news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு (15-03-2026) 1சாமு 16:1,6-7,10-13; எபே 5:8-14; யோவா 9:1-41

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு, ஒளியின் மக்களாக வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு பிறவியிலேயே பார்வையற்றவரின் புறக்கண்களையும் அகக்கண்களையும் ஒருங்கே திறந்து அவருக்குப் பார்வையையும் இறையனுபவத்தையும் கொடுக்கிறார். பார்வையற்றவர் இயேசுமீது, தான் கொண்டிருந்த நம்பிக்கையினால் முழுப்பார்வை பெறுகிறார். ஆனால், பார்வையுள்ள யூதர்கள் நம்பிக்கையின்மையால் பார்வையற்றவர்களாக மாறுகின்றனர்.

பார்வையற்றவர் கிறிஸ்துவை அறிவதிலும் நம்புவதிலும் படிப்படியாக முன்னேறி இயேசுவை மனிதராக, ஓர் இறைவாக்கினராக, கடவுளிடமிருந்து வந்தவராக நம்பி ஏற்றுக்கொள்கின்றார்; புத்தொளி பெற்றவராய் நற்செய்தியைப் பறைசாற்றுகின்றார்நமது எண்ணத்திலும் வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மாற்றம்பெற நமது அகக்கண்கள் திறக்கப்பட வேண்டும். வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களில், தோல்விகளில், தனிமையில், நோயில் இறைவனின் உடனிருப்பை உணரும் அகப்பார்வை பெற வேண்டும்இயேசுவை மட்டும் உலகின் ஒளியாக ஏற்றுக்கொண்டால், நமது இருளான வாழ்வு வெளிச்சமாக மாறும். நமது எண்ணமும் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும்போது, நமது பார்வையும் தூய்மையாக இருக்கும். நாம் அனைவரும்  இயேசு என்ற பேரொளியால் ஒளிர்விக்கப்பட்டு, ஒளியின் மக்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீதைத் தமது பணிக்காகத் தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்கின்றார். மனிதர்கள் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார். ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாமும் அகத்தைக் கண்டு பழகும் அகவொளி பெற அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

இருளின் செயல்களான கோபம், மன்னிக்காமை, மனிதத்தைச் சிதைத்தல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் போன்ற இருளின் செயல்களை விட்டுவிட்டு கிறிஸ்து என்ற ஒளியால் ஒளிர்விக்கப்பட முயற்சி செய்யவேண்டும். வாழ்வில் விழிப்பாக இருந்து, கிறிஸ்துவின் ஒளியைப் பெற்று கிறிஸ்துவுக்குச் சான்றுபகர்ந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள் 

1. ‘உலகின் ஒளி நானே!’ என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் வாழ்க்கைக்கு ஒளியாகவும் வழியாகவும் இருக்கும் உமது வார்த்தையை வாழ்க்கையால் போதிக்கவும், எத்தகைய சூழ்நிலையிலும் உம்மீது கொண்ட நம்பிக்கையில் தளராது வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம் வாழ்விற்கு ஒளியான இறைவா! இத்தவக்காலத்தில் எமது குடும்பங்கள் உம்மை அறிவதிலும் அனுபவிப்பதிலும் கருத்தாய் இருக்கவும், எம் உடன் வாழும் சகோதர-சகோதரிகளை நிறை-குறைகளோடு ஏற்றுக்கொண்டு அனைவரையும் அன்பு செய்து வாழவும் தேவையான நல் மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வார்த்தையாக இருந்து எமக்கு வழிகாட்டும் இறைவா! இத்தவக்காலத்தில் திருப்பலி, செபமாலை, நற்கருணைச் சந்திப்பு, குடும்ப செபம் என ஆன்மிகச் செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும், உறவுகளைச் சரிசெய்து அனைவரோடும் அமைதியாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஒளியாம் இறைவா! எம் பங்கிலும் குடும்பத்திலும், நாட்டிலும் பல்வேறு நோயினால் துன்பப்படும் அனைவருக்கும் நல்ல சுகத்தைக் கொடுத்து காத்திடவும், பல்வேறு தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களையும் உமது இரத்தத்தால் கழுவிக் காத்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (08-03-2026) விப 17:3-7; உரோ 5:1-2,5-8; யோவா 4:5-42

திருப்பலி முன்னுரை

இறைநம்பிக்கையில் வேரூன்றி, இறையனுபவம் பெற்று வாழத் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறதுஇன்றைய நற்செய்தியில் கிறிஸ்து சமாரியப் பெண்ணுக்குநானே வாழ்வு தரும் தண்ணீர்என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். வாழ்வு தரும் தண்ணீர் தம்மிடம்தான் உள்ளது என்பதைச் சமாரியப் பெண் வழியாக இன்று நமக்கும் உணர்த்துகின்றார்.

தண்ணீர் நமது உடல் தாகத்தைத் தணிக்கிறது. இறையனுபவம் நமது ஆன்மிகத் தாகத்தைத் தணிக்கிறது. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப் பெற்ற இறைவனின் பிள்ளைகளாகிய நம்மிடம் அன்பிற்கான, நீதிக்கான, உண்மைக்காக, சமத்துவத்திற்கான, நேர்மைக்கான தாகம் இருக்கவேண்டும். இயேசுவின் வார்த்தையால் ஆன்மிகத் தாகம் தணியப் பெற்ற சமாரியப் பெண், இயேசு யார்? தான் யார்? தாகம் தீர்க்கும் தண்ணீர் தருபவர் யார்? என்பதை உணர்ந்து, அகவிடுதலைப் பெற்று அவரைமீட்பர்என்று மனதார அறிக்கையிடுகிறார்.

நமது நம்பிக்கை வாழ்வுக்கு உணவாக, ஆன்மிக உறவாக, நிலைவாழ்வைத் தரும் உயிருள்ள ஊற்றாக நம்மில் வாழும் இறைவனை வல்லமையோடு அறிக்கையிட வரம் வேண்டுவோம். பெண்கள் தினமாகிய இன்று அன்னையாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக எனப் பன்முகத்தன்மையோடு இந்த உலகத்தை ஒளிர்வித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் இறைவன் ஆசியளிக்கவும், ஆண்-பெண் சமத்துவம் இம்மண்ணில் மலரவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இஸ்ரயேல் மக்கள் தண்ணீருக்காக மோசேயை எதிர்த்த வேளையில், ஆண்டவர் அவர்களைத் தண்டிக்காமல் மோசேயின் வழியாக அவர்களின் தாகத்தைத் தணிக்கிறார். ஆண்டவர் அவர்கள்மீது கொண்டிருந்த இரக்கத்தால் அவர்களை அற்புதமாக வழிநடத்தி உடன் பயணிக்கிறார். ஆண்டவரின் வல்லமையையும் பேரன்பையும் அனுபவித்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் பிள்ளைகளாகிய நாம்நமக்காக உயிரைக் கொடுத்த இயேசுவின்மீது தளராத நம்பிக்கை கொண்டு வாழும்போதுதான் கடவுளின் மாட்சியைக் காணமுடியும்கடவுளின் பேரன்பையும், கிறிஸ்து வழியாக நாம் பெற்றுக் கொண்ட மீட்பையும், தூய ஆவியின் வல்லமையையும் உணர்ந்து நம்பிக்கையோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நிலைவாழ்வு தரும் ஊற்றாகிய ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உமது வார்த்தையை வாழ்க்கையால் அறிவிக்கவும், இறையாட்சியின்  மதிப்பீடுகளை விதைக்கவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வாழ்வு தரும் ஊற்றாகிய ஆண்டவரே! நாங்கள் அனைவரும் பாவ வாழ்க்கையை விடுத்து தூய வாழ்வு வாழவும், பொருள் செல்வம் தேடுவதிலேயே நாள்களை நகர்த்தாமல் அருள்செல்வத்தைத் தேடிடவும், ஒப்புரவு அருளடையாளத்தால் உள்ளத்தைத் தூய்மையாக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரேபெண்கள் தினத்தைக் கொண்டாடும் இன்று, எமது வீட்டையும் நாட்டையும் தங்களது அன்புப் பணிகளால் வாழ்வித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களின் மாண்பு பாதுகாக்கப்படவும், சமத்துவத்தோடு பெண்களை நாங்கள் நடத்தவும், பெண்களின் வாழ்வு வளம் பெறவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞான வெளிச்சமான எம் இறைவா! அரசுத் தேர்வினை எழுதிக்கொண்டிருக்கும் மற்றும் எழுதச் செல்லவிருக்கும் அனைத்து மாணவ-மாணவியரும் ஞானத்தோடு தேர்வு எழுதி, கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றி அடையவும், இந்நாள்களில் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஆற்றலைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (01-03-2026) தொநூ 12:1-4; 2திமொ 1:8-10; மத் 17:1-9

திருப்பலி முன்னுரை

இறையாட்சியைக் கட்டியெழுப்பி, கடவுளை மாட்சிப்படுத்த தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தோற்ற மாற்ற நிகழ்வு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பணிவாழ்வின் ஒரு திருப்புமுனை நிகழ்வாகும். தாம் இறைமகனாய் இருந்தபோதும் துன்பங்களை அனுபவித்துத்தான் மீட்பை அளிக்கவேண்டும் என்பதை அவர்தம் உருமாற்றத்தின் வழியாகக் கற்பிக்கிறார்.

தோற்ற மாற்ற நிகழ்வு இயேசுவின் சீடர்களைச் சிலுவை நிகழ்வுக்குத் தயார்செய்து, உயிர்ப்பின் மாட்சியை முன்கூட்டியே உணரவைக்கிறது. சிலுவைக்குப் பின் நிச்சயம் மாட்சி உள்ளது என்ற நம்பிக்கையை ஊட்டி, துன்பத்தை எதிர்கொள்ளப் பக்குவப்படுத்துகிறது. இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்ட நாமும் துன்பங்களில் துவண்டு போகாமல் இறைவனுக்குச் சான்றுபகர்வோம்.

விஞ்ஞானத்தை மட்டும் நம்பி, மெய்ஞானமாகிய கடவுளின் குரலுக்குச் செவிகொடுக்காமல் மனிதத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து, சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் விதைத்து, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை எவருக்கும் அஞ்சாமல் துணிவுடன் வாழ்க்கையால் எடுத்துச்சொல்வோம். அப்போது கடவுள் நம்மைப் பார்த்து, “இவரே என் அன்பார்ந்த மகன் (மகள்)” என்று சொல்லி பூரிப்படைவார். நற்செயல்கள் வழியாக நல்லவராம் இயேசுவை அறிவித்து, ஆண்டவரின் ஆசிபெற்ற மக்களாக வாழ்ந்திட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

ஆபிரகாம் கடவுளின் அழைப்பை ஏற்று, தன் சொந்த நாடு மற்றும் குடும்பம் அனைத்தையும் துறந்து ஆண்டவர் பணித்தவாறு செல்கிறார். ஆண்டவர் அவருக்கு ஏராளமான ஆசிகளை வழங்குகிறார். ஆபிரகாமைப்போல நாமும் இறைவனின் கட்டளைகளை ஏற்று மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும்போது இறைவனின் ஆசியால் நிரப்பப்படுவோம் எனக் கூறும் இன்றைய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு கிறிஸ்து வழியாகக் கடவுள் நம்மை மீட்டுள்ளார். சாவை அழித்து நிலை வாழ்வை வழங்கியுள்ளார். இயேசுவின் இரத்தத்தால் வாழ்வைப் பெற்றுக்கொண்ட நாம் அனைவரும், நமது சொற்களாலும் செயல்களாலும் நற்செய்தியை அறிவிக்கவும், துன்பங்களின் மத்தியிலும் துணிவுடன் இறையாட்சியைக் கட்டியெழுப்பவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நம்பிக்கையின் ஆண்டவரே! உலகெங்கும் நற்செய்தியின் பொருட்டு துன்பங்களையும் இழப்புகளையும் எதிர்கொள்ளும் திரு அவையின் பணியாளர்கள் அனைவரும் துன்பத்தால் துவண்டுபோகாமல், உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ தேவையான அருள்வரங்களைத் தந்து  காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உடன்வாழும் ஆண்டவரே! நீர் வாக்களித்த நாட்டையும் வாழ்வையும் அடைவதற்கு ஆபிரகாம் கொண்டிருந்த பொறுமையையும் நம்பிக்கையையும் நாங்களும் பின் பற்றி, வாழ்வில் மாற்றத்தை நோக்கி நம்பிக்கையோடு பயணிக்கவும், தளராத சாட்சிய வாழ்வு வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாதுகாக்கும் ஆண்டவரே! அரசுப் பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவியர் ஆர்வத்தோடு படித்து, ஞானத்தோடு தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி அடையவும், எதிர்காலம் சிறப்பானதாக அமைந்திடவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உடன் பயணிக்கும் ஆண்டவரே! தவக் காலத்தில் உம்மோடு பயணிக்கும் நாங்கள் அனைவரும் எங்களுடன் வாழும் சகோதர-சகோதரிகளின் துன்பத்தில் துணையாக இருந்து, மற்றவர்களின் மனக்காயத்திற்கு மருந்திடத் தேவையான நல்மனத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் முதல் ஞாயிறு (22-02-2026) தொநூ 2:7-9,3:1-7; உரோ 5:12-19; மத் 4:1-11

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவின் துணையோடு சோதனைகளை வெற்றிகொள்ள தவக்காலத்தின் முதல் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. “சோதனையின்றி சாதனை இல்லை; வேதனையின்றி உயர்வு இல்லை; இறைவனை நம்பும் மானிடர் மட்டும் சோதனைகளைக் கடந்து சாதனை படைப்பர்என்ற கூற்றிற்கிணங்க, சோதனைகள் அனைவருடைய வாழ்விலும் வரும்; ஆனால், அவற்றை எதிர்கொள்வதற்கு ஆழமான இறைநம்பிக்கை அவசியம்.

நம் முதல் பெற்றோரைச் சோதித்த அலகை, இன்றைய நற்செய்தியில் இயேசுவையே சோதிக்கிறது. இயேசுவைப் பாலைநிலத்திற்குச் சோதனைகள், துன்பங்கள், துயரங்கள், இக்கட்டுகள், கவலைகள், வேதனைகள்  இவற்றில் இறைவனை இறுகப் பற்றிக்கொள்ளவும், இயேசுவின் வழியில் சோதனைகளை எதிர்கொள்ளவும்  அழைக்கிறது. நம்மை மீட்க பல துன்பங்களை அனுபவித்து, தமது உயிரையும் கொடுத்த இயேசுவின் மீது நம் கண்களைப் பதிய வைத்து, சாட்சிய வாழ்வு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

கடவுள் அனைத்தையும் சிறப்பாகப் படைத்து, நன்மை-தீமைகளைப் பகுத்தறியும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். ஆனால், நாம் நுகர்வுக் கலாச்சாரம், பேராசை, அதிகாரப்போக்கு, உலக மயம், இவற்றில் சிக்குண்டு கடவுளைப் பிரிந்து வாழ்கின்றோம். அழிவுக்கு அழைத்துச்செல்லும் பாவத்தை விடுத்து, இறைவனின் பிள்ளைகளாக இறை உறவில் நிலைத்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நுழைந்த பாவத்தைப் பற்றியும், இயேசுவின் கீழ்ப்படிதலால் வந்த மீட்பைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் வருவது சாவு எனவும் கீழ்ப்படிதலால் வருவது வாழ்வு எனவும், ஆன்மிக வாழ்வைப் புடமிட்டுக் காட்டுகிறது. ஆண்டவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரின் மக்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது மறையுடலாம் திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் தங்கள் பயணத்தில் சந்திக்கும் அனைத்து சவால்களையும் எதிர்ப்புகளையும் உம் துணையோடு கடந்திடத் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! இத்தவக்காலத்தில் பாவத்திலிருந்து விலகி அருள்வாழ்வில் நிலைக்கவும், உமது பேரன்பை அனுதினமும் சுவைக்கவும், அனைத்துச் சோதனைகளையும் உம் அருளால் கடந்திடவும் தேவையான ஞானத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! உமக்கு நேரிட்ட அனைத்துச் சோதனைகளையும் வென்று இறைத்திருவுளத்தை நிறைவேற்றியதுபோல, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை உமது உடனிருப்பால் வென்றிடத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் உலகச் செல்வங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆன்மிகச் செல்வங்களுக்குக் கொடுக்கவும், பகையை மறந்து அனைவரோடும் நல்லுறவோடு வாழத் தேவையான நல்மனத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு (15-02-2026) சீஞா 15:15-20; 1கொரி 2:6-10; மத் 5:17-37

திருப்பலி முன்னுரை 

இன்று மனிதநேயத்தோடு மனிதர்களை மனிதர்களாக மதித்து அன்பு, நீதி, இரக்கம் போன்ற மனிதநேயப் பண்புகளைப் பின்பற்றி, உறவோடும் நிறைவோடும் வாழ ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது.

சட்டங்கள் மனிதத்தைச் சிதைக்காமல் காப்பதாக அமையவேண்டும். பக்குவமான பண்பட்ட வார்த்தைகளைப் பேசி உடன்வாழும் சகோதர- சகோதரிகளை அன்பு செய்து வாழவும், அனைவரோடும் நல்லுறவுடன் வாழ்ந்து இறையாட்சியைக் கட்டியெழுப்பவும், சொல்வீரர்களாக அல்லாமல் செயல் வீரர்களாக வாழவும், மற்றவர்களின் சுமைகளைத் தாங்கும் உண்மை உறவாகப் பயணிக்கவும், ‘எல்லாம் இறைவனின் அதிமிக மகிமைக்காகஎன உழைக்கவும், அனைத்தையும் நல்லது எனக் காணவும், எதன்மீதும் ஆணையிடாமல் வாழவும் இயேசு இன்று நம்மை அழைக்கிறார்.

எனவே, நமது சிந்தனையை, நடத்தையை, பார்வையை மறு ஆய்வு செய்து நமது வாழ்விலும் மனத்திலும் மாற்றங்களைக் கொண்டு வருவோம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வாழும் இறைவனைக் கண்டுகொள்வோம். இன்று அன்புக்காக, அமைதிக்காக, ஆறுதலுக்காக, அரவணைப்பிற்காக, நல்வார்த்தைக்காகக் காத்திருக்கும் சகோதர- சகோதரிகளுக்கு இறைவன் கொடுத்த அற்புதமான வாழ்க்கையைப் பகிர்ந்துகொடுப்போம். இயேசு விரும்பும் சமுதாயத்தை உருவாக்க வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

நாம் என்னவாக இருக்கின்றோமோ, அது கடவுள் நமக்குக் கொடுத்த கொடை! நாம் என்னவாக மாறுகின்றோமோ, அது கடவுளுக்கு நாம் கொடுக்கும் கொடை! நல்லதைச் சிந்தித்து, நலமான வார்த்தைகளைப் பேசி, அனைவரையும் நேசித்து, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஞானத்தோடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நன்மையானவை எவை, உண்மையானவை எவை என்பதை ஞானம் நமக்கு உணர்த்துகின்றது. இந்த ஞானத்தை நமக்குத் தருபவர் தூய ஆவியானவர். வாழ்க்கையில் அனைத்து நேரங்களிலும் தூய ஆவியின் துணையை நாடித்தேடிடவும், மறைபொருளாய் இருக்கும் இறைஞானத்தை அறிந்துகொண்டு முதிர்ச்சி பெற்ற மக்களாக வாழவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையை வழிநடத்துகின்ற திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம் மதிப்பீடுகளை வாழ்க்கையால் அறிவிக்கத் தேவையான ஞானத்தைத் தந்து காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வாழும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும் எங்களது வார்த்தையால் மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கவும், பிணக்குகளை எல்லாம் களைந்து அனைவரோடும் இணக்கத்தோடு வாழவும் தேவையான அருள்வரங்களைத் தந்து எம்மைக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம் வாழ்வின் வழிகாட்டியான இறைவா! எம் நாட்டு மக்கள் அனைவரும் மக்களை மனிதநேயத்தோடு வழிநடத்தக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவும், பணத்திற்கு விலைபோகாமல் மனசாட்சியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு பயணிக்கும் ஆண்டவரே! எம் பங்கில் உள்ள இளையோர் உம்மீது ஆழமான நம்பிக்கையுடன் வாழவும், உலகப் பொருள்களின்மீது கொண்டுள்ள பற்றுதல்களிலிருந்து விலகி இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து தூய்மையான வாழ்வு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு (08-02-2026) எசா 58:7-10; 1கொரி 2:1-5; மத் 5:13-16

திருப்பலி முன்னுரை

உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ பொதுக்காலத்தின் 5-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. உப்பும் ஒளியும் மற்றவருக்குப் பயன்தரும் பொருளாக இருக்கின்றன. உப்பு சுவை தருவது மட்டுமல்ல; மாறாக, பொருள்கள் கெடாமல் பாதுகாக்கும் சக்தியையும் கொண்டது. மற்றவர்கள் வாழ்வுபெற தன்னையே முழுமையாக இழக்கிறது. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலேஎன்கிறது பழமொழிஉப்பு உவர்ப்பற்றுப் போனால், அது வீணாகிவிடும். அதுபோலவே நமது ஆன்மிக வாழ்க்கையும் ஆழம் காணாவிட்டால் வாழ்க்கையும் உவர்ப்பற்றதாகிவிடும்நம்மைப் பார்த்து இயேசு, ‘நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள்என்கிறார். ஒளி இருளை அகற்றும்; ஒளி வழியைக் காட்டும்; ஒளி இறைவனின் அடையாளம். ஒளியைப் போன்று நமது அன்புச் செயல்களால் இயேசுவைப் பிரதிபலிக்க முயற்சியெடுப்போம். உப்பைப் போன்றும் ஒளியைப்போன்றும் நமக்காக வாழாமல், பிறரின் நன்மைக்காக வாழ்வோம். நமது உடனிருப்பாலும் மென்மையான அணுகுமுறையாலும் மேன்மையான வார்த்தைகளாலும் அனைவருடைய வாழ்க்கையிலும் ஒளியேற்றுவோம். நமது பெயருக்காகவும் புகழுக்காகவும் விளம்பரத்திற்காகவும் எந்தச் செயலையும் செய்யாமல், இறைவனின் அதிமிக மகிமைக்காகச் செய்வோம். இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையில் சுயநலம் களைந்து, உடன்வாழும் சகோதர-சகோதரிகளை உளமார நேசித்து, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்பிக்கையின் தீபங்களாய் ஒளிர்ந்திடவும், இறைவனைச் சார்ந்து சாரமுள்ள வாழ்வு வாழவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.  

முதல் வாசகம் முன்னுரை

கடவுள் விரும்பும் நோன்பு என்பது உணவு உண்ணாமல் இருப்பது அல்ல; மாறாக, பசித்தோருக்கு உணவிடுவதும், ஆடை இல்லாதவருக்கு ஆடை அணிவிப்பதும், வறுமையில் இருப்போருக்கு உறைவிடம் கொடுப்பதும், தேவையில் இருப்போரைத் தேடிச் சென்று உதவுவதுமே உண்மையான நோன்பு. இவ்வாறு செய்யும்போது, ஆண்டவரின் மாட்சியை நாம் காண்போம் என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்று உலகத்தைப் பற்றியும், விஞ்ஞானத்தைப் பற்றியும், அறிவியல், பொருளாதாரம் பற்றியும் அறிந்துள்ளோம். ஆனால், மெஞ்ஞானமாகிய கடவுளைப் பற்றிய அறிவில் பின்தங்கியுள்ளோம். தூய ஆவியின் வல்லமையையும் இறைஞானத்தையும் பெற்று, கிறிஸ்து இயேசுவை அறிவதிலும் அன்புசெய்வதிலும் முனைப்போடு செயல்பட்டு, இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘உலகின் ஒளி நானேஎன்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ்ந்து, நற்செய்தியை அறிவிக்கத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! உலகத் தலைவர்களும், நாட்டுத் தலைவர்களும் அன்பையும் அமைதியையும் இவ்வுலகில் கட்டியெழுப்பவும், மக்கள் என்ற சொத்தைப் பேணிகாக்கவும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வழியும் ஒளியுமான ஆண்டவரே! இந்த ஆண்டு அரசுப் பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் மாணவ-மாணவிகளை ஆசிர்வதியும். ஞானத்தோடு தேர்வு எழுதவும், கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றிபெற்று வாழத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் பரம்பொருளான ஆண்டவரே! எம் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களிலும் உண்மையான அன்பும் உறவும் மலர்ந்திடவும், நற்சுகம் கிடைத்திடவும், ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவர்களாக வாழ்ந்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.