news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 6-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு 25-05-2025) திப 15:1-2,22-29; திவெ 21:10-14,22-23; யோவா 14:23-29

திருப்பலி முன்னுரை

இயேசு தருகின்ற அமைதியில் நிலைத்துக் கலக்கமின்றி வாழ பாஸ்கா கால ஆறாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்று அமைதியைத் தேடி மனித மனங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. நாட்டிலும் வீட்டிலும் அமைதியின்றி வாழும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த உலகம் தரமுடியாத அமைதியை இயேசு மட்டுமே தர முடியும். அந்த அமைதியைத் தூய ஆவியார் வழியாகவே ஆண்டவர் அனுதினமும் வழங்குகின்றார். தூய ஆவியாரின் குரலுக்குச் செவிகொடுக்கிறவர்கள் அமைதியை அனுபவிக்கின்றனர். தூய ஆவியாரின் குரலாகிய மனச்சாட்சிக்குச் செவிகொடுத்து வாழும்போது, நமது உள்ளத்தில் அமைதி நிலைக்கும். நமது உள்ளத்தில் எத்தனையோ ஏக்கங்களை, இன்னல்களை, துயரங்களை, நோய்களைச் சுமந்து இறைவனின் முன் இன்று வந்திருக்கிறோம். சுமையோடு வந்திருக்கும் நம்மைப் பார்த்துகலங்கவேண்டாம், மருள வேண்டாம், நான் உங்களோடு இருக்கிறேன்என்று ஆண்டவர் கூறுகின்றார். நம்முடைய வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடுவோம். அவரை மட்டுமே நம்பியிருப்போம். கலக்கமின்றி, கவலையின்றி அமைதியுடன் ஆண்டவனின் கரம் பற்றி வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இயேசுவின் சீடர்கள் உண்மையானதைப் பற்றியே பேசுவார்கள்; மக்களை மனக்குழப்பத்திற்கு உள்ளாக்க மாட்டார்கள்; பெரும் சுமைகளை மக்கள்மேல் சுமத்தமாட்டார்கள்; தூய ஆவியாரின் துணையோடு தொடக்க காலத்தில் எழுந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தனர். இயேசுவின் சீடர்களாகிய நாமும் அமைதியை விதைப்பவர்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தூய ஆவியார் அனைத்தையும் செய்யவல்ல ஆற்றலை நமக்குத் தருபவர். அனைத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய ஞானத்தைத் தருபவர்; நல்லவைகளை நோக்கி நம்மை வழிநடத்துபவர். நம் வாழ்க்கைக்குக் கிறிஸ்துவே ஒளியாகவும் வழியாகவும் உள்ளார். ஒளியின் மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது சீடத்துவப் பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட எம் திரு அவைத் தலைவர்கள், அழைத்த உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு தொடர்ந்து பயணிக்கத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! நாங்கள் எங்கள் ஒளியாகவும் வழியாகவும் இருக்கும் இயேசுவைப் பற்றிக் கொண்டு வாழ தேவையான ஞானத்தை எமக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் ஆண்டவரே! உம் மகன்மீது கொண்டுள்ள அன்பினாலும் நம்பிக்கையினாலும் இங்குக் கூடிவந்துள்ள அனைவரும் அழிந்து போகின்ற செல்வங்களை நோக்கி ஓடாமல், இயேசுவின் அன்பை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்களை ஒவ்வொரு நாளும் திடப்படுத்தும் ஆண்டவரேநாங்கள் உள்ளம் கலங்காமலும் மருளாமலும் மூவொரு இறைவனில் நம்பிக்கை கொண்டு வாழவும், தூய ஆவியின் ஆலயமாகிய எமது உள்ளத்தில் அமைதியை நிரப்பிடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிறு (18-05-2025) (மூன்றாம் ஆண்டு) திப 14:21-27; திவெ 21:1-5; யோவா 13:31-35

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு கடவுளின் அன்பைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறது. அன்பு என்பது கடவுளின் கொடை. இவ்வுலகில் அனைத்து உயிர்களையும் இயக்குவது அன்பு. ஒருவரின் வெளிப்புற அழகையும் அவர்களுடைய பொருள்களையும் செல்வாக்கையும் பதவியையும் பட்டத்தையும் திறமைகளையும் வைத்து நாம் மற்றவரை அன்பு செய்தல் கூடாது; மாறாக, அனைத்தையும் கடந்து மற்றவர்களை அவர்களுடைய நிறை-குறையோடு ஏற்று அன்பு செய்ய வேண்டும். ஆண்டவரை அன்பு செய்கிறோம் என்றால், அருகில் வாழும் அனைத்து மனிதர்களையும் அன்பு செய்ய வேண்டும். ஆண்டவர் இயேசு இந்த உலகத்தில் பிறந்தது முதல் இறந்தது வரை ஒவ்வொரு மனிதரையும் தேடிச்சென்று அன்பு செய்தார். நாம் வாழ்கின்ற இந்த மண்ணுலகில் ஒருவரையொருவர் முழுமையாக அன்பு செய்கின்றபோது புதியதொரு விண்ணகத்தை இம்மண்ணகத்திலே நாம் காண முடியும். எனவே, நாம் இயேசுவைப் போன்று அனைவரையும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் அன்பு செய்து வாழ்வோம்கடவுள் கொடுத்த இந்த அற்புதமான வாழ்க்கையில் அனைவரையும் அன்பு செய்து, நமது அன்புறவால் இந்த மண்ணகத்தில் விண்ணகத்தைச் சுவைக்கவும், அன்பின் தூதுவர்களாக நாம் வாழ்ந்திடவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

சீடத்துவம் என்பது இயேசு என்ற ஒப்பற்றச் செல்வத்தைச் சுவைப்பதிலும் வாழ்வதிலும் அவரை அறிவிப்பதிலும்தான் அடங்கியிருக்கிறது. சீடர்கள் துணிச்சலுடன் இயேசுவைப் பற்றி அறிவிக்கிறார்கள். தங்களுடைய சாட்சிய வாழ்வால் அனைத்து மக்களும் இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் வளரக் காரணமாய் இருக்கிறார்கள். நம்பிக்கையில் தளராது இயேசுவின் சாட்சிகளாய் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

அன்பு, சகோதரத்துவம், மன்னிப்பு, ஏற்பு, பகிர்வு, உடனிருத்தல், தேவை அறிந்து உதவுதல் போன்ற பண்புகளில் நாம் வளரும்போது  நாம் வாழும் சமூகத்தைப் புதிய விண்ணகமாக மாற்ற இயலும். இமைப்பொழுதும் நம்மை விட்டு நீங்காது நம்முடன் பயணிக்கும் இறையோடு நாமும் பயணிப்போம். நாம் கடவுளோடு இணைந்திருக்கும்போது எந்தத் துன்பமும் நம்மை நெருங்க முடியாது. நமக்கு அனைத்துமாக இருக்கின்ற ஆண்டவரில் சங்கமமாக அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் வார்த்தையாலும் வாழ்க்கையாலும் அன்புறவாலும்  சீடத்துவப் பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான ஞானத்தையும் உடல்நலனையும் தந்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நிபந்தனையின்றி எம்மை அன்பு செய்யும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எம்முடன் வாழும் அனைவரையும் அன்பு செய்து, அன்பை மட்டும் அடித்தளமாகக் கொண்டு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பான ஆண்டவரே! எங்கள் குடும்பங்களிலும் பங்கிலும் உள்ள அனைத்துக் குழந்தைகளும் ஒவ்வொரு நாளும் உமது அன்பை அனுபவிக்கவும், தாங்கள் சந்திக்கும் அனைத்து மனிதருக்குள்ளும் வாழும் இறைவனைக் கண்டுகொள்ளவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

4. அன்பான ஆண்டவரே! தெருக்களிலும் முதியோர் இல்லங்களிலும், எங்கள் குடும்பத்திலும், அன்பிற்காக ஏங்கும் அனைவருக்கும் நாங்கள் அன்பைக் கொடுத்து வாழவும், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உடனிருக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 4-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு; 11-05-2025) திப 13:14,43-52; திவெ 7:9,14-17; யோவா 10:27-30

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறைநல்லாயன் ஞாயிறுஎன்று அழைக்கின்றோம்நல்ல ஆயரான இயேசுவைப் பின்பற்றி வாழ திரு அவை இன்று நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவே நல்ல ஆயர்! நம் ஒவ்வொருவருக்கும் முன்சென்று பாதுகாக்கின்றார்; பராமரிக்கின்றார்; வழிநடத்துகின்றார்; நாம் அவரை விட்டுப் பிரிந்து சென்றாலும், தேடி வந்து நம்மைத் தம்முடைய மந்தையில் சேர்த்து அணைத்துக்கொள்கின்றார்; தமது வார்த்தையால் நமக்கு அன்றாடம் இளைப்பாறுதலைத் தருகின்றார்; சோர்ந்த  நேரங்களில் நமக்குப் புத்துயிர் அளிக்கின்றார். தம்முடைய உயிர்ப்பின் வழியாகப் புதுவாழ்வையும் நமக்குக் கொடுக்கின்றார். இயேசுவை நம்முடைய வாழ்வில் ஆயராகக் கொண்டு வாழும் போது எந்தக் குறையும் இருக்காது. ‘ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறை இல்லைஎன்ற திருப்பாடல் வரிகளை இதயத்தில் பதித்து, நல்லாயர்  இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு அவர் பின் செல்வோம். கீழ்ப்படிதலுள்ள நல்ல ஆடுகளாக நாம் மாறுவோம்நம்முடைய நற்செயல்கள் வழியாக நமது குடும்பத்திற்கும் பங்கிற்கும் சமூகத்திற்கும் நல்ல ஆயராக நாம் மாறிட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

உயிர்த்த இயேசுவின் வல்லமையைப் பெற்ற சீடர்கள் இயேசுவைப் பற்றி அறிவிப்பதையே தங்களின் ஏக்கமாகவும் நோக்கமாகவும் கொண்டிருந்தார்கள். இயேசுவின் வார்த்தையை அறிவிப்பதால் மகிழ்ச்சி அடைகிறார்கள். கடவுளின் வார்த்தையின் மகத்துவத்தை அனைவருக்கும் அறிவிக்கிறார்கள். கடவுளின் வார்த்தையை வாசிப்பதில், வாழ்வதில் ஆர்வம் கொண்டு வாழ நம்மை அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.  

இரண்டாம் வாசகம் முன்னுரை

நல்ல ஆயர் இயேசு தமது உயிரைக் கொடுத்து புதிய வாழ்வைத் தந்துள்ளார். நாம் அனைவரும் இறைவனை அறிந்து அன்பு செய்யும் ஆற்றலைப் பெற தூய ஆவியைத் தந்து நாளும் நம்மைக் காத்து வருகின்றார். வாழ்வு தருகின்ற நீரூற்றான வார்த்தையின் வடிவில் வழிநடத்தி வருகின்ற நல்ஆயரான இயேசுவில் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நல்ல ஆயர் நானேஎன்று மொழிந்த எம் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள், நல்ல ஆயரான உம்மை அனைத்து மக்களும் அறிந்திட இவர்கள் எடுக்கும் முயற்சிகளில் நீரே துணை நின்று காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மைப் பாதுகாக்கும் ஆயரே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் ஒருவர் மற்றவருக்கு நல்ல ஆயனாக இருந்து வழிகாட்டவும், இறைவார்த்தையின் வழியாக நீர் எமக்குக் கூறும் அறிவுரைகளின்படி நாங்கள் எம் வாழ்வை அமைத்துக்கொள்ளவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மை வழிநடத்தும் ஆயரான இறைவா! எமது பங்கில் உள்ள அனைத்துக்  குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் உம்மைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நலம் தரும் நல்லாயரே இறைவா! பல்வேறு நோய்களால் துன்பப்படும் அனைவரும் உமது இரக்கத்தால் முழுமையான விடுதலை பெற்று மகிழ்வோடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 3-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு; 04-05-2025) திப 5:27-32,40-41: திவெ 5:11-14; யோவா 21:1-19

திருப்பலி முன்னுரை

உயிர்த்த இயேசுவில் அன்பு உள்ளங்களே! ஆண்டவரில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு துணிவுடன் வாழ பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவைச் சாவு சீடர்கள் மத்தியில் பயத்தையும் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் உண்டாக்கியது. மனம் சோர்ந்துபோய் மீண்டும் தங்களது பழைய மீன்பிடித் தொழிலுக்குத் திரும்புகின்றனர். ஆனால், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களுக்குக் காட்சி கொடுத்து, நம்பிக்கையை அவர்கள் உள்ளத்தில் விதைக்கிறார். இயேசுவினுடைய உடனிருப்பும் ஆறுதலான வார்த்தைகளும் சீடர்களுடைய மத்தியில் நிறைந்த நம்பிக்கையைத் தருகின்றது. புதிய ஆற்றலுடன் நற்செய்தி அறிவிக்கத் தூண்டுகிறது. இயேசுவின் சீடர்களைப் போன்று இயேசுவை நாமும் அறிவோம், அனைவருக்கும் எடுத்துக்கூறுவோம். உயிர்த்த இயேசு வழங்கிய ஆன்மிகச் செல்வங்களான இறை நம்பிக்கை, அன்பு, உண்மை, நீதி, மன்னிப்பு போன்றவற்றால் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம். அகத்தில் ஆண்டவரின் ஆற்றலைப் பெற்றுத் துணிவுடன் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இயேசுவைக் கண்ட திருத்தூதர்கள்மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்என்று கூறி ஆண்டவருக்குச் சாட்சி பகர்கிறார்கள்; இயேசுவின் திருப்பெயரை அச்சமின்றி அறிவிக்கிறார்கள். இயேசுவைப் பற்றி அறிவிப்பதால் வருகின்ற இன்னல்கள், இடையூறுகள் அனைத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றார்கள். இயேசுவின் திருப்பெயரை வாழ்க்கையால் அறிவிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசுவின் திருப்பெயரால் திருமுழுக்குப் பெற்ற நாம் அவரை ஆராதித்து வணங்க வேண்டும். நம் உள்ளத்தில் அன்றாடம் எழுந்தருளி வரும் இயேசுவையும்ஆலயத்தில் நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்திருக்கும் இயேசுவையும் கண்டு அறிந்து, அன்பு செய்ய அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. உயிர்த்த ஆண்டவரே! உமது மதிப்பீடுகளின்படி நாங்கள் வாழ்ந்து, உமது பணியை இன்னும் அதிகமான உத்வேகத்துடன் செய்வதற்குத்  தேவையான ஞானத்தைத்  திரு அவைத் தலைவர்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. புதுவாழ்வு கொடுத்த ஆண்டவரே! உமது உயிர்ப்பின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட அமைதியை அனுபவிக்கவும், அதை மற்றவர்களுக்கு வழங்கவும் தேவையான ஆற்றலைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நல்ல ஆயரான ஆண்டவரே! உமது சீடர்களைப் போன்று நாங்களும் உம்மை அறிந்து அன்பு செய்யவும், இறுதிவரை உறுதியுடன் நற்செய்தியை அறிவிக்கவும், இயேசுவின் திருப்பெயர் நிலைக்க நாங்கள் தொய்வின்றி உழைத்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆற்றல் வழங்கும் ஆண்டவரே! கணினி உலகில் வாழும் எம் இளைஞர்கள் அலைப்பேசிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட உம்மை அறிவதற்குக் கொடுக்கவும், ஆன்மிக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 2-ஆம் ஞாயிறு (இறை இரக்கத்தின் ஞாயிறு) (27-04-2025) திப 5:12-16; திவெ 1:9-11,12-13,17-19; யோவா 20:19-31

திருப்பலி முன்னுரை

இன்று திரு அவை இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவனின் இரக்கம் அளப்பரியது! கருணை மிகுந்த இறைவன் தம்முடைய இரக்கத்தினால் எல்லாரையும் மன்னிக்கிறார், எப்போதும் மன்னிக்கிறார். “இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்என்கிறார் இயேசு. கண்களில் கருணையையும் இதயத்தில் இரக்கத்தையும் கொண்டு அனைவரையும் அன்பு செய்வோம்; பசிக்கு உணவு கொடுப்போம்; பயணத்தின்போது இல்லாதோருக்கும் இயலாதோருக்கும் அமர்வதற்கு இடம் கொடுப்போம்; நம்மிடம் இரந்து கேட்பவர்களுக்குஇல்லைஎன்று சொல்லாமல் இயன்றதைக் கொடுப்போம்கனத்த இதயங்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கொடுப்போம். இத்தகு இரக்கச் செயல்களைச் செய்வதன் வழியாக உயிர்த்த இயேசுவை நம் வாழ்விலும் அன்றாடம் அனுபவிப்போம். தோமா கிறிஸ்துவோடு வாழ்ந்தவர்; பாடுகளில் பங்கேற்றவர்; இந்தியாவிற்கு வந்து கிறிஸ்துவை விதைத்தவர்; ஆண்டவரைப் பார்த்துநீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்என்று கூறிச் சரணடைந்தவர். “நாமும் அவரோடு செல்வோம்; அவரோடு இறப்போம்என்று கூறி உயிரைக் கொடுத்தவர். ஐயம் சிறிதும் இன்றி புனித தோமாவைப் போன்று இறைவனைப் பற்றிக்கொள்வோம். இயேசுவின் மதிப்பீடுகளை இவ்வுலகிற்குக் கொடுத்து, உயிர்த்த இயேசுவின் மக்களாய் வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம்.

முதல் வாசகம் முன்னுரை

அச்சமுற்றுக் கோழைகளாக அறையைப் பூட்டிக்கொண்டு ஒளிந்திருந்த சீடர்கள் இயேசுவின் தோற்றம் கண்டு துணிச்சல் பெறுகின்றனர். அமைதி இழந்து உயிரச்சம் கொண்டவர்கள், உயிர்த்த இயேசுவின் குரலைக் கேட்டவுடன் உள்ளத்தில் புத்துணர்வு பெறுகிறார்கள்வீரியமுடன் பணி செய்கிறார்கள். நாமும் புதுவாழ்வில் நிலைத்து நம்பிக்கையோடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆவியின் வல்லமை பெற்றவர்கள் பல அதிசயங்களைச் செய்வார்கள். அனைத்தையும் முன்னரே உய்த்துணரும் ஆற்றலைப் பெறுகிறார்கள். முதலும் முடிவுமாக இருக்கின்ற இறைவனின்  குரலைக் கேட்கும் திறனைப் பெறுகிறார்கள். அஞ்சாமல் துணிச்சலோடு பணிசெய்ய ஆற்றல் பெறுகிறார்கள். நாமும் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்திட அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. இரக்கத்தின் ஆண்டவரே! திருத்தூதர்களைப் போன்று திரு அவைத் தலைவர்களும் மக்களை ஒற்றுமையின் பாதையில் வழிநடத்திடவும், மக்கள் இறைத்தந்தையின் அன்பைச் சுவைக்க வழிகாட்டிடவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. இரக்கத்தின் இறைவா! இறை இரக்கத்தின் ஞாயிறுத் திருப்பலியில் இன்று கலந்துகொண்டுள்ள நாங்கள் இரக்கச் செயல்களின் வழியாக இறைவனை எடுத்துரைக்கவும், மற்றவர்கள்மீது இரக்கம் கொண்டவர்களாக வாழவும், கனிவுள்ள வார்த்தைகளைப் பேசவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கத்தின் ஊற்றாகிய ஆண்டவரேஇந்தியாவின் திருத்தூதர் புனித தோமாவைப் போன்று ஐயம் நீங்கி, ‘என் ஆண்டவரே என் தேவனேஎன்று உம்மைப் பற்றிக்கொள்ளவும், நாங்கள் அனைவரும் தோமாவைப் போன்று நற்செய்தியின் தூதுவர்களாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. மரணத்தை வென்று உயிர்த்த ஆண்டவரே! நீர் வழங்கிய அமைதியை நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் கொடுத்து வாழவும், குடும்பங்களுக்குள் அமைதியை ஏற்படுத்தவும், அருகில் வாழும் மக்கள் இயேசுவை எம்மில் காணும் வாழ்க்கை வாழவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டவருடைய உயிர்ப்பின் விழா (மூன்றாம் ஆண்டு) (19-04-2025) தொநூ 1:1- 2:2; உரோ 6:3-11; லூக் 24:1-12

திருப்பலி முன்னுரை

உயிர்த்த இயேசு கொண்டு வந்த அமைதியை அனுபவிக்க இன்றைய உயிர்ப்புப் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. இது மாபெரும் மகிழ்ச்சியின் விழா! ‘அல்லேலூயா... அல்லேலூயா... இயேசு உயிர்த்துவிட்டார், சாவை வென்றுவிட்டார்!’ என்று முழங்கி ஆர்ப்பரிக்கும் வெற்றியின் நாளிது. இயேசு தமது உயிர்ப்பின் வழியாக அமைதியையும் வல்லமையையும்  நமக்குக் கொடுத்துள்ளார். உயிர்த்த இயேசு கல்லறையில் இல்லை; மாறாக, நம்மோடு வாழ்கின்றார். தோல்வியிலிருந்து வெற்றிக்கும் துன்பத்திலிருந்து இன்பத்திற்கும், துக்கத்திலிருந்து மகிழ்ச்சிக்கும் இருளிலிருந்து ஒளிக்கும், பாவத்திலிருந்து மீட்பிற்கும், மரணத்திலிருந்து உயிர்ப்புக்கும் நம்மை அழைத்துச் செல்லஇயேசு உயிர்த்துவிட்டார்என்று முழங்கி ஆர்ப்பரிப்போம். ஆண்டவராகிய இயேசு மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். நமக்கு விடுதலையைக் கொடுக்க, நோய்களுக்கு மருந்திட, வழிநடத்த, அமைதியைக் கொடுக்க, சுமைகளைச் சுகமாக்க, எந்தத் துன்பமும் நம்மை அணுகாது காக்க இயேசு உயிர்த்துவிட்டார். நம்முடைய வாழ்க்கையில் அச்சம், பயம், கலக்கம், வேதனை ஆகியவற்றைக் கடந்து வெற்றி வீரர்களாய், நமது வாழ்க்கையால் இயேசுவை அறிவித்து, உயிரோட்டமுள்ள கிறித்தவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

உயிர்த்த இயேசுவின் வல்லமையைப் பெற்றுள்ள நாம்  செல்லும் இடமெங்கும் நன்மையை மட்டுமே செய்து கொண்டு செல்லவும், இறைவனின்  சாயலை அனைத்திலும், அனைவரிலும் காணவும், கடவுளின் சாட்சிகளாய் வாழ்ந்து இம்மண்ணில் இறைமதிப்பீடுகளை விதைத்து, இரத்தம் சிந்தி திருமறையைக் காத்த மறைச்சாட்சியர்களைப் போன்று வாழ்க்கை வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

உலகச் செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விண்ணகச் செல்வமாகிய அன்பு, நீதி, இரக்கம், உண்மை, மன்னிப்பு போன்ற மதிப்பீடுகளை இம்மண்ணகத்தில் விதைத்து, இயேசுவின் சீடர்களாய் வாழ்ந்து, அவரின் மாட்சியில் பங்கு கொள்ள அழைக்கும்  இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. வல்லமையான ஆண்டவரே! எமது திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் நற்செய்தியைத் துணிவுடனும் உற்சாகத்துடனும் அறிவித்து உமக்குச் சான்று பகரும் வாழ்க்கை வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வெற்றி வீரராக உயிர்த்த ஆண்டவரே! நாங்கள் அனைவரும் அன்பையும் அமைதியையும் அனைவருக்கும் கொடுத்து  வாழவும், இறையாட்சியை இம்மண்ணில் கட்டியெழுப்பத் தேவையான ஆற்றல் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உயிர்த்த ஆண்டவரே! எமது திரு அவையிலும் நாட்டிலும் பங்கிலும் உலகத்திலும் அமைதி நிலவிடவும், போர், பகைமை அனைத்தும் ஒழிந்திடவும், மக்கள் அனைவரும் நீர் கொண்டு வந்த அமைதியை அனு பவிக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஒளியாக உயிர்த்த ஆண்டவரே! எம் வாழ்வில் இருளின் செயல்களைக் களைந்து, ஒளியின் மக்களாக வாழவும், அமைதியை மனிதர்களில் தேடாமல் ஆண்டவராகிய உம்மில் தேட தேவையான ஞானத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.