்பனை’
(Distress Sale) செய்யத்
தூண்டுகிறது.
ஒன்றிய
அரசு அறிமுகப்படுத்திய புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் மற்றும் 2025-இல் முன்மொழியப்பட்ட ‘விதை மசோதா’ போன்றவை விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. திறந்தவெளிச் சந்தைமுறை (Free Market) விவசாயிகளுக்கு
அதிக வாய்ப்புகளை வழங்கும் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அது பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கிறது. சந்தை விலையைத் தீர்மானிக்கும் சக்தி விவசாயிகளிடம் இல்லை; மாறாக, பன்னாட்டு நிறுவனங்களின் இலாப நோக்கத்திலேயே அவை சுழல்கின்றன.
பாரம்பரிய
விதை சேமிப்பு முறைகளைவிட, பதிவு செய்யப்பட்ட வீரிய இரக விதைகளையே முன்னிறுத்தும் ‘விதை மசோதா 2025’, சிறு விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வைக்கும் ஒரு மறைமுகத் திட்டமாக விமர்சிக்கப்படுகிறது. விவசாயிகளின் போராட்டங்கள் ஒருபுறம் வலுத்தாலும், கொள்கை முடிவுகள் எடுக்கும் இடத்தில் அவர்களின் குரல் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறைப்பு மற்றும் மின்சாரச் சீர்திருத்தங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன.
‘அக்ரி-டெக்’
(Agri-Tech) மற்றும்
‘டிஜிட்டல் விவசாயம்’
பற்றி இன்று பா.ச.க.
அரசு பேசுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள 80 விழுக்காட்டிற்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு ‘ஸ்மார்ட்போன்’ வழியாகச்
சந்தையை அணுகுவதும், ஆன்லைன் வர்த்தகத்தைப் புரிந்துகொள்வதும் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. தொழில்நுட்பம் என்பது விவசாயிகளுக்கு உதவவேண்டுமே தவிர, அவர்களை மேலும் அந்நியப்படுத்தக்கூடாது.
உழவர்
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவேண்டும் என்பதே நமது விருப்பம். உலகுக்கு உணவூட்டும் உழவருக்காகக் குரல் கொடுப்பதும், அவர்கள் சார்பாகத் தேர்தல் காலங்களில் நன்கு சிந்தித்து நிலைப்பாடு எடுப்பதும் நமது கடமை.
குறிப்பாக,
உழவர் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வேண்டுமென்றால் எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி, உற்பத்திச் செலவுடன் 50% இலாபம்
சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படவேண்டும். இது வெறும் சட்டமாக மட்டும் இல்லாமல், நடைமுறையில் அனைத்துப் பயிர்களுக்கும் உறுதி செய்யப்படவேண்டும். தமிழ்நாட்டின் ‘உழவர் சந்தை’ போன்ற திட்டங்கள் இந்தியா முழுவதும் வலுப்படுத்தப்படவேண்டும். நேரடிச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் நுகர்வோருடன் விவசாயிகளை நேரடியாக இணைக்கும் ‘டோர் டெலிவரி’
(Door Delivery) போன்ற
நவீன முறைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
மேலும்,
2026-இல் காலநிலை மாற்றம் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பருவம் தவறிய மழை மற்றும் வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க ‘பயிர் காப்பீட்டுத் திட்டங்கள்’ எளிமைப்படுத்தப்பட
வேண்டும்.
இறுதியாக,
விவசாயி என்பவன் வெறும் உணவு உற்பத்தியாளன் மட்டுமல்லன்; அவன் இந்தத் தேசத்தின் உயிர்நாடி. உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.
அவர்களின் உழைப்புச் சுரண்டப்படுவதைத் தடுத்து, அவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரமும், கௌரவமான வாழ்வாதாரமும் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தத் தைப்பொங்கலின் உண்மையான நோக்கமாக இருக்கவேண்டும்.
மண்ணை
நேசிக்கும் மனிதர்களின் வாழ்வில்...
உண்மையான
மகிழ்ச்சி பொங்கட்டும்!
உரிமை
கொண்ட உயரிய வாழ்வு தங்கட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
ஒவ்வொரு பிறப்பும் ‘புதியன’ எனும் கருத்தியலை, எதிர்நோக்கைக் கொண்டிருக்கின்றன. ‘கி.மு.-கி.பி.’ என வரலாற்றை வகுடெடுத்த வரலாற்று நாயகன் இயேசுவின் பிறப்பு ‘கடவுள் நம்மோடு’ என்பதை உணர்த்துகிறது; தொடர்ந்து வந்த புத்தாண்டுப் பிறப்பு, ‘காலமும் நம்மோடு’ என்ற எதிர்நோக்கைத் தருகிறது.
புலர்ந்துள்ள
புத்தாண்டு புதிய எண்ணங்களை, புதிய சிந்தனைகளை, புதிய ஏற்றங்களை, புதிய மாற்றங்களை, புதிய உறவுகளை நம்மிலும் நம்மைச் சுற்றிலும், நாம் வாழும் சமூகத்திலும் மலரச் செய்யவேண்டும்.
விடுதலை
இந்தியாவின் சமூக - அரசியல் - வாழ்வியல் சூழல் தனித்துவமானது. ஆட்சிமுறை குறித்து ஆயிரம் பரிசோதனை முயற்சிகள் நடந்து முடிந்த பின்பு, உலகின் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்ட ஆட்சிமுறைதான் ‘மக்களாட்சி’ (சனநாயகம்).
அதில் நிறைந்த நன்மை உண்டு என்பதற்காக அல்ல; மாறாக, குறைந்த தீமை உண்டு என்ற கருத்தியலால் இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டது. “உள்ள தீமைகளில் சிறிய தீமை, சனநாயகம்”என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். ‘நன்மைக்கும் தீமைக்கும் இடையில் எதைத் தேர்வு செய்வது என்ற நிலையில் நாம் இல்லை; மாறாக, நமக்குக் கிடைத்திருப்பது எல்லாம், இரண்டு தீமைகளில் எந்த ஒன்றைத் தேர்வு செய்வது என்பதுதான். நாம் பெரிய தீமையைப் புறக்கணித்துவிட்டு, சிறிய தீமையைத் தேர்வு செய்ய உதவுவதே சனநாயகம்”
என்று விளக்கம் தந்தார் காந்தியவாதி கிருபளானி. இதுவே உண்மையும் கூட.
ஒவ்வொரு
நிறையிலும் நம் கண்களுக்குப் புலப்படாமல் ஒரு குறை மறைந்திருக்கும்; அதுபோலவே, ஒவ்வொரு குறையிலும் ஒரு நிறை மறைந்திருக்கும். முழுமை என்று இறைமையைத் தவிர எதையும் நாம் கூற இயலாது. இவ்வாட்சியமைப்பு முறையில், மக்கள் மாண்புடன் வாழ்வர் என்ற எதிர்நோக்கில்தான் மக்களாட்சி இந்திய மண்ணில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. “மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்படும் மக்களுடைய அரசு” என்று சனநாயகத்திற்கு விளக்கம் அளித்தார் ஆபிரகாம் லிங்கன். அப்பாவி மக்களை ஆட்சியாளர்கள் சுரண்டுவதற்கான வசதியான வாகனம் சனநாயகம் என்பதுதான் இன்றைய இந்திய அரசியல் களத்தின் எதார்த்தம். “பாமர மக்களின் மோசமான ஆட்சியே சனநாயகத்தில் அமையும்” என்று கடுமையாக விமர்சித்தார் அரிஸ்டாட்டில். அந்தக் கூற்று இந்திய மண்ணில் முற்றிலும் உண்மையாகிப் போனது.
மக்கள்
மத்தியில் நிலவும் அறியாமையும், அதனால் வளரும் கருத்தியல் அடிமைத்தனமும், பொருளியல் வறுமை நிலையும் அரசியல் தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மூலதனம் ஆகிப்போனது.
மக்களாட்சியில்
தங்களுக்கான அரசை உருவாக்குபவர்கள் மக்கள்தாம். ஆனால், அவர்களை அறியாமை இருளிலும் குறிப்பாக, அரசியல் அறியாமையிலும் வைத்து நடத்தும் ஓர் அரசியலில் தரமான அரசியல் அமைப்பு முறை உருவாக வாய்ப்பில்லை. அத்தகைய சூழல் தொடரும் வேளையில், அங்கு அரங்கேறும் அரசியல், அநாகரிகம் கொண்டு தரமற்றதாகத்தான் இருக்கும். அங்கு எப்படித் தரமான அரசை உருவாக்க முடியும்? எதிர்பார்க்க முடியும்? இங்கு இருமுனை ஆய்வுகள் அவசியம். ஒருபுறம், மக்கள் அரசியல் அறிவு பெறவேண்டும்; மக்கள் மத்தியில் அரசியல் அறியாமை அகற்றப்படவேண்டும்; மறுபுறம், அரசியல் தலைவர்களின் ஆட்சியாளர்களின் தலைமைத்துவம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சனநாயகத்தின்
ஆணிவேராக இருக்க வேண்டிய அரசியல் கட்சிகள் இன்று மலினமான மனிதர்களின் கூடாரமாகி விட்டது. தகுதியற்றவர்களிடம் தலைமைப் பொறுப்பும் ஆட்சி அதிகாரமும் வந்து சேர, இன்றைய கட்சிமுறை வழிவகுக்கிறது. சமுதாயத்தில் மக்களிடையே மோதலும் முரணும் கட்சிகளால்தான் வளர்த்தெடுக்கப்படுகின்றன. சாதி சச்சரவுகளும் மத வேற்றுமைகளும் கட்சிகளால்
தூண்டப்படுகின்றன. அரசியல் களத்தையும் சமூகத் தளத்தையும் சீர்செய்ய யாவரும் கண்விழிக்க வேண்டுமென காலம் எச்சரிக்கிறது.
‘நல்ல காலம் பிறந்து இருக்கிறது’ என்ற
நப்பாசை கொள்வதல்ல ஆண்டுப் பிறப்பு. பிறந்த ஆண்டை நல்ல காலமாகக் கட்டமைப்பதே அதில் பொதிந்திருக்கும் அழைப்பு. மாண்புறு மக்களாட்சி மலர்வதற்கான சிந்தனைகள் நம்மில் வளர வேண்டும், நல்லெண்ணங்கள் எங்கும் மலரவேண்டும்.
குடிமக்கள்
தரமான வாழ்க்கை வாழ வேண்டும்; அந்தத் தரமான வாழ்க்கை அவர்களுக்குக் கிடைக்கிறதா என்பதை மதிப்பீடு செய்யவேண்டும். ஆண்டுதோறும் இப்பணியை மேற்கொள்வது ஆட்சியாளர்களின் கடமை; ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இவற்றை அலசி ஆராய்வது வாக்குரிமை பெற்ற மக்களின் கடமை.
முகம்
மட்டும் கொண்ட தலைமையும் முரண்பட்ட கொள்கையும் மக்களாட்சிக் கருத்தியலில் நெடுநாள் காலுன்றாது. அது நேற்றைய மழையில் முளைத்த இன்றைய காளான். காலத்தின் சூழல் கட்சிகளின் கருத்தியலும், கவர்ந்திழுக்கும் கொள்கைகளும் சற்று ஆழமாகக் கூர்ந்து கவனிக்கப்படவேண்டும். ஆட்சி, ஆளுகை, நிர்வாகம் என்னும் கூறுகளை உள்ளடக்கிய தலைமைத்துவம் கூர்ந்து கணிக்கப்படவேண்டும். தலைமையின் தன்மையும் தனித்துவமான கொள்கையும் அரசியல் தளத்தில் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டும்.
மக்களாட்சி
மாண்புற மக்கள் பிரதிநிதிகள், ‘மாண்புமிகு’ என
அடைமொழி கொண்டோர் மாண்புடனே என்றும் திகழவேண்டும். எளிமையான, ஊழலற்ற, மக்களுக்காக அரசியல் தளத்தில் தன்னலமற்றுப் பணியாற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு கொண்ட அரசியல் தலைவர்களைக் காண்பது இன்று அரிதாகிப் போனது. “மக்களுடைய நலன்களுக்காகப் பாடுபடுவதை விட அழகு மிக்கதும் அற்புதமானதும் எதுவும் அகிலத்தில் இல்லை” என்று அறிவித்து, வியட்நாம் மக்களுக்காகவே தன் வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தவர் ஹோசிமின். இந்திய மண்ணின் விடுதலை கால வரலாற்றில் முன்னின்ற மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், அபுல்கலாம் ஆசாத், அண்ணல் அம்பேத்கர் போன்றோரையும், தமிழ்நாட்டு மண்ணில் பெரியார், காமராசர், ஜீவானந்தம், அண்ணா போன்றோரையும் இனி காண்பது அரிது.
மக்களாட்சி
அமைப்பு முறையில் கட்சி அரசியலில் தலைமை குறித்த தெளிவுகள் நாம் கொண்டிருக்கவேண்டும். தலைமை - ஆளுமை கொண்டதாக இருக்கிறதா? ஆளுமைக்கான தலைமைத்துவப் பண்பின் வரையறை என்ன? தன்னலம் துறப்பது, பொதுநலம் பேணுவது, தொலைநோக்குப் பார்வை கொள்வது, தெளிந்த சிந்தனை கொள்வது, உறுதியான நிலைப்பாடு கொள்வது, வளமான திட்டங்கள் மேற்கொள்வது... என்பதெல்லாம் தலைமைத்துவ ஆளுமையின் வரையறைகளாகக் கணிக்கப்பட வேண்டும்.
இன்று
மக்களாட்சி அமைப்பு முறையில் நாம் காணும் தலைமை யாருக்கான தலைமையாக இருக்கிறது? என்பதை ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. மக்களாட்சி அரசியல் முறை என்றாலும், இன்றைய காலச்சூழலில் தலைமை யாருக்கானதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது?
தலைமையைத்
தேர்ந்தெடுக்கும் காரணங்கள் என்ன? காரணிகள் என்ன? என்ற தெளிவை நாம் பெற வேண்டும். அப்போதுதான், தலைமையைத் தேர்ந்தெடுப்பதன் சூட்சுமத்தை உணரமுடியும். முகத்திரை கொண்ட தலைமையின் ‘மறை-முகம்’ அறியமுடியும். 140 கோடி மக்களின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும் நாடாளுமன்றமும் சட்டப் பேரவைகளும் இன்று எவ்வளவு தரம் தாழ்ந்து இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது. கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு, குடிமக்களுக்கான உரிமைகளுக்காக, உடைமைகளுக்கான, வாழ்வு நிலைக்கான கொள்கைகளைத் திரட்டுவதும், வாழ்வாதாரத்தை உயர்த்துவதும், வளங்களை மேன்மைப்படுத்துவதும் நலமான விவாதமாக அமைய வேண்டிய தளம் கூச்சலும் குழப்பமும் புகழ்ச்சியும் துதியும் கொண்ட அநாகரிகத்தின் சரணாலயம் ஆகிப்போனது.
மக்களாட்சியில்
வாழ்வதாக நாம் மார்தட்டிக் கொண்டாலும், அந்த மக்களாட்சி முடக்கப்பட்டு வருகிறது என்பதை அறியாமலே வாழ்ந்து வருகிறோம். மக்களுக்கான அரசியலாக இது அமையாமல், மக்களைப் பிரித்தாளும் மதவாத அரசியல் கொள்கைகளாலும், பிரிவினை எண்ணங்களாலும், சமயச்சார்பற்றத்தன்மை களையப்பட்டு, ‘ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே இனம், ஒரே தேர்தல்...’ என ஒற்றைப் புள்ளியை
நோக்கிப் பயணிப்பது பேராபத்திற்கு இட்டுச்செல்கிறது என்பதை அறியாமலே இருக்கிறோம். நாம் விழிப்பதற்குள் நம்மை விழுங்குவதற்குப் புறக்காரணிகள் தயார் நிலையில் இருக்கின்றன.
மக்களாட்சி
என்பது எல்லாரும் இன்புற்றிருக்கும் சமூக அமைப்பை, வாழ்வியலை வழங்கக்கூடியது. குடிமக்கள் பொறுப்புடனும், அறிவார்ந்த அரசியல் தெளிவுடன் பங்கேற்கும்போதுதான் அது நமக்கு நன்மை பயக்கக்கூடியதாகத் தொடரச் செய்ய முடியும். ஆனால், மக்களாட்சி அரசியல் அமைப்பின் மாண்பு உணராமலும், மதிப்பீடு அறியாமலும் வாழ்ந்து வருகிறோம். 78 ஆண்டுகால விடுதலை இந்தியாவில், மக்கள் மத்தியில் விடுதலைக்கான அறிவும் உணர்வும், மக்களாட்சிக்கான சிந்தனைகளும் செயல்பாடுகளும் போதிய அளவு புகட்டப்படவில்லை என்பதே கவலையளிக்கும் எதார்த்தம்.
மக்களாட்சியை
நாம் முறைப்படுத்துவோம்; அரசியல் அறிவு பெறுவோம்; ஆளுமைத் தெளிவு பெறுவோம்; மக்கள்மையச் சிந்தனைகளில் சீர்திருத்தம் கொள்வோம்; மாண்புறு மக்களாட்சியை மலரச் செய்வோம்!
அனைவருக்கும்
இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்