news
உலக செய்திகள்
மனித உரிமை மீறல்கள் அவமானத்தின் அடையாளம்

மே 22 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூயார்க்கில் நடைபெற்ற ஆயுத மோதலில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கருத்தமர்வில் .நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா, “மிகவும் பலவீனமான மனிதர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், பெண்கள், குழந்தைகள், மனிதாபிமான பணியாளர்கள் உள்பட பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்துத் தாக்குதல் நடத்துதல், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பை அழித்தல், அவசரத் தேவையில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகல் மறுக்கப்படுதல் ஆகியவை மனிதகுலத்திற்கான துயரமாக இருக்கின்றனஎன எடுத்துரைத்தார்.

news
உலக செய்திகள்
உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் மோதல்கள்!

மே 16, வெள்ளிக்கிழமை .நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்தேரசு அவர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் மோதல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்புகளின் அறிக்கையில் போர், மோதல்கள், அதிர்ச்சி தரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தீவிர வானிலை மாற்றங்கள், கட்டாய இடப்பெயர்வுகள் ஆகியவை உலகளவில் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தொடர்ந்து தூண்டி வருகின்றன என்று எடுத்துரைத்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், 2024-ஆம் ஆண்டில் 53 நாடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் 29,50,00,000-க்கும் அதிகமான மக்கள் கடுமையான பசியை அனுபவித்தனர்; இது கடந்த 2023-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 13,70,00,000 மக்கள் எண்ணிக்கையைவிட அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். உலகளாவிய உணவு நெருக்கடி குறித்த அறிக்கையானது, உலகு ஆபத்தான பாதையை நோக்கிச் செல்கின்றது; எனவே, மக்களின் உணவுத் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவையில் நாம் இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார் அந்தோணியோ குத்தேரசு.

news
உலக செய்திகள்
போர் நிறுத்தம்: பாகிஸ்தான் திரு அவை மகிழ்ச்சி!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நான்கு நாள்களாக இடம்பெற்ற மோதல்கள் முடிவுக்கு வந்து, போர் நிறுத்தம் அமலாக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட பாகிஸ்தான் திரு அவை, மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறாமல் இருக்க பேச்சுவார்த்தைகளும் நிலையான அமைதி முயற்சிகளும் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.  மே 11-ஆம் தேதி பாகிஸ்தான் ஹைதராபாத்தின் புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில், அணு ஆயுதத்தை வைத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே ஒப்புரவு ஏற்பட வேண்டும் எனச் செபங்களை அர்ப்பணித்த பாகிஸ்தான் ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் சாம்சன் சுக்கார்தின், இடைக்காலப் போர்நிறுத்தம் வழியாக, பெரிய போரிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும், போர் என்பது தீர்வாக முடியாது என்பதால் பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் அழைப்புவிடுப்பதாக அறிவித்தார். தென் ஆசியப் பகுதியில் அமைதியான வருங்காலம் இடம்பெற வேண்டுமெனில் ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தைகள், ஒருவருக்கொருவர் மதிப்பு, அமைதிக்கான அர்ப்பணம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார் இஸ்லாமாபாத்-இராவல்பிண்டியின் பேராயர் ஜோசப் அர்ஷாத்.

news
உலக செய்திகள்
குழந்தைகளின் மாண்பும், அடிப்படை உரிமைகளும் காக்கப்பட வேண்டும்!

உலகில் பத்தில் ஒரு சிறார் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து நாம் விவாதிக்க வேண்டிய அவசரத் தேவையாக உள்ளதுஎன .நா.வில் உரையாற்றினார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா. இன்று உலகில் பல நாடுகளில் சிறுவர் தொழிலாளர் முறை தொடர்வது குறித்தும், சிறார் ஆயுத மோதல்களுக்கெனத் திரட்டப்படுவது குறித்தும் திருப்பீடம் ஆழ்ந்த கவலை கொள்வதாகக் கூறிய அவர், சிறார் போர்க்களத்தில் வன்முறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் உட்படுத்தப்படுவது, கட்டாயத் திருமணங்கள், பாலியல் அத்துமீறல்கள் உள்பட பல்வேறு உரிமை மீறல்களிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக அனைத்து நாடுகளும் உழைக்க வேண்டும் எனவும் திருப்பீடம் விண்ணப்பிப்பதாகத் தன் உரையில் வலியுறுத்தியுள்ளார்.

news
உலக செய்திகள்
“கடன் கொடுப்பதில் நீதிக்கான மதிப்பீடு இருக்க வேண்டும்”- வத்திக்கான் பிரதிநிதி

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் .நா. அமைப்புகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பலஸ்த்ரேரோகடன் நெருக்கடி மற்றும் வளர்ச்சிக்கான உரிமைஎன்ற தலைப்பில் நீதி, கருணை மற்றும் புதுப்பித்தலின் காலமாகிய யூபிலி ஆண்டில் ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடன்கள் நீக்கப்பட வேண்டியதன் ஒழுக்க ரீதிக் கடமைகள் குறித்து ஜெனிவாவில் இடம்பெற்ற .நா. கூட்டத்தில் உரையாற்றினார். பல கோடி மக்களின் வருங்காலம் வெளிநாட்டுக் கடன் சுமையோடு பின்னிப் பிணைந்துள்ளது என்ற கவலையை வெளியிட்ட பேராயர், வளர்ச்சி நெருக்கடி என்பது வெளிநாட்டுக் கடன் நெருக்கடியோடு பிரித்துப் பார்க்க முடியாதது எனத் தெரிவித்தார். மேலும், பேராயர் பலஸ்த்ரேரோ, மனித மாண்புக்கும் பொதுநலனுக்கும் முக்கியத்துவம் கொடுத்தல், கடன் கொடுத்தலிலும் பெறுவதிலும் நன்னெறிக் கடமைகள், நீதிக்கான மதிப்பு, உலக அளவிலான ஒருமைப்பாடு போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்திப் பேசினார்.

news
உலக செய்திகள்
திரு அவையின் 267-வது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் வாழ்க்கை வரலாறு

14-09-1955 அன்று அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் இராபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட்.

இவரது தந்தை Louis Marius Prevost பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழி பேசும் தலைமுறையைச் சார்ந்தவர்தாயார் Mildred Martinez இஸ்பானிய மொழி பேசும் தலைமுறையைச் சார்ந்தவர். இவருக்கு Louis Martin மற்றும் John Joseph என்னும் இரு சகோதரர்கள் உள்ளனர்

புனித அகுஸ்தீன் சபையின் இளங்குருமடத்தில் சேர்ந்து கல்வி பயின்ற இவர், பென்சில்வேனியாவில் உள்ள வில்லானோவா பல்கலைக்கழகத்தில் 1977-ஆம் ஆண்டில் கணிதத்திலும் தத்துவ இயலிலும் பட்டம் பெற்றார்.

1977, செப்டம்பர் 1-ஆம் நாள் சிகாகோவில் உள்ள செயிண்ட் லூயிஸில் உள்ள அகுஸ்தீன் (OSA) துறவற இல்லத்தில் இணைந்து துறவறப் பயிற்சி பெற்றார்.

1978, செப்டம்பர் 2 அன்று தனது முதல் வார்த்தைப்பாட்டினையும், 1981, ஆகஸ்டு 29 அன்று தனது நிரந்தர வார்த்தைப்பாட்டினையும் அளித்தார்.

சிகாகோவில் உள்ள கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தில் இறையியலில் பட்டம் பெற்ற இவர், தனது 27-வது வயதில் உரோமில் உள்ள ஆஞ்சலிக்கம் திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் திரு அவைச் சட்டம் பயில்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

1982, ஜூன் 19-ஆம் நாள் சாந்தா மோனிகாவின் அகுஸ்தினியானோ கல்லூரியில் பேராயர் Jean Jadot அவர்களால் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

1984-ஆம் ஆண்டு முதுகலைக் கல்வியைப் பெற்ற இவர், அடுத்த ஆண்டு தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைத் தயாரிக்கும்போது, பெருவின் பியூராவில் உள்ள சுலுகானாஸிற்கு அகுஸ்தீன் சபை மறைப்பணிக்காக (1985-1986) அனுப்பப்பட்டார்.

1987-ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த இவர், இலினாய்ஸின் ஒலிம்பியா ஃபீல்ட்ஸில் உள்ளநல்லாலோசனை அன்னைஎன்ற அகஸ்டினியன் மறைமாநிலத்தின் இறையழைத்தல் இயக்குநராகவும் மறைப்பணி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

1999-ஆம் ஆண்டில் சிகாகோவின் அகுஸ்தீன் சபை மறைமாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அகுஸ்தீன் சபைத்தலைவராக முதன்முறையாகவும், பின்னர் 2007-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2013-ஆம் ஆண்டு சிகாகோவின் அகுஸ்தீன் சபையின் முதல் ஆலோசகர், இறையழைத்தல் இயக்குநர்.

2014, நவம்பர் 3-ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பெருவின் சிக்லாயோ மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் 12-ஆம் நாள் குவாதலூப்பே அன்னை மரியா விழாவன்று அன்னை மரியா பேராலயத்தில் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

2015, செப்டம்பர் 26 அன்று சிக்லாயோ மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, 2018, மார்ச் மாதம் பெரு நாட்டு ஆயர் பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதில் இவர் பொருளாதாரக் கவுன்சிலின் உறுப்பினராகவும், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

2020, ஏப்ரல் 15 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கல்லோ மறைமாவட்டத்தின் திருத்தூது நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

2023, செப்டம்பர் 30 அன்று கர்தினாலாக உயர்த்தப்பட்டு, ஆயர்களுக்கான திருப்பீடத் துறையின் புதிய தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

2025, மே 8 அன்று திரு அவையின் 267-வது திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அகுஸ்தீன் சபையைச் சார்ந்த இவர்பதினான்காம் லியோஎன்னும் பெயரினைத் தனது பெயராக ஏற்றுள்ளார்.