news
தமிழக செய்திகள்
சான்று பகர்ந்த வாழ்வு! (தமிழ்நாடு ஆயர் பேரவையின் இரங்கல் செய்தி)

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை 20-04-2025 அன்று உலகமே கொண்டாடிய வேளையில், தன்னைக் காண புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் குழுமி இருந்த மக்களுக்குத் தன்னுடைய திருக்கர ஆசிரை வழங்கி, ‘பாலஸ்தீனம், இஸ்ரயேல் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் அமைதி திரும்ப வேண்டும்; அதுவும் நீதியில் விளையக்கூடிய நிரந்தர அமைதியாய் இருக்க வேண்டும்என்று தன்னுடைய இறைவேண்டலை இறுதியாக இறைவனுக்கு அர்ப்பணித்த நிலையிலே, 21.04.2025 அன்று காலை 7:30 மணி அளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உயிர் இறைவனடி சேர்ந்ததை அறிந்து தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை ஆழ்ந்த இறைவேண்டல் கலந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

கூட்டொருங்கியக்கப் பாதையில் திரு அவையை அழைத்துச் சென்ற மிகப்பெரிய ஆளுமை திருத்தந்தை பிரான்சிஸ். இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அனைவரின் மனங்களுக்கும் இது வேதனை அளித்தாலும், அனைவரின் இதயங்களிலும் குடிகொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஏழை எளிய மக்களுக்கும், புலம் பெயர்ந்து ஆதரவு தேடி வந்த மக்களுக்கும் ஆதரவு தந்தவர், அடைக்கலம் கொடுத்தவர். அகில உலகத்தையும் அடைக்கலம் கொடுப்பதற்கு அழைத்தவரும் அவர். உலக அமைதி, சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமைக்கு முன்னுரிமை போன்ற இன்னும் பலவற்றில் புதிய சிந்தனைகளை விதைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

மக்களின் மனங்களை அறிந்தவன்தான் நல்லாயனாய், நல்ல தலைவனாய் இருக்க முடியும் என்பதைத் தன் வாழ்வில் வாழ்ந்து காட்டியவர். அவரது கனிவான சொற்களும், கள்ளமில்லாச் சிரிப்பும், அவரது அன்பின், இரக்கத்தின், எளிமையின் விழுமியங்களை எல்லாருக்கும் எடுத்துக்கூறின. கத்தோலிக்க மதத்தினுடைய தலைவர் என்ற  அவருடைய 12 ஆண்டு கால உழைப்பானது உலகத்தின் கடைக்கோடி மக்களின் இதயத்திலும் கண்டிப்பாய் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவருடைய இழப்பால் அகில உலகக் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல; இன்னும் நல்ல பல உள்ளங்களும் கண்ணீரைக் காணிக்கையாக்கினாலும், அவரது சான்று பகர்ந்த வாழ்வு, சரியான தலைமைத்துவம், எல்லாவற்றிற்கும் மேலாகத் தான் யாருடைய பதிலாளாய் இவ்வுலகில் வாழ்ந்தாரோ அதே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கை அனைத்திற்கும் நாம் கடவுளுக்கு நன்றி கூறுவோம். உயிர்த்த ஆண்டவருடைய கரங்களில் அவரது ஆன்மாவை ஒப்படைப்போம். இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்; நிலையான ஒளி இவர்மேல் ஒளிரட்டும்!

பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமிதலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர்

 

news
தமிழக செய்திகள்
தமிழ்நாட்டிலிருந்து சிம்லா - சண்டிகர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்!

சிம்லா-சண்டிகர் மறைமாவட்டத்தின் ஆயராகக் கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி. சகாய ததேயுஸ் தாமஸ் (54) அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 12 அன்று நியமனம் செய்துள்ளார்.

அருள்தந்தை சகாய ததேயுஸ் தாமஸ் 1971-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் நாள் தமிழ்நாட்டின் கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள சின்னவிளையில் பிறந்தவர். இலக்னோ புனித பவுல் இளங்குருமடத்தில் கல்வி பயின்று, ஜலந்தரில் உள்ள தமத்திரித்துவக் குருமடத்தில் தத்துவம் மற்றும் இறையியல் பயின்றார். 2001, மே 13 அன்று குருத்துவ அருள்பொழிவு பெற்றார். பாட்டியாலா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத்துறையில் முதுகலைப் பட்டத்தையும் (2006-2008), டெல்லியில் உள்ள இந்திய மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைக் கல்வியில் முதுகலைப் பட்டத்தையும் (2007-2009) பெற்றுள்ளார். ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகத்தில் இறையியலில் முதுகலைப் பட்டமும் (2010-2013), திருவிவிலியத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர் (2013-2016).

பங்குப் பணியாளர், குருமட உதவி அதிபர், மறைமாவட்டச் சமூகத் தொடர்பு மற்றும் திருவிவிலிய ஆணையங்களின் இயக்குநர் எனப் பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர்.

news
தமிழக செய்திகள்
கோவை மறைமாவட்டத் தவக்காலத் திருப்பயணம்

கோவை மறைமாவட்டத் தவக்காலத் திருப்பயணம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்காவில் மார்ச் 29, 30 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. ஆறு மறைவட்டங்களிலிருந்தும் 74 பங்குகளிலிருந்தும் திருப்பயணமாக இறைமக்கள் திருப்பயணத்தில் பங்கேற்றனர். எதிர்நோக்குப் பற்றிய அறிவுரைச் சிந்தனையும், தொடர்ந்து ஒப்புரவு அருளடையாளமும் தியான மையத்தில் வழங்கப்பட்டன. பின்பு அங்கிருந்து மறைமாவட்ட யூபிலி சிலுவையை ஏந்தி இறைமக்கள் பசிலிக்காவை நோக்கி, புனிதர்கள் மன்றாட்டு மாலை இசைக்கப் பவனியாகச் சென்றனர். முதல் நாளில் திருத்தலத்தில் வட்டார முதன்மைக் குருக்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் இறுதி நம்பிக்கை உறுதிப்படுத்துகின்ற கண்காட்சி அரங்கிலும் மற்றும் ஒலி-ஒளிக் காட்சிகளும் இறைமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முக்கிய நிகழ்வாக ஞாயிறு அன்று மேதகு ஆயர் L. தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.  இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்துகொண்டு இறையாசிரோடு திரும்பிச் சென்றனர். இந்த நிகழ்வுகளை மறைமாவட்ட மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர் அருள்பணி. அந்தோணி இயேசுராஜ், பேராலயப் பங்குத்தந்தை மற்றும் மறைவட்ட அதிபர் பேரருள்திரு K.M.C. அருண் மற்றும் தியான மைய இயக்குநர் அருள்பணி அலெக்ஸ் அந்தோணிசாமி ஆகிய மூவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.


news
தமிழக செய்திகள்
வித்தியாசமான திருப்பயணம்

தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் சார்பாக ஏப்ரல் 5, 6 ஆகிய நாள்களில் சமூக நீதிக்கான யூபிலி திருப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மறைமாவட்டம் சமயநல்லூரில் தொடங்கி, டங்ஸ்டன் சுரங்கத்திற்கான எதிர்ப்புப் போராட்டம் வெற்றிபெற்ற இடங்களைப் பார்வையிட்ட இவர்கள், திருப்பரங்குன்றம் மலையில் மத ஒற்றுமையைப் பாதிக்க முயன்ற நிகழ்வுகளை ஆராய்ந்தனர். கொடைக்கானலில் நற்கருணை ஆராதனையில் பங்கெடுத்து, இயேசுவின் பாடுகளையும், சமூக நீதிப் போராளிகள் ஸ்டேன் சுவாமி, புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோரின் வாழ்க்கையையும் தியானித்தனர். இந்நிகழ்வைத் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குநர் அருள்பணி. எடிசன் ஒருங்கிணைத்தார்.

news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு அன்பான வேண்டுகோள்!

கிறித்தவர்களின் சமய விழாக்களில் நம்பிக்கையை ஆழமாகப் புடமிடும் நாள்புனித வெள்ளி.’ இறைமகன் இயேசு இம்மனுக்குல மீட்புக்காக, மானிடரின் பாவங்களை மன்னிப்பதற்காகச் சிலுவை சுமந்து, கல்வாரி மலை நோக்கிச் சென்று, கரம் விரித்து சிலுவையில் மரித்து, உயிர் துறந்ததை ஆழமான நம்பிக்கையோடும் பக்தி நிறைந்த செப உணர்வோடும் கொண்டாடும் நாள் புனித வெள்ளி. புனித வாரச் சிறப்பு நாள்களில் குறிப்பிடத்தக்க நாள் இப்புனித வெள்ளி. இந்நாளில் தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூடிட தமிழ்நாடு அரசுக்குக் குறிப்பாக, முதலமைச்சருக்குக் கிறித்தவர்கள் அன்போடு வேண்டும் கோரிக்கை இது.

03.01.2012-ஆம் ஆண்டு அரசு ஆணைப்படி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு நாள், மகாவீரர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி மற்றும் முக்கியச் சிறப்பு நாள்களில் மதுபானக் கடைகளுக்குத் தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்கப்படுவதுபோல, கிறித்தவர்களின் புனித நாளான புனித வெள்ளி அன்றும் மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்பது கிறித்தவர்களின் ஒரே கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை வலியுறுத்தி தமிழ்நாடு-புதுவை கத்தோலிக்கப் பொதுநிலையினர் பேரவையின் தற்போதைய தலைவரும், மதுரை உயர் மறைமாவட்ட மேனாள் பேராயருமான முனைவர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்குச் சபைகளின் இயக்குநர் அருள்பணி. ஜெயந்தன் அவர்களும் பிற கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட பரிந்துரைக்குமாறு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி அவர்கள் வழிகாட்டுதலில், 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மின் அஞ்சலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இயேசு இறந்த தியாக நாளாம் புனித வெள்ளி நாளில் கேரளா மற்றும் டெல்லி மாநிலங்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதுபோல, தமிழ்நாடு அரசும் கிறித்தவ மக்களின் உணர்வினை மதித்து மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில அனைத்துக் கிறித்தவப் பெருமக்களின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் இக்கோரிக்கைக்குச் செவிமடுப்பார் என்றே நம்புகிறோம்!

news
தமிழக செய்திகள்
ஐக்கிய ஆலயத்தில் பொன்விழா கொண்டாட்டம்

உரையாடலின் மூலம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி மனிதத்தைக் காத்து வரும் மையம் ஒற்றுமையின் ஆலயம்என்று பொருள்படுவது ஐக்கிய ஆலயம். 1974-ஆம் ஆண்டு அருள்பணி. இக்னேசியஸ் இருதயம் சே.. அவர்களால் தொடங்கப்பட்ட இந்த மையத்தின் பொன்விழா, சென்னை, அருள் கடலில் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாள்களில்உரையாடலை மீட்டெடுப்பது-ஒற்றுமையை அரவணைப்பதுஎன்ற தலைப்பில் பல்சமய தேசியக் கருத்தரங்கம்  நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ், தென்னிந்தியத் திரு அவையின் மேனாள் பேராயர் தேவசகாயம், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் டி. ஹரி பரந்தாமன், ஆற்காடு அறக்கட்டளையின் நிறுவுநர் மற்றும் அறங்காவலர் மாண்புமிகு. இளவரசர் நவாப் சாதா முகமது ஆசிப் அலி, சென்னை மறை மாநிலத் தலைவர் அருள்பணி. செபமாலை ராசா சே.., முனைவர் புஷ்பராஜன், முனைவர் ஜேம்ஸ் பொன்னையா எனப் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

வத்திக்கானில் உள்ள பல்சமய உரையாடல் துறையின் இயக்குநர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் உரையாடலின் முக்கியத்துவத்தைக் குறித்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். இந்தக் கருத்தமர்வில் முனைவர் ராஜ் இருதயா எழுதியுள்ள ‘The Fiery Word: A Perspectival Approach’, அருள்கடலார் எழுதியுள்ளமக்கள் அனுபவத்தில் மலர்ந்திடும் இறையியலாக்கம், முனைவர் ராபின் சகாயசீலன் எழுதியுள்ளDiving Deep: Engaging Religious Symbols in Interfaith Dialogueஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.

இந்தப் பொன்விழா பல்சமய தேசியக் கருத்தமர்வை ஐக்கிய ஆலய இயக்குநர் முனைவர் ராஜ் இருதயா, சே.. மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.