விண்ணை முட்டும் கோபுரங்களும், கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீடுகளின் புள்ளி விவரங்களும் மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதார வலிமையைக் காட்டிவிட முடியாது. உண்மையான பொருளாதாரம் என்பது, எளிய மனிதர்களின் உழைப்பிலும், தெருவோரப் பட்டறைகளிலும், சிறிய தொழிற்சாலைகளிலும், கிராமப்புறக் கைவினைப் பொருள்களிலுமே உயிர்ப்போடு இயங்குகிறது.
ஒவ்வோர்
ஆண்டும் ஆகஸ்டு 30-ஆம் தேதி இந்தியத் திருநாடு தேசிய சிறுதொழில் தினத்தைக் (National Small Industry Day) கொண்டாடுகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் உற்பத்தியையும் பாரம்பரியக் கலைகளையும் பாதுகாக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (Micro, Small and Medium Enterprises - MSMEs) கௌரவிப்பதே இந்நாளின் நோக்கமாகும்.
ஆனால்,
இன்றைய சூழலில் இந்தக் கொண்டாட்டங்கள் வெறும் காகித அளவிலான சடங்காக மாறியதுதான் கவலைக்குரிய எதார்த்தம். ‘தொழில்துறை வளர்ச்சி’
என்ற பதத்தில் இன்று ஒன்றிய பா.ச.க.
அரசு முழங்கும் முழக்கங்களுக்கும், களத்தில் சிறுதொழில் முனைவோரின் உண்மையான வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிகவே பெரிது. நாளுக்கு நாள் அது அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான் பேரவலம்.
இந்தியப்
பொருளாதாரத்தில் சிறுதொழில்துறை ஆற்றும் பங்கு அளப்பரியது; அது மறுக்க முடியாதது மட்டுமன்று; என்றும் மறைக்க முடியாததும் கூட. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு தொழில்துறை 30 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்களிப்பை அளிக்கிறது என்பதே பேருண்மை. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 45 விழுக்காட்டிற்கும் மேல் வகித்து, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதே இத்துறைதான். மேலும், விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, ஏறக்குறைய சுமார் 11 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவதும் இந்தத் துறைதான்.
அவ்வாறே,
பெருநகரங்களில் மட்டுமே குவிந்து கிடக்கும் பொருளாதார வாய்ப்புகளைச் சிறு நகரங்களுக்கும், கிராமப் புறங்களுக்கும் கொண்டு சென்று, மண்டலச் சமநிலை வளர்ச்சியை உறுதி செய்வதும் இந்த எளிய வணிகங்களே! மேலும், சுயசார்பு மற்றும் மகளிர் முன்னேற்றம் போன்றவற்றிக்கு வித்திட்டதும் இத்துறையே! அதாவது, கிராமப்புறச் சுய உதவிக் குழுக்கள் முதல் இரண்டாம் கட்ட நகரங்களின் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனங்கள் (Start-ups) வரை,
ஏராளமான பெண்களும்-இளைஞர்களும் சொந்தக்காலில் நிற்க இத்துறை பெரும் துணைபுரிகிறது என்பதே உண்மை!
‘சிறுதொழில் நிறுவனங்கள் நாட்டின் முதுகெலும்பு’ என்று
வாய்மொழியாகப் போற்றப்பட்டாலும், கடந்த பன்னிரண்டு ஆண்டு காலமாக மத்திய பா.ச.க.
அரசு எடுத்த தவறான மற்றும் தன்னிச்சையான பொருளாதார முடிவுகளால் இத்துறை சந்தித்த பின்னடைவுகள் வரலாற்றில் என்றும் மறக்க முடியாதவை.
குறிப்பாக,
2016-ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட இரவோடு இரவான பண மதிப்பிழப்பு நடவடிக்கை,
ரொக்கப் பணப்புழக்கத்தை மட்டுமே நம்பி இயங்கிவந்த சிறு, குறு நிறுவனங்களின் மீது தொடுக்கப்பட்ட பெரும் தாக்குதலாகும். தினசரி கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்; மூலப்பொருள்களை வாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான பட்டறைகள் மூடப்பட்டன. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எளிதாக மாற முடிந்தது; ஆனால், நாட்டின் மூலைமுடுக்குகளில் இருந்த எளிய சிறு வணிகர்கள் மீள முடியாத கடனில் மூழ்கினர்.
மேலும்,
முறையான தயாரிப்புகள் இன்றி, சிக்கலான வரி அடுக்குகளோடு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.
வரிவிதிப்பு, சிறுதொழில் முனைவோருக்குப் பெரும் சுமையாகவே மாறியது. பெரிய நிறுவனங்கள் கணக்கு வழக்குகளைப் பராமரிக்கத் தனித் தணிக் கையாளர்களை நியமித்துக்கொண்டன. ஆனால், சிறிய கடைகளையும் பாத்திரப் பட்டறைகளையும் விசைத்தறிகளையும் வைத்திருந்த எளிய மனிதர்கள், சிக்கலான கணக்கீட்டியல் (ஆடிட்டிங்) முறைகளாலும், தாமதமான வரித் திரும்பப் பெறல் முறையினாலும் நசுக்கப்பட்டனர்.
அவ்வாறே,
அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்த போதிலும், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சிறுதொழில் முனைவோருக்கு எளிய முறையில் கடன் வழங்குவதில் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன. மேலும், பிணையம் இல்லாக் கடன்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. அதேவேளையில், பல்லாயிரக்கணக்கான கோடிகளைப் பாக்கி வைக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கடன்கள் எளிதில் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இன்றைய
ஒன்றிய அரசின் தொழிற்கொள்கை என்பது ‘அம்பானி, அதானி போன்ற சில குறிப்பிட்ட கார்ப்பரேட் குழுமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி’
என்ற கண்ணோட்டத்திலேயே இயங்குகிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம் என அனைத்துத் துறைகளிலும்
ஒருசில பெரிய நிறுவனங்களின் ஆதிக்கமே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல தலைமுறைகளாகத் தொழில்
செய்துவந்த சிறு உற்பத்தியாளர்கள், கார்ப்பரேட் அரக்கர்களின் விலைப்போட்டியையும், சந்தை ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.
மேலும்,
உள்ளூர் கைவினைப் பொருள்கள், தறி நெசவு, மட்பாண்டங்கள் மற்றும் பாரம்பரிய உணவு உற்பத்திகள், கார்ப்பரேட்டுகளின் எந்திரமயமாக்கப்பட்ட பொருள்களின் வருகையால் பாரம்பரியக் கலைகள் வீழ்ச்சியுற்று அழியும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளன. சிறுதொழில்கள் அழியும்போது, அவற்றில் பணியாற்றிய பல கோடி உழைப்பாளர்களின்
வாழ்வாதாரம் பறிபோய்விட்டது. இது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
இத்தகைய
சூழலில், அரசு தரப்பில் ‘உத்யம் பதிவுத் தளம்’
(Udyam Portal), ‘பிரதமரின்
விஸ்வகர்மா திட்டம்’,
‘Prime Minister\'s Employment Generation Programme (PMEGP)’ போன்ற பல வண்ணமயமான திட்டங்கள்
விளம்பரப்படுத்தப்படுகின்றன.
ஆனால், இவற்றின் பலன்கள் உண்மையில் எளிய கடைக்கோடி மனிதனைச் சென்றடைகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!
சிக்கலான
‘ஆன்லைன்’ விண்ணப்பச்
செயல்முறைகள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக, உண்மையான சிறு தொழிலதிபர்கள் இத்திட்டங்களின் பலன்களைப் பெறமுடிவதில்லை. வெறும் புள்ளிவிவரக் கணக்குகளைக் காட்டி ‘வளர்ச்சி அடைந்துவிட்டோம்’ என்று
அரசு கூறுவது சுயமரியாதையோடு உழைக்கும் சிறு வணிகர்களைக் கேலி செய்வதாகவே உள்ளது.
இந்தியப்
பொருளாதாரம் சரியான பாதையில் மீண்டெழ வேண்டுமானால், அரசு உடனடியாகத் தனது அணுகுமுறையினை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சிறு, குறு நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில், பிணையற்றக் கடன்கள் தாமதமின்றிக் கிடைக்க வங்கிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். சிறு வணிகர்களுக்கு ஏற்ற வகையில் ஜி.எஸ்.டி.
முறையை மிகவும் எளிமைப்படுத்தவேண்டும்; சிறுதொழில்களுக்கான வரி விகிதங்களைக் குறைக்கவேண்டும்.
கார்ப்பரேட்
நிறுவனங்களின் மாபெரும் ஆதிக்கத்திலிருந்து உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கச் சிறப்புச் சந்தை மண்டலங்களையும், கொள்முதல் முன்னுரிமைகளையும் அளிக்க வேண்டும். மேலும், பருத்தி, இரும்பு, நெகிழி போன்ற மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, சிறு நிறுவனங்களுக்கு நியாயமான விலையில் மூலப்பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.
இறுதியாக,
சிறுதொழில் என்பது வெறும் வணிகம் மட்டுமல்ல; அது பல கோடி குடும்பங்களின்
நம்பிக்கை, சுயமரியாதை மற்றும் வாழ்வாதாரம். சிறு தொழில்களை நசுக்கிவிட்டு, அம்பானி, அதானி போன்ற ஒருசில பன்னாட்டு நிறுவனங்களை மட்டும் வாழவைக்கும் தொழில் வளர்ச்சி ஒருபோதும் நீடித்த, நிலையான வளர்ச்சியாகாது. தேசிய சிறுதொழில் தினமான இந்த ஆகஸ்டு 30-இல், வெறும்
புகழாரங்களோடு நின்றுவிடாமல், சிறுதொழில் முனைவோரின் உண்மையான வலியை உணர்ந்து அரசு செயல்படவேண்டும்.
‘சிறுதொழில் வாழ்க!’ என்ற முழக்கம் காகிதங்களில் முழங்குவதைவிட, பட்டறைகளின் சத்தத்திலும், தொழிலாளர்களின் இன்முகத்திலும் எதிரொலிக்கவேண்டும். அப்போதுதான் இந்தியாவின் உண்மையான பொருளாதாரம் நிமிர்ந்து நிற்கும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
“இன்ன இன்புறும் இனிய இத் திருப்பெயர் தன்னைப்
பன்ன,
இன்புறும் பன்னிய வாயும், உள் வணங்கி
உன்ன
இன்புறும் உன்னிய உன்னமும், இதனைத்
துன்ன
இன்புறும் துன்னிய திசையெலாம் அன்றோ!” (எண் 99)
என்கிறது
வீரமாமுனிவரின் ‘தேம்பாவணி’
எனும் தேன் தமிழ்க் காவியம். அதாவது, இயேசுவின் இனிய திருப்பெயரை உச்சரிப்பதனால் உதடுகளும், நினைப்பதனால் மனமும், அதை அடைவதனால் ஆனந்த வாழ்வும், இத்திருப்பெயர் செல்லும் இடமெல்லாம் கிடைத்திடுமே என்று இயேசுவின் திருப்பெயரின் மகிமையையும், அத்திருப்பெயர் விதைக்கப்படும் இடத்திலும் மக்கள் மனங்களிலும் வாழ்விலும் ஏற்படும் பெரும் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தாக்கத்தையும் பதிவு செய்கிறார் வீரமாமுனிவர்.
இயேசுவின்
திருப்பெயரைச் சுமந்து, மக்களுக்கு அறிவிக்க மறைபரப்புப் பணியை மேற்கொண்டு இந்திய மண்ணில் தடம்பதித்த திருத்தூதர் தோமா, அவரைத் தொடர்ந்து மதுரை மறைத்தளத்தில் சேசு
சபையார், அதன் வழியில் 17-ஆம் நூற்றாண்டில் புதுவை மண்ணில் மறைபரப்புப் பணியைத் திறம்பட மேற்கொண்டு அழியாத, ஆழமான சுவடுகளைப் பல்வேறு பணித்தளங்களில், பணிக்கூறுகளில் பதித்து, மக்கள் மனங்களில் நீங்காது இடம் பிடித்திருப்பவர்கள் ‘பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையினர்’(MEP - Missions
Etrangeres de Paris / Paris Foreign Missions Society).
“மறைப்பணி என்பது திரு அவையின் இதயம்” என்கிறார் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ். தங்களின் தாய்நாடு, தாய் மொழி, உறவு, உடைமைகளைத் துறந்து, பண்பாட்டு நாகரிகங்களை விடுத்து, முகவரியைத் துறந்து புதிய இடங்களை, பணித்தளங்களைத் தழுவிக்கொண்டு, புதிய பண்பாட்டுச் சமூக விழுமியக் கூறுகளைத் தம்வயப்படுத்தி, மக்கள் மொழி பேசி, அவர்களின் மண்சார்ந்த சமூக மேம்பாடுகளில் திட்டமிட்டு, அவர்களின் களம் சார்ந்த அரசியலில் ஈடுபட்டு மனித மாண்பையும், மானுடநேயத்தையும், மகத்தான வாழ்வையும் அவர்கள் காண்பதற்காக இயேசுவின் திருநாமத்தை உரக்க உச்சரித்தவர்கள் இந்த MEP மறைப்பணியாளர்கள்.
‘எங்கள் வாழ்வும் வளமும் இம்மக்களுக்கே’ என்ற
முழக்கத்தோடு நிறைவான அருளையும் பொருளையும் தந்து, மறைத்தளங்களை வளமிக்க நம்பிக்கை கொண்டோரின் தளமாகக் கட்டமைத்ததுடன், மேய்ப்புப் பணிகளுக்கான நேர்த்தியான திட்டங்களும் செயல்பாடுகளும் உருவாக்கியிருப்பதை இந்திய மறைப்பணியின் வரலாற்றுப் பக்கங்களில் எங்கும் காணலாம். இரண்டரை நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் இந்த மகத்தான மறைப்பணியின் மாண்பினை உணர்ந்து, பாண்டி - கடலூர் உயர் மறைமாவட்டம், MEP சபையினர் புதுவை மறைப்பணித்தளத்தில் மேற்கொண்ட இறைப்பணியை நன்றியுணர்வோடும் மகிமையோடும் பெருமையோடும் கொண்டாடி மகிழ்கிறது. இவ்வேளையில், ‘நம் வாழ்வு’ வார இதழ் சிறப்பிதழை வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.
MEP மறைப்பணியாளர்களின் இப்பணிகள் உலகெங்கும் வாழும் தமிழ்க்கூறும் நல்லுலகிற்குச் சென்று சேரவேண்டும் என்ற நல்லுணர்வோடு இச்சிறப்பிதழுக்கு ஆசி வழங்கியுள்ள பாண்டி - கடலூர் உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களுக்கும், இப்பணியை முன்னின்று எடுத்துச் செல்கின்ற யூபிலி வரலாற்றுப் பணிக்குழு உறுப்பினர்களுக்கும், அவர்களை ஒருங்கிணைத்திருக்கும் அருள்முனைவர் L.A. அருள்புஷ்பம்
அவர்களுக்கும் ‘நம் வாழ்வு’ தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
திரு
அவையின் மறைப்பணி மங்காது ஒளி வீசட்டும்! பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டத்தில் MEP மறைப்பணியாளர்கள்
உருவாக்கிய மறைப்பணித் திட்டங்களும் இலக்கும்
நோக்கமும் வளர்ந்து உயர்ந்திடவும், அதனால் மக்கள் பணி செழித்திடவும் இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் வாசகர்கள் சார்பாக ‘நம் வாழ்வு’ மனதார வாழ்த்துகிறது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர் செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும்
வல்ல தரசு’
(குறள் 385)
என்றார்
ஐயன் வள்ளுவர். அதாவது, பொருள் வரும் வழிகளை உருவாக்குவதும், வந்த பொருளைத் தொகுப்பதும், தொகுத்தவற்றைப் பிறர் கவராமல் காப்பதும், காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவதும் ஆகிய இவற்றில் திறமை மிக்கதே சிறந்த அரசாகும்.
அதன்
அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக, தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.)
அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (2026-2027) அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘மாற்றம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த ஒரு புதிய அரசு, தாக்கல் செய்யும் முதல் வரவு-செலவுத் திட்டம் என்பதால், இதன் மீதான மக்களின் எதிர்பார்ப்பு மலைபோல் குவிந்திருந்தது.
அறம்,
பொருள், இன்பம் எனும் முப்பால் கோட்பாட்டை மையமாகக் கொண்டு, பத்து தூண்களைக் கொண்ட ‘வெற்றித் தமிழகம் - தொலைநோக்குத் திட்டங்கள்’ என்ற
வகையில் இந்த நிதிநிலை அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் இலக்கும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும்,
வள்ளுவன் வகுத்த இலக்கணப்படி, நிதி ஆதாரங்களைப் பெருக்கி, நிதி ஒழுங்கைப் பேணி, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பேராற்றல் இந்தப் பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளதா? அல்லது இது வெறும் வாக்குறுதிகளின் வண்ணப்பூச்சாக அமைந்துள்ளதா? என்ற கூராய்வு மிகவும் அவசியமாகிறது.
‘Gen-Z’ எனும் இளைய தலைமுறையினர், மாணவர்கள் மற்றும் மகளிரை இலக்காகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் த.வெ.க.
அரசின் தொலைநோக்குப் பார்வையை எடுத்தியம்புகின்றன. குறிப்பாக, கல்லூரி மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவும், எண்மத் தொழில்நுட்ப இடைவெளியைக் குறைக்கவும் அறிவிக்கப்பட்டுள்ள ‘வெற்றி மடிக்கணினித் திட்டம்’(ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு) பாராட்டுக்குரியது. அதேபோல, 12 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், 1 இலட்சம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் தொழில்முறைத் திறன் பயிற்சி அளிக்கும் ‘வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்’
(ரூ. 150 கோடி) இளையோரின் வேலைவாய்ப்புத் திறனை உயர்த்தும். தொழில்பயிற்சி நிறுவனங்களில் (ITI), செயற்கை
நுண்ணறிவு (AI) பிரிவுகள்
தொடங்குவது காலத்தின் தேவைக்கேற்ற நகர்வாகும்.
அவ்வாறே,
தமிழ் வளர்ச்சி, விளையாட்டுத் துறை, மின்சார வாகன விற்பனைக்கான ஊக்கத்தொகை மற்றும் கூவம்-அடையாறு நதிகளை மீட்டெடுக் கும் நீண்டகால உறுதிமொழிகள் ஆகியவை வரவேற்கத்தக்கவை. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம், 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டம், இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் விலையில்லா மின்சாரம் போன்ற அறிவிப்புகள் எளிய மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும்,
கிராமப்புறங்களில் காங்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான அலகுத் தொகையை ரூ. 3.10 இலட்சத்திலிருந்து ரூ. 5 இலட்சமாக உயர்த்தியிருப்பது (ரூ. 3,500 கோடியில் 70,000 வீடுகள்) வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்குப் பெரும் கொடையாகும். அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இருந்த காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை நீடித்துள்ளது பாராட்டுக்குரியதே!
மிகவும்
குறிப்பிடத்தக்க வகையில், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கூடுதலாக 25 நாள்கள் சேர்த்து 150 நாள்கள் வேலை வழங்கும் ‘வெற்றி 150’ திட்டம் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு 100% மானியத்தில் ஆடுகள்
வழங்கும் ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்’
(ரூ. 110 கோடி) ஆகியவை கிராமப்புறப் பொருளாதாரத்திற்குப் புத்துயிரூட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான 1,000 நடமாடும் மருத்துவ மையங்கள் மூத்தோரைப் பேணுதல், சமூகத்தில் மானுட மாண்பினைக் காத்தல் எனும் அறநெறி மதிப்பீட்டின்மீது இவ்வரசு கொண்டுள்ள தொலைநோக்குச் சிந்தனையை வெளிக்காட்டுகிறது.
ஆயினும்,
அரசியல் ரீதியாகப் பல வாக்குறுதிகளைத் தந்து
அதிகாரத்தைப் பிடித்த இந்த அரசு, நிதி எதார்த்தங்களை எதிர்கொள்ளும்போது தடுமாறுவதையும் இந்த நிதிநிலை அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.
குறிப்பாக,
ஒரு மாநிலத்தின் அறிவு மூலதனத்தைப் பெருக்கவேண்டிய அரசு, கல்வித் துறைக்கான நிதியைக் குறைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதாவது, 2025-26 ஆம் ஆண்டில் ரூ. 46,767 கோடியாக இருந்த பள்ளிக் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு, நடப்பு பட்ஜெட்டில் ரூ. 44,527 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இடைக்காலப் பட்ஜெட்டில் ரூ. 48,534 கோடி சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும். அதே போல, உயர் கல்வித்துறைக்கு கடந்த ஆண்டில் ரூ. 8,494 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, தற்போது ரூ. 8,393 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெற்றி மடிக்கணினித் திட்டத்தைக் கொண்டு வந்துவிட்டு, அடிப்படை உள்கட்டமைப்புக்கான நிதியைக் குறைப்பது முரண்பாட்டின் உச்சமாகவே பார்க்கப்படுகிறது.
மேலும்,
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் மாத உதவித்தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் மற்றும்
ஆண்டுக்கு 6 இலவசச் சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும், பெண்களுக்கான
பேருந்து கட்டணமில்லாப் பயண விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 4,000 உதவித்தொகை குறித்தும்
பட்ஜெட்டில் ஒரு வார்த்தைகூட இல்லை என்பதும் பெரும் ஏமாற்றமாகவே பார்க்கப்படுகின்றன. அவ்வாறே, தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்த அறிவிப்போ, பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான கோரிக்கை குறித்த அறிவிப்போ இதில் இடம் பெறவில்லை என்பதும் பெரும் கவலையளிக்கிறது.
மேலும்,
கூர்ந்து கவனிக்கத்தக்க வகையில் இந்த நிதிநிலை அறிக்கையில், நிதி ஒதுக்கீட்டு முரண்பாடும் வெளிப்படுகிறது. அதாவது, ஒன்றிய அரசின் புதிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (வி.பி.ஜி.
ராம்ஜி திட்டம்) மாநில அரசு தன் பங்காக ரூ. 5,057 கோடியை ஒன்றிய அரசுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், கூடுதலாக 25 நாள்கள் வேலை வழங்கி 150 நாள்களாக உயர்த்தும் ‘வெற்றி 150’ திட்டத்திற்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி வெறும் ரூ. 100 கோடி மட்டுமே என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில்,
“தமிழ்நாடு அரசு இதுவரை வாங்கியுள்ள கடன்களை முழுமையாக அடைத்து முடிக்க, இன்றிலிருந்து குறைந்தது 50 ஆண்டுகள் ஆகும்” என்ற மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து நிதித்துறைச் செயலர் எம்.ஏ. சித்திக்கின் எச்சரிக்கையும்,
நிதியமைச்சரின் புள்ளிவிவரங்களும் தமிழ்நாட்டின் கடன் மேலாண்மையில் உள்ள ஆபத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. அரசுத் தரப்பில் திறம்பட வரி வருவாயைப் பெருக்காமல், கடனை நம்பியே திட்டங்களைச் செயல்படுத்துவது எதிர்காலச் சந்ததியினரின் தலையில் பேரிடியை இறக்குவதற்குச் சமம். “ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை ரூ. 20 இலட்சம் கோடியாக உயரும்” என்ற மேனாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் நிதித்துறை சார்ந்த மதிப்பீடுகள், த.வெ.க.
அரசு நிதி நிர்வாகத்தில் சந்திக்கவிருக்கும் பெரும் சவாலை சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும்,
அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளில் (Tenders) வெளிப்படைத்தன்மையைக்
கொண்டுவர எடுத்திருக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையே! பிற துறை ஒப்பந்த நிறுவனங்களும் பங்கேற்கலாம் என்ற புதிய முறை, அரசுக்குச் செலவைக் குறைத்தாலும், பணிகளின் தரத்தையும் உறுதியையும் பராமரிப்பதில் அரசு சற்றும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்றே நாம் விரும்புகிறோம்.
இறுதியாக,
மாணவர்கள், இளைஞர்கள், மகளிருக்கான புதிய திட்டங்கள் மூலம் அரசு தன் ‘தொலைநோக்குப் பார்வையை’
நிரூபிக்க முயன்றிருந்தாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததும், கல்வி நிதிக்குறைப்பும், விண்ணை முட்டும் கடன் சுமையும் எளிய மக்களின் ‘தொலை தூரக் கனவுகளை’ இன்னும் தூரமாக்கியுள்ளன.
ஆகவே,
நிதி ஒழுங்கோடும், மக்கள் நலச் சிந்தனையோடும் நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே இந்த ‘வெற்றித் தமிழகம்’ உண்மையான வெற்றியைச் சுவைக்கும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
சனநாயகத்தின் உன்னதமான நோக்கம், மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை அமைப்பதாகும். ஆனால், இன்றைய சூழலில் மத்தியிலும் மாநிலங்களிலும் (தமிழ்நாடு உள்பட) நிலவும் ஆட்சி அமைப்புகள் தங்களின் உண்மையான சனநாயகக் கடமையிலிருந்து விலகி, ஒருசில அதிகாரச் சக்திகள் மற்றும் நிதி மூலதனக் குழுக்களின் கரங்களில் சிக்குண்டு கிடக்கின்றன என்பதுதான் எதார்த்தமான கசப்பு மிகுந்த உண்மை.
இத்தகைய
சூழலில், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவமும், அமைச்சரவைச் செயலகங்களின் அதிகாரப் பகிர்வுகளும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே மாறிப்போயின.
‘அரசியல்’ என்பது கொள்கை வழிபட்டது அல்ல; மாறாக, அது முதலீடு, இலாபம், அதிகாரம் என்ற வணிகக் கணிதமாக இன்று சுருங்கிவிட்டது. திரைப்படங்களுக்கு நிதி அளிக்கும் ‘நிதியாளர்கள்’ (Financiers) போல இன்றைக்கு அரசியலையும், அரசியல் கட்சிகளையும், ஏன்... ஆட்சிகளையுமே பின்னணியில் இருந்து இயக்கும் ‘அரசியல் நிதி முதலீட்டாளர்கள்’ (Political Financial Investors) உருவாகிவிட்டார்கள். சிறுமதி கொண்ட இந்த வெகுமதியாளர்களின் பணபலத்தாலும், பின்புல ஆதிக்கத்தாலும் ஆட்சி அதிகாரத்தில் அமர்பவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகச் செயல்படாமல், வெறும் பொம்மைகளாகப் பல நேரங்களில் உலா
வருகிறார்கள்.
மத்தியிலும்
சரி, மாநிலத்திலும் சரி, இன்றைய ஆட்சி நிர்வாக அமைப்பில் அமைச்சர்களுக்குத் தங்களின் துறை சார்ந்த அடிப்படை அறிவோ, அரசின் சட்டதிட்டங்கள் குறித்த புரிதலோ, ஏன்... ஓர் அமைச்சகத்தின் அன்றாடக் கடமைகள் என்ன என்பது பற்றிய தெளிவோ சிறிதும் இல்லாமல் இருப்பதுதான் இந்தச் சனநாயகத்தின் மிகப்பெரிய அவலம்.
அமைச்சரவை
என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவார்ந்த தலைவர்களின் வழிகாட்டுதலில் இயங்க வேண்டும். ஆனால், தொழில்நுட்பமும் சட்ட நுணுக்கங்களும் நிர்வாகத் திறனும் தேவைப்படும் இக்காலகட்டத்தில், தங்களின் தகுதியைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் வெறும் அரசியல் அறிமுகம், நட்பு, நெருக்கம் போன்றவற்றை மட்டுமே தகுதியாகக் கொண்டு அமைச்சர்களாகிவிடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குடிமைப்பணி அதிகாரிகளின் கைகளில் ஆட்சி நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போகிறது அல்லது நிழல் உலக நிதி முதலாளிகளின் கட்டளைக்கேற்பக் கோப்புகள் நகரத் தொடங்குகின்றன.
ஒன்றியத்தில்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க.
அரசு எதேச்சதிகாரப் போக்கோடு செயல்படுகிறது என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. எனினும், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் ஜோசப் விஜய், அதே மோடி மாடலைத் தனது ஆட்சி மாடலாகக் கொண்டிருப்பதுபோல் தோன்றுவது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில்
எந்தவொரு கொடூர நிகழ்வு நடந்தாலும் வாய் திறக்காதவர்களாகவே இருவரும் வலம் வருவது, ‘மக்கள்மைய அரசியலை’ கேள்விக்குறியாக்குவதோடு கேலிக்குள்ளாக்குவதாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலைய மரணங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பழனி கோவில் நிலம் மோசடியாகத் திட்டமிட்டு விற்கப்பட்ட பெரும் அதிர்ச்சியான நிகழ்வு, காவிரி நதிநீர்ப் பிரச்சினை, மேகதாது அணைப் பிரச்சினை, ‘நீட்’ தேர்வு குறித்த மாணவர் போராட்டம்... இவை எதற்கும் அரசு பொறுப்பேற்பதில்லை.
டெல்லியில்
‘நீட்’ தேர்வுக்கு
எதிராக நாடு தழுவிய மாணவர் போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரியும்போது, முதலமைச்சரும், ஒட்டுமொத்த அமைச்சரவையும் ‘ஜனநாயகன்’
திரைப்படத்தைப்
பார்த்து உணர்ச்சிப்பெருக்கில் மிதக்கிறார்களே தவிர, நாட்டைப் பற்றிய கவலை இல்லை.
தமிழ்நாட்டின்
பல பகுதிகளிலும் சென்னையிலும் ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடியபோது, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தவில்லை. இராகுல் காந்தி கைது செய்யப்பட்ட பிறகே பா.ச.க.-வின் பெயரைக் கூடக் குறிப்பிடாமல் ஒரு மென்மையான கண்டன அறிக்கையோடு தன் கடமையை முடித்துக் கொண்டது.
அரசமைப்புச்
சட்டம் வழங்கிய போராட்ட உரிமைகளைக்கூட இவ்விரு அரசுகளும் நசுக்குகின்றன.
பல இடங்களில் போராடிய மாணவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் காவல்துறை கடுமையாகத் தாக்கியுள்ளது. ‘தெருவில் இறங்கிப் போராடக் கூடாது’ என்ற அமைச்சர்களின் கூற்று, சனநாயகத்தைப் பற்றிய அவர்களின் அற்பப் புரிதலையே காட்டுகிறது. போராட்டம் என்பதே வீதியில் இறங்கி மக்களுக்காகக் குரல் கொடுப்பதுதானே?
‘நீட்’ தேர்வு முறைகேடுகள் நாடெங்கும் பற்றி எரியும் பிரச்சினையாக இருக்கும்போதும் மௌனம் காப்பதும், விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்குவதும், விமர்சிப்பவர்களைக் கைது செய்வதும் நல்ல தலைமைக்கான அழகல்ல. ஒன்றியத்தில் மோடியை எதிர்க்கும் காங்கிரஸ், தமிழ்நாட்டில் விஜய்க்கு முட்டுக்கொடுப்பது அவர்களின் எதிர்கால அரசியலுக்கே ஆபத்தானது. தி.மு.க.
மீதான வன்மத்தால் சிறுமதியாளர்களின் தூண்டுதலுக்குப் பலியாகி இராகுல் காந்தி எடுத்த இந்தக் கூட்டணி முடிவு தவறானது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும்,
தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் இந்த அரசு காட்டும் மெத்தனப் போக்கு பெரிதும் கண்டிக்கத்தக்கது. “மேகதாது அணைப் பிரச்சினையில் டெல்லி எஜமானர்களைப் பகைத்துக்கொள்ளாமலும், ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரசுக்கு எதிராகப் பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்” என
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
மாநிலங்களவையில்
பா.ம.க. தலைவர்
அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, “காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள கீழ்பாசன மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியைப் பெறவேண்டும் என உச்ச நீதிமன்றத்
தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை” என
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி அளித்த பதில் தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயினும்,
“2018 பிப்ரவரி 16-ஆம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் சட்ட விதிகளைக் கணக்கில் கொள்ளாமல் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அளித்த பதில் ஏமாற்றமளிக்கிறது. அந்தப் பதில் உடனடியாகத் திரும்பப் பெறப்படவேண்டும்; மேகதாது திட்டம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு உட்பட்டது என்பது நிரூபிக்கப்படும் வரை அதற்கு எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் வழங்கக்கூடாது” எனப்
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய், காலம் தாழ்த்தி எழுதியுள்ள கடிதமும் பாராட்டத்தக்கதே!
காவிரி
ஆறு என்பது வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, தென்னிந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம். ஆனால், ஒன்றிய அரசின் இந்தத் துரோகப்போக்கிற்கு எதிராக வெறும் கடிதங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், வலுவான அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கவேண்டுமென்றே மக்கள் விரும்புகின்றனர். மேலும், வேகம் அல்ல விவேகமே இந்த அரசிற்கு வேண்டுமென அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இன்றைய
அரசியல் களம், கொள்கை அற்ற வெறும் ‘நிதி முதலீட்டாளர்களின்’ விளையாட்டு
மைதானமாக மாறிவிட்டது. அரசியலைப் பற்றிய போதிய தெளிவு இல்லாத, மக்கள் நலனில் அக்கறையற்ற, வெறும் விளம்பர வெளிச்சத்தில் மிதக்கும் நபர்களிடம் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டது.
இச்சூழலில்,
சிறுமதி கொண்ட வெகுமதியாளர்களால் நமது அரசியல் தினமும் சீரழிந்து கொண்டிருக்கிறது. இந்த அவலநிலை மாறவேண்டுமானால், சமூகப் பொறுப்பும், அரசியல் தெளிவும், சட்ட அறிவும் கொண்ட கற்றறிந்த இளைஞர்கள் துணிவோடு அரசியலுக்கு வரவேண்டும்.
அரசியல்
என்பது வெறும் வாக்கு வங்கி வியாபாரம் அல்ல; மாறாக, அது சமூக மாற்றம் மற்றும் மக்கள் சேவைக்கான கருவி என்பதை உணர்ந்த இளம் தலைமுறை பொறுப்பேற்க முன்வரவேண்டும்.
பணபலமும்,
திரையுலகச் செல்வாக்கும் மட்டுமே தகுதி என்று நினைக்கும் அரசியலை வீழ்த்தி, அறிவு சார்ந்த, கொள்கை சார்ந்த புதிய சனநாயகத்தை உருவாக்க கற்றறிந்த இளைஞர்கள் தலைமை ஏற்கவேண்டிய தருணம்
இதுவே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இந்திய சனநாயகத்தின் இதயமாகக் கருதப்படும் தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் வீதிகள், இன்றைக்கு அதிகாரத்தின் கொடுங்கோன்மைக்கும், ஒடுக்கப்பட்ட இளைய தலைமுறையின் வீரியம் கொண்ட நீதி முழக்கங்களுக்கும் இடையிலான பெரும் போர்க்களமாக உருவெடுத்துள்ளன.
தேசியத்
தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) உள்ளிட்ட
மத்திய அளவிலான போட்டித் தேர்வுகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் வினாத்தாள் கசிவு முறைகேடுகள், இலட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்களின் எதிர்காலக் கனவுகளையும், அவர்களின் பெற்றோரின் வாழ்நாள் உழைப்பையும் ஒரே நொடியில் சுக்குசுக்காக உடைத்தெறிந்துள்ளன.
இந்தத்
தொடர் அமைப்பியல் முறைகேடுகளையும், கல்வித்துறையின் சீரழிவையும் கண்டித்துத் தங்களின் உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடும் நமது நாட்டின் நாளைய தூண்களான மாணவர்கள் மீது, ஒன்றிய அரசும் டெல்லி காவல்துறையும் ஏவிவிட்டுள்ள தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சு அடக்குமுறைகள், இந்தியச் சனநாயகம் சந்தித்திருக்கும் மிகப்பெரிய பின்னடைவை உணர்த்துகின்றன.
தேர்வுத்தாள்கள்
சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதும், முறைகேடுகள் மூலம் தகுதியற்றவர்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதும் வெறும் கல்வித்துறை சார்ந்த தோல்வி மட்டுமல்ல; அது இந்த நாட்டின் ஆன்மாவிற்குச் செய்யப்படும் துரோகமாகும்.
எட்டு
இலட்சத்திற்கும் ஒன்பது இலட்சத்திற்கும் வினாத் தாள்களை முன்கூட்டியே விலைக்கு வாங்கும் நபர்களுக்கு எந்தவிதத் தகுதியும் அர்ப்பணிப்பும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட தகுதியற்றவர்கள் நாளைய தினம் மருத்துவராகவோ அல்லது நிர்வாக அதிகாரிகளாகவோ உருவெடுத்தால், அவர்கள் பறிக்கப்போவது சாதாரணப் பொதுமக்களின் உயிரையும், நாட்டின் எதிர்காலத்தையும்தான்.
அறிவு,
திறமை, உழைப்பு ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு, குடும்ப வறுமையிலும் கல்வி ஒன்றே தனக்கும் தன் குடும்பத்திற்கும் விடியல் தரும் என்ற நம்பிக்கையில் படிக்கும் சாமானிய வீட்டுப் பிள்ளைகளின் தகுதியை, பணபலம் மற்றும் அதிகாரத்திற்கு முன்னால் அடகு வைக்கும் இந்த வியாபாரத்தை எந்தக் கார்ப்பரேட் அரசாலும் நியாயப்படுத்த முடியாது.
தொடர்
முறைகேடுகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி,
கடந்த சில மாதங்களில் மட்டும் 21-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சோகமான விபரீத நிலை நிகழ்ந்த பிறகும், ஒன்றிய அரசு இத்தகைய கொடூரங்களைக் கண்டும் காணாமல் மௌனம் காப்பது அதன் பொறுப்பற்றத் தன்மையையே காட்டுகிறது.
கல்வித்துறை
முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி, கடந்த வாரம் ‘காக்ரோச் ஜனதா கட்சி’
(CJP) மற்றும்
பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை ‘உரிமைக்கான மாணவர் எழுச்சிப் போராட்டமாகவே’ வரலாறு
பதிவுசெய்திருக்கிறது.
டெல்லி இதுவரை கண்டிராத போராட்ட நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
24 நாள்களாகத்
தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்ட பிறகும், மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடாது களத்தில் உறுதியோடு நின்றது பாராட்டத்தக்கதே!
போராடும்
மாணவர்களின் பலத்தைக் குலைக்கவும், வெளிமாநிலங்களிலிருந்து ஆதரவாளர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்கவும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லி நோக்கி வரவிருந்த இரயில்கள் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. போராட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ இரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பாதைகளும் முடக்கப்பட்டன. ஊடகங்களில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை வெறும் 75,000 எனக் குறைத்துச் சித்தரிக்கப்பட்டாலும், அங்கே மாணவர்களை ஒடுக்குவதற்காக மட்டும் சுமார் 50,000 காவல்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பதே உண்மை. அமைதியான முறையில், அறவழியில் பேரணி சென்ற மாணவர்கள்மீது நடத்தப்பட்ட தடியடி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தில்
எதிர்க்கட்சித் தலைவர்கள், இக்கொடூர அடக்குமுறை குறித்து ஒத்திவைப்புத் தீர்மானங்கள் கொண்டுவந்து விவாதிக்கக் கோரிய போதிலும், அவையைத் தொடர்ந்து முடக்கி, பேசவிடாமல் செய்தது சனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும். தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் கோவை, விழுப்புரத்தில் மாணவர்கள் நடத்திய உண்ணாநிலை அறப்போராட்டங்களும், சென்னை தலைமைச் செயலகம் முன் நிகழ்ந்த எதிர்ப்புப்போராட்டமும் அகில இந்தியக் களமாக மாறியதை உறுதிப்படுத்துகின்றன.
பொதுவாக,
மக்கள் போராட்டங்கள் வெடிக்கும்போதெல்லாம் அவற்றை ஏதாவது ஒரு குறிப்பிட்ட அடையாளச் சட்டகத்திற்குள் அடைத்து ‘தேச விரோதிகள்’
என்றோ, ‘நகர்ப்புற நக்சல்கள்’
என்றோ முத்திரை குத்தி ஒடுக்குவது ஆட்சியாளர்களின் வழக்கமான உத்தி. ஆனால், இன்றைய ‘Gen Z’ தலைமுறை மாணவர்கள்
முன்னெடுக்கும் இந்த இயக்கம் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் சார்பற்றது; சாதி, மத, மண்டல எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த நாட்டின் எதிர்காலத்திற்காகக் குரல் கொடுக்கும் தூய்மையான குடிமக்கள் இயக்கமாகும்.
திரைப்படக்
கலைஞரும், சமூகப் போராளியுமான பிரகாஷ்ராஜ் சுட்டிக்காட்டியது போல, “இந்த நாட்டின்மீது சாமானிய மக்களுக்கு இருந்த நம்பிக்கை மெல்ல மெல்லப் போய்விட்டது; நம்மை ஒரு தலைவரோ, ஒரு கட்சியோ, ஒரு நீதிபதியோ காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை தகர்ந்துபோனதன் வெளிப்பாடே இந்தச் சனநாயகப் பற்றாக்குறை.” நீதி அமைப்புகளும், ஊடகங்களும், நாடாளுமன்ற சனநாயகமும் தங்களின் கடமையிலிருந்து விலகி நிற்கும்போது, மக்கள் தாங்களாகவே வீதிக்கு வந்து தங்களின் உரிமைகளைக் கேட்கும் சூழல் உருவாகிறது.
தேசத்தந்தை
மகாத்மா காந்தியடிகள், அரசமைப்புச் சட்டத்தைத் தந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
ஆகியோர் காட்டிய வழியில், வன்முறையற்ற அமைதியான முறையில் மக்கள் தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும் என்பதை இம்மாணவர் போராட்டம் உணர்த்துகிறது.
போராடும்
மாணவர்களை ‘தேசவிரோதிகள்’ எனச்
சித்தரிக்கும் போக்கை அரசு கைவிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கவேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.
“இத்தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள்மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்”
எனப் பிரதமர் மோடி அறிவித்திருந்தாலும், இத்தகைய சீர்கேடுகளுக்கும், மாணவர்கள் இறப்பிற்கும், பெற்றோரின் இழப்பிற்கும் பொறுப்பேற்று, ஒன்றிய பா.ச.க.
அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதானே!
இச்சீர்கேடுகளால்
‘நீட்’ போன்ற
தேர்வுகள் ஏழை, எளிய, கிராமப்புற மாணவரின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் சமூக அநீதி என்பது மீண்டும் உறுதியாகிவிட்டது. ஆகவே, வணிகமயமாக்கப்பட்ட இந்தக் கல்வி முறையை முற்றிலுமாக ஒழித்து, மாநிலங்களின் கல்வி உரிமையை மீட்டெடுப்பதே இதற்கான நிரந்தரத் தீர்வாகும்.
மேலும்,
அதிகாரத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இரத்தக் காயங்களோடு களத்தில் நிற்கும் மாணவர் சமுதாயத்திற்கு ஆதரவாக நாட்டின் குடிமைச் சமூகம் உடனடியாக ஒன்றிணையவேண்டும். ஆட்சியாளர்களின் முன், அவர்களைக் கேள்வி கேட்கும் தார்மீகக் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதை உணர்ந்திடவேண்டும். இவ்வேளையில்,
“நாங்கள்... தூங்கிக் கிடந்த நதிகள் அல்ல;
கரைகளை
உடைக்கத் துடிக்கும்
வெள்ளப்
பெருக்கு!
எங்கள்
விரல் முனைகளில்
விதிகள்
எழுதப்படுவதில்லை;
நாங்கள்
தொடும் திசைகளில்தான்
வரலாறுகள்
திரும்புகின்றன.
சாலையில்
சிந்திய
எங்கள்
வியர்வையும் குருதியும்
வெறும்
துளிகள் அல்ல; அவை
அநீதியின்
அடித்தளத்தை ஆட்டும்
அதிர்வலைகள்!
கண்ணீர்ப்
புகைக் குண்டுகளால் - எங்கள்
கனவுகளை
அணைத்துவிட முடியாது.
புகை
விலகும் போது - இன்னும்
புத்தொளிபெற்றே
எரியும்
எங்கள்
விழி நெருப்பு!
எங்கள்
கைகளில் துப்பாக்கிகள் இல்லை,
புத்தகங்களும்
நீதிக்கான
பதாகைகளுமே
இருக்கின்றன!
அரசியல்
சதுரங்கத்தின்
காய்கள்
அல்ல நாங்கள்;
சனநாயகத்தைக்
காப்பாற்ற
விழித்தெழுந்த
குடிமக்கள் கூட்டம் இது!”
என்றே
எட்டுத்திக்கும் எதிரொலிக்கிறது.
இறுதியாக,
மாணவர்களின் குரல்வளையை நெரிக்கும் அரசு, தன் வீழ்ச்சிக்கான விதையைத் தானே விதைக்கிறது என்பதை வரலாறு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
மானுட நாகரிகத்தின் உன்னதமே எளியோரை எங்ஙனம் நடத்துகிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அண்மைக் காலங்களில் உலகரங்கில் ‘உயிர் பாதுகாப்பு’ (Pro-Life) எனும் சிந்தனை நன்மக்கள் உள்ளங்களில் துளிர்விடுகின்றது. ஆயினும், பல வேளைகளில் அது வெறும் கருக்கலைப்பிற்கு எதிரான ஒரு குறுகிய அரசியல் நிலைப்பாடாக மட்டுமே சுருக்கப்பட்டு, விவாதக் களங்களில் முடங்கிக் கிடக்கிறது. ஆனால், உண்மையில் ‘உயிர் பாதுகாப்பு’ என்பது அரசியல் எல்லைகளையும், கொள்கைச் சுவர்களையும் கடந்தது. அது ‘கருவறை முதல் கல்லறை வரை’ அனைத்து மனித உயிர்களின் உன்னத மாண்பைப் பேணும் அடிப்படை உரிமைக்காக ஓங்கி ஒலிக்கும் குரல்.
நீண்ட
காலமாகவே, உலகளவில் மனிதர்கள் இரு வேறு எல்லைகளில் நின்றுகொண்டுதான் இந்தச் சிந்தனையை அணுகுகிறார்கள். ஒன்று, கருக்கலைப்பிற்கான உரிமையைக் கோரும் ‘சுயதேர்வு ஆதரவு’
(Pro-Choice); மற்றொன்று,
அதற்கு எதிரான ‘உயிர் பாதுகாப்பு’ (Pro-Life). இந்த இரு துருவ வகைப்பாடுகளுக்குள் நம்மை நாமே அடைத்துக் கொள்ளும்போது, மாற்றுச் சிந்தனைகளுக்கான வழிகள் அடைபட்டுப் போகின்றன.
ஒரு
தாயின் கோணத்தில் நின்று சிந்தித்தால், உயிர் பாதுகாப்பு என்பது வெறும் பிறப்புடன் முடிந்துவிடும் நிகழ்வல்ல; மாறாக, அது பிறப்பிற்குப் பின் தொடங்கும் நீண்ட நெடிய பொறுப்பு. ஒரு குழந்தையை உலகிற்குக் கொண்டு வந்தவுடன் தாயின் கடமை நிறைவடைவதில்லை; அங்கிருந்துதான் அது புதிய பரிமாணத்தைப் பெறுகிறது. வளர வளரக் குழந்தைகளின் தேவைகள் சிக்கலானவையாக மாறுகின்றன. இவற்றிற்குத் தீர்வு காண ஒரு கூட்டுச் சமூகத்தின், அன்பான குடும்பத்தின் மற்றும் ஆன்மிக அமைப்புகளின் அரவணைப்பு இன்றியமையாதது. எனவே, பிறப்பிற்கு முந்தைய உயிரை எப்படிக் காக்கத் துடிக்கின்றோமோ, அதே அளவு பிறப்பிற்குப் பிந்தைய உயிரின் வாழ்வாதாரத்தையும் காப்பதே உண்மையான உயிர் பாதுகாப்பாகும்.
உலகின்
ஆகப்பெரும் வல்லரசான அமெரிக்காவிலேயே, ஏறத்தாழ நான்கில் ஒரு குழந்தை வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாகவும், மாற்று அளவீடுகளைப் பயன்படுத்தினால் இந்த எண்ணிக்கை பாதியாக (இரண்டில் ஒரு குழந்தை) உயர்வதாகவும் தேசியக் குழந்தைகள் வறுமை மையத் (NCCP) தரவுகள்
எச்சரிக்கின்றன. செல்வச் செழிப்புமிக்க நாடுகளிலேயே இந்நிலை என்றால், வளரும் நாடுகளின் விளிம்புநிலைச் சூழலைச் சொல்ல வேண்டியதில்லை.
வறுமை
என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை மட்டுமல்ல; அது தரமான உணவு, பாதுகாப்பான இருப்பிடம், முறையான கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மறுக்கப்படுவதன் குறியீடு. உண்மையான உயிர் பாதுகாப்புச் சிந்தனை கொண்ட ஒரு சமூகம், இத்தகைய வறுமைச் சூழலிலிருந்து குழந்தைகளையும் குடும்பங்களையும் எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்த ஆழமான உரையாடல்களைத் தொடங்கவேண்டும்.
அரசின்
நலத்திட்டங்களான உணவுப் பாதுகாப்பு, தாய்-சேய் நல உதவிகள், ஏழைகளுக்கான
மருத்துவக் காப்பீடு ஆகியவை ஓரளவிற்குச் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கினாலும், அவை மட்டுமே முழுமையான தீர்வாகாது. அரசு சாரா நிறுவனங்களும், ஆன்மிக அமைப்புகளும் கைகோர்த்து, ஒவ்வொரு மனிதனும் தன் அடிப்படைத் தேவைகளைப் பெற்று, கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவேண்டும்.
கிறித்தவக்
கோட்பாடுகளின்படி, பலவீனமானவர்களையும் எளியவர்களையும் காப்பது வெறும் சமூகச் சேவை அல்ல; அது இறைவனின் நேரடிக் கட்டளை. “நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்” (யோவா
10:10) என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவதாகும். எனவே, மானுட உயிர்கள் யாவும் வாழ்வை நிறைவாகப் பெறவேண்டுமாயின், நாம் வெறும் பேச்சளவில் அல்லாமல், செயலில் காட்ட வேண்டும்.
ஆகவே,
உயிர் பாதுகாப்பு இயக்கத்தை (Pro-Life Movement) அடித்தட்டு
நிலைக்குக் கொண்டு செல்ல, ஆக்கப்பூர்வமான பல செயல்பாடுகளை நாம்
முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, கருவில் வளரும் குழந்தைகளைப் பாதுகாக்கவேண்டும்; ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்தல் மற்றும் வளர்ப்புப் பெற்றோராக (Foster Care) மாறும்
முறையை ஊக்குவிக்க வேண்டும்; தனித்து வாழும் தாய்மார்களுக்கு அரவணைப்பு வழங்கவேண்டும்; உளவியல் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், அம்மையங்களில் தன்னார்வலராகப் பணியாற்றவேண்டும்.
மேலும்,
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்குமிடங்கள், ஆபத்தான சூழலில் உள்ள குழந்தைகளுக்கான மாலை நேரக் கல்வி மையங்கள் ஆகியவற்றில் நம் நேரத்தையும் உழைப்பையும் முதலீடு செய்யவேண்டும். மேலும், ஆன்மிகக் கூடங்கள் தங்களுக்குள் மட்டுமே முடங்கிவிடாமல், சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களை நோக்கித் தங்கள் கரங்களை நீட்டும் செயல்திட்டங்களைத் திரு அவை வடிவமைக்கவேண்டும்.
இந்தியச்
சூழலில் கருக்கலைப்பு (Abortion) மற்றும்
உயிர் பாதுகாப்பு (Pro-Life) ஆகியவற்றிற்கு
இடையேயான உரையாடல், மேற்கத்திய நாடுகளைப் போல வெறும் மதக் கோட்பாடாகவோ அல்லது அரசியல் துருவமுனைப்பாகவோ மட்டும் சுருங்கிவிடாமல், மிகவும் ஆழமான சமூகப் பின்னணியைக் கொண்டுள்ளது.
இந்தியச்
சட்டம் (MTP Act) உலக
அளவில் மிகவும் முற்போக்கான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பெண்ணின் உடல்நலம், மனநலம் மற்றும் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு 24 வாரங்கள் வரை கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது. சட்டம் உரிமை வழங்கினாலும், நம் பாரம்பரியக் கலாச்சாரத்தில் பெண்ணின் வயிற்றில் உள்ள சிசுவை அழிப்பது என்பது ஒரு பாவமாகவே பார்க்கப்படுகிறது. இங்கு சட்டம் ‘உரிமையை’ முன்னிறுத்தும்போது, சமூக மரபுகள் ‘உயிரின் புனிதத்தை’
முன்னிறுத்துகின்றன.
மேற்கத்திய
நாடுகளில் ‘Pro-Life’ என்பது பொதுவாகக்
கருக்கலைப்பை முழுமையாக எதிர்ப்பதைக் குறிக்கிறது. ஆனால், இந்தியாவில் உயிர் பாதுகாப்பு என்பது வெறும் கருத்தியல் விவாதம் அல்ல; மாறாக, அது பெண் குழந்தைகளின் உயிர் வாழும் உரிமைக்கான நேரடிப் போராட்டம். இதன் மிக முக்கிய வடிவம் பெண் சிசுக்கொலைத் தடுப்புச் சட்டம் (PCPNDT Act) ஆகும்.
பெண் குழந்தை என்பதற்காகக் கருவை அழிப்பது கொடும் குற்றம். ஆனால், அதேவேளையில் ஒரு பெண்ணின் உடல் நலம் மற்றும் வாழ்வாதாரத்தைக் காக்கச் செய்யப்படும் மருத்துவக் கருக்கலைப்பு அவசியமானது. இந்த இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் பக்குவம் நம் சமூகத்திற்குத் தேவைப்படுகிறது.
அமெரிக்க
வரலாற்றில் 1973-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ‘ரோ வி. வேட்’ (Roe v. Wade) தீர்ப்பு, கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக்கிய ஒரு துயரமான நிகழ்வாக உயிர் பாதுகாப்பு ஆதரவாளர்களால் பார்க்கப்பட்டது. ஆயினும், அண்மையில் ‘டாப்ஸ்’
(Dobbs) தீர்ப்பின்
மூலம் அது இரத்து செய்யப்பட்டது பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் லாரன் போபர்ட் போன்ற தலைவர்கள், ‘பிறந்த குழந்தை பாதுகாப்புச் சட்டம்’
(Born-Alive Abortion Survivors Protection Act) போன்ற சட்டங்களை ஆதரித்து, கருக்கலைப்பு முயற்சியிலிருந்து தப்பிப் பிழைக்கும் குழந்தைகளுக்குக் கூட முழுமையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்று வாதிடுகின்றனர்.
அமெரிக்க
மக்களில் 77 விழுக்காட்டினர் இத்தகைய உயிர்காப்புச் சட்டங்களை ஆதரிப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறினாலும், அரசியல் தளத்தில் இன்னும் தீவிரமான கருத்தியல் போர்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
இவ்வுலகில்
அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு வாழும் உரிமை உண்டு. எனவே, தோலின் நிறம், மொழி, சமூக நிலை, கருவறையில் இருக்கும் நிலை என எவ்விதப் பாகுபாடுமின்றி
அனைத்து உயிர்களையும் நேசிப்பது நம் கடமை.
உயிர்
பாதுகாப்பு என்பது வெறும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்குரிய சித்தாந்தமோ அல்ல; அது மனிதகுலத்தின் ஆன்ம சாட்சி. கருவிலிருக்கும் குழந்தையின் உரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், தெருவோரங்களில் பசியால் வாடும் முதியவர்கள், புலம்பெயர்ந்த அகதிகள், மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரின் வாழ்வுரிமையையும்
உள்ளடக்கியதே முழுமையான ‘உயிர் நேய’ இயக்கம். இயற்கை நமக்குக் கொடுத்த உன்னதக் கொடை மனித உயிர். அதைத் தன்னிச்சையாக முடித்துக் கொள்ளவோ, சிதைக்கவோ எவருக்கும் உரிமையில்லை.
மனிதநேயச்
சிந்தனைகள் மலரட்டும்;
மகத்தான
மானுடம் வளரட்டும்;
உயிர்
பாதுகாப்பு உன்னதமடையட்டும்;
கருவறைத்
தொட்டில் முதல்
கல்லறைத்
துயில் வரை
மனித
மாண்பு எந்நாளும்
போற்றிப்
பாதுகாக்கப்படட்டும்!
வாருங்கள்...
மனிதம் புனிதமானது;
மானுடம்
மகத்தானது என்பதனை
உலகறிய
உரக்கச் சொல்லுவோம்!
வாருங்கள்...
ஆகஸ்டு 9-ஆம் நாள் ஒன்றிணைவோம்! உயிர்காப்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்