news
சிறுகதை
நவீனத்து(த)வம்! (சிறுகதை)

நாளை ஜெபமணி அம்மாவுக்கு ஐம்பத்து ஐந்தாவது பிறந்த நாள். எவ்வளவு வேலையாக இருந்தாலும், அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டுத் தன் அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பெங்களூருவிலிருந்து தங்கள் சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள் மகனும் மருமகளும்.

அன்றும் அப்படித்தான்! அப்போதுதான் ஊரிலிருந்து வந்திருந்த மருமகள் ஷர்மிளா, “அத்தை! எப்படி இருக்கீங்க? வயது ஏற ஏறஉங்களுக்கு இளமை திரும்புதே!… உங்கள் இளமையின் இரகசியம் என்னவோ?” என்று கேட்டுக்கொண்டேஉணவு மேசையில் தயாராக இருந்த காபியைத் தன் கணவரிடம் கொடுத்துவிட்டு, தான் மட்டும் ஃப்ளாஸ்கில் இருந்த சூடான வெந்நீரை ஒரு குவளையில் ஊற்றிக் குடிக்க ஆரம்பித்தாள்.

இதைக் கவனித்த ஜெபமணி அம்மாள், “ஏம்மா ஷர்மிகாபி குடிக்கலையா?” என்றாள்.

எனக்கு வேண்டாம் அத்தைஎன்று கூறிய படியேமேசையில் இருந்த மற்றப் பாத்திரங்களின் மூடியை ஒவ்வொன்றாகத் திறந்தாள் ஷர்மி.

அத்தை, காலை டிபனுக்குத் தோசை, சட்னி, கேசரியா?” என்றாள்.

ஆமாண்டிமா! கேசரி உங்க ரெண்டு பேருக்கும் பிடித்த இனிப்பாச்சேன்னுதான்...”

சாரி அத்தை, நான் உங்ககிட்ட முதல்லயே சொல்லியிருக்கணும், மறந்துட்டேன்”… என்று சொன்ன ஷர்மி மேலும் தொடர்ந்தாள்...

அத்தை,… சென்ற மாதம் என்னைச் சிக்கன்குன்யா கடுமையாகத் தாக்கியது அல்லவா? அதன் பின்விளைவாக எனக்கு ஏற்பட்ட கை, கால், மூட்டு வலி மற்றும் ஜாயின்ட் பெயினுக்கு மருத்துவர் தொடர்ந்து சில மாதங்கள் கறி, மீன், முட்டை, கோழி போன்ற புரதச் சத்துமிக்க உணவுகளைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்லிட்டார். அதனால இது தவக்காலமாக இருந்தாலும், நான் இத்தகைய உணவுகளை ஒதுக்க முடியாமப் போயிடுச்சு! அதனால அதுக்குப் பதிலா நான் ரொம்ப விரும்பிக் குடிக்கிற காபியை நாற்பது நாள்களுக்குக் குடிக்கக்கூடாது என்றும், இனிப்பு வகைகளைத் தொடவே கூடாதுன்னும் முடிவெடுத்தேன். பிடித்ததைச் சாப்பிடாமல் ஒதுக்குவது மட்டுமல்ல தவம்! பிடிக்காததைச் சாப்பிடுவதும் தவ ஒறுத்தல்தான். அது மட்டுமல்ல அத்தை, தவக்காலச் சிலுவைப்பாதையையும் நான் முழுக்க முழந்தாள்படியிட்டே செய்து முடிப்பேன். ஆனால், இப்போது கால்மூட்டு வலியால் அமர்ந்துகொண்டே செபிக்க மனம் ஒப்பவில்லை; அதனால வெள்ளிக்கிழமை மட்டுமே செய்யுற சிலுவைப்பாதையைத் தினமும் செய்யத் தீர்மானித்திருக்கிறேன்.

அப்புறம் பொதுவா தவக்காலம் முழுவதும் நான் தவறாம காலைத் திருப்பலியில் கலந்து கொள்வது என்னோட வழக்கம்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.… என்னோட உடம்பு பலவீனத்தால அதுவும் முடியல.…சுத்தபோசனம்,… ஒருசந்தி முழுக்க முழுக்க அனுசரிக்க முடியலை. எனவே, இதுக்கெல்லாம் பரிகாரமாதொலைக்காட்சி, சீரியல், சினிமா, பொழுதுபோக்கு எல்லாவற்றையும் கொஞ்ச நாள் ஒதுக்கி வைக்க முடிவு செஞ்சிருக்கிற காலம்தான் என்னோட தவக்காலம்.

என்னால காலைத் திருப்பலிக்குப் போக முடியலையே தவிர, தினமும் மாலைத் திருப்பலிகளில் கலந்துகொள்கிறேன். உண்ணாநோன்பு இருக்க முடிவதில்லை; அதற்குப் பதிலாக ஒரு மூட்டை அரிசியைக் கருணை இல்லத்திற்குக் கொடுத்துவிட்டேன்.

அப்புறம் மணிக்கணக்காநண்பர்களோட  அலைப்பேசியில் அரட்டை அடிக்க ரொம்பப் பிடிக்கும்;… இப்ப தேவையில்லா அரட்டைகளுக்குநோசொல்லியாச்சு!

எல்லாத்துக்கும் மேல குடும்பப் பிரச்சினையால ஐந்து வருடமா பேசாம இருந்த என் தம்பிகிட்ட நானே முன்வந்து பேசி சமாதானம் பண்ணி உறவைப் புதுப்பிச்சுகிட்டேன்என்றெல்லாம் அவள் சொல்லச் சொல்ல, எப்பொழுதுமேதன் மருமகள் ஷர்மிளாவின் நடை, உடை, பாவனைகளில் இருக்கும் நவீனத்துவத்தைக் கண்டு இரசிக்கும் ஜெபமணி அம்மாள்இப்போது அவள் ஆன்மிகத்திலிருக்கும் நவீனத்துவத்தைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போனாள்!

news
சிறுகதை
விருந்தினர் வருகை - காவல் அன்னை 03 (தொடர் கதை)

டாக்டர் சேவியர் வீட்டிற்குப் பத்து பேர் மட்டுமே வந்திருந்தார்கள்.

அனைவரும் வந்தபின், தங்கை அமலி பிஸ்கட்டும், தேநீரும் வழங்கினாள். வந்தவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

டாக்டர் கீழே உள்ள அவரது வீட்டுக் கிளினிக்கில், வந்திருந்த பேஷண்டுகளை வரிசையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

யாழினியின் பெற்றோர் சிரித்தபடி சேவியரின் மகள் விமலாவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

என்ன பாப்பா, ஸ்கூல் போறியா?” என்று கேட்டாள் இந்திரா தேவி.

இல்ல பாட்டி, இனிமேல் தான் போகணும்என்றாள் குழந்தை.

இங்கே உன்னை யார் பார்த்துக்கிறாங்க?” என்றாள் யாழினி.

அப்பா ஆஸ்பத்திரிக்கு போயிருவார். பாட்டியும் அத்தையும் நல்லாப் பார்த்துக்குவாங்கஎன்றாள் விமலா.

வெரிகுட், என்ன விளையாடுவே?” என்று கேட்டாள் இந்திரா தேவி.

பக்கத்திலே இருக்கிற பசங்களோட ஓடி பிடிச்சு விளையாடுவேன். இப்பப் போய் விளையாடலாமா?” என்று சிரித்தாள் குழந்தை.

இன்னைக்கு உனக்குப் பிறந்த நாள் விமலா. அதுக்கு நாங்க வந்திருக்கோம். இப்பப் போய் விளையாட முடியுமா?” என்று சிரித்தாள் யாழினி.

சேவியர் இப்ப வந்திருவான். டாக்டர் இஸ்மாயில் குடும்பத்தோட வர்றாராம். அவங்க வந்ததும் இந்த பங்க்ஷனை நடத்திறலாம்என்றாள் அருளம்மா.

இந்தப் படத்திலே இருக்கிறதுதான் டாக்டரோட சம்சாரமாங்க. அவங்க ரொம்ப அழகாய் இருக்காங்களே...” என்று கேட்டாள் வந்திருந்த ஒரு பெண்மணி.

அவங்க எப்படிங்க இறந்தாங்க?” என்று ஆர்வமுடன் கேட்டார் கருணாகரன்.

அருளம்மா கவலையுடன்அதை இப்பப் பேச வேணாம், விமலா ஒரேயடியாய் அழத் தொடங்கி விடுவாள்என்றபோது டாக்டர் சேவியர் வந்துவிட்டார்.

சிறிது நேரத்தில் டாக்டர் இஸ்மாயில், மனைவி பாத்திமா, மகன் இப்ராகிமுடன் வந்துவிட்டார்.

உங்க அனைவருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் விமலாவோட பெர்த் டேக்கு வந்ததில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. இப்ப நிகழ்ச்சியைத் தொடங்கிடலாம்என்றார் சேவியர்.

வீட்டில் அலங்காரமாய் தோரணம் தொங்கியது. பூக்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. மேஜை மேல் இருந்த கேக்கை சேவியர் விமலாவை வைத்து வெட்டினார்.

பிறந்த நாள் பாடல் போடப்பட்டது. அனைவரும்ஹேப்பி பெர்த் டே விமலாஎன்று கோரசாய் வாழ்த்தினர்கேக் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அனைவருக்கும் மேல் மாடியில் மதிய விருந்து இப்ப தயாராய் உள்ளது. அங்கே போகலாம்என்றார் சேவியர்.

வாங்க, வாங்கஎன்று அம்மா அருளம்மாவும் தங்கை அமலியும் மேலே கூட்டிப் போனார்கள்.

டாக்டர் இஸ்மாயிலும் டாக்டர் யாழினி குடும்பத்தாரும் கீழே பேசிக் கொண்டிருந்தார்கள். டாக்டர் சேவியர் குழந்தைக்குச் சாப்பிடக் கொடுத்தபடி உள்ளே இருந்தார்.

ஆமா டாக்டர், இந்த சேவியரோட சம்சாரம் எப்படி இறந்தாங்க? எவ்வளவு அழகாய் இருக்காங்க. பாவம், இந்தக் குழந்தையை விட்டுட்டு அந்தம்மா போயிருச்சே, பாவம் டாக்டருக்குப் பெரிய சிரமம்தான்என்றார் கருணாகரன்.

அதை சேவியர் அம்மா வந்ததும் கேட்டுக்கங்க. நாங்க கிளம்புறோம்என்று புறப்பட்டார் டாக்டர் இஸ்மாயில்.

news
சிறுகதை
பெற்றோருடன் வாதம் (காவல் அன்னை - தொடர் கதை)

ஏம்மா யாழினி, நீ எப்பதான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கே?” என்றாள் தாய் இந்திரா.

ஏம்மா, இப்ப நான் அவசரமாய் கல்யாணம் பண்ணியாகணுமா?” என்றாள் யாழினி.

ஏய், கல்யாணத்தைக் காலாகாலத்தில் முடிக்கணும்; பிள்ளைகளையும் காலாகாலத்தில் பெத்துக்கணும்மாஎன்றாள் தாய்.

நீங்க அந்தக் காலத்தில் பதினைஞ்சு வயசில் கல்யாணம் முடிச்சு, அஞ்சு பிள்ளைகளைப் பெத்திட்டீங்க; அதுமாதிரி இப்ப முடியாது. என்னோட டாக்டர் வேலை அப்படி...” என்றாள் மகள்.

இந்தா உங்கப்பா வந்திட்டார். அவர்ட்டேயே நீ பேசிக்க, நான் சொல்றது உன் காதில் ஏறாது யாழினிஎன்றாள் எரிச்சலுடன் தாய் இந்திரா.

தந்தை கருணாகரன்உஷ்என்றபடி சோபாவில் வந்து உட்கார்ந்தார். “ஏங்க உங்க மகள் சொல்றதைக் கேளுங்கஎன்றாள் இந்திரா.

ஏய், நான் வெயில்லே போய் மாத்திரை, மருந்தெல்லாம் வாங்கிட்டு வர்றேன்; உனக்கும் சேர்த்துதான் சுகர் மாத்திரை, பிரஷர் மாத்திரையெல்லாம் வாங்கிட்டு வர்றேன். கொஞ்சம் பேசாமல் இருஎன்றார் கருணாகரன்.

வெயில்லே போறது நல்லதுதான்ப்பாஎன்று சிரித்தாள் யாழினி.

அது சரிதான். எனக்கு என்ன வயசு? இந்த வய சிலே போய் வர்றது எவ்வளவு சிரமம்னு உனக்கெங்கே தெரியப் போகுது?” என்றார் தந்தை.

சரிங்க, உங்களோட உதவிக்கு ஒரு காபியைப் போட்டுத் தர்றேன். மகள்ட்ட கல்யாணம் பத்திப் பேசுங்கஎன்றாள் இந்திரா.

அதைத்தான் நீ பேசியிருப்பியே... பிறகு நான் என்ன பேசுறது? பொம்பளப் பிள்ளையப் பெத்தவள் நீதானே? பையன்னா நான் சண்டை போடலாம்என்றார் கருணாகரன்.

யாழினி இல்லாதப்ப  என்னோட கட புடான்னு கத்துறீங்க. இப்ப யாழினிட்ட நேர்லே பேச வேண்டியதுதானே?” என்று கேட்டாள் தாய்.

சரி, நீ சொன்னதுக்கு ஒத்திக்கிட்டு இப்ப நான் யாழினிட்டே கேட்கிறேன். ஏம்மா யாழினி, நீ எப்ப கல்யாணம் பண்றதாய் நினைச்சிருக்கே? அதை இப்ப நீ என்கிட்டே சொல்லியாகணும்என்றார் கருணாகரன்.

கரெக்ட், இப்படிக் கேளுங்க. உங்க தங்கச்சி மதுரையிலிருந்து பேசினதையும் சொல்லுங்க. இந்தா காபி கொண்டாரேன்என்று உள்ளே போனாள் தாய்.

யாழினி சிரித்தபடிநான் கல்யாணம் பண்ண நாளாகும்பா. இப்ப அந்தப் பேச்சே பேசாதீங்க?” என்றாள் மகள்.

உன்னோட அத்தை போன் பண்ணிக்கிட்டே இருக்காள். மகன் முத்து கனடாவில் எஞ்சினியராய் இருந்து மாதம் ரெண்டு இலட்சம் வாங்குறானாம். அவனுக்கு உன்னை முடிக்கணும்னு அடிக்கடி அவளும் பேசுறாள், மாப்பிள்ளை இராமசாமியும் பேசுறார்என்றார் தந்தை.

அந்த ஆளை நான் கட்ட முடியாது. அது எப்பவும் தண்ணி போடுற பார்ட்டி. அதோட நான் மாரடிக்க முடியாது. நான் ஒரு டாக்டரைத்தான் கட்டணும்என்றாள் யாழினி சிரித்தபடி.

அப்படியா யாழினி, அவன் தண்ணி போடுறது உனக்கும் தெரிஞ்சு போச்சா?” என்று பலமாய் சிரித்தார் தந்தை.

அதெல்லாம் பார்த்துக்கலாம். நாளைக்கு நாம் டாக்டர் சேவியர் வீட்டுக்குப் போறோம். அவரோட மூணு வயது மகளுக்குப் பிறந்த நாள் விழா. நீங்க ரெடியாய் இருங்க. நாம் போயிட்டு வரலாம்என்று பேச்சை முடித்தாள் யாழினி

(தொடரும்)

news
சிறுகதை
காவல் அன்னை (புதிய தொடர்கதை)

1) பிறந்த நாள் விழா

என்ன யாழினி, அந்தக் கேன்சர் பேசண்டை செக்கப் பண்ணீட்டீங்களா?” என்று கேட்டார் டாக்டர் சேவியர். “பார்த்திட்டேன் டாக்டர், வலி அதிகமாய் இருக்குன்னு கத்தினார். அதற்கு ஊசி போட்டு, மாத்திரை குடுத்திட்டு வந்தேன்என்றாள் யாழினி.

ஓகே, நாலாவது ப்ளோரில் அந்த அல்சர் பேசண்டும் வலிக்குதுன்னு சொன்னார். கொஞ்சம் அவரையும் போய் பார்த்திட்டு வாங்கஎன்றார் சேவியர்.

இந்தா போயிட்டு வாரேன் டாக்டர்என்றாள் யாழினி.

பேசண்டை விசிட் பண்ணிட்டு இங்கே வாங்க, நம்ப இஸ்மாயிலும் இங்கே வருவார், வந்ததும் நாம் பேசலாம்என்றார் சேவியர்.

ஓகே சார், போய் பார்த்திட்டு உங்கள்ட்டேயே திரும்பி வாரேன்என்று பறந்தாள் யாழினி.

சென்னை நுங்கம்பாக்கத்தில்மெரிட் ஆஸ்பத்திரிபேர் பெற்றது. ஆறு மாடியில் இரவு பகலாய் சுறுசுறுப்பாய் இயங்கும் மருத்துவமனை இது. இதில் எல்லா நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படும். அருகிலுள்ள பகுதியிலிருந்து மக்கள் காலை முதல் சிகிச்சைக்காக வரத் தொடங்கி விடுவார்கள்.

இங்கு கேன்சர், இதய நோய், தோல் வியாதி, கண் நோய், பல் மாற்று என்று அனைத்து நோய்களுக்குமான டாக்டர்கள் நிறையப் பேர் உண்டு. மொத்தம் இங்கே எழுபது மருத்துவர்களும் இருநூறு நர்சுகளும் பணியாற்றுகிறார்கள். இதனைத் தொடங்கி நடத்தி வருபவர் டாக்டர் இஸ்மாயில். இவரின் மனைவி டாக்டர் பாத்திமாவும் இங்கேதான் வேலை செய்கிறார்.

இந்த மருத்துவமனை உள்ளேயே கேன்டீன், மருந்துகள் வாங்குவதற்குமெடிக்கல் ஷாப்எல்லாம் உண்டு. சுற்றிலும் உள்ள மரத்தடியில் அமர்ந்து வந்து செல்வோர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.

வாங்க யாழினி, உட்காருங்க. இஸ்மாயில் இப்ப வந்திருவார்என்றார் சேவியர்.

எதுவும் முக்கியமான விசயமா டாக்டர்?” என்றாள் யாழினி சிரித்தபடி.

இஸ்மாயில் வரவும் சொல்றேன். என்னோட பெர்சனல் மேட்டர்தான், ஆஸ்பிடல் சம்பந்தமானது இல்ல யாழினிஎன்று சிரித்தார் சேவியர்.

அப்பொழுது இஸ்மாயில் உள்ளே நுழைந்து விட்டார்.

உட்காருங்க டாக்டர்என்றாள் யாழினி.

என்ன சேவியர், எதற்கு என்னை வரச் சொன்னாய்?” என்று சிரித்தபடி கேட்டார் இஸ்மாயில்.

டீ சாப்பிட்டே பேசலாம்என்று பெல்லை அழுத்தி நர்சிடம் டீ கொண்டு வரச் சொன்னார் சேவியர்.

டீயும் வந்தது. குடித்தபடியேவிசயத்தைச் சொல்லுப்பா சேவியர், வேலை நிறைய இருக்குஎன்றார் டாக்டர் இஸ்மாயில்.

ஏய், இந்தப் பெரிய ஆஸ்பத்திரிக்கு தலைவர், ஓனர்னா வேலை கொஞ்சமாகவா இருக்கும்? வேலை தொடர்ந்து இருந்துக்கிட்டேதான் இருக்கும். நாம் கொஞ்சம்  ப்ரீயா பேசலாமே? என்ன டாக்டர் யாழினிஎன்று சிரித்தார் சேவியர்.

நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா படிச்ச நண்பர்கள். இதிலே நான் என்ன சொல்ல முடியும் டாக்டர்என்றாள் யாழினி.

ஓகே. நான் மேட்டரை சொல்றேன். வேற ஒண்ணுமில்லே, எனது மூணு வயது மகளுக்கு நாளை பிறந்த நாள். நீங்க ரெண்டு பேரும் குடும்பத்தோடு கட்டாயம் வரணும்என்றான் சேவியர்.

தாயில்லாத உன் மகள் பிறந்த நாளைக்கு நாங்க கட்டாயம் வர்றோம், விருந்து சாப்பிடுறோம்என்றார் டாக்டர் இஸ்மாயில்.

ஆமா டாக்டர், நிச்சயம் வர்றோம். மதியம் நான் சாப்பிட்ட பிறகு இங்கே வந்திடுறேன்என்று சிரித்தபடி எழுந்தாள் டாக்டர் யாழினி.

(தொடரும்)

news
சிறுகதை
அழகு

டீச்சர் சீபா ஒரு மாதத்திற்கு முன்புதான் அங்கு ஒரு வாடகை வீட்டிற்குக் குடி வந்திருந்தாள். நல்ல உயரமும், அதற்கேற்ற உடலமைப்பும், நேர்த்தியான உடையலங்காரமும், ‘கண்டிப்பான டீச்சராக இருப்பாளோ?’ என்றே நினைக்க வைக்கும். பள்ளி வேளை முடிந்து வீடு திரும்பிய சீபா டீச்சர், ஓட்டி வந்த அழகிய சிவப்பு நிற ஸ்கூட்டி வீட்டு வாசலில் வந்து நின்றதுதான் தாமதம், எதிரே புல்தரையில் அமர்ந்துகொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த பெண்களின் மொத்தக் கவனமும் அவள்மீது திரும்பியது.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையுடைய புதுமைப் பெண்ணாக்கும் டீச்சரம்மா? அதனால் அந்தப் பார்வை ஓரக் கண்ணால்கூட நம்மைச்  சீண்டாதாக்கும்என எகத்தாளமாகச் சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் சர்மிளா.

கூந்தலுள்ள சீமாட்டி வலக்கொண்டையும் போடுவாள், இடக்கொண்டையும் போடுவாள் என்று அந்தக் காலத்தில் சும்மாவா சொல்லிப்புட்டுப் போனாங்க? ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஹேர்ஸ்டைல், இரகம் இரகமாகக் கட்டும் புடவை வகை, அதற்கேற்ற அணிகலன் மற்றும் ஒப்பனையும்... நம்மள மாதிரியா அஞ்சுக்கும் பத்துக்கும் அடுத்தவங்க கையை எதிர்பார்த்துக்கிட்டு. அவ புருசனும் சம்பாதிக்கிறான், அவளும் சம்பாதிக்கிறா...… அப்புறம் என்ன குறைச்சல்?” எனப் பெருமூச்சு விட்டாள் சரிதா.

ஆனால் உமாஉண்மையிலேயே சீபா டீச்சர் அழகா ஹீரோயின் போலத்தான் இருக்காங்கஎன்றாள்.

என்னடி இது அதிசயமா இருக்கு! பூ விக்கிறவ, இஸ்திரி போடுற ஆளு, வாட்ச்மேன் எல்லாரையும் மயக்குற மாதிரி உன்னையும் மயக்கிட்டா போலஎன்றாள் சரசு.

சரசு சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் பேரன் அடித்த பந்து சீபா வீட்டுக் கண்ணாடி சன்னலைப் பதம் பார்த்து அவள் வீட்டிற்குள் பாய்ந்தது. அவ்வளவுதான். ‘!’ எனக் கத்திய அச்சிறுவன்ஆச்சிஎனக்குப் பயமா இருக்கு; நீங்க போய் எடுத்துத் தாங்கஎன்று விடாமல் தொந்தரவு பண்ண ஆரம்பித்தான்.

இதென்னடி பெரிய வம்பாப் போச்சு?” என்று சொல்லியபடியே அடம்பிடிக்கும் பேரனை இழுத்துக் கொண்டு சீபா வீட்டருகில் சென்றாள் சரசு.

யாரு ஜன்னலை உடைத்தது?” என்று உறுமியபடியே வெளிவருவாள் என நினைத்த சரசுவை, மென்மையான புன்முறுவலுடன் எதிர்கொண்டாள் சீபா.

அழுதுகொண்டிருந்த சிறுவனின் கையில் பந்தைக் கொடுத்துகவனமா விளையாடனும்; நல்லவேளை, ஜன்னல் பக்கத்தில யாராவது நின்றிருந்தால் மண்டை உடைஞ்சிருக்கும்என்று செல்லிக்கொண்டே சரசுவைப் பார்த்து,  “வாங்க அக்கா. உள்ளே வாங்க.… குடிவந்து ஒரு மாதமாகியும் உங்ககிட்ட பேசி அறிமுகப்படுத்திக்க முடியல. காபி சாப்பிட்டுட்டு போகலாம்என்றாள் சீபா.

இல்லமா, பரவாயில்லை…” என்றபடியே அமைதியாக வரவேற்பறையில் அமர்ந்தாள் சரசு.

அப்போது அங்கு வந்த இஸ்திரிக்காரர், “அம்மா இந்தாங்க. ஐயா எங்கேயோ வெளியூருக்குப் போறார்னு அவசரமா துணி தேய்ச்சுத் தரச்சொன்னீங்களே... அதுதான் சீக்கிரமேஇஸ்திரி போட்டாந்தேன்என்று கூறியபடி மேசையில் அயர்ன் பண்ணிய துணிகளை வைத்தபோது, அவர் கையில் அதற்கான கூலியைக் கொடுத்த சீபாஅம்மாவின் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைன்னு கேட்டேல்ல... இந்தா, இத சிகிச்சைக்கு வெச்சுக்கோஎன்றாள்.

கண்களில் நீர் நிரம்பக் கரம் கூப்பியபடி நன்றி சொல்லி வெளியேறினான் அவன்.

அப்போது அங்கு வந்த வாட்ச்மேன், “டீச்சரம்மா, மளிகைச் சாமான் வாங்கச் சொன்னீங்களே... சிட்டையைக் கொடுங்க.… நான் போயி சூப்பர் மார்க்கெட்டில வாங்கிட்டு வாரேன்என்றார்.

இல்லப்பா,… அங்க போகவேண்டாம். தெரு முனையில அண்ணாச்சி கடையிருக்கு, அங்க போய் வாங்குங்க, போதும். நம்மளை நம்பி, நமக்காகவே கடை வைச்சிருக்கிற இவங்களை நாம ஆதரிக்கலேன்னா எப்படி? நீங்க அண்ணாச்சிக் கடையிலேயே வாங்கிட்டு வாங்கஎன்று சொன்னபடியே, “தம்பி, எந்த வகுப்புப் படிக்கிறீங்க? இந்தாங்க சாக்லேட்என்றபடியே கைப்பையிலிருந்த இனிப்பைச் சரசுவின் பேரன் கையில் சீபா கொடுக்க, அச்சம் நீங்க அழகாய் சிரித்தான் அவன்!

அம்மா பூ வாங்கீக்கோங்க! இன்று விலை ஜாஸ்தி. இங்க யாருமே வாங்கலை. நீங்களாவது வாங்குனா போணியாகும்வாசலில் நின்றபடி குரல் கொடுத்தாள் பூ விற்பவள்.

சரி... இரண்டு முழம் தாங்க

வாங்கிய சீபா அதில் ஒரு முழத்தை சரசக்காவின் கையில் கொடுத்தாள்.

மனத்தில் குற்றவுணர்ச்சி கைகளில் நடுக்கமாக, மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் சரசு.

மகராசி நீ நல்லாயிருக்கணும். இந்த வட்டாரத்தில சொன்ன விலைக்குப் பூ வாங்கி அன்னன்னக்கி என் வீட்ல வெளக்கேத்தி வெக்கிற குலசாமி நீ நல்லாயிருக்கணும்என்றாள் பூ விற்பவள்.

இப்படிச் சில்லறை வியாபாரம் செய்யறவங்க கேட்ட காச பேரம் பேசாம கொடுத்திடுவேன் அக்கா. பெரிய பெரிய கடைகள்ல பொருள் வாங்கும்போது நாம பேரம் பேச முடியுமா என்ன?” என்றாள் சீபா.

ஆமாம் டீச்சர், நீங்க சொல்றது சரிதான்என்று கூறியவளாய், “அப்ப நான் வர்றேன்,…ரொம்ப நன்றிஎன்றாள்.…

எதற்கு சரசக்கா?”

எல்லாத்துக்கும்தான்என்று சொல்லியபடியே பேரனுடன் அவள் திரும்பியபோது சரசுவை எதிர்பாத்தபடி ஆவலுடன் காத்திருந்த பெண்களில் ஒருத்தி, “சரசு அக்கா,… சீபா டீச்சர் பந்தை எடுத்துக் கொடுத்தாங்களா?” எனக் கேட்க, “ம்... எம் பேரனுக்கும் பந்து கெடச்சுது, எனக்கும் நல்ல பாடம் கிடைச்சுதுஎன்றாள்.

அப்போதுஒண்ணும் புரியலையே?” என்று கேட்ட அவர்களிடம், “சீபா டீச்சர் தோற்றத்திலேயும் அழகு, உள்ளத்திலேயும் அழகுஎன்றாள் சரசு!

news
சிறுகதை
கனவு (கிறிஸ்துமஸ் சிறுகதை)

பங்குப் பேரவையிலேயே பரபாசை வெச்சிருக்கீங்க. இது கொஞ்சங்கூட நல்லால்ல ஃபாதர்பொங்கியெழுந்தான் அந்தோணி.

தீவிரவாதி சீமோனும் இருக்கான்போனசாகப் போட்டுக் கொடுத்தான் மாசிலாமணி.

பர்னபாசைத்தான்பரபாஸ்என்கிறார்கள் என்பது பங்குத்தந்தைக்குப் புரிந்தது. கிறிஸ்துமஸ் வந்தாலே அவருக்குத் தலைவலி தொடங்கிவிடும்.

உங்க பிரச்சினை எப்பத்தான் தீரும்? அவனும் ஆபிரகாமின் பிள்ளைதானே? எத்தனை தடவ விவிலியம் படிச்சிருக்கீங்க? எத்தனை மறையுரை கேட்டிருக்கீங்க? யூதன்னும் கிடையாது, கிரேக்கன்னும் கிடையாது. அடிமை, உரிமைக் குடிமகன்னு எதுவுமே கிடையாது, நாமெல்லாம் ஒண்ணுன்னு... ஏய்யா அடிச்சிக்கிறீங்க?”

சாமி, இதெல்லாம் கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்குது. நடைமுறைக்கு ஒத்துவராது. காலங் காலமா இருக்கற வழக்கத்தை மாத்த முடியாது. குழந்தை ஏசு சுரூபத்தை அவன் ஆளுக தொட்டா கொலை விழும்.”

பங்குச் சாமியாருக்குத் தலை கிறுகிறுத்தது.

மாசில்லாக் குழந்தைகள் திருநாளுக்கு முன்னாடியே குழந்தை ஏசுவைக் கொன்னுப்போடுவானுக போலிருக்குதேஎனக் கவலையோடு கலங்கினார்.

இத பாருங்கய்யா, தேவாலயத்தையும், தேர்த் திருவிழாவையும் வெச்சிட்டு கலவரம் பண்ணாதீங்க. பூசைக்குப் போறதும், சப்பரம் தூக்கறதும் மட்டுமில்ல கிறித்தவம். பகை, வெறுப்பு ஆதிக்கத்தை விட்டுட்டு எல்லாரையும் அன்பால அரவணைச்சுப் போற வாழ்க்கை முறைதான் கிறித்தவம். பலியைவிட இரக்கம்தாய்யா பெரிசு! சமாதானமா நடத்தறதா இருந்தா தேரை எடுங்க. இல்லேன்னா விடுங்க. மத்தவங்க முன்னாடி வெளிச்சமா இல்லாட்டிக்கூடப் பரவால்லே, இருட்டா இருக்காதீங்க.”

அதெப்படி சாமி நீங்க சொல்லுவீங்க? காலங் காலமா இருந்த நடைமுறைப்படி குழந்தை ஏசு சப்பரத்தை வழக்கம்போல நாங்கதான் தூக்குவோம். அவனுக தொட்டான்னா கையக் கால...”

மொதல்ல என்னய வெட்டுங்கடா... கத்திய எடுக்கறவன் கத்திலதான்டா சாவான். காட்டு மிருகங்க மாதிரி கடிச்சு முழுங்கறத நிறுத்தலேன்னா அழிஞ்சு போயிருவீங்கடா... பைபிள்ல அப்படித்தான் எழுதியிருக்கு.”

பவுலடியாரின் ஆவி புகுந்ததைப்போல பங்குச் சாமியார் ஆவேசமானார். மூச்சு வாங்கி, இருக்கையில் அமர்ந்த அவருடன் பேச விரும்பாமல் அந்தோணியும் மாசிலாமணியும் வெளியேறினர்.

பைத்தியக்காரர்கள்; யூதாசாக இருந்துகொண்டு சகோதரனை வெறுக்கும் இவர்கள் பரபாசைப் பற்றிப் பேசுகிறார்கள்!’ பங்குத்தந்தை மனத்தில் நினைத்துக்கொண்டார்.

கிறிஸ்துமஸ் நாளின் மாலைப்பொழுது சப்பரத்தில் வைப்பதற்காகத் தயார் செய்யப்பட்ட குழந்தை ஏசு சுரூபத்தைத் தூக்க வாட்டசாட்டமான திருத்தொண்டர் ஒருவரைப் பங்குத்தந்தை ஏற்பாடு செய்திருந்தார். ஆலய வளாகம் பரபரப்பும், முணுமுணுப்புமாய்க் காட்சியளித்தது.

திடீரென்று எங்கிருந்து வந்தானோ அந்தோணி... குழந்தை ஏசு சுரூபத்தைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.

எவனாவது தொட்டா கொலை விழும் - கத்தினான் சாராயத்தில் குளித்திருந்த மாசிலாமணி.

பின்னால் ஒருதரப்புக் கூட்டம் அவனைத் துரத்த, மற்றொரு தரப்பு அவர்களைத் தாக்க ஆலய வளாகம் கலவரக் களமாய் மாறியது.

உச்சக்கட்டமாக... சிமியோனும் பர்னபாசும் அந்தோணியின் கையிலிருந்த சுரூபத்தைப் பிடுங்க முயற்சிக்க, குழந்தை ஏசுவின் கைகள் ஒடிந்து ஆளுக்கொன்றாக அவர்கள் கைகளில் சிக்க, கைகளில்லாத சுரூபத்தைக் கண்ட கூட்டத்தின் ஒரு பகுதி கதறி அழுதது.

கலவரம் பெரிதாக, காவல்துறை பலரையும் கைது செய்து அழைத்துப்போக சப்பர ஊர்வலம் நின்றே போனது.

மூர்ச்சையான பங்குத்தந்தைக்குச் சிகிச்சையளித்து, தூக்க மாத்திரையையும் கொடுத்துச் சென்றிருந்தார் மருத்துவர். விலா எலும்பு பிடுங்கப்பட்டதுகூடத் தெரியாமல் தூங்கிய ஆதாமைப்போல அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார் பங்குத்தந்தை.

எந்த நினைவுமில்லாத தூக்கத்தில் கனவொன்று வந்தது. கையில்லாத குழந்தை ஏசு கண்ணீருடன்...!

நண்பனே, நான் பிறந்த போதும் மனிதர்கள் இடம் தரவில்லை. மாட்டுக்கொட்டகைதான் இடம் தந்தது. வாழும்போதும் தலைசாய்க்க இடமில்லாத நிலையில்தானே நான் இருந்தேன். ‘அவர் வளர வேண்டும், நானோ குறைய வேண்டும்என்ற எண்ணம் இங்கு எவனுக்கும் இல்லை. ‘நான் வளர வேண்டும், அவர் எப்படிப் போனால் என்ன?’ என்ற எண்ணம்தான் இங்கே மேலோங்கி இருக்கிறது. சுயநலமும் சாதியமும் ஆதிக்கமும் சமாதானமின்மையும் இருக்கும் இடத்தில் நான் எப்படி இருக்க முடியும்? தன்னையே மறுத்து வாழும் இதயம் எங்கேயாவது இருந்தால் சொல்... அதுவரை ஏதாவதொரு மாட்டுக்கொட்டகையிலேயே இருப்பேன்... என்னைத் தேட வேண்டாம்...”

கனவு கலைந்துவிருட்டென்று எழுந்தார் பங்குத்தந்தை. அதன்பின் தூக்கம் வரவில்லை.

சாதியமும் ஆதிக்கமும் வெறுப்புணர்வும் இல்லாத திரு அவைதானே அவர் கனவு? என் கனவும் அதுதானே? கனவு பலிக்குமா?’

காலையில் எழுந்த பங்குத்தந்தை முதல் வேலையாக ஆலயத்தின் பின்புற அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கைகளில்லாத சுரூபத்தைப் பார்க்கப் போனார்.

உண்மையிலேயே சுரூபம் அங்கு இல்லை!