இன்றைய நற்செய்தியின் படிப்பினைகள் நமக்கு முரண்பட்டதாகவே தோன்றக்கூடும். ஆனால், இயேசுவின் நிலைப்பாடு சிலுவையில் தன்னை இழப்பதினால் மட்டுமே மக்களுக்கு வாழ்வை வழங்கிட முடியும் என்பதில் உறுதிப்பட இருந்தது.
இன்றைய
நற்செய்தி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது:
1. மத்
16:21-23- இயேசு தனது பாடுகளை முதன் முறையாகத் தமது சீடர்களுக்கு வெளிப்படுத்துதலும் சீடர்களின் பதில் செயல்பாடும்.
2. மத்
24-27- இயேசு தன்னைப் பின்பற்ற விரும்பும் சீடர்களுக்கு வழங்கிடும் நிபந்தனைகள்.
நற்செய்தியின்
முதற்பகுதியில் தனது பாடுகளை முதன்முறையாக இயேசு அறிவித்தபொழுது, சீடர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் அமரவேண்டும் என்ற கனவு தவிடுபொடியானது. கடந்த
வார நற்செய்தியில், ‘நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?’ என்னும் இயேசுவின் கேள்விகளுக்கு மிகப் பொருத்தமான பதிலை பேதுரு வழங்கினார். “நீர் மெசியா, வாழும் தந்தையின் இறைமகன்” என்னும் பதில் மொழிக்கு இயேசு அவரைப் புகழ்கின்றார். ஆனால், இன்றைய நற்செய்தியில் இறைமகன் எதிர்கொள்ள இருக்கும் துன்பத்தைப் போன்று, அவரது சீடர்களாய் தங்களுக்கும் துன்பம் உண்டு என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பேதுருவின் (சீடர்களின்) பதில் மொழியும், உடன் வெளிப்பட்ட எதிர்வினையும் (reaction) இயேசுவின் (எதிர்கால) மீட்பின் செயல்பாட்டிற்கும், இறைத்தந்தையின் விருப்பத்திற்கும் எதிராக அமைந்திருந்ததால்,
இயேசுவின் கண்டிப்பிற்கு பேதுரு உள்ளாகிறார்.
சாத்தான் - தடைக்கல்
‘இப்படி உமக்கு நடக்கவே கூடாது’ என்று பேதுரு இயேசுவை நோக்கிக் கூறியவுடனே
இயேசு அதனை ஆமோதிக்கவில்லை; உடனடியாக
அச்சிந்தனையை அவரது உள்ளத்திலிருந்து தூக்கி எறிகின்றார். “என் கண்முன் நில்லாதே சாத்தானே”
என்று பேதுருவை நோக்கிக் கூறுகின்றார். பேதுருவை
இயேசு ‘சாத்தான்’
என்று நற்செய்தியில் குறிப்பிடுவது, அவர் பேயினால் ஆட்கொள்ளப்பட்டவர் என்று பொருள் கொள்ளக்கூடாது.
அரமாயிக் மொழியில்
‘சாத்தான்’ என்பதற்குத்
‘தடைக்கல்’ என்னும்
பொருள்படும். அதாவது, ஒருவரின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது; ஒருவரின் ஆர்வத்தைக் குறைப்பது; எதிர்மறை எண்ணங்களை ஒருவரின் உள்ளத்தில் விதைப்பது போன்ற செயல்களை உள்ளடக்கியது. எனவேதான், இயேசு பேதுருவை அவரின் தடைக்கல்லாய் மாறிடாதபடி உடனடியாகச் செயல்படுகின்றார்.
எதிர்த்துருவ
எண்ணங்கள்
- முரண்பட்ட
மனக்
கணக்குகள்
இயேசு
சிலுவைச்சாவு, பாடுகள், துன்பங்கள், உயிர் இழப்பு ஆகியவை மூலம் மீட்பின் விலையை வழங்கிட விரும்புகின்றார். மக்களுக்கு
வாழ்வை, இழந்த
மீட்பை மீண்டும் கொணர்ந்திட விரும்புகின்றார். ஆனால், சீடர்களின்
எண்ணங்களும் மனக் கணக்குகளும் எதிர்துருவத்தில் அமைந்திருந்தன. சீடர்கள், மெசியா என்பவர் தனது அதிகாரத்தினாலும் ஆட்சியினாலும் வலிமையினாலும் படைகளினாலும்
புதுமையினாலும் மக்களை மீட்கவேண்டும் என எண்ணினர். இயேசு
அந்த மனநிலையை நிராகரிக்கின்றார். இயேசுவின் மீட்பின் ஆயுதம் அன்பு மட்டுமே. அங்கே அதிகாரத்திற்கு இடமில்லை. இயேசுவின் பணிவிடை செய்யும் மனநிலையும் ஏழ்மையும் இரக்கமும் நீதியின் மீதிருந்த தாகமும் பரிவும் உடனிருப்பும்
இயேசுவின் மீட்பின் சின்னங்களாக மாறின.
மூன்று நிபந்தனைகள்
இன்றைய
நற்செய்தியில் இரண்டாவது பகுதி, சீடர்களின் உள்ளத்தை இன்னும் அதிகமாக உலுக்கியது. இயேசு மேற்கூறிய மீட்பின் சின்னங்களை, சிலுவைகளைச் சுமந்துகொண்டு மீட்பைப் பெற்றுத் தரப்போவதில்லை - இன்னும்
அதற்கு வழி சேர்க்கும் பொருட்டு, யாரெல்லாம் அவரைப் பின்பற்ற விரும்புகிறார்களோ அவர்களும், மீட்பின் சின்னங்களைச் சுமந்து கொண்டு சாட்சியாக வாழ்ந்திடவேண்டும். மேலும், தம்மைப் பின்பற்ற பின்பற்ற மூன்று நிபந்தனைகளைத் தருகின்றார். என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும்... 1. தன்னலம் துறந்து, 2. தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு,
3. அவரைப் பின்பற்றவேண்டும்.
1. தன்னலம் துறந்து...
‘தன்னலம் துறத்தல்’
என்பது தன்னையே வருத்திக்கொள்வதோ அல்லது தனது திறமைகளையோ, ஆற்றலையோ வீணடிப்பது அல்ல; மாறாக, “நான்தான்
மையம்” என்கிற மனநிலையைத் தாண்டி பிறர் மட்டும் போதும் என்கின்ற மன நிலையையும்,
அணுகுமுறையையும்
ஏற்பதுதான் முதல் நிபந்தனை. பணம், புகழ், தற்பெருமை, ‘நான்தான்’
என்னும் அகந்தை ஆகியவற்றின் சிறையிலிருந்து வெளியேறி, இவ்வுலகைப் பிறரின் கண்கொண்டு காண்பதே சீடத்துவத்தின் முதல் நிலை. என் எண்ணங்களும், என்னைப் பற்றி மட்டும் சுழல்வதை நிறுத்துவதும்தாம் தன்னலம் துறப்பது.
2. தம் சிலுவையைக் தூக்கிக்கொண்டு...
இன்றைக்கு
சிலுவை என்றாலே துன்பங்கள் மட்டுமே எனப் பொருள் கொள்கின்றோம். வேதனை, நோய், இழப்பு, மனப்போராட்டம், சோகங்கள், இறப்பு, அன்றாடச் சுமைகள், உடல் சோர்வு, உடல்நலக்குறை பாடுகள், பணியிலுள்ள கவலைகள்... இவற்றையெல்லாம் நமது அன்றாட சிலுவைகள் எனக் கருதுகின்றோம்.
ஆனால்,
இயேசுவின் மனநிலையில் சிலுவை என்பது விண்ணையும் மண்ணையும் இணைக்கும் வழிகள்; மன்னிப்பின் செயல்பாடுகள்; இரக்கத்தின் செயல்கள். சுருங்கக்கூறின், அவை அன்பின் செயல்பாடுகள். சிலுவையின் மறுபெயர்தான் அன்பு. அது கனமான சுமைகள் அல்ல, வெறுக்கத்தக்க பொருள் அல்ல; மாறாக, இறைவனின் உச்சகட்ட அன்பின் அடையாளம். சிலுவையினால் இயேசு நம்மை மீட்டார் என்று கூறுவதைவிட, இறைத்தந்தை நம்மீது கொண்ட பேரன்பினால் இயேசுவழியாக நம்மை மீட்டார் என்று கூறலாம்.
இன்றைய
நற்செய்தியில் ‘சிலுவை’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘அன்பு’ என்ற வார்த்தையைப் பொருத்திப் பார்ப்போம், என்னைப் (இயேசுவை) பின்பற்ற விரும்பும் எவரும் தம் அன்பை தூக்கிக்கொண்டு அன்பு செய்யும் அனைத்து ஆற்றலையும் வலிமையையும் திறந்த உள்ளத்தையும் தாங்கிக் கொண்டு, என்னைப் (இயேசுவை) பின்பற்றட்டும் என இயேசு அழைக்கின்றார்.
சிலுவையே அன்பின் தற்கையளிப்பு எனப் புரிந்துகொள்ள வேண்டும்.
எரேமியாவின் அனுபவம்
இன்றைய
முதல் வாசகத்தில், இறைவன் தமது அன்பினால் எவ்வாறு எரேமியா இறைவாக்கினரை ஆட்கொண்டதையும் இறைவனின் அன்புச் சொல்லினால் அவரது இதயத்தில் ஏற்பட்ட ஆழமான மாற்றத்தையும், அதனைத் தனக்குள் அடக்கி
வைத்துக்கொள்ள இயலாச் சூழலையும் எடுத்துரைக்கின்றது.
பவுலின் வேண்டுகோள்
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், நமது உடலையும் ஆன்மாவையும்
இறைவனின் அன்பையும் பெற, புதுப்பிக்க,
பவுல் உரோமை இறைச்சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றார். அன்பினால் புதுப்பிக்கப்பட்டவர்கள் சரியானவற்றைத் தேர்ந்து தெளியும் ஆற்றலைப் பெறுவார்கள். அதுவே இயேசுவை நெருக்கமாகப் பின்பற்ற வழிவகை செய்யும்.
3. என்னைப் பின்பற்ற வேண்டும்...
இயேசுவைப்
பின்பற்றுதல் என்பது சீடத்துவத்தின் மூன்றாவது சிந்தனை. இயேசுவின் அடிச்சுவட்டில் நாம் செல்கின்றபோது இயேசு நம் அருகில் இருக்கின்றார்; நம்மைப்
பலப்படுத்துகின்றார்;
இறையாட்சியின் விழும்பியங்களுக்காக எடுக்கப்படும் முயற்சியில் விளிம்புநிலை மக்களின் சார்பான நிலைப்பாட்டில் இயேசு நம்முடன் இருக்கின்றார்; அல்லது அவரை நெருக்கமாகப் பின்பற்றும்பொழுது அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல் நமது உள்ளமும் நிறைவடையும் (இன்றைய பதிலுரைப் பாடல்).
பிறருக்காக
நான் அன்பைச் (சிலுவையை) சுமந்துகொண்டு இயேசுவைப் பின்பற்றும்பொழுது வாழ்வும் மகிழ்ச்சியும் என் அருகில் உள்ளது; என்னுள் உள்ளது. அனைத்தையும் அதற்காக இழந்தாலும் ஆன்மாவின்
மகிழ்ச்சியும், உண்மையான வாழ்வும் நமது வசமாகும். ஏனென்றால், இறையாட்சிக்காக அன்புப்பணி செய்யும்பொழுது, நாம் இழப்பது அனைத்தும் நமக்கு ஆதாயமே. அவற்றின் வழியாக இயேசுவை ஆதாயமாக்கிக்கொள்கின்றோம்.
இயேசுவைப்
போன்று பிறருக்காகத் துன்புறுபவரும் எவரும் இல்லை; சிலுவையைச் (அன்பை) சுமந்தவரும் எவரும் இல்லை; இயேசுவைப் போன்று இறைத்தந்தையின் மகிழ்ச்சியில் முழுமையாகப் பங்கு கொண்டவரும் எவரும் இல்லை. இயேசுவைப் பின்பற்றுவோரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை.
விருப்பத்தோடு, ஆர்வத்தோடு, மகிழ்வோடு
இயேசுவைப் பின்பற்றுவோம். இறை மகிழ்ச்சியை நமது உடைமையாக்குவோம். அதற்காக
நாம் அனைத்தையும் இழப்பது, நம்மை
வாழ்விற்கு இட்டுச்செல்லும். அச்செயல்கள் வாழ்விற்கான மூலதனங்கள்.
யூத போதகர்கள், ரபிக்கள் கேள்விகளை எழுப்பி, சீடர்களுக்குப் போதிப்பது வழக்கம். கல்விப் போதனையில் இதனை ‘சாக்ரடீஸ் முறை’ என்று அழைப்பார்கள். ஒரு சிறந்த சிந்தனையை வழங்கும்முன் அதனையொட்டிய கேள்வியை ஆசான்கள் எழுப்பி, அதற்கான விடையைத் தேடிடும் ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டியெழுப்புவது ஒரு சிறந்த ஆசிரியரின் பயிற்றுவிக்கும் விதம். கேள்விகள் ஆழமாக இருக்கும்பட்சத்தில், அதனையொட்டிய சிந்தனைகளும் பதில்களும் ஆழமான உண்மையை, தெளிவான மனநிலையை, உறுதியான நிலைப்பாட்டை, அசைக்கமுடியாத உண்மையை நோக்கி இட்டுச்செல்லும்.
இன்றைய
நற்செய்தியானது மத்தேயு 16-ஆம் அதிகாரத்தில் ஏறக்குறைய நற்செய்தியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இரண்டு கேள்விகளைச் சீடர்களை நோக்கி இயேசு எழுப்புகிறார்: 1. ‘மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?’ 2. ‘நீங்கள் நான் யார்
என்று சொல்கிறீர்கள்?’
முதல்
கேள்வியில் ‘மானிட மகன்’ என்று குறிப்பிடும் இயேசு, இரண்டாவது கேள்வியில் ‘நீங்கள் நான் யார் என்று சொல்கிறீர்கள்?’ என வினவுகின்றார். நற்செய்தியின்
மையப்பகுதியில் இக்கேள்விகள் இயேசுவைப் பற்றிய ஆழமான புரிதலைச் சீடர்களுக்கும், அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் வழங்குகின்றன. அதன் மூலம் இயேசுவின் மீட்புப் பணி எவ்வாறு தொடர்ந்து நிறைவுறும் என்பதை இயேசு இந்நற்செய்திகளுக்குப் பின்வரும் பகுதிகளில் விளக்க இருக்கின்றார். எனவேதான் இவ்விரு கேள்விகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
இயேசுவின்
பல்வேறு மலைப்பொழிவுப் போதனைகள், உவமைகள் குறிப்பாக, விதைப்பவன் உவமை, புதையல், விலையுயர்ந்த முத்து, வலை, வயலில் தோன்றிய களைகள், புளிப்பு மாவு, கடுகு விதை, இறையாட்சி பற்றிய இயேசுவின் நிலைப்பாடு, பசித்தோருக்கு உணவளிக்கும் நிகழ்வு, கடலில் தத்தளித்த சீடர்களைத் தேடிச்சென்ற நிகழ்வு, கானானியப் பெண்ணுடனான சந்திப்பு... இவற்றையெல்லாம் வழங்கிய பிறகு மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறார். மேற்கூறிய நிகழ்வுகளில், இயேசுவின் போதனைகளில், சந்திப்புகளில், குணமளித்தலில், உரையாடல்களில் இயேசுவுக்கு மிக அருகில் நின்று அவருக்குச் செவிமடுத்து, உணர்ந்து அனுபவித்த சீடர்களின் புரிதலை, மானிட மகனைப் பற்றிய தெளிவினை வழங்க இயேசு இக்கேள்விகளை எழுப்புகின்றார்.
ஒரு
மாணவன் தனது மறைக்கல்வி ஆசிரியரிடம் கேட்டான்: “ஆசிரியர் அவர்களே, உலகத்தில் மிகக் கடினமான கேள்வி எது?” ஆசிரியர் புன்னகையுடன், “இவ்வுலகில் மிகக் கடினமான கேள்வி, உன்னைப் பற்றி ‘நீ யார்?’ என்று
கேட்பதும், இயேசுவைப் பற்றி ‘அவர் உனக்கு யார்?’ என்று கேட்பதும்தான்” என்றார்.
இயேசுவின்
முதல் கேள்விக்குச் சீடர்கள் கூறிய பல்வேறு பதில்கள்: “திருமுழுக்கு யோவான், எலியா, எரேமியா, இறைவாக்கினர்களில் ஒருவர்.” மக்கள் இயேசுவைப் பற்றிய புரிதல்களை, மற்றவர்கள் கூறிய சொல்லாடல்கள், செவிவழியாக அறிந்துகொண்ட செய்திகள் இவற்றின் அடிப்படையில் சீடர்கள் பதில் அளிக்கின்றார்கள். அவர்கள் கூறிய பதில்கள் மேலோட்டமான பதிலாக அமைந்திருந்தன.
இயேசுவின்
இரண்டாம் கேள்வி ‘ஆனால்’ என்று தொடங்குகின்றது. இக்கேள்வி சீடர்களுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்திருந்தது. ஆனால், ‘நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?’ எனும் இயேசுவின் இரண்டாவது கேள்விக்குச் சீடர்கள் உடனடியான பதிலைத் தந்திருப்பார்களா? நிச்சயமாக அவர்களுக்குள் அமைதி நிலவியிருக்கும். ‘மக்கள் என்ன சொல்கிறார்கள்?’ என்னும் கேள்வியிலிருந்து ‘நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?’ என்னும் கேள்வி சீடர்களைச் சிந்திக்கவைத்தது. இதன் பதில், ஒருபொழுதும் உதட்டளவிலிருந்து உதித்துவிடாது. உள்ளத்தை ஆராயவேண்டும், உறவுகளை எண்ணிப் பார்க்கவேண்டும். தங்களது இறைநம்பிக்கையை, கேட்டறிந்த படிப்பினைகளை, இயேசுவுடன் பயணித்த நாள்களை, அவருடனான உறவினை எண்ணிப்பார்த்துப் பதிலளிக்கவேண்டும். இயேசுவின் இக்கேள்வியைச் சீடர்கள் எதிர்பார்க்கவில்லை. திக்குமுக்காடிப் போனார்கள். இயேசுவின் மீதான நம்பிக்கையை, புரிதலைப் பரிசோதித்துப் பார்க்கும் கேள்வியே இக்கேள்வி!
நம்பிக்கையின்
பதில்
- நம்பிக்கையான
பதில்
மரபு
சொல்வதை மட்டும் ஏற்றுக்கொள்வதும், பிறர்
சொல்வதை மட்டும் மீண்டும் மீண்டும் கூறுவதும் நம்பிக்கை அல்ல; பெரும்பான்மையினரின் கருத்தோடு இணைந்து நிற்பதும் நம்பிக்கை அல்ல; நம்பிக்கை என்பது ஒரு தனிப்பட்ட சந்திப்பு. அது ஒரு தனிப்பட்ட அனுபவம்; அது ஒரு தனிப்பட்ட உறவு.
இயேசு
தம் சீடர்களை நோக்கி இக்கேள்வியை எழுப்பும்பொழுது, தம்மைப் பற்றிய சரியான இறையியல் வரையறையை அவர் எதிர்பார்க்கவில்லை. மற்ற இறைவாக்கினர்களைவிட, திருமுழுக்கு யோவானைவிட தாம் உயர்ந்தவரா? என்பதை அறியவும் அவர் விரும்பவில்லை. இயேசு தேடிய பதில், உறவின் அடிப்படையில் அமைந்திடவேண்டும்; அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திடவேண்டும். “என்னைச் சந்தித்த பிறகு உன் வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்தது?”, “என் வார்த்தைகளால் நீ தொடப்பட்டாயா?” இதற்கு
நாம் எத்தகைய பதிலை அவருக்கு வழங்கமுடியும்? இந்தக் கேள்விக்குப் பதில் வழங்கிட நமது புத்தகங்களை மூடிவிட்டு, அவரைப் பற்றிய இறையியல் வரையறைகளைச் சற்றே தள்ளி வைத்துவிட்டு, நம் வாழ்க்கையை உற்றுநோக்கும்பொழுது, ‘இயேசு எனக்கு யார்?’ எனப் பதில் கூறமுடியும்.
நமது
இக்கட்டான சூழலில், நோயில், வேதனையில், மகிழ்வில், இருள் சூழ்ந்த தருணங்களில், வாழ்வின் உயர்வு - தாழ்வில் ‘இயேசு எனக்கு யார்?’ இயேசு எனது ஒளி; அவரே வழிகாட்டும் விளக்கு; என் வீழ்ச்சியில், தொய்வில், என்னை
உயர்த்திப்பிடிக்கும்
கரம், என் வாழ்வு பாய்மரத்தை இயக்கும் காற்றும், துடுப்பும்; என் காயங்களுக்கு மருந்து; என் வாழ்வின் அர்த்தம் என்று பதில் கூற நம் வாழ்வையும், இயேசுவின் கேள்வியையும் ஆழ்ந்து சிந்திப்போம்.
இயேசு மெசியா
எனக்
கண்டறியலும்,
நமது
அடையாளமும்
மேற்கூறிய
அனைத்தையும் சுருக்கி ஒற்றை வார்த்தையில் பேதுரு மிக எளிமையாக, ஆழமாகப் பதிலளிக்கின்றார்: “நீர் மெசியா; வாழும் கடவுளின் மகன்.” இயேசு யார் என்று உலகிற்கு அடையாளப்படுத்துகின்றார். இத்தகைய பதில் அனுபவத்தினால் உருவாகிய அழகிய பதில்மொழி. இயேசு வாழும் கடவுளின் மகன்; அவர் வாழ்விப்பவர்; வாழ்வை வழங்குபவர். வாழ்வு நசுக்கப்படும்பொழுது குரல் எழுப்பி நிலைப்பாட்டை வெளிப்படுத்துபவர். பிறர் வாழ்வதற்காகவே தன் வாழ்வை வழங்குபவர். நான் வாழ்கிறேன் நீங்களும் வாழ்வீர்கள் என்று தனது உயிர்ப்பின் நம்பிக்கையின் வாழ்வைத் தருபவர் என்றும் புரிதலை, பேதுருவின் பதில் வழங்குகின்றது. இயேசு எனக்கு யார் என அடையாளப்படுத்தினால் நாம் யார்
என்ற அடையாளம் நமக்குக் கிடைத்துவிடும்.
பேதுருவின் அடையாளமே
நமது
அடையாளம்
இயேசு
எனக்கு யார் என்பதை நான் உணர்ந்தால், நமது அடையாளமும், திரு அவையில் நமது பொறுப்புணர்வும் கண்டறிதல் மிகச் சுலபமே. பேதுரு இயேசுவை மெசியா என்றும், கடவுளின் மகன் என்றும் அடையாளம் காண்கின்றார். உடனே இயேசு அவரைப் பாறை ‘Caipha’ என்றும் இந்தப்
பாறையின் மீது திரு அவையைக் கட்டுவேன் என்றும் பேதுருவின் உண்மையான தன்மையை அடையாளப்படுத்துகின்றார். இதுவே நம் வாழ்க்கையிலும் நடக்கின்றது. நாம் இயேசுவை உண்மையாக அறிந்துகொள்ளும் பொழுது, நம்மையும் நாமே உண்மையாக அறியத் தொடங்குகின்றோம். நான் யார்? எனது அழைப்பு என்ன? என் வாழ்வின் பொருள் என்ன? எதற்காக நான் பிறந்துள்ளேன் என்னும் கேள்விகளுக்கு வாழ்வின் பதிலைக் கண்டறிவோம்.
நாமும் திரு
அவையைத்
தாங்கும்
பாறைகளே!
இயேசுவே
திரு அவையின் மூலைக்கல். திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடம். நாம் அனைவரும் திரு அவையின் உறுப்பினர்கள். அதன் வளர்ச்சியில் பங்காளிகள், உடன் உழைப்பாளர்கள். இயேசுவுக்கு அன்று பேதுருவும் சீடர்களும் திரு அவையை அமைக்க அவசியமானவர்கள். நாமும் இத்திரு அவையில் அவசியமானவர்களே. இயேசு எச்சிறிய கல்லையும் இக்கட்டடத்தில் இருந்து ஒதுக்குவதில்லை. மாறாக, சிறிய கல்லைக் கொண்ட சிற்பி தனது படைப்பை உருவாக்குவதுபோலும், குயவன் களிமண்ணைக் கொண்டு பானையை உருவாக்குவது போன்றும் இறைவன் நம் பலவீனங்களோடும் காயங்களோடும் மனித இயல்போடும் நம்மை ஏற்றுக்கொண்டு திரு அவையை கட்டுகின்றார். நமது பங்களிப்பால் நாமும் திரு அவையின் சிறிய பாறைகள் என்பதில் பெருமிதம் கொள்ளவேண்டும்.
பேதுருவின் அதிகாரமும்
எலிசாவின்
அதிகாரமும்
இன்றைய
முதல் வாசகத்தில், எசாயா இறைவாக்கினர் வழியாக தாவீது அரசின் அரண்மனைப் பொறுப்பாளனும் அதிகாரியுமாக ஆணவத்துடன் செயல்பட்ட செபுனாவை அப்பதவியிலிருந்து இறக்கி, இலக்கியாவின் மகனான எலியாக்கிமையை அதன் பொறுப்பாளனாக இறைவன் நியமிக்கின்றார். அவனது தோலில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை வைத்து அதனைத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் வழங்குகின்றார். இவ்வார்த்தைகள் Typological வழிமுறையில் பேதுருவிற்கு மிகச் சிறந்ததாக பொறுந்துகின்றது.
திரு
அவையின் அதிகாரத்தில் உள்ள அனைவரும் பொறுப்பாளர்களாக, பணியாளர்களாக, ஊழியர்களாகச் செயல்படவே பணிப்பொறுப்பு வழங்கப்படுகின்றது என இன்றைய முதல்
வாசகமும் நற்செய்தி வாசகமும் அறிவுறுத்துகின்றது.
திரு
அவையின் பாறைகளாகிய நாமும் நமது பணிப்பொறுப்பில், குடும்பப்பொறுப்பில், துறவற வாழ்வில் பொறுப்புணர்வுடன் செயல்பட இயேசு நமக்கு யார் என்பதையும், இயேசுவுக்கு நாமனைவரும் அவரது அன்புப் பிள்ளைகள் என்பதையும் அறிந்துகொள்ளும் பொழுது, நமது வாழ்வின் பொருளும் பொறுப்புணர்வும் மிகுதியாகும்.
கடவுள் வித்திட்ட இறையாட்சி அனைவரையும் உள்ளடக்கியது. இறையாட்சியின் அறிவிப்பும், அதன் எல்லைகளும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள், சமூகத்திற்குள் சுருக்கிக்கொள்வது ஓர் எதிர்சாட்சியச் செயல். இந்த ஞாயிறு இறைவார்த்தை, எவர் ஒருவரையும் மதிப்பற்றவராகப் புறம்பே தள்ளிவிடாமல் அனைவரையும் ஏற்று, மாண்புடனும் அக்கறையுடனும் அணுகிட நமக்கு நினைவுறுத்துகின்றது.
1997-ஆம் ஆண்டு
சென்னை சாந்தோமில் அமைந்திருந்த புனித தோமையார் இளங்குருமடத்தில் தங்கி, இலயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்ற காலத்தில், ஆகஸ்டு மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு ஞாயிறன்று இன்றைய நற்செய்தி வாசிக்கப்பட்டது. அவ்வாசகத்தின் வரிகள் எனக்குள் எண்ணற்ற கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தின. இயேசுவிற்கும் கானானியப் பெண்ணிற்கும் அமைந்திருந்த உரையாடல்களின் வரிகள் என்னைத் துளைத்துக்கொண்டே இருந்தன. உடனடியாக அப்பொழுது எங்களுக்கு ஆன்மிகக் குருவாகப் பணியாற்றிய விவிலியப் பேராசிரியர் அருள்பணி. S.J. அந்தோணிசாமி
அவர்களைச் சந்தித்து என் கேள்வியை எழுப்பினேன்.
“தந்தையே, ஏன் இயேசு கானானியப் பெண்ணை நோக்கி, ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் (அன்றைய விவிலிய மொழிபெயர்ப்பில் இவ்வார்த்தை ‘நாய்கள்’ என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது)
போடுவது முறையல்ல’
எனக் குறிப்பிடுகின்றார். தன் மகளின் உடல் நலத்திற்காக இயேசுவை அணுகி, விடாது முயற்சி செய்து, அவரது கவனத்தை ஈர்த்து, அவரிடம் மன்றாடும் பெண்ணிற்கு இயேசு இப்படிப்பட்ட கடினமான பதிலைக் கூற காரணம் என்ன? இது அவமதிக்கும் செயல் போன்று தெரிகின்றதே...” என அடுக்கடுக்கான கேள்விகளை
எழுப்பினேன். அவரின் பொறுமை மிகுந்த பதிலும், நற்செய்தியின் விளக்கமும் என் மனத்தில் பசுமரத்து ஆணிபோல் பதிந்துள்ளன.
இயேசுவின் இறையாட்சிப்
பயணம்
- மத்தேயு
நற்செய்தியின்
பின்புலம்
யூதமக்கள்
கிறித்தவத்தைத் தழுவிய காலங்களில் மத்தேயு நற்செய்தி எழுதப்பட்டது. யூதர்களைத் தவிர்த்து, பிற இனத்து மக்களும் கிறித்தவத்தை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை வாழ்வை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து, அதனைப் பின்பற்ற விரும்பிய காலச்சூழலில், இன்றைய நற்செய்தியின் பின்புலத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
யூத
மக்கள் அவர்களின் ஆன்மிக, வழிபாட்டு வழக்கமுறைகளையும், அன்றாட வாழ்வின் செயல்பாடுகளையும் மட்டுமே உயர்ந்தவையாகக் கருதினார்கள். தாங்கள் மட்டுமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக மார்தட்டிக் கொண்டார்கள். ஆகவே, மற்ற இனங்களைச் சார்ந்த அனைவரையுமே ஆன்மிகமற்றவர்களாக, இழிவானவர்களாகக் கருதினார்கள்.
இன்றைய
நற்செய்தியில் இயேசு இஸ்ரயேல் மக்கள் வாழும் இடங்களிலிருந்து கடந்து தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் செல்கின்றார். புற இனத்து மக்கள் வாழும் பகுதிகளில் விருப்பத்துடன் இயேசு செல்கின்றார். தம் சீடர்களுக்கு மட்டுமல்ல, விளிம்புநிலை மக்களுக்கும் இறையாட்சியைப் பற்றி அழுத்தமாகப் பதிவு செய்கின்றார். யூதர்களின் முன்சார்பு எண்ணங்களையும் தவறான கருதுகோள்களையும் இயேசுவின் கானானியப் பெண்ணுடனான சந்திப்பு உடைக்கின்றது.
எல்லைகள் கடந்த,
சமூக
வேர்களைக்
கடந்த
இறையாட்சி
எல்லாருக்கும்
உரிய இறையாட்சியைக் கொணர்ந்திட இறைவன் விரும்புகின்றார். இறையாட்சியின் அறிவிப்பும், அதன் எல்லைகளும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள், நாட்டிற்குள், சமூகத்திற்குள் அடங்கிவிடுவது எதிர்சாட்சியச் செயல். இயேசு தீர்-சீதோன் பகுதிகளுக்குள் சென்று அச்சமூகத்தின் மனிதர்களோடு உரையாடுவதும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும், அவர்களின் நம்பிக்கையைப் பாராட்டுவதும் ஒரு புவியியல் சார்ந்த குறியீடு மட்டுமல்ல; அதில் விடுதலை இறையியலும் நிறைந்துள்ளது. யூதர்களால் அதிகமாக வெறுக்கப்பட்ட புற இனத்து மக்களின் இடத்தில் இறையாட்சியின் மதிப்பீடுகளும் நம்பிக்கையும் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றது. கானானியப் பெண்ணின் மூதாதையரை, அவ்வினத்தை யூதர்கள் அதிகமாக வெறுத்தனர். ஆனால், அவ்வினத்தைச் சார்ந்த ஒரு தாயை நம்பிக்கையின் தாயாக இனம் கண்டு கொள்கின்றார்.
இன்றைய
நற்செய்தியில் இவ்விருவரின் உரையாடல் கூர்ந்த கவனத்திற்குரியது. மூன்றுமுறை கானானியத் தாய் பேசுகின்றார்: “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்.”
“ஐயா, எனக்கு உதவியருளும்.”
“ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறுதுண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே.”
இந்த
மூன்று உரையாடல்களும் வேண்டல்களும் ‘ஐயா’ எனத் தொடங்குகின்றது. மூன்று உரையாடல்களிலும் கானானியப் பெண் தாழ்ச்சியோடும் ஆனால், மிகுந்த நம்பிக்கையோடும் மனவுறுதியோடும் இயேசுவிடம் வேண்டுகின்றார். இயேசுவின் பதில்மொழி மௌனத்துடன் தொடங்குகின்றது. கனமான உரையாடலாக வலுப்பெறுகின்றது. இறுதியில் நலமிக்க வார்த்தைகளுடன் நிறைவுபெறுகின்றது.
‘தாவீதின் மகனே எனக்கு இரங்கும்’
எனக் கதறிய தாய்க்கு இயேசு உடனடியாகப் பதில்மொழி கூறவில்லை. இயேசுவின் மௌனம் அப்பெண்ணின் தேவைக்குச் செவிமடுக்க மனமின்மையால் அல்ல; பாராமுகமும் அல்ல; புறக்கணிப்பும் அல்ல! இயேசுவின் மூன்று உரையாடல் வரிகள்:
“இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்.”
“பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல.”
“அம்மா, உமது நம்பிக்கை பெரியது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்.”
கானானியப்
பெண்ணின் தாழ்ச்சியும், நம்பிக்கையான வார்த்தைகளும் இயேசுவின் இதயத்தைத் தொடுகின்றன. ஒருவரின் தாழ்ச்சி மலைகளையும் தகர்க்கும் வலிமையுடையது. தற்பெருமையும் பெருமிதமும் ஒருவரின் வாழ்வைச் சரிக்கக்கூடியது.
நாய்க்குட்டிகளும்
மேசையிலிருந்து
விழும்
அப்பத்துண்டுகளும்
இயேசு
புற இனத்து மக்களுக்கான தமது பணியை மிகச் சூசகமாகத் தெரிவிக்கின்றார். யூத இனத்தால் இழிவாக, தரம் குறைவாகக் கருதப்பட்ட இவ்வினத்தை இயேசு, அவர்கள் இறைவனின் பிள்ளைகள் - இறைவனின் பந்தியில் அமரும் சம உரிமை பெற்றவர்கள்
என்பதை நற்செய்தியின் நிகழ்வில் உறுதிப்படுத்துகிறார்.
இன்றைய
நற்செய்தி ‘நாய்க்குட்டிகளும், மேசையிலிருந்து விழும் அப்பத்துண்டுகளும்’ என்னும்
உருவகத்தைச் சுற்றியே நகர்கின்றது. ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்ல’
என்னும் யூதர்களின் சமத்துவமற்ற சித்தாந்தத்தை இயேசு மாற்றுகிறார். இறைவனின் கரங்களிலிருந்து வருகின்ற இரக்கமும் அருளும் சிறிய அளவே ஆயினும், சிறிய துண்டுகளாய் இருப்பினும், அதுவே தங்களுக்கு மீட்பளிக்கும் என கானானியத் தாய்
நம்பினார். ஏனென்றால் இறைவன் தம் ஆசிரை, அருளை, இரக்கத்தை வழங்கும்பொழுது, அவரைவிடக் குறைவாக எதையும் அவர் தம் பிள்ளைகளுக்குத் தருவதில்லை; இறைவனின் கரங்களிலிருந்து வரும் சிறு அப்பத்துண்டுகளும், சிறிய அருளும் எங்களுக்குப் பேரருளாய், ஆற்றலாய், நம்பிக்கையாய், உடல்நலமாய் மாறும் என அத்தாய் நம்பினாள்.
“அம்மா, உம் நம்பிக்கை பெரியது” என இயேசு புகழும்
கானானியப் பெண் தொழுகைக்கூடங்களுக்குச் செல்லவில்லை; இறைவார்த்தையை அங்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. வேற்றுத் தெய்வங்களை வழிபட்டிருப்பினும், இயேசுவை - தாவீதின் மகனை அடையாளம் காண்கின்றார். அவர் இறைவழிபாட்டில் பங்கெடுக்கவில்லை. ஆனால், இறைவன் தங்களுக்கும் உரியவர் என்பதில் உறுதியாய் வெளிப்படுத்துகின்றார். நம்பிக்கை அறிக்கையை அவர் அறிந்திருக்கவில்லை; இறையியலாளர்களின் போதனைகளை அறிந்திருக்கவில்லை. ஆனால், அவரது மகளின் வேதனையை அறிந்திருந்தார். அவளுக்காகத் தாவீதின் மகனிடம் மன்றாடுகின்றார். பிறரின் வேதனையை அறிந்து, அத்துன்பத்தை, இன்னலை அகற்றும் பரிவுள்ளம் அவளிடம் இருந்தது. இப்பரிவு உள்ளத்தினால் உந்தப்பட்டு நம்பிக்கையோடு வேண்டுகின்றார்.
இறைவனின்
பார்வையில் சமயமோ, அதனை அச்சுபிசகாமல் பின்பற்றும் மக்களினமோ முன்னுரிமை பெறுவதில்லை. இறைவனின் பார்வையில், அவரது மக்களின் குறிப்பாக, கடைநிலையினரின் வேதனையும், துன்பமும் தேவையும் முன்னுரிமை பெறுகின்றன. இனத்தின் அடிப்படையில் முன்னுரிமை கோருவதை இறைவன் நிராகரிக்கின்றார். வேதனையையும் துன்பத்தையும் இழிநிலையையும் சந்திக்கும் மக்களினங்களின் அருகில் இறைவன் இருக்கின்றார். அவர்களின் நம்பிக்கையே சிறப்பான பெருமிதமிக்க நம்பிக்கை.
இன்றைய
முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் இறைவனின் வேட்கையை, விருப்பத்தைப் பதிவிடுகின்றார். தமது இல்லம் எல்லா மக்களினங்களின் இறைவேண்டலின் வீடாக மாறுவதே இறைவனின் விருப்பமும் கனவும். எல்லாரும் வேறுபாடுகளின்றி பலிகளை ஒப்புக்கொடுத்து அவரது பந்தியில் அமர்வதும், இறைப்புகழ்ச்சியில் பங்கெடுப்பதும் இறைவனின் அவா. பசியையும் வேதனையையும் புறக்கணிப்புகளையும் மாற்றி, பசியாற உணவு, ஆறுதல், உடனிருப்பு, மனித மாண்பு, மதிப்பு இறையாட்சியின் கனவு. இறைவனின் கனவு மெய்ப்பட இன்றே செயல்படவேண்டும்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் புற இனத்தவர்களின், மறக்கப்பட்ட இனத்தின் திருத்தூதராகப் பணியாற்றுவதில், அவர்களுடன் தனது நெருக்கத்தை வெளிப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். திரு அவை எல்லாருக்குமானது; திரு அவையின் பணியாளர்கள் அனைவருக்குமானவர்கள்; கடைநிலையினருக்கும் நெருக்கமானவர்கள்.
இறைவனின்
பேரிரக்கமும் பரிவும் மறுக்கப்படும் சமூகத்திற்கு அதிகமாய் வழங்கப்படுவதே நற்செய்தி. சமூகத்தின் அவலச் செயலால் சமூகத்தின் நிலைகளிலிருந்து கீழே தள்ளப்பட்டு (மேசையிலிருந்து கீழே நிறுத்தப்பட்டு/தள்ளப்பட்டு) வாழும் சமூகத்தை நோக்கி நாம் அனைவரும் குனிந்து, அவர்களை உயர்த்தி, மேசையில் அமரச்செய்து, பணியில் பங்கெடுத்து பிள்ளைகளுக்குரிய மாண்பை வழங்குவதும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதும் நமது வாழ்வியல் ஆன்மிகமாக மாறவேண்டும். அப்பொழுது நாம் பெருமிதத்துடன் கூறலாம். நாங்கள் வழிபடும் இறைவேண்டலின் வீடு அனைவருக்கும் உரிய இறைவேண்டலின் வீடு. அங்கே அனைவரும் இறைவனின் பிள்ளைகளே!
அருள்முனைவர் அந்தோணி ஜோசப் அவர்கள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். தற்பொழுது பெங்களூரில் அமைந்துள்ள புனித பேதுரு பாப்பிறை உயர்கல்விப் பயிலகத்தில் (St. Peter’s Pontifical Insititute) திரு அவைச் சட்டப் பேராசிரியராகவும் பதிவாளராகவும் பணியாற்றி வருகின்றார். மேலும், தமிழ்நாட்டுத் திரு அவைச் சட்ட அறிஞர்கள் சங்கத்தின் செயலாளராகவும், செங்கல்பட்டு மறைமாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றுகின்றார்.
உரோமை, பாப்பிறை உர்பானியா
பல்கலைக்கழகத்தின் திரு அவைச் சட்டத்தில் முனைவர் பட்டமும், வத்திக்கானின் உரோமை திருப்பீடப்
பேராலயத்தில் சிறப்புப் பட்டயப் படிப்புகளையும் நிறைவு செய்துள்ளார். இவர் திரு அவை
நீதிமன்ற நடவடிக்கைகள் சார்ந்த ஓர் ஆங்கிலப் புத்தகத்தையும், திரு அவைச் சட்டம் சார்ந்த
அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மறையுரை, திரு அவைப்
போதனைகள், இறையியல் மற்றும் ஆன்மிகச் சிந்தனைகள் கொண்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
தற்போது ‘நம் வாழ்வு’
வார இதழில் மறையுரை வழங்க முன்வந்துள்ள அருள்முனைவர் அந்தோணி
ஜோசப் அவர்களை ‘நம் வாழ்வு’
அன்போடு வரவேற்கிறது.
- முதன்மை ஆசிரியர்
நம்பிக்கை
வாழ்வினை வளர்த்திட, ஆழமாய் வாழ்ந்திட, வேரூன்றி விருட்சமாய் வளர்ந்து, நம்பிக்கை கனிகளை வழங்கிட, புதுமைகளையும் அசாதாரண நிகழ்வுகளையும் எதிர்நோக்கி வாழ்வது நம்பிக்கை வாழ்வின் உண்மையான அர்த்தங்களையும் மதிப்பீடுகளையும் மங்கச் செய்யும். புதுமைகள் மட்டுமே நம்பிக்கையை மிகுதியாக்கும் என ஒரு நம்பிக்கையாளர்
கருதினால், அந்த நம்பிக்கை ஆழமற்ற, மேலோட்டமான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது. புதுமைகளால் மட்டுமே கிறித்தவ நம்பிக்கை மிகுதியாகின்றதா? ஆனால், அன்றாட வாழ்வின் நிகழ்வுகளும் இறைப்பராமரிப்பும் அமைதியும் உடனிருப்பும் நமது நம்பிக்கையை மிகுதியாக்கும் காரணிகள் என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன.
எலியாவின் கவலையும்
அச்சமும்
முதல்
வாசகம் எலியாவின் ஓரேபு மலை அனுபவத்தைப் பற்றி உரைக்கின்றது. பொய் இறைவாக்கினர்களைக் கொன்றுவிட்டு, வேற்றுத் தெய்வங்களின் வழிபாட்டினை வெறுமையாக்கி, யாவே இறைவனின் உடனிருப்பையும் வார்த்தைகளையும் மெய்ப்பிக்கின்றார். அதனால் அந்நாட்டு அரசனின் கோபத்திற்கு உள்ளாகி அவர் எலியா இறைவாக்கினரைக் கொன்றொழிக்க முடிவெடுத்துச் செயல்பட்டபொழுது, அவரிடமிருந்து
தப்பி ஓடுகின்றார். காகத்தின் வழியாக அப்பமும் தண்ணீரும் பெறப்பட்டு இறைப்பராமரிப்பை உணர்கின்றார். அவர் ஓரேபு மலையைச் சென்றடைந்தபொழுது இறைவன்
அவர்முன் கடந்து வருவது இறைவனால் அறிவுறுத்தப்பட்டு, மலையின் குகையிலிருந்து வெளியே வந்து நிற்கின்றார். மேகத்தூண்களிலும், நெருப்புப் பிழம்புகளிலும், வானிலிருந்து தோன்றுகின்ற இடி முழக்கங்களிலும் பேரிரைச்சல்களிலும் பூமியை உலுக்குகின்ற நிலநடுக்கங்களிலும் இறைவன் பிரசன்னத்தை அறியலாம் எனக் காத்திருந்த எலியாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவரது
உள்ளம் மன அமைதியின்மை என்னும்
இரைச்சலால், பயம் என்னும் நடுக்கத்தால் நிறைந்திருந்த தருணத்தில், இறைவன் தம்மை இன்னும் அதிகமான இரைச்சல் மிகுந்த சூழ்நிலையில் வெளிப்படுத்த விரும்பவில்லை. இறைவனின் பிரசன்னத்தில் நின்று மனபலம் பெறவேண்டும் என்று எண்ணிய எலியா இறைவாக்கினருக்கு இறைவன் மெல்லிய தென்றலில் வெளிப்படுத்துகின்றார். இறைவனின் வெளிப்பாடு அசாதாரண சூழலில், நிகழ்வுகளில், பிரமிப்பும் பிரமாண்டமும் மட்டும் நிறைந்தது அல்ல; அந்நிலைக்கு,
அச்சூழலுக்கு ஏற்ப அவரின் வெளிப்பாடு அமைதியிலும், மெல்லிய தென்றலிலும் மெல்லிய குரலிலும் அமைந்துள்ளது; அக்குரல் எலியாவை
உறுதிப்படுத்தியது; மீண்டும் இறைவாக்குப் பணிக்கு அவரை உந்துகின்றது.
‘ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்டேன்...’ எனத் தொடங்கும் இன்றைய திருப்பாடல் 85, இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இறைவனின் குரலும் உடனிருப்பும் அவர்களுக்கு நல்லதை மட்டுமே வழங்கியது என்பதை எடுத்துரைக்கின்றது. ‘அவரின் குரலுக்குச் செவிமெடுக்கும் நாட்டிற்கு நல்வினை அமையும், வாழ்வு பிறக்கும்’
என்னும் வரிகள் இன்றைய வாசகங்களோடு பொருந்திச் செல்கின்றது. எலியாவிற்கு மனவுறுதியும், நற்செய்தியில் இவர்களுக்கு நம்பிக்கையையும் இறைவனின் குரலின் வழியாகக் கிடைக்கின்றது.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் இறைவன் மாட்சியை, பிரசன்னத்தை அவரைக் கடவுளாக ஏற்றுக்கொண்ட மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியதை நினைவுகூர்ந்து, இறைவாக்குகளும் உடன்படிக்கையும் திருச்சட்டங்களும் இஸ்ரயேல் மக்களின் அன்றாட வாழ்வின் இறைமகனின் பிரசன்னத்தை உணர்த்தும் வெளிப்பாடுகளாகவே அமைந்திருந்தன எனக் கோடிட்டு விளக்குகின்றனர். அனுதின வாழ்வின் சூழலில் துன்பங்களும் வேதனைகளும் போராட்டங்களும் நிலைகுலையச் செய்யும் தருணங்களில், இஸ்ரயேல் மக்களிடத்தில் ஒப்படைக்கப்பட்ட உடன்படிக்கையும் இறைவாக்குகளும் அவர்களை
உறுதிப்படுத்தின.
இன்றைய
நற்செய்தி வரிகளுக்கு முன்பாக இயேசு முதலில் 5,000 மனிதர்களைச் சந்தித்து உணவளிக்கின்றார். அவர்களின் பசியை அறிந்து அவர்களுடன் நின்று, தோழமையை வெளிப்படுத்திப் பசியாற்றுகின்றார். பிறகு இரவில் தனித்துச் சென்று இறைத்தந்தையுடன் உரையாடுகின்றார். அதிகாலைப் பொழுதில் தம்மைச் சார்ந்த சீடர்களைச் சந்திக்கக் கடலுக்குள் செல்கின்றார். இவ்வாறு இயேசுவின் செயல்பாடு சந்தித்தல், உரையாடுதல், உடனிருத்தல் என அமைகின்றது.
சீடர்களின் கலக்கமும்
இயேசுவின்
உடனிருப்பும்
அலைகளால்
படகு அலைக்கழிக்கப்பட்டு, கரையிலிருந்து நெடுந்தொலைவு சென்றுவிட்டதால் சீடர்கள் கலக்கம் அடைகின்றனர். துன்பத்தில், அபாயகரமான சூழலில், ஆர்ப்பரித்து எழும் அலைகளின் மத்தியில் சீடர்கள் தாங்கள் தனித்துவிடப்பட்டதாக உணர்கின்றனர். அச்சூழலைத் தனியாக எதிர்கொள்ள வேண்டியதாக அஞ்சினர். இயேசு அவர்களை விட்டு வெகுதூரத்தில் இருப்பதாகக் கருதிய நிலையில், இயேசு அவர்களை நோக்கி வருகின்றார். ‘துணிவோடு இருங்கள்; அஞ்சாதீர்கள்’ என
நம்பிக்கையை வளர்க்கின்றார்.
நமது
வாழ்விலும் பல நேரங்களில் பெரும்புயல்
போன்ற சூழல்கள் போராட்டங்கள், மனக்கவலைகள், இழப்புகள்... இவற்றில் சிக்கி மன அமைதியை இழக்கும்பொழுதும்,
செய்வதறியாது திகைக்கும்பொழுதும் இறைவன் நம்மைவிட்டு வெகுதூரத்தில் இருப்பதாக உணர்கின்றோம். இறைவன் மௌனமாய் இருப்பதாய் நினைக்கின்றோம். மௌனத்திலும் செயலாற்றும், உறைந்துபோன இறைமகனாகவே அவரை நினைக்கின்றோம்.
இயேசுவைத்
தொடக்கத்தில் சீடர்களால் ‘கண்டுகொள்ள’ முடியவில்லை.
இருள் சூழ்ந்த கடல், பயம் நிறைந்த கண்கள், புயல் காற்று நிறைந்திருந்த அலைகள்... இவற்றின் பேரிரைச்சல் மத்தியில் இயேசு அவர்களை நோக்கிச் செல்வதை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இயேசு “நான் உங்களோடுதான் இருக்கிறேன்” என்ற
இயேசுவின் மெல்லிய - சாந்தமான குரல் அவர்களின் காதில் விழவில்லை. பயமும் அச்சமும் கலக்கமும் அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிய தருணத்தில்தான் இயேசுவின் உடனிருப்பை, அருகாமையை உணர்கின்றனர். துடுப்புகளை இயக்கிய சீடர்களின் கரங்களில் இறைவனின் கரமும் உடனிருக்கின்றது.
நம்மைக்
கவலையும் சோதனையும் வேதனையும் அலைக்கழிக்கும்போது இயேசுவின் மெல்லிய, நம்பிக்கை தரும் உடனிருக்கும் வார்த்தைகள், நம் செவிகளைக் கூர்மையாக்கவேண்டும். அச்சூழலில்தான் நமது நம்பிக்கை பலப்படும்.
பேதுருவின் துணிச்சலும்
ஆழமற்ற
நம்பிக்கையும்
இயேசு
கடல்மீது சீடர்களை நோக்கி நடக்கும்பொழுது மற்ற சீடர்கள் பயத்தில் உறைந்திருந்தபொழுது பேதுரு மட்டுமே துணிச்சலோடு பேசுகின்றார். அவரது துணிச்சல் மிகுந்த விருப்பத்தினால் தானும் கடல்மீது நடக்க அனுமதிக்க இயேசுவிடம் உரையாடுகின்றார். குறைவான, குறைந்த நேரமே தாக்குப்பிடித்த அவரது ஆழமற்ற நம்பிக்கையால் கடலில் மூழ்குகின்றார். இயேசுவை நோக்கிச் செல்லவேண்டும் என எண்ணிய அவரது
விருப்பம் அவர் கடல்மீது நடந்திட காரணமாய் அமைந்தது. ‘இயேசுதான் அவர்’ என மெய்பிக்கத் தானும்
கடல்மீது நடந்திடும் புதுமையை அனுபவிக்க விரும்பிய பேதுரு, திடீரென ஏற்பட்ட அச்சத்தினால் இயேசுவின்மீது தான் பதித்த கண்கள் விலகியதால் நீரில் மூழ்குகின்றார். புதுமையை மட்டும் கொண்டு நம்பிக்கையை உறுதிப்படுத்த விரும்பிய பேதுருவால் அலைகளை எதிர்கொள்ள இயலவில்லை.
புதுமைகள்
மட்டுமே நம்பிக்கையின் அடித்தளமாய் அமைவதில்லை. புதுமைகள் மட்டுமே நம்பிக்கையை உருவாக்குவதில்லை. புதுமைகளின் அடித்தளத்தில் அமைந்திடும் நம்பிக்கையினால் மட்டுமே ஊன்றி நிலைத்து வாழ்ந்திட முடியாது. அவை அடையாளங்கள் மட்டுமே! இயேசுவின் மீதும் அவரது வார்த்தைகள் மீதும் அவரது உடனிருப்பின் மீதும் நம்பிக்கை கொண்டு செயல்படுவதும்தான் உண்மையான நம்பிக்கையின் அடித்தளம்.
நம்பிக்கை தளரும்போது
குரல்
எழுப்புவோம்
பேதுருவின்
நம்பிக்கை இயேசுவை விட்டு விலகி கடல் அலைகள் மீதும், ‘நான் நடக்கின்றேனா?’ என அவரது கண்கள்மீதும்
திரும்புகின்றபொழுது மூழ்குகின்றார். ‘ஆண்டவரே காப்பாற்றும்’ என
இயேசுவை நோக்கிக் குரலெழுப்பும்பொழுது, இயேசுவின் கரங்கள் அவரை நோக்கி நீண்டு பேதுருவை மீட்கிறது. நமது வேதனையின் கூக்குரலுக்கு எப்போதும் இறைவன் செவிமடுக்கின்றார். அவரது குரலும் கரங்களும் நம்மைப் பலப்படுத்துகின்றன.
திருத்தந்தை
புனித 23-ஆம் யோவான் இவ்வாறு குறிப்பிடுகின்றார்: “உங்களது அச்சங்களையும் பயங்களையும் அல்ல; உங்களது நம்பிக்கையையும் கனவுகளையும் கலந்தாலோசியுங்கள்.”
பதற்றமான,
கலக்கமான சூழ்நிலையில் நமது இதயத்தின் எண்ணங்களையும் அதிலுள்ள பயத்தையும் கண்முன் கொண்டு அவரை ஆலோசிப்பதற்குப் பதிலாக, நமது நம்பிக்கையையும், கடந்தகால நிகழ்வுகளில் அவற்றை எதிர்கொண்ட இறையனுபவத்தையும் மெல்லிய தென்றலிலும் உயர்த்திப் பிடித்து நிற்கின்ற இறைவனின் பிரசன்னத்தை உணர்வோம்.
வாழ்க்கை என்பது வெறுமனே நுகர்வது மட்டுமல்ல; பிறரோடு இணைந்து பகிர்வதுதான் அதன் உன்னதத் தத்துவம். மகாத்மா காந்தியடிகள், “இவ்வுலகம் மனிதரின் தேவைக்கான அனைத்தையும் கொண்டுள்ளது; ஆனால், அவரது பேராசைக்கு அல்ல” என்று குறிப்பிட்ட கூற்று, இன்றைய ஞாயிறு வழிபாட்டின் மிக முக்கிய மையமாகத் திகழ்கிறது. நாம் வாழும் இந்த உலகம் எல்லாருக்குமானது. பசியும் தாகமும் மனித வாழ்வின் எதார்த்தங்கள் என்றால், அந்தப் பசியைப் போக்குவதும் தாகத்தைத் தணிப்பதுமே ஆன்மிகத்தின் மிக முக்கியக் கடமையாகும். இறைவனின் அன்பு என்பது வெறும் வார்த்தைகளில் வெளிப்படுவது அல்ல; அது பசித்த வயிறுகளுக்கு உணவாகவும், தாகமுற்ற நெஞ்சங்களுக்கு நீராகவும் மாறும்போதே முழுமை பெறுகிறது.
ஆண்டின்
பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். மனிதரின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, அதைத் தம் எல்லையற்ற இரக்கத்தால் நிறைவு செய்யும் கடவுளை இன்றைய வழிபாடு நமக்கு மையப்படுத்திக் காட்டுகிறது. இன்றைய இறைவார்த்தைகள் நம்மிடம் உள்ளவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் உன்னத மனநிலையே உண்மையான ஆன்மிகம் என்பதையும், அத்தகைய பகிர்வில் இறைவனின் மாறாத பராமரிப்பும் பேரன்பும் எங்ஙனம் வெளிப்படுகிறது என்பதையும் மிக அழகாக விளக்குகிறது.
வறுமையும்
பசியும் மனிதரை வாட்டும்போது, கடவுள் தூரமாய் நின்று வேடிக்கை பார்ப்பவர் அல்லர்; மாறாக, அவர் மனிதரின் துன்பங்களில் பங்குகொண்டு, அவர்களின் பசியைப் போக்கும் பரிவுள்ள தந்தை. பசியற்ற ஓர் உலகைப் படைக்க இறைவன் நம்மைத் தூண்டும் இந்த நாளில், அவரது மாறாத கொடையையும், நம்மிடம் அவர் எதிர்பார்க்கும் தாராள மனத்தையும் தியானிக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய
முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா வழியாக ஆண்டவர் தாகமாய் இருப்போரையும், கையில் பணமில்லாத ஏழையரையும் ஒரு மாபெரும் விருந்திற்கு அன்போடு அழைக்கிறார். திருவிவிலியப் பின்னணியில் ‘விருந்து’
என்பது வெறுமனே உண்பதைக் குறிப்பதல்ல; மாறாக, அது இறைவனின் எல்லையற்ற பராமரிப்பையும் இரக்கத்தையும், மனிதகுலத்தோடு அவர் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கையையும் குறிக்கும் குறியீடாகும். இந்த விருந்தில் பங்குகொள்ளப் பணமோ, தகுதியோ தேவையில்லை; மாறாக, கடவுள்மேல் கொண்டிருக்கக்கூடிய தாகமும், ஆன்மிக வறுமையுமே தகுதியாகக் கருதப்படுகிறது. “எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்”
என அழைக்கும் கடவுள், அழியக்கூடிய உலகப் பொருள்களுக்காக உழைப்பதைக் காட்டிலும், நிலை வாழ்வு தரும் இறைவார்த்தைக்காகத் தாகம்கொள்ள நம்மை அழைக்கிறார்.
இத்தகைய
இறைவனின் பேரன்பை எவராலும் நம்மிடமிருந்து பிரித்துவிட முடியாது என்பதை இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் வழியாக மிக ஆணித்தரமாகப் பறைசாற்றுகிறார். நாம் இவ்வுலகில் வாழும்போது ஏழ்மை, நோய், சமூக ஏற்றத்தாழ்வுகள், வன்முறைகள் போன்ற பலவித சோதனைகளையும் வேதனைகளையும் சந்திக்க நேரிடலாம். இவற்றிற்குப் பின்னால் நம்மை வீழ்த்த நினைக்கும் தீயசக்திகள் இயங்கினாலும், இயேசுவின் சிலுவைத் துன்பங்கள் வழியாக வெளிப்பட்ட கடவுளின் அன்பு நமக்குள்ளே இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. சாவே நம்மைச் சரிய வைத்தாலும், கிறிஸ்து இயேசுவின் வழியாக நாம் வெற்றி வாகை சூடுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை பவுல் நமக்குத் தருகிறார். எனவே, துன்பங்களைக் கண்டு ஓடுவதல்ல ஆன்மிகம்; கிறிஸ்துவின் அன்பை உள்ளத்தில் தேக்கி வைத்து, எந்த ஒரு சவாலையும் வென்றெடுப்பதே உண்மையான நம்பிக்கை என்பதை பவுலின் வரிகள் உணர்த்துகின்றன.
இந்த
நம்பிக்கையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவும், இறைவனின் பராமரிப்பின் அடையாளமாகவும் நற்செய்தியில் இயேசு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளிக்கும் வல்ல செயல் விவரிக்கப்படுகிறது. இயேசுவின் பணி வாழ்வில் செய்த ஏராளமான வல்ல செயல்களில், நான்கு நற்செய்தி நூல்களிலும் ஒருமித்த கருத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு வல்ல செயல் இதுமட்டுமே என்பது இதன் ஆழமான முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரம், ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள், மீதமிருந்த பன்னிரண்டு கூடைகள் என எவ்வித மாற்றமுமின்றிச்
சீடரின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்த இந்த நிகழ்வு, யோவான் நற்செய்தியில் ஒரு புதிய பார்வையைத் தருகிறது.
பாஸ்கா
விழா அண்மையில் நிகழவிருந்த சூழலில், இயேசு மலைமேல் ஏறி அமர்ந்து இந்த வல்ல செயலைச் செய்தது, பழைய ஏற்பாட்டில் விடுதலைப் பயண நிகழ்வில் அங்குப் பசியாயிருந்து பயணம் செய்த இஸ்ரயேல் மக்களுக்கு யாவே இறைவன் வானத்திலிருந்து மன்னாவைப் பொழியச் செய்த விருந்தை நமக்கு நினைவுப்படுத்துகிறது. இங்கு இயேசு தம்மைப் பின்தொடர்ந்து வந்த மக்களுக்கு, ஒரு புதிய மோசேயாக, உடலுணவு மட்டுமல்லாமல், இறைவார்த்தையாகிய உணவையும், ஆன்மாவை ஊட்டும் தெய்வீக உணவையும் வழங்கும் இறைமகனாகத் தம்மை வெளிப்படுத்துகிறார்.
அப்பத்தைப்
பலுகச் செய்தாரா அல்லது பகிரச் செய்தாரா? என்ற தற்காலத் திருவிவிலிய ஆய்வாளரின் கேள்வி, நம் சிந்தனையை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது. ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைமகனுக்கு அப்பங்களைப் பலுகச் செய்வது ஒன்றும் கடினமான காரியமல்ல; எனினும், தம் போதனையால் மக்களின் சுயநல மனங்களை மாற்றி, அவர்கள் தமக்கெனப் பதுக்கி வைத்திருந்த உணவுகளைப் பிறரோடு பகிரச் செய்ததே இயேசு செய்த மாபெரும் வல்ல செயலாகும். அந்திரேயா சுட்டிக்காட்டிய ஒரு சிறுவனின் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே இந்த மாபெரும் விருந்திற்குத் தொடக்கப் புள்ளியாக அமைகிறது. தன்னிடம் உள்ளதை மறைக்காமல், கள்ளமில்லா மனத்தோடு அந்தச் சிறுவன் கொடுத்த சிறிய கொடையே, பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியைப் போக்கி, பன்னிரண்டு கூடைகள் மீதமாகும் அளவிற்குப் பெருகியது. இயேசு கடவுளைப் போற்றி, உணவைப் பிட்டுப் பகிர்ந்தளித்தபோது, அங்கே மனிதநேயமும், இறைவனின் எல்லையற்ற அருளும் இணைந்து வரலாற்று வல்ல செயலாக மாறியது.
இன்றைய
எதார்த்த சூழலில் உலகை நாம் உற்றுநோக்கும்போது, பசியும் பட்டினியும் இன்னும் ஒழிந்தபாடில்லை என்பது வேதனையான உண்மை. உலகில் பற்றாக்குறை இருப்பதற்குக் காரணம், இறைவனின் படைப்பில் குறைபாடு இருப்பதல்ல; மாறாக, மனிதரின் பகிர்ந்துகொள்ளும் குணத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடே ஆகும். உணவைப் பணமாக மாற்றும் பேராசையும், பதுக்கல் கலாச்சாரமும் பெருகிவிட்ட இந்தச் சமூகத்தில், ஒருபுறம் உணவு வீணாக்கப்படுவதும், மறுபுறம் வறியவர் உணவின்றித் தவிப்பதும் தொடர்கதையாக இருக்கிறது. இயேசுவின் இந்த வல்ல செயல், பதுக்கி வைக்கும் சுயநலப்போக்கை விடுத்து, மனிதநேயமும் பகிர்வும் கொண்ட சமூகமாக நாம் மாறவேண்டும் என்ற சவாலை இன்றைய உலகிற்கு முன்வைக்கிறது.
இயேசுவின்
இந்த உன்னத செயல் வழியாக நம் வாழ்வை மெருகூட்டக்கூடிய மூன்று முக்கியமான பாடங்கள்:
முதலாவதாக,
உணவுப் பற்றாக்குறைக்குக் காரணம் பகிராக்குறையே என்பதை உணர்ந்து, நம்மிடம் உள்ளவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் தாராள உள்ளத்தைப் பெறவேண்டும். அன்னை தெரேசா அவர்கள், “உன்னால் நூறு பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும், ஒரே ஒருவருக்கு மட்டுமாவது உணவளி” என்று கூறிய உன்னத வரிகளை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். நம்மிடம் இருக்கும் குறைவான பொருள்களையும் மனிதநேயத்தையும் கொண்டு பிறருக்கு உதவ முன்வரவேண்டுமே தவிர, பொருளாதார இயலாமையை ஒரு சாக்காகக் கூறக் கூடாது.
இரண்டாவதாக,
இறையாட்சியின் விழுமியமான பசிப்பிணிப் போக்கும் பணியில் நாம் பொறுப்பேற்க வேண்டும். இயேசுவின் பரிவன்பைக்கொண்டு, ஏழையரைக் கடவுள் காப்பார் என்று கடந்துபோகாமல், நாமே இறைவனின் கரங்களாக மாறி உதவ வேண்டும். ஒருவர் பசியுற்றிருக்கக் கண்டும் காணாமல் இருப்பது நமது பொறுப்பற்ற நிலையாகும். பசியும் பட்டினியுமற்ற உலகை உருவாக்க, பிறரின் தேவையை உணர்ந்து உதவ முன்வருவதே இறைவன் விரும்பும் உண்மையான ஆன்மிகம்.
மூன்றாவதாக,
உணவை வீணாக்காமல் பாதுகாக்கும் பொறுப்புணர்வை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வல்ல செயலின் இறுதியில் “ஒன்றும் வீணாகாதபடி எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்”
என்று இயேசு கூறியது, இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மிக முக்கியமான பாடம். திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதுபோல, உணவை வீணாக்குவது என்பது வறியோரின் தட்டிலிருந்து உணவைத் திருடுவதற்குச் சமமான பெரும் குற்றமாகும். எனவே, நிறைவான வாழ்வு என்பது பதுக்குவதில் இல்லை; மாறாக, பாதுகாப்பதிலும் பகிர்வதிலும்தான் உள்ளது என்பதை நாம் மறக்கக்கூடாது.
நிறைவாக,
இயேசு காட்டிய இந்த உன்னதப் பகிர்வுப் பாதை நம்முடைய வாழ்க்கைப் பாதையாக மாறவேண்டும். பரிவுள்ள மனம் இருந்தால், பற்றாக்குறையை நீக்குவது மட்டுமல்லாமல், அளவு கடந்த நிறைவையும் உருவாக்க இயலும் என்பதைத்தான், மீதமுள்ள உணவால் நிரப்பப்பட்ட பன்னிரண்டு கூடைகள் நமக்கு உணர்த்துகின்றன. சுயநலம், சுரண்டல், பதுக்கல் போன்ற தீய பண்புகள் ஒழிக்கப்படுமேயானால், எல்லாருடைய தேவையும் போகத் தாராளமாக உணவு மிஞ்சும். எனவே, நாம் நம் சுயநலக்கூடுகளை உடைத்து, பரிவோடு பகிர்ந்து வாழ்வோம். இல்லாமை என்பது இந்நானிலத்தில் இல்லாமையாகட்டும்.
நாம் வாழும் தற்கால உலகம் எதற்கோ ஓடிக்கொண்டிருக்கிறது. இலாபம், இழப்பு, வர்த்தகம், சந்தை மதிப்பு என்ற எல்லைகளுக்குள்ளேயே மனித உறவுகளும், வாழ்வின் மாண்புகளும் சுருக்கப்பட்டுவிட்டன. எல்லாவற்றிற்கும் விலை குறிக்கப்படும் இந்த நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில், ‘விலை மதிப்பு’ (Price) என்பதற்கும், ‘உள்ளார்ந்த மதிப்பு’(Value) என்பதற்கும் உள்ள ஆழமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நாம் தவறிவிடுகிறோம். மனிதரைக்கூட அவர்களின் தகுதி, சாதி, பின்புலத்தை வைத்து மதிப்பிடும் ஒரு குறுகிய மனப்பான்மை நம்மைச் சூழ்ந்திருக்கிறது. இத்தகைய உலகப் போக்கிலிருந்து விடுபட்டு, நம் கண்முன்னே காணும் விலைமதிப்பில்லா இறையாட்சி எனும் புதையலையும், வாழ்வின் உன்னத முத்துகளையும் அடையாளம் காணும் ஆன்மிகப் பக்குவத்தை அடைவதே இன்றைய நாளின் முதன்மையான தேவை.
ஆண்டின்
பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு திருவழிபாடு, நம்மைத் தற்காலிக இன்பங்களிலிருந்து விடுவித்து, நிலையான இறையாட்சி எனும் புதையலை நோக்கி நம் இதயங்களைத் திருப்பிட அழைப்புவிடுக்கிறது.
நாம்
பல வேளைகளில் திருமுழுக்கு வழி கிறித்தவ வாழ்வு வாழ்கின்றோமே தவிர, இறையாட்சியின் உண்மையான நெறிகளின்படி வாழ்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. வழிபாடுகளில் பங்கேற்பதும், திருநூல்களைக் கற்பதும், புனிதரைப் போற்றுவதும், திரு அவைச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே முழுமையான கிறித்தவ வாழ்வாகிவிடாது; மாறாக, இறையாட்சியின் அருள்வாழ்வு என்பது தியாகங்களை ஏற்பதும், இலாபங்களைத் தவிர்ப்பதும், அநீதிகளுக்கு நடுவில் இழப்புகளைப் பொருள்படுத்தாமல் நீதிக்காகக் குரல் கொடுப்பதுமே ஆகும். இந்த உன்னதமான இறையாட்சி நெறியை நம் வாழ்வில் கண்டுகொள்ளவும், அதை முழுமையாகத் தழுவிக்கொள்ளவும் தேவையான தெய்வீக ஞானத்தைத் தேடுவதே இன்றைய நாளின் ஒட்டுமொத்த வழிபாட்டு அழைப்பாகும்.
இந்த
உன்னத அழைப்பை ஏற்று வாழ்ந்த ஒரு வரலாற்று மாந்தராக முதல் வாசகத்தில் சாலமோன் அரசரை நாம் காண்கிறோம். இஸ்ரயேல் அரச வரலாற்றில் மிக முக்கியமான, ஒப்பற்ற அரசராகக் கருதப்படும் சாலமோன், மெய்யறிவின் அடையாளமாக விளங்குகிறார். கிபயோனில் உள்ள ஒரு தொழுகை மேட்டில் அவர் பலி ஒப்புக்கொடுக்க வந்தபோது, ஒருநாள் இரவு கடவுள் அவருக்குக் கனவில் தோன்றுகிறார். விவிலியப் பின்னணியில் கனவு என்பது இறைவனின் முக்கியமான வெளிப்பாடாகும். அப்போது, கடவுள் சாலமோனிடம் “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கிறார். ஓர் இளம் அரசராக, தன் தந்தை தாவீதின் அடியொற்றிப் பயணிக்கும் சாலமோன், தன் தந்தைக்கும் கடவுளுக்கும் இடையிலிருந்த தூய உறவை நினைவூட்டுகிறார். தன்னை மிகச் சிறியவன் என்று தாழ்த்தி, இத்தனை பெருந்திரளான மக்களுக்குத் தீர்ப்பு வழங்க தனக்கு மெய்யறிவு தேவை என்பதை உணர்கிறார். நீண்ட ஆயுளையோ, செல்வத்தையோ, எதிரிகளின் அழிவையோ கேட்காமல், ‘நன்மை-தீமையைப் பகுத்தறியும் ஞானம் நிறைந்த இதயத்தைத் தந்தருளும்’ என்று
அவர் மன்றாடுகிறார். இதனால் கடவுள் சாலமோன்மீது மிகுந்த பேரன்பு கொண்டவராக, அவர் வேண்டியபடியே அவருக்கு ஞானத்தை அருளி, சாலமோனைப்போலச் சிறந்த ஞானி எவரும் இருந்ததில்லை என்று கூறி புளகாங்கிதம் அடைகிறார்.
சாலமோன்
தேடிய ஞானமும் தெய்வீக அழைப்பும் தற்செயலானவை அல்ல; மாறாக, அவை காலங்களுக்கு முன்பே இறைவனால் திட்டமிடப்பட்டவை என்பதை பவுலடியார் ஆழமாக விளக்குகிறார். கடவுளிடம் அன்புகூர்பவர்களின் நன்மைக்காகவே தூய ஆவியார் அனைத்துச் சூழல்களிலும் ஒத்துழைக்கிறார். நாம் எவருக்கும் இரண்டாந்தரமானவர் இல்லை; காலங்களுக்கு முன்பே முன் குறிக்கப்பட்டு, அழைக்கப்பட்டு, ஏற்புடையவராக்கப்பட்டவர் என்ற பேருண்மையை பவுல் பறைசாற்றுகிறார். “மனிதரின் உண்மையான மேன்மை அவரது ஆன்மிகத் தேடலில் உள்ளது” என்ற சிந்தனைக்கேற்ப, கிறிஸ்துவை முதன்மையாகக் கொண்ட சகோதரத்துவச் சமூகமாக மலரவும், சவால்களை எதிர்கொள்ளும் துணிவைப் பெறவும் இந்த ஆன்மிகப் புரிதல் நமக்கு எல்லையற்ற நம்பிக்கையைத் தருகிறது.
இந்தத்
துணிவும் நம்பிக்கையும் எத்தகைய தியாகத்திற்கும் நம்மை இட்டுச்செல்லும் என்பதை நற்செய்தியில் இயேசு மூன்று அழகிய உவமைகள் வழியாகத் தெளிவுபடுத்துகிறார். மத்தேயு நற்செய்தியின் உவமைகளின் அதிகாரமாகிய 13-ஆம் அதிகாரத்தின் இறுதியில் புதையல், முத்து மற்றும் வலை ஆகிய உவமைகளை இயேசு கற்பிக்கிறார். இதில் புதையல் மற்றும் முத்து உவமைகள், இறையாட்சியைக் கண்டுபிடிப்பதால் ஏற்படும் பேரின்பத்தைப் பேசுவதால் ‘இரட்டை உவமைகள்’ என அழைக்கப்படுகின்றன.
பழங்காலத்தில்
வங்கிகள் இல்லாத சூழலில், போர்கள் மற்றும் புரட்சிக் காலங்களில் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற பொருள்களை நிலத்தில் புதைத்து வைப்பது வழக்கம். அவ்வாறு புதைக்கப்பட்ட, தற்செயலாகக் கண்டெடுக்கப்படும் புதையலை ஒருவர் கண்டதும், பெரும் மகிழ்ச்சியோடு தனக்குரிய யாவற்றையும் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறார். மறுபுறம், முத்தைத் தேடி அலையும் வணிகர் ஒருவர், விலைமதிப்பற்ற நல் முத்தைக் கண்டதும், தன் உடைமைகள் அனைத்தையும் விற்று அதைத் தனதாக்கிக்கொள்கிறார். புதையல் தற்செயலாகக் கிடைத்தது, முத்து தேடிக் கிடைத்தது. ஆனால், இரண்டிலும் பொதுவான கூறு என்னவென்றால், அவற்றைக் கண்டடைந்ததால் ஏற்பட்ட அளவிடற்கரிய மகிழ்ச்சியும், அதற்காக அவர்கள் செய்த முழுமையான தியாகமுமே ஆகும். இறையாட்சி என்னும் ஒப்புயர்வற்ற செல்வத்தைப் பெறுவதற்கு, நம்மிடம் உள்ள அனைத்தையும் இழக்கத் துணியும் ஒருவர், விண்ணகத்தில் என்றும் அழியாத செல்வந்தராக மாறுகிறார்.
இயேசு
கூறும் வலை உவமை உலக முடிவின் இறுதித் தீர்ப்பைப் பற்றிய எச்சரிக்கையை நமக்குத் தந்தாலும், அது இறையாட்சி ஞானத்தின் ஆழமான மேன்மையை நமக்குக் கற்றுத்தருகிறது. கடலில் வீசப்படும் வலை நல்ல, கெட்ட மீன்களை வாரி வருவதுபோல, உலக முடிவில் இறைத்தூதர் நேர்மையாளர்களிடமிருந்து தீயோரைப் பிரிப்பார் என்று இயேசு விளக்குகிறார். ஆனால், இறுதித் தீர்ப்பு நாள் வரும்வரை யாரையும் தீயோராகத் தீர்ப்பிடவோ அல்லது எவரையும் வெறுத்து ஒதுக்கவோ மனிதராகிய நமக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதைத் தெளிந்துணர்வதே உண்மையான மெய்யறிவு ஆகும்.
இந்தத்
திருவிவிலிய விழுமியங்களை இன்றைய எதார்த்தச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உலகப் புகழையும் அழியும் செல்வத்தையும் மட்டுமே தேடி அலையும் நாம், ஆன்மிகப் பார்வை குறைபாட்டால் நம் கண்முன்னே குடும்பங்களில் மறைந்து வாழும் தாத்தா-பாட்டியராகிய உன்னதப் புதையல்களையும் விலைமதிப்பற்ற முத்துகளையும் அடையாளம் காணத் தவறுகிறோம். அவர்களைப் ‘பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும்’ (Use and throw) கலாச்சாரத்தில்
ஊறிப்போய்விட்டோம். உண்மையில், இன்று நம் குடும்பங்களில் நாம் தொலைத்துவிட்ட, போற்றிப் பாதுகாக்கத் தவறிய உயிருள்ள அனுபவக் கருவூலங்கள் நம்முடைய தாத்தா-பாட்டியரே. இப்பேருண்மையைத் திரு அவை ஆழமாக உணர்ந்ததால்தான் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 26-ஆம் தேதி இயேசுவின் தாத்தா-பாட்டியான புனிதர்கள் அன்னா மற்றும் சுவக்கீன் ஆகியோரின் நினைவு நாளையொட்டி வரும் ஞாயிறை ‘தாத்தா-பாட்டியர்’ தினமாகக் கொண்டாடுகிறது. ஆகவே, இந்நாளில் நம் குடும்பத்தின் உன்னதப் புதையல்களான முதியோரைப் போற்றிப் பாதுகாத்து, நம் நெஞ்சார்ந்த அன்பையும் நன்றியையும் அவர்களுக்கு என்றும் உரித்தாக்குவோம்.
இறுதியாக,
இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்தும் முக்கியப் பாடங்கள்: முதலாவதாக, இறையாட்சி விழுமியங்களுக்காக அனைத்தையும் இழக்கும் துணிவு நமக்குத் தேவைப்படுகிறது. புதையலையும் முத்தையும் கண்டோர் தங்கள் உடைமைகள் அனைத்தையும் விற்கத் துணிந்ததுபோல, நாமும் இறையாட்சியின் நீதிக்காகவும் உண்மைக்காகவும் நம்முடைய தற்காலிக இலாபங்களையும், சுயநல வசதிகளையும் இழக்கத் தயாராவோம்.
இரண்டாவதாக,
பிறரைத் தீர்ப்பிடாமல் மன்னிக்கும் கனிவு நிறைந்த நெஞ்சத்தை நாம் வளர்க்க வேண்டும். வலை உவமை உணர்த்துவதுபோல, இறுதித் தீர்ப்பு இறைவனுக்கு மட்டுமே உரியது. அதை உணர்ந்து, பிறரின் பலவீனங்களை ஏளனம் செய்யாமல், அவர்களை அன்போடு ஏற்று, தவறும் வேளைகளில் தாராளமாக மன்னிக்கும் நற்பண்பை நம் வாழ்வில் சாட்சியமாக்குவோம்.
மூன்றாவதாக,
தற்காலிக இன்பங்களைத் தாண்டிய நிலையான தேடல் நம்முடையதாக மாற வேண்டும். சாலமோன் அரசர் உலகச் செல்வங்களைக் கேளாமல் இறைஞானத்தைக் கேட்டுப் பெற்றதுபோல, நாமும் எளிதில் அழியும் உலகக் காரியங்களையும் நுகர்வுப் பண்பாட்டையும் மையமாகக் கொள்ளாமல், என்றுமே அழியாத விண்ணகப் புதையலாகிய இறைவனையே நமது முதன்மை இலக்காக்கிக் கொள்வோம்.
நிறைவாக,
மறைந்துபோகும் உலகப் புகழ், செல்வங்களைத் தாண்டி, நன்மை தீமை பகுத்தறியும் இறையாட்சி எனும் ஞானத்தையும், மனிதரை இறைச்சாயலாகக் காணும் தூய கண்களையும் தர இறைவனிடம் உருக்கமாக
மன்றாடுவோம். புனிதர்களான அன்னா-சுவக்கீன் திருநாளான இன்று, “உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேன்” (எசா
49:15) என்ற இறைவாக்கிற்கு ஏற்ப, நம் சொந்தக் குடும்பங்களில் வாழும் தாத்தா-பாட்டியரை ஒப்புயர்வற்ற விண்ணகப் புதையலாகவும் விலைமதிப்பற்ற நல்முத்தாகவும் கண்டுகொள்வோம். வயதில் முதிர்ந்த நம் உன்னத உறவுகளை அன்புசெய்து போற்றிப் பாதுகாக்கத் தேவையான தியாக உள்ளத்தையும் துணிவையும் இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் நிறைவாகத் தந்தருள்வாராக!