news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 3-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு; 04-05-2025) திப 5:27-32,40-41: திவெ 5:11-14; யோவா 21:1-19

திருப்பலி முன்னுரை

உயிர்த்த இயேசுவில் அன்பு உள்ளங்களே! ஆண்டவரில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு துணிவுடன் வாழ பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவைச் சாவு சீடர்கள் மத்தியில் பயத்தையும் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் உண்டாக்கியது. மனம் சோர்ந்துபோய் மீண்டும் தங்களது பழைய மீன்பிடித் தொழிலுக்குத் திரும்புகின்றனர். ஆனால், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களுக்குக் காட்சி கொடுத்து, நம்பிக்கையை அவர்கள் உள்ளத்தில் விதைக்கிறார். இயேசுவினுடைய உடனிருப்பும் ஆறுதலான வார்த்தைகளும் சீடர்களுடைய மத்தியில் நிறைந்த நம்பிக்கையைத் தருகின்றது. புதிய ஆற்றலுடன் நற்செய்தி அறிவிக்கத் தூண்டுகிறது. இயேசுவின் சீடர்களைப் போன்று இயேசுவை நாமும் அறிவோம், அனைவருக்கும் எடுத்துக்கூறுவோம். உயிர்த்த இயேசு வழங்கிய ஆன்மிகச் செல்வங்களான இறை நம்பிக்கை, அன்பு, உண்மை, நீதி, மன்னிப்பு போன்றவற்றால் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம். அகத்தில் ஆண்டவரின் ஆற்றலைப் பெற்றுத் துணிவுடன் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இயேசுவைக் கண்ட திருத்தூதர்கள்மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்என்று கூறி ஆண்டவருக்குச் சாட்சி பகர்கிறார்கள்; இயேசுவின் திருப்பெயரை அச்சமின்றி அறிவிக்கிறார்கள். இயேசுவைப் பற்றி அறிவிப்பதால் வருகின்ற இன்னல்கள், இடையூறுகள் அனைத்தையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றார்கள். இயேசுவின் திருப்பெயரை வாழ்க்கையால் அறிவிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசுவின் திருப்பெயரால் திருமுழுக்குப் பெற்ற நாம் அவரை ஆராதித்து வணங்க வேண்டும். நம் உள்ளத்தில் அன்றாடம் எழுந்தருளி வரும் இயேசுவையும்ஆலயத்தில் நற்கருணைப் பேழையில் நமக்காகக் காத்திருக்கும் இயேசுவையும் கண்டு அறிந்து, அன்பு செய்ய அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. உயிர்த்த ஆண்டவரே! உமது மதிப்பீடுகளின்படி நாங்கள் வாழ்ந்து, உமது பணியை இன்னும் அதிகமான உத்வேகத்துடன் செய்வதற்குத்  தேவையான ஞானத்தைத்  திரு அவைத் தலைவர்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. புதுவாழ்வு கொடுத்த ஆண்டவரே! உமது உயிர்ப்பின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட அமைதியை அனுபவிக்கவும், அதை மற்றவர்களுக்கு வழங்கவும் தேவையான ஆற்றலைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நல்ல ஆயரான ஆண்டவரே! உமது சீடர்களைப் போன்று நாங்களும் உம்மை அறிந்து அன்பு செய்யவும், இறுதிவரை உறுதியுடன் நற்செய்தியை அறிவிக்கவும், இயேசுவின் திருப்பெயர் நிலைக்க நாங்கள் தொய்வின்றி உழைத்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஆற்றல் வழங்கும் ஆண்டவரே! கணினி உலகில் வாழும் எம் இளைஞர்கள் அலைப்பேசிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட உம்மை அறிவதற்குக் கொடுக்கவும், ஆன்மிக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 2-ஆம் ஞாயிறு (இறை இரக்கத்தின் ஞாயிறு) (27-04-2025) திப 5:12-16; திவெ 1:9-11,12-13,17-19; யோவா 20:19-31

திருப்பலி முன்னுரை

இன்று திரு அவை இறை இரக்கத்தின் ஞாயிறைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவனின் இரக்கம் அளப்பரியது! கருணை மிகுந்த இறைவன் தம்முடைய இரக்கத்தினால் எல்லாரையும் மன்னிக்கிறார், எப்போதும் மன்னிக்கிறார். “இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்என்கிறார் இயேசு. கண்களில் கருணையையும் இதயத்தில் இரக்கத்தையும் கொண்டு அனைவரையும் அன்பு செய்வோம்; பசிக்கு உணவு கொடுப்போம்; பயணத்தின்போது இல்லாதோருக்கும் இயலாதோருக்கும் அமர்வதற்கு இடம் கொடுப்போம்; நம்மிடம் இரந்து கேட்பவர்களுக்குஇல்லைஎன்று சொல்லாமல் இயன்றதைக் கொடுப்போம்கனத்த இதயங்களுக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கொடுப்போம். இத்தகு இரக்கச் செயல்களைச் செய்வதன் வழியாக உயிர்த்த இயேசுவை நம் வாழ்விலும் அன்றாடம் அனுபவிப்போம். தோமா கிறிஸ்துவோடு வாழ்ந்தவர்; பாடுகளில் பங்கேற்றவர்; இந்தியாவிற்கு வந்து கிறிஸ்துவை விதைத்தவர்; ஆண்டவரைப் பார்த்துநீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்என்று கூறிச் சரணடைந்தவர். “நாமும் அவரோடு செல்வோம்; அவரோடு இறப்போம்என்று கூறி உயிரைக் கொடுத்தவர். ஐயம் சிறிதும் இன்றி புனித தோமாவைப் போன்று இறைவனைப் பற்றிக்கொள்வோம். இயேசுவின் மதிப்பீடுகளை இவ்வுலகிற்குக் கொடுத்து, உயிர்த்த இயேசுவின் மக்களாய் வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம்.

முதல் வாசகம் முன்னுரை

அச்சமுற்றுக் கோழைகளாக அறையைப் பூட்டிக்கொண்டு ஒளிந்திருந்த சீடர்கள் இயேசுவின் தோற்றம் கண்டு துணிச்சல் பெறுகின்றனர். அமைதி இழந்து உயிரச்சம் கொண்டவர்கள், உயிர்த்த இயேசுவின் குரலைக் கேட்டவுடன் உள்ளத்தில் புத்துணர்வு பெறுகிறார்கள்வீரியமுடன் பணி செய்கிறார்கள். நாமும் புதுவாழ்வில் நிலைத்து நம்பிக்கையோடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆவியின் வல்லமை பெற்றவர்கள் பல அதிசயங்களைச் செய்வார்கள். அனைத்தையும் முன்னரே உய்த்துணரும் ஆற்றலைப் பெறுகிறார்கள். முதலும் முடிவுமாக இருக்கின்ற இறைவனின்  குரலைக் கேட்கும் திறனைப் பெறுகிறார்கள். அஞ்சாமல் துணிச்சலோடு பணிசெய்ய ஆற்றல் பெறுகிறார்கள். நாமும் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்திட அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. இரக்கத்தின் ஆண்டவரே! திருத்தூதர்களைப் போன்று திரு அவைத் தலைவர்களும் மக்களை ஒற்றுமையின் பாதையில் வழிநடத்திடவும், மக்கள் இறைத்தந்தையின் அன்பைச் சுவைக்க வழிகாட்டிடவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. இரக்கத்தின் இறைவா! இறை இரக்கத்தின் ஞாயிறுத் திருப்பலியில் இன்று கலந்துகொண்டுள்ள நாங்கள் இரக்கச் செயல்களின் வழியாக இறைவனை எடுத்துரைக்கவும், மற்றவர்கள்மீது இரக்கம் கொண்டவர்களாக வாழவும், கனிவுள்ள வார்த்தைகளைப் பேசவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கத்தின் ஊற்றாகிய ஆண்டவரேஇந்தியாவின் திருத்தூதர் புனித தோமாவைப் போன்று ஐயம் நீங்கி, ‘என் ஆண்டவரே என் தேவனேஎன்று உம்மைப் பற்றிக்கொள்ளவும், நாங்கள் அனைவரும் தோமாவைப் போன்று நற்செய்தியின் தூதுவர்களாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. மரணத்தை வென்று உயிர்த்த ஆண்டவரே! நீர் வழங்கிய அமைதியை நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் கொடுத்து வாழவும், குடும்பங்களுக்குள் அமைதியை ஏற்படுத்தவும், அருகில் வாழும் மக்கள் இயேசுவை எம்மில் காணும் வாழ்க்கை வாழவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டவருடைய உயிர்ப்பின் விழா (மூன்றாம் ஆண்டு) (19-04-2025) தொநூ 1:1- 2:2; உரோ 6:3-11; லூக் 24:1-12

திருப்பலி முன்னுரை

உயிர்த்த இயேசு கொண்டு வந்த அமைதியை அனுபவிக்க இன்றைய உயிர்ப்புப் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. இது மாபெரும் மகிழ்ச்சியின் விழா! ‘அல்லேலூயா... அல்லேலூயா... இயேசு உயிர்த்துவிட்டார், சாவை வென்றுவிட்டார்!’ என்று முழங்கி ஆர்ப்பரிக்கும் வெற்றியின் நாளிது. இயேசு தமது உயிர்ப்பின் வழியாக அமைதியையும் வல்லமையையும்  நமக்குக் கொடுத்துள்ளார். உயிர்த்த இயேசு கல்லறையில் இல்லை; மாறாக, நம்மோடு வாழ்கின்றார். தோல்வியிலிருந்து வெற்றிக்கும் துன்பத்திலிருந்து இன்பத்திற்கும், துக்கத்திலிருந்து மகிழ்ச்சிக்கும் இருளிலிருந்து ஒளிக்கும், பாவத்திலிருந்து மீட்பிற்கும், மரணத்திலிருந்து உயிர்ப்புக்கும் நம்மை அழைத்துச் செல்லஇயேசு உயிர்த்துவிட்டார்என்று முழங்கி ஆர்ப்பரிப்போம். ஆண்டவராகிய இயேசு மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். நமக்கு விடுதலையைக் கொடுக்க, நோய்களுக்கு மருந்திட, வழிநடத்த, அமைதியைக் கொடுக்க, சுமைகளைச் சுகமாக்க, எந்தத் துன்பமும் நம்மை அணுகாது காக்க இயேசு உயிர்த்துவிட்டார். நம்முடைய வாழ்க்கையில் அச்சம், பயம், கலக்கம், வேதனை ஆகியவற்றைக் கடந்து வெற்றி வீரர்களாய், நமது வாழ்க்கையால் இயேசுவை அறிவித்து, உயிரோட்டமுள்ள கிறித்தவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

உயிர்த்த இயேசுவின் வல்லமையைப் பெற்றுள்ள நாம்  செல்லும் இடமெங்கும் நன்மையை மட்டுமே செய்து கொண்டு செல்லவும், இறைவனின்  சாயலை அனைத்திலும், அனைவரிலும் காணவும், கடவுளின் சாட்சிகளாய் வாழ்ந்து இம்மண்ணில் இறைமதிப்பீடுகளை விதைத்து, இரத்தம் சிந்தி திருமறையைக் காத்த மறைச்சாட்சியர்களைப் போன்று வாழ்க்கை வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

உலகச் செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விண்ணகச் செல்வமாகிய அன்பு, நீதி, இரக்கம், உண்மை, மன்னிப்பு போன்ற மதிப்பீடுகளை இம்மண்ணகத்தில் விதைத்து, இயேசுவின் சீடர்களாய் வாழ்ந்து, அவரின் மாட்சியில் பங்கு கொள்ள அழைக்கும்  இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. வல்லமையான ஆண்டவரே! எமது திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் நற்செய்தியைத் துணிவுடனும் உற்சாகத்துடனும் அறிவித்து உமக்குச் சான்று பகரும் வாழ்க்கை வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வெற்றி வீரராக உயிர்த்த ஆண்டவரே! நாங்கள் அனைவரும் அன்பையும் அமைதியையும் அனைவருக்கும் கொடுத்து  வாழவும், இறையாட்சியை இம்மண்ணில் கட்டியெழுப்பத் தேவையான ஆற்றல் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உயிர்த்த ஆண்டவரே! எமது திரு அவையிலும் நாட்டிலும் பங்கிலும் உலகத்திலும் அமைதி நிலவிடவும், போர், பகைமை அனைத்தும் ஒழிந்திடவும், மக்கள் அனைவரும் நீர் கொண்டு வந்த அமைதியை அனு பவிக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஒளியாக உயிர்த்த ஆண்டவரே! எம் வாழ்வில் இருளின் செயல்களைக் களைந்து, ஒளியின் மக்களாக வாழவும், அமைதியை மனிதர்களில் தேடாமல் ஆண்டவராகிய உம்மில் தேட தேவையான ஞானத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு (13-04-2025) எசா 50:4-7; பிலி 2:6-11; லூக் 22:14-23:56

திருப்பலி முன்னுரை

ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறான இன்று, இயேசுவின் புனிதப் பயணத்தைப் பற்றிச் சிந்திக்க அன்னையாம் திரு அவை இன்று நமக்கு அழைப்பு விடுக்கிறது. உலகிற்கு வந்த இயேசு தனிமையில் இருப்போருக்கு நண்பராக, கைவிடப்பட்டவர்களைக் கைவிடாது காப்பவராக, துன்பங்களைப் போக்கும் தூயவராக, இறைத்திட்டத்திற்குப் பணிந்தவராக வாழ்ந்தார்; தம்முடைய வாழ்வில் சந்தித்த அனைவருக்கும் நன்மைகளை மட்டுமே செய்தார்; நம் அனைவரையும் மீட்பதற்காகச் சிலுவையில் தமது விலைமதிக்க முடியாத உயிரையும் கொடுக்க முன்வந்தார். அவரைப் பார்த்துஓசன்னா!’ என்று முதலில் ஆர்ப்பரித்த மக்கள், பின்னர்ஒழிக!’ என்று கூச்சலிடுகின்றனர். அவரது அருஞ்செயலைக் கண்டு புகழ்ந்தவர்கள் பின்னர்இவனைச் சிலுவையில் அறையும்என்று கத்துகின்றனர். வாழ்த்தொலிகளையும், ஏளனப் பேச்சுகளையும், இயேசு கடவுளின் துணையோடு  கடந்துவிடுகிறார். இறுதிவரை தம்முடைய தந்தையின் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றுகின்றார். நமது வாழ்க்கைப் பயணத்தில் புகழ்ச்சிகளால் புல்லரித்துப் போகாமலும், இகழ்ச்சிகளால் மனம் தளர்ச்சி அடையாமலும் இறுதி வரை இறைவனைப் பற்றிக்கொண்டு வாழ்வோம். நமக்காகப் பாடுகளை ஏற்றுக்கொண்ட இயேசுவின்மீது நம் கண்களைப் பதிய வைப்போம். இயேசுவின் வார்த்தையை நமது வாழ்வுக்கு ஒளியாகவும், அவரது வாழ்வை நமது வாழ்க்கையாகவும் கொண்டு வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் உண்மையான ஊழியரின் பணியையும் வாழ்வையும் பற்றி எடுத்துரைக்கின்றது. ஆண்டவருடைய ஊழியர் துன்பங்கள் சூழ்ந்தாலும் இறைவனின் துணையோடு அவரது விருப்பத்தை நிறைவேற்ற எப்போதும் தயாராக இருக்கின்றார். நம்முடைய இன்னல்கள், துன்பங்கள், குழப்பங்கள், சுமைகள் அனைத்திலும் நம்மைக் கைவிடாது காக்கும் இறைவனின் கரம்பற்றி வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல், கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து மனிதத் துயரங்கள், வேதனைகள், சோதனைகள், துன்பங்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார். அவரின் தாழ்மைக்கும் பணிவுக்கும் அவரே ஒப்பற்ற முன்மாதிரி. இயேசுவைப்போல் நாமும் பணிவோடும் தாழ்மையோடும் நடந்து கொள்ள அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) நல்ல ஆயனான ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது இரக்கத்தால் கிடைத்த அர்ப்பண வாழ்வின் மகத்துவம் உணர்ந்து, எங்கள் அனைவரையும் இறை ஒளியின் பாதையில் வழிநடத்தத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2) பாதுகாக்கும் ஆண்டவரே! புனித வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள நாங்கள் அனைவரும் உடன் வாழும் சகோதர- சகோதரிகளோடு நல்லுறவுடன் வாழத் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3) வாழ்வு கொடுக்கும் ஆண்டவரே! இன்று குருத்தோலைகளைக் கையில் ஏந்திதாவீதின் மகனுக்கு ஓசன்னா!’ என்று முழங்கிய நாங்கள் அனைவரும் வாழ்க்கையில் எந்நிலையிலும் உம்மைப் போற்றிப் புகழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4) எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! எம் பங்கில் உள்ள இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அனைவரும் உம்மை அறிவதில் ஆர்வம் கொண்டு, இறைவார்த்தையை ஞானத்தோடு படித்து வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (06-04-2025) எசா 43:16-21; பிலி 3:8-14; யோவா 8:1-11

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு மற்றவர்களைத் தீர்ப்பிடாமல் மன்னித்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவின்மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காகவே பல வினாக்களைத் தொடுக்கிறார்கள். “விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே கொடுத்தத் திருச்சட்டம்; நீர் என்ன சொல்கிறீர்?” என்று கையில் கற்களோடு நிற்கிறார்கள். பல நேரங்களில் மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்களைப் போன்று மற்றவர்கள்மீது குற்றம் சுமத்தவேண்டும், அவர்களைச் சிக்கவைக்க வேண்டும் என்பதற்காகப் பல வினாக்களைத் தொடுத்துக்கொண்டே இருக்கிறோம். மற்றவர்களைத் தீர்ப்பிடுவதற்குப் பரிசேயரைப் போன்று கையில் கற்களோடும் வாயில் சொற்களோடும் காத்துக்கொண்டு இருக்கிறோம். இயேசு ஒருநாளும் எவரையும் தீர்ப்பிட்டதில்லை. நாமும் வன்மையான சொற்களை விடுத்து, மென்மையான சொற்களைப் பயன்படுத்துவோம். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் இயேசு, ‘ஏன் பாவம் செய்தாய்?’ என்று கேட்கவில்லை; மாறாக, ‘நானும் தீர்ப்பு அளிக்கவில்லை, இனி பாவம் செய்யாதீர்என்று கூறுகின்றார். இன்று நம்மைப் பார்த்தும்இனி பாவம் செய்யாதீர்கள்என்று இயேசு கூறுகிறார். கடவுள் நம்மை நிபந்தனையில்லாமல் மன்னிப்பது போல, நாமும் பிறரை மன்னித்து, நல்லுறவுடன் வாழவும் வரம் கேட்டு இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன்என்கிறார். நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், பிரச்சினைகள் போன்றவற்றைச் சந்திக்கும்போது வற்றாத வாழ்வு தரும் நீரோடையை நோக்கி ஆண்டவர் நம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல், ‘கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம்என்றும், ‘கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்என்றும் கூறுகின்றார். உலகச் செல்வங்களில் நாட்டம் கொள்ளாமல், உன்னதச் செல்வமாகிய இயேசுவைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டு வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) அன்பின் இறைவா! நீர் தேர்ந்துகொண்ட திரு அவைத் தலைவர்கள் அனைவரும், இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தைத் தொய்வின்றி எடுத்துரைக்கத் தேவையான அருள்வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2) இரக்கமுள்ள ஆண்டவரே! நாங்கள் அனைவரும் இரக்கமுள்ளவர்களாக, அன்புள்ளவர்களாக, மன்னிப்பவர்களாக, கனிவுமிக்கவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றேம்.

3) பாசமுள்ள ஆண்டவரே! நாங்கள் புறத் தோற்றத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, எம் அகத்திற்கும் கொடுத்து வாழவும், தூயவராகிய உம்மை தூய்மையான மனத்துடன் உட்கொள்ளவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4) அளவின்றி எம்மை மன்னிக்கும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும், இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்து, எமது சொற்களால், வாழ்க்கையால் இயேசுவை அறிவிக்கவும், ஒவ்வொரு நாளும் இறை வார்த்தையைப் படித்து பலன் கொடுத்து வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு (3-ஆம் ஆண்டு) (30-03-2025) யோசு 5:9,10-12: 2கொரி 5:17-21; லூக் 15:1-3,11-32

திருப்பலி முன்னுரை

இறைவனின் எல்லையில்லாத பேரன்பைப் பற்றித் தியானிக்க தவக்காலத்தின் நான்காம் வாரம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில்காணாமல்போன மகன்உவமை  கொடுக்கப்பட்டுள்ளது. இளைய மகன் தந்தையின் அன்பை உணராமல், சொத்தைப் பிரித்து  எடுத்துக்கொண்டு தொலை நாட்டிற்கு நெடும்பயணம் மேற்கொண்டான். அனைத்தையும் செலவழித்து உணவுக்கே வழியில்லாமல் அனாதையாகத் தனித்துவிடப்பட்டபோது, தந்தையின் பேரன்பையும் பாதுகாப்பையும் நினைத்து மனம் திருந்தி தந்தையிடம் வருகின்றான். தன்னைப் பிரிந்து சென்ற மகனைக் கண்டவுடன், தந்தை மகனை ஓடி வந்து அணைத்துக்கொள்கிறார், உடலுக்கும் மனத்திற்கும் விருந்து படைக்கின்றார். இந்தத் தந்தையைப் போலவே இறைவன் தம்முடைய அன்பை நமக்குக் கொடுக்க இருகரம் விரித்துக் காத்துக்கொண்டிருக்கின்றார். ஆனால், நாமோ, நமது எண்ணத்தால், சொற்களால், செயல்களால், தீய நடத்தையால் ஆண்டவரின் அன்பைத் தொலைத்து வாழ்ந்து வருகிறோம். அதனால் பல துன்பங்களையும் அனுபவிக்கிறோம். இத்தவக்காலத்தில்ஒப்புரவுஎன்ற அருளடையாளத்தால் உள்ளத்தைத் தூய்மை செய்து ஆண்டவரின் அன்புக்குள் அடைக்கலமாவோம். இளைய மகனின் தந்தையைப் போன்று நமது வாழ்க்கையில் மன்னிப்பைக் கொடுப்போம். மன்னிப்பே உறவுகளை ஒட்ட வைக்கும், மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும், தீராத நோய்களினின்று முழுமையான விடுதலையைத் தரும். எனவே, நாம் நமது பாவத்திலிருந்து மனம் மாற்றம் பெற்று, நற்செயல்களால் நமது வாழ்க்கைக்கு உயிர் கொடுப்போம்இப்பொழுதும் - எப்பொழுதும் என்ற இரு பொழுதுகளும் நம்மை விட்டு நீங்காது காத்துவரும் இறைப் பேரன்பில் நிலைக்க வரம் வேண்டி இணைவோம் இத் திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நாம் கடவுளுடன் இணைந்திருக்கும்போது எந்தக் குறையும் நமக்கு இருக்காது. ஆண்டவர்  இஸ்ரயேல் மக்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியின் பாதையில் வழிநடத்தினார். இறையுறவில் நிலைத்திருக்கும்போது நமது வாழ்க்கையிலும் பல நன்மைகளை அனுபவிப்போம்  என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

உலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது ஆன்மாவைத் தொலைத்துவிடாமல்உன்னதமான உயிரை நமக்காகக் கொடுத்து நிலைவாழ்வைப் பெற்றுத்தந்த இயேசுவோடு இணைந்து வாழ முயற்சி எடுக்கவும், அவரில் அவரோடு அவருக்காக வாழ்ந்து நிறைபலனைக் கொடுத்துத் தூய மக்களாய் வாழவும் அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்த எம் திரு அவைத் தலைவர்கள் அப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான உடல், ஆன்மிக நலனைக் கொடுத்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மீது பேரன்பு கொண்ட ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்கள் நற்செயல்களால் உமது அன்பில் நிலைத்து வாழவும், பகை, வெறுப்பு, மன்னிக்காத மனநிலை இவற்றிலிருந்து விடுபட்டு, உம் சாயலை மக்கள் அனைவரிலும் கண்டு மகிழ்வோடு வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எல்லையில்லாத அன்பால் எம்மைக் காக்கும் ஆண்டவரே! இன்றைய நற்செய்தியில் கூறப்பட்ட இளைய மகனைப் போன்று மனம் திருந்தி உம்மிடம் வரவும், எம்மோடு வாழும் சகோதர, சகோதரிகளோடு நல்லுறவுடன் வாழவும்  தேவையான வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! இத்தவக்காலத்தில் உணவில் மட்டும் நோன்பு இருக்காமல், எங்களது வார்த்தைகளில், பார்வையில், மற்றவர்களைப் பற்றிக் குறைபேசுவதில் போன்ற தவறான வாழ்க்கையிலிருந்து விலகி, உம்மை நெருங்கிவர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.