news
ஞாயிறு தோழன்
மூவொரு கடவுள் பெருவிழா (15-06-2025) (மூன்றாம் ஆண்டு) நீமொ 8:22-31; உரோ 5:1-5; யோவா 16:12-15

திருப்பலி முன்னுரை

திரு அவை இன்றைய நாளில் மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. மூவொரு கடவுளின் பிரசன்னம் நமது வாழ்விற்கு உந்துசக்தியாக இருக்கிறது. மூவொரு கடவுளின் தன்மையே மனிதருக்குள் உறவுகளை ஏற்படுத்துகிறது. மூவொரு கடவுளின் ஒன்றிப்பு மனித இனத்தை வழிநடத்துவதற்கான அடிப்படை அச்சாரமாகத் திகழ்கிறது. அன்றாடம்தந்தை, மகன்தூய ஆவியார்என்று உச்சரிக்கும்போதுதந்தைஎன்று கூறி நெற்றியில் கைவைக்கிறோம். இது தந்தை கடவுள் உலகத்தைப் படைத்தவர் என்பதையும், மகன் என்று சொல்லி நெஞ்சில் கை வைக்கிறோம்; இது இயேசு நம்மீது கொண்ட அன்பினால் நமக்காக இரத்தம் சிந்தி மீட்டார் என்பதையும், தூய ஆவியார் என்று கூறும்போது தோள்களிலும் கைவைக்கிறோம். இது தூய ஆவியார் நமக்கு ஆற்றலைத் தருபவராக இருக்கிறார் என்பதை உணர்த்துவதாக உள்ளதுநாம் எந்த ஒரு வழிபாட்டு நிகழ்வையும் மூவொரு கடவுளின் துணையோடு துவங்குகிறோம். மூவொரு கடவுளின் துணையோடு நிறைவு செய்கின்றோம்ஆள்தன்மையில் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தெய்வத்தன்மை உடையதுதான் மூவொரு கடவுளின் கொள்கை. ஒரே கடவுள் மூன்று ஆள்கள் என்ற நம்பிக்கையில் நாளும் வாழவும் வளரவும் வரம் வேண்டுவோம். பேரறிவான தந்தையும், பேரன்பான இயேசுவும், பேராற்றலான தூய ஆவியும் தொடர்ந்து நம்மை வழிநடத்த செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

படைப்புகள் அனைத்தும் இறைவனின் கலை நயம். இறைவனின் அளப்பரிய நன்மைத்தனத்தை வெளிப்படுத்தும் சிறந்த கருவி. எதனையும் எவற்றோடும் ஒப்பிட முடியாத அளவுக்குத் தனித்தன்மையோடு ஒவ்வொன்றும் படைக்கப்பட்டுள்ளன. படைப்புகள் அனைத்தும் கடவுளின் சாயலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மூவொரு கடவுளின் செயல்பாடு, படைப்புகள் ஒவ்வொன்றிலும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசு கிறிஸ்துவின் வழியாக வாழ்வைப் பெற்றுள்ள நாம், வாழ்க்கையில் வருகின்ற துன்பங்கள், இக்கட்டுகள், இடையூறுகள், சோதனைகள் அனைத்திலும் இயேசு விடுதலை தருவார் என்ற நம்பிக்கையில் வாழ வேண்டும். இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் அவருக்காக, அவரோடு வாழ்வதில் பெருமகிழ்ச்சி அடைய வேண்டும். வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனைத்திலும் ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பு நம்மோடு இருக்கிறது என்ற எதிர்நோக்கில் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. மூவொரு இறைவா! இயேசுவின் மறையுடலாம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் உம்மில் ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து, மக்களை இறையாட்சியின் பாதையில் வழிநடத்திச் செல்வதற்குத் தேவையான அருளைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. மூவொரு இறைவா! நீவிர் மூன்று ஆள்களாக இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயலாற்றுவதைப்போல, உம் திருமுன் கூடிவந்துள்ள நாங்கள் வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமையோடு வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மூவொரு இறைவா! உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக இறைவனோடு நல்லுறவு கொண்டுள்ள நாங்கள் துன்பங்கள், சோதனைகள் மத்தியிலும் உமக்குச் சான்று பகர்ந்திட தேவையான வல்லமையை எமக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. மூவொரு இறைவா! தந்தையாம் இறைவனின் இறையருளும், மகனாம் இயேசுவின் அன்பும், தூய ஆவியாரின் வரங்களும் கனிகளும் நிரம்பப்பெற்று நாங்கள் வாழவும், எங்கள் குழந்தைகளையும் இறைநம்பிக்கையில் வளர்த்தெடுக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தூய ஆவியார் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) (08-06-2025) திப 2:1-11; உரோ 8:8-17; யோவா 14:15-16;23-26

திருப்பலி முன்னுரை:

இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இவ்விழா ஆவியானவரின் வழிநடத்துதலில் நாளும் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறதுநம்மீது கொண்ட அளவற்ற அன்பால் கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, இவ்வுலகிற்கு வந்து தம் இன்னுயிரை நமக்காக அளித்தார். அதனைத் தொடர்ந்து அவரது அன்பின் நீட்சியாக நமக்குத் துணையாளராக இருக்க தூய ஆவியாரை நமக்கு அருளினார். திரு அவையில் தூய ஆவியானவர் புதுப்பிப்பவராகவும் உயிர் அளிப்பவராகவும் திடப்படுத்துபவராகவும் உண்மையின் குரலாகவும் செயல்படுகின்றார். தூய ஆவியார் அநீதிகளை எதிர்ப்பவர்; உள்ளத்திற்கு அமைதியைக் கொடுப்பவர்; நல்லவற்றைச் செய்வதற்கு நம்மைத் தூண்டுபவர். அனைவருக்கும் அனைத்தையும் கொடுப்பவர். இத்தகு சிறப்புமிக்க தூய ஆவியாரை நாம் அருளடையாளங்களின் வழியாகப் பெற்றிருக்கின்றோம். இன்றைய இறைவாக்கினர்களாகிய நாமும் தூய ஆவியைப் பெற்று இறைப்பணியையும் மக்கள் பணியையும் சிறப்பாகச் செய்திட வரம் கேட்போம். தூய ஆவியாரின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, பொறுமை, பரிவு, நற்பண்பு, நம்பிக்கை, சாந்தம், நன்னெறி போன்றவை நம்மையும், நம் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் நிரப்பிட செபிப்போம். தூய ஆவியார் நமது உள்ளத்திற்கும் உறவுகளுக்கும் அமைதியை நல்கிட இணைந்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட சீடர்கள் வியக்கத்தக்க செயல்களைச் செய்கிறார்கள். அனைத்து மொழிகளையும் பேசும் திறனையும், புரிந்துகொள்ளும் ஆற்றலையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஆவியின் ஏவுதலால் அனைத்து மக்களுக்கும் இறைவனின் அருஞ்செயல்களை எடுத்துரைக்கிறார்கள். தூய ஆவியைப் பெற்றுள்ள நம்மையும் துணிவுடன் இயேசுவை அறிவிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தூய ஆவியார் ஊனியல்பின் இச்சைகளுக்கு ஏற்ப வாழாமல், கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ நமக்குக் கற்றுத்தருகின்றார்அச்சம் நீங்கி ஆண்டவரின் பணியைச் செய்வதற்கு நமக்கு ஊக்கம் தருகின்றார். நம் உள்ளத்து உணர்வுகளையும் சிந்தனைகளையும் அறிந்து நம்மைச் சரியான வழியில் நடத்துகின்றார். எனவே, ஒவ்வொரு நிமிடமும் கடவுளின் ஆவியால் இயக்கப்பட்டு அவருக்கு உகந்த பிள்ளைகளாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. தூய ஆவியை எமக்கு வழங்கிய ஆண்டவரே! தூய ஆவியின் துணையால் எம் திரு அவைக்குக் கிடைத்த திருத்தந்தைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். தொலைநோக்குப் பார்வையுடன் திரு அவையை வழிநடத்தத் தேவையான ஞானத்தையும் நல்ல சுகத்தையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. தூய ஆவியாரின் வழியாக உடனிருப்பை எமக்கு வழங்கும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும் துடிப்போடு நற்செய்தியை அறிவிக்கவும், தூய ஆவியாரின் குரலாகிய எமது மனச்சான்றிற்குச் செவிகொடுத்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. தூய ஆவியின் வழியாக எமக்கு நம்பிக்கையை வழங்கும் ஆண்டவரே! எம் பங்கிலுள்ள இளைஞர்கள் ஆவியின் வரங்களையும் கொடைகளையும் பெற்று விவேகத்துடன் வாழவும், உலகப் போக்கினை விடுத்து ஆவியால் ஆட்கொள்ளப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றே எம் ஆண்டவரே! போரினால் அமைதி இழந்து தவிக்கும்  அனைத்து நாடுகளையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். போர், பகை இவையெல்லாம் அழிந்து நாடுகள் அமைதியில் திளைத்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஜூன் 01, 2025, ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) திப 1:1-11; எபி 9:24-28;10:19-23; லூக் 24:46-53

திருப்பலி முன்னுரை

இன்று ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இன்றைய விழா நற்செய்தியைப் பறைசாற்றவும், கடவுளின் சாட்சிகளாய் பயணிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு நலம் கொடுக்கும் நண்பராகவும், துன்பம் போக்கும் தூயவராகவும், ஏழைகளின் தஞ்சமாகவும், அனைத்து மக்களுக்கும் வாழ்வு கொடுப்பவராகவும் விளங்கினார். தாம் முன்னுரைத்தவாறு உயிர்த்தெழுந்து நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்தார். இயேசுவின் விண்ணேற்றம் நாம் மண்ணகச் செல்வங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட அன்பு, மன்னிப்பு, நம்பிக்கை, உடனிருப்பு, விட்டுக் கொடுத்தல், மென்மையான வார்த்தைகளைப் பேசுதல் போன்ற விண்ணகச் செல்வங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ அழைப்பு விடுக்கின்றது. நாமே நடமாடும்  நற்செய்தியாக மாறி இயேசுவை வாழ்க்கையால் அறிவிப்போம். எத்தகைய நிலையிலும் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்து, அனைத்து மாந்தரையும் இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தைச் சுவைக்கச் செய்வோம். விண்ணகப் பயணிகளாகிய நாம் சந்திக்கின்ற துன்ப துயரங்கள், இடையூறுகள், சவால்கள் போன்றவற்றில் தேங்கிவிடாமல், இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையால் அனைத்தையும் முறியடித்து  இயேசுவோடு, இயேசுவில் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

தம்மோடு இருக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு சீடர்களை அழைத்தார். சீடர்களுக்குத் தமது வாழ்க்கையால் போதித்தார். உயிர்த்தபின் பலமுறை சீடர்களுக்குத் தோன்றித் திடமளித்தார். சீடர்களைப் பக்குவமாய் வழிநடத்திப் பலன் கொடுக்கச் செய்த இறைவன் நம்மையும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையோடு முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

மனச்சாட்சியே மனிதர்களின் உண்மையான நீதிமன்றம். மனச்சான்று தூய ஆவி வாழும் ஆலயம். உள்ளம் என்னும் ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்கும்போது ஆண்டவரை எளிதில் அணுகிச்செல்ல முடியும். ‘நான் உங்களோடு இருப்பேன்என்று வாக்களித்த இறைவன் நம்பிக்கைக்கு உரியவர். வாழ்நாளெல்லாம் இறைநம்பிக்கையில் வேரூன்றி வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள்என்று மொழிந்த ஆண்டவரே! உமது சீடத்துவப் பணிக்காக நீர் அழைத்த எம் திரு அவைத் தலைவர்கள் உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழத் தேவையான ஆற்றலைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. ‘உலகம் முடியும்வரை உங்களோடு இருப்பேன்என்று மொழிந்த ஆண்டவரே! நாங்கள் அனைவரும் எப்பொழுதும் உம்மை விட்டு நீங்காது, உம்மில் உம்மோடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நீங்கள் என் சாட்சிகள்என்று மொழிந்த ஆண்டவரே! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் அன்பின், மகிழ்ச்சியின், உறவின், சமத்துவத்தின் திருப்பயணிகளாய் வாழ்ந்து, இறுதிவரை உறுதியுடன் உமக்குச் சான்று பகரும் வாழ்க்கை வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு வாழும் ஆண்டவரே! எம் குழந்தைகள் நல்ல முறையில் படித்து, கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றியைக் கண்டிட தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 6-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு 25-05-2025) திப 15:1-2,22-29; திவெ 21:10-14,22-23; யோவா 14:23-29

திருப்பலி முன்னுரை

இயேசு தருகின்ற அமைதியில் நிலைத்துக் கலக்கமின்றி வாழ பாஸ்கா கால ஆறாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்று அமைதியைத் தேடி மனித மனங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. நாட்டிலும் வீட்டிலும் அமைதியின்றி வாழும் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த உலகம் தரமுடியாத அமைதியை இயேசு மட்டுமே தர முடியும். அந்த அமைதியைத் தூய ஆவியார் வழியாகவே ஆண்டவர் அனுதினமும் வழங்குகின்றார். தூய ஆவியாரின் குரலுக்குச் செவிகொடுக்கிறவர்கள் அமைதியை அனுபவிக்கின்றனர். தூய ஆவியாரின் குரலாகிய மனச்சாட்சிக்குச் செவிகொடுத்து வாழும்போது, நமது உள்ளத்தில் அமைதி நிலைக்கும். நமது உள்ளத்தில் எத்தனையோ ஏக்கங்களை, இன்னல்களை, துயரங்களை, நோய்களைச் சுமந்து இறைவனின் முன் இன்று வந்திருக்கிறோம். சுமையோடு வந்திருக்கும் நம்மைப் பார்த்துகலங்கவேண்டாம், மருள வேண்டாம், நான் உங்களோடு இருக்கிறேன்என்று ஆண்டவர் கூறுகின்றார். நம்முடைய வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடுவோம். அவரை மட்டுமே நம்பியிருப்போம். கலக்கமின்றி, கவலையின்றி அமைதியுடன் ஆண்டவனின் கரம் பற்றி வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இயேசுவின் சீடர்கள் உண்மையானதைப் பற்றியே பேசுவார்கள்; மக்களை மனக்குழப்பத்திற்கு உள்ளாக்க மாட்டார்கள்; பெரும் சுமைகளை மக்கள்மேல் சுமத்தமாட்டார்கள்; தூய ஆவியாரின் துணையோடு தொடக்க காலத்தில் எழுந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தனர். இயேசுவின் சீடர்களாகிய நாமும் அமைதியை விதைப்பவர்களாக வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தூய ஆவியார் அனைத்தையும் செய்யவல்ல ஆற்றலை நமக்குத் தருபவர். அனைத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய ஞானத்தைத் தருபவர்; நல்லவைகளை நோக்கி நம்மை வழிநடத்துபவர். நம் வாழ்க்கைக்குக் கிறிஸ்துவே ஒளியாகவும் வழியாகவும் உள்ளார். ஒளியின் மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது சீடத்துவப் பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட எம் திரு அவைத் தலைவர்கள், அழைத்த உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு தொடர்ந்து பயணிக்கத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! நாங்கள் எங்கள் ஒளியாகவும் வழியாகவும் இருக்கும் இயேசுவைப் பற்றிக் கொண்டு வாழ தேவையான ஞானத்தை எமக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் ஆண்டவரே! உம் மகன்மீது கொண்டுள்ள அன்பினாலும் நம்பிக்கையினாலும் இங்குக் கூடிவந்துள்ள அனைவரும் அழிந்து போகின்ற செல்வங்களை நோக்கி ஓடாமல், இயேசுவின் அன்பை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்களை ஒவ்வொரு நாளும் திடப்படுத்தும் ஆண்டவரேநாங்கள் உள்ளம் கலங்காமலும் மருளாமலும் மூவொரு இறைவனில் நம்பிக்கை கொண்டு வாழவும், தூய ஆவியின் ஆலயமாகிய எமது உள்ளத்தில் அமைதியை நிரப்பிடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 5-ஆம் ஞாயிறு (18-05-2025) (மூன்றாம் ஆண்டு) திப 14:21-27; திவெ 21:1-5; யோவா 13:31-35

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு கடவுளின் அன்பைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறது. அன்பு என்பது கடவுளின் கொடை. இவ்வுலகில் அனைத்து உயிர்களையும் இயக்குவது அன்பு. ஒருவரின் வெளிப்புற அழகையும் அவர்களுடைய பொருள்களையும் செல்வாக்கையும் பதவியையும் பட்டத்தையும் திறமைகளையும் வைத்து நாம் மற்றவரை அன்பு செய்தல் கூடாது; மாறாக, அனைத்தையும் கடந்து மற்றவர்களை அவர்களுடைய நிறை-குறையோடு ஏற்று அன்பு செய்ய வேண்டும். ஆண்டவரை அன்பு செய்கிறோம் என்றால், அருகில் வாழும் அனைத்து மனிதர்களையும் அன்பு செய்ய வேண்டும். ஆண்டவர் இயேசு இந்த உலகத்தில் பிறந்தது முதல் இறந்தது வரை ஒவ்வொரு மனிதரையும் தேடிச்சென்று அன்பு செய்தார். நாம் வாழ்கின்ற இந்த மண்ணுலகில் ஒருவரையொருவர் முழுமையாக அன்பு செய்கின்றபோது புதியதொரு விண்ணகத்தை இம்மண்ணகத்திலே நாம் காண முடியும். எனவே, நாம் இயேசுவைப் போன்று அனைவரையும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் அன்பு செய்து வாழ்வோம்கடவுள் கொடுத்த இந்த அற்புதமான வாழ்க்கையில் அனைவரையும் அன்பு செய்து, நமது அன்புறவால் இந்த மண்ணகத்தில் விண்ணகத்தைச் சுவைக்கவும், அன்பின் தூதுவர்களாக நாம் வாழ்ந்திடவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

சீடத்துவம் என்பது இயேசு என்ற ஒப்பற்றச் செல்வத்தைச் சுவைப்பதிலும் வாழ்வதிலும் அவரை அறிவிப்பதிலும்தான் அடங்கியிருக்கிறது. சீடர்கள் துணிச்சலுடன் இயேசுவைப் பற்றி அறிவிக்கிறார்கள். தங்களுடைய சாட்சிய வாழ்வால் அனைத்து மக்களும் இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் வளரக் காரணமாய் இருக்கிறார்கள். நம்பிக்கையில் தளராது இயேசுவின் சாட்சிகளாய் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

அன்பு, சகோதரத்துவம், மன்னிப்பு, ஏற்பு, பகிர்வு, உடனிருத்தல், தேவை அறிந்து உதவுதல் போன்ற பண்புகளில் நாம் வளரும்போது  நாம் வாழும் சமூகத்தைப் புதிய விண்ணகமாக மாற்ற இயலும். இமைப்பொழுதும் நம்மை விட்டு நீங்காது நம்முடன் பயணிக்கும் இறையோடு நாமும் பயணிப்போம். நாம் கடவுளோடு இணைந்திருக்கும்போது எந்தத் துன்பமும் நம்மை நெருங்க முடியாது. நமக்கு அனைத்துமாக இருக்கின்ற ஆண்டவரில் சங்கமமாக அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் வார்த்தையாலும் வாழ்க்கையாலும் அன்புறவாலும்  சீடத்துவப் பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான ஞானத்தையும் உடல்நலனையும் தந்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நிபந்தனையின்றி எம்மை அன்பு செய்யும் ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எம்முடன் வாழும் அனைவரையும் அன்பு செய்து, அன்பை மட்டும் அடித்தளமாகக் கொண்டு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பான ஆண்டவரே! எங்கள் குடும்பங்களிலும் பங்கிலும் உள்ள அனைத்துக் குழந்தைகளும் ஒவ்வொரு நாளும் உமது அன்பை அனுபவிக்கவும், தாங்கள் சந்திக்கும் அனைத்து மனிதருக்குள்ளும் வாழும் இறைவனைக் கண்டுகொள்ளவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

4. அன்பான ஆண்டவரே! தெருக்களிலும் முதியோர் இல்லங்களிலும், எங்கள் குடும்பத்திலும், அன்பிற்காக ஏங்கும் அனைவருக்கும் நாங்கள் அன்பைக் கொடுத்து வாழவும், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உடனிருக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பாஸ்கா காலத்தின் 4-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு; 11-05-2025) திப 13:14,43-52; திவெ 7:9,14-17; யோவா 10:27-30

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறைநல்லாயன் ஞாயிறுஎன்று அழைக்கின்றோம்நல்ல ஆயரான இயேசுவைப் பின்பற்றி வாழ திரு அவை இன்று நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவே நல்ல ஆயர்! நம் ஒவ்வொருவருக்கும் முன்சென்று பாதுகாக்கின்றார்; பராமரிக்கின்றார்; வழிநடத்துகின்றார்; நாம் அவரை விட்டுப் பிரிந்து சென்றாலும், தேடி வந்து நம்மைத் தம்முடைய மந்தையில் சேர்த்து அணைத்துக்கொள்கின்றார்; தமது வார்த்தையால் நமக்கு அன்றாடம் இளைப்பாறுதலைத் தருகின்றார்; சோர்ந்த  நேரங்களில் நமக்குப் புத்துயிர் அளிக்கின்றார். தம்முடைய உயிர்ப்பின் வழியாகப் புதுவாழ்வையும் நமக்குக் கொடுக்கின்றார். இயேசுவை நம்முடைய வாழ்வில் ஆயராகக் கொண்டு வாழும் போது எந்தக் குறையும் இருக்காது. ‘ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறை இல்லைஎன்ற திருப்பாடல் வரிகளை இதயத்தில் பதித்து, நல்லாயர்  இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு அவர் பின் செல்வோம். கீழ்ப்படிதலுள்ள நல்ல ஆடுகளாக நாம் மாறுவோம்நம்முடைய நற்செயல்கள் வழியாக நமது குடும்பத்திற்கும் பங்கிற்கும் சமூகத்திற்கும் நல்ல ஆயராக நாம் மாறிட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

உயிர்த்த இயேசுவின் வல்லமையைப் பெற்ற சீடர்கள் இயேசுவைப் பற்றி அறிவிப்பதையே தங்களின் ஏக்கமாகவும் நோக்கமாகவும் கொண்டிருந்தார்கள். இயேசுவின் வார்த்தையை அறிவிப்பதால் மகிழ்ச்சி அடைகிறார்கள். கடவுளின் வார்த்தையின் மகத்துவத்தை அனைவருக்கும் அறிவிக்கிறார்கள். கடவுளின் வார்த்தையை வாசிப்பதில், வாழ்வதில் ஆர்வம் கொண்டு வாழ நம்மை அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.  

இரண்டாம் வாசகம் முன்னுரை

நல்ல ஆயர் இயேசு தமது உயிரைக் கொடுத்து புதிய வாழ்வைத் தந்துள்ளார். நாம் அனைவரும் இறைவனை அறிந்து அன்பு செய்யும் ஆற்றலைப் பெற தூய ஆவியைத் தந்து நாளும் நம்மைக் காத்து வருகின்றார். வாழ்வு தருகின்ற நீரூற்றான வார்த்தையின் வடிவில் வழிநடத்தி வருகின்ற நல்ஆயரான இயேசுவில் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நல்ல ஆயர் நானேஎன்று மொழிந்த எம் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள், நல்ல ஆயரான உம்மை அனைத்து மக்களும் அறிந்திட இவர்கள் எடுக்கும் முயற்சிகளில் நீரே துணை நின்று காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மைப் பாதுகாக்கும் ஆயரே இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் ஒருவர் மற்றவருக்கு நல்ல ஆயனாக இருந்து வழிகாட்டவும், இறைவார்த்தையின் வழியாக நீர் எமக்குக் கூறும் அறிவுரைகளின்படி நாங்கள் எம் வாழ்வை அமைத்துக்கொள்ளவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மை வழிநடத்தும் ஆயரான இறைவா! எமது பங்கில் உள்ள அனைத்துக்  குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் உம்மைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நலம் தரும் நல்லாயரே இறைவா! பல்வேறு நோய்களால் துன்பப்படும் அனைவரும் உமது இரக்கத்தால் முழுமையான விடுதலை பெற்று மகிழ்வோடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.