news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு (முதல் ஆண்டு) (21-12-2025) எசா 7:10-14; உரோ 1:1-7; மத் 1:18-24

திருப்பலி முன்னுரை

இயேசுவின் பிறப்பை அண்மையில் கொண்டாடவிருக்கின்ற நாம், இந்த நான்காம் ஞாயிறு திருப்பலியில் அன்பின் மெழுகுதிரியை ஏற்றுவதன் வழியாக இயேசுவின் அளவற்ற அன்பை நம் வாழ்வில் உணர நம்மைத் தயார்படுத்துவோம். அன்னை தெரேசா கூறுவார்: “அன்புதான் உன் பலவீனம் என்றால், இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான்.” ஆம், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல; நாம் எவ்வளவு அன்பாகக் கொடுக்கிறோம் என்பதில்தான் நிறைவு இருக்கிறது.

மனித இனத்தின்மீது கொண்ட எல்லையில்லாத அன்பினால் கடவுள் தன்மையில் இருந்த இயேசு தம்மையே வெறுமையாக்கி, முழுவதுமாக மனிதச்சாயல் ஏற்று, மனித வடிவில் பிறக்கவிருக்கிறார். ‘இம்மானுவேல்என்றால்கடவுள் நம்மோடுஎன்பது பொருள். நம் கடவுள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு மட்டும் வந்துபோகும் விருந்தினர் அல்லர்; மாறாக, நம் அன்றாட நிகழ்வுகளில் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துபவர், நம்மோடு கூட வாழவிழைபவர்.

மரியா கருவுற்றதை அறிந்திருந்தும் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல், அன்னை மரியாவை ஏற்று அன்பு செய்து, ஆண்டவரின் தூதர் தனக்குப் பணித்தவாறே இறைத்திட்டத்தை நிறைவேற்றியவர் புனித யோசேப்பு. விண்ணகத்திலிருந்து மண்ணகம் இறங்கி வந்து அன்பை விதைத்தவர் இயேசு. இயேசுவின் அன்பால் மீட்கப்பட்ட நாம், ‘நான்என்பதிலிருந்து இறங்கிவந்து எல்லாரையும் அன்பு செய்வோம். அன்பு என்ற ஒளியை ஏற்றியிருக்கும் இந்த வாரத்தில், அன்பின் தூதுவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, கடவுள்இம்மானுவேலாக - நம்மோடுஎன்ற வார்த்தையை ஆணித்தரமாக எடுத்துக்காட்டுகிறார். அவர் இறைமகனாய் பிறப்பெடுத்தும், தம் உயர்வான நிலையினை விடுத்து மண்ணகம் இறங்கி வந்து மனிதரின் மீட்பிற்காகப் போராடுவார் என்பதை அவர் பிறக்கும் முன்பே இறைவாக்காக முன் மொழிந்த இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுள் அன்புமயமானவர்; ஆதலால்தான் உங்களுக்கு அருளும் அன்பும் அமைதியும் தருவதாக கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக வாக்களித்தார். கடவுளின் சாயலைக் கொண்ட நாம் அனைவரும் அன்புடன் வாழ அழைக்கப்படுகிறோம். பிற இனத்தவராகிய உரோமை இனமக்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டது போல, நாமும் திருத்தூது பணியாற்றுவதில் கிறிஸ்துவிற்கு உரிய மக்களாய் வாழ அருள் வேண்டி இரண்டாம் வாசகத்தில் இணைவோம்

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா, திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள். துறவறத்தார், இல்லறத்தார் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்கவும்இயேசுவின் ஒளியைக் கண்டுணரவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நன்மையே உருவான இறைவா! தேர்தலை எதிர்நோக்கியுள்ள எம் நாட்டு மக்களை ஆசிர்வதியும். மக்களின் நலன் கருதி பணிசெய்யும் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க, தேவையான ஞானத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஒளியின் சுடரே இறைவா! அன்பின் மெழுகுதிரி எரியும் இந்நாளில் எம் குடும்பங்களில் அமைதி, ஒற்றுமை, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பண்புகள் வளர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா, நாங்கள் கொண்டாடவிருக்கும் கிறிஸ்து பிறப்பு, உண்மையான மகிழ்ச்சியையும் அமைதியையும் தரக்கூடிய விழாவாக இந்த விழா அமையவும், அன்பு, இரக்கம், பரிவு போன்ற நற்பண்புகளால் எம்மவரின் இதயம் நிறைக்கப்படவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு (முதல் ஆண்டு) (14-12-2025) எசா 35:1-6,10 யாக் 5:7-10; மத் 11:2-11

திருப்பலி முன்னுரை

திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று மகிழ்ச்சியின் திரியை ஏற்றி, நிலையான மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஆண்டவரில் நிலைத்து வாழ, அன்னையாம் திரு அவையோடு இணைந்து இத்திருவழிபாட்டிற்கு உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். இயேசுவின் வருகை பார்வையற்றோருக்குப் பார்வையையும், கால் ஊனமுற்றோருக்கு நடக்கும் ஆற்றலையும், தொழுநோயாளருக்குச் சுகத்தையும், காது கேளாதோருக்குக் கேட்கும் திறனையும், இறந்தோருக்கு உயிரையும், இல்லாதோருக்கு வாழ்வையும் கொடுத்தது. இயேசுவின் பிறப்பிற்காக நம்மைத் தயாரிக்கும் நாம் பொருளைத் தேடுவதில் மகிழ்ச்சிகொள்ளாமல், இயேசுவின் அருளைத் தேடுவதில் மகிழ்ச்சி காண்போம். யோவானையும், யோவானின் சீடர்களைப் போன்றும் மெசியாவைக் கண்டுகொள்வோம்.

கிறித்தவ வாழ்வின் மகிழ்ச்சி என்பது கடவுளை அறிவதிலும், அவரை அன்பு செய்வதிலும்தான் உள்ளது. நமது மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் நோயிலும் தனிமையிலும் ஆண்டவர் நமக்குத் துணைவராகவும் நண்பராகவும் நம்முடன் இருக்கின்றார். இமைப்பொழுதும் நீங்காது காத்துவரும் இறைவனின் பேரன்பில் மகிழ்ச்சி காண்போம். நாம் சந்திக்கும் அனைவருக்கும் வாழ்க்கையாலும் வார்த்தையாலும் உடனிருப்பாலும் மகிழ்ச்சியைக் கொடுப்போம். நாம் வாழும் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகளால் உள்ளம் சோர்ந்திருக்கும் அனைவருக்கும் கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துவாழ்வோம்வாழ்க்கையில் எல்லா நிலைகளையும் கடந்து செல்ல கடவுள் துணைநிற்கிறார் என்ற மகிழ்ச்சியில் இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் வருகை இவ்வையகத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் அற்புதங்களையும் அதிசயங்களையும் காண்பார்கள்; அவர் கொண்டு வந்த மீட்பை அனுபவிப்பார்கள். ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாமும் அவர் கொண்டு வந்த அன்பையும் மகிழ்ச்சியையும் சுவைத்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம் வாழ்க்கையில் அமைதி நிலைக்கவும், உறவுகள் வளரவும், மனது இலகுவாகவும், ஆரோக்கியத்துடன் வாழவும் அவசியமாக இருப்பது பொறுமை. ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் ஆண்டவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் தளர்ச்சி இல்லாது, வாழ்க்கையில் வருகின்ற இன்னல்கள், இக்கட்டுகள் அனைத்தையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு, அனைத்திலும் இறைவனின் திருவுளம் அறிந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் ஆன்டவரே! எம் திரு அவையை வழிநடத்திவரும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது மதிப்பீடுகளைத் தொய்வின்றி  விதைக்கவும், இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தை தங்களின் வாழ்க்கையால் எடுத்துரைக்கவும், தேவையான ஞானத்தையும் ஆற்றலையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மோடு வாழும் ஆண்டவரே! மகிழ்ச்சி என்ற திரியை ஏற்றி இருக்கும் நாங்கள் அனைவரும், இயேசு என்ற பேரொளியால் ஒளிர்விக்கப்பட்டு மகிழ்வோடும் மனநிறைவோடும் வாழவும், ஒருவர் மற்றவருக்கு மகிழ்ச்சியின் தூதுவராகச் செயல்படவும் தேவையான நல்மனத்தை எங்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் சுயநலம் அகற்றி, மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், எம் நாட்டில் உள்ள பிரிவினைச் சக்திகள் அனைத்தும் அழிந்து மக்கள் மகிழ்வோடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! எம் பங்கிலுள்ள குழந்தைகள் அனைவரும் ஞானத்திலும் இறைநம்பிக்கையிலும் நாளும் வளரவும், நாங்கள் அனைவரும் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (முதல் ஆண்டு) (டிசம்பர் 07) எசா 11:1-10; உரோ 15:4-9; மத் 3:1-12

திருப்பலி முன்னுரை

அன்பின் காலமான இந்தத் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு, மனமாற்றம் பெற்று நல்மக்களாய் வாழ திருமுழுக்கு யோவான் வழியாக நமக்கு அழைப்புவிடுக்கிறது. குறைகள் இல்லாத மனிதன் இல்லை; அதைக் குறைக்கத் தெரியாதவன் மனிதனே இல்லை. மனமாற்றம் நம் வாழ்க்கை புனிதத்தை நோக்கிச்செல்லப் பேருதவியாக இருக்கிறது. நம் உள்ளத்தில் புதைந்து கிடக்கும் பொறாமை, கோபம், தவறான எண்ணங்கள், ‘தான்என்ற ஆணவம், சுயநலம், தவறு என்று தெரிந்தும் துணிந்து செய்தல், பிறர்நலனில் அக்கறையின்மை போன்ற மனிதத்தைச் சிதைக்கும் செயல்களிலிருந்து விடுபட்டுநமது வார்த்தைகளில், வாழ்க்கையில், சிந்தனைகளில், பார்வையில் மாற்றம் பெற்று, தூய வாழ்வு வாழ இந்தத் திருவருகைக் காலத்தில் முயற்சி எடுப்போம்.

திருமுழுக்கு யோவான் நீதியின், உண்மையின், சமத்துவத்தின், தூய வாழ்வின் குரலாகச் செயல்பட்டு, கிறித்தவர்களாகிய நமது வாழ்வு எவ்வாறு அமைந்திடல் வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றார். இச்சமூகத்திலும் வாழும் தளங்களிலும் இறைவனின் குரலாக நாம் மாறுவோம்; உண்மையான மனமாற்றத்தை நமது செயல்களால் அறிவிப்போம். உள்ளம் என்னும் ஆலயத்தை ஒப்புரவு அருளடையாளத்தால் தூய்மை செய்வோம். அல்லவைகள் அகற்றி, நல்லவற்றில் நிலைத்து, மனமாற்றம் பெற்று வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் வருகை மகிழ்ச்சியையும் அமைதியையும் விதைக்கும். பிளவுகள், பிணக்குகள் அனைத்தையும் வேரறுத்துச் சமத்துவத்தை ஏற்படுத்தும், ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் களையப்பெற்று, அனைத்து மக்களும் வாழ்வு பெறுவர். இல்லாதோர்-இயலாதோர்-தாழ்நிலையில் உள்ளோர் அனைவரும் ஆண்டவரின் மீட்பை அனுபவிப்பர் என்றுகூறி ஆண்டவரின் வருகையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனுதினமும் அளவற்ற நன்மைகளை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். நாம் வேண்டுகின்ற, விரும்புகின்ற அனைத்தையும் தேவையான நேரத்தில் நிறைவேற்றி, எக்குறையுமின்றிக் காத்துவருகின்றார். எத்தனைமுறை தவறுகள் செய்தாலும் மன்னித்துத் தாயன்போடு ஏற்றுக்கொள்கின்றார். தந்தைக்குரிய அன்போடும் வாஞ்சையோடும் வழிநடத்தி வரும் இறைவனின் பேரிரக்கத்திற்கு நன்றிகூற அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்திவரும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் திருமுழுக்கு யோவானைப் போன்று கிறிஸ்துவின் வருகையை வீரியத்துடன் விதைக்கவும், சான்றுபகரும் வாழ்க்கை வாழவும் தேவையான வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் ஆண்டவரே! உமது வருகைக்காகத் தயாரித்துக் கொண்டிருக்கும் நாங்கள் அனைவரும்  எமது உள்ளத்திலுள்ள கோபம், பகை, போட்டி, தூய்மையற்ற வார்த்தை, வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து, தூய வாழ்வு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நீதியின் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தன்னலம் துறந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், ஏழை மக்கள் வாழ்வு பெறுவதற்கு ஏதுவான திட்டங்களைக் கொண்டு வரவும், மக்கள் அனைவரையும் சமத்துவத்தோடு வழிநடத்தவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் பங்கில் உள்ள குழந்தைகள் அனைவரும் ஆண்டவரைப் பற்றிய அறிவில் நாளும் வளரவும், ஆன்மிகத்தில் வளரவும், திரு அவை கற்பிக்கும் நெறிமுறைகளில் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (முதல் ஆண்டு) (30-11-2025) எசா 2:1-5; உரோ 13:11-14; மத் 24:37-44

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்பிற்கினியவர்களே, திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நம் ஒவ்வொருவரையும் இன்றைய வழிபாடும் வாசகங்களும்எதிர்நோக்கின் இறைமக்களாகவாழ அழைக்கின்றன. எதிர்நோக்கு என்பது நம்பிக்கையோடு ஒரு காரியத்தை எதிர்பார்ப்பதாகும். இதை முதல் வாசகத்தில் ஆமோஸ், இறைவனின் ஆட்சி எவ்வாறு இருக்கும் என்பதனையும், எவ்வாறு அதை நாம் எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார், நாம் எதிர்நோக்கிக் காத்திருந்த இறையாட்சி கிறிஸ்து இயேசுவின் வருகையால் நிறைவாழ்வையும், இறையாட்சியின் மக்களாக நம் விசுவாச வாழ்வு வாழ வேண்டும் என்பதையும் விவரிக்கிறது. நற்செய்தியில் புனித மத்தேயு இறை நம்பிக்கையோடு எதிர்பார்ப்பவர்களுக்குக் கிடைக்கும் அருளின் அளவை எடுத்துரைக்கிறார். நாம் நம் வாழ்வில் பல்வேறு தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளோம். அனைவரும் சுயநலத் தேவைகளாய் அல்லாது, சுயநல எதிர்பார்ப்புகளாய் மட்டுமல்லாமல், பொது நலத்துடன் பிறர்நலம் பேணும் தேவையாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்க இறைவனை வேண்டி எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இறைவனின் அமைதி நிறைந்த இறையாட்சியைப் பற்றி எடுத்துரைக்கின்றார். அனைத்து மக்களும் இறைவனின் ஆலயத்திற்குச் சென்று அவர் வழிகளை அறிந்து நடக்க வேண்டுமென அழைக்கப்படுகிறார்கள். இதுவே நம் மனத்திலும், நம் மத்தியிலும் ஒற்றுமை, சமாதானம், அன்பு நிறைந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று எடுத்துக்கூறும் இம்முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுபோம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடியார் நாம் எப்போதும் விழிப்பாயிருக்க அழைப்பு விடுகிறார். ஆண்டவரின் வருகை நம் அண்மையில் இருப்பதால் நம்முடைய வாழ்க்கை ஒளியிலும் உண்மையிலும் நிறைந்திருக்க வேண்டும்; தீய பழக்கங்களை விட்டுவிட்டு இயேசுவை அணிந்து அன்பில் நிலைத்திருக்க நாம் தயாராக வேண்டும் என நினைவூட்டும் இந்த இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்புத் தந்தையே இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், துறவறத்தார் ஆகிய நாங்கள் அனைவரும் நல்லாயனாம் இயேசுவைப் பின்பற்றிச் சமாதானத்தின் தூதர்களாகவும் அன்பின் வழிகாட்டுதலாகவும் நீதியின் கருவிகளாகவும் வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைத்தையும் படைத்தாளும் இறைவா! எங்கள் பங்குத்தந்தை, பங்கில் பணிபுரியும் அனைத்து அருள்சகோதர-சகோதரிகளையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம். தாங்கள் கற்றுக்கொண்ட பணியைத் திறம்பட நிறைவேற்றி, உமக்கு உண்மையுள்ள ஊழியராய் இறுதிவரை நிலைத்திருக்கும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வளமான வாழ்வைத் தருகின்ற இறைவா! இந்நாள் வரையில் நீர் எங்களுக்குச் செய்து வருகின்ற சகல நன்மைகளையும் நன்றியோடு நினைவு கூர்கின்றோம். எங்களையும், எங்கள் பெற்றோர், உற்றார்-உறவினர், நண்பர்கள் அனைவரையும் மென்மேலும் ஆசிர்வதித்து வழிநடத்த வேண்டுமென்றும், படிக்கின்ற பிள்ளைகளுக்கு அறிவையும் சிறந்த ஞானத்தையும் தந்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. உண்மையின் இறைவா! எங்கள் தொழில் முயற்சிகளை ஆசிர்வதித்து, எங்கள் உழைப்பிற்கு ஏற்ற நற்பலன்களைத் தந்து, எங்களுக்குப் போதுமான செல்வங்களைத் தந்து எங்கள் வாழ்வு வளம் பெறச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இரக்கத்தின் வாழ்வே இறைவா! குடும்பங்களில் நோயினால் துன்பப்படும் மனிதர்களையும் ஆறுதல் தேடும் உள்ளங்களையும், வன்முறைகளால், பசியால் வாடும் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசிர்வதித்துக் குணமளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) 2சாமு 5:1-3; கொலோ 1:12-20; லூக் 23:35-43

திருப்பலி முன்னுரை

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்பானவர்களே, அன்னையாம் திரு அவையோடு இணைந்து உங்கள் அனைவரையும்இயேசு கிறிஸ்து உலகிற்கெல்லாம் அரசர்என்ற மாபெரும் விழாவிற்கு அன்போடு வரவேற்கிறோம்.

நம் அரசரான இயேசு கிறிஸ்துவின் ஆட்சியானது இடத்தைச் சார்ந்த ஆட்சியோ, அதிகாரத்தைக் கொண்ட ஆட்சியோ, பதவிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியோ அல்ல; மாறாக, அது இதயங்களைச் சார்ந்த, அன்பையும் பரிவிரக்கத்தையும் அடித்தளமாகக் கொண்ட ஆட்சி. கிறிஸ்துவின் ஆட்சி சமத்துவத்தையும் அமைதியையும் நீதியையும் விரும்பும் ஆட்சி. அவரது ஆட்சி தம் ஆடுகளுக்காய் உயிரையும் கொடுக்கும் ஆட்சி.

இத்தகைய மாபெரும் அரசரின் விழாவில் பங்குபெற இறைவன் கொடுத்த அழைப்பிற்காய் நன்றிகூறுவோம்அகில உலகின் அரசராகிய இயேசுவின் பிள்ளைகளாகிய நாம் உலகப் போக்கின்படி வாழாமல், நம் தலைவராம் இயேசுவைப் போன்று கனிவும் மனத்தாழ்மையும் உடையவர்களாய், பணிவிடை புரிபவர்களாய், மன்னிப்பைக் கொடுப்பவர்களாய், நீதியை விதைப்பவர்களாய், குறிப்பறிந்து கொடுக்கும் நல்ல ஆயனாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இஸ்ரயேல் மக்களை வழிநடத்த ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்ட தாவீது ஆண்டவருக்குப் பணிந்து பணிபுரிகின்றார். நாமும் அருளடையாளங்கள் வழியாக ஆண்டவருக்குப் பணிந்து, இச்சமூகத்திற்கு மகிழ்ச்சியையும் அன்பையும் கொடுக்கும் பிள்ளைகளாய் வாழ்ந்திட அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசு மீட்பராகவும் மெசியாவாகவும் கடவுளின் மகனாகவும் நல்ல ஆயனாகவும் சிறந்த அரசராகவும் பாவங்களைப் போக்கும் செம்மறியாகவும்  இருந்து, தலைமைத்துவத்தின் மகத்துவத்தை விதைத்துள்ளார். அவரது பாதுகாப்பில் வாழும் நாம், அவரது தலைமைத்துவத்தை நமதாக்கிட அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்ல ஆயனே எம் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது அடிச்சுவடுகளைத் தன்வயமாக்கிடவும், மக்களின் தேவை அறிந்து செயல்படவும் தேவையான அருள் வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அமைதியின் அரசரான ஆண்டவரே! எம் நாட்டு தலைவர்கள் அனைவரும் போட்டி, பொறாமை, சுயநலம் அகற்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு நல்ல தலைவர்களாய் வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் அரசராகிய இயேசுவே! எம் குடும்பங்கள் அனைத்தும் உலகின் அரசராகிய உம்மீது நம்பிக்கை கொண்டு வாழவும், உன்னதராகிய உம் பாதையில் சோர்வின்றிப் பயணிக்கவும், தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நீதியின் அரசராகிய ஆண்டவரே! இவ்வுலகில் வாழும் இளையோர் தொலைத்தொடர்புக் கருவிகளிலும் நுகர்வுக் கலாச்சாரத்திலும் தொலைந்து போகாமல், உம் மதிப்பீடுகளின் வழியில் வாழ தேவையான வரங்களைத் தந்து  காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 33 - ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (16-11-2025) மலா 4:1-2; 2தெச 3:7-12; லூக் 21:5-19

திருப்பலி முன்னுரை

விழிப்பாய் இருக்கவும், இறைவன்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும்  வாயில் வாய்மையும், செயலில் நேர்மையும், உள்ளத்தில் உண்மையான அன்பும், அனைத்து மக்களோடு நல்லுறவும், ஏழைகளோடு தோழமையும், வார்த்தையில் மென்மையும், மனத்தில் தூய்மையும், எண்ணத்தில் உயர்வும், கண்களில் கருணையும் கொண்டு வாழும்போது இறுதிநாளில் இறைவன் முன்னிலையில் கலக்கமின்றி மகிழ்வோடு நிற்கலாம்.

வாழ்க்கை என்பது ஒருமுறைதான்; அதில் அன்பை மட்டும் அதிகமாகச் செலவு செய்வோம். மன்னிப்பைத் தேடிச்சென்று கொடுப்போம். இன்னார் என்று இல்லாமல், நாம் சந்திக்கும் அனைவருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் உடனிருப்பையும் உறவையும் கொடுக்க முன்வருவோம். குறிப்பாக, உலக வறியோர் தினத்தைக் கொண்டாடும் இந்நாளில், ஏழைகளின் முகத்தில் இறைவனைக் காண்போம்.

ஏழைகளுக்காக மன்றாடும்போதும், அவர்களுக்காகப் பிறரன்புச் செயல்களில் ஈடுபடும்போதும் நாம் கடவுளோடு ஒன்றிக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம். ஏழைகளுக்கு உதவுவதில் முன்மாதிரியாய் இருந்து, தேவையில் இருப்போருக்கு விரைந்துசென்று உதவிய அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம். அச்சம் தவிர்த்து இறுதிநாளில் மானிட மகனை எதிர்கொள்வோம், நம்பிக்கையோடு இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம்முடைய வாழ்க்கையின் இறுதிநாள்களைப் பற்றிச் சிந்திக்க இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்முடைய வாழ்நாள்களில் எதை விதைக்கின்றோமோ, அதையே அறுவடை செய்வோம். சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் மாசற்றவர்களாய் வாழ்ந்து இறையில் சங்கமிக்க இறைவார்த்தைக்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசசகம் முன்னுரை

இன்றைய வாசகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும்? எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? எவ்வாறு  உழைக்க வேண்டும்? என்பதைத் தன்னுடைய வீரியமுள்ள வாழ்க்கையால் தூய பவுல் நம் உள்ளத்தில் விதைக்கிறார். மற்றவர்களுக்குச் சுமையாய் இல்லாமல், சுகம் கொடுப்பவர்களாய் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நீயே ஆசியாய் விளங்குவாய்என்று மொழிந்த ஆண்டவரே! எம்  திரு அவைக்கு நீர் தேர்ந்தெடுத்துக் கொடுத்தத் தலைவர்கள் உமது பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான ஞானத்தையும் ஆற்றலையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாதுகாக்கும் பரம்பொருளே எம் இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்களுடைய வாழ்க்கையாலும் வார்த்தையாலும் உம்மை அறிவிக்கவும், உடன் வாழும் சகோதர- சகோதரிகளுக்கு உதவி செய்து வாழவும், தேவையான நல்மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களோடு வாழும் ஆண்டவரேபங்கு மக்களாகிய நாங்கள் அனைவரும் பங்கின் வளர்ச்சியில் எப்போதும் துணைநிற்கவும், இணைந்து உழைக்கவும், அனைத்தையும் கடந்து கடவுளின் பிள்ளைகள் என்ற உறவில் வாழவும், தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நல்லாயனே எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள இளையோர் அனைவரும் உம் வார்த்தைகளைப் படிக்கவும், இறைநம்பிக்கையில் நாளும் வளரவும், திரு அவை காட்டுகின்ற நெறிகளில் வளரவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.