news
ஆன்மிகம்
ஸ்டீபன் ஹாக்கிங் திரு அவை (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 22)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

அகஸ்டின்:தந்தையே, திருமுழுக்கு அருளடையாளம் நமக்கு வெவ்வேறு வகையான உறவுக் கொடைகளை வழங்குகிறது என்பதைச் சிந்தித்து வருகிறோம். இதன் பின்னணியில் திருமுழுக்கு எவ்வாறு நம்மைத் தூய ஆவியின் ஆலயமாக மாற்றுகிறது என்பதைக் குறித்துக் கூறமுடியுமா?”

அருள்பணி:ஒரு கட்டடம் என்பது கற்களால் கட்டப்படுவது. அக்கட்டடத்திற்குள்ளே யார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அக்கட்டடத்தின் பெயர் மாற்றப்படும். ஒரு கட்டடத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள் தங்கியிருந்தால், அக்கட்டடம்விடுதிஎன்று அழைக்கப்படும். ஒரு கட்டடத்தில் கணவன், மனைவி என்று ஒருவரையொருவர் அன்பு செய்பவர்கள் தங்கியிருந்தால் அதுவீடுஎன்று அழைக்கப்படும். ஒரு கட்டடத்தில் நாட்டை அரண்போல இருந்து பாதுகாத்து வருகின்ற அரசன் இருந்தால் அதுஅரண்மனைஎன்று அழைக்கப்படும். ஒரு கட்டடத்தில் கடவுளின் பிரசன்னம் தங்கியிருந்தால் அதுகோவில்என்றும், ‘ஆலயம்என்றும் அழைக்கப்படும். ஒருவகையில் பார்த்தால் இந்த உலகின் ஒரே அரசர் கடவுள் மட்டுமே! ‘கோன்என்றால்அரசன்என்று பொருள். எனவே, இவ்வுலகின் அரசராகிய கடவுள் இருக்கின்ற இடமே கோவில் (கோன்+இல்) என்று அழைக்கப்படுகிறது.”

அன்புச்செல்வன்:மனிதர்களாகிய நம் உடலில் தூய ஆவி தங்குவதன் காரணமாக நாமும் அவரது கோவிலாக இருக்கிறோம் என்பதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ‘நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ (1கொரி 3:16) என்கிறார் புனித பவுல். அவரே தொடர்ந்து, ‘உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?’ (1கொரி 6: 19) என்று எழுதுகிறார்.”

மார்த்தா: தூய ஆவியார் திருமுழுக்கு அருளடையாளத்தின்போது நம்மீது இறங்கி வருகிறார் என்பதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது: இயேசு திருமுழுக்குப் பெற்றபோது அவர்மீது தூய ஆவி இறங்கி வந்தார் (மத் 3:16). கொர்னேலியுவும் அவரது குடும்பத்தாரும் திருமுழுக்குப் பெற்றபோது, தூய ஆவியைப் பெற்றுக்கொண்டனர் (திப 10-ஆம் பிரிவு). மேலும், இயேசுவின் திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கிலிருந்து வித்தியாசமானது. திருமுழுக்கு யோவானின் திருமுழுக்குத் தண்ணீரால் கொடுக்கப்பட்டது. அது மன மாற்றத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டது. இயேசுவின் திருமுழுக்கு தூய ஆவியைக் கொடையாக வழங்கும் திருமுழுக்கு (திப 1: 2).”

அருள்பணி:மனிதர்களாகிய நமக்குள்ளேயே கடவுளின் பிரசன்னம் இருக்கின்றது என்ற சிந்தனையைக் கிறித்தவம் அதிகமாக வலியுறுத்தினாலும், இத்தகைய சிந்தனை மற்ற ஆன்மிக மரபுகளிலும் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்த சிவவாக்கிய சித்தர் இவ்வாறு கூறுகின்றார்

கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!’

அதேபோல திருமூலரும், ‘கூடிய நெஞ்சத்து கோயிலாகக் கொள்வனேஎன்று சொல்கிறார்.”

அகஸ்டின்:தந்தையே! எனக்கு ஒரு கேள்வி எழும்புகிறது. தூய ஆவியின் பிரசன்னம் நமக்குள் இருப்பதன் காரணமாக நாமே கோவிலாகத்தான் இருக்கின்றோம். எனவே, நாம் இருக்கின்ற இடத்திலே இருந்துகொண்டு கடவுளைத் தியானிக்கவும் வழிபடவும் செய்யலாமே! ‘ஏன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்?’ இது எனது கேள்வி மட்டுமல்ல, என்னைப் போன்ற சில இளைஞர்கள் ‘New age Spirituality’ என்று சொல்லப்படுகின்ற நவீனவகை ஆன்மிகத்தின் பின்னணியில் இதுபோன்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.”

அருள்பணி: ஏறத்தாழ இதேபோன்ற ஒரு கேள்வியை ஒரு துறவு மடத்தின் தலைவராக இருந்த தலைமைத் துறவியிடம் ஓர் இளம் துறவி கேட்டாராம். அதாவதுநானே கோவிலாக இருக்கும்போது, நான் ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்?’ என்ற கேள்வி! அப்போது அந்தத் தலைமைத் துறவி ஓர் எரிகின்ற மெழுகுதிரியை இளம் துறவியிடம் கொடுத்து, திறந்த வெளியில் பிடித்திருக்கச் சொன்னார். திரி காற்றினால் அணைந்து போனது. அதே திரியை மீண்டும் ஏற்றி ஒரு கட்டடத்திற்குள் பிடிக்கச் சொன்னார். இப்போது மெழுகுதிரி அணையவில்லை. தலைமைத் துறவி இளம் துறவியிடம், ‘கடவுள் நமக்குள் இருந்தாலும், அவரை உணர்வதற்கு ஏற்ற சூழல் எல்லா இடங்களிலும் இருந்து விடுவதில்லை. இத்தகைய தகுந்த சூழலை ஆலயம் வழங்குகிறதுஎன்று சொன்னாராம்.”

மார்த்தா: தந்தையே, திருமுழுக்கு நமக்கு வழங்கும் அடுத்த கொடைதிரு அவையின் உறுப்பினர்என்பது! அது குறித்து...?”

அருள்பணி:மனிதர்களாகிய நாம் உறவி(வா)ல் உருவாவதோடு, உறவிற்காகவே படைக்கப்பட்டிருக்கிறோம். உறவிற்காக ஏங்குவதும், உறவை நோக்கிப் பயணிப்பதும் மானுட வாழ்வின் அடிப்படைத் தன்மை. உறவிற்காக ஏங்கும் நாம், உறவை ஏற்படுத்தி, அதில் வளர்வதற்காக நல்ல தளத்தை நமக்கு அமைத்துக் கொடுப்பது திரு அவை! உதாரணமாக, நமது பங்குத் திரு அவையும், அதில் உள்ள பல்வேறு வகையான பக்தசபைகளும், நாம் உறவில் வளர்வதற்கான ஏற்ற இடம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், திரு அவை என்பது தங்களிடையே ஆழமான உறவு கொண்ட இறைமக்களின் கூட்டம் என்பதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.”

அன்புச்செல்வன்:தொடக்கக் கிறித்தவர்களின் இணைந்த, இயைந்த வாழ்வு (திப 2 மற்றும் 4-ஆம் பிரிவுகள்), ஒற்றுமை கொரிந்து நகர கிறித்தவர்களிடம் இல்லாததை புனித பவுல் கண்டித்தது (1கொரி 11-ஆம் பிரிவு), கிறித்தவ வாழ்வின் அடிப்படை நெறியாக அன்பை அவர் சுட்டிக்காட்டுவது (1கொரி 13-ஆம் பிரிவு)... இவை அனைத்துமே திரு அவையின் உறவு நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், யூதர்-கிரேக்கர், அடிமைகள்-உரிமைக் குடிமக்கள் போன்ற மேலோட்டமான வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் (1கொரி 12:13), திரு அவை என்கின்ற ஒரே உடலின் உறுப்புகளாக நாம் வாழ்வதற்கான அழைப்பையும் புனித பவுல் தருகிறார்.”

அருள்பணி:திரு அவையில் பல்வேறு வகையான மாற்றங்களைக் கொண்டு வந்த ஒரு முக்கியமான நிகழ்வு இரண்டாம் வத்திக்கான் சங்கம்! இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன்புவரை திரு அவை ஓர் அமைப்பாகக் (Institution) கருதப்பட்டது. இரண்டாம் வத்திக்கான் சங்கமோ திரு அவை ஓர் இறைமக்களின் குழுமம் (Community of people of God) என்ற கருத்தாக்கத்திற்கு அழுத்தம் கொடுத்தது. திரு அவையின் நிறுவனத்தன்மையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அதன் உறவுத்தன்மையைத் தூக்கிப்பிடித்தது இரண்டாம் வத்திக்கான் சங்கம். திருமுழுக்குப் பெறும் ஒரு நபர் இத்தகைய ஓர் உறவுக் கூட்டத்தின் உறுப்பினராக இணைகின்றார்.”

மார்த்தா:தந்தையே, உறுப்பினர் என்கின்ற வார்த்தை ஓர் அற்புதமான வார்த்தை. அதுஉறுப்புஎன்கின்ற வார்த்தையைத் தன்னகத்தே கொண்டதுஉடலில் ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தன்மை உண்டு. எனினும், மற்ற உறுப்புகளோடு இணைந்திருக்கும்போது மட்டுமே அந்த உறுப்பு செயல்பட முடியும். ‘உடல் ஒன்றே! உறுப்புகள் பல (1கொரி 12:12-30) என்கிறார் புனித பவுல். இங்கு உடல் உறுப்புகள் தனித்தன்மையோடும், அதேவேளையில் ஒன்றையொன்று சார்ந்தும் செயல்படுவதை புனித பவுல் உதாரணமாகக் காட்டி, திரு அவையின் உறுப்பினர்களும் அவ்வாறே செயல்படவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். திரு அவையாகிய உடலின் தலையாக இருப்பவர் கிறிஸ்துவே (எபே 5: 23) என்ற கருத்தையும் முன்வைக்கின்றார்.”

அருள்பணி:இன்றைய திரு அவையானது ஸ்டீபன் ஹாக்கிங்  திரு அவையாக (Stephen hawking Church) இருக்கின்றது. ஸ்டீபன் ஹாக்கிங் என்பவர் உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர். அண்மையில்தான் அவர் இறந்தார். அவர் தலை மிகவும் சிறப்பாகச் செயல்படக்கூடியது. விண்வெளி இரகசியங்களை ஆராயக்கூடியது. ஆனால், அவரது ஒட்டுமொத்த உடலோ செயலற்றதாக இருந்தது. 20 வயதில் வந்த ஒரு நோயின் காரணமாகத் தலையைத் தவிர உடலின் எல்லா உறுப்புகளும் செயலற்றதாக மாறின. 20 வயது முதல் 76 வயது வரை அவர் சக்கர நாற்காலியில்தான் இருந்தார். திரு அவையாகிய உடலின் தலையாகிய கிறிஸ்து இன்றுவரை சிறப்பாகச் செயல்படுகிறார். உடலாகிய நாமோ சாதியம், சடங்காச்சாரம் போன்றவற்றால் முடக்கப்பட்டுக் கிடக்கின்றோம். திரு அவையின் உறுப்பினர்களாகிய நாம் நம் மேன்மையை உணர்ந்து கிறிஸ்துவோடு இணைந்து செயல்படக்கூடிய உயிரோட்டம் உள்ள உடலாக மாறுவது அவசியம்.

(தொடரும்)

news
ஆன்மிகம்
தனிமை வரமா? சாபமா?

பூமியின் முதல் பதிவு தனிமை!

வாழ்வின் இறுதிப் பதிவும் தனிமை!

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் உறவுகள் மலர்கின்றன; உன்னதம் பிறக்கின்றது. தனிமை வேரறுக்கப்பட்டு, பிறரோடு இணைந்து பயணிக்கும் பேரின்பம் கிடைக்கிறது. பேரின்பம் கிடைத்துவிட்டதே என்று ஆனந்தப் பரவசம் அடைந்தாலும், அன்றாட வாழ்வில் அவ்வப்போது இந்தத் தனிமை தொட்டுவிட்டுச் செல்லும் அனல் காற்றுபோல இதயத்தை  வருடித்தான் செல்கிறது.

உறவுகளால் கைவிடப்படும்போது 

உணர்வுகள் மதிக்கப்படாதபோது 

விரக்தியின் விளிம்பில் தள்ளப்படும்போது 

தோல்வியில் கலங்கி நிற்கும்போது 

குடும்ப வாழ்வு சீர்குலையும்போது

கண்டுகொள்ளப்படாமை அதிகரிக்கும்போது 

கருத்துகள் மதிக்கப்படாதபோது

எல்லாராலும் வெறுக்கப்படும்போது 

பிறப்பால் ஒதுக்கப்படும்போது

கூட்டத்தின் மத்தியில் அவமானப்படும்போது

அன்பை அலட்சியப்படுத்தும்போது        

குழுவாகச் செய்யும் பொறுப்புகளைத்

தனியாகச் செய்யும் சூழல் நேரிடும்போது

உடல் நோயில் உறவுகள் உடனிருக்காதபோது...! 

இந்தத் தனிமை உயிர்க்கொல்லியாக இதயத்தை ஊடுருவி, உயிரோடு மனித மனங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தனிமை வரமா? சாபமா? என்பது அவரவர் மனநிலையை, சூழ்நிலையை, அனுபவத்தைப் பொறுத்து அமைகிறது. பிரச்சினைகளை எப்படி உற்றுநோக்குகிறோம்? மனப்பக்குவத்துடன் அதை எப்படிக் கையாள்கிறோம்? என்பதன் அடிப்படையில்தான் வரமும் சாபமும் நம் கண்முன் வைக்கப்படுகின்றன.

தனிமை தந்த வலிகள்

மனிதன் தனியாய் இருப்பது நல்லது அன்றுஎன்று மனிதனுக்குத் துணையாகப் பெண்ணைப் படைத்தார் இறைவன். ‘இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து பயணிப்போம்என்று அவர்கள் கொடுத்த திருமண வாக்குறுதி சில குடும்பங்களில் இறுதிவரை நிலைத்திருப்பதில்லை. ‘நான்என்ற ஆணவமும், விட்டுக்கொடுக்காத மனநிலையும், பொருளாதாரப் பின்னடைவுகளும், தூய அன்பற்ற நிலையும், பிரமாணிக்கமின்மையும், தரக்குறைவான வார்த்தைகளும் குடும்ப வாழ்வைக் கேள்விக்குறியாக்கி விடுகின்றன. விளைவு - தனிமை வாழ்வு! கணவனால், மனைவியால், பிள்ளைகளால், கைவிடப்பட்ட நிலை. முதியோர் இல்லங்களிலும் தெருவோரங்களிலும் வாழ்கின்ற அவல நிலைஇதற்கு என்ன காரணம்? சற்று ஆழ்ந்து சிந்தித்தால், ‘நான் பிறரால் அன்பு செய்யப்படவில்லைஎன்ற எண்ணமே மேலோங்கி நிற்கின்றது. தனிமை தந்த வலிகளை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.

தனிமை தந்த பாடங்கள்

சில நேரங்களில் தனிமை வலியைத் தந்தாலும் சுயசிந்தனை, சுயஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, சுய வளர்ச்சி, சுயஉணர்தல் ஆகியவற்றின் தளமாகத் தனிமை உணரப்படுகிறது. நம்மை நாம் புரிந்துகொள்வதற்கும் நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? என்ற தெளிவு பெறுவதற்கும், மன அமைதியுடன் வாழ்வதற்கும், உறவுகளைப் புரிந்துகொள்வதற்கும், உறவின் மகத்துவம் உணர்வதற்கும், தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கும், படைப்பாற்றல் திறனுடன் செயல்படுவதற்கும் இந்தத் தனிமை நமக்குப் பல பாடங்களைக் கற்றுத்தருகின்றன.

தாவீது அரசர் சவுல் அரசனின் பைத்தியக்காரத்தனத்தால் தனிமைக்கூண்டில் சிக்கியப்போது மனைவியை இழந்தார், நண்பனை இழந்தார், உறவினர்களை இழந்தார், படை வீரர்களை இழந்தார். அனைத்தும் இழந்த நிலையில் தனிமையாக நாட்டை விட்டே தப்பி ஓடினார். ஆயினும், மனம் தளரவில்லை. தனிமையின் பாடங்களைக் கற்றுக்கொண்டு இறைவன்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டுஇறைவன் என்னைக் காப்பாற்றுவார்; மீண்டும் இந்த அரசாட்சியில் என்னை நிலை நிறுத்துவார்என்ற நம்பிக்கை உணர்வுடன் தாவீது செயல்பட்டார்; வெற்றியும் பெற்றார். ‘தனிமைப் படுத்தப்பட்டோம்என்று தயங்கத் தேவையில்லை. தனிமையிலும் இனிமை காணலாம். தனிமை சாபம் அல்ல; அவற்றை வரமாக மாற்றியவர்களும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இயேசுவின் தனிமை

பாலைவனத் தனிமை

கருக்கலில் தனிமை

விடியற்காலத் தனிமை

இயற்கையின் எழில் அழகில் தனிமை

மலை சூழ்ந்த காடுகளில் தனிமை...

எனத் தொடர்கிறது. பாலைவனப் பயணம் மிகக் கொடியது. மனித வாடையே இல்லாத இந்தப் பாலைவனத் தனிமையை இயேசு ஏன் விரும்பினார்?

இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகள் பாலைவனப் பயணத்தில் தம்மைத் தூய்மையாக்கி, பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்தை அடைகிறார்கள்.

இயேசுவும் தம் பணிவாழ்வின் அடையாளமாக மானுடச் சமூகத்தைத் தூய்மையாக்க, பாவ வாழ்வில் இருந்து மக்களைப் பாதுகாக்க, யாவே இறைவனை நோக்கி மக்களை வழிநடத்த பாலைநிலத்துக்குச் செல்கிறார் (மாற்கு 1:13; மத் 14:13).

சமூகப்பணி, மீட்புப்பணி, போதிக்கும் பணியின் முன் அடையாளமாகப் பாலைவனத் தனிமையை இயேசு தேடிச்சென்றாலும், அங்கும் மூன்று ஆன்மிக எதிரிகளைச் சந்திக்கின்றார். அவை உடல், உலகம், சாத்தான். ஆசையைத் தூண்டுதல் சாத்தானின் வேலை. “இந்தக் கல்லை அப்பமாக மாற்று; நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; நீ நெடுஞ்சாண் கிடையாக என்னை விழுந்து வணங்கினால் இந்த அரசை உனக்கு உரிமையாகத் தருவேன்என்ற மூன்று ஆன்மிக எதிரிகளை இயேசு சந்திக்கின்றார் (மத் 4:3-8). இங்கு இயேசு உலகப் பசிக்கும் உடல் பசிக்கும் இடம் கொடுக்கவில்லை. ஆன்மிகப் பசிக்கு முதலிடம் கொடுத்து ஆன்மிக எதிரிகளை வென்றெடுக்கின்றார். அவர் எடுத்த முதல் அடியே இறையாட்சியின் வெற்றிக்கான அடித்தளமாக அமைகிறது. இயேசுவின் தனிமையில் ஆன்மிக எதிரிகளை வென்றெடுக்க நாம் தயாரா?  

உயர் மலையின் உன்னதத் தனிமை

மலை - இறைப்பிரசன்னத்தின் அடையாளம். இறைவன் உயர் மலையில் வீற்றிருந்து மக்களைக் கண்ணோக்குகிறார் என இஸ்ரயேல் மக்கள் நம்பினர். சீயோன் மலையில்தான் மனித ஒழுக்கங்களைச் சீர்படுத்தும் பத்துக்கட்டளைகள் யாவே இறைவனால் மோசேவிடம் கொடுக்கப்பட்டன. மலை இறையுறவின் சங்கமம். எலியா இறைவாக்கினர் கார்மேல் மலையில் யாவேதாம் உன்னத இறைவன் என்பதை எண்பித்துக்காட்டுகிறார். இறைமகன் இயேசுவும் உன்னத இறைவனின் உறைவிடமாம் மலையை நோக்கி தனிமையான பயணத்தை மேற்கொண்டு செபிக்கிறார். மலைமீது ஏறி அமர்ந்து பேறு பெற்றவர்கள் யார்? என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இயேசுவின் தனிமையில் ஞானம் பிறந்தது. சுய பரிசோதனைக்கான தெளிவு கிடைத்தது. இறைவனின் மீட்புத் திட்டத்திற்கு எதிர்வரும் சவால்களைத் துணிவோடு எதிர்கொள்ள மன வலிமை கிடைத்தது. மக்களின் உடல் நோய்களைக் குணமாக்கக்கூடிய ஆற்றல் கிடைத்தது. ஆழ்ந்த இறையனுபவத்தின் வழியாகக் கடவுளின் அருள் கிடைத்தது. “இவரே என் அன்பார்ந்த மகன்என இறைவனே சான்றுபகரும் பேரானந்தம் கிடைத்தது.

ஆகவே, இயேசுவின் தனிமையை நமதாக்குவோம். நாமும் படைப்பாற்றல் திறன் மிக்கவர்களாக, புதுமைச் சிந்தனைகளை வரவேற்பவர்களாக, சுய அறிவும் சுயதெளிவும் கொண்டுஇப்படித்தான் வாழ வேண்டும்என்ற கொள்கை உணர்வுடன் செயல்படுபவர்களாக மாறுவோம்

இறுதியாக.... 

தனிமை நமக்கு மனச்சிதைவை உண்டாக்கும்போது, நம் மனித ஆளுமையைப் பாதிக்கும்போது, மனஅழுத்தம் குடிகொள்ளும்போது, கைவிடப்பட்ட நிலை உருவாகும்போது, ‘வாழத் தகுதியற்றவர்கள்என்ற எண்ணம் தோன்றும்போது நாம் சோர்ந்துபோக வேண்டாம். இயேசுவின் தனிமையை நமதாக்குவோம். நம் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவோம். தனிமையை வரமாகப் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வோம். சத்தங்களற்ற நிசப்தத்தின் சிறப்பைக் கண்டுணர்வோம். மெல்லிய தென்றல் காற்றில் இறைவனோடு உரையாடுவோம். தனிசெபத்தில் ஆன்மிக இறையனுபவம் பெறுவோம். தனிமையைச் சாபமாக அல்ல, வரமாகப் பார்ப்போம்!

news
ஆன்மிகம்
பொதுநிலையினரும் சமபொறுப்புள்ள பணியாளர்களே! (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 06)

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குப் பிற்பட்ட காலம்பொதுநிலையினரின் பொற்காலம்என அழைக்கப்படுவது உண்டு. ஏனெனில், சங்கம் அவர்களது சமமான மாண்பையும் இறையாட்சிப் பணிப் பொறுப்பையும் உறுதியாக எடுத்துரைத்தது. அதன் அறிவுறுத்தலுக்கேற்ப மறைமாவட்ட மற்றும் பங்கு அளவில் அருள்பணிப் பேரவைகள், நிதிக் குழுக்கள் என்பனவற்றில் பொதுநிலையினர் இடம்பெற்றனர். தலைமைப் பொறுப்புகளுக்கு வழிகாட்டப்பட்டனர். அத்தகைய மாற்றத்தில் மலர்ந்ததுதான்கூட்டொருங்கியக்கத் திரு அவை.’ இக்கருத்தை மாமன்றத்தின் மைய ஆய்வுப் பொருளாக வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அது மட்டுமின்றி, பொதுநிலையினரும் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் மாமன்றக் கலந்துரையாடல்கள் அடிமட்டத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும் என்றார். அனைத்திற்கும் மேலாக, ஆயர் மாமன்றத்தில் முதன்முதலாகப் பொதுநிலையினர் சிலரும் வாக்குரிமையுடன் பங்கேற்க வழிசெய்தார். இதனால் மாமன்றமும் பொதுநிலையினரைப் பற்றி அதிகமாகவும் ஆழமாகவும் கலந்தாய்வு செய்துள்ளது.

உலகுசார் துறைகளை ஊடுருவி உருமாற்றுபவர்கள்

திரு அவையின் மறைத்தூதுப் பணி அதன் அனைத்து உறுப்பினர்களையும் சார்ந்தது. புகுமுக அருளடையாளங்கள் வழியாக அப்பணிப் பொறுப்பு அதன் உறுப்பினர் அனைவருக்கும் தரப்பட்டுள்ளது. “திரு அவையின் பணி திருமுழுக்குப் பெற்ற அனைவருக்கும் உரியது (இஅ 66). அப்பணியை ஆற்ற இருபால் பொதுநிலையினர், துறவியர், திருப்பணியாளர்கள் என அனைவரும் பல்வேறு அருங்கொடைகளையும் அழைத்தல்களையும் பெற்றுள்ளனர்

தூய ஆவியார் அவர்களுக்குத் தந்துள்ள கொடைகளால் பொதுநிலையினரும் அதில் உயிரோட்டமுடன் பங்களிப்புச் செய்ய அழைக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால், சமூகத்தின் அனைத்துத் துறைகளும், அன்றாட வாழ்வுச் சூழமைவுகளும் அவர்களுக்கே சிறப்பான பணித்தளங்கள். “பொதுநிலைப் பெண்கள் மற்றும் ஆண்களின் முதல் கடமை நற்செய்தி உளப்பாங்குடன் உலகுசார் துறைகளை ஊடுருவி அவற்றை உருமாற்றுவதே (2-ஆம் வத். திரு அவை 31,33; பொதுநிலையினர் 5-7) (இஅ 66). அதிலும் குறிப்பாக, இன்றைய கணினிக் கலாச்சாரம், இளைஞர் பணி, தொழில்துறை, அரசியல், கலைகள் மற்றும் பண்பாடு, அறிவியல் ஆராய்ச்சி, கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுவாழ்வில் பங்கேற்பு என்பனவற்றில் அவர்களே அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களே அத்துறைகளில் திரு அவையை உடனிருக்கச் செய்பவர்களும் நற்செய்தி அறிவிப்பவர்களும் ஆவர்.

குடும்பமே முதல் பணித்தளம்

பொதுநிலையினர் நற்செய்திப் பணியாற்ற வேண்டிய முதல் தளம் தங்கள் குடும்பமே. திருமணம் எனும் அருளடையாளத்தால் கிறித்தவக் குடும்பம் உருவெடுக்கிறது. அந்த அருளடையாளம்தனிப்பட்ட ஒரு மறைத்தூதுப் பணியை ஒப்படைக்கிறது. அப்பணி குடும்ப வாழ்வு, திரு அவையைக் கட்டியெழுப்புதல், சமூக ஈடுபாடு என்பனவற்றைச் சார்ந்தது (இஅ 64). கிறித்தவக் குழுமத்தின் அடித்தளம் குடும்பமே. அது அன்புறவு, அருள்வாழ்வு என்பனவற்றின் ஒன்றியம். அதுவே நம்பிக்கை உருவாக்கம்; கிறித்தவ வாழ்க்கைமுறை என்பனவற்றின் முதல் அனுபவமாகவும் முக்கிய அறிமுகமாகவும் திகழ்வது. அங்கு நம்பிக்கையில் வாழ்ந்து, பகிரும் பெற்றோரும் தாத்தா-பாட்டியருமே முதல் மறைத்தூதுப் பணியாளர்கள்.

மேலும், “கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கு அவசியமான அடிப்படை நடைமுறைகளைக் குடும்பங்களில் நாம் அனுபவத்தில் கற்றுக்கொள்கிறோம். குடும்பங்கள் முறிவுற்ற நிலையையும் துன்பங்களையும் அனுபவித்தாலும், அன்பு, நம்பிக்கை, ஒப்புரவு, மன்னிப்பு மற்றும் புரிதல் என்பனவற்றை நாம் கற்றுக்கொள்ளும் இடங்களாக அவை திகழ்கின்றன. ‘நாம்எனும் உறவின் வழியாகக் குடும்பம் மக்களை மனிதமயமாக்குகிறது; அதேவேளையில், ஒவ்வொருவருடைய முறையான வேறுபாடுளையும் அது வளர்த்தெடுக்கிறதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் (இஅ 35).

பொதுநிலைத் திருப்பணியாளர்கள்

பொதுநிலையினர் பெற்றுள்ள பல்வகை அருங்கொடைகள் தூய ஆவியார் திரு அவைக்கு வழங்கியுள்ள தனிச்சிறப்பான வரங்கள் ஆகும். அவற்றை இனங்கண்டு, ஏற்று, முழுமையாகப் பாராட்டி, ஊக்கப்படுத்திப் பயன்படுத்துவது அவசியம். “திருக்குழுமமும், அதனை வழிநடத்தும் பொறுப்பாளர்களும் மக்கள்முன் வெளிப்படையாக அருங்கொடைகளை ஏற்றுக்கொள்ளும்போது அவை திருப்பணிகள் ஆகின்றன (இஅ 75). இவ்வாறு அவை நிலையான முறையில் மறைத்தூதுப் பணிக்கு உதவுகின்றன. தெளிதேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற உருவாக்கம் அளித்து, உரிய சடங்குமுறை வழியாக அவற்றுள் சில ஆயரால் வழங்கப்படுகின்றன. வாசகர், பீடத்துணைவர், வேதியர் என்பன இலத்தீன் மரபுத் திரு அவையில் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பொதுநிலையினர் திருப்பணிகள். இவை தவிர, தங்கள் திரு அவைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஏனைய திருப்பணிகளைத் திருத்தந்தையின் அனுமதியுடன் நிறுவவும், அவற்றிற்கான தகுதிகளையும் உருவாக்க முறைகளையும் முடிவு செய்யவும் ஆயர் பேரவைகளுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.

இதற்கு ஏற்ப தமிழ்நாடு ஆயர் பேரவை நற்செய்திப் பணியாளர் (வாசகர்), நற்கருணைப் பணியாளர் (பீடத்துணைவர்), நோயுற்றோர் பணியாளர், நீதிப்பணியாளர், அருள்பணித் துணைவர், வேதியர் என ஆறு பொதுநிலையினர் திருப்பணிகளைக் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளது. இது அனைத்துலகத் திரு அவைகளுக்கே முன் மாதிரி காட்டும் செயல்.

அவ்வாறே, மாமன்றத்தின் பின்வரும்  படிப்பினை அருங்கொடைகளையும் திருப்பணிகளையும் பற்றிய அதன் நிலைப்பாட்டை மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது: “அனைத்து அருங்கொடைகளும் திருப்பணிகளாக ஏற்படுத்தப்பட வேண்டியதில்லை; அதுபோல திருமுழுக்குப் பெற்ற அனைவரும் திருப்பணியாளர் ஆகவேண்டியதில்லை. ஓர் அருங்கொடை திருப்பணியாக ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், அதற்கான உண்மையான அவசியத்தைத் திருக்குழுமம் இனம் காண வேண்டும். பொதுநிலையினரின் அதிகத் திருப்பணி வகைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவற்றிற்குத் திருநிலைகள் எனும் அருளடையாளம் தேவையில்லை; அவை திருவழிபாட்டைச் சார்ந்தவையாக இருக்கவேண்டியதும் இல்லை. அவை நிறுவப்பட்டவையாகவோ நிறுவப்படாதவையாகவோ இருக்கலாம் (இஅ 66). அப்பணிகள் எத்தகையவை ஆயினும், அனைத்துப் பணியாளர்களும் கூட்டுப் பொறுப்புடன் பணியாற்றுவது திரு அவையின் இணைந்த பயணத்திற்கு இன்றியமையாதது.

கிறித்தவக் குழுமங்களிலும் பொதுநிலையினர் அதிகமதிகமாகப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  “அவர்களது இத்தகைய பங்களிப்புகள் இன்றியமையாதவை என்பதால், அவற்றிற்குத் தேவையான திறமைகளை வளர்க்க வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் (முஅ 8). மேலும், இத்தகைய பணிகளுக்கு நிலைத்தத்தன்மை தரவும், இவை மக்களால் ஏற்று மதிக்கப்படவும் உதவும் வகையில் இவற்றைத் தலத்திரு அவைப் பொறுப்பாளர்கள் திருக்குழுமத்தின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கலாம். மேலும், நற்கருணை வழங்கல், அருள்பணியாளர் இல்லாத சூழ்நிலைகளில் ஞாயிறு வழிபாடு நடத்துதல், சில அருள்வேண்டல் குறிகளை வழங்குதல் என்பன போன்றவற்றில் சிறப்புரிமைத் திருப்பணியாளராகப் பொதுநிலையினர் செயல்பட வாய்ப்பு ஏற்கெனவே உள்ளது. “அந்தந்த இடத்துச் சூழ்நிலைகளின் தேவைகளுக்குப் பதிலிறுப்புச் செய்யும் வகையில் பொதுநிலையினர் திருப்பணிகள் ஆற்ற இத்தகைய வாய்ப்புகளை விரிவாக்கம் செய்வது பற்றியும், நிலையானவை ஆக்குவது பற்றியும் சிந்திக்க வேண்டும் (இஅ 76).

செயல்படுத்தச் சில பரிந்துரைகள்

1. பங்கு, மறைமாவட்ட மற்றும் அனைத்துலகத் திரு அவை அளவுகளில் இன்று அதிகமதிகமாக அருள்பணி சார்ந்த பல செயல்பாடுகளும் திருப்பணிகளும் பொதுநிலையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இறையியல் விளக்கங்களும், திரு அவைச் சட்ட வழிவகைகளும் இந்த முக்கிய வளர்ச்சியுடன் இயைந்து இருத்தல்வேண்டும். குறிப்பாக, திரு அவையின் மறைத்தூதுப் பணி ஒன்றே என்பதைக் கருத்தில்கொண்டு, திரு அவையின் அகப்பணிகள் திருநிலையினருக்கும், உலகுசார் பணிகள் பொதுநிலையினருக்கும் உரியன எனக் கூறுபோடுதல் தவிர்க்கப்பட வேண்டும். “உலகில் பொதுநிலையினர் ஆற்றும் பணியைச் சரியாகப் புரிந்து ஏற்றுக்கொள்ளுதல் என்பது கிறித்தவக் குழுமத்தைக் கவனிக்கும் பணியை ஆயர்களிடமும் அருள்பணியாளர்களிடமும் மட்டுமே ஒப்படைப்பதற்குப் போலிக் காரணம் ஆகிவிடக்கூடாது (முஅ 18டி).

2. திரு அவையின் முடிவெடுக்கும் செயல் முறைகளில் பங்கேற்கவும், மறைமாவட்டங்களிலும் அருள்பணியாளர் பயிற்சி இல்லங்கள், இறையியல் கல்வி நிறுவனங்கள் என்பனவற்றிலும் பொறுப்புள்ள பணிகளில் செயல்படவும் பொதுநிலை மற்றும் இருபால் துறவியருக்கும் அதிக வாய்ப்புகள் தரப்படவேண்டும் (இஅ 77). 

3. தலத்திரு அவைகளின் தேவைகளுக்கு ஏற்ப புதிய திருப்பணிகளை ஏற்படுத்துவதும், இளையோருக்கும் அவற்றைத் தருவதும் அவசியம். வாசகர் திருப்பணி இன்னும் விரிவான இறைவார்த்தைப் பணியாகப் புதுப்பிக்கப்படலாம்; மறையுரை வழங்குவதும் அதனுடன் இணைக்கப்படலாம்

4. குடும்ப வாழ்வை ஆதரித்தல் மற்றும் திருமணத் தயாரிப்புப் பணிகளைத் திருப்பணிகளாக ஏற்படுத்தி, அவற்றை ஆற்றும் தம்பதியருக்கு அத்திருப்பணிகளை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

5. ஏற்ற நிறுவன அமைப்புகளை உருவாக்கி, அவற்றின் வழியாக அருள்பணித் தலைவர்களும் இறையியல் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோரும் உரையாடல் மேற்கொள்வது அவசரமான தேவை (இஅ 67).

news
ஆன்மிகம்
பெண்களுக்கு நலம் தரும் மாதம் எது? (கண்டனையோ, கேட்டனையோ! – 37)

The Cure of Ars என்ற தலைப்பில் அமெரிக்கக் கத்தோலிக்க டி.வி. சேனல் EWTN தயாரித்து வெளியிட்டுள்ள புனித ஜான் மரிய வியான்னி குறித்த ஒன்றரை மணி நேர docudrama-வை அண்மையில் பார்த்து மகிழ்ந்தேன்.

வியான்னி புனிதராக்கப்பட்ட 100-வது ஆண்டு நினைவாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மே 31-அன்று வெளியாகி, தற்போது EWTN இணையதளத்தில் கிடைக்கும் இந்தப் படத்தை  https://ondemand.ewtn.com/Home/Series/ondemand/video/en/the-cure-of-ars என்ற இணைப்பில் இலவசமாகக் காணலாம்.

docudrama என்பது விவரிப்பு, காட்சிப்படுத்தல்கள் என இரண்டும் சேர்த்து உருவாக்கப்படும் ஒரு கலவை சினிமா விலங்கு. இந்தக் கதை கேத்தரின் என்ற ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்படுகிறது. அவர் வியான்னியின் காலத்தில் ஆர்ஸ் நகரில் வாழ்ந்த அழகான, சற்று எதிர்மறை எண்ணம் கொண்ட கிறித்தவப் பெண். தொடக்கத்தில் அவருக்கு வியான்னியைப் பிடிக்கவில்லை. ‘ஏன் இந்த மனிதர் எப்போதும் மறையுரை மேடையில் நின்று திட்டிக்கொண்டே இருக்கிறார்?’ என்ற எண்ணத்தோடு மிகுந்த தயக்கத்துடன் அவர் புதிய அருள்பணியாளரை அணுகுகிறார்.

வியான்னி பேசும்போது, கேத்தரின் பெரும்பாலும் கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு நிற்பதாகக் காட்டுவது ஒரு நல்ல யுத்தி. “நீ எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்; நான் மாறமாட்டேன் என்கிற உடல்மொழி. வியான்னியின் நகைச்சுவைக்குகெக்கேப்பிக்கே என்று சிரிக்கும் மற்ற பெண்களை அவர் முறைக்கிறார்.

ஒரு காட்சியில், கேத்தரினும் அவரது தோழியும் தெருவில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். வியான்னி அவர்களை அணுகி, “பெண்களுக்கு மிகவும் நலம் பயக்கும் மாதம் எது தெரியுமா?” என்று கேட்கிறார். அவர்கள், “தெரியவில்லை என்கிறார்கள். வியான்னிபிப்ரவரி மாதம் என்கிறார்.

ஏன்?”

ஏனெனில், பிப்ரவரியில்தான் புறணி பேசுவதற்குக் குறைவான நாள்கள் உள்ளன என்கிறார்.

மற்றொரு காட்சியில், ஒரு பெண்கள் குழுவை ஏற்படுத்தி, ஞாயிறு மாலையில் அவர்களுக்குப் புனிதர்கள் குறித்து வியான்னி வகுப்பு எடுக்கிறார். கேத்தரினும் அதில் இருக்கிறார். வேண்டா வெறுப்பாக, வெற்றுப் பார்வைப் பார்த்துக்கொண்டு.

வகுப்பின் துவக்கத்தில் வந்திருக்கும் எல்லாப் பெண்களுக்கும் நன்றி சொல்லும் வியான்னி, “கேத்தரினையும் அவர் தோழியையும் இந்த வகுப்பிற்கு வரச் சொன்னதன் காரணம் என்ன தெரியுமா?”

அவர்கள் தெரியாமல் விழிக்கிறார்கள். வியான்னி, “அப்படியாவது இந்தப் பையன்கள் கோவில் பக்கம் வருவார்கள் என்பதற்காகத்தான் என்று கூற,… பெண்கள் மீண்டும்கெக்கேப்பிக்கே!’

சும்ம இருங்கடி; அவர்தான் கலாய்க்கிறார்னா, இவங்க வேற…” என்பதுபோல கேத்தரின் அவர்களைப் பார்ப்பார்.

ஆர்ஸ் நகரில் ஆண் குழந்தைகளுக்குப் பள்ளி இருந்தது. பெண்களுக்கு இல்லை. வியான்னி பெண்களுக்கு என்று பங்கில் ஒரு பள்ளி தொடங்கத் திட்டமிடும்போது கேத்தரினை அழைத்து, “நீ இந்தப் புதிய பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்று கேட்பார். கேத்தரினால் நம்ப முடியாது, “ஏன் நான்?”

ஏனென்றால், நீ ஓர் இறைப் பற்றுள்ள பெண். அறிவாளியும் கூட. என் செலவிலேயே உனக்கு ஆசிரியர் பயிற்சி வழங்கப்படும்.”

1824-இல்La Providence என்ற பெயரில் பள்ளி செயல்படத் தொடங்குகிறது. நிறைய பெண்கள் உடனடியாகச் சேர்கிறார்கள். சுற்றுப்பட்ட கிராமங்களில் திரிந்துகொண்டிருந்த குழந்தைகளையும் சேர்க்கவேண்டும் என்று வியான்னி வலியுறுத்த, பள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி என்றால் ஒன்றும் பிரமாதமான கட்டடம் கிடையாது. கீழே மாணவர்களுக்கு ஒரு பெரிய ஹால், மேலே ஆசிரியர்களுக்கு இரண்டு சிறிய அறைகள். ‘Chateau என்றால் பிரெஞ்சு மொழியில் பணக்காரர் வசிக்கும் அரண்மனை போன்ற வீடு. பள்ளி நிதி உதவி கேட்டு அவர்from one chateau to another chateau அலைந்ததாகப் படத்தின் விவரணம் சொல்கிறது.

ஒருநாள் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப் போதுமான மாவு இல்லை. பரணில் சேர்த்து வைத்திருந்த தானியங்கள் எல்லாம் காலி. கேத்தரின் வியான்னியிடம் வந்து கூறுகிறார். “சரி, நீங்கள் போய் இருக்கிற மாவைக்கொண்டு அப்பம் சுடுங்கள். நான் குழந்தைகளோடு இணைந்து இறைவேண்டல் செய்கிறேன் என்று வியான்னி கூறுவார். மனச்சோர்வுடன் கேத்தரின் பள்ளி சமையலறைக்குத் திரும்பிச் செல்ல... என்ன ஆச்சரியம்! மாவு பெருகிக்கொண்டே போய், தேவைக்கும் அதிகமான அப்பங்கள் அன்று சுட முடிகிறது.

படத்தில் இடம்பெறும் மற்றொரு முக்கியப் பெண் கதாபாத்திரம் Mademoiselle d’Ars என்ற சீமாட்டி. ஏராளமான ஆடைகளுடனும் எப்போதும் ஒரு பணியாளருடனும் நடக்கும் பெண்; செல்வந்தர்; சிறந்த நம்பிக்கையாளர். பல வருடங்கள் காலியாக இருந்த ஆர்ஸ் பங்கிற்கு வியான்னி அனுப்பப்பட, இந்தச் சீமாட்டி ஆயருக்குத் தொடர்ந்து எழுதிய கடிதங்களும் ஒரு காரணம். அருள்பணியாளரின் வீட்டைத் தூய்மைப்படுத்தி, அறைக்குத் தேவையான மேசை, நாற்காலிகள், படுக்கை, உணவு என எல்லா ஏற்பாடுகளும் செய்துகொடுத்து, இளம் வியான்னியை ஒரு தாய்போல பார்த்துக்கொள்கிறார். ஆலயத்தைச் சீரமைக்க வேண்டும் என்று கூறி வியான்னி அவர் வீடு சென்று கேட்கும்போது, பாரிசிலிருக்கும் தன் சகோதரனிடம் கூறி ஒரு பெரிய தொகையை நன்கொடையாகப் பெற்றுத் தருகிறார். ஒழுங்காகச் சாப்பிடச் சொல்லி, ஓய்வெடுக்கச் சொல்லி அவ்வப்போது வியான்னியைக் கண்டிக்கிறார்.

ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு வராமல், வயலில் வேலை செய்யும் விவசாயிகளை வியான்னி மறையுரையில் கண்டிக்க, சீமாட்டி விவசாயிகள் சார்பாக நின்று வியான்னியிடம் விவாதிக்கிறார்: “விவசாயிகள் அப்பாவிகள். வானம் எப்போது என்ன செய்யும் என்று தெரியாத சூழலில், சிலசமயம் அவர்கள் ஞாயிறு கூட வேலைக்குச் செல்ல வேண்டி வரும். அதற்காக அவர்களை எப்படிக் குறை சொல்ல முடியும்? அவர்கள் நமக்கு உணவு தருபவர்கள்?” என்கிறார்.

வியான்னி, “அவர்கள் ஆறு நாள்கள் வேலை செய்யட்டும் அம்மா. ஆனால், ஏழாம் நாள் கடவுளின் நாள். அன்று அவர்கள் திருப்பலிக்கு வரவேண்டும். பிறகு வீட்டிற்குச் சென்று, குடும்பத்தினரோடு அமர்ந்து சாப்பிட வேண்டும். குழந்தைகளுடன் பேச வேண்டும். கால்களை உயர்த்திப் போட்டுச் சற்றுக் கண்ணயர  வேண்டும். மாலை கதிரவன் சாய, ஆலய மணி அடிக்கும்போது, எல்லாரும் சேர்ந்து இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று கூறுவார்.

அதற்குச் சீமாட்டி, “அதெல்லாம் சரி, பங்கு மக்களின் கால்களுக்கு ஓய்வு வேண்டும் என்று சொல்கிறாய். ஆனால், உன் கால்களுக்கு நீ ஓய்வு கொடுப்பதில்லையே! அந்த நாள் எப்போது வரும் என்று நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லி மடக்குவதும், பதில் தரமுடியாமல் வியான்னி சிரித்து மழுப்புவதும் அழகாகப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வியான்னியின் அற்புதம் செய்யும் ஆற்றல், சாத்தானுடனான அவரின் பிரபல போராட்டங்கள் கூட மிகவும் அடக்கமான தொனியில் கூறப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் பேய் நம் ஊர் சினிமாக்களைப் போல முடியை விரித்துப் போட்டுக்கொண்டு, நாக்குச் சரிந்த நிலையில் வருவதில்லை. அதன் இருப்பு குறிப்பாக உணர்த்தப்படுகிறது. வியான்னி படுக்கையில் திருவிவிலியத்தை வாசித்துக் கொண்டிருக்க, முதலில் கதவில் ஒரு முரட்டு தட்டல்! பிறகு அறை ஓரத்தில் இருக்கும் மர நாற்காலி ஒரு வேகச் சுழற்றலில் அவருக்கு முன்வந்து நிற்கிறது. அடுத்த நாள் காலையில் பாதி எரிந்த நிலையில் வீட்டிற்குள் கிடக்கும் அவரது படுக்கை. முந்தின இரவு சாத்தான் வியான்னிக்குக் கொடுத்த துன்புறுத்தல்களுக்கு அடையாளமாக இது காட்டப்படுகிறது. வியான்னி சாத்தானைLE GRAPPIN என்ற பெயர் வைத்துக் கூப்பிடுகிறார். “, நீதானா? சரி, நல்லது. நீ என்னைத் துன்புறுத்த வந்தால், ஏதோ ஒரு பெரிய பாவி மனம் மாறுகிறான் என்று அர்த்தம். எனக்கு மகிழ்ச்சிதான் என்று புன்னகையோடு பேயை எதிர்கொள்கிறார்.

புதுமைகளும்கூட அப்படித்தான். பெரிய ஆர்ப்பாட்டமில்லாமல் காட்டப்படுகின்றன. ஒரு காட்சியில், ஒப்புரவு அருளடையாளத் தொட்டியிலிருந்து திடீரென்று கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் வியான்னி, அங்கு வரிசையில் காத்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவரிடம், “கவலைப்படாதே. உன் கணவர் மீட்கப்பட்டு விட்டார் என்பார். அப்பெண் அழுது, “அது எப்படி முடியும்? அவர் தற்கொலை செய்து கொண்டு அல்லவா இறந்துபோனார்?” என்கிறாள்.

வியான்னி, “ஆம், தெரியும். ஆனால், பாலத்தின் தடுப்புச் சுவருக்கும் ஆற்று நீருக்கும் இடையில் உன் கணவர் தன் தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க  ஓர் அவகாசம் கிடைத்தது. கடவுளால் எல்லாம் முடியும். உன் கணவர் இப்போது துயருறு நிலையில் இருக்கிறார். அவருக்காக வேண்டிக்கொள் என்பார்.

படத்தில் நான் மிகவும் இரசித்தது, ஜான் மரிய வியான்னியை ஏதோ அருங்காட்சிப் பொருள் போலக் காட்டாமல், ஓர் அசல் பங்கு அருள்பணியாளராகக் காட்டியுள்ள விதம். ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் ஒரு பங்குப் பணியாளரின் ஆர்வங்கள், ஆசைகள், சவால்கள், சந்தோஷங்கள் ஒன்றும் பெரிதாக மாறவில்லை என்பது வியப்பாக உள்ளது. பங்குப் பொறுப்பெடுத்த உடனேயே முதல் வேளையாக, கோவிலைப் பழுதுபார்க்க வேண்டும் என்று நன்கொடை கேட்க வியான்னி கிளம்புகிறார். ஊரில் பெரிய ஆதரவு இல்லை என்பதால், அங்கிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் லியோன் நகருக்கு நடந்துபோய், அங்குத் தனக்குத் தெரிந்த ஒரு பணக்காரக் குடும்பத்திடம் உதவி கேட்கிறார். கோவில் கட்டுவது, கெபி கட்டுவது என்று ஏதாவது ஒன்றை ஆரம்பித்து விட்டு, நன்கொடை இரசீது புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு, ஊர் ஊராக அலைந்து, வேலை பார்க்கும் இன்றைய பங்கு அருள்பணியாளர்கள் வியான்னியோடு எளிதில் பொருந்திப்போகிறார்கள்.

ஒரு வேலையை முடித்த பிற்பாடு, உடனேயே அடுத்த வேலையை ஆரம்பிக்கிறார். ஒவ்வொன்றிற்கும் நிதிதிரட்ட அலைகிறார். மறைக்கல்வி வகுப்புகள், பக்தி இயக்கம் ஆரம்பிக்கிறார். மறைக்கல்வி வகுப்புகள் நடத்த அவர் எடுத்தடைரி குறிப்புகள் இன்னும் பாதுகாக்கப்பட்டுள்ளன. இப்போது போலவே அப்போதும் ஆண்கள் கோவிலுக்கு வருவது குறைவாக இருந்திருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள்!

காசு இருக்கிறதா? நடத்த முடியுமா?’ என்றெல்லாம் யோசிக்காமல் பள்ளிக்கூடம் தொடங்குகிறார். ஞாயிறு மறையுரையைச் சனிக்கிழமையே முழுவதும் எழுதி, மனப்பாடம் செய்தும்கூட, அடுத்த நாள் மறையுரை வைக்கும்போது, திடீரெனப் பாதியில் எல்லாம் மறந்து விட, முடிக்காமலேயே இறங்கி வருகிறார் (எனக்குப் பலமுறை இது  நடந்துள்ளது).

விழாக்கள், குறிப்பாக ஊர்வலங்கள் நடத்துவது அவருக்கு மிகவும் பிடித்ததாக இருந்துள்ளது. எந்தப் பங்கு அருள்பணியாளருக்கு அவை பிடிக்காது? ஆர்ஸ் பங்கில் முதலில் கார்ப்பஸ் கிறிஸ்டி திரு விழாவை நடத்தியது வியான்னிதான். அவரால்தொழில் பாதிக்கப்பட்ட மதுக்கடை உரிமையாளர்கள் கூட்டம் போட்டு, அவரைப் பங்கிலிருந்து வெளியேறச் செய்ய வேண்டும் என்று பேசுகிறார்கள். பொறாமையால் தூண்டப்பட்ட அருகாமைப் பங்கு அருள்பணியாளர்கள், வியான்னிக்கு எதிராக ஆயருக்கு எழுதும் ஒரு கடிதம் எப்படியோ வியான்னியிடமே கிடைத்துவிட, வியான்னியும் அதில் கையெழுத்திடுகிறார். “இதுதான் சரியான முடிவு. நான் பங்கில் இருக்கத் தகுதியற்றவன். ஆயர் என்னை ஏதாவது ஒரு தியான இல்லத்திற்கு அனுப்பினால், நான் அங்கு போய், என் ஆன்மாவிற்காக இறைவேண்டல் செய்த வண்ணம் இறந்து போவேன் என்கிறார்.

பங்கு அருள்பணியாளர்களின் பாதுகாவலராக இருந்த வியான்னியை, 2009-ஆம் ஆண்டு எல்லா அருள்பணியாளர்களுக்கும் பாதுகாவலராகத் திருத்தந்தை பெனடிக்ட் அறிவித்தார். அதைத் திரு அவை செய்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.

பங்கு அருள்பணியாளர்களுக்கு என்று ஒரு தனித்த அடையாளம் இருக்கிறது. புனித ஜான் மரிய வியான்னி அதன் மிகச்சிறந்த முன்மாதிரி!

news
ஆன்மிகம்
விதைகள் அழிவதில்லை; விருட்சமாகிறது!

கோதுமை மணி மண்ணில் வீழ்ந்து மடியாவிட்டால் அது எந்தப் பலனும் தராது. மனிதன் வாழ்வும் தனது இலக்கை அடைய சில நேரங்களில் விழ வேண்டும், மடிய வேண்டும். ஆனால், நிரந்தரமாக மடிந்து விடுவதில்லை. கிறிஸ்து மடிந்தார்; ஆனால், உயிர்த்தெழுந்தார். காரணம், அவர் தமக்காக வாழவில்லை; தம் மக்களுக்காக வாழ்ந்தார்.

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றிஎன்ற மாணிக்கவாசகரின் வரிகள் மீண்டும் உயிர் பெறுகின்றன சில தலைவர்களால்! சில நேரம் மனிதநேயம் மறைந்து, மதநேயம் இரக்கமற்று, நீதியற்று, இதயத்தில் சற்றும் ஈரமில்லாமல் ஒருசாரார் நாற்காலியைத் தக்கவைக்க நீதியைப் பொய்மையாகவும், பொய்மையை மெய்மையாகவும் வார்த்தைகளால் அசைபோடும் சில தலைவர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்து இறந்தார்; ஆனால், உயிர்பெற்றார்! கிறித்தவமும் இறப்பதாய் நம் கண்களுக்குப் புலப்படும்; ஆனால், கிறித்தவர்களின் இறப்பு, மறைப்பணியாளர்களின் இரத்தம் சிந்துதல் காலத்தின் களைகளை அகற்றி கதிரவனாய் ஒளி கொடுக்கிறது. இதைத்தான் திரு அவையின் தந்தையர்களில் ஒருவரான தெர்த்தூலியன்,  “மறைச்சாட்சிகளின் இரத்தம், திரு அவையின் வித்து - விதைஎன்பார்.

ஏதென்ஸ் நகரத்தில் தொற்றுநோய் பலவீனப்படுத்தியதுபோல் என் பக்கத்து நகரத்தையும், இல்லை என் பக்கத்துத் தோட்டத்தை மதநோய் மனிதநேயமற்று பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளுக்குள் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்தவேண்டும். போர் என்பது மனிதநேயத்தின், மனிதகுலத்தின் தோல்விஎன்றார் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ். ஆனால், நாடுகளுக்கு இடையே என்பதைவிட, மனிதநேயத்தை விடுத்து மதநேயத்தைத் திணித்து நாட்டிற்குள் உள்ளேயே மனித சித்திரவதை நடைபெறுவது இதயம் கிழிந்து, குருதி பெருக்கெடுத்து, வலியின் உச்சத்தில் மனிதர்கள் இறந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.

இம்மாதத்திற்கான இறைவேண்டல் கருத்தில் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்: “இன, அரசியல், மத கருத்தியல் காரணங்களால் ஏற்படும் உள் மோதல்களைத் தவிர்க்க இறைவேண்டல் செய்யவேண்டும். மோதலுக்குப் பதிலாக உரையாடல், இரக்கம் மற்றும் உடன்பிறந்த உறவைப் பின்பற்ற வேண்டும். உண்மையான அமைதி என்பது நமது இதயத்தில் தொடங்குகிறது. மேலும், நீதியை மேம்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதிலும், ஒன்றிப்பை வளர்ப்பதிலும் அனைவரும் இணைய வேண்டும்.”

ஏதோ எங்கோ என்பது மாறி, இப்போது இங்கே என்ற பதற்றம் நம்மிடத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைப் பயணம் என்பது தன்னைச் சார்ந்து பயணிப்பது அல்ல; மாறாக, பிறருக்காகப் பிறரோடு பின்னிப் பிணைந்து பிறரைச் சந்திப்பதற்காகவும், பொதுவான இலக்கை அடைவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளோம் என்று இளைஞர்களுக்கான செய்தி மடலில்ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்என்ற திருப்பாடல் வரிகளைக் கருப்பொருளாகக் கொண்டு ஒன்றித்துப் பயணிக்க அழைப்பு விடுக்கின்றார் திருத்தந்தை.

விதை அழிந்து முளைத்து மரமாக, கிளையாக ஒன்றித்து இருக்கும்பொழுது தான் அது விருட்சமடைந்து பலம் பெற்று வலுப்பெறுகிறது. சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்பதா? இல்லை இல்லை... நாம் சற்று பழைய குப்பைகளை அகற்றிவிட்டு, மீண்டும் புதிய குப்பைகளைக் குவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதா? மனிதநேயம் என்கின்றபொழுது மரணத்தின் பிடியில் சிலர் தங்களை அர்ப்பணிப்பதும், சவால்களைச் சந்திப்பதும் கடந்து செல்லும் பாதையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால், விதை ஒருபோதும் அழிந்துவிடுவதில்லை; மடிகிறது... மீண்டும் எழுகிறது, விருட்சமாகிறது. மதத்தைப் பார்க்காதே. மனிதம் பிறக்கட்டும், மனிதநேயம் வளரட்டும்!

news
ஆன்மிகம்
திரு அவையும் திருத்தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும்

திருத்தலங்கள் பற்றிய திரு அவை ஆவணங்களில் காணப்படும் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்

1. ஓர் ஆலயம் அல்லது ஒரு சிற்றாலயம்திருத்தலம்என்று அழைக்கப்படுவதற்குத் தலத் திரு அவையினுடைய மேலதிகாரியின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும்.

2. மறைமாவட்டதில் உள்ள ஒவ்வொரு திருத்தலத்திற்கும் மறைமாவட்ட ஆயரால் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் (statues) இருக்க வேண்டும். அதில் அத்திருத்தலத்தின் நோக்கம், அதிபரின் அதிகாரம், சொத்துகளின் உடைமையுரிமை மற்றும் நிர்வாகம் போன்றவை வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும்.

3. ஒரு திருத்தலம் தேசியத் திருத்தலம் (National shrine) என்று அழைக்கப்படுவதற்கு அந் நாட்டு ஆயர் பேரவையின் அங்கீகாரமும், சர்வதேசத் திருத்தலம் (International shrine) என்று அழைக்கப்படுவதற்கு உரோமைத் திரு ஆட்சிப் பீடத்தின் அங்கீகாரமும் தேவை.

4. திருத்தலங்களில் தரமான, எளிமையான திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். திருத்தப்பட்ட  திருவழிபாட்டு நூலில் (General Instruction of the roman mission, 2000) உள்ள விதிமுறைகளின்படி திருவழிபாடு நடத்தப்படவேண்டும்.

5. திருத்தலங்களில் ஒப்புரவு அருளடையாளக் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மனத்துயர் வழிபாடு நடத்தி, திருப்பயணிகளைத் தகுந்தமுறையில் தயாரித்து, ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கப் போதுமான இடத்துடன் கூடிய ஒப்புரவுச் சிற்றாலயம் இருப்பது விரும்பத்தக்கது. திருப்பயணிகளின் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு மொழிகளைத் தெரிந்த ஒப்புரவுத் திருப்பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.

6. நோயாளிகள் பலர் திருத்தலங்களை நாடி வருவதால், அவர்களைக் குழுக்களாக ஒருங்கிணைத்து, திருச்சடங்கு நூல் விதிமுறைகளின்படி திருப்பலியில் நோயில் பூசுதல் அருளடையாளத்தை வழங்கலாம்.

7. திருத்தலங்களில் நடைபெறும் திருப்பயணிகளின் வழிபாட்டு நிகழ்வுகளில் திருப்புகழ்மாலை (Liturgy of the hours) குறிப்பாக, காலைத் திருப்புகழ் (Lauds) மற்றும் மாலைத் திருப்புகழ் (vespers) கொண்டாட்டத்திற்குத் திருத்தல அதிபர் ஏற்பாடு செய்யவேண்டும்.

8. இறைவார்த்தையை அறிவிக்கும் வாய்ப்பைத் திருத்தலங்கள் விவேகத்துடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மலைப்பொழிவின் போதனைகள், இறைவனின் எல்லையற்ற அன்பு மற்றும் பராமரிப்பு, அன்புக் கட்டளை, மீட்பளிக்கும் சிலுவையின் அருள், மனமாற்றத்திற்கான அழைப்பு, திருவிவிலிய விழுமியங்களைப் பின்பற்றி வாழும் சீடத்துவம் போன்ற தூதுரைகள் இந்த அறிவிப்பில் இடம்பெற வேண்டும்.

9. திருத்தலங்களின் பிறரன்புப் பணிகள் கிறிஸ்துவின் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்துவதால், அங்கு வருகை தரும் ஏழைகள், எளியோர், முதியோர், நோயாளிகள், விளிம்பு நிலையினர் போன்றோருக்கு உரிய விருந்தோம்பலும் கவனிப்பும் அளிக்கப்படவேண்டும்.

10. திருத்தலங்களில் குறிப்பாக, மரியன்னைக்கு உரியவற்றில் கிறித்தவ ஒன்றிப்புக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும், பிரிந்திருக்கும் திரு அவைகளின் கிறித்தவர்களை ஒருங்கிணைத்து, கிறித்தவ ஒன்றிப்பு வாரம் மற்றும் உயிர்ப்பு, தூய ஆவியாரின் விழாக்களின்பொழுது சேர்ந்து செபிப்பது விரும்பத்தக்கது.

இறுதியாக, சட்ட முறையாக ஏற்படுத்தப்பட்ட ஒரு திருத்தலம், திருப்பயணிகளின் அருள்பணிகளுக்கு இடையூறு இல்லாமல், விதிவிலக்காக, பங்கு ஆலயமாகவோ அல்லது அதன் கிளைக் கோயிலாகவோ செயல்படலாம். ஆனால், ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு பங்கு ஆலயத்தையோ, அதன் கிளைக்கோவிலையோ அல்லது ஒரு சிற்றாலயத்தையோதிருத்தலம்என்று தன்னிச்சையாக அறிவித்து விளம்பரம் செய்வது திரு அவைச் சட்டங்களுக்கு முரணானது மட்டுமல்லாமல், மக்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்குவதும் ஆகும்.

(தொடரும்)