news
தமிழக செய்திகள்
மதுரையில் நிகழ்ந்த மத நல்லிணக்க மாநாடு

முச்சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உயர்ந்திருப்பது திருப்பரங்குன்றம் மலை. இம்மலையில் இந்துகள், முஸ்லிம்கள், சைனர்கள் ஆகியோர் நீண்ட காலமாக அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் தங்களது தனித்தனி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழும் இம்மக்களின் அமைதியைச் சீர்குலைக்கச் சில மதவாத அமைப்புகள் அண்மையில் முயற்சிகளை மேற்கொண்டன.

இந்த மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கண்டித்து மார்ச் 9-அன்று மதுரை கே.கே. நகரிலுள்ள கிருஷ்ணய்யர் அரங்கில்மத நல்லிணக்க மாநாடுநடைபெற்றது. இம்மாநாட்டுக்கு வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். இம்மாநாட்டில் பேசிய மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், “என் இறைவனுக்கும் என்னுடைய மதத்திலும் என்னென்ன மாதிரி வழிபாடு நடத்த வேண்டும் என்ற தனிமனித உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லைஎனக் கூறினார்.

இம்மாநாட்டில் தமிழ்நாட்டின் மத நல்லிணக்க மலையாகத் திருப்பரங்குன்றம் மலையைத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்; திருப்பரங்குன்றம் கோவிலில் புகுந்து வன்முறையைத் தூண்டிய கட்சிகள், அமைப்புகள்மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மதுரை மாநகர், புறநகர், திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் மத நல்லிணக்கக் குழுக்களை உருவாக்கி மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டும் போன்ற  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டில் தமிழ்நாடு ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவர் மேதகு இலாரன்ஸ் பயஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், நெல்லையப்பர் ஆதினம் பதினெண்சித்தர் பீடம் சித்தர் மூங்கிலடியார், அருள் பணி. பெனடிக்ட் பர்னபாஸ், ஹென்றி டிபேன், மீ.. பாண்டியன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

news
தமிழக செய்திகள்
வெள்ளி விழா காணும் ‘உம் வாக்கு என் வாழ்வாக’ மாத இதழ்

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின்உம் வாக்கு என் வாழ்வாகஎன்னும் கத்தோலிக்க மாத இதழின் வெள்ளி விழாக் கொண்டாட்டமானது பிப்ரவரி 22-ஆம் நாள் மேய்ப்புப் பணி நிலையத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் தலைமையேற்ற சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள், “இம்மாத இதழ் 25 ஆண்டுகள் பயணித்து வந்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது; இறைவனுக்கு நன்றி கூறும் தருணம் இது. இந்த வெள்ளி விழா கொண்டாட்டம் இறைவனுக்கும் முன்னாள் ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி கூறும் தருணத்தோடு அமைந்துவிடாமல், இவ்விதலின் வளர்ச்சியையும், இதனுடைய அவசியத்தையும், இன்னும் இதைப் பரவலாக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் நாம் தீர்க்கமாக அலசிப் பார்க்க வேண்டிய தருணமாகவும் கொள்ளவேண்டும். அன்றாட இறைவார்த்தையை மாதந்தோறும் உங்கள் இல்லங்களுக்குக் கொண்டு வரும் இந்த இதழ், எல்லாருடைய கரங்களிலும், எல்லாப் பங்குத் தளங்களிலும் வீடுகளிலும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்எனத் தெரிவித்து, இதனுடைய தற்போதைய ஆசிரியர் தந்தை ராக் சின்னப்பா அவர்களையும், முன்னாள் ஆசிரியர்களையும் மனத்தார வாழ்த்தினார்.  தொடர்ந்து வாழ்த்துரை வழங்கியநம் வாழ்வுவார இதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்கள், ‘மாதந்தோறும் இறைவார்த்தையைச் சுமந்து வரும் இந்த இதழ், நம் இல்லம் நோக்கி  தூது வரும் தேவபுறாஎனக் குறிப்பிட்டார். மேலும், இந்த இதழின் பின்னிருக்கும் கடின உழைப்பு, காலத்தின் தேவை, இறை மக்களின் ஆதரவு என முக்கோண உறவு கொண்ட இதழியல் பணியைப் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். சிறப்பு வாழ்த்துரையாளர்களாகக் கலந்துகொண்டநியூ லீடர்இதழின் ஆசிரியர் அருள்பணி. பங்குராசு, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் அதிபர் அருள்பணி. E. அருளப்பா ஆகியோருடன், சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு பேரருள்தந்தை G.J அந்தோணிசாமி அவர்களும், பொதுநிலையினருக்கான பேராயரின் பதில்குரு பேரருள்தந்தை எம்.வி. ஜேக்கப், குருக்களுக்கான பேராயரின் பதில்குரு - பேரருள்தந்தை பீட்டர் தும்மா ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். ஏறக்குறைய 300 வாசகர்கள் கலந்து கொண்ட இந்த வெள்ளி விழாக் கொண்டாட்டமானதுஉம் வாக்கு என் வாழ்வாகமாத இதழின் ஆசிரியர் அருள்தந்தை ராக் சின்னப்பா மற்றும் அவர்களது ஆசிரியர் குழுவினரால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

news
தமிழக செய்திகள்
‘எதிர்நோக்கின் திருப்பயணம்’- இறையியல் கலந்துரையரங்கம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பினை ஏற்றுயூபிலி-2025’ -ஆம் ஆண்டின் மையச்சிந்தனையானஎதிர்நோக்கின் திருப்பயணிகளாக  திருப்பயணத்தை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சிந்தனைகளை, கருத்தரங்குகளை, கலந்துரையாடல்களை திரு அவை, விவிலியம், இறையியல் தளங்களில் மக்கள் உலகெங்கும் சிந்தனைப் பரிமாற்றம் மேற்கொண்டு வரும் சூழலில், சென்னை - பழஞ்சூர், MMI இறையியல் கல்லூரி, தனது 12-வது இறையியல் கலந்துரையரங்கத்தைஇறை நம்மில் ஆன்மிகம்: எதிர்நோக்கின் திருப்பயணத்தில் இன்றைய திரு அவையும் அதன் செயல்பாடுகளும்என்ற தலைப்பில் பிப்ரவரி 15-ஆம் நாள் மிகச் சிறப்பாக நடத்தியிருந்தது.  இந்த இறையியல் கலந்துரையரங்கத்தின் சிறப்புக் கருத்துரையாளராகநம் வாழ்வுவார இதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன்  கலந்துகொண்டு இரு அமர்வுகளை வழிநடத்தினார். இவ்வமர்வுகளைப் புனித பிரான்சிஸ் சவேரியார் மறைமாநிலத் தலைவர் அருள்பணி. ஆண்டனி ஜெரால்டு MMI நெறிப்படுத்தினார். மேலும், ‘எதிர்நோக்கின் திருப்பயணமும் துறவற வாழ்வும்என்ற தலைப்பில் அருள்சகோதரி சகாயராணி DMI அவர்களும்,  ஆன்மிக வாழ்வில் எதிர்நோக்கின் திருப்பயணம்என்னும் தலைப்பில் அருள்சகோ. ஆரோக்கியசாமி அவர்களும், ‘குடும்ப வாழ்வில் எதிர்நோக்கின் திருப்பயணம்என்ற தலைப்பில் சென்னை - மயிலை உயர் மறைமாவட்டப் பெண்கள் பணிக்குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஜாய்ஸ் ஜென்சன் அவர்களும் கருத்துகளை வழங்கினார்கள். ஏறக்குறைய 400 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்த இறையியல் கருத்தமர்வு, மக்களின் கேள்வி நேரம், கலந்துரையாடல் எனச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கருத்தமர்வினை MMI இறையியல் கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கிய  சார்லஸ் தலைமையில், அருள்பணி. டேவிட் மற்றும் இறையியல் மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

news
தமிழக செய்திகள்
எதிர்நோக்கின் நம்பிக்கை நட்சத்திரங்களின் யூபிலிக் கொண்டாட்டம் - 2025

சனவரி 26 அன்று சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம், வளரும் குழந்தைகளின் மறைக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகளான நம் குழந்தைகளின் எதிர்நோக்கு என்ன?’ என்ற பொருளில் குழந்தைகளுக்கான யூபிலிக் கொண்டாட்டக் கூடுகை சாந்தோம் பள்ளியில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் மறைக்கல்விப் பணிக்குழுச் செயலர் அருள்பணி. அனலின் மற்றும் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் பலரும் பங்கேற்றனர். ‘உன்னையும் உன்னை வழிநடத்தும் இறைஆற்றலையும் நம்புஎன்ற தலைப்பில் அருள்பணி. பீட்டர் தும்மா அவர்களும், ‘நாம் ஏன் எதிர்நோக்கின் திருப்பயணிகள் என அழைக்கப்படுகிறோம்? நாம் எப்படி நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்ன முடியும்?’ என்ற தலைப்பில் அருள்பணி. சதிஷ்பால் .. அவர்களும், ‘கடவுளுக்கு மகிமை - குழந்தைகள் ஆற்றலோடும் துடிப்போடும் இருப்பதுபோன்ற கருத்தாழமிக்க தலைப்பிலே திருமதி. பவுலின் ரோஸ் அவர்களும் கருத்துரை வழங்கினர். பாடல்கள், கதைகள், திறன் கண்டறியும் விளையாட்டுகள், நம்பிக்கைச் சுவரில் தங்கள் எண்ணங்களை வெளியிடல் எனப் பல குழந்தைகளுக்கான மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அருள்பணி. ரேமண்ட் பீட்டர் அவர்கள் மறைக்கல்வி பிள்ளைகள் தங்கள் வாழ்விலே இயேசுவையே மையப்புள்ளியாகக் கொண்டு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் 12 மறைவட்டங்களிலுள்ள 96 பங்குகளிலிருந்து 3478 மறைக்கல்வி பயிலும் குழந்தைகள், 565-க்கும் மேற்பட்ட மறைக்கல்வி ஆசிரியர்கள், தன்னார்வத் தொண்டர்கள், அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள், பெஸ்கி, அருள் கடல், இளங்குருமடம், திரு இருதய குருத்துவப் பயிற்சி இல்லங்களிலிருந்து குருமட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

news
தமிழக செய்திகள்
மகிழ்ச்சியான செய்தி! - சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு ‘TET’ அவசியமில்லை!

தமிழ்நாடு அரசு, சிறுபான்மையினர் பள்ளிகளில் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) கட்டாயமாக்கல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுக்களைத் (Special Leave Petition –SPL) திரும்பப் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுள்ளதால், இதன்மூலம், சிறுபான்மையினர் பள்ளிகளில் TET இல்லாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலும், ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த SLP-களைத் திரும்பப்பெற்றதன் மூலம், 15.11.2011 முதல் 12.01.2023 வரை TET இல்லாமல் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைவார்கள். 

இந்த வழக்கில் மேமிகு சென்னை-மயிலைப் பேராயர் முனைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் வழங்கிய வழிகாட்டல் மற்றும் உடனிருப்புக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், அருள்பணி. அந்தோணிசாமி, (செயலாளர் -TANCEAN) அவர்களுக்கும், சட்டப் பணிகளை மேற்கொண்ட மூத்த சட்ட ஆலோசகர் முனைவர் A. சேவியர் அருள்ராஜ் அவர்களுக்கும், அருள்சகோதரி அருள்மேரி மற்றும் தன்னலமற்ற சேவையில் ஈடுபட்ட சட்ட வழக்கறிஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.        

- TANCEAN & சட்டப் பணி தமிழ்நாடு ஆயர் பேரவை

news
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளில் உள்ள கருத்துகளை மாணவ, மாணவியர் அறிந்துகொண்டு, கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிகுந்தவர்களாக விளங்க வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்குத் திருக்குறளை மனனம் செய்தல், அது குறித்துப் பயிற்சி அளித்தல் மற்றும் கருத்தமர்வுகளில் பங்கேற்கச் செய்தல் என ஊக்குவிக்க வேண்டும்.”

- உயர்திரு. ஒளவை . அருள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்

உலகில் பல மொழிகள் வழக்கொழிந்து போனாலும், இன்றளவும் தனித்து இயங்கும் மொழியாகத் தமிழ் மொழி திகழ்கிறது. உலகில் இரும்பின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளதால், உலகின் இரும்பு மனிதனாகத் தமிழன் திகழ்கிறான். தமிழன் என்ற பெருமை நாவளவில் மட்டுமில்லாமல், உணர்விலும் கொண்டு வாழ்வியலில் தனித்தமிழைப் பழக  அனைவரும் முன்வர வேண்டும்.”

- உயர்திரு. கோ. விசுவநாதன், வி..டி. வேந்தர்

வழக்குரைஞராகப் பணிபுரிபவர்கள் மூன்று கடமைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தன்னிடம் வரும் வழக்காளியிடம் வழக்கின் தன்மை, வழக்கை நடத்துவதால் கிடைக்கும் நன்மை குறித்து விளக்க வேண்டும்; வழக்கில் எதிராளியாக உள்ளவருக்கு அவரது வழக்குரைஞர் மூலம் வழக்கின் தன்மையை விளக்க முயற்சிக்க வேண்டும்; நீதிமன்றத்திற்கும் உண்மையுடன் செயல்பட வேண்டும். இந்த மூன்றும் அறம் சார்ந்து இருக்க வேண்டும்; ஒரு நல்ல சமுதாயம் அமைய குற்றவியல் வழக்குகள் குறைந்து, உரிமையியல் வழக்குகள் பெருக வேண்டும்.”

- உயர்திரு. எம்.எம். சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற நீதிபதி