news
உலக செய்திகள்
“ஈரான் மக்கள் மீதான அச்சுறுத்தல் ஏற்க முடியாது” - திருத்தந்தை லியோ

ஈரான் மீதான போர் மற்றும் ஒட்டுமொத்த ஈரான் நகரத்தையே அழிப்போம்என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குத் திருத்தந்தை லியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஸ்டல் காண்டால்ஃபோவில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை, “ஈரான் மக்கள் மீதான அச்சுறுத்தல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுஎன்று சாடியுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்கா விதித்த காலக்கெடுவும், அதைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட போர் மிரட்டல்களும் பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார். “மீண்டும் பேச்சுவார்த்தை அமர்வுக்குத் திரும்புங்கள்; அமைதியான முறையில் தீர்வுகளைத் தேடுங்கள்என்று உலகத் தலைவர்களுக்கு அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடி வெறுப்பை மட்டுமே வளர்ப்பதாக அவர் எச்சரித்தார்.

news
உலக செய்திகள்
“நோயாளியின் நலனே உங்கள் வழிகாட்டும் நெறிமுறையாக இருக்கட்டும்”

இத்தாலியில் உள்ள தேசிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை லியோ, “நோயாளியின் நலனை எப்போதும் உங்களது முதன்மையான வழிகாட்டும் நெறிமுறையாகக் கொள்ளுங்கள்என்று வலியுறுத்தியுள்ளார். இத்தாலியின் முதல் உறுப்பு தானம் நிகழ்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அருளாளர் டான் கார்லோ கனோச்சி தனது இறப்பிற்குப் பின் தனது விழி வெண்படலத்தைத் தானம் செய்து இரு இளைஞர்களுக்குப் பார்வையளித்த உன்னதச் செயலை நினைவுகூர்ந்தார். “மனித உடலை வணிக மயமாக்குவதைத் தவிர்க்கவும், உறுப்பு மாற்றுச் செயல்பாடுகளில் வெளிப்படையான மற்றும் நீதியான அளவுகோல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் தொடர் விழிப்புணர்வு அவசியம். எல்லாவற்றையும் விலை மற்றும் இலாப நோக்கில் பார்க்கும் இக்காலத்தில், உறுப்பு தானம் என்பது கைம்மாறு கருதாத, சகோதரத்துவத்தின் அடையாளமாகத் திகழ வேண்டும்என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

news
உலக செய்திகள்
“விமானங்கள் அமைதியைக் கொண்டுவரட்டும்” - திருத்தந்தை

இத்தாலியின்.டி.. ஏர்வேஸ் (ITA Airways) நிறுவனத்தின் நிர்வாகிகளைச் சந்தித்த திருத்தந்தை லியோ, தனது திருத்தூதுப் பயணங்களுக்கு உதவும் அந்நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். அப்போது, நவீன உலகில் விமானங்கள் மரணத்தையும் அழிவையும் சுமந்து செல்லும் கருவிகளாக மாற்றப்படுவது குறித்து மிகுந்த வேதனையைப் பதிவுசெய்தார். “விமானங்கள் எப்போதும் அமைதியின் தூதுவர்களாகவும், உரையாடல் மற்றும் சகோதரத்துவத்தை இணைக்கும் பாலங்களாகவுமே இருக்க வேண்டும்; அவை ஒருபோதும் போருக்கானதாக இருக்கக்கூடாது. இருபதாம் நூற்றாண்டின் உலகப் போர்களில் நிகழ்ந்த வான்வழிக் குண்டுவீச்சுகள் இனியாவது முடிவுக்கு வந்திருக்கவேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “தொழில்நுட்ப வளர்ச்சியைப் போருக்காகப் பயன்படுத்தப்படுவது என்பது முன்னேற்றம் அல்ல; மாறாக, அது ஒரு பின்னோக்கிய நகர்வுஎன்று தெரிவித்துள்ளார்.

news
உலக செய்திகள்
திருத்தந்தை லியோவுக்கு ‘லிபர்ட்டி மெடல்’ விருது!

உலகளவில் மதச்சுதந்திரம், மனசாட்சி மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்தியதற்காகத் திருத்தந்தை 14-ஆம் லியோவுக்கு 38-வது ஆண்டுலிபர்ட்டி மெடல் (Liberty Medal) விருது வழங்கப்படும் என அமெரிக்காவின் தேசிய அரசமைப்பு மையம் (NCC) அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 ஜூலை 3-ஆம் தேதி பிலடெல்பியாவில் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. அமெரிக்க அரசமைப்பின் முதல் திருத்தத்தில் உள்ள அடிப்படை விழுமியங்களை உலகிற்குத் தனது வாழ்நாள் பணியின் மூலம் திருத்தந்தை கொண்டு சென்றதை இந்த விருது அங்கீகரிக்கிறது. 2025, மே மாதம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றது முதல் யூத, இசுலாமிய மற்றும் பிற சமயத் தலைவர்களுடன் உரையாடலை ஏற்படுத்தி, அமைதியான சகவாழ்வை முன்னிறுத்துவதை அவர் தனது முன்னுரிமைப் பணியாகக் கொண்டுள்ளார். இந்தக் கௌரவத்திற்காகத் திருத்தந்தை தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி கூறியுள்ளார்.

news
உலக செய்திகள்
ஆசிய ஆயர் பேரவையின் முக்கியப் பொறுப்பில் அமராவதி ஆயர் மால்கம் செக்வேரா!

இந்தியத் திரு அவைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அமராவதி மறைமாவட்ட ஆயர் மேதகு மால்கம் செக்வேரா, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) சமூகத் தொடர்பு பணியகத்தின் (OSC) ஆயர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பாங்காக் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பில், இவரது நியமனம் உள்ளூர் மற்றும் இந்தியத் திரு அவைக்குக் கிடைத்த ஒரு நற்பேறாகக் கருதப்படுகிறது.

தனது புதிய பொறுப்புக் குறித்து ஆயர் மால்கம் கூறுகையில், “இந்தப் பெருமை எனது அமராவதி மறைமாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. இறைவனின் அளப்பரிய ஆசிகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடவுளின் வழிகாட்டுதலில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உண்மையுடன் நிறைவேற்றப் பாடுபடுவேன்என்றார். ஆயரின் இந்தப் பணி ஆசியத் திரு அவையில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

news
உலக செய்திகள்
“போர் ஒருபோதும் தீர்வாகாது” - ஈராக் கர்தினால் சாக்கோ

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “போர் என்பது தீர்வாகாது; தூதரகப் பேச்சு வார்த்தைகளே சிக்கல்களைத் தீர்க்கும்என்று பாக்தாத் கல்தேய கத்தோலிக்கத் திரு அவையின் தலைவரான கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ தெரிவித்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த படையெடுப்பிற்குப் பிந்தைய குழப்பங்களை ஈராக் ஏற்கெனவே அனுபவித்துள்ளதை நினைவுகூர்ந்த இவர், தற்போதைய சூழல் மீண்டும் மக்களைப் பேரழிவிற்கு இட்டுச்செல்லும் என எச்சரித்துள்ளார். அமைதிக்காகத் திருத்தந்தை லியோ மற்றும் மகா அயதுல்லா அல்-சிஸ்தானி ஆகியோர் காட்டிய சகோதரத்துவப் பாதையைப் பின்பற்றுமாறு அனைத்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள இவர், கிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறு திருப்பலியிலும் அமைதிக்காகச் செபிக்க வேண்டுமென்றும், முசுலிம் தலைவர்கள் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.