news
ஆன்மிகம்
பேரொளியின் ஒளியாக! (05)

எழிலின் நிறைவாம் சீயோனின்று ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள் (திபா 50:2).

பேரொளியான இறைத்தந்தை நம்மில் ஒளியாக ஒளிர்வது அவரது பேரன்பின் நிலைப்பாடு. இது நிறைவாக நமது அன்பு உறவில், ஆற்றல்மிக்கச் செயல்கள் வழியாக வெளிப்படுகிறது. இதற்குத் திறந்த மனத்துடன் இறைத்தந்தையின் கரங்களில் நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் சரணடையும் பொழுதுஅப்பா அனுபவம்பெறுகின்றோம். இயேசுவோடு நாமும் இணைந்து முழக்கமிட்டு அறிக்கையிடலாம்.           

என்னை அனுப்பியவர் (அழைத்தவர்) என்னோடு இருக்கிறார்; அவர் என்னைத் தனியே விட்டுவிடுவதில்லை; ஏனெனில் நான் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும்  செய்கிறேன் (யோவா 8:29).

தந்தைக்கு உகந்த வாழ்வு பற்றிய தெளிவான ஞானம், அப்பா அனுபவம் மிக்க வாழ்வு வாழச் செய்யும். நம்மை ஒளியின் மக்களாக ஒளிரும் பேறுபெற்றோர் என்று உயர்த்தும். ஏனெனில், “ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது (எபே 5:9).

உண்மையைச் சார்ந்து செய்யும் நன்மைகள்தான் சுடர்விடும். இறை நம்பிக்கை ஆழப்பட்டு, இறைவார்த்தையை வாழ்வாக்கும் இயேசுவின் சீடராக வாழ உறுதிசெய்ய தூய ஆவியாரால் இயக்கப்படுபவர்களாக ஒளியேற்றும் விளக்குகளாவோம். இந்த விளக்குகளுக்கு எண்ணெயாக நிலைப்பது இறையருள் என்பது நிதர்சனமான உண்மை. இறையருள் வழங்கும் இயேசுவின் நெருக்கமான தோழமையை அனுபவித்து அன்புப் பணி ஆற்றும்பொழுது ஒளியின் மக்களை உருவாக்க முடியும்.

இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு ஒளியின் படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக (உரோ 13:12); “கடவுளின் ஆவியாரால் இயக்கப்படுகின்றவர்களே கடவுளின் மக்கள் (உரோ 8:14). 

புனித யோவான் தன் திருமடலில் குறிப்பிடுவதுபோல, “யாரெல்லாம் ஆண்டவருடைய ஒளியில் நடக்கின்றார்களோ, அவர்கள் ஆண்டவரோடும் மற்றவரோடும் நட்புறவு கொண்டிருக்க முடியும் (1யோவா 1:7). மேலும், ஆண்டவருடைய ஒளியின் வழியில் நடந்து, நாம் அவரோடு நட்புறவு கொண்டிருக்கும் பொழுது பேரொளி நமக்குள்ளும் நம்மைச் சூழ்ந்தும் சுடர்விட, நாம் மட்டுமல்லாமல் நம்மோடு உறவாடும் அனைவரும் ஒளியின் மக்களாக விளங்குவர்.

நம் செயல்கள் நன்மையானவையாக ஒளிரும் பொழுது இறைவன் மாட்சி அடைகின்றார். நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறுகின்றது.  “ஏனெனில், நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நாம் நற்செயல் புரிந்து வாழும்படி, கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார் (எபே 2:10).

நம் வாழ்வில் நாம் இறைவனின் திட்டப்படி நன்மைகள் புரிய வியத்தகு வகையில் அவர் செயலாற்றுவதை நாம் அனுபவித்திருப்போம். இத்தகைய ஓர் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ந்து இறைவனை மாட்சிப்படுத்துகின்றேன்.

மதுரையில் கணவனைப் பிரிந்து, தன் ஒரே மகனோடு வாழும் தாயைச் சந்தித்தேன். 15 வயது நிரம்பியும் திருமுழுக்குப் பெறவில்லை. இந்த நிலையில், அந்தத்  தாய் கத்தோலிக்கத் திரு அவைச் சட்டப்படி அருளடையாளங்களில் பங்குபெறத் தடைசெய்யப்பட்டதால் பெயரளவுக்குக் கிறித்தவர்களே. இந்தச் சூழ்நிலையில், மீட்பின் கருவியாகச் செயலாற்றி, ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டு வாழ வழிகாட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

திரு அவை ஒழுங்குமுறைப்படி அத்தாய் பரிகாரம் செய்து, மீண்டும் உண்மைக் கத்தோலிக்கக் கிறித்தவ வாழ்வு வாழத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அந்த இளைஞனுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்து, திருமுழுக்கு, நற்கருணை, உறுதிபூசுதல் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அந்த மகன், பொறுப்பு நிறைந்த கத்தோலிக்கக் கிறித்தவ மகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். எத்தனை பொறுப்பு என்றால், கல்லூரிக்குச் செல்லும் முன்பும், கல்லூரியில் இருந்து வந்த பின்பும், வேலைக்குச் சென்று தன் படிப்புக்குத் தேவையான பணம் சம்பாதித்துத் தாய்க்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் உடன் பயணிக்கின்றான்.

கிறித்தவக் கடமைகளையும் நிறைவேற்றுவதில் இவர்கள் இப்போது கருத்தாய் இருக்கின்றனர். இவர்களை நினைக்கும்பொழுது நான் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன். அண்மையில் நான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது என்னைத் தங்கள் உடன்பிறப்பாகக் கவனித்துக் கொண்டார்கள்.  “மிகச் சிறியோராகிய என் சகோதர-சகோதரிகளுக்குச் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25:40) என்ற இயேசுவின் கூற்று இவர்களில் நிறைவேறுகின்றது.

இறைத்தந்தையின் ஆசிபெற்றவர்கள் இவர்களைப் போன்ற நன்மனம் உள்ளவர்கள் பேறு பெற்றோர். விண்ணகச் செல்வம் சேர்ப்பவர்கள் இத்தகையோரே. நாமும் உண்மையைச் சார்ந்து நன்மை மட்டுமே செய்யும் பேறுபெற்றோராவோம். பேரொளியின் ஒளியாக ஒளிரும் அருள் நிறைந்த நம்பிக்கையாளர்களாகிஇறைத் தந்தையின் பேரன்பில் மகிழ்ச்சி கொண்டவர்களாக அவரை என்றென்றும் மாட்சிப்படுத்துவோம்.

news
ஆன்மிகம்
அழைப்பு

திருமணம், புதுநன்மை, காதணி விழா, புதுமனைப் புகுவிழா, நீராட்டு விழா என்று பல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் நமக்குக் கொடுக்கப்படும். நாம் அழைப்பிதழைப் பெற்றவுடன் அந்த நிகழ்ச்சிகளுக்குப் போகலாமா? அல்லது வேண்டாமா? என்ற குழப்பம் இரண்டு விதங்களில் தோன்றலாம்.

முதலாவது, ‘அழைப்பிதழ் கொடுத்தவர் நெருங்கிய நபர், என் வீட்டு விருந்துக்கு வந்தவர், நான் வேலை பார்க்கும் இடத்திலிருக்கும் உயர் அதிகாரி, நான் இந்த நிகழ்விற்குப் போனால்தான் அவர் என் வீட்டு நிகழ்விற்கு வருவார்என்ற பல காரணங்கள் நம் மனத்தில் தோன்றும். மேற்கண்ட காரணங்களுக்கு ஏற்றபடி நாம் அந்த அழைப்பிற்குப் பதில் கொடுப்போம்.

இரண்டாவது, ‘அழைப்பிதழ் கொடுத்தவர் என் மாமனா? மச்சானா? என் வீட்டு நிகழ்விற்கு அவன் வரவில்லை, நான் ஏன் போகவேண்டும்? கொடுத்தவர் எனக்குக் கீழே வேலை செய்பவர், அதற்கு நான் போவதா? அவருக்கு ஏதாவது செய்தால் அவர் திருப்பியே தரமாட்டார்; அதனால் நான் போக மாட்டேன்என்ற காரணங்களும் தோன்றும்.

முதலாவது மற்றும் இரண்டாவது காரணங்களும் அழைப்பிதழ்களும் நம் வாழ்வில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், மேற்கண்ட அழைப்புகள் ஒரு வரையறைக்குட்பட்டு, உறவிற்காக மற்றும் சமூகத்திற்காக ஏற்படுத்தப்படும் அழைப்பாகும். உண்மையான அழைப்பு மூன்று விதங்களில் நடைபெறுகிறது.

அழைப்பு

ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்கும்போது கடவுள் இந்த உலகத்தை இன்னும் அன்பு செய்கிறார் என்ற கருத்தைச் சொல்கிறது என்று இரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார். பிறப்பு என்பது கடவுள் கொடுக்கும் ஒரு கொடையாகும். மில்லியன் கணக்கில் இருக்கும் கருமுட்டைகளில் ஒரு கருமுட்டையும் ஒரு விந்தும் சேர்ந்து ஓர் உயிரை இந்த உலகிற்குக் கொடுக்கிறது. ஒரு கருமுட்டையும், ஒரு விந்தும் கடவுளின் விருப்பமின்றி நடைபெறுவதில்லை. எனவேதான்தாய் வயிற்றில் உருவாகும் முன்பே அறிந்திருந்தேன் (எரே 1:5) என்ற கடவுளின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது. இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் தாய் வயிற்றிலே கொடுக்கப்படும்  முதல் அழைப்பாகும்.

அழைப்புக்குள் அழைப்பு

பிறப்பு ஒரு கொடை. அந்தக் கொடை கடவுள் நமக்குக் கொடுத்த ஓர் அழைப்பு. அந்த அழைப்பின் அடிப்படையில் நாம் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். ஆனால், இந்த உலகத்தில் பிறப்பு ஓர் அழைப்பு என்று தன் குடும்பத்துடன் அல்லது உறவினர்களுடன் வாழ்ந்தவர்களின் வாழ்வில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகின்றன.

நமது நாட்டின் காந்தியடிகள் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப வழக்கறிஞர் படிப்பைப் படித்தார். தனது படிப்பின் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வாழும் போது, தனது வாழ்விற்கான அழைப்பு இதுவல்ல என்று உணர்ந்தார். அவர் தனது வாழ்வையே அகிம்சை வழியில் நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தர வேண்டுமென்று மாற்றுகிறார்.

புனிதை அன்னை தெரேசா அவர்கள் இலொரோட்டா என்ற சபையில் சேர்ந்து பணிபுரியும்போது தனது வாழ்வின் அழைப்பு இதுவல்ல என்று உணர்ந்தார். பின்பு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதே தனது அழைப்பு என்று உணர்ந்து பொருளுள்ள வாழ்வு வாழ்கிறார்.

தமிழ்நாட்டில் பிறந்த வள்ளலார், அண்ணனின் அரவணைப்பில் குடும்ப உறுப்பினராக வாழ்கிறார்; திருமணமும் செய்கிறார். ஆனால், தனது வாழ்வின் அழைப்பு இதுவல்ல என்று உணர்ந்தார். பின்பு சத்திய சுத்த சன்மார்க்க சங்கம் ஒன்றை ஏற்படுத்துகிறார். ‘பசிஎன்ற மொழியே அனைவருக்கும் பொதுவாக இருக்கிறது என்பதை உணர்ந்தவராய் அனைவரின் பசியைப் போக்க வேண்டுமென்று உழைக்கிறார்.

இயேசு, தூ ஆவியால் கருவுற்று முதல் அழைப்பைப் பெற்று முப்பது ஆண்டுகள் தம் குடும்பத்துடனும் உறவினருடனும் வாழ்ந்தார். பின்பு இந்த வாழ்வின் அழைப்பு இதையும் கடந்தது என்பதைத் திருமுழுக்கு அனுபவத்தில் உணர்கிறார். அதன்பின் தம் வாழ்வுஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் (லூக் 4:18) என்பதை உணர்ந்து அதற்காக வாழ்கிறார்.

மேற்கண்ட நபர்கள் போன்று நாமும் இந்த உலகத்தில் பிறப்பு என்னும் கொடையைப் பெற்று முதல் அழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நாமும்இந்தச் சமூகத்திற்கான எனது  தனிப்பட்ட அழைப்பு என்ன?’ என்பதை உணர வேண்டும். இந்த இரண்டாவது அழைப்பு என்பது நேரிடையாகக் கடவுளிடமிருந்து வருமென்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஒவ்வொருவரையும் இயற்கையையும் மதித்து மாண்புடன் வாழும்போது நமக்கு வெளிப்படுத்தப்படும். அந்த வெளிப்பாட்டிற்கான அழைப்பிற்கு நாம் ஒவ்வொருவரும் எப்போதும் கவனமுடன் விழிப்பாயிருந்து செயல்படவேண்டும். அப்படி வாழும்போது ஒவ்வொருவரும் அந்தஅழைப்பிற்குள் அழைப்பைஉணரமுடியும். இதைத்தான் திருவள்ளுவர்

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339)

என்கிறார். ஒவ்வொரு நாளும் எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன, எத்தனையோ உயிர்கள் இறக்கின்றன! ஆனால், அவற்றில் ஒருசில உயிர்கள் மட்டுமே மற்ற எல்லாருக்கும் பயனுள்ள அழைப்பை உணர்ந்து பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்து இறக்கின்றன. அதுவே வாழ்க்கை.

நிலையில்லா அழைப்பு

என்னுடைய பணித்தளத்தில் 47 வயதுடைய நபர் திடீரென இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்பு என்னுடன் அவரது வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றி உரையாடினார். அந்த அனுபவத்திலிருந்துதான் இந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கினேன். அவர் தனது குடும்பத்தை சென்னையில் குடியமர்த்திவிட்டு டெல்லியில் வேலை பார்த்தார். ‘ஒத்தாரும், உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்என்ற வரியின் அர்த்தத்தை உணர்ந்தார். தன் வாழ்வு என்ற கொடையின் அழைப்பில் பொருளுள்ள வாழ்வு வாழ வேண்டுமென்று முடிவு செய்தார். அதனால் தனது குடும்பத்துடன் சேர்ந்து சென்னையிலே வேலையைத் தேடிக்கொண்டார். மேலும், தான் இருக்கும் சமூக மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டுமென்று எண்ணி, தனது வாழ்வைப் பொதுச் சேவைக்காகவும், இறையனுபவம் நிறைந்ததாகவும் மாற்றிக்கொண்டு அனைவரையும் சமம் என்று எண்ணி வாழ்ந்தார். மேலும், தனது மகனையும் மனைவியையும் அதன் அடிப்படையில் வளர்த்தார். இன்று அவர் இல்லையென்றாலும் அவரின் சேவையும், அவரின் இறையனுபவமும் அந்தச் சமூக மக்களின் மனத்திலும் என் மனத்திலும் அழியாத முத்திரையாக உள்ளதுகாந்தியடிகள், அன்னை தெரசா, வள்ளலார் போன்ற மாமனிதர்கள் வாழ்வின் அழைத்தலை உணர்ந்து வாழ்ந்தார்கள். இன்று அவர்கள் நிலையில்லா அழைப்பைப் பெற்றவர்களாயினர். அதனால் மக்களின் மனத்தில் இன்றும் வாழ்கின்றனர்.

நாமும் நமது வாழ்வின் அழைப்பிற்குள் இருக்கும் அழைப்பை உணர்ந்து வாழும்போது, நிலையில்லா அழைப்பு அனைவருக்கும் பொருளுள்ளதாக இருக்கும். “எல்லா உயிர்களும் இறைவனின் படைப்பு, எல்லா மனங்களும் அவனது இருப்புஎன்ற வள்ளலாரின் பாடல்களுக்கு ஏற்ப நாமும் மேற்கண்ட மாமனிதர்கள் போன்று எல்லா மனங்களிலும் நீங்காத இடம்பெற்று நிலையில்லா அழைப்பின் பொருளை உணரமுடியும்.

news
ஆன்மிகம்
மரியாவின் தேர்வு கன்னிமை அர்ப்பணத்தை ஊக்குவிக்கிறது! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 29)

1. கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது மரியாவின் வார்த்தைகளில் காணக்கூடியகன்னியாக நிலைத்திருப்பதற்கானஅவரின் எண்ணம்தான் திரு அவையில் கிறித்தவக் கன்னிமைக்கான தொடக்கமாகக்  கருதப்படுகின்றது.

மரியாவின்  இந்த முடிவில் புனித அகுஸ்தினார் கடவுளின் எந்தவொரு நிபந்தனையையும் காணவில்லை; மாறாக, அதில் சுதந்திரமாக எடுக்கப்பட்ட அவரின் ஒரு வார்த்தைப்பாட்டைக் கண்டார். இந்த வகையில், திரு அவையின் வரலாறு முழுவதுமேபுனித கன்னிகளுக்குஒரு முன்னுதாரணமாக மரியாவைக் காண்பிப்பது சாத்தியமானது.  “மரியா, அவர் யாரைக் கருத்தரிக்கப் போகின்றார் என்பதை அறியாதபொழுதே அவரின் கன்னித்தன்மையைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். ஆகவே, விண்ணக வாழ்வைப் பின்பற்றுதல் என்பது உலகு, நிலையற்ற உடல் சார்ந்த ஒரு வார்த்தைப்பாட்டின் மூலமோ, ஒரு கட்டளை அல்லது சேவை செய்வதற்கான ஒரு தேவை வழியாகவோ அல்ல; மாறாக, அன்பின் ஒரு தெரிவு வழியாக வந்ததொன்றாகும் (De Sancta Virg., PL 40:398). 

வானதூதர் மரியாவை ஒரு கன்னியாக நிலைத்திருக்கக் கேட்கவில்லை. மரியாதான் கன்னியாக இருப்பதற்கான எண்ணத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றார். இந்த அர்ப்பணிப்பில் கன்னி வாழ்வால் கடவுளுக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு அவரை இட்டுச் செல்கின்ற அன்பின் தெரிவானது காணப்படுகின்றது. மரியாவின்  முடிவு இயற்கையான தன்மையை மையப்படுத்தி, ஒவ்வோர் அழைப்பின் வேராகக் கடவுளுடைய முன்னெடுப்பு இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கன்னி வாழ்வைத் தேர்ந்தெடுப்பதன் வழியாக, நாசரேத்து இளம் பெண்ணானவள் தனது உள் அழைத்தலுக்கு அதாவது, தூய ஆவியாரின் உந்துதலுக்கு அவரை அவருடைய கன்னிக் கொடையின் மதிப்பு மற்றும் அர்த்தத்தைப் பற்றி அறிவுறுத்திய அழைத்தலுக்குப் பதில் தந்து கொண்டிருந்தார். இந்தக் கொடையை அழைக்கப்படுவதை உணர்ந்தாலன்றி அல்லது தேவையான ஒளியும் மற்றும் திடனுமான தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டாலன்றி யாராலும் ஏற்க முடியாது

கன்னி வாழ்விற்கான ஒரு தீர்க்கமானதொரு முடிவை மரியா எடுத்தார்

2. புனித அகுஸ்தினார்வார்த்தைப்பாடுஎன்ற சொல்லை முதன் முதலில் அவர்களின் வாழ்க்கை நிலையைபுனித கன்னிகள்என்று அவர் அழைத்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தியிருந்தாலும், மரியா திரு அவையின்  தொடக்கக் காலங்களிலிருந்தே அர்ப்பணத்தின் அல்லது ஒருவரின் வாழ்வைக் கடவுளுக்குக் கொடுக்கிறபொழுது, வழக்கத்திலிருக்கிற வார்த்தைப்பாட்டை எடுத்தார் என்பதற்கு நற்செய்தி நூலில் தெளிவான சான்றுகள் இல்லைமரியா கடவுளுக்கு அவரின் இதயத்தையே கொடுத்து கன்னியாக நிலைத்திருக்க, தனிப்பட்ட வகையில் முடிவெடுத்தார் என்பதையே நாம் திருவிவிலியத்திலிருந்து அறிகிறோம். ‘சீயோனுடைய மகளாகவாழ கொடுக்கப்பட்ட அழைத்தலை நிறைவுசெய்து, கடவுளின் நம்பிக்கைக்குரிய மணவாட்டியாக இருக்க மரியா விரும்புகிறார். இவ்வாறு அவரின் முடிவினால் கன்னித்தன்மையில் ஒரு பிளவுபடாத இதயத்தோடு கடவுளுக்குப் பணி செய்ய திரு அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரின் முன்மாதிரியாக அவர் ஆகின்றார்.

நற்செய்தி நூல்களோ அல்லது மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களோ மரியா கன்னியாக நிலைத்திருப்பதற்கான முடிவை எப்பொழுது எடுத்தார் என்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. இருப்பினும், அவர் மிகவும் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தார் என்பது கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது வானதூதரிடம் அவர் கேட்ட கேள்வியிலிருந்து  எளிதில் உணரப்படுகின்றது. மரியா கன்னித்தன்மையைப் பாதுகாப்பதற்கான அவரின் விருப்பத்தை வெளிப்படுத்த அவருடைய எண்ணமானது கால ஓட்டத்தில் முழு வளர்ச்சி பெற்றது என்பதைக் காண்பித்து, பரிந்துரைக்கப்பட்ட தாய்மையின்  பார்வையில்  அவர் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை.  

உண்மையில், கன்னியாக வாழ்வதற்கான மரியாவின்  தேர்வானது கடவுளின் தாயாக ஆவதன் எதிர்பார்ப்பில் முன்னரே உணரப்படாமல் செய்யப்பட்டதல்ல; மாறாக, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்வுக்கு முன்பே அவரின் எண்ணத்தில் வளர்ந்து வந்ததாகும். இதிலிருந்து அவரின் இதயத்தில் இந்த விருப்பமானது, எப்பொழுதுமே இருந்தது என்பதை நாம் யூகிக்க முடியும்: அவரின் கன்னித் தாய்மைக்கு அவரை எந்த அருளானது தயாரித்ததோ அதே தூய ஆவியானவர் அவருடைய சிறு வயது முதலே அவரில் உந்துதலை ஏற்படுத்த இயலாமல் இருந்தபொழுதும் உண்மையில் அவரின் முழு ஆளுமை வளர்ச்சி மற்றும் கடவுளோடு கூடிய முழு ஒன்றிப்பிற்கான ஆர்வத்தையும் அவரில் ஏற்படுத்தியது.

3. கடவுள் இன்றும் அநேக இளைஞர்-இளம் பெண்களின் உள்ளத்திலும் வாழ்விலும் செய்கின்ற அற்புதமானது மரியாவின் ஆன்மாவில் முதன் முதலில் உணரப்பட்டது. நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் அநேக மேலோட்டமான ஈர்ப்புகளால் தடம் மாறிப் போன நமது சமுதாயத்தில் கூட அநேக இளைஞர்-இளம்பெண்கள் மரியாவின்  எடுத்துக்காட்டிலிருந்து வருகின்ற அழைத்தலை ஏற்று அவர்களின் இளமையைக் கடவுளுக்காகவும் மற்றும் அவர்களுடைய சகோதர-சகோதரிகளுக்கான பணிக்காகவும்  அர்ப்பணிக்கின்றார்கள்.

இந்தத் தேர்வானது மனித மதிப்பீடுகளை நிராகரித்தல் என்பதைவிட, அது மிகப்பெரிய மதிப்பீடுகளின் தெரிவாகும். இந்த வகையில், எனக்கு முந்தைய வணக்கத்திற்குரிய திருத்தந்தை ஆறாம் பவுல் தனது அப்போஸ்தலிக்கப் போதனையானமரியன்னை வழிபாட்டு மரபு (Marialis cultus) என்ற ஏட்டில் எவ்வாறு ஒவ்வொருவரும் திறந்த மனநிலையோடு இறைச் செய்தியின்  சான்றுகளைப் பார்க்கின்றார்கள்  என்பதைகன்னி நிலைக்கான மரியாவின் தேர்வைத்திருமண நிலையின் எந்தவொரு மதிப்பீட்டையும் நிராகரிக்கும் ஒன்றல்ல; மாறாக, கடவுளின் அன்பிற்கு அவரையே முழுமையாக அர்ப்பணிப்பதற்காக அவர் செய்த துடிப்புமிக்க தேர்வு என்றே பாராட்டுவார்கள்என்று வலியுறுத்திக் கூறுகின்றார் (எண். 37).

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், கன்னி நிலையின் தேர்வானது கிறிஸ்துவின்மேல் உள்ள முழுபற்றினால் தூண்டப்படுகின்றது. குறிப்பாக, இது  மரியாவில்  வெளிப்படையாக இருக்கின்றது. கிறிஸ்துவின்  பிறப்பு அறிவிப்பிற்குமுன் இதைப்பற்றி உணராமல் இருந்தாலும், கிறிஸ்துவினுடைய பின்னணியில் தூய ஆவியானது அவரின் கன்னி வாழ்வுக்கான அர்ப்பணத்தைத் தூண்டுகின்றது. அவரின் முழு இருத்தலிலும் மீட்பரும் மெசியாவுமானவரை வரவேற்பதற்கு அவர்  ஒரு கன்னியாக நிலைத்திருக்கின்றார்மரியாவில்  தொடங்கிய கன்னி வாழ்வானது இவ்வாறு அதன் கிறிஸ்து மைய  பரிமாணத்தை (Christocentric dimension) வெளிப்படுத்துகிறது. மேலும், திரு அவையில் வாழப்படும் கன்னி வாழ்வுக்குக் கிறிஸ்துவின் தாயில் அதன் உன்னத மாதிரியைக் காண்கின்றது. அவரின்  தனிப்பட்ட கன்னி வாழ்வானது இறைத்தாய்மையோடு  இணைக்கப்பட்டு ஒரு வழக்கத்திற்கு மாறான நிகழ்வாக நிலைக்கின்றது. மேலும், கன்னி வாழ்வுக்கான ஒவ்வொரு கொடைக்கும் அர்த்தம் மற்றும் வெளிச்சத்தைக் கொடுக்கின்றது.

கன்னிமை அர்ப்பணமே ஆன்மிக வளங்களின் ஊற்றாக இருக்கின்றது

4. திரு அவையின் வரலாற்றில் எத்தனையோ இளம்பெண்கள் ஆண்டவருடைய தாயின் கன்னி இதயத்தின் அழகு மற்றும் மேன்மையை அவர்கள் தியானிக்கின்றபொழுது கன்னி வாழ்வின் மாதிரியைத் தழுவியதால் இறைவனின் அழைத்தலுக்கு முழு மனத்தோடு சம்மதம் தர தூண்டப்படுவதை உணர்ந்திருந்தார்கள்! நான் திருத்தந்தை இரண்டாம் ஜான்பவுல்மீட்பரின் தாய்  (Redemtoris Mater) என்னும் சுற்றுமடலில் நினைவுகூருகின்றவாறு, “நாசரேத்து கனியின்  எடுத்துக்காட்டிற்குப் பின் குறிப்பாக இப்படிப்பட்ட கன்னி வாழ்வு ஒரு சிறந்த ஆன்மிகக் கனியின் ஊற்றாகும்: இது தூய ஆவியில் தாய்மையின்  ஊற்றாக இருக்கின்றது (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண். 43).

மரியாவின்   கன்னிமை ஒட்டுமொத்தக் கிறித்தவ மக்களிலும் கன்னி வாழ்விற்கான கொடையின் மீதான மதிப்பைத் தூண்டுகிறது. இது திரு அவையில் கடவுளுடைய எல்லா நிகழ்வுகளின் மீதான முதன்மைநிலையின் அடையாளமாகவும், வரவிருக்கின்ற வாழ்வின் முன் எதிர்பார்ப்பாகவும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தூண்டுகின்றது. எனவே, இறையாட்சிப் பணிக்குக் கன்னிமையில் இன்றும் தங்களின் வாழ்வையே அர்ப்பணிக்கும் தாராள உள்ளங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம். அதேநேரத்தில், முன்னரே நற்செய்தி அறிவிக்கப்பட்ட பல பகுதிகளில் தன் இன்பமே சிறந்த நலம் என்னும் கோட்பாடு (hedonism) மற்றும் நுகர்வுக் கலாச்சாரம் (consumerism) போன்றவை பல இளைஞர்-இளம்பெண்களைத் துறவற வாழ்வைத் தழுவுவதிலிருந்து அவர்களைத் திசைதிருப்புவதைப் போலத் தோன்றுகிறது. எனவே, மரியாவின்  பரிந்துரை வழியாகத் துறவற அழைத்தல் பூத்துக் குலுங்க இறைவனிடம் இடைவிடாது செபிப்போம். நமது செபங்களால் உந்தப்பட்டு அவர்கள், கிறிஸ்துவினுடைய தாயின் முகமானது தெய்வீகக் குருவைப் பின்செல்வதற்கு முயற்சிக்கின்ற அநேக கன்னியர்களில் எதிரொலித்து மனுக்குலத்திற்குக்  கடவுளின்  இரக்கம் மற்றும் கருணையின் சின்னமாக இருப்பதை அவர்கள் தொடர்வார்கள்.

மூலம்: Pope John Paul II, Mary’s choice inspires consecrated virginity, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 21 August 1996, p.7.

news
ஆன்மிகம்
பொதுநிலையினரின் பாதுகாவலர் புனித தேவசகாயம்

(சென்ற இதழ் தொடர்ச்சி)

சமூகத் துறைகளில் ஈடுபட ஆற்றல்படுத்தல்

பொதுநிலையினருக்கே உரிய தனி இறையாட்சிப் பணித்தளம் அவர்கள் பணியாற்றும் சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு எனும் உலகியல் துறைகளே. அவற்றில் நற்செய்தி விழுமியங்களுடன் ஈடுபட்டு, அவற்றை இறையாட்சிக்கு இயைந்ததவையாக மாற்றுவது அவர்களுக்கே சிறப்பாக உரிய அழைப்பு. 2-ஆம் வத்திக்கான் சங்கம் இதனை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளது (திரு அவை 31; பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி 7). எனவே, நம் பொதுநிலையினரை வெறும் கோவில் மையக் கிறித்தவர்களாக வைத்திருக்கும் அல்லது வளர்த்தெடுக்கும் இன்றைய பரவலான நிலை மாற்றப்படவேண்டும்.

உலகியல் துறைகளை நற்செய்தி விழுமியங்களால் உருமாற்றும் ஈடுபாட்டினை அவர்களிடம் வளர்க்காது, அதற்கென அவர்களை ஆற்றல்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளாது, செபக்கூட்டங்களையும் பக்தி முயற்சிகளையும் நவநாள்களையும் நற்கருணை ஆராதனைகளையும் அதிகரித்துக் கொண்டு, பொதுநிலையினரை அவற்றிலேயே மூழ்கடிக்க முயலும் பாணியே இன்று தமிழ்நாடு திரு அவையில் வளர்ந்துகொண்டிருக்கிறது. இத்தகைய கோவில் கிறித்தவம் சமூக ஈடுபாட்டு மற்றும் சமூக மாற்றுக் கிறித்தவமாக வடிவெடுக்கும்போதுதான், அது உண்மையான சீடத்துவக் கிறித்தவமாகச் சிறந்தோங்கும். இத்தகைய சமூக மாற்றுக் கிறித்தவ வாழ்வுக்குச் சிறந்த மாதிரியாக வாழ்ந்தவர் புனித தேவசகாயம்.

பொதுநிலையினர் திருப்பணிகளைச் செயல்படுத்துவோம்

தகுதியும் திறமையும் உடைய இல்லற ஆண்களைத் திருத்தொண்டர்களாகத் திருநிலைப்படுத்துவதை 2-ஆம் வத்திக்கான் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது (திரு அவை 29). உலகின் பல நாடுகளிலும், இந்தியாவில் ஓரிரு மறைமாவட்டங்களிலும் இல்லறத் திருத்தொண்டர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், காலத்திற்கு ஏற்ற புதிய முன்னெடுப்புகளுக்கு இந்தியத் திரு அவைக்குத் தடம் காட்டும் தமிழ்நாடு திரு அவையில் அதுபற்றி எவரும் சிறிதுகூடச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

மேலும், 1972-இல் திருத்தந்தை 6-ஆம் பவுல்சில திருப்பணிகள்எனும் திருத்தூது மடல் வழியாக வாசகர், பீடத்துணைவர் எனும் பணிகளைப் பொதுநிலையினர் திருப்பணிகள் என அறிவித்தார். தலத் திரு அவைகளின் ஆயர் பேரவைகளும் தங்கள் தேவைக்கேற்ப வேறு பொதுநிலையினர் திருப்பணிகளையும் ஏற்படுத்த வாய்ப்பு அளித்தார். அதனைப் பின்பற்றி தமிழ்நாடு ஆயர்கள் 2000 ஆண்டில் நற்செய்திப் பணியாளர், நற்கருணைப் பணியாளர், நோயுற்றோர் பணியாளர், நீதிப் பணியாளர், அருள்பணித் துணைவர் என ஐந்து பொதுநிலையினர் திருப்பணிகளை ஏற்படுத்தினர். 2013-ஆம் ஆண்டு திருந்தந்தை பிரான்சிஸ், வேதியர் பணியை ஒரு திருப்பணியாக அறிவித்ததும் தமிழ்நாட்டு ஆயர்கள் அதையும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்றுவரை ஓரிரண்டு தவிர ஏனைய தமிழ்நாடு மறைமாவட்டங்கள் அத்தகைய திருப்பணிகளைப் பொதுநிலையினருக்குத் தர முன்வரவில்லை.

எத்தகைய நலமான மாற்றமாக இருந்தாலும், பழைய பாணிகளுக்குப் பழக்கப்பட்ட பலர் அவற்றை முதலில் ஏற்க மறுப்பதும் எதிர்ப்பதும் இயல்பானதே. 2-ஆம் வத்திக்கான் சங்கம் புகுத்திய பல மாற்றங்களுக்கு அன்று எவ்வளவோ எதிர்ப்புகள் இருக்கத்தானே செய்தன! இருப்பினும், தக்க விளக்கங்கள் தந்ததாலும், மெல்ல மெல்லப் பழக்கப்பட்டு விட்டதாலும் இன்று அவை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளவைதானே! திருத்தந்தை பிரான்சிஸ் திரு அவையின் உரோமைத் தலைமைச் செயலகத்தின் முக்கியப் பல பொறுப்புகளில் பொதுநிலையினரை நியமித்துத் தலத்திரு அவைகளுக்குச் சிறந்த முன்மாதிரி காட்டியுள்ளார் என்பது எண்ணிப்பார்க்கத்தக்கதே.

அவசரத் தேவை - பொதுநிலையினர் உருவாக்கம்

அருள்பணியாளர்களுக்கான உருவாக்கம் 8-10 ஆண்டுகள் என நீடிக்கிறதுஆனால், பொதுநிலையினருக்குத் தரப்படுவதோ சிறுவப் பருவத்து மறைக்கல்வி, பிற்கால குறுகிய அருளடையாளத் தயாரிப்பு வகுப்புகள், ஞாயிறு மறையுரைகள் என்பன தவிர, பெரிதாக எதுவும் இல்லை. திருத்தந்தை பிரான்சிஸ் அழுத்தியுரைத்த கூட்டியக்கத் திரு அவையாகத் தங்களுக்கே உரிய தனி அறிவு மற்றும் ஆற்றல்களுடனும் சமமான பணிப்பகிர்வுடனும் கூட்டுப் பொறுப்புடனும் இணைந்து பயணிக்கப் பெரும்பான்மையினரான பொதுநிலையினருக்குப் போதிய பயிற்சிகள் தரப்படுவதில்லை.

எடுத்துக்காட்டாக, பங்கேற்பு அமைப்புகளின் உறுப்பினர்களாகும் பொதுநிலையினரை எடுத்துக்கொள்வோம்: அவற்றிற்கான தேர்தல்களில்தான் எத்தனை போட்டிகள்? உறுப்பினர்களுக்கு இடையே எத்தனை பிளவுகள்? சண்டைகள், அதிகாரத்தைக் கையாள்வதில் எவ்வளவு சுயவிளம்பரத் தேடல் மற்றும் ஆதிக்கங்கள்! அனைத்திற்கும் மேலாக நிதி மேலாண்மையில் எத்தனை கையாடல்கள் மற்றும் வீண் பெருமைக்கான ஆடம்பரச் செலவுகள். இவற்றிற்கெல்லாம் முதல் காரணம், அவர்களை இத்தகைய பொறுப்புகளை நன்கு வகிக்க, அவர்களுக்குச் சரியான உருவாக்கம் தர நம் மறைமாவட்டங்கள் தவறியுள்ளனதானே!

மேலும், நல்ல கல்வியாளர்களாக, கலைஞர்களாக, அரசு ஊழியர்களாக, அரசியலாளர்களாக, மருத்துவர்களாக, வணிகர்களாக, அறிவியலாளர்களாக, ஊடகத்துறையினராக எனத் தத்தம் துறைகளில் கிறித்தவ விழுமியங்களோடு செயல்பட நாம் தொடக்க மற்றும் தொடர் பயிற்சிகளை அதிகமாகத் தருவதில்லை. அத்தகைய உருவாக்கத்தின் தேவையை 2023-24 ஆண்டுகளில் இணைந்து பயணிக்கும் திரு அவையை மையப்படுத்தி நடைபெற்ற ஆயர் மாமன்றம் அழுத்தி உரைக்கிறது. இறையியல் உருவாக்கத்துடன் கூட்டுப் பொறுப்பு, செவிகொடுத்துக் கேட்டல், தெளிதேர்வு செய்தல், கிறித்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல், வறியோருக்கு உதவுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கணினிவழி மறைத்தூதுப் பணி என்பனவற்றை நடத்துவதற்கான தனிப்பட்ட சில திறமை வளர்ப்புப் பயிற்சிகளும் தேவைப்படுகின்றன. சிறாருக்கும் இளையோருக்கும் மறைக்கல்வி உருவாக்கம் தருவதிலும் தனிப்பட்ட கவனம் தேவை என அது எடுத்துரைக்கிறது (முதல் அறிக்கை 14e). 

அத்தகைய உருவாக்கம் அறிவு, உணர்ச்சி, உறவு, அருள்வாழ்வு எனும் ஆளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் சார்ந்ததும் ஒருங்கிணைந்தும் நடைமுறை அனுபவமுறையிலும் அமையவேண்டும் என்பதை மாமன்றம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், ‘மாமன்றத்தின் நடைமுறை முழுவதிலும் அழுத்தி உரைக்கப்பட்ட ஒன்று ஆண்களும் பெண்களும் பொதுநிலையினரும் துறவியரும் திருநிலைத் திருப்பணியாளர்களும் அருள்பணி பயிற்சி மாணவர்களும் இணைந்து பங்கேற்கும் பொது உருவாக்கம். இத்தகைய உருவாக்கத்தில் ஒருவர் மற்றவரை நன்கு தெரிந்துகொள்ளவும் மதிக்கவும் ஒத்துழைக்கும் திறனை வளர்க்கவும் முடியும் (இறுதி அறிக்கை 143).

இறுதியாக...

திரு அவையிலும் சமூகத்திலும் பொதுநிலையினரால் மட்டுமே ஆற்ற இயன்ற நற்செய்திப் பணியின் பல முக்கியப் பங்களிப்புகள் இன்று நிறைவேற்றப்படாமலே உள்ளன. குறிப்பாக, நமது சமூகம் இன்று பல வகைகளில் தடம்மாறி அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இச்சூழமைவில், நற்செய்தி விழுமியங்களால் உலகியல் துறைகளை ஊடுருவி அவற்றை இறையாட்சிக்கு ஏற்ப உருமாற்றுவது பொதுநிலையினருக்கு உரிய தனிச் சிறப்பான அழைப்பு.

உலகை இறையாட்சியாக உருமாற்றுவதற்கே திரு அவை இருக்கிறது என்பதால், பொதுநிலையினரின் குடும்ப மற்றும் சமூகப் பணிக்காகவே அருள்பணியாளர்களின் சமயப் பணிகள் இருக்கின்றன. எனவே, பொதுநிலையினரின் அழைப்பும் பங்களிப்பும் முதன்மைப்படுத்தப்பட்டு, அதனை அவர்கள் நிறைவேற்றும் வகையில் உரிய உருவாக்கப் பயிற்சிகள் அளித்து அவர்கள் ஆற்றல்படுத்தப்படவேண்டும். பொதுநிலையினரின் தலைமையை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுக்கும் சகோதரத் தலைவர்களாக நம் அருள்பணியாளர்கள் செயல்படும் வகையில் அவர்களது உருவாக்கமும் புத்தாக்கம் பெறவேண்டும்.

news
ஆன்மிகம்
பாதையும் பயணமும் ஒரு தொடர் பயணம் (சதுக்கத்தின் சப்தம் – 11)

மனித வாழ்க்கை என்பது தனிமையான பயணம் அல்ல; அது ஒரு தொடர் பயணம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு திசையை நோக்கியும், யாரோ ஒருவரைப் பின்பற்றியும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய எண்ணங்கள், முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள சூழலாலோ அல்லது நாம் முன்மாதிரியாகக் கருதும் நபர்களாலோ செதுக்கப்படுகின்றன.

அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மிக வழிகாட்டிகள் வரை அனைவரும் ஏதோ ஒரு தத்துவத்தைப் பின்பற்றியே செயல்படுகிறார்கள். எனவே, ‘நாம் யாரைப் பின்பற்றுகிறோம்?’ என்பது நம் வாழ்வின் திசையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான கேள்வியாகும்.

இன்றைய நவீன உலகம் ஓயாத சத்தங்களாலும், திசைதிருப்பும் கவர்ச்சிகளாலும் நிறைந்துள்ளது. இத்தகையச் சூழலில், திருத்தந்தையின் மறைக்கல்வி உரையைத் துணையாகக் கொண்டு நமது சீடத்துவ வாழ்வைச் சீர்தூக்கிப் பார்ப்போம்.

1. திருவிவிலியப் பின்னணியில் சீடத்துவ அழைப்பு

சீடத்துவம் என்பது வெறும் தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது ஒரு நபரைப் பின்பற்றி நம்மையே உருமாற்றிக்கொள்வது. திருவிவிலியத்தில் இதற்கு இரு பெரும் தூண்கள் சான்றாக உள்ளனர்:

) புனித பேதுருவின் அழைப்பு: பலவீனத்திலிருந்து பாறையாக...

கலிலேயக் கடலோரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சீமோனிடம், “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குவேன் (மத்தேயு 4:19) என்று இயேசு அழைத்தபோது, அவர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் தன் வலைகளை விட்டுவிட்டுப் புறப்பட்டார். பேதுருவின் சீடத்துவம் ஒரே நாளில் முழுமை பெறவில்லை. அவர் இயேசுவை மறுதலித்தார், சந்தேகப்பட்டார், பயந்து ஓடினார். ஆனால், கிறிஸ்து அவரை மீண்டும் மீண்டும் தேடிவந்து, “நீ என்னை அன்பு செய்கிறாயா?” என்று கேட்டார். பேதுருவின் பலவீனம் கிறிஸ்துவின் அன்பால் பலப்படுத்தப்பட்டது. இறுதியில், தன் வாழ்வையே சிலுவையில் பலியாகக் கொடுத்து, திரு அவையின் பாறையாக மாறினார். ஒரு சாதாரண மீனவர் உலகத்தையே மாற்றிய தலைவராக மாறக் காரணம், அவர் கிறிஸ்துவை வாழ்நாள் முழுவதும் பின்தொடர்ந்ததுதான்.

) புனித பவுலின் அழைப்பு: எதிரியிலிருந்து தூதராக...

திரு அவையைத் துன்புறுத்திய சவுல், தமஸ்கு செல்லும் வழியில் உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தார். அந்த ஒரு சந்திப்பு அவரது வாழ்க்கையின் திசையை 1800 மாற்றியது. “வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் (கலாத்தியர் 2:20) என்று அறிவிக்கும் அளவிற்கு அவர் கிறிஸ்துவின் பித்தராக மாறினார். தான் கற்ற கல்வி, அதிகாரம், கௌரவம் அனைத்தையும் கிறிஸ்துவுக்காகக்குப்பைஎனத் தள்ளினார். ஒரு சீடன் என்பவன் தன் பழைய அடையாளங்களைத் துறந்து, கிறிஸ்துவோடு இணைந்து புதிய படைப்பாக மாறவேண்டும் என்பதற்கு பவுல் ஒரு மாபெரும் உதாரணம்.

2. நவீன காலச் சவால்கள்: சமூக ஊடகத் தாக்கம் (Social Media Influencers))

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சீடத்துவத்திற்குப் புதிய சவால்கள் முளைத்துள்ளன. ‘Influencers’ எனப்படும் சமூக ஊடகத் தாக்கம் செலுத்துபவர்களே இன்றைய இளையோரின் அன்றாட வழிகாட்டிகளாக மாறிவிட்டனர்.

போலி பிம்பங்களின் கவர்ச்சி: சமூக ஊடகங்களில் காட்டப்படும் வடிகட்டப்பட்ட (Filtered) அழகான புகைப்படங்கள் மற்றும் சொகுசு வாழ்க்கை இளையோரை எளிதில் கவர்கின்றன. இது அவர்களைத் தங்கள் உண்மை வாழ்க்கையின் மீது அதிருப்திகொள்ள வைக்கிறது. ‘அவர்களைப் போல வாழ வேண்டும்என்ற ஆசையில் இளையோர் நற்செய்தி கூறும்எளிமைமற்றும்பகிர்வுபோன்ற விழுமியங்களை மறந்து விடுகின்றனர்.

நூதனப் போதனைகள்: எபிரேயர் 13:9 எச்சரிப்பது போல, இன்று பல நூதனப் போதனைகள் வலம் வருகின்றன. “உன் இஷ்டப்படி வாழ்வதே சுதந்திரம், “நுகர்வுக் கலாச்சாரமே மகிழ்ச்சிபோன்ற போதனைகள் நற்செய்தியின் வேர்களை நீர்த்துப்போகச் செய்கின்றன. திரையில் தோன்றும் ஒருசில நிமிடக் காணொளிகள் வாழ்வின் உண்மையான அர்த்தத்தைத் திசைதிருப்புகின்றன.

3. வாழ்வால் சோதிக்கப்படும் தலைமை

ஒரு தலைவரின் உண்மைத் தன்மையை அவர் பேசும் வார்த்தைகளைவிட, அவர் வாழும் வாழ்க்கையே உறுதிப்படுத்துகிறது. புனித அன்னை தெரேசா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர் பெரிய தத்துவ நூல்களை எழுதவில்லை; ஆனால், ஏழைகளிடையே அவர் காட்டிய அன்பு உலகின் மனசாட்சியை உலுக்கியது. அவர் கிறிஸ்துவைத் தீவிரமாகப் பின்பற்றினார்; அதனால் உலகம் அவரைப் பின்பற்றியது. நமது வாழ்க்கை கிறிஸ்துவை நோக்கிச் சாய்கிறதா? என்பதே இன்று நாம் எழுப்ப வேண்டிய வினா.

4. பதவி அல்ல, பணி வாழ்வு

இன்றைய உலகம் தலைமையை ஒருபதவியாக (Position) பார்க்கிறது. ஆனால், நற்செய்தி தலைமையை ஒருவாழ்க்கை முறையாக (Lifestyle) முன்வைக்கிறது. மேலாளராக இருக்கும் ஒருவர் தலைவராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அதிகாரம் இல்லாத ஓர் எளிய மனிதர் தனது அன்பால் சிறந்த தலைவராக இருக்கமுடியும். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஒளியில், நாம் காலத்தின் அடையாளங்களை வாசிக்கவேண்டும். ஆனால், புதிய போதனைகள் என்ற பெயரில் நற்செய்தியின் வேர்களை நாம் இழந்துவிடக் கூடாது. நம் கால்கள் கிறிஸ்துவின் பாதையில் உறுதியாக இருக்கவேண்டும்.

5. மாறாத பேரன்பின் உறுதி: இயேசு கிறிஸ்து

மனிதத் தலைவர்கள் மாறலாம், பலவீனப்படலாம் அல்லது ஏமாற்றலாம். ஆனால், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் (எபி 13:8). இது ஒரு தேக்கநிலை அல்ல; மாறாக, மாறாத பேரன்பின் உறுதிப்பாடு. அவர் உண்மையை மாற்றுவதில்லை, வழியை மங்கச் செய்வதில்லை. அவரே வழி, அவரே உண்மை, அவரே வாழ்வு.

6. புனிதத்தன்மையே புதிய பாதை

திருத்தந்தை பிரான்சிஸ் தனதுநற்செய்தியின் மகிழ்ச்சி (Evangelii Gaudium) என்னும் மடல் வழியாக, நற்செய்தி என்பது ஒரு கருத்து அல்ல; அது கிறிஸ்துவுடனான ஒருசந்திப்புஎன்று அழைக்கிறார். திரு அவை என்பது வெறும் அமைப்பு அல்ல; அது ஓர் உரையாடல் மற்றும் பயணம். இன்றைய உலகுக்கு நீதி, அமைதி மற்றும் அன்பின் சாட்சிகள் தேவைப்படுகிறார்கள். இது புதிய சட்டங்களால் அல்ல; ஆழமான புனிதத்தன்மையால் மட்டுமே சாத்தியமாகும்.

முதலில் சீடர், பின்பே தலைவர்!

நாம் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரைப் பின்பற்றுகிறோம். அதேவேளையில் யாரோ ஒருவர் நம்மையும் பின்பற்றுகிறார். நாம் எதைப் பின்தொடர்கிறோம் என்பதைவிட, யாரைப் பின்தொடர்கிறோம் என்பதே முக்கியம். டிஜிட்டல் உலகின் மாயச் சத்தங்களுக்கு மத்தியில், “மீனவனே, என் பின்னே வாஎன்ற கிறிஸ்துவின் மெல்லிய குரலைக் கேட்போம். நாம் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும்போது, நம்மைப் பின்பற்றுபவர்களும் நம் வழியாக வாழ்வின் ஆண்டவரைச் சந்திப்பார்கள். மாறாத கிறிஸ்துவை நோக்கி நம் பயணத்தைத் தொடர்வோம்!

news
ஆன்மிகம்
8-10 நிமிட மறையுரை: திருத்தந்தையின் அறிவுரை

1. பின்புலம்

அண்மையில் ஓர் ஆயர் திருநிலைப்பாடு அருளடையாளத் திருப்பலிக் கொண்டாட்டம் நடைபெற்றது. திருப்பலிக்கு முன்னரே புதிய ஆயருக்கு ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்த வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன. திருப்பலி தொடங்கியவுடன் பத்து நிமிடங்களுக்கு முன்னுரை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இறைவார்த்தை வாசகங்களுக்குப் பின்னர் 20 நிமிடங்களுக்கு மேல் மறையுரை ஆற்றப்பட்டது. ஏறக்குறைய நான்கரை மணி நேரம் நீடித்த இந்நிகழ்வின்போது, கூட்டுத்திருப்பலியில் பங்கேற்றிருந்த பல அருள்பணியாளர்கள் இடையிடையே எழுந்து சென்றுவிட்டனர். மற்ற இறைமக்களில் பலர் களைப்புற்று நற்கருணை பெற்றவுடன் கலைந்து சென்றுவிட்டனர்.

மற்றொரு நிகழ்வில் அருள்பணியாளர் ஒருவரின் முதல் திருப்பலிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அவரை வரவேற்று அழைத்து வந்தபொழுது அவரைப் பற்றிய நீண்டதொரு முன்னுரை வாசிக்கப்பட்டது. எனினும், திருப்பலி தொடங்கியவுடன் பத்து நிமிடங்களுக்கு மேல் மீண்டும் ஒரு முன்னுரை மற்றொரு அருள்பணியாளரால் கொடுக்கப்பட்டது. நற்செய்தி வாசகத்திற்குப்பின் 30 நிமிடங்களுக்கு மேல் வேறு ஓர் அருள்பணியாளர் மறையுரை ஆற்றினார். ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் நீடித்த இக்கொண்டாட்டத்தின் இறுதியில், புதிய அருள்பணியாளருக்கு நடத்தப்பட்ட வாழ்த்துக் கூட்டத்தில் வெகுசிலரே பங்கேற்றனர்.

சிறப்புக் கொண்டாட்டங்கள் என்றில்லாமல், வழக்கமாக நடைபெறும் ஞாயிறு மற்றும் விழாத் திருப்பலிகளிலும் 20, 30, 40 நிமிடங்களுக்குக் குறையாமல் மறையுரை ஆற்றப்படுகிறது. மொத்தமாக ஒரு மணி நேரம் தேவைப்படும் இத்திருப்பலிக் கொண்டாட்டத்தில் மறையுரையின் கால வரம்பு என்னவாக இருக்கவேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.

2. மறையுரையின் சிறப்பியல்புகள்

மறையுரை (homily) என்பது திருப்பலிக் கொண்டாட்டத்தில் இறைவார்த்தை வாசகங்களுக்குப்பின் நடைபெறும் முதன்மையான, ஒரு தனித்தன்மையான இலக்கிய நடைகொண்ட போதிக்கும் பணியாகும். திருப்பலிக்குப் புறம்பே நடைபெறும் அருளுரை (Sermon), போதனை (Preaching), சமய / ஆன்மிகக் கருத்துரை (religious/ spiritual discourse), மறைக்கல்வி (Catechesis), திருவிவிலிய / இறையியல் பேருரை (Biblical/theological / lecture) போன்றவற்றிலிருந்து மறையுரை வேறுபட்டது. திரு அவை ஆசிரியப் படிப்பினைகளில் மறையுரையைப் பற்றிக் கூறப்பட்டுள்ள சில சிறப்பியல்புகளாவன:

1) மறையுரை என்பது வழிபாட்டுச் செயலின் ஒரு பகுதியும் இறைவார்த்தையின் உயிருள்ள விளக்கவுரையும் ஆகும். இந்த விளக்கவுரை வாசிக்கப்பட்ட திருவிவிலியப் பகுதிகள் கூறுவதையே மீண்டும் விளக்கிச் சொல்வதோ அல்லது அப்பகுதிகளுடன் தொடர்புடைய வேறு திருவிவிலிய வசனங்களை அடுக்கிக் கூறுவதோ அல்ல; மாறாக, அன்றைய இறைவார்த்தை எவ்வாறு இங்கு இப்பொழுது மனித வாழ்க்கைச் சூழமைவில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை அறிக்கையிடுவது ஆகும்.

2) நல்ல மறையுரை ஒரு கருத்து, ஓர் உணர்ச்சி, செயல்பாட்டிற்கு வழிகாட்டும் குறிப்பு என்ற முக்கியக் கூறுகளைக் கொண்டிருக்கவேண்டும். மேலும், கொண்டாடப்பெறும் மறையுண்மையையும், கேட்போரின் தனிப்பட்ட தேவைகளையும் மறையுரையாளர் கருத்தில் கொள்ளவேண்டும்.

3) ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடமைத் திரு நாள்களிலும் கனமான ஒரு காரணம் இருந்தாலன்றி, மறையுரை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். பிற நாள்களில் குறிப்பாக, திருவருகைக் காலம், தவக்காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் வார நாள்களிலும், மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்து கூடும் திருநாள்களிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது.

4) திருப்பலி நிறைவேற்றும் ஆயர் அல்லது அருள்பணியாளரே வழக்கமாக மறையுரை நிகழ்த்துவார். அவர் தம்மோடு சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் ஒருவரிடமோ அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்பத் திருத்தொண்டரிடம் கூட இப்பணியை ஒப்படைக்கலாம். சிறப்பான நிகழ்வுகளில், தக்க காரணத்திற்காகக் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தாமல் திருப்பலியில் மட்டும் பங்கேற்கும் ஓர் ஆயர் அல்லது அருள்பணியாளர் மறையுரை ஆற்றலாம்.

5) திருநிலை அருளடையாளங்களைப் பெறாத மற்றவர் (அருள்பணி மாணவர்கள், அர்ப்பண வாழ்வுச் சமூகத்தினர், பொதுநிலையினர்) இப்பணியைச் செய்ய இயலாது (காண்: 2-ஆம் வத்திக்கான் சங்கம், திருவழிபாடு, எண் 52; திரு அவைச் சட்டம், எண் 767; திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தியின் மகிழ்ச்சி, 2013, எண் 135, 137-138; 145-158; திருவழிபாட்டுப் பேராயம், மீட்பின் அருளடையாளம் (Redemtionis Sacramentum), 2004, எண் 66; மற்றும் மறையுரை வழிகாட்டி (Homiletic Directory) 2014, எண் 6; உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினைகள், மூன்றாம் மாதிரிப் படிவம், 2017, எண் 29 - 66).

3. மறையுரையின் கால வரம்பு

ஞாயிறு மற்றும் விழாக்காலத் திருப்பலிகளில் 8-10 நிமிடங்களுக்கு மிகாமல் மறையுரை இருத்தல் வேண்டுமெனத் திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். சுருக்கமான மறையுரைக்கு அவர் கூறும் காரணம் மிகுந்த கவனத்திற்குரியது: ‘மறையுரை மிக நீள்வது திருவழிபாட்டின் இரு பண்புக் கூறுகளாகிய சீரியக்கம், ஒத்திசைவு என்பதைப் பாதிக்கும் (காண்: புதன் கிழமை பார்வையாளர் அறிவுரை, 7 பிப்ரவரி 2018 - 12 ஜூன் 2014; நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 138). அதாவது 20, 30, 40 நிமிடங்கள் என நீளும் மறையுரைகள் வழிபாட்டு நேரத்தின் மிக அதிகப் பகுதியை எடுத்துக்கொள்வதால் ஏனைய வழிபாட்டுப் பகுதிகள் உரிய முக்கியத்துவம் பெறாமல் போகின்றன. மக்களும் நீண்ட மறையுரையைக் கேட்பதிலேயே களைப்புற்று, எஞ்சிய வழிபாட்டுப் பகுதிகளில் முழுக் கவனமுடன் ஈடுபட இயலாதவர்கள் ஆகின்றனர். இதனால் மக்களை ஈடுபாடுமிகு நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு இட்டுச்செல்லவேண்டிய மறையுரை அதற்குத் தடையாகக் கூட சில வேளைகளில் மாறிவிடுகிறது (காண்: தே. அல்போன்சு, நல்லதொரு மறையுரை செய்வோம், பக். 60 - 61).

மறையுரை நீள்வதற்கான சில காரணிகளாக பணித்தள அனுபவத்தில் நான் அறிந்தவை:

1) மறையுரையின் தொடக்கத்தில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்களின் அன்றைய வாழ்க்கைச் சூழமைவில் நடந்த பொருத்தமான நிகழ்வு, செய்தி அல்லது கதை ஒன்றைச் சுருக்கமாகச் சொல்வதற்குப் பதிலாக, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பாவில் நடந்த கதைகளையோ பேரரசன் அலெக்சாண்டர், மாவீரன் நெப்போலியன், ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் போன்றவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையோ நீட்டிக்கூறுவது.

2) ஞாயிறு மற்றும் பெருவிழாத் திருப்பலிகளில் இடம்பெறும் மூன்று திருவிவிலிய வாசகங்களிலிருந்து மக்களின் இன்றைய வாழ்க்கைச் சூழலுடன் தொடர்புடைய மையக்கருத்து ஒன்றைத் தேர்வு செய்து மறையுரையைக் கட்டமைப்பதை விட்டுவிட்டு, ஒவ்வொரு வாசகத்தைப் பற்றியும், அதன் வரலாறு, சூழமைவு, அரசியல்-சமூக-பொருளாதாரப் பின்னணியைக் கூறி பொருள் விளக்கம் தருவது.

3) அருங்கொடை செபக்கூட்டங்களில் நடப்பது போல் மறையுரையை இடையிடையே குறுக்கீடு செய்து, ‘இயேசுவுக்கே புகழ், ‘இயேசுவுக்கே நன்றி, ‘மரியே வாழ்க, ‘அல்லேலூயா, ‘ஆமென்போன்ற முழக்கங்களை மக்களால் சொல்ல வைப்பது; மக்கள்விழிப்பாய்இருப்பதற்காகக் கைகளைத் தட்டச் சொல்வது; பாடல்களைப் பாடுவது; சிரிப்புத் துணுக்குகளைக் கோர்வையாகச் சொல்லி ஊடகங்கள் வழங்கும் ஒரு பொழுதுபோக்கு வகைபோல மறையுரையை ஆக்குவது.

4) திருப்பலியில் திரளான மக்கள் கூடியிருந்தால் மறையுரையாளர் பரவசமடைந்து தனக்குத் தெரிந்ததை எல்லாம் பேசிக்கொண்டே போவது.

5) மறையுரையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது அல்லது முடிப்பதுபோல் வந்து மீண்டும் மற்றொரு கருத்திற்குத் தாவுவது.

4. இறுதியாக...

மறையுரை மிக முக்கியமான ஒரு பொறுப்பு என்பதால் நீண்ட நேரம் வாசிப்பு, செபம், சிந்தனை அருள்பணி அனுபவங்களின் பிரதிபலிப்பை உள்ளடக்கிய முன்தயாரிப்பு அவசியம்.

மறையுரை பொருள் செறிவும் புதிய செய்திகளும் பார்வைகளும் கொண்டதாக அமைய வேண்டுமெனில், அதனை வழங்கும் மறையுரையாளருக்குப் பரந்துபட்ட அறிவும், நலமான புதிய கண்ணோக்குகளும் அவசியம் தேவை. அவை சமயம் சார்ந்தவை மட்டும் அல்ல; இன்றைய சமூகம் பற்றியதாகவும் இருத்தல்வேண்டும்.

சமூகம் பற்றிய அறிவைப் பெருக்கத் தரமான தினசரி செய்தித்தாள்களையும், சமூக-பொருளாதார-அரசியல்-பண்பாட்டுச் செய்திகளையும் விமர்சனங்களையும் தரும் வார, மாத இதழ்களையும் மற்றும் நூல்களையும் படிப்பதும், நவீன ஊடகங்கள் வழியாகச் சிறந்த அறிஞர்களின் உரைகள் மற்றும் நேர்காணல்களைக் கேட்பதும் அவசியம் (காண்: தே. அல்போன்சு, நல்லதொரு மறையுரை செய்வோம், பக். 70-71).

தரத்திற்கு மட்டுமல்லாமல், 8-10 நிமிடங்களுக்கு மிகாமல் மறையுரையைக் கட்டமைக்க வேண்டுமெனில், அதற்கும் முன்தயாரிப்பு மிக மிக அவசியம்.

முன்தயாரிப்பு செய்யாத மறையுரையாளர் அருள்வாழ்வு அற்றவர் தாம் பெற்ற கொடைகளுக்கு அவர் பொய்மையாகவும் பொறுப்பற்றவராகவும் நடந்து கொள்பவர்என்றும், “நீண்ட மறையுரைகள் திரு அவைக்கு ஒரு பேரிடர்என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் (காண்: நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 145; மறைமாவட்ட திருவழிபாட்டு இயக்குநர்களுக்கு ஆற்றிய உரை, 20 சனவரி 2023).